Saturday, March 1, 2025

சாத்திர நூல்கள் - உ. முத்துமாணிக்கம்

இந்திய தரிசனங்களில் மேனாட்டு தரிசனங்களில் இருப்பது போன்று சமயம் வேறு, தத்துவம் வேறு என்று பிரித்துப் பேசும் மரபு இல்லை, சைவ சித்தாந்தமாயினும் சரி, விசிட்டாத்வைதமாயினும் சரி சமயமும் தத்துவமும் இணைந்தே இருக்கும் மரபுதான் உண்டு. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் சாத்திர நூல்களை அணுக வேண்டும். "சைவ சமயம், சாத்திரங்கள் - வளத்தால் செழித்தது; வைணவ சமயம், உரை வளத்தால் செழித்தது." என்று மக்களிடையே வழங்கும் மரபு ஒன்று உண்டு. கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் வைணவத்திலும் சாத்திரங்களுக்குக் குறைவில்லை. 'அஷ்டா தச இரகசியங்கள், 'தேசிகப் பிரபந்தம்' (தமிழ்க் கவிதைகளாலானது),  'இரகசியத் திரய சாரம்' (திரயம்- மூன்று, இது மணிப்பிரவாள நடையில் அமைந்த ஒரு நூல்) என்றனவும் உள்ளன. ஆனால் திருவாய்மொழிக்கு அமைந்துள்ள, மணிப்பிரவாள நடையிலமைந்த 'உரைவளம் போல்' தேவார திருவாசகங்களுக்கும், பிற திருமுறைகளுக்கும் அமையவில்லை என்று சொல்லலாம்.


சைவ சமயத்தில் தோத்திர நூலுக்கு அப்படி அமைய வில்லை என்றாலும் சாத்திர நூல்களுக்கு விரிவான சிந்தனையும், பார்வையும், நூல்களும் அமைந்திருக்கின்றன. சாத்திர நூல்கள் மொத்தம் பதினான்காகும்.  


1. திருவுந்தியார்

2. திருக்களிற்றுப்படியார்

3. சிவஞான போதம்

4. சிவஞான சித்தியார்

5. இருபா இருபஃது

6. உண்மை விளக்கம்

7. சிவப்பிரகாசம்

8. திருவருட்பயன்

9. வினா வெண்பா

10. போற்றிப் பஃறொடை

11. கொடிக்கவி

12. நெஞ்சு விடுதூது

13. உண்மை நெறி விளக்கம்

14. சங்கற்ப நிராகரணம்


மலரும் மணமும்: மலர்க்காணிக்கை – ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை

இயற்கையில் அவ்வளவு அழகு நிரம்பியதாக, தூய மனதின் குறியீடாக, களங்கமற்றதாக, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாக, ஒரு சின்னஞ்சிறிய மலரைவிட வேறு எது இருந்திட முடியும்? மகத்தான தெய்வீக அழகை, அன்பை, இசைவை எளிய ஒரு மலரை விட வேறு எது பிரதிபலிக்கும்? அதன் மலர்வும், சீர்மையும், நுண்ணிய அழகிய அமைப்பும் எப்படி மனிதர்களின் ஆழத்தை ஈர்க்கின்றன, எவ்வாறு உயிர்ப்பை அளிக்கின்றன! அத்தகைய மலர் கிழக்கு உலகை கவர்ந்ததில் ஏதும் வியப்புண்டா? இதற்கு இங்கு அளிக்கப்படும் இடம் எவ்விதத்திலும் மிகையானதன்று. மலர்கள் இங்குள்ளவனின் இன்பங்களிலும், மதத்திலும், தத்துவத்திலும் ஆழக் கலந்துள்ளன. கிழக்கின் குறியீட்டியலில் ஒரு குறிப்பிடத்தகுந்த இடத்தை வகிக்கின்றன. மலரில் இருந்தே ஒரு இந்தியன் தான் அடைந்த மகத்தான உண்மைகளுக்கு விளக்கமளிக்க விரும்புவான். மலர்கள் இல்லாமல் இங்கு எச்சடங்கும் நிகழாது. அவற்றைக் கொண்டு தன் அப்பன் ஆரூரனை அலங்கரிப்பதில் மகிழும் அவன் அலங்கரித்த பின் தம்மக்களை அழைத்துச் சொல்வான்:

சித்தந் தெளிவீர்காள்

அத்தனாரூரைப்

பத்திமலர் தூவ

முத்தியாகுமே.

 (தேவாரம்)


ஆன்ம அவத்தைகள் -2 - தாமல் கோ.சரவணன்

ஆன்ம அவத்தைகள் - பாகம் 1

இந்த ஆன்மா உலக சம்பத்துகளோடு தொடர்புகொள்ளாமல் தனித்திருக்கும் கேவல நிலையில் (prelife State) தன்னை அறியும் அறிவற்றதாயும், இறைவனை அறியும் அறிவற்றதாயும் இருக்கும் என்பதை அறிந்தோம். அவ்வாறு கருவிகளற்று சூன்யமாய் இருக்கின்ற ஆன்மா அறிதல் என்கிற பக்குவநிலைக்கு வரவேண்டி உலகம் என்கிற தத்துவங்களை கருவியாகக் கொடுக்கிறார் இறைவன். ஆன்மா, கடவுள், உலகம் என்கிற மூன்று முக்கிய விஷயங்களில் ஆன்மாவும் உலகமும் ஒன்றுடன் ஒன்று சம்பவிக்கின்ற நிலையை அடைகிறது. இந்த நிலையில் ஆன்மாவிற்கு தான் யார் என்று விசாரிக்கின்ற தன்னுணர்வும் இறைவனைப் பற்றிய விழிப்புணர்வும் வருகின்ற இரண்டாம் நிலையாக சகலநிலை கிடைக்கின்றது.


துரியம் கடந்த சுடர் 2 - இருளணிந்த செஞ்சுடர் - அருணாச்சலம் மகாராஜன்

துரியம் கடந்த சுடர் 1

கோவைக்கு அருகில் பேரூர் என்னும் ஊரில் உள்ளது பட்டீஸ்வரர் ஆலயம். என் கல்லூரி காலத்தில் அந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன். ஆலயங்களில் திகழும் சிற்பங்கள் மீதான என் ஆர்வத்தின் விதை அந்த கோவிலில் தான் விழுந்தது. முதன் முறையாக ஒரு சிற்பத்தின் முன் வியந்து நின்றதும் அந்த கோவிலில் தான். அது ஒரு சிற்பத் தூண். கூரையை தாங்கி நிற்க வேண்டிய ஒரு தூண் தான் அது. வழமை போல அதில் ஒரு யாளியை செதுக்கி அழகாக்கி இருக்கலாம் தான். மாறாக அந்த தூண் முழுமையான, பேருரு கொண்ட, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, ஒரு கலை சாதனை எனச் சொல்லத்தக்க சிற்பத்தை கொண்டிருந்தது. அதைப் போன்று மேலும் சில தூண்களும் அம்மண்டபத்தில் இருந்தன. ஒவ்வொரு தூணின் சிற்பமும் நின்று, கண்ணாரக் கண்டு, ரசித்து பார்க்க வேண்டியவை. நான் சென்ற காலத்தில் அந்த சிற்பங்கள் சிறையிடப்பட்டிருக்கவில்லை. பொதுவாக நம்முடைய கோவில்களில் நுணுக்கமான சிற்பங்கள், அதுவும் தூண்களில் அமைந்தவை கைகள் இழந்து, கால்கள் துணிக்கப்பட்டு, மூக்கு உடைபட்டு, விபூதி, குங்குமம் தடவப்பட்டு, நிறம் மங்கிய துணியால் மூடப்பட்டு காண்பவரின் கற்பனையில் மட்டுமே முழுமை கொண்டாக வேண்டிய நிலையில் இருப்பவை. முழுமையாக பேணப்பட்ட சிற்ப மண்டபங்கள், அதுவும் சிற்பங்களின் அருமை தெரிந்து பராமரிக்கப்படுபவை மிக அரிதே. அப்படி முழுமையாகப் பேணப்பட்ட ஒன்றாக அந்த கோவில் சிற்ப மண்டபம் இருந்தது. ஒவ்வொரு சிற்பமும் அந்த கருங்கல்லின் ஒளி தெரியும் வகையில், எண்ணெய் மினுமினுப்புடன் இருந்தது. சிற்பத்துக்கு மேல் இருந்த பகுதிகள் நாட்பட்ட தூசியால் மங்கி இருந்ததால் இந்த துலக்கம் அந்த சிற்பங்களுக்கு மேலும் ஒரு சோபையைத் தந்திருந்தது. அது அந்த கோவிலின் பொற்சபை. தமிழகத்தின் பெரும்பாலான பெருங்கோவில்களைப் போலவே காலம் முழுதோடிய ஒரு கோவில். மூலவர் சுயம்பு லிங்கம்.  அந்த மூல கோவில்  கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு தமிழகத்தின் கோவில் கலை உச்சத்தை எட்டிய பல்லவர் துவங்கி நாயக்கர் ஈறாக ஆண்ட ஆயிரம் ஆண்டுகளில் விரிவாகிக் கொண்டே இருந்த ஒரு கோவில். இந்த பொற்சபை பதினேழாம் நூற்றாண்டில்,

மதுரையை ஆண்ட  திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக கோவை பகுதியை நிர்வகித்த அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. அந்த கனக சபையில் இருந்த 36 தூண்களில் 8 தூண்கள் அபாரமான சிற்ப சாதனைகள். எட்டும் ஒற்றை கல் சிற்பங்கள். அதாவது அந்த தூணே ஒரு முழு நீள கல்லில் இருந்து செதுக்கி எடுக்கப்பட்டது. யோசித்து பாருங்கள், தவறுக்கான, மீச்சிறிய குறைபாடுக்கான சாத்தியம் கூட இல்லாத ஒரு சிற்ப வடித்தல் முறை. ஏனெனில் அது கோவிலில் வைக்கப்பட வேண்டிய கல். ஏதேனும் ஒரு சிறு குறை, அது கூரையில் சென்று சேரும் கவிழ்ந்த தாமரை பாகத்தில் இருந்தாலும் கூட மீண்டும் முதலில் இருந்தே வடித்தாக வேண்டும், புது கல்லில். எனவே ஒவ்வொரு பாகமும் முழு அர்ப்பணிப்புடன் தான் அந்த சிற்பியால் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கிருந்த ஊர்த்துவ தாண்டவர் சிற்பம் 16 கரங்களோடு, இருப்பதிலேயே மிக நுணுக்கமான வேலைப்பாடுகளோடு நின்றிருந்தது. பதினாறு கரங்களுக்கு இடையான இடைவெளிகள், ஊர்த்துவ தாண்டவரின் அடியில் நிற்கும் திருமால், பார்வதி, ஆறு முகங்களுடன் குமரன் மற்றும் பாம்புடன் விளையாடும் முயலகன் என ஊர்த்துவ தாண்டவத்தின் மிகச் சிக்கலான சிற்ப இலக்கணம் பொருந்திய, விரிவான ஒரு சிற்ப வெளிப்பாடு. இத்தனை சிற்பங்களும் அந்த தூணின்  பகுதியாக  இருந்தாக வேண்டும். எப்பேர்ப்பட்ட கற்பனையும், வேலைத் திறனும் தேவைப்பட்டிருக்கும்!!


சித்தாந்த வினா விடை - 2 - அருணைவடிவேல் முதலியார்

 சித்தாந்த வினா விடை 1

சித்தாந்தப் பொருள்வகை


மாணவன் : ஆசிரியரே நீங்கள் எனக்கு சித்தாந்தப்பொருளை  உரைக்க வேண்டும்.

ஆசிரியர் : நன்று!  கேட்பாயாக. சித்தாந்த நூல்கள், எல்லாப் பொருள்களையும் மூன்று வகையுள் அடக்கிக் கூறும்; அவை, 'பதி' 'பசு' 'பாசம்' என்பன. 'பதி' என்பது கடவுள்; 'பசு' என்பது உயிர்; 'பாசம்' என்பது, அவ்வுயிர்களைப் பற்றியுள்ள பிணிப்பு. இவை முறையே, 'இறை, உயிர், தளை' எனவும் கூறப்படும்.