Monday, January 26, 2026

ஐந்தொழில் - தாமல் கோ சரவணன்

இறைவன் புரியும் ஐந்தொழில் - அறிமுகம்

"mass and energy cannot be created or destroyed" "இல்லது தோன்றாது ; உள்ளது அழியாது" 

ஒரு பொருள் இந்த உலகில் தோற்றம் , இருப்பு , மறைவு ஆகிய மூன்று நிலைகளை கொண்டதாக உள்ளதை  அறிவியலின் பார்வையில் இருந்து அறிகிறோம் . ஒரு பொருள் தோன்றுவதும் , அழியும் வரை அது இருப்பதும் பின் அது அழிவதுமான இந்த மூன்று நிலைகளை கடந்ததும் அல்லது இந்த மூன்று நிலைகளுக்குள் வராத போது அந்த பொருள் என்னவாக இருக்கிறது, இருந்தது என்பதை பல்லாண்டுகளுக்கு முன்னால்  சித்தாந்தம் மட்டுமே விளக்க முயற்சித்திருக்கிறது. தோற்றம்தான் ஒரு பொருளின் ஆரம்பம் என்பது பொதுவான நம்பிக்கை  சித்தாந்தம் அதனை ஏற்பதில்லை, அழிவுதான் ஒரு பொருளின் இறுதி நிலை என்பதும் பொதுவான நம்பிக்கை  சித்தாந்தம்  அதனையும்   அப்படி கையாள்வதில்லை. இந்த விஷயத்தில் தற்கால இயற்பியலின் கோட்பாட்டோடு மிக நெருங்கிய விளக்கத்தை சித்தாந்தம் மட்டுமே சொல்லியிருக்கிறது.

இந்தப்  பிரபஞ்சத்தில் எல்லாப்  பொருள்களும் (பிரபஞ்சமே கூட ) இரண்டு நிலைகளில் இருக்கின்றது. அதனை காரண நிலை (pre - existing matter ), காரிய நிலை (existing matter) என்பர். ஒரு பொருள் தோன்றுவதும், இருப்பதும், அழிவதற்கு முன்னாலானதும்  வரை அதனை அந்தப்  பொருளின் காரிய நிலை (Existing matter or ordinary matter) என்பர். அந்தப்  பொருள் தோன்றுவதற்கு முன்னாலும் , அழிவுக்குப்  பின்னலுமான நிலை காரண நிலை (Pre - existing matter or fundamental particles ) என்பர். எல்லா காரியமும் காரணத்தில் இருந்தே தோன்றி காரணமாகவே நிறைவில் ஆகிவிடுகிறது. உதாரணமாக பானை தோற்றுவிக்கப் படுகிறது, அது நீர், சோறு என்று சுமந்து இருக்கின்றது பின்னாளில் உடைந்து தூளாகிறது. இங்கே பானை என்கிற நிலை காரியம். அந்தப்  பானை உருவாவதற்கு முன்னால் மண்ணாகவும், உருவாகி உடைந்து தூளாகி மீண்டும் மண்ணாகவும்  ஆகிவிடுகிற பட்சத்தில் மண் காரண நிலையாகிறது. மண் என்னும் காரண நிலை பானை என்கிற காரியமாகி மீண்டும் மண்ணாகிய காரணமாகிறது .

இந்த இடத்தில் நாம் நின்று யோசிக்க பல விஷயங்கள் இருக்கின்றன. இங்கே தோற்றம் என்பது புதிதாக எதுவும் தோன்றுவதல்ல. இருக்கின்ற மண் பானையாகிறது அவ்வளவே. அதேபோல்  இங்கே எதுவும் அழிவதுமில்லை ஏனெனில்  காரணமாக  இருக்கின்ற பானை மீண்டும் மண்ணாகிறது. இருக்கின்ற ஒன்றே தோன்றும், இருக்கின்ற ஒன்று  முற்றாக ஒருபோதும் அழியவும் அழியாது. இதனையே சித்தாந்தம் "இல்லது தோன்றாது ; உள்ளது அழியாது" என்கிறது. இதற்கு சித்தாந்தம் உபயோகிக்கும்  சொல் "சற்காரியவாதம்". புத்தகம் என்ற ஒன்று திடீரென்று முளைக்கவில்லை அது மரமாக இருந்தது. ஆபரணம் என்ற ஒன்று புதிதாக உருவாக  வில்லை அது தங்கமாக இருந்தது. தூலமாக இந்த பிரபஞ்சத்தில் தோன்றுகின்ற எல்லாமுமே முன்னம் சூட்சுமமாக இருந்த ஒன்று  என்பதே சற்காரியவாதம் .

இந்த நிலையில் இருந்து பார்க்கும் போது தோற்றம், இருப்பு, அழிவு என்பதன்  சொற்களின் வரையறையை சித்தாந்தத்தில் மாற்றி எழுதப்படவேண்டுமாக இருக்கின்றது . தோற்றம் என்பது யாதெனில்  கண்களுக்கு புலப்படாத நுண்ணிய நிலையில் இருந்து காணப்படும் பருநிலையை அடைவது என்பது "தோற்றம்". காணப்படும் பரு நிலையிலேயையே  அது தொடர்வது என்பது "இருப்பு". காணப்படும் பரு நிலையில் இருந்து காணப்படாத நுண்ணிலைக்கு மீண்டும் மாற்றமுறுவது          "அழிவு". பொன்னானது ஆபரணமாக தோற்றம் கொண்டு நிலைத்து பின் மீண்டும் பொன்னாவதை போல், மண்ணானது குடமாகி நிலைத்து பின் உடைந்து மீண்டும் மண்ணாவதைபோல், மெழுகானது  மெழுகு வர்த்தியாகி உருகி அழிந்து மீண்டும் மெழுகாவது போல  இங்கே எல்லாமும் இருக்கின்ற காரண நிலையில் இருந்து காரியமாகி மீண்டும் காரணமாகவே ஆகிவிடுகிறது என்பதே சற்காரியவாதம் . ஆக  தோற்றமும், அழிவும் என்பது பொருள்களின் நிலை மாற்றங்களே அன்றி புதிதான ஒன்றின் உருவாக்கமோ, முற்றாக ஒன்றின் அழிவோ அல்ல . ஏனெனில் "இல்லது தோன்றாது ; உள்ளது அழியாது" . இந்தப்  பேருண்மையை தற்கால அறிவியல் "mass and energy cannot be created or destroyed - only transformed" என்கிறது. அதாவது பொருளையும்  ஆற்றலையும்  உருவாக்கவோ அழிக்கவோ முடியாது என்கிறது.  

சற்காரியவாதத்தின் அடிப்படையில் முப்பொருள் உண்மையாக இருக்கின்ற இறைவனை (பதி), உயிர்களை (பசு), மலங்களை (பாசம்) நோக்கும்போது இந்த மூன்றும் எப்போது தோன்றிற்று என்றோ எந்தக் காலத்தில் அழியும் என்றோ ஆராய்தல் கூடாது. தோற்றம் என்ற ஒன்றும், அழிவு என்ற ஒன்றும் உண்மையில் இல்லை. இந்த மூன்று முப்பொருளும் தோற்றமும், அழிவும் அற்றது. நித்தியமானது. மேலும் இந்த மூன்றும் ஒன்றிலுருந்து ஒன்று வந்ததும் அல்ல. பொன்னிலே இருந்து மட்குடமும், மண்ணிலே இருந்து பொன்னாபரணமும் தோன்றாது. அது அது அதனதன் தன்மையில் தனித்து நிற்கும் தன்மையானதாகும்.

காரண காரியமாக , மண்ணும் பானையுமாக இந்த பிரபஞ்சம் காரண பிரபஞ்சம் காரிய பிரபஞ்சம் என்று இரு நிலைகளில்  உள்ள ஒரே பொருளாகும் . காரண பிரபஞ்சத்தில் இருந்தே காரியமாக உலகங்கள் தோன்றியது. காரியமாகிய உலகம் மீண்டும் காரண பிரபஞ்சமாக ஒடுங்கும். சித்தாந்தத்தில் அழியும் என்று சொல்வதை விட ஒடுங்கும் என்று சொல்வதே சரி. அழிவது என்றால் இங்கே இல்லாமல் போவது உண்மையில் இங்கே எதுவும் இல்லாது போகாது, இருக்கின்ற நிலையை விட்டொழியும் அவ்வளவே அதனை ஒடுங்குதல் என்பது சாலப் பொருந்தும்.

மேலே சொல்லப்பட்ட விடயங்களை உள்வாங்கிக்கொள்ளும் போது நமக்கு ஒரு ஐயம் எழும் காரணம் காரியமாக மாறுவது தோற்றம் , அது காரியமாகவே இருப்பது இருத்தல் , அது மீண்டும் காரணமாக மாறுவது அழிதல் அல்லது ஒடுங்குதல் இந்த மூன்று நிலையும் தானே ஆகிவிடுமா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை. ஒரு பொருள் உருவாக மூன்று விஷயங்கள் முக்கியமானது. அதாவது ஒரு காரியம் தோன்ற மூன்று காரணங்கள் வேண்டும். அதனை சித்தாந்தம் "முதற்காரணம்" , "துணைக்கரணம்"  , "நிமித்தக்காரணம்" என்கிறது.

பானையாகிய  காரியத்திற்கு அடிப்படையாக இருக்கிற மண் முதற்காரணம், அதை செய்ய உதவும் சக்கரம் துணைக் காரணம், செய்யும் குயவன் நிமித்தக்  காரணம். மண் இல்லாமல் குயவனும், சக்கரமும் வைத்து பானை செய்ய முடியாது, சக்கரம் இல்லாமல் குயவனால் பானை வனைதல் இயலாது, குயவன் இல்லையேல் மண்ணும், சக்கரமும் இருந்தும் பானை தோற்றுவிக்கப்பட மாட்டாது. இதே தத்துவமே உலகுக்கும் பொருந்தும். உலகமாகிய காரியம் உருவாக மாயை முதற்காரணம், கடவுளது ஆற்றல் துணைக்கரணம், கடவுள் நிமித்தக்காரணம். படைத்தல் என்று சொல்லப்படுகிற தோற்றுவித்தலுக்கு மூன்று காரணங்கள் இருந்தாலும் , நிமித்த காரணமாகிய இறைவனே படைக்கிறான் (தோற்றுவிக்கிறான் ) என்று சொல்வதற்கு காரணம் யாதெனில், அறிவில்லாத பொருள் தானாக செயல்படாது, அறிவில்லாத பொருளில் ஒருபோதும் அறிவு உண்டாகப்போவதுமில்லை. அறிவுள்ள பொருள்தான் செயல் படும், அறிவுள்ள பொருள் தான் செயல் படச்செய்யும். மண் பானையாகிறது என்பது உண்மைதான் ஆனால் மண்ணால் தானாக பானையாகிக்கொள்ள முடியாது, சக்கரம் தான் மண்ணை பானையாக மாற்றும் ஆனால் சக்கரத்தால் தானாக அதனை செய்ய முடியாது காரணம் இந்த இடத்தில் மண்ணுக்கும், சக்கரத்திற்கும் அறிவு என்ற ஒன்று இல்லை அதனால் செயல் இல்லை. குயவன் என்கிற அறிவுள்ள ஒருவன் மண்ணை பானையாக தோற்றுவிக்கிறான். மண் பானையாகவும், சக்கரம் பானையை உருவாக்கவும் குயவன் என்கிற அறிவுள்ள ஒருவன் தேவை படுகிறான். எனவேதான் பானையை படைப்பவன் குயவன் ஆகிறான். அந்த படைப்பின் வெகுமதி மண்ணுக்கோ சக்கரத்திற்கோ போகாமல் குயவனுக்கு போகிறது. அறிவற்ற மண்ணும், சக்கரமும் காரணங்களாக இருந்தாலும் தோற்றத்தின் செயல் நிமித்தகாரணமான குயவனிடமே இருக்கிறது .

அதே போல இந்த உலகம் மாயையில் இருந்து படைக்கப்பட்டாலும், கடவுளின் ஆற்றல் அதை செய்ய உதவினாலும் கடவுள் என்கிற                     நிமித்தகாரகனே படைக்கிறான் என்பதே  பொதுவான உண்மையாகிறது. இங்கே மாயை தன்னை தானே உலகமாக்கிக்கொள்ள முடியாது மற்றும் அறிவற்றது, அறிவற்றது எதுவும் செயல்படாது. கடவுளின் ஆற்றலும் ஆற்றலே ஒழிய அறிவுள்ளது அல்ல ஆக கடவுளாகிய இறைவனே பேரறிவு கொண்டவன் ஆதலால் அவனே படைக்கிறான் என்பது சாலப்பொருந்தும். அதே சமயம் கடவுள் எதையும் புதிதாக படைப்பதில்லை மாயையில் நுண்பொருளாக இருப்பதை தன் ஆற்றலை கொண்டு பரு பொருளாக வெளிப்படுத்துகிறான். இந்த வெளிப்படுத்தலே படைப்பு. அதாவது குயவன் பானையை படைக்கிறான் ஆனால் அவன் மண்ணை படைப்பதில்லை, அது இங்கேயே இருப்பது அந்த மண்ணை சக்கரத்தால் தன் அறிவினை கொண்டு பானையாக்குகிறான் என்பதைபோல்  அங்கே கொண்டு கூட்டி புரிந்துணர்வோம் .

இவ்வாறாக இறைவன் நுண்பொருளை மாயையில் இருந்து உடம்பாகிய பருப்பொருளாக  உண்டாக்கி, அதை  ஆன்மாவிற்கு அளித்து அது இந்த உடம்பினோடு நுகர தனு, கரண, புவன, போகங்களையும் அதே போல் மாயையில் இருந்து உண்டு பண்ணி படைத்தல் செய்து, அந்த உயிரை உடம்போடு இருக்க காத்தல் செய்து, அது வினை பயனாய் மீண்டும் பிறக்க உடம்பை அழித்து, பிறவி பல தந்து மறைத்து , நிறைவில் அந்த ஆன்மாவை அருள்செய்து தன்னோடு இரண்டற கலக்க பக்குவப்படுத்துகிறான். அஞ்ஞானத்தில் தனித்து அறிவற்று கிடக்கும் ஆன்மாவை கருணையோடு  உலகில்  படைத்து, உலகில் ஆன்மா அறிவு பெற உடம்பை  படைத்து பின் அதனை வாழும் பொருட்டு காத்து, பின் உடம்பை அழித்து, மீண்டும் வினைக்கேற்ப படைத்து அறிவும் பக்குவமும் உண்டாக மறைத்து, நிறைவில் பக்குவமுற்ற ஆன்மாவை அருளி தன்னோடு இணைக்கிற  படைத்தல் , காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் இந்த  நீண்ட செயலைத்தான் சித்தாந்தம் "ஐந்தொழில்" என்கிறது. இந்த ஐந்தும் உயிர்களுக்குதான் போராட்டமேயொழிய   ஆண்டவனுக்கு இது விளையாட்டுதான். அதனாலேயே கம்பன் ,

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,

 நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,

 அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்

 அன்னவர்க்கே சரண் நாங்களே" என்றார்.

கட்டுரையாளர்: தாமல் கோ.சரவணன் M.Sc., M.Ed., எழுத்தாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்

உயிரிதொழில் நுட்பவியல் ( master in Biotechnology) ல் முதுநிலையும் பெற்றவர்.

தற்போது ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் ( Director of Syllabus committee board ) அமெரிக்காவின் Florida International University –யின் வள்ளலார் ஆய்விருக்கைக் குழு உறுப்பினராகவும் ( board member of vallalar chair) காஞ்சிபுரம் ஊர்க்காவல் படையின் மண்டலத் துணைத் தளபதியாகவும் (Deputy Area Commander of TamilNadu home guards) பிஏவி பன்னாட்டுப்பள்ளியில் துணை முதல்வராகவும் (vice principal) பொறுப்பு வகிக்கின்றார்.எழுதிய நூல்கள்.

1.வள்ளலார் வளர்த்த தமிழ்

2.தமிழ் வளர்த்த சான்றோர்கள்

3.காப்பியங்கள் அணிந்த காலணிகள்

4.கம்பன் கவியில் காத்திருப்பு

0 comments:

Post a Comment