Monday, January 26, 2026

சித்தாந்த வினா விடை - தொடர் 7 - அருணைவடிவேல் முதலியார்

சித்தாந்த வினா விடை 1

சித்தாந்த வினா விடை 2

சித்தாந்த வினா விடை 3

சித்தாந்த வினா விடை 4

சித்தாந்த வினா விடை 5

சித்தாந்த வினா விடை 6



பொருள் உண்மை 

 

மாணவன்: சித்தாந்தத்தின் முதல்நூல்கள் இவை என்பதனைத் கூறீனீர்கள். இனி, சித்தாந்தத்திற் கொள்ளப்படும் பொருள்கள் இவை என்பதனை கூற வேண்டும். 

 

ஆசிரியர்:  சித்தாந்தத்திற் கொள்ளப்படும் பொருள் மூன்று. அவை. 'பதி, பசு, பாசம்' என்பன.  பதி கடவுள்; பசு, உயிர்; பாசம், உயிரைப் பிணித்துள்ள கட்டு;  

இவை முறையே 'இறை, உயிர், தளை' என்றும் சொல்லப்படும். 

 

மாணவன்: பதி, பசு, பாசம் இவைகளின் வகைகள் என்ன?  

 

ஆசிரியர்:  பதிப்பொருள் ஒன்றே; இரண்டாவது இல்லை. பசுக்கள் எண்ணிக்கையில் பல. பாசம் மூன்று. அவை, ஆணவம், கன்மம், மாயை என்பன. இவை உயிரைக் கட்டுப்படுத்துவதால்  'பாசம்' எனப்பட்டது (பாசம் - கயிறு), உயிர்களின் தூய்மையைக் கெடுத்து நிற்பதாலும், பின்னர், அகற்றப்படுவதாலும் 'மலம்' எனவும் படும். மலம் - அழுக்கு. 

 

மாணவன்: 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களுள் பதி ஒன்றுதானே என்றும் உள்ளது? மற்றைய பசுவும் பாசமும் அந்தப் பதியிலே தோன்றி பதியிலே ஒடுங்குபவைதானே? அவைகளை ஏன் வேறு தனிப்பொருளாக எண்ணி, 'மூன்று பொருள்கள்" எனக் கூறவேண்டும்? 

 

ஆசிரியர்: அவ்வாறல்ல. 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களில் எந்தப் பொருளும் மற்றொன்றிலிருந்து தோன்றவில்லை. மூன்றும் மூன்று தனிப் பொருள்களே. பதி என்றும் இருத்தல்போல, மற்றைய இரு பொருள்களும் என்றும் உள்ள பொருள்களே. முப்பொருள்களுள் எந்த ஒன்றும் ஒருகாலத்தும் ஒன்றிலிருந்து தோன்றவில்லை , ஆகையால் அது அழிவதும் இல்லை. இம் முப்பொருள்களும் என்றும் உள்ள அனாதி நித்தியப் பொருள்கள். "பதி, பசு, பாசம் எனப்பகர் மூன்றில் - பதியினைப் போற்பசு பாசம் அனாதி” என்பது திருமந்திரம். 

 

மாணவன்: ஒரு பொருளை, 'தோன்றல் அழிதல் இன்றி என்றும் உள்ள பொருள்' என்றும், மற்றைய பொருள்களை 'அதனில் தோன்றி ஒடுங்கும் பொருள்' என்றும் கொள்ளாமல், இவ்வாறு, மூன்று பொருள்களை, 'தோற்றமும் அழிவும் இல்லாது என்றும் உள்ள பொருள்கள்' என்று எப்படி எடுத்துக்  கொள்ளவேண்டும்? 

 

ஆசிரியர்: 'இல்லது தோன்றாது' என்பதும், 'உள்ளது அழியாது’ என்பதும், சித்தாந்த அடிநிலை உண்மைகளுள் சிறந்த உண்மைகளாகும்: அதாவது, இல்லாதது எக்காலத்திலும் இல்லாததே. அது என்றும் உள்ள பொருளாக பொருள்பட முடியாது. அது போல உள்ளது  எக்காலத்திலும் உள்ளதே. அது என்றும் இல்லாத பொருளாக எடுக்க முடியாது. ஆகவே, 'தோன்றுதல்' என்பதும், 'அழிதல்' என்பதும் அந்தப் பொருளின் நிலைமாற்றங்களேயன்றி வேறல்ல என்பது தெளிவாகும். தோன்றி அழியும் நிலை என்பது  காரிய நிலை. தோற்றத்திற்கு முன்னும் அழிவிற்குப் பின்னும் உள்ள நிலை காரண நிலை. அதனால், தோன்றுதல் என்பது காரண நிலையிலிருந்து காரிய நிலையை அடைவதே என்றும், அழிதலாவது காரிய நிலையிலிருந்து மீண்டும் காரண நிலையை அடைவதே என்றும் உணரலாம். எடுத்துக்காட்டாக, 


'குடம் தோன்றிற்று' என்றால் அது மண் என்னும். நிலையிலிருந்து ‘குடம்' என்னும் நிலையை அடைந்தது என்பதும், ‘குடம் அழிந்தது' என்றால், அது ‘குடம்' என்னும் நிலையிலிருந்து முன் போல 'மண்' என்னும் நிலையை அடைந்தது என்பதே பொருளாகும். இவ்வாறு நிலை வேறுபடினும், இருநிலையிலும் பொருட்தன்மை ஒன்றாகவே இருக்கும். மண்குடம் மண்ணின் தன்மையும், பொன்னால் செய்யப்பட்ட குடம் பொன்னின் தன்மையும்  இருப்பதைக்  கொண்டு உணரலாம். இதனால், பயன்வேறுபாடு பற்றி, காரணப் பொருளையும் காரியப்பொருளையும் 'மண்' என்றும் 'குடம்' என்றும், 'பொன்' என்றும்,  வேறு வேறு பொருள்போல வழங்கினாலும், பொருட்தன்மையால் அவை குடம் என்ற ஒன்றேயாகும். 

 

மேலும் ‘பதி, பசு, பாசம், என்ற மூன்று பொருள்களுள், ஒன்றே உள்ளது, ஏனையவை அதனில் தோன்றி ஒடுங்குவன’ என்றால், ஒன்று காரணப் பொருளும்; ஏனையவை அதன் காரியப் பொருள் என்பது போல்ஆகும்.  அப்படி இருந்தால் மூன்று தன்மையும் ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் இந்த மூன்று பொருள்களின் தன்மை என்பது முற்றிலும் வேறுபாடானது. எனவே  மூன்றும் தனித்தனி பொருட்களே என்பது இதன் மூலம் அறியலாம்.

 

இனி, இல்லது தோன்றாது, உள்ளது அழியாது ஆகையால் வேறுபட்ட மூன்று தன்மைகளால் வேறு வேறாய் அறியப்படும் மூன்று பொருள்களுள் யாதொன்றனையும், ‘ஒரு காலத்துத் தோன்றிற்று' என்றோ ஒரு காலத்து அழியும்' என்றோ கூறுதல் கூடாமையால், 'முப்பொருளும் அனாதி நித்தியப்பொருள்கள்' என்றே கொள்ளவேண்டும்.

 

'மாறுபட்ட பல தன்மை ஒரு பொருளில்  இருக்க  முடியாது' என்பதும் ஓர் சிந்தாந்தஉண்மை. அதாவது, தட்பமும் வெப்பமும் மாறுபட்ட தன்மைகள். அவை இரண்டும் ஒரு பொருளிடத்தில் இருக்க இயலாது; உண்மையும் இன்மையும் மாறுபட்ட தன்மைகள். அதனால், அவை இரண்டும் ஒரு பொருளிடத்தே இருக்க முடியாது. 

 

"இல்லது தோன்றாது,  உள்ளது அழியாது" எனவும் "மாறுபட்ட பல தன்மைகள் ஒரு பொருளில் இருத்தல் இயலாது"  என்ற இரு நல்ல முடிவுகளின் வழியே நோக்கினால், ‘பதி, பசு, பாசம் எனப் பொருள்கள் மூன்று உள்ளன' என்பதும், 'அவை மூன்றும் அனாதி நித்தியப் பொருள்கள்' என்பதும் நிலை பெற்ற உண்மை முடிவுகளாகும் என்பது விளங்கும். 

 

மாணவன்: முப்பொருள்களும் அனாதி நித்தியம் என்றால், ‘இறைவன் உலகத்தைப் படைக்கின்றான்; அழிக்கின்றான்; என்று கூறுவது எப்படி? 

 

ஆசிரியர்: 'உலகம்' என்பது, 'காரணப் பிரபஞ்சம், காரியப்பிரபஞ்சம்' என இருவகைப்படும். 'காரணப் பிரபஞ்சம்' என்பது மண்போன்றது; 'காரியப் பிரபஞ்சம்' என்பது குடம் போன்றது. குயவன் குடத்தை மண்ணிலிருந்து தோற்றுவித்தானே தவிற மண்ணைத் தோற்றுவிக்க வில்லை. அதுபோல, இறைவன் காரியப் பிரபஞ்சத்தைக் காரணப் பிரபஞ்சத்திலிருந்து தோற்று வித்துப் பின் அதை  ஒடுக்குகின்றானே தவிற காரணப் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கவில்லை. ஆகவே, 'இறைவன் படைக்கின்றான்; அழிக்கின்றான்' என்பது காரியப் பிரபஞ்சத்தை எனவும், ‘அனாதி நித்தியம்' என்பது காரணப் பிரபஞ்சத்தை எனவும் பகுத்து உணர்ந்து கொள்தல் வேண்டும். காரணப் பிரபஞ்சத்திற்கு தோற்றம் மற்றும் ஒடுக்கம் இல்லாமையால் அது அனாதி நித்தியமே. 

 

மாணவன்: முப்பொருள்களின் உண்மையையும், நித்தியத் தன்மையையும்  விளக்கினீர்கள்; ஆயினும், அதுபற்றி மேலும் ஐயம் எழுகின்றது. பதியாகிய கடவுளைப்போலவே ஏனைய பசுக்களும் பாசங்களும் தோற்றமும் முடிவும் இன்றி என்றும் உள்ளன என்றால், மூன்று பொருள்களும் சமம் தானே! பின் ஏன் இறைவனே, எப்பொருளுக்கும் தலைவன் என்றும், 'அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது' என்றும்,  உயர்த்திக் கூற வேண்டும்? 

 

ஆசிரியர்: இதை ஒரே வினா என்று எடுக்க முடியாது. ’உள்ளன' என்று கூறிய அளவில் எல்லாப் பொருளும் சமமாய் விடுதல் எவ்வாறு? 'உள்ளன' என்றால், 'எல்லாப் பொருள்களும் ஒரு தன்மையனவாய் உள்ளன என்பதுதான் பொருளோ? ‘ஒரு நாட்டில் அரசன் என்று உள்ளானோ அன்றே குடிகளும் உள்ள னர்' எனின் 'அரசனும் குடிகளும் சமம்' என்பது பொருளாகுமோ?" 'உலகில் மக்கள் என்று உள்ளனரோ அன்றே விலங்கு முதலியனவும் உள்ளன' என்றால், மக்களும் விலங்கு முதலியனவும் சமம் என்று கொள்ளலாகுமோ? அது போல, ‘பதி என்று உண்டு, அன்றே பசுபாசங்களும் உள்ளன' என்பதனால், முப்பொருளும் சமம் என்று இல்லை. ஆகவே, முப்பொருளும் அனாதி நித்தியம்' என்பதனால் இறைவனை 'முதற் பொருள்' என்பதற்குத் தடை ஒன்றும் இல்லை.


கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு


0 comments:

Post a Comment