Friday, May 2, 2025

துரியம் கடந்த சுடர் - 3 - தூண்டு சுடரனைய சோதி - அருணாச்சலம் மகாராஜன்

துரியம் கடந்த சுடர் 1

துரியம் கடந்த சுடர் 2

தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி, சொல்லின் செல்வர் திரு. கி.வா.ஜகந்நாதன் அவர்கள் உரை எழுதிய கந்தபுராணம் புத்தகம் என் இளமைக் கால வாசிப்புகளில் முக்கியமான ஒன்று. தமிழின் முதன்மையான நாட்டாரியல் அறிஞரான திரு. அ. கா. பெருமாள் அவர்கள் தலைமையில், பெரும் பேராசிரியர்கள் மற்றும் ஜெயமோகன் உட்பட முதன்மை எழுத்தாளர்களின் ஆசிரியத்துவத்தில் தமிழ் விக்கி என்னும் தகவல் களஞ்சியம் இணையத்தில் இருக்கிறது. இன்று தமிழின் முதன்மை ஆளுமைகள், இலக்கியங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வேண்டுமெனில் நாட வேண்டிய இணையப்பக்கம் என அதைத் தயங்காமல் சொல்வேன். அதில் கி.வா.ஜ வைப் பற்றிய பதிவில் அவரின் நாட்டாரியல் துறை பங்களிப்பை வாசித்த போது பெரும் வியப்படைந்தேன். கி.வா.ஜ என்றால் என் நினைவுக்கு வந்ததெல்லாம் அவரின் மரபிலக்கியம் சார்ந்த பெரும் பங்களிப்புகள் தாம், குறிப்பாக பெரிய புராண உரைகள் மற்றும் முதலில் கூறிய கந்தபுராண உரை நூல் போன்றவை. ஆனால் அவர் அவை மட்டுமல்ல என அந்த பதிவு கூறியது. பல நாட்டார் பாடல்களை தமிழ்நாடெங்கும் அலைந்து திரிந்து, மக்களோடு மக்களாகப் பழகி சேகரித்திருக்கிறார். பதிப்பிக்கவும் செய்திருக்கிறார். அவற்றை நாடோடி இலக்கியம் என்றே வகைப்படுத்துகிறார். அந்த பதிவில் அவர் இருபத்திரண்டாயிரம் தமிழ் பழமொழிகளைச் சேகரித்திருக்கிறார் என்ற தகவல் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. அவை 4 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. இணையத்தில் இருக்கின்றன.

பழமொழிகள், சொலவடைகள் போன்றவற்றில் என் ஆர்வம் என் அப்பா வழி ஆச்சியிடம் இருந்து வந்தது. என் ஆச்சி ஊரில் அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்ட பெண். தனக்கென தனி ஆளுமை உடைய பெண். எந்த இடத்திலும் அவரால் தன் குரலை உயர்த்தவும், தன் முடிவை மற்றவர்கள் ஏற்க வைக்கவும் முடியும். மேலும் அவர் ஒரு பழமொழி மற்றும் சொலவடைகளின் களஞ்சியம். குறிப்பாக கோபத்தில் இருக்கையில் அல்லது குடும்ப பஞ்சாயத்துகளைத் தீர்த்து வைக்கையில் எல்லாம் இவை அடுக்கடுக்காக வந்து விழுந்துகொண்டே இருக்கும். அப்படி ஒரு குடும்ப பஞ்சாயத்தில் என் தாத்தா தனது கருத்தைத் தெரிவித்த போது அவரை நோக்கி ஆச்சி, ‘உம்ம நியாயமெல்லாம் பன வெட்டி பொளந்த நியாயம் தானே’ என்றார். தாத்தாவும் மெளனமானார். அது என்ன ‘பனை வெட்டி பிளந்த நியாயம்'? ஒன்றும் புரியவில்லை. என்னைத் தவிர அங்கிருந்த வேறெவருக்கும் அந்த சொலவடை எந்த பாதிப்பையும் செலுத்தவில்லை என்பதும் புரிந்தது. பிறகு என் தந்தையிடம் அதைப் பற்றி கேட்டேன். அவருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அதன் பிறகு அதை அப்படியே மறந்தும் விட்டேன், என் வீட்டின் அருகே கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் கூரைக்கு ஓடு பாவும் வரை. அப்போதெல்லாம் கான்க்ரீட் வீடுகள் அத்தனை அதிகமில்லை. பெரும்பாலும் ஓடு அல்லது ஓலை வீடுகள் தாம். ஓடு பாவுவதன் முன் வீட்டின் கூரையில் பனை மரக்கம்புகளால் ஆன சட்டகங்கள் அமைக்கப்படும். அப்படி சட்டகங்களை அமைத்துக் கொண்டிருந்த ஆசாரி ஒருவரிடம் பனை மரத்தை எப்படி வெட்டி அந்த மாதிரி சட்டகங்களுக்குத் தேவையான கம்புகளாகச் செய்வார்கள் என வினவினேன். அப்போது அவர் சொன்னதில் இருந்து அந்த சொலவடையின் பொருள் புரிந்தது. பொதுவாக பனை மரத் தண்டு நல்ல நீளமாக, உருளையாக இருக்கும். அதை இரண்டாக அல்லது நான்காகப் பிளப்பார்கள். கேட்க எளிதாக இருக்கலாம். ஆனால் சிக்கலே அந்த பிளக்கும் செயலில் தான் இருக்கிறது. அப்போதெல்லாம் கோடாரியே முதன்மை ஆயுதம். கோடாரியால் பனையின் ஒரு முனையில் ஓங்கி கொத்தினால் அந்த கொத்து விழுந்த இடத்தில் இருந்து ஏதேனும் ஒரு திசையில் ஒரு நீளப் பிளவு வரும். மீண்டும் கொத்துகையில், முன்பு சென்ற பிளவுக் கோட்டின் அருகே வேறு ஒரு பிளவு உண்டாகி இருக்கும். எனவே மிகச் சரியான அளவில் பனந்தண்டை வெட்டுவது என்பது மிகுந்த பயிற்சி தேவைப்படும் ஒன்று. அதைத் தான் அந்த சொலவடை சுட்டி நின்றது. மானுடரின் நியாய உணர்வுகள் ஒவ்வொரு சூழலுக்கும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் அல்லவா. அதைத் தான் ஒவ்வொரு கொத்திற்கும் ஒவ்வொரு விதமாக பிளக்கும் பனை வெட்டும் செயலுடன் உவமிக்கிறது அந்த சொலவடை. எவ்வளவு எளிமையாக யதார்த்தம் ஒன்றை என் ஆச்சி சொல்லிச் சென்றிருக்கிறார் என்பதை உணர்ந்த போது தான் இந்த பழமொழிகளின் மீது தனி ஆர்வம் எனக்கு வந்தது. அதோடு அந்த சம்பவம் எனக்கு இன்னொரு முக்கியமான படிப்பினையையும் தந்தது. ஒன்றை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதில் எனக்கென ஒரு வழியைக் கண்டடைந்தது தான் அது. பொருள் புரியாத போது நான் அந்த சொலவடையின் நேரடிப் பொருளை அறிந்து கொள்ள முயற்சித்தேன். அந்த நேரடிப் பொருளில் இருந்து அது சொல்லப்பட்ட சூழலின் பொருத்தப்பாட்டை ஊகித்தேன். அப்படியாக என் முதல் அறிதல் முறை எனக்கு வாய்த்தது. இன்றளவும் நான் பணியாற்றும் மென்பொருள் துறையில் இந்த அறிதல் முறை கைகொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது, குறிப்பாகத் தொழிற்பெயர்களை அறியவும், புரியவும். இந்த அறிதல் முறைகளுக்கும் ஒரு தொழிற்பெயர் இருக்கிறது – சிந்தனைக் கருவிகள். நாம் சிந்தனைக் கருவிகளைப் பற்றி அறிந்து கொள்வது நம் சிந்தனைத் திறனை, நம் புரிந்து கொள்ளும் திறனை, நம் நினைவுத் திறனை வளர்க்கும்.

கிவாஜ தொகுத்த பழமொழிகளில் ஒன்று ‘தட்டான் தாழப் பறந்தால் தப்பாது மழை’. மீண்டும் திணறிப் போனேன். தட்டான் பூச்சிக்கும், மழைக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேளை தட்டான், மழை போன்றவை ஏதேனும் கவித்துவமான உவமானங்களாக இருக்குமோ என்றெல்லாம் தோன்றியது. ஆனால் பழமொழிகள் கவித்துவத்திற்காகச் சொல்லப்படுபவை அல்ல. அவை நேரடியான வாழ்வியல் அனுபவங்களில் இருந்து முளைத்தெழுபவை. கேட்கும் நமக்கு அந்த அனுபவங்கள் வாய்க்காததால் நம்மால் அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள இயல்வதில்லை.  எனவே நேரடியாகவே தட்டாரப் பூச்சிக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம் எனத் தேடத் துவங்கினேன். புதிதாய் ஒரு பிரம்மிப்பூட்டும் புவியியல் நிகழ்வில் சென்று முட்டினேன். பறவைகள் வலசை போவதைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேடந்தாங்கலில் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் துவங்கி மார்ச் வரை வந்து செல்லும் பறவைகள் நம் ஊரைச் சார்ந்தவை அல்ல. சைபீரியா உட்பட மிகத் தொலைதூரத்தில் இருந்து நம் ஊருக்கு வருபவை. உணவு, காலநிலை, இனப்பெருக்கம் என பல காரணங்களுக்காக வருபவை. திரும்பிச் செல்கையில் இருமடங்காகத் திரும்பிச் செல்பவை. வேடந்தாங்கல் மட்டுமல்ல, தமிழகத்தின் பல ஊர்களுக்கும் பறவைகளின் வலசை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். நம் சங்கப்பாடல்களில் இந்த வலசை நிகழ்வு பல இடங்களில் வந்துள்ளது. புறநானுற்றுப் பாடல் ஒன்றில் ‘குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலை பெயர்கும்' அன்னச் சேவலைப் பற்றி பிசிராந்தையார் பாடுகிறார். பறவைகள் வலுவானவை, வருடக் கணக்கில் வாழ்பவை. எனவே அவை வலசை போவதற்காக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குப் போவது என்னவோ இயல்பு தான். ஆனால் வெறும் ஏழு முதல் ஐம்பத்தாறு நாட்கள் மட்டுமே வாழும் தட்டான் பூச்சியும் வலசை போகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் தட்டான் பூச்சிகள் வலசை போகின்றன. அதுவும் கொஞ்ச நஞ்ச தூரம் இல்லை, இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை, சுமார் பதினான்காயிரம் கிலோமீட்டர்கள் தூரம் வலசை போகின்றன. மொத்தமாக இரண்டொரு தலைமுறைகள் ஒரு வலசைப் போக்கில் வந்து சென்றுவிடும். இவை கூட்டம் கூட்டமாக வலசை போகும். குறிப்பாக வடகிழக்கு பருவ காற்று இந்தியாவின் கிழக்குப் பகுதி துவங்கி அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் தாண்டி ஆப்பிரிக்கா வரை செல்லும். அந்த காற்றில் ஏறித் தான் இவை ஆப்பிரிக்கா வரை செல்கின்றன. மீண்டும் திரும்பி தென்மேற்கு பருவ காற்று காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வருகின்றன. போகும் போது இருந்த தட்டான்களின் பேரன், பேத்தி அல்லது பூட்டன், பூட்டிகள் தான் திரும்பி வருகின்றன. இவை வரும் காலம் பருவ காற்றுகளின் காலம். எனவே தான் தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வருகிறது.

மேற்கூறிய வலசை நிகழ்வு நம் கண் முன் நிகழ்ந்து கொண்டிருக்கிற, ஆனால் நாம் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு பேரதிசயம். நன்கு யோசித்துப் பாருங்கள் எப்படி ஒரு புதிதாய், அதுவும் ஆப்பிரிக்க நிலத்தில் பிறந்த தட்டானுக்கு இந்தியா என்ற நாட்டில், அதுவும் தென்னிந்தியாவில், தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று தெரிகின்றது அல்லது தோன்றுகின்றது? அந்த தட்டான்களுக்கும், வலசைப் பறவைகளுக்கும் இந்த வழிகளை யார் சொல்லிக் கொடுத்தது? அப்படிச் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் அந்த வழிகள் எப்படி அவற்றுத் தெரிகின்றன? எளிய தட்டான்களுக்காக இந்த பருவ காற்றுகளை சரியான சமயத்தில் வீசச் செய்வது யார்? செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் உலகின் எந்த மூலைகளில் இருந்தோ வரச் சாத்தியமான பறவைகளுக்கென இங்கே புழுக்களும், மீன்களும் எப்படி அதீத அளவில் உருவாகின்றன? வலசை வரும் விருந்தினருக்கென இங்கே உணவைச் சமைப்பவர் யார்? இவையெல்லாம் வெறும் தற்செயல்கள் மட்டும் தான் என்று சொல்லலாமா? தற்செயல் என்ற வார்த்தையின் அபத்தம் சொல்லும் போதே நம்மை வந்து அறையவில்லையா? இதைப் பார்த்த ஒரு பழங்குடி மனது ஒன்றை கண்டடைந்திருக்கும். அது தான் ‘மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்னும் கூற்று. அது வெறும் கூற்று அல்ல, அது ஒரு தரிசனம். தரிசனம் என்ற சொல்லிற்கு பார்த்து அறிதல் என்பது நேரடிப் பொருள். இந்த பிரம்மாண்ட, ஒன்றுடன் ஒன்று மிகச் சரியாக ஒத்திசைந்த, அதே சமயம் ஒன்றுடன் ஒன்று எவ்விதத்திலும் தொடர்பில்லாத நிகழ்வுகளின் தொகுப்பில் இறையைக் கண்ட, தரிசித்த அந்த ஆதி மனதின் வெளிப்பாடே மேற்கூறிய கூற்று. எனவே தான் அது தரிசனம். ஆனாலும் அது முழுமையான தரிசனம் அல்ல.‌ ஒரு சிறு துளி தான்.

அந்த கூற்றை இன்னும் சற்று நெருங்கி ஆராய்வோம். ‘யார் மரத்தை நட்டது?’ ‘ஏன் நட வேண்டும்?’ ‘ஏன் தண்ணீர் ஊற்ற வேண்டும்?’ இந்த அளவிற்கெல்லாம் அந்த சாமானிய மனது யோசித்திருக்க வாய்ப்பு மிகக் குறைவே. ஆனால் அது உணர்ந்தது ஒரு பிரபஞ்ச உண்மை. ஆனால் அதை அன்றாட தளத்தில் நிறுத்தும் மொழியே அந்த கூற்றில் வெளிப்படுகிறது. அந்த மனது அடைந்த அனுபவத்தின் ஒரு மீச்சிறு துளியாகவே அந்த கூற்று இருக்கிறது. எனவே தான் அது ஒரு சாதாரண சொற்றொடராக, பழமொழியாக ஒலிக்கிறது. அந்த ஆதி மனம் கண்ட, உணர்ந்த ஒன்றை தர்க்க பூர்வமாக, விரிவாக கேள்விகள் எழுப்பி, இன்னும் விரிந்த களத்தில் வலசைப் பறவைகள், தட்டான்கள் தாண்டி இப்புவியில் இருக்கும் இன்ன பிற உயிர்கள், அவற்றின்‌ வாழ்வியல், வாழ்வாதாரம், அவை வாழும் இப்புவி, அதில் இலங்கும் இயற்கை, புவி இருக்கும் சூரிய குடும்பம், அது இருக்கும் இந்த பால்வெளி, பால்வெளியைப் போல் பல்கிப் பெருகி கிடக்கும் பலநூறு நட்சத்திர குடும்பங்கள், அவையனைத்தையும் தன்னில் வைத்திருக்கும் இப்பெரு ககனப் பெருவெளி, இவையைனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சம், இவற்றுக்கிடையேயான அபாரமான, நம்பவே இயலாத துல்லியத்துடனான ஒத்திசைவு என‌ அனைத்தையும் உள்ளடக்கி விரிவாக ஆராய்ந்து, தன்பக்கம், பரபக்கம் இருக்கும் தர்க்கங்கள், கருதுகோள்கள் அனைத்தையும் விவாதித்து, ஏற்று, மறுத்து, அவற்றின் விளைகனிகளான நேர்க்கருத்து (Thesis), எதிர்க் கருத்து (Anti Thesis) இரண்டும் முரண்பட்டு, இணைந்து இறுதியில் உருவாகும் சமநிலைப் புள்ளியான இணைவுக் கருத்து (Synthesis) என ஒரு‌ முழுமையான அறிவியக்கம் நிகழ்ந்து கண்டடைவதே “யார் மரத்தை நட்டது?” என்ற கேள்விக்கான பதில். அதுவே அறிபடுபொருள். சமஸ்கிருதத்தில் தத்வம் என‌ அழைக்கப்படுவது. தமிழில் அறியப்பட வேண்டிய மெய். தத்வத்தை அறியும் அறிவுத் துறையே தத்துவம். தமிழில் மெய்யியல். நாம் பார்த்த ஒவ்வொரு கேள்விக்கும் அத்தனை விரிவான அறிவியக்க நிகழ்வுகள் நடந்தேற வேண்டும். அப்போது தான் அந்த ஒவ்வொரு கேள்விக்கும் பதில் என்பது உருவாகும். மேற்கூறிய மூன்று கேள்விகளையும் எடுத்துக் கொள்வோம். அதில் ஒன்றே மூல கேள்வி. மற்ற இரண்டும் துணைக் கேள்விகள். ‘யார் மரத்தை நட்டது?’ என்பது மூல கேள்வி. இக்கேள்விக்கான பதிலே மற்ற இரு கேள்விகளுக்கான பதில்களையும் தீர்மானிக்கும். எனவே அந்த முதல் கேள்வியையே எடுத்துக் கொள்வோம். அதில் மரம் என்பது இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையுமே சுட்டி நிற்கும் குறியீடு என்ற புரிதலுடன் அணுகுவோம். இரண்டு அடிப்படையான சிந்தனைப் பள்ளிகள் அதிலேயே வந்து விடுகின்றன.

முதலாவது சிந்தனைப் பள்ளி – யாரும் நடவில்லை. அது இயல்பாகவே அப்படித்தான் இருந்தது, இருக்கிறது, இருக்கவும் செய்யும். தானாகவே தன்னை பரப்பி நிலை நிறுத்திக் கொள்கிறது. அப்படி தானாகவே இயல்வதனால் அது இயற்கை. அதற்கென எந்த நோக்கமோ, உள்ளுணர்வோ, சாரமோ, மையமோ இல்லை. ஆதியில் அது தோன்றாப் பொருளாக இருந்தது. தோன்றாதது அறியவியலாதது, செயலற்றது, அழிவில்லாதது. சுருக்கமாக ஆதியும், அந்தமும் இல்லாதது. அநாதியானது.  இயற்கைக்கு முன்பே இருந்ததால், இயற்கைக்கு காரணமாக இருந்ததால் அது மூல இயற்கை எனப்பட்டது. அது தன்னில் இருக்கும் நேர்நிலை (சத்வம்), எதிர்நிலை (தமஸ்), செயலூக்க நிலை (ரஜஸ்) என்ற மூன்று குணங்களின் சமநிலை குலைவால், அவை வெவ்வேறு விகிதங்களில் இணைந்தும், பிரிந்தும் கொண்டே இருப்பதால் முடிவில்லாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அது தன் குணங்களின் சமநிலையை மீண்டும் அடையும் வரை இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கும். அதைக் கடந்த எதனாலும் அது இயக்கப்படுவதில்லை, வரையறுக்கப்படுவதில்லை. இது பிரகிருதி என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாவது சிந்தனைப் பள்ளி – படைப்பு என ஒன்று இருந்தால், படைத்தவர் என்ற ஒன்று இருந்தாக வேண்டும். எதற்கும் ஒரு துவக்கம் இருந்தாக வேண்டும். எந்த நிகழ்வுக்கும் ஒரு தூண்டல் இருந்தாக வேண்டும். எனவே இங்கு இயலும் இந்த இயற்கை ஒரு தானாக நிகழும் நிகழ்வு அல்ல. முதலாவதில் கூறியுள்ளதையே எடுத்துக் கொள்வோம். ‘ஆதியில் அறியப்பட இயலாமல், செயலற்றிருந்த அந்த மூல இயற்கை தன் முக்குணங்களின் சமநிலைக் குலைவால் நம்மால் அறியப்படும் இயற்கை ஆனது.’ – எதனால் அந்த முக்குண சமநிலைக் குலைவு ஏற்பட்டது? இந்த கேள்விக்கு அந்த முதல் சிந்தனைப் பள்ளி அது அந்த மூல இயற்கையில் நிகழ்ந்த ஒரு ஆதி தன்னுணர்வினால் நிகழ்ந்த இயல்பான ஒரு சமநிலைக் குலைவு என்றே பதிலளிக்கும். தோன்றாத ஒன்றிற்கு, அறியப்பட இயலாத ஒன்றிற்கு, தன் முக்குணங்களின் சமநிலைக் குலைவால் தானாகவே இயலும் ஒன்றிற்கு, அறிவு என்ற ஒன்று இருக்க இயலாது இல்லையா? தனக்கென அறிவென ஒன்று இல்லாத அந்த மூல இயற்கையில் தன்னுணர்வு என்பது எப்படி உருவாகக் கூடும்? தன்னுணர்வு என்பது அறிவுடன் தொடர்புடையது. அப்படி என்றால் அந்த முதல் மூல இயற்கையில் தோன்றிய தன்னுணர்வு என்பது அதனுடையது அன்று. அதற்கு வெளியே இருந்து வந்த ஒன்று. அதற்கு வெளியே திகழ்வது. அது மூல இயற்கையில் தன் செல்வாக்கை செலுத்தியதாலேயே அதுவும் மூல இயற்கையைப் போலவே ஆதியும் அந்தமும் இல்லாத அநாதியான ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்! இதுவே புருஷன் என்று அழைக்கப்படுகிறது.

மேலே நாம் கண்ட இரு சிந்தனைப் பள்ளிகளும் நம் இந்திய ஞான மரபின் மிகத் தொன்மையான தரிசனமான சாங்கிய தரிசனத்திலேயே இருக்கின்றன. பிரகிருதி, புருஷன் என்ற இரு கருத்துருக்களும் சாங்கியம் நம் மரபிற்கு தந்த கொடை. நன்கு கவனித்தால் அந்த இரு சிந்தனைப் பள்ளிகளும் ஒன்றை மறுத்து ஒன்று உருவானது அல்ல என்பது அறியலாம். இரண்டாவது சிந்தனைப் பள்ளி அந்த முதல் சிந்தனைப்பள்ளியின் ஒரு பரிணாம நீட்சி தான். அதில் இருந்த ஒரு இடைவெளியை தன்னளவில் நிரப்பி உருவான ஒன்று. இந்த பிரகிருதி, புருஷன் என்ற இரு கருத்துருக்களும் பின்னால் நம் மரபில் தோன்றிய தரிசனங்கள், தத்துவங்கள், மதங்கள் என அனைத்திலும் விரிவாக்கப்பட்டன. குறிப்பாக புருஷன் என்பதை ஆன்மா எனவும், இறைவன் எனவும், இறுதியாக பிரம்மம் எனவும் விரிவாக்கிக் கொண்டது நம் மரபு. அந்த புள்ளியில் நின்று பார்த்தால் முதல் சிந்தனைப் பள்ளி என்பது இறையிலி சிந்தனை என்றும், இரண்டாவது சிந்தனைப் பள்ளி இறைமுதல் சிந்தனை என்றும் கொள்ளலாம். தத்துவத்தின் சொற்களில் சொல்வதானால், முதல் சிந்தனைப் பள்ளியை பொருள்முதல்வாதம் என்றும், இரண்டாவது சிந்தனைப் பள்ளியை கருத்துமுதல்வாதம் எனவும் கூறலாம்.

‘மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்னும் ஒரு தரிசனத் துளியில் இருந்து ஒரு தொன்மையான முதல் தரிசனம் ஒன்றை நோக்கிய சிந்தனைப் பயணத்தை மேலே கண்டோம். மானுட சிந்தனையில் இறை, பிரபஞ்சம் பற்றிய பார்வை எப்படி உருவாகி பரிணமித்திருக்கும் என்பதைப் பற்றிய ஒரு ஊகம் மட்டுமே இது. இதை வைத்து மானுடம் முதலில் கண்டடைந்த தரிசனம் ‘மரத்தை நட்டு தண்ணீர் விட்டது’ தான் என்ற முடிவிற்கு யாரும் வரமாட்டீர்கள் என நம்புகிறேன். இதில் இருந்து நாம் ஊகித்தறிய வேண்டியது மானுடத்தின் ஆதி மனதிற்கு தன்னையும், தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும் அறிந்து கொள்ள தோன்றியிருக்கிறது என்பது தான். ஆம் அது தான் துவக்கம். அந்த துவக்கத்தில் இருந்து தான் நாம் இன்று வந்தடைந்திருக்கும் அத்தனை அறிவு பரிணாமங்களும், பரிமாணங்களும் உருவாகி வந்திருக்கின்றன. அப்படி அந்த ஆதி மனதைத் தூண்டியது என்ன? அது தான் ‘நான் இங்கு இருக்கிறேன், நான் இவையனைத்தையும் அறிகிறேன்’ என்ற தன்னுணர்வு. இப்பூவுலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்திலிருந்தும் மானுடத்தை வேறுபடுத்தி நிறுத்துவது இந்த தன்னுணர்வு தான்.

இவ்வுலகில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும் இரு நோக்கங்கள் பொதுவாக இருக்கின்றன. ஒன்று தங்கி வாழ்தல், இரண்டு பல்கிப் பெருகுதல். உயிரிகளின் அனைத்து செயல்களும், அதற்கு அவை கண்டடைந்த அனைத்து வழிகளும் இந்த இரு நோக்கங்களுக்காகவே. உயிருள்ளதா அல்லது உயிரற்றதா என இன்றும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வைரஸ்கள் துவங்கி மாபெரும் உயிரினமான நீலத் திமிங்கிலம் வரை இந்த இரு நோக்கங்கள் மட்டுமே கொண்டவை. உண்ணுதல், அதற்காக உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், தட்பவெப்பம், நில அமைவு மற்றும் பிற சூழல்கள் சார்ந்து உயிரினங்கள் கொண்ட தகவமைவுகள் அனைத்தும் தங்கி வாழ்தல் என்ற நோக்கத்திற்காகவே. அவை கொண்ட அழகுகள், அவை ஆடும் நடனங்கள் துவங்கி, விதவிதமான குரல் ஓசைகள், பாடல்கள், மிக விரிவான ஓவியங்கள் வரை (கடலின் அடியில் இருக்கும் மண்ணில் ஏழு அடி விட்டம் கொண்ட மிகச் சிக்கலான ஆனால் முழுமையான, சீர்மையுடனான ஒன்றினுள் ஒன்று அமைந்த வட்டங்களை மூன்றே அங்குல நீளம் உள்ள ஆண் முள் மீன்(Puffer fish) தன் இணையைக் கவர வரைகிறது. கடலடி மண்ணில் நிகழ்வதால் செதுக்குகிறது என்றும் கூடச் சொல்லலாம்!!) அனைத்தும் பல்கிப் பெருகுதல் என்ற அந்த இரண்டாவது நோக்கத்திற்காகவே. இவை இரண்டுமே உயிரியல் சார்ந்தவை. அதற்கேற்ற உடல் அமைப்புகள், திறன்கள் எல்லாமே உயிரியல் ரீதியாகவே ஒரு தலைமுறையில் இருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படுகின்றன. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் உயிரியல் ரீதியான தகவமைப்புகளில் நிகழ்ந்த சடுதி மாற்றங்களால் மட்டுமே வெவ்வேறு வகை உயிரி இனங்கள் தோன்றி நீரில், மண்ணில், வானில் வாழத்துவங்கின.

அப்படி ஒரு சடுதி மாற்றத்தால் நிகழ்ந்த ஒன்றாகத் தான் மானுட இனமும் இருந்திருக்க வேண்டும். ஆனால் மானுட இனத்தின் மூதாதையில் நிகழ்ந்த இந்த சடுதி மாற்றம் உடலின் பிற எந்த பகுதிகளிலும் நிகழாமல் மூளையில் நிகழ்ந்திருக்கிறது. ஒரு சுவாரசியத்திற்காக சுமார் எண்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மானுடம் மற்றும் நம் நெருங்கிய உயிரின உறவான சிம்பன்சி இரண்டின் ஆதி மூதாதை உயிரினங்களை ஒரு குரங்குத் தாய் ஈன்று புறந்தந்தாள் எனலாம்!! அவை இரண்டிலும் இருந்து சிம்பன்சி, மற்றும் மானுடம் என்ற இரு பேரினங்களின் பரிணாமங்கள் துவங்கின என புனையலாம். அப்படித் தோன்றிய அந்த மானுட முதல் மூதாதைக்கு அதன் தாயிடம் இருந்து வந்த உயிரியல் தொடர்ச்சியுடன், ஒரு சிறிய மேம்பாடாக சற்றே பெரிய மூளை வாய்த்திருந்தது. ஒரு குரங்கின் எலும்புக்கூடு அமைப்பு என்பது நான்கு கால்களால் நடக்கக் கூடிய, உடலின் வடிவோடு ஒப்பிடுகையில் சிறியதாக இருக்கும் தலையைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் தான் பரிணமித்து வந்திருந்தது. எனவே அதனால் அதிக எடை கொண்ட பெரிய மூளை அமைந்திருந்த தலையைத் தாங்குவதில் சிக்கல்கள் உருவாகத் துவங்கின. மெல்ல மெல்ல அந்த மானுட மூதாதை நிமிர்ந்து இரண்டு கால்களில் நடப்பதன் மூலம் அந்த சிக்கல்களைக் கடந்து செல்லலாம் என கண்டுகொண்டது. இப்படி நான்கு கால்களில் இருந்து இரண்டு கால்களுக்கு வருவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கும். உயிரியல் அப்படித் தான் இயங்கும். ஒரு சடுதி மாற்றம் நிகழ பல லட்சம் ஆண்டுகள் ஆகி இருக்கின்றது. அப்படி இரு கால்களில் நடக்கத் துவங்கிய முதல் மூதாதை சுமார் அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கக் கூடும் என அறிவியல் சொல்கிறது. நான்கு கால்களில் இருந்து இரண்டு கால்களுக்கு மாறுகையிலேயே மானுட மூதாதையில் வேறு சில உயிரியல் பரிணாமங்களும் நிகழத் துவங்கியிருந்தன. பெரிதாகிக் கொண்டே வந்த மூளையின் அளவால் தலையின் எடையும் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. எனவே அந்த எடையையும் தாங்கும் வகையில் முதுகுத் தண்டின் பரிணாமமும் மாறத் துவங்கியிருந்தது. அப்படி நிமிர்ந்த மேல் உடலின் எடையையும், அசைவுகளையும் சமன் செய்யும் வகையில் அந்த மூதாதையின் இடுப்புப் பகுதியும் மாறத் துவங்கியது. ஒருபுறம் மூளையின் அளவு அதிகரித்ததால் உருவான பெரிய தலைப்பகுதி. மறுபுறம் இருகால்களில் நடக்க ஏதுவாக நிமிர்ந்த முதுகுத்தண்டு மற்றும் மேல் உடலின் எடை மற்றும் உடலின் சமநிலையைப் பேண வேண்டிய நிலையில் இருந்த இடுப்புப் பகுதி. இந்த இரண்டும் அந்த மானுட மூதாதை, குறிப்பாக அந்த மூதாதை பெண் சந்தித்த பெரும் முரண்கள்.

குரங்கு உட்பட நான்கு கால்களில் நடக்கும் அனைத்து விலங்குகளின் இடுப்புப் பகுதிகளும், நீளமாக, கிடைமட்டமாக, தரைக்கிணையாக முதுகுத்தண்டில் துவங்கி தொடை எலும்புகளுடன் இணைந்து செல்லும் வகையில் அமைந்திருக்கும். இந்த மிருகங்கள் நான்கு கால்களில் நடப்பதாலும், அவற்றின் உடலின் பெரும்பகுதி தரைக்கு இணையாக இருந்ததாலும், அவற்றின் எடை சமநிலைப்புள்ளி உடலின் மேற்பகுதியில், குறிப்பாக அகன்ற மார்புப் பகுதியில் இருந்தது. எனவே அவற்றின் இடை வலுவான கால்களை, தரைக்கு இணையாக இருந்த முதுகெலும்பில் மிகச் சரியாகப் பொருத்திக் கொள்ளும் வண்ணம் நன்கு நீண்டு, கிடைமட்டமாகவே இருந்தது. இந்த இடுப்பெலும்பின் முக்கிய பணி என்பது ஓடுகையில், நடக்கையில் கால்களின் விசையை அப்படியே முதுகெலும்பிற்குக் கடத்துவது தான். இந்த பணியை அவற்றின் மேல்பகுதியில் தோள்பட்டை எலும்புகள் செய்தன. மாறாக நிமிர்ந்த, இரு கால்களில் நடந்த மானுட மூதாதையின் இடை உடலின் மேற்பகுதியின் எடையத் தாங்கும் வகையிலும், உடலின் சமநிலையைப் பேணும் வகையிலும் ஒரு கிண்ணம் போல அகன்று, வலுவாக இருந்தாக வேண்டியிருந்தது. நான்கு காலிகளில் இடுப்பெலும்பின் நீண்ட பகுதி தரைக்கு இணையாக இருந்ததென்றால், இரு காலிகளின் இடை தரைக்கு செங்குத்தாக இருந்தாக வேண்டியிருந்தது. இவை தவிர இடுப்புப் பகுதிக்கு மற்றொரு முக்கிய பணியும் இருந்தது, குறிப்பாக பெண்களில். இந்த இடை எலும்பின் அமைப்பு தோள்பட்டையின் அமைப்பில் இருந்து மாறுபட்டு இருந்ததன் முக்கியமான காரணம், குழந்தைப் பேறுக்கு உதவும் வகையில் இடையெலும்புகளுக்கு இடையே குட்டி கருப்பையில் இருந்து வெளிவரும் வகையில் போதுமான இடைவெளியுடனான பிறப்புக் குழாய் இருந்தது. நான்கு காலிகளின் இடுப்பெலும்பு என்பது கால்களை உடலுடன் இணைக்கும், கால்களின் விசையை முதுகெலும்பிற்கும், உடலின் முன்பகுதிக்கும் கடத்துவதற்காக மட்டுமே இருந்ததால், அதன் முழு அமைப்பும் மகப்பேறுக்கு உகந்த வகையில் அமைந்திருந்தது. அதாவது அதன் முதன்மைப் பணி என்பதே மகப்பேற்று வழி தான். ஒடுங்கிய இடுப்பெலும்பின் மேற்பகுதிகள் நல்ல பெரிய நீள்வட்ட பிறப்புக் குழாயை நான்கு காலிகளுக்குக் கொடுத்திருந்தது. கிட்டத்தட்ட அனைத்து நான்கு காலிகளுக்கும் அவற்றின் பிறப்புக் குழாயின் அளவு அவற்றின் கருக் குட்டிகளின் தலையின் அளவை விட பெரியது தான். எனவே தான் அத்தனை பெரிய, நன்கு வளர்ந்த ஒரு நான்கு காலிக் குட்டி எளிதாக வெளியில் வந்து விழுகிறது. மாறாக இரு காலிகளில் அந்த இடைக்கு உடல் எடையைத் தாங்குவதும், உடலின் சமநிலையைப் பேணுவதுமே பெரிய சவாலாக இருந்தது. எனவே கிண்ணம் போன்றிருந்த அந்த இடையின் பெரும் பகுதியை அகன்ற, எடை தாங்கும் இடுப்பெலும்புகள் எடுத்துக் கொண்டன. இடுப்பெலும்புகளின் அகலம், பிறப்புக் குழாயின் அகலத்தைக் குறைத்தது. இந்த பிறப்புக் குழாயின் ஒடுக்கம் ஒரு முக்கியமான சவாலை மானுட மூதாதைக்கு தோற்றுவித்தது. தலையின் அளவு பெரியதான ஒரு குழந்தை எளிதாகப் பிறக்க வேண்டுமெனில்  விரிந்து அகன்ற ஒரு பிறப்புக் குழாய் தேவைப்படும். ஆனால் நிமிர்ந்த நடைக்கு ஒடுங்கிய பிறப்புக் குழாய் தேவைப்பட்டது. உண்மையில் இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற தடுமாற்றம் பரிணாமத்திற்கு வந்திருக்கும். இது பரிணாமத்தின் ‘மகப்பேறு தடுமாற்றம்’ என்றே அழைக்கப்படுகிறது. இயற்கை இதற்கு ஒரு வித்தியாசமான ஒரு தீர்வை கண்டடைந்தது. இப்படி இரண்டு கால்களில் நடக்க வேண்டிய அந்த மானுட மூதாதையின் குழந்தைகள் பிற விலங்குகளோடு ஒப்பிடுகையில் முழு வளர்ச்சியை கருவிலேயே அடையாமல், போதுமான வளர்ச்சியை அடைந்த உடனேயே பிறக்கும் படி செய்தது. நன்கு யோசித்துப் பாருங்கள், அப்போது தான் பிறந்த ஆட்டுக் குட்டி அல்லது குதிரைக் குட்டி அல்லது யானைக் குட்டி உடனடியாக எழுந்து நிற்கும், சற்று நேரத்திலேயே நடக்க, ஓட, குதிக்கத் துவங்கி விடும். ஆனால் மானுடக் குழந்தை வெகு நாட்கள் தன் தாயின் அரவணைப்பிலேயே இருந்தாக வேண்டும். இரண்டு வருடங்கள் வரை அதன் மூளை வளர்ந்து கொண்டே செல்லும். மானுட பரிணாமத்தில் இயற்கையின் இந்த தெரிவே நம் குழந்தை பிறப்புகள் மிகச் சிக்கலாக ஆனதற்குக் காரணம். ஆனால் அந்த தெரிவு தான் நம்மை இவ்வளவு புத்திசாலியாக மாற்றியது என்பதையும் மறுக்க முடியாது. அப்படியாக மூளை அளவு பெரிதான, இரு கால்களில் நடக்கக் கூடிய, நிமிர்ந்து நிற்கும் ஒரு மானுட மூதாதையின் உயிரியல் பரிணாமம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த காலம் சுமார் இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால். அதிலிருந்தும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நம் இனத்தின் முதல் உயிர் பரிணமிக்க இன்னும் பதினேழு லட்சம் வருடங்கள் ஆகியது. தற்போது கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களின் படி நம் மனித இனத்தின் தொன்மையான மண்டையோடு சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு முந்தையது. அந்த இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மூதாதைக்கும், நம் முதல் மானுட உயிருக்கும் இருந்த முக்கியமான பரிணாம வேறுபாடு என்பது மூளையின் அளவு தான். மானுட மூளையின் அளவு கிட்டத்தட்ட முப்பந்தையாயிரம் ஆண்டுகள் முன்பு வரை கூட வளர்ந்து கொண்டே வந்து இன்றிருக்கும் அளவிற்கு வந்து நின்றிருக்கிறது.

மூளையில் நிகழ்ந்த சடுதி மாற்றம் என்பது எண்ணற்ற தகவுகளில் ஒன்று மட்டுமே. ‘தக்கன பிழைத்தல்’ என்ற இயற்கை விதிப்படி பார்த்தால் இந்த பெரிய மூளை தக்கது என்பதை விட பிரச்சனையானது என்பது தான் யதார்த்தம். அப்படியென்றால் அந்த இனம் அழிந்து போயிருக்க வேண்டியது தான் இயற்கையின் தேர்வாக இருந்து இருக்கும் அல்லவா? ஆனால் அவ்வாறு ஏன் நிகழவில்லை? இயற்கை ஏன் அந்த மூளை அளவு பெரிதாகிச் செல்வதை அனுமதித்தது? முதலில் இயற்கை அனுமதித்தது என்றால் அந்த உயிர் தன்னைக் காத்துக் கொள்ள, தங்கி வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டே இருந்தது என்பது தான் பொருள். தனக்கு நேர்ந்த ஒவ்வொரு தடையையும் அது வென்று கொண்டிருந்தது. அப்படி வெல்ல இயலாத உயிரினங்கள் பூண்டோடு அழிந்தன. அப்படியெனில் அந்த மூளை அதைத் தாங்கிக் கொண்டிருந்த உயிருக்கு தன்னைக் காக்கச் சொல்லி இருக்கிறது. அந்த உயிரின் அதன் பிறகான பரிணாம மாற்றங்கள் அனைத்துமே அந்த மூளை என்ற எஜமானனை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்தவே நிகழ்ந்தன. நன்றாக பார்த்தால் எண்பது லட்சம் வருடங்களுக்கு முன் நம் முதல் மூதாதைக்கும், அந்த சிம்பன்சி மூதாதைக்கும் தங்கி வாழத் தேவையான தகவமைவுகள், அவற்றை வழிநடத்திச் செல்லத் தேவையான நரம்பு அமைப்புகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் மூளை என்பது போதுமானதாகத் தான் இருந்தது. சிம்பன்சிக்கு அதன் பிறகான பரிணாமங்கள் அனைத்துமே தங்கி வாழவும், பல்கிப் பெருகவும் தேவையான உடல் ரீதியான பரிணாமங்கள் மட்டுமே நிகழ்ந்தன. மாறாக நம் ஆதி மூதாதையின் தங்கி வாழ்தல் என்ற நோக்கத்திற்கும் மேலான மூளை மேம்பாடு என்பது அதன் பல்கிப் பெருகுதல் என்னும் இன்றியமையா இரண்டாவது நோக்கத்திற்கே பெரும் தடையாக வந்து நின்றது. இருந்தும் அது ஏன் மூளையின் வளர்ச்சியைத் தேர்ந்தெடுத்தது? அப்படி எது அதை அவ்வாறு செய்யத் தூண்டியிருக்கும்? அந்த உயிரிக்கு எவ்விதத்திலும் தங்கி வாழத் தேவைப்படாத, பல்கிப் பெருகத் தேவைப்படாத, ஆனால் அந்த மூதாதையின் மூளைக்குள் அது உணர்ந்த ஒன்று. அதை ஆதி தன்னுணர்வு எனலாம். தன்னுணர்வு என்றதும் ‘நான் இங்கு இருக்கிறேன், நான் இவையனைத்தையும் அறிகிறேன்’ என்ற அளவு விரிவான ஒன்றாகக் கருத வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் ‘நான்’ என்பதே கூட அந்த ஆதி தன்னுணர்வில் இருந்திருக்காது. அதற்கும் முந்தைய ஒரு உணர்வு, ஒரு சிறிய உணர்வுத் துமி. அவ்வளவு தான். அது தான் அந்த உயிரியை தன்னைத் தொடர்ந்து ஏந்திச் செல்லப் பணித்தது. தலைமுறைகள் தோறும் அந்த மூதாதை கையளித்தது அந்த ஆதி தன்னுணர்வுத் துமியைத்தான். பரிணாமத்தில் மூளை பெரிதாகப் பெரிதாக அந்த தன்னுணர்வும் ‘நான்’ என்றும், ‘இது’ என்றும், ‘இங்கு’ என்றும் தெளிந்து கொண்டே வந்தது. இறுதியாக ‘நான் இங்கு இருக்கிறேன், நான் இவையனைத்தையும் அறிகிறேன்’ என முதல் முழு உணர்வென ஏதோ ஒரு மனித மூதாதைக்குத் தோன்றியது. அந்த தன்னுணர்வு தான் நாம் முன்பு பார்த்த அந்த ஆதி மனதில் தன்னையும், தன்னைச் சூழ இருக்கும் பிரபஞ்சத்தையும் பற்றிய அந்த முதல் தரிசனத்தை நிகழ்த்தியது. தன்னுணர்வு மிகவும் அடிப்படையானது. அறிதலுக்கு ஆதாரமானது. அது மானுடத்திற்கு மட்டுமே உரித்தானது. அது தான் மானுடத்தின் மூன்றாவது நோக்கம். ‘தங்கி வாழ்க’, ‘பல்கிப் பெருகுக’, ‘அறிந்து அமைக’ என்ற மூன்று நோக்கங்களும் மானுடத்துக்கு உரியவை. அந்த புள்ளியில் மானுடத்தின் பரிணாமத்தில் பிற உயிரினங்களில் இருந்தும் வேறுபட்ட ஒன்று நிகழ்ந்தது. பிற உயிரினங்கள் எல்லாம் சூழலில் தங்கி வாழ உயிரியல் ரீதியான பரிணாம வளர்ச்சிகளைப் பெற்ற போது, மானுடம் மட்டுமே அறிவு ரீதியான பரிணாம வளர்ச்சிகளைப் பெறத் துவங்கியது. உயிரியல் ரீதியான பரிணாமத்தை விட இந்த அறிவு ரீதியான பரிணாமம் மிக வேகமாக நிகழத்துவங்கியது. அப்படியாக நாம் இந்த உயிரியல் சங்கிலியில் முதன்மை இடத்தை எட்டிப் பிடித்தோம்.

இந்த மூளையின் அளவு இரு கால்களில் நடக்கத் தூண்டியது என்ற பார்வையைப் போலவே இன்னொரு பார்வையும் இருக்கிறது. அது பரிணாமத்தில் முதலில் நிகழ்ந்தது இரு கால்களில் நடப்பது தான் என்றும், கூடவே இயல்பாக ஏதோ ஒரு புள்ளியில் மூளையின் அளவு பெரியதாகத் துவங்கியது என்றும் சொல்லும் பார்வை. இந்த பார்வை அந்த முதல் மூதாதை இரு கால்களில் நடக்கத் துவங்கியதால் மூளை அளவு பெரிதாவதற்கான சாத்தியம் உருவானது என வாதிடுகிறது. தற்போது வரை கிடைத்துள்ள தொல்லியல், மரபணு தரவுகள் இருகால்களின் நடக்கத் துவங்கியதே கால அளவில் முந்தையது என்கின்றன. நாம் முன்பு கண்ட இரு சிந்தனைப் பள்ளிகளில் இது ‘இறையிலி வாதத்திற்கு’ நெருங்கியது. மானுட மூதாதைகளில் நிகழ்ந்த காத்திரமான பரிணாம வளர்ச்சி என்பது மூளையின் அளவு பெரிதானது மட்டுமே என்கையிலும், அப்படி எழுந்து நிற்பது உருவாக்கிய சிக்கல்கள் ‘பல்கிப் பெருகுக' என்ற இரண்டாவது நோக்கத்திற்கே எதிராக நின்ற போதும் மூளை வளர்ச்சி நிற்கவில்லை என்பதுடன், அது குழந்தைப் பிறப்பு காலத்தையே குறைக்கும் வரை சென்றதையும் வைத்துப் பார்க்கையில் மூளையை முன்னிறுத்தும் அந்த முதல் பார்வையே என்னளவில் உகந்தது. அந்த உயிரின் மூளையில் மட்டும் தோன்றிய அந்த ஆதி தன்னுணர்வுத் துமி எப்படி வந்திருக்கும்? அது உயிரியலின் சடுதி மாற்றம் அல்ல. பின்னாளில் சிம்பன்சியின் மூளை அளவும் கூடத் தான் அதன் முதல் மூதாதையின் மூளை அளவை விடக் கூடியிருந்தது. ஆனால் அங்கு அந்த ஆதி தன்னுணர்வுத் துமி நிகழவில்லையே. அது இவ்வுலகில் வாழும் எதனிடம் இருந்தும் வந்திருக்கக் கூடிய ஒன்று அல்ல. இன்னும் சொல்லப் போனால் சாங்கியம் சொல்லும் பிரகிருதியில் இருந்து கூட வந்திருக்க இயலாது. பிரகிருதியில் தன் செல்வாக்கைச் செலுத்திய அந்த இறை, புருஷனில் இருந்து வந்திருக்கும். அவ்வகையில் இந்த பார்வை ‘இறை முதல்’ வாத சிந்தனைப் பள்ளிக்கு நெருக்கமானது.

மானுடத்தின் பரிணாமத்தில், வாழ்வியலில், குடிமைத்தன்மைகளில், அறிவியலில் என அனைத்திலும் பெரும் செல்வாக்கை செலுத்தியது இந்த தன்னுணர்வே. அதை முதன் முதலில் உணர்ந்த அந்த ஆதி மனது அடைந்தது பேரானந்தமாகத் தான் இருக்கும். எனவே தான் மாணிக்கவாசகரும் ‘உலப்பிலா ஆனந்தமாய தேன்’ என்கிறார். ஆம், அந்த தன்னுணர்வு நம் சொந்த முயற்சியில் இருந்து வரவில்லை. அந்த ஆதி தன்னுணர்வை நம்மில் தந்தது, அதை பிறவிகள் தோறும் கடத்தியது, பிறவியின் இறுதியில் பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனாம் எம்பெருமான் சிவனே எனத் தேறினார் மணிவாசகர். அந்த தன்னுணர்வு சிவம் தன் அளப்பருங்கருணையால் நம்மை, நம் வினைச் சுழலில் இருந்து விடுவிக்க நம்மில் தூண்டியது. இதையே ‘சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்’ என மாணிக்கவாசகரும், ‘என் உளமே புகுந்த அதனால்’ என கோளறு பதிகங்களில் மீண்டும் மீண்டும் ஞானசம்பந்தரும் கூறுகிறார்கள். அது எப்படி சிவம் என்ற முடிவிற்கு வர இயலும்? இதையறிய சிந்தனையின் பரிணாமம், நம் தெய்வங்களின் பரிணாமம், வேத ஞானங்களின் பரிணாமம், தத்துவங்கள், தரிசனங்களின் பரிணாமம் என விரிவான தேடல் தேவை. மேலும் புராணங்கள் பற்றிய நம் கேள்விகளுக்கான பதிலையும் தொடர்ந்து தேடலாம், வரும் பகுதிகளில்.

  1. https://tamil.wiki/wiki/%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BE._%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
  2. https://tamil.wiki/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
  3. https://tamil.wiki/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D
  4. https://tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
  5. https://www.britannica.com/science/human-evolution
  6. https://www.frontiersin.org/journals/ecology-and-evolution/articles/10.3389/fevo.2023.1152384/full

கட்டுரையாளர்: அருணாச்சலம் மகாராஜன்

அருணாச்சலம் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருக்கிறார். பள்ளிப் பருவம் முழுவதும் கிராமத்திலேயே தமிழ் வழிக் கல்வியாக நிகழ்ந்தது. தந்தை வழி திருக்குறளும், சுவாமி விவேகானந்தரும் அறிமுகம். பள்ளியில் பயிலும் காலத்தில் ஊரில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சனிக்கிழமை தோறும் நிகழ்ந்த கம்பராமாயண வகுப்புகள் வாயிலாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார். தீவிர இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு மூலம் நுழைந்தார். வெண்முரசு நாவல் வரிசைகளுக்கு எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் வாயிலாக இந்திய ஞான மரபு, வரலாறு, தத்துவங்கள் ஆகியவற்றில் தன் தேடல்களை கண்டடைந்தார்.



0 comments:

Post a Comment