(சித்தாந்த ஞானம் பெற்ற நல்லாசிரியர் ஒருவரிடம், தேடல் உள்ள நல்மாணவன் ஒருவன் சென்று, வணங்கி அவரிடம் சைவம் பற்றிய உண்மைப் பொருளை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கிறான். அவன் பலவாறாக கேள்விகள் கேட்க அதற்கு அந்த ஆசிரியர் விடை அளிப்பது போல் அமைந்தது தான் இந்த நூல். இந்த மொத்த நூலின் அமைப்பே கேள்வி பதில் என்ற முறையில் அமைந்தது. 450 பக்கங்கள் உள்ள இந்த நூலை சைவ சிந்தாந்த பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார் 1975 ல் எழுதியுள்ளார்.
இந்த நூலை நவீன மொழி நடைக்கு ஏற்றவாறு, அதே நேரம் மூலக்கருத்து மாறாமல் மறு ஆக்கம் செய்து தொடராக வெளியிடப்படுகிறது. இந்த நூலை முழுவதும் படித்து முடிக்கும் போது, சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான அனைத்துக் கருத்துக்களும் தெளிவு பெறும்)
அருணைவடிவேல் முதலியார்
மாணவன் : ஆசிரியரே, ‘ஞானநூல்கள்' என்று உலகில் எத்தனையோ நூல்கள் அளவில்லாமல் கிடைக்கின்றன. அவைகள் அனைத்தையும் படித்து தெளிவது எனக்கு கடினம். எனவே அதன் முடிந்த முடிவை தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஆசிரியர் : ஞான நூல்களின் முடிந்த பொருள்களை உணரவிரும்பும் நல் மாணவனே கேள்; 'வேதம், ஆகமம், பொதுமறை (திருக்குறள்) திருமுறை' என்னும் முதல் நூல்களும்,
‘ஸ்மிருதிகள், புராணங்கள், அறுபத்து நான்கு கலைகள், உபாகமங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள், அறநூல்கள், தல புராணங்கள், என்னும் வழி நூல்களும்,
'சிட்சை, கற்பம், சோதிடம், வியாகரணம், முத்தமிழ்களின் இலக்கண நூல்கள், உந்தி களிறு முதலிய மெய்நூல்கள்' என்னும் சார்பு நூல்களும், 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்புகளை விளக்குவதையே நோக்கமாக உடையன. இதனை.,
“பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல்”
என்று, சந்தான குரவர் நால்வருள் நான்காவதாக விளங்கும் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் தமது சிவப்பிரகாச நூலில் தெரிவிக்கிறார். எனவே "பதி, பசு, பாசம்" என்னும் முப் பொருள்களை முறைப்படி உள்ளவாறு உணர்தலே ஞான நூல்களின் முடிந்த முடிபை உணர்வதாகும்.
மாணவன் : எல்லா நூல்களும் 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பையே கூறுகிறது என்றால் உலகில் மத வேறுபாடுகள் தோன்றக் காரணம் என்ன?
ஆசிரியர் : எல்லா நூல்களின் கருத்து முப்பொருள் இயல்பைக் கூறுவதாக இருந்தாலும், அந்நூல்களைச் செய்த அனைவரும் ஒரு தரத்தினர் அல்லர்; பல்வேறு தரத்தினராவர்.
"முதல்வழி சார்பென நூல்மூன்றாகும்”
என்ற நன்னூல் இலக்கணப்படி மூன்று வகையாகக் காணப்படும் நூல்களுள், முதல் நூலே, வினைகள் எல்லாம் நீங்கி விளங்கும் அறிவனாகிய இறைவனால் செய்யப்பட்டது.
அடுத்து தம் வயம் இழந்து இறைவனது அருள் வயப்பட்டு நின்ற அருளாளர் செயலெல்லாம் இறைவன் செயலே என்பதால், அவர்கள் செய்த நூல்களும் முதல் நூல்களேயாகும்.
இவ்வாறாக நாம் காணும்பொழுது, முதல் நூல்கள் வடமொழியில் 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டும், தமிழ் மொழியில் திருக்குறள், தேவாரம் முதல் திருத்தொண்டர் புராணம் வரை உள்ள பன்னிரு திருமுறைகளாகும். இவைகளை, 'முதல் நூல்கள் அல்ல' என மறுத்து வேறு சிலர் வேறு சில நூல்களையே முதல் நூல்கள் எனக் கொள்வர்.
மாணவன் : ஒவ்வொரு சாரார் ஒவ்வொரு நூலை, 'முதல் நூல்' என்று கொண்டு, மற்றவைகளை 'முதல் நூல் அல்ல' என்று மறுப்பார்களானால், 'உண்மை முதல் நூல் இது' என்பதனை எப்படி அறிவது?
ஆசிரியர் : அதை அறிவது பொது மக்களுக்கு அரிதுதான்; இருப்பினும் எந்த வித சார்பு நிலைகளுக்குச் செல்லாமல் நடுவு நிலைமையோடு இருந்து காண முயலும் அறிஞர்களுக்கு அது நன்றாக விளங்குவதாகும்.
மேலும் உண்மை நூல் என்பது, ஒரு நூலின் கருத்து எந்தவொரு இடத்திலும் மறுக்க முடியாமல் இருக்கிறதோ, வேறு எந்த நூலிலும் சொல்லாத உண்மையை விளக்குகின்றதோ, அதுவே உண்மை நூலாக இருக்க முடியும்.
அப்படி நடுநிலைமையாக காணும் அறிஞர் பலரும் வேதம் மற்றும் சிவ ஆகமங்களையே, 'உண்மை முதல் நூல்' என்கின்றனர்.
"வேதத்தை விட்ட அறம் இல்லை; வேதத்தில் ஓதத் தகும் அறம் எல்லாம் உள"
"வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல்" எனத் திருமந்திரமும்,
“அருமறை ஆகமம் முதல் நூல், அனைத்தும் உரைக்கையினால்" என்று சிவஞான சித்தியாரும் கூறுகின்றன.
மாணவன் : ‘உண்மை முதல் நூல் இது' என உணரும் முறையை அறிந்தேன். இனி அத்தகைய முதல் நூல் இருந்தாலும் மத வேறுபாடுகள் தோன்றியதன் காரணம் என்ன?
ஆசிரியர் : அதுதான் நான் முன்பே சொன்னபடி, முதல் நூலின் பொருளை உணர்கின்றவர் பலவாறாக இருக்கின்றனர். அதில் சிலர் முதல் நூலின் பொருளை தமக்கு ஒவ்வாது என்று கருதி அதற்கு மாறாக எதிர் நூல்கள் சிலவற்றை செய்தனர்.
அந்நூல்களை பின்பற்றித் தோன்றி வளர்ந்த மதங்கள், 'புறச் சமயங்கள்' எனப்படுகின்றன. அவை பௌத்தம், சமணம், மற்றும் 'உலகாயதம்' எனப்படும், 'நாத்திகமும்' வேதம் மற்றும் சிவாகமங்களை இகழ்ந்து நூல் செய்ததால் அதுவும் 'புறச்சமயம்' எனப்படும்.
மேலும் பலர், முதல்நூற் பொருளை 'நன்று' என்று உடன் பட்டாலும் , அப்பொருளை உணரும் முறையில் வேறுபட்டு, அதற்கு மாற்றாக, வழிநூல்களும், சார்பு நூல்களும் செய்து அந்நூல்களுக்கு வேறு வேறு வகையான உரைகளும் செய்தனர். அதனாலும் மத வேறுபாடுகள் மிகுவாயின. உண்மை முதல் நூலை உடன்பட்டு, அதற்குப் பொருள் காண்பதில் வேறுபட்ட மதங்களான இவைகளை 'அகச் சமயங்கள்' எனப்படுகின்றன.
பொதுவாகச் சமயங்கள் இப்படி, 'புறம், அகம்' என இரண்டு வகையாகவே கூறப்பட்டாலும்
"புறப்புறம், புறம், அகப்புறம், அகம்"
என நான்காக வகுத்துக் கூறுவதே நுட்பமான முறை. சமயங்களை,'அறுவகைச் சமயம்' என்று தொன்றுதொட்டு கூறிவரும் மரபாக இருப்பதனால், இந்த நான்கு சமயங்களுக்கும் உள்ளே ஆறு வகையான சமயங்கள் உள்ளன.
அவற்றுள்
புறப்புறச் சமயங்கள் :- உலகாயதம், நால்வகைப் பௌத்தம், (மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌத்திராந்திகம்) சமணம் என்பன.
புறச் சமயங்கள் :- தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், யோகம், சாங்கியம், பாஞ்சராத்திரம் அல்லது வைணவம்' என்பன.
அகப்புறச் சமயங்கள் :- பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்பன.
அகச்சமயங்கள் :- பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாம வாத சைவம் அல்லது சிவாத்துவித சைவம்' என்பன. 'சுத்த சைவம்' என்பதும் இதில் ஒரு பிரிவாக உண்டு.
இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது சித்தாந்த சைவம்; இதன் கொள்கையே ‘சைவ சித்தாந்தம்' எனப்படுகின்றது.
இவைகளுள் புறப் புறச் சமயங்களையும், புறச்சமயங்களையும் அருணந்தி சிவாசாரியர் தமது சிவஞான சித்தியார் நூலில் "பரபக்கத்தில்" மறுத்தார். அகச்சமயங்களை உமாபதி சிவாசாரியர் தமது "சங்கற்ப நிராகரணத்துள்" மறுத்தார். அகப் புறச் சமயங்களில் தத்துவக் கொள்கை மிகுதியாக இல்லை. அதனால், அவைகளை ஒரு தனிப் பகுதியில் எடுத்து எந்த நூலிலும் மறுக்கவில்லை.
மாணவன் : எந்த முறையை பின்பற்றிச் சமயங்கள், புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்று நான்காக வகுக்கப்படுகின்றன?
ஆசிரியர்: 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டு முதல் நூல்களளையும் உடன்படாதவாறு புறமாக இருப்பதால் அவைகள், 'புறப்புறச்சமயம்' எனப்பட்டன.
வேதத்தை உடன்பட்டுச் சிவாகமத்தை உடன்படாதவை 'புறச்சமயம்' எனப்பட்டன.
வேதம் மற்றும் சிவாகமங்களை உடன்படினும் அவைகளைப் பொதுவாகக் கொண்டு, பிற நூல்களைச் சிறப்பாகப் போற்றுவன 'அகப்புறச் சமயம்' எனப்பட்டன.
வேத சிவாகமங்களையே சிறப்பாகப் போற்றினாலும் குருவருள் இல்லாததால் அவற்றிற்கு உண்மைப் பொருள் காண முடியாமல் தத்தமக்குத் தோன்றியவாறு பொருள் உரைப்பன ‘அகச்சமயங்கள் எனப்பட்டன .
சீகண்ட பரமசிவன் திருக்கயிலையில்- தென்முகக் கடவுளாய் - ஆசிரியக் கோலமாய்க் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நந்தி பெருமானுக்கு உண்மை ஞானத்தை உபதேசித்து, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளையும் தெளிவிக்க, அவ்வுபதேசத்தின் வழி வந்த சித்தாந்த சைவமே, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து அதனை, ‘சுருதி, யுக்தி,அனுபவம்' என்னும் மூன்றாக பிரித்து பொருள் பொருந்தி விளக்குகிறது.
மாணவன் : புறப்புறம் முதலாகச் சொல்லப்படும் மதங்களுக்கு நூல்கள் உள்ளனவா?
ஆசிரியர் : உள்ளது. உலகாயதத்திற்குத் தேவகுருவாகிய வியாழன் ஒரு காலத்தில் இந்திரனை மயக்கும் பொருட்டுச் செய்த நூல், முதல் நூல் என்று கந்த புராணத்திற் சொல்லப் பட்டது. அப்படி ஒரு நூல் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், பலர் அக்கொள்கையை தமது நூலில் கூறினார்கள்.
பௌத்தத்திற்கு ஆதி புத்தர் செய்த பிடகாகமம் என்பது முதல் நூல். இவரை 'கௌதம புத்தர்' என்று இக்காலத்தினர் கூறினாலும், பௌத்த மதத்தினர் அவ்வாறு கூறுதல் இல்லை. மேலும் ‘ஆதிபுத்தர், திரிபுரத்தவரை மயக்கத்தோன்றிய திருமாலின் அவதாரமே, என்பது வேத மதங்களின் கூற்று.
சமண மதத்திற்கு அருகக் கடவுள் அல்லது ஜினக்கடவுள் செய்த பரமாகமம் முதல் நூல். அஃது இப்பொழுது கிடைப்பதாகத் தெரியவில்லை.
தமிழில் மணிமேகலைக் காப்பியத்தை, 'பௌத்த சமயத் தத்துவ நூல்' என்றும், நீலகேசிச் சிறுகாப்பியத்தை, 'சமண சமயத் தத்துவ நூல்' என்றும் கூறலாம். பிற நூல்களிலும் இவற்றின் தத்துவங்கள் காணப் படுகின்றன.
தருக்க மதம், ‘வைசேஷிகம், நையாயிகம்' என இருவகைப் படும். அவற்றிற்கு முதல் நூல்கள் காணப்படாவிட்டாலும், வேறு பல நூல்கள் வடமொழியில் உண்டு. பூர்வ மீமாஸ்சைக்கு ஜைமினி முனிவர் செய்த முதல் நூல் உண்டு. அதற்கு உரை தோன்றிய பின், அம்மதம் 'பாட்டம், பிரபாகரம்” என இரண்டாகப் பிரிந்து விட்டது.
மேலும் வேதம் ‘கிரியா காண்டம், ஞான காண்டம்' என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது, இடையில் உள்ள உபாசனாகாண்டம் கிரியா காண்டத்துக்குள் அடங்கும். 'இருகாண்டத்துள் முற்பகுதியாகிய கிரியா காண்டமே சிறந்தது' என்னும் கொள்கையில் தோன்றியதே மீமாஸ்சை மதம். இது கிரியைகளின் மீது உடன் பட்டாலும், கடவுளை உடன் படுதல் இல்லை. கிரியையே பயன் கொடுக்கும்; ஆகையால் கர்மமே கருத்தா' என்று கூறுவது.
இதை மறுத்து ஞான காண்டத்தையே வற்புறுத்தி வேத வியாசர் செய்த ‘உத்தரமீமாஸ்சை' எனப்படும் பிரம்ம சூத்திரநூலின் வழியே, 'ஏகான்மவாதம்' (அல்லது அத்வைதமதம் அல்லது வேதாந்த மதம்) என்பது தோன்றியது, எனினும், அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டு, 'சிவாத்துவிதசைவம், விசிட்டாத்வைதம், த்வைதமதம்' (மத்துவ மதம்) என்பவை தோன்றின. முறையே இவை நான்கிற்கும் சங்கரர், நீலகண்டர், இராமானுஜர், ஆனந்த தீர்த்தர் என்போர் ஆசிரியராவர். இராமானுஜர், மதமே பாஞ்சராத்திரம். இது, ‘பாஞ்சராத்திரம்' என்னும் வைணவ ஆகமத்தின் வழியாததால் இப்பெயர் பெற்றது.
இதுபோல, சைவ சித்தாந்தத்தை இன்று இனிது விளக்கும் நூல்கள் தமிழில் உள்ளன. அவை "உந்தி, களிறு முதலிய பதினான்கு நூல்களாகும். அவை 'சித்தாந்த சாத்திரம்' எனப்படுகின்றன.
கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு
0 comments:
Post a Comment