Saturday, March 1, 2025

துரியம் கடந்த சுடர் 2 - இருளணிந்த செஞ்சுடர் - அருணாச்சலம் மகாராஜன்

துரியம் கடந்த சுடர் 1

கோவைக்கு அருகில் பேரூர் என்னும் ஊரில் உள்ளது பட்டீஸ்வரர் ஆலயம். என் கல்லூரி காலத்தில் அந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன். ஆலயங்களில் திகழும் சிற்பங்கள் மீதான என் ஆர்வத்தின் விதை அந்த கோவிலில் தான் விழுந்தது. முதன் முறையாக ஒரு சிற்பத்தின் முன் வியந்து நின்றதும் அந்த கோவிலில் தான். அது ஒரு சிற்பத் தூண். கூரையை தாங்கி நிற்க வேண்டிய ஒரு தூண் தான் அது. வழமை போல அதில் ஒரு யாளியை செதுக்கி அழகாக்கி இருக்கலாம் தான். மாறாக அந்த தூண் முழுமையான, பேருரு கொண்ட, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, ஒரு கலை சாதனை எனச் சொல்லத்தக்க சிற்பத்தை கொண்டிருந்தது. அதைப் போன்று மேலும் சில தூண்களும் அம்மண்டபத்தில் இருந்தன. ஒவ்வொரு தூணின் சிற்பமும் நின்று, கண்ணாரக் கண்டு, ரசித்து பார்க்க வேண்டியவை. நான் சென்ற காலத்தில் அந்த சிற்பங்கள் சிறையிடப்பட்டிருக்கவில்லை. பொதுவாக நம்முடைய கோவில்களில் நுணுக்கமான சிற்பங்கள், அதுவும் தூண்களில் அமைந்தவை கைகள் இழந்து, கால்கள் துணிக்கப்பட்டு, மூக்கு உடைபட்டு, விபூதி, குங்குமம் தடவப்பட்டு, நிறம் மங்கிய துணியால் மூடப்பட்டு காண்பவரின் கற்பனையில் மட்டுமே முழுமை கொண்டாக வேண்டிய நிலையில் இருப்பவை. முழுமையாக பேணப்பட்ட சிற்ப மண்டபங்கள், அதுவும் சிற்பங்களின் அருமை தெரிந்து பராமரிக்கப்படுபவை மிக அரிதே. அப்படி முழுமையாகப் பேணப்பட்ட ஒன்றாக அந்த கோவில் சிற்ப மண்டபம் இருந்தது. ஒவ்வொரு சிற்பமும் அந்த கருங்கல்லின் ஒளி தெரியும் வகையில், எண்ணெய் மினுமினுப்புடன் இருந்தது. சிற்பத்துக்கு மேல் இருந்த பகுதிகள் நாட்பட்ட தூசியால் மங்கி இருந்ததால் இந்த துலக்கம் அந்த சிற்பங்களுக்கு மேலும் ஒரு சோபையைத் தந்திருந்தது. அது அந்த கோவிலின் பொற்சபை. தமிழகத்தின் பெரும்பாலான பெருங்கோவில்களைப் போலவே காலம் முழுதோடிய ஒரு கோவில். மூலவர் சுயம்பு லிங்கம்.  அந்த மூல கோவில்  கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு தமிழகத்தின் கோவில் கலை உச்சத்தை எட்டிய பல்லவர் துவங்கி நாயக்கர் ஈறாக ஆண்ட ஆயிரம் ஆண்டுகளில் விரிவாகிக் கொண்டே இருந்த ஒரு கோவில். இந்த பொற்சபை பதினேழாம் நூற்றாண்டில்,

மதுரையை ஆண்ட  திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக கோவை பகுதியை நிர்வகித்த அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. அந்த கனக சபையில் இருந்த 36 தூண்களில் 8 தூண்கள் அபாரமான சிற்ப சாதனைகள். எட்டும் ஒற்றை கல் சிற்பங்கள். அதாவது அந்த தூணே ஒரு முழு நீள கல்லில் இருந்து செதுக்கி எடுக்கப்பட்டது. யோசித்து பாருங்கள், தவறுக்கான, மீச்சிறிய குறைபாடுக்கான சாத்தியம் கூட இல்லாத ஒரு சிற்ப வடித்தல் முறை. ஏனெனில் அது கோவிலில் வைக்கப்பட வேண்டிய கல். ஏதேனும் ஒரு சிறு குறை, அது கூரையில் சென்று சேரும் கவிழ்ந்த தாமரை பாகத்தில் இருந்தாலும் கூட மீண்டும் முதலில் இருந்தே வடித்தாக வேண்டும், புது கல்லில். எனவே ஒவ்வொரு பாகமும் முழு அர்ப்பணிப்புடன் தான் அந்த சிற்பியால் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கிருந்த ஊர்த்துவ தாண்டவர் சிற்பம் 16 கரங்களோடு, இருப்பதிலேயே மிக நுணுக்கமான வேலைப்பாடுகளோடு நின்றிருந்தது. பதினாறு கரங்களுக்கு இடையான இடைவெளிகள், ஊர்த்துவ தாண்டவரின் அடியில் நிற்கும் திருமால், பார்வதி, ஆறு முகங்களுடன் குமரன் மற்றும் பாம்புடன் விளையாடும் முயலகன் என ஊர்த்துவ தாண்டவத்தின் மிகச் சிக்கலான சிற்ப இலக்கணம் பொருந்திய, விரிவான ஒரு சிற்ப வெளிப்பாடு. இத்தனை சிற்பங்களும் அந்த தூணின்  பகுதியாக  இருந்தாக வேண்டும். எப்பேர்ப்பட்ட கற்பனையும், வேலைத் திறனும் தேவைப்பட்டிருக்கும்!!





அங்கு தான் முதன் முதலாக அந்த சிற்பத்தை கண்டேன். எட்டு கரங்களுடன், கங்கை முடி சூடி வலக்கால் தூக்கி, இடக்கால் ஊன்றி, கனிந்த முகத்துடன் நின்றிருந்தது சிவம். நடராஜ வடிவில் இருந்து அதை வேறுபடுத்தியது அந்த வலக்கால் தூக்கி இருந்த முறை தான். அதை விட இன்னொரு தீர்க்கமான வேறுபாடு இருந்தது. நடராஜருக்கு இருப்பதை போன்ற ஒரு திருவாசியும் இருந்தது. ஆனால் நடராஜ வடிவில் திருவாசி என்பது சிவனின் நடன வேகத்தில் பறக்கும் சடை, இடையாடை, தலை மற்றும் பாதம் ஆகிய இடங்களில் மட்டுமே தொட்டு கொண்டிருக்கும். மற்றபடி அதற்கும் சிவனாருக்கும் இடையே வெளியே நிறைந்திருக்கும். அதற்கு நேர் மாறாக இந்த சிற்பத்தில் அந்த திருவாசிக்கும், சிவனாருக்கும் இடையே இடைவெளியே இல்லை. ஒரு நீள் வட்ட வடிவமாக, கரும்பளிங்கென மெருகூட்டப்பட்ட ஒரு குழியாடி போல் இருந்த கல்லில் ஒரு புடைப்பு சிற்பமென, வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியில் மறையும் வண்ணம், மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ எனத் தோன்றும் கருமையின் ஒளி சூடி நின்றது சிவம். இது என்ன சிவ வடிவம் என யோசித்து கொண்டிருக்கும் போதே அடுத்த வித்தியாசம் என் மண்டையை அறைந்தது. சிவன் முயலகன் மீது நின்று இருக்கவில்லை. முயலகன் இடத்தில் ஒரு யானையின் தலை சிலையின் வலப்பக்கம் நோக்கி துதிக்கை நீட்டி இருந்தது. இன்னும் கூர்ந்து பார்க்க அந்த நீள்வட்ட திருவாசியில் இருந்த யானையின் நான்கு கால்களும், சிவனின் தலை முடி மேல் இருந்த அதன் வாலும் துலங்கி வந்தன. ஆம், அது கரியுரித்து போர்த்திய அண்ணல். நெடு நேரம் நின்று கொண்டிருந்தேன் அவன் முன். அந்த சிற்பத்தின் முழுமை என்னை ஆட்கொண்டது. அவ்வளவு அழகாக யானை ஒன்றை உரித்து போர்த்தியிருந்தான் அந்த ஆடல்வல்லான். அந்த கற்பனை என்னை பேச்சிழக்க வைத்திருந்தது. குரூரமான கற்பனை என்று தான் முதலில் தோன்றியது. அன்று எனக்கு இந்த சிற்பத்தின் பின்னுள்ள புராணம் தெரிந்திருக்கவில்லை. இப்போது போல இணையமும் புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. எனவே சிவ புராணம் பற்றிய ஒரு நூலை வாடகை நூலகத்தில் இருந்து எடுத்து படித்து அறிந்து கொண்டேன்.

புராணங்களின் படி யானை உருவத்தில் இருந்த கஜாசுரன் எனும் அசுரன், மேருமலையில் பிரம்மனை நினைத்துக் கடுந்தவம் செய்து யாராலும் தன்னை அழிக்க முடியாத வரமும் எதிலும் வெற்றி கிடைக்கவேண்டும் என்ற வரமும் கேட்டான். சிவபெருமானை தவிர வேறு யாராலும் அவனுக்கு அழிவு இல்லை என்றும், எதிலும் அவனுக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறி பிரம்மா வரம் கொடுத்தார். வரம் கிடைத்ததும் அவன் சிவபெருமானைத் தவிர பிற தேவர்கள் அனைவருக்கும் தொல்லை கொடுத்தான். பல கொடுமைகளைச் செய்தான். தேவர்களின் தலைவனான இந்திரனும் கஜாசுரனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் இந்திரனின் வாகனமான ஐராவதத்தின் வாலைப் பிடித்து இழுத்துத் தூர எறிந்தான் கஜாசுரன். அமராவதி நகரை அழித்தான். தேவர்களையும் உலக மக்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தி விரட்டினான். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டு, அவரைச் சரணடைந்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து கஜாசுரனும் அங்கு வந்தான். சிவபெருமானைத் தான் எதிர்க்கக் கூடாது என்பதை மறந்து ஆணவத்தில் சிவபெருமானின் ஆலய வாசலின் முன் நின்று கஜாசுரன் கர்ஜனை செய்தான். தன்னைச் சரணடைந்தவர்களைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான் மிகப்பெரிய வடிவம் எடுத்தார். பார்க்கும் அனைவரும் அஞ்சும்படி கண்களின் வழியே தீச்சுவாலைகள் தெறிக்க, சிவபெருமான் கஜாசுரனைத் தனது திருவடியால் உதைத்தார். அவன் கீழே விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்துத் தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் அவனது தோலை உரித்தார். உமை அஞ்சி நின்றிருக்க கஜாசுரனின் தோலைத் தன் மீது போர்த்தியபின்பே சிவபெருமான் சாந்தமடைந்தார். உமையின் அச்சம் தீர, அடங்காத கஜ முக அசுரன் ஒருவனை வதம் செய்து, அவன் தோலை உரித்துப் போர்த்திய வீரத்தை சிவனின் பெருமையாகச் சுட்டி நிற்கின்றன நான்கு சமய குரவர்களும் பாடிய பல பதிகங்கள். இவற்றில் இருந்து வேறுபட்டு நிற்பது திருஞானசம்பந்தரின் பின் வரும் பதிகம்.

    'கடந்தாங்கிய கரியையவர்

           வெருவவுரி போர்த்துப்

    படந்தாங்கிய அரவக்குழைப்

           பரமேட்டிதன் பழவூர்

    நடந்தாங்கிய நடையார்நல

           பவளத்துவர் வாய்மேல்

    விடந்தாங்கிய கண்ணார்பயில்

           வேணுபுரம் அதுவே.'

மதம் ஏறிய யானையை, அதை ஏவியவர்கள் அஞ்சும் படி உரித்து போர்த்திய, படமெடுத்தாடும் நாகத்தை காதணியாக கொண்ட பரமேஸ்வரனின் மிகத் தொன்மையான ஊர்‌ எதுவென்றால், நடனத்தையே நடையெனக் கொண்ட, பெண்களின் கூந்தலில் இருக்கும் வகிடு போல இரண்டாகப் பிளவுண்ட செம்பவள இதழ்களால் ஆன வாயின் மேல், காண்பவரின் கண்களில் பாய்ந்து நெஞ்சில் தைத்து சிலைத்து அவர் நிற்கும் படி வைக்கக்கூடிய விடத்தை தமது கண்களில் தேக்கிய அழகியர் வாழும் வேணுபுரம் தான் என்கிறார் சம்பந்தர். இது மட்டுமல்ல பல பதிகங்களிலும் சிவனின் பெருமை, அவனது உருவம், அதையொட்டிய ஏதேனும் ஒரு புராண நிகழ்வு, அதன் பிறகு அந்த ஊர் மற்றும் கோவிலின் புகழ் என்ற வார்ப்பே பயன்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் அவை மட்டும் தானா இந்த பதிகங்கள்? வெறுமனே சிவனை புகழ்ந்தேத்தி, அவனது அருளையும், ஞானத்தையும் பாடி நம்மில் அவன் மீதான பக்தியை வளர்ப்பதற்காக மட்டுமா இத்தனை பதிகங்கள்? நிச்சயமாக இவை மட்டுமே இருக்க இயலாது அல்லவா? சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும், மாணிக்கவாசகரும் எழுதிய காலத்தில் சங்க இலக்கியங்களும், ஐம்பெருங்காப்பியங்களும், திருக்குறள் உட்பட பிற தமிழின் பெருமைமிகு சாதனைகளும் நிகழ்ந்து விட்டிருந்தன. தமிழ் ஒரே சமயத்தில் செவ்வியல் மொழியாகவும், வழக்கு மொழியாகவும் இலக்கண சுத்தமாக முழுமை பெற்று விட்டிருந்தது. அச்சமயத்தில் எழுந்த இந்த பக்தி இலக்கியங்களும் இந்த மாபெரும் செவ்வியல் மரபின் நீட்சியாகவே இருந்தன. சங்கப்பாடல்களில் இருந்த உயர் கவித்துவமும், ரசனையும், அதனோடு கூடவே பாடப்படும் மரபின் தரிசனங்களும், தத்துவங்களும் சேர்ந்தே பயின்று வந்தவை தான் சைவ மற்றும் வைணவ பக்தி இலக்கியங்கள். இன்றைய பக்தி இலக்கியங்களின் மீதான வாசிப்பும் இவற்றையே கோருகின்றன. நாம் காணும் இப்பாடலின் கவித்துவம் அபாரமான ஒன்று.

இப்பாடலின் முதல் வரியை “கடந்தாங்கிய கரியை அவர் அஞ்ச உரி போர்த்து” என்று கூட எழுதியிருக்கலாம்.‌ ஆனால் வெருவுதல் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறார் சம்பந்தர்? இந்த வார்த்தைக்கும் யானைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது, திருக்குறளில் ஊக்கமுடைமை அதிகாரத்தில் வரும் பின் வரும் குறள் தான் அது.

‘பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலி தாக்குறின்’.

மனிதர்கள் உருவான காலந்தொட்டே காட்டில் இருக்கும் விலங்குகளில் ஆகப் பெரியது யானை தான். மேலும் அதற்கு கூர்மையான வளைந்த கொம்புகளும் உண்டு. அந்த யானையை சாதாரணமாக எந்த விலங்கும் தாக்க முன்வராது. சிங்கம் கூட யானைக் கன்றைத் தான் தாக்குமே ஒழிய வளர்ந்த யானையை, அதுவும் கொம்பனை தாக்காது. அப்படியே தாக்க வேண்டுமென்றால் கூட சிங்கங்கள் கூட்டமாகச் சேர்ந்தே தாக்கும். அப்படியாக யானையைத் தாக்கும் வேட்டை விலங்கு என்றால் அது கூட்டாகச் தாக்கும் வழக்கம் உள்ள சிங்கமும், கழுதைப் புலியும் தான். எனவே கொம்பன்கள் தனியாக வரும் சிங்கத்தையோ, கழுதைப் புலியையோ மதிக்கக் கூடச் செய்யாது. இது ஆப்பிரிக்க காடுகளின் நிலை. ஆனால் இந்திய காடுகளில் யானைக்கு எதிர் நிற்கும் இன்னொரு விலங்கு உண்டு. அது புலி. ஆனால் புலி எப்போதுமே தனித்தது. தனியே தான் வேட்டையாடும். இலக்கியத்தில் தனிமை எப்போதுமே வேங்கையுடன் இணைத்து பேசப்படுவதை இங்கே நினைவுகூரலாம். அப்படிப்பட்ட புலி தன்னந்தனியாக யானையை எதிர்த்து தாக்கும். இது மிக அரிதாகவே நிகழக்கூடிய ஒன்று என்றாலும், யானையை ஒற்றையாளாக எதிர்க்கும் ஒரே வேட்டை விலங்கு என்றால் அது புலி தான். நன்கு வளர்ந்த ஆண் புலி அதிக பட்சம் முன்னூறு கிலோ எடை இருக்கும்.. நன்கு வளர்ந்த இந்திய கொம்பன் யானை அதிக பட்சம் நாலு டன் எடை இருக்கும். எனவே தன்னை விட பல மடங்கு எடை இருக்கும் யானையை ஒரு புலி எதிர்க்கும் என்றால் அதற்கு எவ்வளவு ஊக்கம் இருக்க வேண்டும். எனவே தான் அத்தனை ஊக்கம் உடைய ஒரு புலியைச்  சந்தித்தால் அவ்வளவு பெரிய, கூர்மையான கொம்புகளை உடைய யானை கூட அஞ்சும், வெருவும் என்கிறார் வள்ளுவர். இங்கே யானையும் அஞ்சுகிறது, அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தியத்தைப் பார்த்து அந்த யானையை ஏவியவர்களும் அஞ்சுகிறார்கள். ஆனால் புலி எங்கு வருகிறது? புலி நேரடியாக வரவில்லை. ஆனால் அந்த யானையின் எதிர் நின்றவன் புலித்தோலை இடையில் அணிந்தவன். ஊக்கமுடைய புலிக்கே அஞ்சும் யானை, அந்த புலியையே கொன்று தோலை இடையாடையாக அணிந்தவனை கண்டால் வெருவுதல் இயல்பு தானே.

இதில் தோலுரிக்கப்பட்ட கரி யானையாகவே குறிப்பிடப்படுகிறது, கஜ முக அசுரனாக அல்ல. மேலும் அந்த யானை, அதுவும் பெரு மரங்களையே முட்டி, வேரோடு பிழுது வீசக்கூடிய வல்லமையுடைய மதநீர் ஒழுகும் களிறு, யாரோ சிலரால் ஏவப்பட்டதாகவும், அவ்வாறு ஏவியவர்கள் வெருவ அதாவது அஞ்சும் வகையில் அதன் தோலை உரித்துப் போர்த்தியதாகவும் கூறுகிறது இப்பாடல். இதில் வருவது இந்த கரியுரித்தல் நிகழ்வின் மற்றொரு தொன்மம். வெண்முரசின் கிராதம் நாவலில் இந்த தொன்மம் மிக விரிவாக வருகிறது. இந்த தொன்மத்தின் படி இமைய மலை அடிவாரத்தில் ஓங்கி உயர்ந்த தேவதாரு மரங்கள் நிறைந்த வனம் ஒன்றில் அத்ரி தலைமையிலான நூற்றெட்டு முனிவர்கள் தத்தமது அறத்துணைவியருடன் வாழ்ந்து வந்தார்கள். வேதங்களை முறையாகப் பயின்று, வேதச் சொல் பிழையாது, வேதங்களில் வகுத்த வேள்விகளையும், பொழுதிணைவு வணக்கம் (சந்தியா வந்தனம்) உட்பட அனைத்து நாட்கருமங்களையும் முறையாகச் செய்து வந்தனர் அவர்களும், அவர் தம் மாணாக்கர்களும். வேதச் சொல்லன்றி வேறு ஒரு சொல் எழவில்லை. அல்லும் பகலும் வேதம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்ததால் அந்த தேவதாரு வனத்தில் தீயதென ஒன்று இருக்கவில்லை. அந்த வனம் வேத வனம் என்றும், ஓங்கி உயர்ந்த தேவதாரு மரங்கள் செறிந்து இருந்ததால் தாருகா வனம் என்றும் அழைக்கப்பட்டது. அந்த ரிஷிகள் தாருகாவனத்து ரிஷிகள் என அழைக்கப்பட்டார்கள். நால் வேதங்களின் மிகப் பெரும்பாலான பகுதிகள் மானுடம் விழையும் ஒன்றை வேட்க முறையாகச் செய்ய வேண்டிய வேள்விகள் பற்றிய செயல்முறை (கர்ம) காண்டமே. உலகியலில் தேவைப்படும் அனைத்தையுமே வேள்வி மற்றும் வேதங்களில் சொல்லப்பட்ட நெறிகளை முறையாகச் செய்வதன் மூலமே பெற இயலும் என்ற எண்ணம் கொண்டிருந்தனர் தாருகாவன ரிஷிகள். எனவே  அவர்கள் கடவுளர்கள் எவரையுமே வணங்கவில்லை. அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்த சிவபெருமான் கங்காளனாக, பிட்சாடனாக வந்து அவர் தம் அறத்துணைவியரின் மனதைக் கவர்ந்து சென்றார். இதனால் வெகுண்ட அவர்கள் அதர்வ வேதம் சொல்லும் அபிசார வேள்வி ஒன்றைச் செய்து இறைவனைக் கொல்ல ஏவி விட்டது தான் இந்த யானை. அதைத் தான் கொன்று அதன் தோலை உரித்து போர்த்திக் கொண்டான் நம் பெருமான். இந்த புராணத்தைத் தான் அந்த முதல் வரி சுட்டி நிற்கிறது.

முதல் அடியில் யானையை சொன்ன சம்பந்தர் இரண்டாம் அடியில் ஐயனின் காதணியைச் சொல்கிறார். நடராஜ சிற்பத்தில் நடராஜரின் வலக்காதணிக்கும், இடது காதணிக்கும் இருக்கும் வித்தியாசம் வியப்பூட்டுவது. வலது காது நீண்டு தொங்கிய குழை என்ற அணியையும், இடது காதில் பெண்கள் அணியும் தோடும் இருக்கும். நம் சிவன் தான் மாதொருபகன் அல்லவா!! அதன்  குறியீடாக நடராஜரில் குழையும், தோடும் அமைந்துள்ளன. சிவனின் காதணிக்கான இந்த சிற்ப இலக்கணம் முழுமையாக நம் தமிழ் நிலத்தின் கொடை. தேவாரமும், திருவாசகமும் சிற்பவியலில் கொண்டு சேர்ந்தது. குறிப்பாக சோழர்கள் காலத்திலும், அதற்குப் பின் வந்தவர்கள் காலத்திலும் நம் தமிழ் நிலத்தில் எழுந்த எல்லா சிவ வடிவங்களிலும் சிவனுக்கு இந்த அமைப்பு உண்டு. நேர்மாறாக நாம் வடக்கில் இந்த வேறுபாட்டை காண இயலுவதில்லை. அம்மையிடம் ஞானப்பால் அருந்திய சம்பந்தப் பெருமான் தன் முதல் பதிகமாக ‘தோடுடைய செவியன்’ என சிவனின் உமைபாகத்தையே முன் வைத்து பாடுகிறார். அந்த தோடின் அசைவொலி அன்னைக்கு ஏங்கி அழும் மதலையென இறைவனுக்காக ஏங்கி நிற்கும் அடியவர்களின் வேண்டுதல்களை அவனுக்கு சொல்லுவதால் தோடுடைய செவியன் எனத் துவங்குகிறார் திருஞானசம்பந்தர். அன்னைக்கு தானே அழுகுரல் முதலில் கேட்கும்!! ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள பாடலில் அவர் தோடை சொல்லவில்லை, மாறாக ஆண்கள் காதில் அணியும் குழையைச் சொல்கிறார். சிவபெருமான் தோடு, குழை, சுருள், குண்டலம், பொற்றோடு, கோளரவம், ஓலை என ஏழு வகை காதணிகளை தரித்திருப்பதாக தேவாரப் பதிகங்கள் சொல்கின்றன. மீண்டும் மீண்டும் வருவன தோடும், குழையும் தான். மற்றவை எல்லாம் ஒரு பொருள் பன்மொழி. தோடு, சுருள், பொற்றோடு, ஓலை என்ற நான்கும் பெண்கள் காதணியான தோடு என்பதன் பிற பெயர்கள். குழை, குண்டலம், கோளரவம் என்பவை ஆண்களின் காதணியான குழையின் பிற பெயர்கள். தோடு என்பது காதில் துளையிட்டு பதிப்பது. நாம் சாதாரணமாகப் பார்க்கும் கம்மல். குழை என்பது காதில் தொங்கவிடப்படும் ஒருவகை வளையம். குழை தொங்கும், தோடு பதிந்திருக்கும். குழை தொங்கிய காதுகள் நீண்டு, அந்த தொங்கல் தோளைத் தொடும் வரையில் கூட நீளக் கூடும். வடிகாது என இது அழைக்கப்படும். 'குழைவிரவு வடிகாதா - குழை பொருந்திய, தொங்கிய காதை உடையவனே' என சுந்தரர் தன் திருவெண்காட்டு பதிகத்தில் சிவனை விளிக்கிறார். இங்கும் ஒரு காதை மட்டுமே சுட்டி நிற்பதைக் காணலாம். மேலும் ஒரு பதிகத்தில் “குழைதழுவு திருக்காதில் கோளரவம் அசைத்து” என சிவன் தன் எட்டு தோள்களையும் வீசி நடனமாடுகையில், நீரில் செல்லும் தோணியின் துடுப்பு போல நீண்டு வடிந்த குழையணிந்த காதுகள், கொடிய விடம் கொண்ட பாம்பு அசைந்தது போல ஆடின என்கிறார். பொதுவாக குழைகள் பொன்னாலும், சங்குகளாலும் செய்யப்படும். குழை என்ற வினைச் சொல்லிற்கு துவள்தல், நெளிதல் என்ற பொருளும் உண்டு. சம்பந்தர் இப்பொருளிலேயே அரவக்குழை, அதுவும் படந்தாங்கிய அரவக்குழை என காதணியையும் நாகமாக்குகிறார். முதலடியில் யானையைச் சொன்னவர் இரண்டாம் அடியில் ஏன் பாம்பைச் சொல்கிறார்?

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. அப்படிப்பட்ட ஒரு சொல் தான் நாகம். நாகம் என்றால் பாம்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலாக இச்சொல்லிற்கு யானை மற்றும் மலை என்ற பொருள்களும் உள்ளன. பின்னாளில் ராமன் சிவதனுசை நோக்கி நடந்ததை தன் ராமகாதையில் கூறப்போந்த கம்பன், “மால் விடையும், பொன் நாகமும், நாகமும் நாண நடந்தான்” என்றே எழுதுகிறான். பெருமைமிகு எருதான இடபமும், பொன்னென ஒளிரும் கயிலை மலையும், யானையும் நாணும் வகையில் இருந்ததாம் ராமனின் நடை. நம் தமிழில் யானைக்கு நாகம் என்றும் ஒரு பெயர் இருப்பது ஓர்ந்து அடுத்த வரியில் அரவத்தை சொல்லியிருக்கலாம். இதை விட இன்னொரு காரணமும் இருக்கிறது. அது தத்துவார்த்தமானது. அதை பின்னர் காணலாம். திருமுறைகளில் சிவபிரானது அணிகளில் ஒன்றான அரவு அவரது கழுத்தில் இருப்பதாகப் பாடப்பட்ட பாடல்கள் எனக்குத் தெரிய இல்லை. நம்முடைய பண்டைய, குறிப்பாக சோழர் கால ஆலய சிவ மூர்த்தங்களிலும் பாம்பு சிவனது கழுத்தில் இருப்பது போன்ற சிற்பங்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அரவம் அவரது சடையிலோ, கையிலோ அல்லது காதிலோ இருப்பது போலத் தான் பெரும்பாலான தேவாரப் பதிகங்கள் இருக்கின்றன. அந்த அணியிலக்கணத்தையே சிற்பவியலும் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். எனவே தான் நாகத்தைப் பற்றிப் பாட வந்த சம்பந்தர் அரவக்குழை என காதில் நாகம் வளைந்தாடுவதாக எழுதுகிறார். அதுவும் படமெடுத்தாடும் நாகம். விடம் கொண்ட நாகம். இங்கே சிவபெருமானை பரமேட்டி என்றழைக்கிறார் சம்பந்தர். அதாவது பரமேஸ்வரன், தான் சென்று வணங்க, தனக்கு மேல் யாரும் இல்லாத, ஒப்பாரும், மிக்காரும் இல்லாத, தானே முதலான ஈஸ்வரன். அப்படிப்பட்ட முழுமுதலானின் ஊர் மிக மிகத் தொன்மையானதாகத் தானே இருக்கும்!! எனவே தான் அவ்வூரை பழவூர் என அழைக்கிறார் சம்பந்தர். வேணுபுரத்திற்காகப் பாடப்பட்டது இப்பாடல். வேணுபுரம் என்பது சீர்காழியின் இன்னொரு பெயர். இந்த வேணுபுரம் என்பதன் பெயர்க்காரணம் கந்தபுராணத்தில் வருகிறது. சூரபத்மனுக்கு அஞ்சி தன் மனைவி இந்திராணியுடன் தன் நகரான‌ அமராவதியை விட்டு பூமிக்கு வந்த இந்திரன் சீர்காழியில் நந்தவனம் ஒன்றையமைத்து தினமும் மூலவரான பிரம்மபுரீஸ்வரரை தினமும் மலரும் பூக்களால் அர்ச்சித்து வந்தான். அப்போது இந்திரனை  தேடி பூமியிலும் தன் ஒற்றர்களை சூரபத்மன்‌ அனுப்பியிருக்கிறான்‌ என்பதை அறிந்த இந்திரன் தான் அமைத்த நந்தவனத்திலேயே மூங்கிலாக மாறி மறைந்து வாழ்ந்து வந்தான். அப்படி இந்திரன் வேணுவாய் மாறி வாழ்ந்த தலம் ஆகையால் இது வேணுபுரம் ஆயிற்று.

அடுத்த இரு வரிகளும் அந்த ஊரில் இருப்பவர்களைப் பற்றியவை. இரு வரிகளையுமே அவ்வூரில் வாழ்ந்த பெண்களுக்கு உவமையாக்குவதே பொதுவான பொருள் கொள்ளும் முறை. ஆனால் சற்று கவனித்தால் நான்காவது வரிக்கு இரண்டாவது வரியுடன் இருக்கும் தொடர்பை எளிதாகக் கண்டடையலாம். இரண்டாவது வரியில் படமெடுத்தாடும் நாகம் பேசப்படுகிறது. நான்காவது வரியில் “நலபவளத்துவர் வாய் மேல் விடந்தாங்கிய கண்ணார்” என அந்த நாகத்தின் விடம் பேசப்படுகிறது. தேவாரத்தில் அதுவும் குறிப்பாக சம்பந்தரின் பதிகங்களில் அடிக்கடி வரும் உவமானம் - துவர் வாய். திருநீற்று பதிகத்தில் கூட 'செந்துவர் வாய் உமை பங்கன்' என அம்மையின் வாயை செந்துவர் வாய் என்றே அழைக்கிறார் சம்பந்தர். துவர் என்ற சொல்லிற்கு சிவப்பு, பவளம் மற்றும் வகிர்தல் என்ற பொருள்கள் உண்டு. சம்பந்தப் பெருமான் துவர் வாய் என்னும் பொழுது கூந்தலுக்கு வகிடெடுப்பதைப் போல இரண்டாக பிரிவுண்ட இதழ்களால் ஆன வாய் என்பதையே குறிக்கிறார். எனவே தான் இதழ்களின் சிவப்பிற்கு மேலும் ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். இப்பாடலில் நல்ல சிவந்த பவள நிறத்தில் இருக்கும் வகிரப்பட்ட இதழ்களால் ஆன வாயின் மீதமைந்த கண்களில் விடத்தைத் தேக்கிய பெண்கள் வாழும் ஊர் என்கிறார். இங்கும் ஒரு திருக்குறள் வந்து தான் செல்கிறது.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்.

அமர்த்தல் என்ற வார்த்தைக்கு மாறுபாடு என்பது பொருள். இங்கே தகை சான்ற, யாருக்கும் எந்த தீங்கும் நினையாத, அப்பாவியான இந்த பெண்ணிற்கு சற்றும் பொருந்தாத வகையில் அமைந்திருப்பது அவளின் கண்கள். ஏனெனில் அவை பார்ப்பவர்களின் உயிர் அல்லவா உண்கின்றன, என்கிறார் வள்ளுவர். அதையே சம்பந்தரும் வேணுபுர மாதர்கள் தங்கள் கண்களில் விடத்தை தேக்கி வைத்துள்ளதாக குறிப்பிடுகிறார். இந்த வரி பெண்களைக் குறிக்கிறது என்றால், 'நடந்தாங்கிய நடையர்' என்ற சொல்லாட்சியையும் பெண்களுக்கே கொடுத்திருப்பாரா சம்பந்தர். கொடுத்திருக்கலாம், ஆனால் நாம் சற்று மேலே செல்வோம். இரண்டாம் வரியில் வந்த நாகத்தின் விடத்தை நான்காவது வரிக்கு இணைத்த சம்பந்தர், நிச்சயம் மூன்றாவது வரியை முதல் வரியுடன் தான் இணைத்திருக்க வேண்டும் இல்லையா!! முதல் வரியில் வருவது யானை. சங்கப்பாடல்கள் யானையை கொண்டாடி இருக்கின்றன. யானையின் பேருருவும், கரு நிறமும், வளைந்த தந்தங்களும், நீண்டு தொங்கி நெளிந்தாடும் துதிக்கையும், மத நீரும், மத்தகமும் பேசப்பட்ட அளவு அதன் நடையும் கொண்டாடப்பட்டிருக்கிறது. குறிப்பாக அதன் நடை ஆண்களின் நடைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை பாடிய குருகோழியூர் கிழார் 'தூங்கு கையன் ஓங்கு நடை' என யானையின் நீண்ட துதிக்கையையும், நடையழகையும் கூறித்தான் பாடலையே துவக்குகிறார். யானையின் நடையில் நான்கு வகை உள்ளன - நடனம், துரிதம், மந்தம், ஒட்டம். நடனம் என்னும் வகை யானை சாந்தமாக, மகிழ்வாக இருக்கையில் நிகழ்வது. அவ்வளவு பெரிய உருவம் கம்பீரமாக, தரையே அதிரா வண்ணம் பொறுமையாக, ஆனால் உறுதியாக, தன் பேருடல் நலுங்கா வண்ணம் நடந்து செல்வது என்பது கிட்டத்தட்ட ஒரு நடனம் போலவே தோன்றும். அத்தகைய நடனத்தைத் தாங்கிய நடை உடைய ஆடவர்கள் வாழும் ஊர் வேணுபுரம் என்கிறார் சம்பந்தர். இந்த உவமையைத் தான் கம்பன் பின்னாளில் மேலும் விரிவாக்கிக் கொண்டான். அப்படியாக இந்தப் பாடலின் நான்கு வரிகளிலும் நாகம் வந்திருக்கின்றது.

இந்த கரியுரித்தல் பற்றி தேவாரம் மற்றும் நம் திருமுறைகள் அனைத்திலும் பல பாடல்கள் பேசுகின்றன. சம்பந்தர் தாருகாவன முனிவர்களின் அறத்துணைவியரின் கருத்தைக் கவர்ந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் பாடியிருக்கிறார். தான் அவதரித்த சீர்காழி தலத்தின் பிற பெயர்களைக் குறித்த பதிகங்கள் அடங்கிய 'பல்பெயர்ப்பத்து' என்பதில் மேற்கூறிய பிட்சாடனர் நிகழ்வை மட்டுமே விதம் விதமாக பாடியிருக்கிறார் சம்பந்தர். அந்த அளவிற்கு முக்கியமானவையா இந்நிகழ்வுகள்? இவை புராணங்கள் என்றால் கதை என்ற அளவில் இருந்தும், எல்லாம் வல்ல இறைவனின் திருவிளையாடல்கள் என்ற புள்ளியில் இருந்தும் மட்டுமே தான் புரிந்து கொள்ள வேண்டுமா? புராணங்களை மேற்கூறியவற்றைத் தவிர வேறு ஏதேனும் கோணத்தில் புரிந்து கொள்ளப்படதக்க சாத்தியங்கள் உள்ளனவா? கவித்துவத்தையும், ரசனையையும், எம்பெருமானின் பராக்கிரமத்தையும் தவிர இந்த பாடலில் வேறு ஏதேனும் அறிந்து கொள்ள இருக்கின்றனவா? முன்பே குறிப்பிட்டது போல யானையைச் சொன்ன உடன் விடம் கொண்ட நாகத்தைச் சொன்னதற்கு மொழியன்றி வேறு ஏதேனும் தத்துவ காரணங்கள் இருக்கக் கூடுமா? தத்துவம், தரிசனம் என்றெல்லாம் சொல்ல்கிறோமே இவை என்ன? மேலும் கேள்விகள்... அடுத்த பதிவில் இவற்றைப் பேசுவோம்.

கட்டுரையாளர்: அருணாச்சலம் மகாராஜன்

அருணாச்சலம் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருக்கிறார். பள்ளிப் பருவம் முழுவதும் கிராமத்திலேயே தமிழ் வழிக் கல்வியாக நிகழ்ந்தது. தந்தை வழி திருக்குறளும், சுவாமி விவேகானந்தரும் அறிமுகம். பள்ளியில் பயிலும் காலத்தில் ஊரில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சனிக்கிழமை தோறும் நிகழ்ந்த கம்பராமாயண வகுப்புகள் வாயிலாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார். தீவிர இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு மூலம் நுழைந்தார். வெண்முரசு நாவல் வரிசைகளுக்கு எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் வாயிலாக இந்திய ஞான மரபு, வரலாறு, தத்துவங்கள் ஆகியவற்றில் தன் தேடல்களை கண்டடைந்தார்.


0 comments:

Post a Comment