Tuesday, November 18, 2025

துரியம் கடந்த சுடர் 6 – ஆலமர்ந்த தண்சுடர்

துரியம் கடந்த சுடர் 1



[1]

விலங்குகள் சரணாலயம், காப்பகம் பற்றி அறிந்து இருப்பீர்கள். நம் நாட்டிலும் பல சரணாலயங்கள், வனவிலங்கு காப்பகங்கள் இருக்கின்றன. இத்தகைய காப்பகங்களில் ஒரு வகை ‘வேட்டை காப்பகம்’. இத்தகைய காப்பகங்களில் விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வேட்டை அனுமதிக்கப்படுவதுண்டு. 2012 ஆம் ஆண்டு மார்ச் நான்காம் நாள், தென்னாப்பிரிக்காவின் சுலுலாந்தில் இருக்கும் ‘துலா துலா’ தனியார் விலங்குகள் வேட்டை சரணாலயம் சோகத்தில் மூழ்கி இருந்தது. அதன் உரிமையாளரும், மிகப் புகழ்பெற்ற விலங்கு ஆர்வலரும், “யானை செவியர் – Elephant Whisperer” என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான லாரன்ஸ் அந்தோணியின் மரணம் அந்த காப்பகத்தை உலுக்கியிருந்தது. அவர் 2012, மார்ச் 2 ஆம் தேதி ஜோகணஸ்பர்க்கில் மாரடைப்பால் தனது 61 வது வயதில் இறந்தார். அவருக்கு அந்த ‘யானைச் செவியர்’ பெயர் கிடைத்தது ஒரு சுவாரசியமான நிகழ்வு. எவருக்கும், எதற்கும் அடங்காமல் விளைநிலங்கள், மனிதர்கள் என சர்வநாசம் செய்து கொண்டிருந்த 9 யானைகள் அடங்கிய ஒரு குழுவை சுட்டுக் கொல்ல முடிவெடுக்கப்பட்டிருந்தது. எதற்கும் இருக்கட்டுமே என ஒரு கடைசி முயற்சியாக அந்த யானைகளை எப்படியாவது சமாதானப்படுத்தி ஒரே இடத்தில் தங்க வைக்க இயலுமா எனக் கோரி லாரன்ஸிடம் வந்து சேர்ந்தனர் சில விலங்கு ஆர்வலர்கள். லாரன்ஸும் முயன்று பார்ப்போமே என்று அந்த யானைகளோடு சமரசம் பேசச் சென்றார். அந்த குழுவுடன் அவரது தொடர் இருப்பும், முயற்சியும் மெதுவாக கைகொடுத்தது. முதலில் அக்குழுவின் தலைவியான ‘நாநா’ அவரை ஏற்றுக் கொண்டாள். எப்படியோ அந்த குழுவை அவர் தனது துலா துலா சரணாலயத்திற்கு அழைத்து வந்து விட்டார். அதன் பிறகு எங்கும் செல்லாமல் சமத்தாக இருந்த அந்த குழு 9 உறுப்பினர்களில் இருந்து 21 உறுப்பினர்களாக வளர்ந்தது. அப்படி யானைகளிடம் பேசி சம்மதிக்க வைத்ததாலேயே அவருக்கு அந்த ‘யானைச் செவியர்’ என்ற செல்லப் பெயர் வாய்த்தது. மார்ச் 4 ஆம் தேதி, அவரது உடலுக்கான இறுதி மரியாதைகள் அந்த காப்பகத்தில் இருந்த அவரது வீட்டின் வளாகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. தான் பிறந்து வளர்ந்த பிரான்ஸ் நாட்டை விட்டு முன் பின் தெரியாத தென்னாப்பிரிக்காவின் துலா துலாவிற்கு அவரை மட்டுமே நம்பி வந்த அவரது காதல் மனைவி ஃபிரான்ஸுவா கணவரின் மரணத்தால் கலங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் வேலிப்பகுதியில் பெரும் அரவம் எழுந்தது. ‘அங்கே, அங்கே’ என வியப்பில் எழுந்த மானுடர் ஒலிகள். அங்கே 21 யானைகள் வந்து நின்றன. ஆம், லாரன்ஸின் யானைகள். அந்த குழுவின் தலைவியான ‘நாநா’ ஃபிரான்ஸுவாவை பார்த்தாள். கூடவே பிற இருபது யானைகளும் அவரையே பார்த்தன. பின் அந்த வேலியை ஒட்டி சுமார் ஒரு மணி நேரம் ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தன. அவற்றின் பார்வைகள் ஃபிரான்ஸுவாவின் மீதே இருந்தது. பின்னர் ஒரே சீராக வேலியை ஒட்டியே துயரம் தோய்ந்த முனகலோசையும், சஞ்சலத்தை வெளிக்காட்டும் இடைவிடாத செவியசைவுகளுமாக அவை நடந்தன. இடையிடையே அவை எழுப்பிய ஓசைகள் லாரன்ஸிடம் அவை பேசும் அதே ஒலிகள் என்கிறார் ஃபிரான்ஸுவா. அந்த யானைகள் தாங்கள் வாழ்ந்த இடத்தில் இருந்து லாரன்ஸ் வீட்டிற்கு சுமார் 21 மைல்கள், இரண்டு நாட்கள் நடையில் வந்து சேர்ந்திருந்தன. எனில் மார்ச் 2ல் கிளம்பியிருக்கின்றன. அவற்றிற்கு யார் சொன்னார்கள், லாரன்ஸின் மரணத்தைப் பற்றி. ஆனாலும் வந்திருக்கின்றன. அன்று முழுவதும் அங்கேயே நின்றிருந்து விட்டு அடுத்தநாள் கிளம்பி சென்றன அவை. இது ஏதோ ஒரு முறை, அவர் இறந்த அன்று மட்டுமே நிகழ்ந்த ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அதன் பிறகு அடுத்த நான்கைந்து வருடங்கள், சரியாக மார்ச் 4 ஆம் தேதி அதே கூட்டம் அவரது வீட்டிற்கு வந்து சென்றது. அவற்றிற்கு லாரன்ஸின் மரணம் மட்டுமல்ல, அந்த தேதியும் கூட மிகச் சரியாக தெரிந்திருக்கின்றன. (கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு உச்ச தருணத்தில் முடிந்த எழுத்தாளர் ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ என்னும் தமிழ் சிறுகதை இந்த நிகழ்விற்கு சரியாக ஒரு ஆண்டுக்கு முன் தான் (ஃபெப்ருவரி, 2011) அவரது தளத்தில் வந்திருந்தது என்பது ஒரு உபதகவல்.)

[2]

மானுடம் தன் பரிணாம சங்கிலியில் நிகழத் துவங்கி எண்பது லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதைக் கண்டோம். ஆனால் நமக்குத் தெரிந்த வரலாறு என்பது சுமேரிய, எகிப்திய காலகட்டங்களில் இருந்து, பொ.மு. 3400 க்கு அப்புறமாகத் தான் துவங்குகிறது. அதாவது இன்றைக்கு சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன். ஏனெனில் தற்போது வரை கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களின் படி மானுட வரலாற்றில் கிடைத்த முதல் எழுத்துக்கள் அந்த காலகட்டத்தில் தான் கிடைத்துள்ளன.  ஆனால் அதற்கும் முன்பு சில லட்சம் வருடங்கள் மானுட பரிணாமத்திற்கு உள்ளது. இக்காலகட்டம் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. ஒருவகையில் அக்காலகட்டத்தை வரலாறு அற்ற காலகட்டம் என்று சொல்லலாம். அன்று இருந்த சூழல், வாழ்வு முறை போன்றவற்றைப் பற்றி நம்மால் நமக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த தொற்காலப் பொருட்களைக் கொண்டு ஊகிக்கவே இயலும். இந்த ஊகங்களே முன்கோள்கள். அவ்வாறு நாம் கொள்ளும் முன்கோள்களுக்கான சாத்தியங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் அந்த ஊகங்கள் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருதுகோள்கள் ஆகின்றன. நெடுங்காலம் மானுடத்தை பிற உயிரினங்களில் இருந்து வேறுபடுத்தியது மானுடத்தால் உருவாக்கப்பட்ட கருவிகளே என்ற கருதுகோள் இந்த காலங்களை அக்கருவிகளை உருவாக்க மானுடம் பயன்படுத்திய பொருட்களின் அடிப்படையில் பெயரிட வைத்தது. அவ்வாறு தான் இக்காலகட்டம் கற்காலம், செம்பு காலம், வெண்கல காலம் மற்றும் இரும்பு காலம் என வகைப்படுத்தப்பட்டது. இக்காலபகுப்பில் மிக ஆதியானதும், மிக விரிவானதுமான காலம், கற்காலம் தான். இது சுமார் 33 லட்சம் வருடங்களுக்கு முன்பு துவங்கியதாகக் கருதப்படுகிறது. அதிலிருந்து பொ.மு. 5000 வரையிலான சில லட்ச வருடங்களை கற்காலம் என்றழைக்கின்றனர். செம்பு காலம் என்பது பொ.மு. 5000 க்கும், பொ.மு. 2300 க்கும் இடைப்பட்ட காலம். வெண்கலக் காலம் என்பது பொ.மு. 3300 துவங்கி பொ.மு. 1200 க்கு இடைப்பட்ட காலம். இரும்பு காலம் பொ.மு. 1200 க்கு பிற்பட்ட காலம். (இந்த இரும்பு காலகட்டத்தின் துவக்கத்தைத் தான் தமிழகத்தின் சிவகளை ஊர் கேள்விக்குட்படுத்தியது. அவ்வூரில் கிடைத்த இரும்பு பொருட்களின் காலம் பொ.மு. 3345ல் இருந்தது. இது நாம் மேற்கண்ட பகுப்பை மாற்றி எழுதும்.) கற்காலத்திற்கு பின்பு வந்த உலோகங்களின் காலத்தில் தான் உலகின் மிகப் பழைமையான நாகரிகங்களான சுமேரிய, எகிப்திய, சீன, சிந்து சமவெளி நாகரிகங்கள் வருகின்றன. எனவே இந்த உலோகங்களின் காலத்தை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் எனவும் அழைப்பர். நாம் சென்ற பதிவில் கண்ட மானுட மூதாதையின் ஆதி தன்னுணர்வுக் கணம், அதன் பிறகான பிறப்பு குறித்த அவதானிப்பு மற்றும் அறிதலுடனான பரவசம், தன்னைச் சூழ இருந்த இயற்கையை அறிந்த, அதில்  இலங்கும் ஒத்திசைவைக் கண்டடைந்த தருணம் போன்றவை நாம் மேற்கண்ட கால பகுப்புகளுக்கும் முந்தைய காலத்தில் நிகழ்ந்தவை. இவை எண்பது லட்சம் வருடங்களுக்கு முன் முதன்முதல் இருகால்களில் எழுந்து நின்ற அந்த ஆதி மூதாதை காலத்தில் இருந்தே வந்த காலங்களில் நிகழ்ந்த ஒன்று.

பிறப்பு போலவே மானுடத்தை பாதித்த மற்றொன்று இறப்பு. அது மானுடத்துக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இன்னும் சொல்லப்போனால் மானுட சிந்தனையை செலுத்தியதில், அதன் தேடல்களை வழிநடத்தியதில் இறப்பிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இறப்பே மானுடத்தின் முதல் சடங்குகளை உருவாக்கியது. இறந்தவர்கள் மீண்டு வர இயலாது என்பதையே மானுடம் மிகத் தாமதமாகவே கண்டறிந்திருக்கும். ஆனால் மீண்டு வராத வேறொன்றும் அக்காலத்தில் அவர்கள் முன்பு இருந்தது. அது இடம்பெயர்தல். உணவுக்காக, நீருக்காக, நல்ல வாழ்விடத்துக்காக இடம்பெயர்தல் என்பது அனைத்து விலங்குகளுக்கும் இயல்பானதே. இது போக மானுடத்தின் உள்ளிருந்து ஊக்கிய எல்லைக்கு அப்பால் என்ன இருக்கும் என்பதை அறியும் சாகச விளைவும் தனியான பயணங்களை மானுடர்களை செய்ய வைத்திருக்கும். பொதுவாக இத்தகைய சாகச விரும்பிகள் ஆண்களே. காரணம் விலங்குகளில் உயிர்த் தொடர்ச்சியை பேணுவதும், குழுவாக வாழ்பவற்றில் அந்த குழுக்களை கட்டிக் காப்பதும் பெண்களே. பொதுவாக தனியாகவே அலைவதும், உரிய காலங்களில் தத்தமது தகுதியை மெய்ப்பித்து உயிர் நீட்சிக்கு உதவுவதும் மட்டுமே ஆண் விலங்குகளின் பொறுப்பாக இருந்தது. குறிப்பாக யானைகளில் இத்தன்மை அதிகம். மாறாக சிம்பன்சி போன்ற பரிணாமச் சங்கிலியில் மேலே இருக்கும் விலங்குகளில் ஆண் குழுவுக்கு பொறுப்பேற்கவும், குழுவின் பிற அங்கத்தினரை தன் அதிகாரத்தால் கட்டுப்படுத்தவும் செய்யும். எனவே இயல்பிலேயே ஆண் விலங்குகளுக்கு இந்த சாகச உணர்வு சற்று அதிகம். இப்படி பயணம் செய்தவர்களில் பலர் திரும்பி வராமல் இருப்பதும் இயல்பே. எனவே தான் இறப்பு என்பதை நாம் அறிய இயலாத ஒரு பெரும் பயணம் என எண்ணி நீண்ட பயணத்திற்குத் தேவையான உணவு மற்றும் இறந்தவர்களுக்கு தேவையாக இருந்த, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்கள் அணிந்திருந்த அலங்காரங்கள் போன்றவற்றையும் அவர்களுடனே சேர்த்து புதைக்கும் வழக்கம் உலகெங்கும் உருவானது. இன்று நமக்கு கிடைக்கும் தொல்லியல் புதைச் சின்னங்களுள் பெரும்பாலானவை இத்தகைய இறந்தவர்களின் புதைகுழிகளில் இருந்து தான் கிடைக்கின்றன.

[3]

மானுடத்திற்கு இறையுணர்வு அல்லது இறையனுபவம் என்பது எங்ஙனம் சாத்தியமானது, மானுடம் சமயம் என்ற ஒன்றை எப்படி கண்டுகொண்டது என்ற நமது தேடலை மானுட பரிணாமத்தின் ஆதிப் புள்ளியில் இருந்து நாம் வாழும் தற்காலம் வரையிலான நீண்ட காலத்தில் நிகழ்த்திவருகிறோம். மானுடம் அடைந்த அனுபவம், அது எழுப்பிக் கொண்ட அடிப்படையான கேள்விகள் என நம் தேடல் விரிந்து கொண்டே செல்கிறது. அந்த தேடலின் கண்டடைதல்களாக ஒரு அந்தரங்கமான உணர்தல் வரிசையை முன்வைத்திருக்கிறோம். இந்த வரிசை சரியானது தானா என்பதை எப்படி அறிந்து கொள்வது? நம் தேடலில்  மானுட மனதில் தோன்றிய அந்த ஆதியுணர்வைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை (துரியம் கடந்த சுடர் 3 – தூண்டு சுடரனைய சோதி) இந்த தொடரில் தரப்பட்டுள்ளது. பிறப்பு குறித்த மானுட அனுபவத்தின் நீட்சிகளே இன்றளவும் உலகெங்கும் தொடரும் வளச் சடங்குகள், தாய் வழிபாடுகள். சூழ இருக்கும் இயற்கையின் ஒத்திசைவில் இறையை உணர்தல் என்பதன் நீட்சியை இன்றளவும் நீடிக்கும் இயற்கை வழிபாடுகள், நாம் முந்தைய பதிவுகளில் கண்ட இயற்கைவாதம், ஆழ்நிலைவாதம் போன்ற தத்துவ நோக்குகளில் காணலாம். இறப்பு குறித்த மானுடத்தின் தேடல்களின் ஆரம்பம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை இன்றைய யானைகள், டால்பின்கள் போன்ற விலங்குகள் தங்கள் குழுவில் ஒரு இறப்பை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதில் இருந்து ஊகிக்கலாம். ஆப்பிரிக்க யானைகள் ஒரு படி மேல் சென்று மண்ணாலும், இலை தளைகளாலும் இறந்த யானையை புதைப்பதை கானியிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் இறந்த யானையின் நினைவாக அது இறந்த இடத்திற்கு பல நாட்கள் மீள மீள வந்து மௌனமாக நின்று செல்வதை யானைகள் வழக்கமாக வைத்திருக்கின்றன. யானைகளின் இறப்பு குறித்த புரிதல்களை உலகுக்கு உணர்த்திய ஒரு பெரு நிகழ்வு என்றே முதல் பகுதியில் நாம் கண்டதைச் சொல்லலாம்.

எனவே மானுடமும் இறப்பை நிச்சயமாக கூர்ந்து கவனித்திருக்கும். முன்பே சொன்னது போல அதை புரிந்து கொள்ள முயன்ற போது தான் மானுடம் தன் சிந்திக்கும் திறனின் நீள அகலங்களையே புரிந்திருக்கக் கூடும். ஏற்கனவே தன்னுள் எழும் ஆறாவது புலன் ஒன்றின் உணர்வு, இயற்கையின் ஒத்திசைவு, பிறப்பு, இறப்பு என ஒன்றன் பின் ஒன்றாக தன்னுடைய தேடலின் எல்லைகளை விரிவு படுத்திய மானுடம் இயல்பாக வந்தடைந்திருக்கக் கூடிய முடிவு இவையனைத்தையும் நமக்குத் தெரியாத ஒரு சக்தி இயக்குகிறது என்பதாகத் தான் இருக்க முடியும். இன்று தத்துவம், அறிவியல் என மானுடச் சிந்தனையின் உயரம் கூடிய பின்பு நாமும் வந்தடையச் சாத்தியமான ஒரு பதில் இது தானே!!! எனவே தான் நம் பாரத மரபின் முதல் பெருந்தெய்வமாக எழுந்து வந்தது எமன், இறப்பின் தெய்வம்.

மானுடம் இறப்பின் திசையென கொண்டது தெற்குத் திசையை. இது பாரதம் மட்டுமல்ல, உலகின் பல்வேறு கலாச்சாரங்களிலும் இதே தான். ஏன் தெற்கு இறப்பின் திசையாகக் கொள்ளப்பட்டது? ஒரு ஊகத்தைச் செய்யலாம். மானுடத்தின் முதல் விதை எண்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருந்தாலும், இன்று இருக்கும் நம்மைப் போன்ற சிந்திக்கத் தெரிந்த மானிடர் (ஹோமோ சேபியன்ஸ்) சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றினர். இந்த மூன்று லட்சம் ஆண்டுகளில் இன்றிலிருந்து ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடைசி பனிக்காலம் துவங்கியது. அந்த காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியின் மேலும் கீழும் இருந்த சில பகுதிகளைத் தவிர உலகின் பிறபகுதிகளில் கடுங்குளிரும், உறைபனியும் இருந்தது. பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் இருந்த ஐரோப்பா பகுதிகளில் கூட மானுட இனத்தின் முன்னோர்களில் சிலர் (ஹோமோ நியாண்டர்தால்) வாழ்ந்திருக்கின்றனர். மேலும் அன்றைய மானுடப் பரவல் என்பது பூமத்திய ரேகையின் மேற்பகுதியிலேயே, அதாவது பூமியின் வட பாதி கோளத்திலேயே இருந்தது. இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருதுகோளின் படி மானுடத்தின் ஆதி பரவல் என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியிருக்கலாம். அவ்வாறு பரவத் துவங்கியது நாம் அல்ல, நம் இனத்திற்கும் மூதாதையான ‘நிமிர்ந்த மனிதன் – ஹோமோ எரக்டஸ்’. அந்த பரவலும் ஆப்பிரிக்காவின் மேல், இன்றைய அரேபிய, ஈராக், ஈரான் வழியாக நம் ஆசியா மற்றும் பாரதத்திற்கு வந்தனர். இங்கிருந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க கண்டங்களுக்கு பரவியதாகச் சொல்கிறது அந்த கருதுகோள். ஆனால் பூமத்தியரேகைக்கு தெற்கே, மத்திய ஆப்பிரிக்காவிற்கும் தெற்கே அந்த பரவல் நெடுங்காலம் நிகழவில்லை. குறிப்பாக ஒரு லட்சம் வருடங்களுக்கு முன் துவங்கிய கடும்பனிக்காலம், மத்திய ஆப்பிரிக்காவின் தெற்கே இருந்த பகுதிகளை அதீத குளிர் மூலம் மானுடர் வாழவொண்ணாத இடமாக மாற்றியிருந்தது. மேலும் பூமியின் வடகோளத்தில் வாழ்ந்தவர்களுக்கு அன்றிருந்த முக்கியமான வெப்ப மூலம் சூரியன் தான். சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் அவர்களுக்கு இருந்த வெப்பத்தின் அளவைக் குறைத்தது. வடக்கிலும் அதீத குளிர் இருந்தது. வருடத்தின் அக்காலம், பிற காலங்களை விட அதிக மரணம் நிகழச் சாத்தியமான காலம். எனவே தான் தெற்கு மரணத்தின் திசையாக மானுட மனதின் ஆழத்தில் பதிந்துவிட்டிருக்கிறது. மரணம் மானுடத்தை மிகப் பெரிய அளவில் பாதித்ததால் தான் நம் மரபின் முதல் தெய்வமாக எமன் எழுந்து வருகிறான். எமபுரி தென்திசையில் தானே இருக்கிறது. இறந்தோர் அனைவரும் தெற்கு நோக்கிச் செல்வதால், தெற்கு பின்பு மூத்தோரின் திசையாகவும் ஆகியது.

முன்பே கண்டவாறு மரணம் மானுடத்தின் சிந்தனைகளை, சடங்குகளை, இறையனுபவத்தை மேலும் மேலும் கூர்படுத்தியது. ஒருவகையில் மானுட அறிவை விசாலப்படுத்தியது. மானுட அறிவின் முதல் பணி மானுடத்திற்கு மரணம் பற்றி எழுந்த வினாக்களுக்கு அளித்த பதில் தான். அந்த வினாக்கள் அப்படியே இருக்க காலம் மாற மாற பதில்கள் மேம்பட்டுக் கொண்டே வந்தன. எந்த அறிதலும் விடுதலையே. மரணத்தை மேலும் மேலும் அணுகி அறிந்தது மரணத்தைக் குறித்த அச்சங்களை, அது உருவாக்கிய தடைகளைத் தகர்த்தெறிந்தது. அது ஒரு வகை வெற்றி. நாம் அடைந்த ஞானம் நாம் கொண்ட அறியாமையின் மீதான வெற்றி. எனவே தான் நம் மரபின் ஞானத்தின் ஆசிரியான, காலனை காலால் உதைத்தவன் தென்னாடுடையோன் எனப்பட்டான். அவனின் ஞான வடிவம் தெற்கு நோக்கிய தென்முகக் கடவுள் – தட்சிணாமூர்த்தி எனப்பட்டதும் இயல்பே தான் இல்லையா!! அவன் தெற்கு நோக்கி இருப்பதற்கும், தென்னாடுடையோன் எனப்பட்டதற்கும் பிறிதொரு வலுவான வானியல் காரணம் ஒன்றும் உண்டு. அதை பின்னால் விரிவாகக் காணலாம்.

[4]

மானுடம் மெல்ல மெல்ல பரிணாமத்தில் வளரும் தோறும், அதன் இந்த இறையனுபவங்கள் குறித்த புரிதல்களும் மேம்பட்டுக் கொண்டே வந்தன. மானுடம் மொழி என்ற ஒன்றை கண்டடைந்த போது இந்த அனுபவங்களை மேலும் காத்திரமாக தத்தமது மொழிகளில் (அந்தந்த பிராந்தியங்களில் பேசப்பட்டவை) நிறுவத் துவங்கின. இவை கடந்த 50000 வருடங்களுக்கு முன்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு உணர்விற்கும் ஒரு பெயரை இட்டது தான் அவை செய்த முதல் செயல். பெயர் என்ற ஒன்று வந்த உடனே அந்த அனுபவத்திற்கு ஒரு வடிவம், இயல்பு, வரையறை போன்றவை வந்து விடுகின்றன. வடிவம், இயல்பு, வரையறை போன்றவை மொழியில் உரையாடிக் கொண்ட அந்த மானுடரின் மனதில் இருந்தன, புறவயமாக அல்ல. அவ்வாறு இருந்தாலும் ஒரு அக வடிவு இருந்ததால் அதை நம் ஞான மரபு பெயரையே ஒரு விக்கிரமாகக் கருதியது, வாக் விக்ரகம் – நாம சிலை. பெயர் என்ற ஒன்று புறவயமாக இல்லாத, அகவயமாக உணர்ந்த ஒரு அனுபவத்திற்காக இடப்பட்ட போதே மானுடம் இயல்பாக தன் முதல் தெய்வத்தை நிறுவிவிட்டது. மேற்கூறியவற்றில் வடிவம் என்பது முழுவதுமாக அகத்தில் மட்டுமே இருந்திருக்க இயலாது அல்லவா!! அகத்தில் தோன்றும் வடிவத்திற்கு காரணமான சில தரவுகள், அமைப்புகள், வடிவங்கள் புறத்தேயும் இருந்திருக்க வேண்டும் இல்லையா!!!! அப்படி புறவயமாக இருந்தவை எவை?

தெய்வங்கள் என்பவை மானுடம் பேசிய மொழிகளில் அமைந்தவை. நாம் சென்ற பதிவில் கண்ட ‘பை’ என்ற பிரபஞ்ச விதி போல. அதற்கு மானுடம் தந்த பெயர் ‘பை’. அது நம் அறிதலுக்கு நாம் இட்ட பெயர் தானே ஒழிய அதுவே அந்த பிரபஞ்ச விதி அல்ல. அந்த பெயர் வழியாக நாம் சென்று அந்த விதியை அறியும் போது தான் நமக்கு அந்த பெயரின் முழு பொருளும் விளங்கும். அதைப் போன்றதே தெய்வங்களும். வெறும் பெயர்களும், வடிவங்களும் அல்ல, அவை சுட்டி நிற்கும் ஒன்றை நாம் சென்று அறிதலே அந்த பெயர், தெய்வம் சுட்டி நிற்கும் ஒன்றை அடைந்ததாகும். பெயர்கள் மொழியில் அமைந்தவை. மொழியோ ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்த இனக்குழுவிற்கு உட்பட்டது. எனவே தெய்வங்கள் என்று வருகையில் நாம் நம் பாரத மரபையே பெரிதும் இங்கே பார்ப்போம். நாம் மேலே கண்டவாறு மானுடம் கண்டடைந்த முதல் தெய்வம் இறப்பின் தெய்வமாகத் தான் இருக்கும். நம் மரபில் அது எமன். கூடவே அன்றைய மானுடம் வாழத் தேவையான நெருப்பின் தெய்வமான அக்னியும் ஆதி தெய்வங்களுள் ஒன்றாக எழுந்து வருகிறான். பகலை ஆளும் சூரியன், இரவை ஆளும் சந்திரன், இடி, மின்னல்களை ஆளும் இந்திரன், காற்றுகளை ஆளும் மருத்துகள் போன்றோர் அதன் பிறகு வந்த தெய்வங்கள். நாம் சென்ற பதிவில் கண்டவாறு இந்த இயற்கையில், பிரபஞ்சத்தில் இலங்கும் ஒத்திசைவு என்பது பிரபஞ்சத்தின் நெறி தான் அல்லவா. அதை ஆளும் ஒரு சக்தி பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கிறது என்பது தான் இயற்கையை அணுகி அறிந்து மானுடம் கண்டுகொண்ட இறையனுபவம். அப்படி ஒரு நெறி பிரபஞ்சத்திற்கே இருக்கையில் மானுடத்திற்கும் அதற்கான நெறிகள் என்பவை இருந்தாக வேண்டும். நெறி என்ற ஒன்று வருகையிலேயே அதை ஆளும் ஒரு தெய்வமும் இருந்தாக வேண்டும் அல்லவா?! அப்படி நெறிகளை மிகத் தீவிரமாகச் செயல்படுத்திய, நெறி மீறலை மிகக் கடுமையாகத் தண்டித்த, நெறி வழி நின்றவர்களுக்கு அருளிய முதல் பெருந்தெய்வமாக எழுந்து வருபவன் வருணன். அவனே மேற்கூறிய தெய்வங்களையும், அவை தவிர மீதமிருக்கும் நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றையும் சேர்த்து ஆண்ட பெருந்தெய்வம். அவனே நம் மரபின் வேதம் கண்ட முதல் தெய்வம். நாம் கண்ட வரிசை நம் பாரத மரபிற்கானது. உலகின் அனைத்து கலாச்சாரங்களும் கிட்டத்தட்ட இதற்கிணையான தெய்வங்களை தத்தமது மரபில் கொண்டுள்ளவை தாம்.  

நாம் மேற்கண்ட தெய்வங்கள் எல்லாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட செயலை அல்லது விளைவை ஆள்பவை. அவையே அவற்றின் வடிவை, இருப்பைத் தீர்மானித்தவை. அக்னி நெருப்பை ஆள்வது போல. இவ்வாறு ஆதிகால தெய்வங்கள் உருவாகி வந்த போதே கூடவே உருவான இன்னொரு தெய்வமும் உண்டு, அவன் சோமன். சோமன் சோம ரசத்தின் தெய்வம். சாமானிய சந்தை மொழி சோமரசத்தை போதையுடன் இணைத்தே பொருள்கொள்ளும். ஆனால் உலகில் இன்று கிடைக்கும் ஆகப் பழைமையான நூலான ரிக் வேதம் அப்படி சொல்லவில்லை. ரிக் வேதத்தில் இந்திரனுக்கும், அக்னிக்கும் அடுத்தபடியாக மிக அதிக பாடல்களைப் பெற்றவன் சோமன். ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முதன்மையாக சோமனுக்கே வழங்கப்பட்டுள்ளது. மானுடர் இயற்றும் வேள்விகளில் தவறாமல் அவிர்பாகம் பெறுபவன் சோமன். மானுடர்களின் மனதை கலக்குபவன், அவர்களுக்கு ஆனந்தத்தை நல்குபவன். கூடவே அவன் கடவுளர்களை மானுடர் தொழும் இடங்களுக்கு வரவழைப்பவன். ரிக் வேத காலத்தில் அவன் ஒரு முதன்மையான தெய்வம். நாம் முன்பே கண்டவாறு பிற தெய்வங்களுக்கு இணையான தெய்வங்கள் உலகின் பெரும்பாலான கலாச்சாரங்களின் ஆதியில் இருந்ததைப் போன்றே, சோமனுக்கு இணையான தெய்வங்களும் அக்கால கலாச்சாரங்களில் இருக்கின்றன. நாம் கண்ட இறையனுபவ படிநிலைகள் எதிலும் சோமனுக்கான வேர்களைக் காணவில்லை, இப்போது வரையிலும். அவ்வாறெனில் சோமன் எவ்வாறு தெய்வமானான்?

[5]

பிறப்பு, தன்னை சூழ இலங்கும் இயற்கையின்‌ அழகு மற்றும் ஒத்திசைவு மற்றும் இறப்பு என மானுடம் இறையையும், அந்த இறையனுபவத்தையும் அடைய மேற்கொண்ட முயற்சிகளைப் பார்த்தோம். இவை மானுடத்திற்கு வெளியில் இருப்பவை. புறவயமானவை. மானுடர்களையும் உள்ளடக்கியவை. ஆனால் மானுடத்திற்கு முதன்முதல் சித்தித்த அந்த ஆதியுணர்வு முற்றிலும் அகவயமானது. அது நிகழ்ந்த மானிடரின் அகத்தில் எவ்வித புறத்தூண்டலும் இல்லாது, இயல்பாகத் தோன்றியது. நாம் சென்ற பதிவில் பார்த்ததைப் போல அது ஒரு பித்து நிலை. இன்னொரு வகையில் சொல்லப் போனால் மானுட உடல் என்னும் சிறையை விட்டு, அந்த உடலில் உண்மையாக நுழைந்து வாழும் ஒன்று வெளியேறி, தன் இயல்பில் நின்றிருந்த நிலை. அப்படி ஒன்றை மீண்டும் அனுபவிக்க மானுடம் முயலாமலா இருந்திருக்கும்?! நிச்சயம் முயன்றிருக்கும் அல்லவா!!

இன்றைய தென்அமெரிக்காவில், குறிப்பாக பெருவில் அயஹுவாஸ்கா என்றொரு பானத்தின் மூலம் சுயஅறிதல், அகமாற்றம் மற்றும் வலி, வேதனை ஆற்றுதல் நிகழ்த்தும் பாரம்பரிய நிறுவனங்கள் உள்ளன. இந்த பானம் நம் மனதை கலக்கி, உருவெளித் தோற்றமோ எனத் தோன்றுபவற்றை நல்குவது. இந்த பானத்தை அருந்தியவர்களின் சுய அனுபவங்கள் இணையமெங்கும் வாசிக்கக் கிடைக்கின்றன. அனைத்திலும் பொதுவாக இருப்பவை மேற்கூறிய சுயஅறிதல் தான். பெரும்பாலானவை உடலை விட்டு வெளியேறிய அனுபவங்களையும் சொல்கின்றன. இந்த பானம் முழுக்க முழுக்க அந்த ஊரின் பழங்குடிகளால் அவ்வூரில் கிடைக்கும் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுவது. இந்த பானம் என்றல்ல, உலகெங்கும் இத்தகைய அனுபவங்களைத் தரும் தாவரங்கள், குறிப்பாக காளான்கள் கிடைக்கின்றன. இவற்றை சந்தை மொழி போதைத் தாவரங்கள் என்றே அழைக்கும். நம்மூரின் மலைப் பிரதேசங்களில் போதைக்காளான்கள் மிகவும் பிரபலம் என்பதை அறிந்திருக்கலாம். ஆனால் இத்தகைய தாவரங்களின் பயன்பாடு நாம் எண்ணுவது போல போதைக்கானது அல்ல. அவை மிக மிகப் பழங்காலத்திலேயே, அதாவது குறைந்தபட்சம் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மானுடத்திற்கு பழக்கம். அதாவது இன்றிருக்கும் நன்கு சிந்திக்கத் தெரிந்த மனித மூதாதைக்கும் முந்தைய மானிட இனமான இருகால்களில் எழுந்து நின்ற ‘நிமிர்ந்த மனிதன் - ஹோமோ எரக்டஸ்’ காலத்தில் இருந்தே. ஏனெனில் நமது நெருங்கிய விலங்குல உறவான சிம்பன்சிகளில் இத்தகைய தாவரங்களுக்கான ஏற்பு, மானுடர்களை விடவும் மிகவும் குறைவு. அதன் பொருள் மானுட மூளை தன் பரிணாம வளர்ச்சியில் இந்த தாவரங்கள் உருவாக்கும் மாயவிளைவுகளை ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாகி வந்துள்ளது. இந்த தாவரங்கள் உருவாக்கும் அனுபவம் நாம் முதன்முதலில் மானுடம் கண்ட அந்த ஆதியிறையனுபவத்திற்கு கிட்டே கொண்டுசெல்வது. மானுடர்களின் கனவு நிலைக்கு மிக அருகில் அமைவது இந்த தாவரங்கள் உருவாக்கும் உருவெளித் தோற்றங்கள். அந்த அனுபவம் மூலம் மீண்டும் இறையனுபவத்தையும், இறையையும் நெருங்கி அறிய மானுடம் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டே இருந்திருக்கிறது. அறிவியல், குறிப்பாக தாவரவியல் இத்தகைய தாவரங்களை ‘இறையூக்கிகள் – Entheogen’ என்றே அழைக்கின்றது. நாம் அனைவரும் நன்கறிந்த இறையூக்கி என்றால் அது ‘சிவமூலி’. காசியில் சிலும்பியுடன் அமர்ந்திருக்கும் சாமியார்கள் நினைவிற்கு வருகிறார்கள். மானுடத்தின் இறையனுபவம், சமயங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு போன்றவற்றில் இந்த இறையூக்கித் தாவரங்களின் பங்களிப்பு குறித்து ஏராளமான ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.

இந்த இறையூக்கிகளை அனைவருமே அக்காலத்தில் எடுத்துக் கொண்டார்களா? முக்கியமான வினா. அதற்கு பதிலிறுக்கும் முன், நாம் இதுவரை பார்த்துவந்த இறையனுபவம் என்பது அனைவருக்கும் சித்தித்த ஒன்றா என்ன? இல்லை. எத்தனையோ மானிடர்களில் ஓரிருவருக்கு மட்டுமே சித்தித்த ஒன்று தான் அது. அவர்களே மானுடத்தை, அதன் கலாச்சாரத்தை முன்னெடுத்தனர். மானுடத்தின் குழுக்கள் என்பவை அவர்களைச் சுற்றியே உருவாகி வந்தன. அவர்களே இந்த இறையூக்கிகளை பயன்படுத்தினர். யார் அவர்கள்? இதையறிய வரலாறற்ற காலத்தில் வாழ்ந்த நம் மானுடர்களின் அன்றாடத்தை அறிய வேண்டும்.

[6]

தொற்கால மானுடர்கள் தங்கள் உணவை இரண்டு வழிகளில் ஈட்டிக் கொண்டனர். ஒன்று வேட்டையாடி உண்பது. மற்றொன்று தாம் வாழ்ந்த இடங்களில் கிடைக்கும் தாவர உணவுகளைச் சேகரித்து உண்பது. வேட்டையாளர்களாகவும், சேகரர்களாகவும் இருந்த காலத்திலேயே உணவு எங்கு, எவ்விதம், எந்த காலத்தில் கிடைக்கும் என்பதை அறிய மானுடம் தன்னை சூழ இருந்த இயற்கையை உற்று நோக்கத் துவங்கியிருந்தது. அதை ஆவணப்படுத்தவும் செய்தது. கற்கால மானுடர்கள் பொதுவாக இயற்கையான குகைகளிலேயே வாழ்ந்து வந்தனர். அக்குகைகளின் சுவர்களில் தான் இந்த ஆவணப்படுத்தல் முதன்முதலில் நிகழ்ந்தது. ஆதிகால மானுடர்கள் தங்களைச் சூழ இருந்த இயற்கையை உற்றுநோக்கினர் என்பதைக் கண்டோம். ஆனால் அந்த இயற்கை பகலில் ஒரு மாதிரியாகவும், இரவில் வேறுமாதிரியாகவும் இருந்தது. உண்மையில் ஆதிகால மானுடர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், நிலம், நீர், காற்று, நெருப்பு போன்றவற்றை விட மிக அதிக நேரத்தை செலவளித்து உற்றுநோக்கியது ஆகாயத்தைத் தான். ஏனெனில் ஒரு நல்ல வேட்டை மிருகம் மாட்டினால் அவர்கள் எளிதாக பல நாட்களுக்கு மறு உணவு தேடவேண்டிய தேவை இல்லாமல், ஓய்வாக இருக்க நிறைய நேரம் கொண்டிருந்தார்கள். எனவே மிக விரிவாக வானத்தை ஆராய்ந்தனர். நம் வரலாற்றுக்கும் முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த இவர்களின் வானியல் அறிவு மிகவும் ஆழமானது. இந்த பதிவிலேயே சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் எப்படி மானுடத்தின் ஆழத்தில் தெற்குத் திசையோடு மரணத்தை இணைத்துக் கொண்டது என்பதைக் கண்டோம் அல்லவா!! பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதைப் பற்றி நாம் விரிவாகக் காணலாம். எனவே நம் மூதாதையர் இயற்கையை அவதானித்தனர் என்னும் போது ஆகாயத்தையும் சேர்த்தே தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஆவணப்படுத்தியவை இன்றும் உலகெங்கும் நமக்கு காணக் கிடைக்கின்றன. அவையே குகையோவியங்கள் எனப்படுகின்றன.

உலகெங்கும் கற்கால மானிடர் வரைந்த குகையோவியங்களில் அவர்களின் இயற்கையைப் பற்றிய அவதானிப்புகள் அபாரமாக வெளிப்பட்டிருக்கின்றன. ஒரு வகையில் இந்த ஓவியங்கள் உலகெங்கும் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றன. ஒரே மாதிரி என்றது ஒரே போன்ற ஓவியம் என்ற பொருளில் அல்ல. ஒரே மாதிரி தகவல் அமைப்பில் அவை வரையப்பட்டிருக்கின்றன என்ற பொருளில் தான் அவ்வாறு சொல்லப்படுகிறது. கைச் சின்னங்கள், சூழ இருந்த மிருகங்கள், பிறப்பு குறித்த படங்கள், கற்பனையான மிருகங்கள், வேட்டை போன்றவையே அந்த பொதுத்தன்மைகள். இந்த ஓவியங்களே மானுடம் பேசிய முதல் எழுத்து மொழி. எழுத்து என்றவுடன் இன்றைய நாம் வாசிக்கும், எழுதும் எழுத்துருக்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளவேண்டாம். துவக்ககால ஓவியங்கள் மிகவும் அருவமான முறையில் அவை சுட்டி நிற்பவற்றின் முதன்மையான தன்மைகளை, வடிவை, அவை சுட்டி நிற்கும் தருணத்தின் இயல்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. இந்த ஓவியங்களின் பொது தன்மைகளாக அதில் வரும் விலங்குகள் ஓடும் நிலையில் இருக்கின்றன. பயந்து ஓடும் விலங்குகள் அல்லது மானுடரைத் துரத்தும் விலங்குகள் என அவை இயக்கத்தில் இருப்பதையே வரைந்துள்ளனர். மேலும் விலங்குகள் கோட்டுருவாக அன்றி அவற்றின் முகம், உடல் பாகங்கள் மிகத் தெளிவாகத் தெரியும் வண்ணம் வரையப்பட்டுள்ளன. மாறாக மனிதர்கள் கோட்டுருவாகவே வரையப்பட்டுள்ளனர். ஒருவேளை அவர்கள் பிறருக்குச் சொல்ல விரும்பியவை மனிதர்களைத் தவிர்த்த பிறவற்றைத் தானோ!! இந்த குகை ஓவியங்களை புரிந்து கொள்ள இன்றளவும் வெவ்வேறு கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் இரண்டு கருதுகோள்கள் முக்கியமானவை. ஒன்று, இவை அந்த மனிதர்களின் கனவுகளின் வெளிப்பாடு. இரண்டாவது இவற்றில் இடம்பெறுபவை வானியல் நிகழ்வுகள்.

கற்காலம் துவங்கி நிகழ்காலம் நோக்கி வரவர ஓவியங்கள் மேலும் மேலும் தெளிவாகவும், துலக்கமாகவும், வானியல் நிகழ்வுகளுடன் இடம்பெறுகின்றன. இன்று கிடைக்கும் குகை ஓவியங்களில் மிக மிகத் தொன்மையானது நம் பாரதத்தில் தான் கிடைத்துள்ளது. அது மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் பிம்பேத்கா குகைகள் தான். அதன் வயது 7 லட்சம் ஆண்டுகளில் இருந்து 2 லட்சம் ஆண்டுகள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை உண்மையில் ஓவியங்கள் அல்ல, அக்கால மனிதர்கள் குகைகளின் சுவர்களில் கற்களால் அடித்து அடித்து உருவாக்கிய குழிகள். தரையில் இருந்திருக்குமென்றால் நம் தெப்பக் குளங்களின் கரைகளில் இருக்கும் விளக்கு குழிகளுக்கு இணையானவை. ஆனால் இவை சுவரில் இருக்கின்றன. இவை தவிர ஓவியங்களும் கிடைத்துள்ளன. இந்த குழிகள் ஏதேனும் சடங்குகளுக்காகத் தோண்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

இந்த குகை ஓவியங்களில் கூடவே காணப்படும் மற்றொரு பொது அம்சம் பூசாரி உருவம். கிழக்கே இந்தோனேஷியாவின் சுலாவெசி துவங்கி, பாரதத்தில் பிம்பேத்கா, கீழ்வாலை, கருக்கியூர், சத்திஸ்கார் மாநில குகைகள் என, மேற்கே பிரான்ஸின் லாஸ்காவ் குகை ஓவியங்கள் வரை இந்த பூசாரி இடம்பெறுகிறார். அதிலும் சுமார் 51000 ஆண்டுகள் பழமையான சுலாவசி குகையில் ஒரு பன்றியை பலி கொடுக்கும் சடங்கு ஒன்று வரையப்பட்டுள்ளது. பிரான்ஸின் லஸ்காவ் குகையிலும் ஒரு பறவை முகமூடி அணிந்த பூசாரி ஒருவர் குடல்நீக்கம் செய்யப்பட்ட ஒரு காட்டெருதின் அருகில் இருக்கிறார். நம் ஊரின் பிம்பேத்கா குகையின் பூசாரி கையில் ஒரு திரிசூலத்துடன் நடனமாடும் நிலையில் இருக்கிறார். கிழக்கே இந்தோனேசியாவில் இருந்து, பாரதம் வழியாக, மேற்கின் பிரான்ஸ் வரை, இன்றைக்கு 51000 ஆண்டுகள் துவங்கி 10000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிக நீண்டதொரு பரப்பில் திகழ்ந்த வெவ்வேறு வகையான கலாச்சாரங்களிலும் காணப்படும் பொது அம்சமாக இந்த பூசாரி இருக்கிறார். சில குகை ஓவியங்களில் பாதி மனித உருவமும், மீதி விலங்கு உருவமும் கொண்ட விநோதமான உருவங்கள் இருக்கின்றன. ஜெர்மனியில் ஒரு குகையில் 32000 வருடம் பழைமையான மனித உடலும், சிங்கத் தலையும் (நரசிம்மர்?!) கொண்ட ஒரு தந்த சிலை கிடைத்துள்ளது. இவை பூசாரி தன் உடல் கடந்த நிலையில் வெளிப்படுத்தும் உடல்மொழிகளின் ஓவியம் மற்றும் சிலை என்பது இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருதுகோள். இன்றும் குமரி மாவட்ட மலைக்கிராமங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இரவில், இருட்டில் விலங்கு உருவத்திற்கு மாறி ஆட்களைக் கொல்லும் ஒடியன்களைப் பற்றிய தொன்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

[7]

நாம் துவக்கத்தில் எழுப்பிக் கொண்ட, இறையனுபவம் அனைவருக்கும் வாய்த்ததா மற்றும் இறையூக்கிகளை பயன்படுத்தியவர்கள் யார் என்ற‌ இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். பூசாரி. ஆம். அந்த அனுபவம் அனைவருக்குமானது அல்ல. ஒரு மானுடத் திரளில் யாரோ ஓரிருவருக்குத் தான் அது சித்தித்தது. அவர்களில் சிலர் திரளை விட்டு தனியே செல்ல, சிலர் அந்த திரளிலேயே, திரளுக்கு மேலே அமர்ந்திருந்தனர். அவ்வாறு இறையனுபவம் சித்தித்து மானுடத் திரளிலேயே அமைந்தவர் தான் பூசாரி. அவ்வனுபவம் மீண்டும் மீண்டும் நிகழ, அவர் தன் உடலை இறைவன் ஏறும் ஒரு ஊடகமாக மாற்றிக் கொள்ள இறையூக்கிகளை பயன்படுத்தியிருக்கலாம். இறையூக்கி தாவரங்கள் தவிர, சேர்ந்திசைத்தல், ஒரு குறிப்பிட்ட தாளத்தில் தொடர்ந்து மேளம் அடித்தல் போன்றவற்றின்‌ மூலமாகவும் இறை சக்தியை தன் மீது ஆவாகித்துக் கொள்வார் அந்த பூசாரி. இந்த வகை சாமி மேலேறுவது நம் குலதெய்வம், எல்லைச் சாமிகளின் சன்னதியில் மேற்கூறிய தாளத்தாலோ, மதுவாலோ இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதில் இருந்து மானுட மனதின் நீட்சியை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த முறை வெறும் நாட்டார் தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வங்களுக்கு மட்டுமே உரியது அல்ல. நம் கோவில்களில், குறிப்பாக வைணவ கோவில்களில் வைகானஸ ஆகம வழிபாட்டு முறையிலும் வைகானஸ குரு மரபில் பிறந்து, அந்த ஒரே குருமரபோடு இருக்கும் பூசகர் தன் உடலில் விஷ்ணுவை ஆவாகித்து பின் தன் மூச்சை மூலவர் சிலைக்கு அளிப்பதன் மூலம் சிலையை விஷ்ணுவாக்கி பக்தர்களுக்கு வழிபடத் தரும் சடங்கு முறை உள்ளது. இதுவே பிராண பிரதிஷ்டை. இது ஒவ்வொரு நாளும் நிகழும். எண்ணிப் பார்க்கையில் மானுடம் அவ்வளவு எளிதாக தன் எந்த ஆரம்ப கால வழக்கங்களையும் விடவில்லை.  

நாம் முன்பே கண்டவாறு இந்த உலகில் இருந்த அனைத்து கலாச்சாரங்களிலும் பூசாரி என்பவர் தவறாமல் இடம்பெறுகிறார். ஆஸ்திரேலியா முதற்கொண்டு தென்அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடர் வரை, தென்னாப்பிரிக்கா முதற்கொண்டு கொடுங்குளிர் சைபீரிய நிலங்கள் வரை இந்த பூசாரி மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறார். மானுட சமூக உருவாக்கத்தில் பூசாரியின் பங்கு மகத்தானது. பூசாரி என்பவர்களே நம் மானுடத்தின் ஆன்மிகத்தை முதன்மையாக வளர்த்தெடுத்தவர்கள். இந்த பூசாரியின் குணாதிசயங்களாக பின்வருவனவற்றை முன்வைக்கலாம்.

    1. பொதுவாக பூசாரி என்பவர் ஆணாகவோ அல்லது வம்ச நீட்சியைத் தாண்டிய பெண்ணாகவோ இருப்பார்.
    2. அவர் பொதுவாக தான் இருக்கும் திரளில் குழுவாகச் சேர்ந்து இசைத்தல், உச்சாடனம் செய்தல், மேளம் அடித்தல் மற்றும் நடனமிடுதல் போன்றவற்றை செய்வார். அதன் மூலம் வெறும் திரளென இருந்த மானிடர்களை ஒரு குழுவாக, குடியாக உணர வைப்பார்.
    3. தன் உடலை இறை ஊரும் ஊடகமாக மாற்றிக் கொள்ள தன்னிலையை பிறள வைப்பார். இறையேறும் சமயங்களில் அவர் மானிடராக இருக்கலாம் அல்லது தன் மீது ஆவாகிக்கும் இறையின் உச்ச குணத்திற்கேற்ற விலங்காகவோ அல்லது அந்த உச்ச குணத்தை வெளிப்படுத்தும் வேறேதோ ஒன்றாகவோ தன் மனதை மாற்றிக் கொள்ளலாம். இந்த பிறள் தன்னிலையை உருவாக்க அவர் இறையூக்கிகளைப் பயன்படுத்தி இருக்கலாம்.
    4. அவ்வாறு தன் மீது இறையேற்றிய பூசாரி இறந்தவர்களுடன், நீத்தார்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்தை வெளிப்படுத்துவார்.
    5. நல்ல வேட்டைக்கான வழிகளைச் சொல்வார்.
    6. தன் குழுவின் எதிர்காலம் குறித்த குறி சொல்வார்.
    7. தன் குழுவில் ஏற்பட்ட நோய்களை குணப்படுத்துவார். இந்த நோய்களைக் குணப்படுத்தல் என்பதில் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது இந்த இறையூக்கிகளே. அவை மானுட மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்கள், சிலவகை ஹார்மோன்களை சுரக்க வைக்கும். அவை சில நோய்களை குணப்படுத்தியிருக்கும். அப்படித் தான் முதன்முதல் மருத்துவம் என்பது உருவாகி இருக்கும்.
    8. அனைத்திற்கும் மேலாக மானுடத்திற்கு உடல், உயிர் என்பவற்றைத் தாண்டி மூன்றாவதாக உடலாகவும், உயிராகவும் இருக்கும் மற்றொன்றைப் பற்றிய, ஆன்மா என்பதைப் பற்றிய கருத்துருவை கொண்டுவந்தவரும் இந்த பூசாரி தான்.

எனவே இயல்பாகவே பூசாரியே ஒரு குழுவின் தலைவனாக ஆனார். அப்படித்தான் அதி பலசாலிகளே தலைவராக இருக்கும் விலங்குலகில் இருந்து அதிமானுடத் தன்மை கொண்ட மானுடர் ஒருவர், அவர் பலசாலியாக, புத்திசாலியாக, சிறந்த திறமைகள் உடையவராக, தலைமைப் பண்பு உடையவராக இருக்க வேண்டும் என்பதல்ல, மேற்கூறியவற்றை நிகழ்த்தத் தெரிந்த ஒருவராக இருந்தால் போதும், தலைவராகும் வழமை உருவானது. மானுடத்தின் அன்றாட நெறிகள், மருத்துவம், அறிவியல் என அனைத்தையும் முன்னெடுத்தது, அனைத்துக்குமான முதற்புள்ளி இந்த பூசாரித்தனமும், அதன் ஆதியான இறையனுபவமுமே. இப்பூமியின் இன்றைய நாகரிகம் சென்று தொடாத இடங்களில் வாழும் நாடோடிக் கூட்டங்களுக்கு இன்றும் பூசாரியே முதன்மை ஆளுமை, தலைவன். எண்ணிப் பாருங்கள், எத்தனை லட்சம் ஆண்டுகள் பண்பாட்டு, பரிணாமத் தொடர்ச்சி. எத்தனை எத்தனை தலைமுறைகள்!! அத்தனை தாண்டியும் நீளும் தொடர்ச்சி.

பூசாரி என்பது மட்டுமல்ல, உலகெங்கும் குகையோவியங்களாக, பாறைச் செதுக்கு ஓவியங்களாகக் காணக்கிடைக்கும் வேறு இரண்டு பொதுத்தன்மைகள் உண்டு. ஒன்று ஒரு பெரிய மிருகத்திற்குள் வரையப்பட்ட பல குட்டி குட்டி விலங்குகள், இறந்தவர்களின் சமாதியில் எழுப்பட்ட பெரும்கற்கள் மற்றும் பெருந்தாழிகள். இவற்றைப் பற்றியும், இவை ஏன் ஒரே மாதிரி இவ்வுலகத்தில் இருக்கின்றன என்பதைப் பற்றியும், பூசாரியாக ஆகாத சிலர் திரளை விட்டு தனியே சென்றார்களே, அவர்களைப் பற்றியும் அடுத்த பதிவில் காணலாம்.


மேலும்...

கட்டுரையாளர்: அருணாச்சலம் மகாராஜன்

அருணாச்சலம் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருக்கிறார். பள்ளிப் பருவம் முழுவதும் கிராமத்திலேயே தமிழ் வழிக் கல்வியாக நிகழ்ந்தது. தந்தை வழி திருக்குறளும், சுவாமி விவேகானந்தரும் அறிமுகம். பள்ளியில் பயிலும் காலத்தில் ஊரில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சனிக்கிழமை தோறும் நிகழ்ந்த கம்பராமாயண வகுப்புகள் வாயிலாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார். தீவிர இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு மூலம் நுழைந்தார். வெண்முரசு நாவல் வரிசைகளுக்கு எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் வாயிலாக இந்திய ஞான மரபு, வரலாறு, தத்துவங்கள் ஆகியவற்றில் தன் தேடல்களை கண்டடைந்தார்.

0 comments:

Post a Comment