சமீபத்தில் பழம்பெரு நடிகரும், தமிழ் திரையுலகில் குருசாமி என அழைக்கப்பட்டவருமான திரு. எம்.என்.நம்பியார் அவர்களின் நேர்காணல் ஒன்றைக் கண்டேன். திரு எச். ராமகிருஷ்ணன் அவர்களால் அன்றைய தொலைக்காட்சிக்கு எடுக்கப்பட்ட பேட்டி. அநேகமாக தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம். அந்த நேர்காணலில் நம்பியார் அவர்கள் தனது ஆசைகளாக வெளியிட்டவை என்னை பெருவியப்பில் ஆழ்த்தின. உலகின் மிக ஆழமான கடல் பகுதியான மரியான ட்ரென்ஞ்சிற்கு ஒரு பயணம், அலாஸ்காவிற்கும் சைபீரியாவிற்கும் இடையேயான பேரிங் கடல் மூலம் வடதுருவம் ஊடாக ஐஸ்லாந்து செல்லும் பனிப்பாறை பாதை வழியாக ஒரு பயணம், தென்துருவத்திற்கு ஒரு நடை, உலகின் நீண்ட மலைத் தொடரான ஆண்டிஸ் மலையின் மீது ஒரு பறத்தல், உலகின் பேராறுகளில் முதன்மையான அமேசான் நதியில் ஒரு கப்பல் பயணம் ஆகியவற்றை தன் ஆசைகளாகக் குறிப்பிட்டார். ஆம் பெரும் ஆசைகள் தான். இன்று உலகமே நம் கைப்பேசிக்குள் இருக்கும் இந்த இணைய யுகத்தில் இவற்றை ஒருவர் சொல்கிறார் என்றால் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் இணையம் என்பதே இன்னும் நுழையாத, உலகமயமாக்கலுக்கு முந்தைய இந்தியாவில் இவையெல்லாவற்றையும் ஒருவர் கூறுகிறார் என்பது பெரும் வியப்பானது. எப்படி அவர் இவற்றையெல்லாம் அறிந்திருப்பார்? தொடர்ச்சியான ஆவலும், தேடலும், கற்றலும் கொண்ட ஒருவருக்கே அது சாத்தியம்.
கற்றலின் அடிப்படை அலகு என்பது தகவல்களை தெரிந்து கொள்தல் தான். நாம் தெரிந்து கொள்ளும் ஒரு தகவல் கருத்து என, அறிதல் என, கருதுகோள் என, தரிசனம் என, ஞானம் என மாறும் நிகழ்வே கற்றல் எனப்படுகிறது. கற்றல் என்பது தொழிற்கல்வியாக, புறவயமான பயனுறு கல்வியாகவும், நமக்கே நமக்கான அகக் கல்வியாகவும் நிகழலாம். மேற்கூறிய நிகழ்வில் திரு. நம்பியார் அவர்கள் தன் ஆர்வங்களினால் அறியப் பெற்ற தகவல்கள் அவரை இன்னும் எளியவராக, மனதால் விசாலமானவராக, படைப்பு சக்தியின் முன் பணிவானவராக, பண்பட்டவராக, அவரே அந்த பேட்டியில் கூறுவது போல நல்லதொரு மனிதராக ஆக்கும் காரணிகளாகவும், அவ்வகையில் அவரது அகக்கல்வியாகவும் மாறியிருக்கக் கூடும். இவ்வகையான தகவல்கள் நம்மை வந்தடையும் வழிகளை கூர்ந்து நோக்கினால் அவை இரண்டு வகைகளில் வருவதை அறியலாம்.
நம்முன் வந்து சேரும் தகவல்கள்
நாமே சென்று தேடி சேர்க்கும் தகவல்கள்
இன்றைய தகவல் தொழில்நுட்ப, சமூக ஊடக, தகவல் பெருவெடிப்பு யுகத்தில் நாம் விழையும் தகவல்கள் நம் விரல் தேடி, கண் தேடி வருவது என்பது திட்டவட்டமானது. பல நூறு வழிகளில் நாம் அறியாமலேயே நம் தேர்வுகள், ஆவல்கள், சிந்தனைகள், தேடல்கள், விழைவுகள், ஏக்கங்கள் பற்றிய தகவல்களை பல மாபெரும் தகவல் பொறுக்கி மற்றும் தகவல் வழங்கி எந்திரங்களுக்கு அளித்துக் கொண்டேயிருக்கிறோம். அவையும் நமக்குத் தேவையான மற்றும் அந்த தேவைகளின் நீட்சி என அவையே தீர்மானிக்கும் தகவல்களை, தகவல்களாக மட்டுமே நம்முன் கொண்டு வந்து கொட்டிக் கொண்டே இருக்கின்றன. நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவாலே இந்த தகவல்களில் எவை நமக்குத் தேவையானவை, எவை உண்மையானவை, எவை நம்பத்தகுந்தவை, எவை நம் நினைவில் இருத்த வேண்டியவை என்ற எந்த வகைமையையும் செய்ய இயல்வதில்லை என்பது தான். நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு அந்தந்த அவயங்களுக்குத் தேவையான உரமூட்டும் ஆற்றலாக மாற்றப்பட்டு, கசடுகள் வெளியேற்றப்பட்டால் மட்டுமே அதன் பயன் நமக்கு கிடைக்கும். முறையாக செரிமானம் ஆகாத உணவு உடலுக்கு நஞ்சென மாறி நோயூட்டும். நம்முன் வந்து விழும் தகவல்களும் உணவைப் போன்றவை தான். அவையும் முறையாக தொகுக்கப்பட்டு, நம்முள் இருக்கும் தேடல்களுக்கும், வினாக்களுக்கும், விடையென, நமக்கேயான கருத்துக்களாக ஆகி, முன்பே நம்முள் இருந்த அறிதல்களோடு இணைந்தும், மறுத்தும் நம் சிந்தனையை முன்னகர்த்தி , சிந்தனைகளின் விளைகனிகளான கருதுகோள்களை உருவாக்கி, அவற்றை நம் தியானத்தின் மூலம் ஒரு தரிசனமாக, ஒரு ஞானமாக, ஒரு முழுமையான அறிதலாக மாற இயலுமென்றால் மட்டுமே நாம் உட்கிரகிக்கும் தகவல்களுக்கு பயன் உண்டு. இல்லையெனில் செரிக்காத உணவு உடலுக்கு நஞ்சென ஆவது போல, அறிதல் ஆகாத தகவல்களும் நம் அறிபுலன்களின் கூர்மையை அழித்து, நம் அறிதல்களுக்கும், அறிவுக்கும் நஞ்சென ஆகும். தொடர்ச்சியான கவன இழப்புகளும், நினைவுக் குறைபாடுகளும், அதைத் தொடர்ந்த உணர்வு சமநிலையின்மைகளும், உற்சாகமின்மையும், இவற்றின் விளைவான செயலின்மையும், உச்ச கட்டமாக ஆழமான அகச் சோர்வும் உண்டாகும். உடல் நோயைப் போன்று எளிய மருந்துகளால் குணப்படுவதில்லை மேற்கூறிய அகச்சிக்கல்கள்.
நாம் இப்போது இருக்கும் தகவல் வெடிப்பு யுகத்திற்கு முன்பு, இணையம் என்பது பரவலாக புழங்குவதற்கு முன்பு, புத்தகங்களும், காகிதப் பதிப்புகளும் மட்டுமே அறிவுலகை ஆண்டு கொண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளுக்கு முன்பு வரையும் கூட நாம் விழையும் தகவல்களை நாம் தான் தேடி, அலைந்து தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. சொல்லப்போனால் மானுடம் அறிவுத்துறையை உருவாக்கிய ஆதிகாலம் துவங்கி அறிந்து கொள்தல் என்பது அறிபவரின் தேர்வு மட்டுமே. எந்த அறிதலும் மானுடர் கொண்ட அறியாமை என்னும் இருளை கொஞ்சமேனும் அகற்றும் விளக்கு தான். கற்றணைத்தூறும் அறிதல் ஒவ்வொன்றும் அவ்விளக்கின் சுடரை தூண்டி விட்டு இன்னும் பிரகாசமாக சுடர் விட வைப்பது தான். அறிய அறிய நம் பார்வையின் எல்லைகளும் விரிந்து கொண்டே செல்வதை உணரலாம். தொடர்ச்சியான அறிதலின் பயணத்தில் இருக்கும் ஒருவர் இயல்பாகவே மெய்யறிவை நோக்கிப் போகிறார். மெய்யறிவு என்பது நம்மைச் சுற்றி இருக்கும் பிரபஞ்சத்தைப் பற்றி, நம்மைப் பற்றி அறிந்து கொள்ளும் முழுமையான அறிவு. பொய்க்காத அறிவு, பொய்யா விளக்கு. இது அறிபவரின் தேர்வு என்பதால் அவர் தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு தகவலும் அவரது அறிதல்களை ஒரு புள்ளியாவது முன்நகர்த்தும் ஒன்றாக மட்டுமே இருக்கும். சுய தேர்வின் பால் பெறப்படும் தகவல்கள் இயல்பாகவே தொகுக்கப்பட்டு, முழுமையாக உட்கிரகிக்கப்பட்டு, தன்னறிவின் எல்லைகளை விரிவாக்கும்.
இவை இரண்டைத் தவிர நமக்கு தகவல்கள் வரும் இன்னொரு வழி ஒன்று உண்டு. இதை புறவயமாக நிறுவ இயலாது. தொடர்ச்சியாக ஒன்றை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், அதையே தேடித் தேடி அறிந்து கொண்டிருந்தால் நாம் தேடும் தகவல்கள் அல்லது அவற்றோடு தொடர்புடையவை நம்முன் இயல்பாகவே வந்து சேரும். திரு.நம்பியார் அவர்களுக்கு இவ்வாறு நடந்திருக்கக் கூடும். இது எந்த ஒரு நிரல் எழுத்தாலும் நிகழ்வது இல்லை. நம்முடைய தேடல்களே அவற்றை நம்முன் கொண்டு வந்து சேர்த்துவிடும். நாம் தேடுவது நம்மையும் தேடிக் கொண்டிருக்கத்தான் செய்யும். இல்லாவிட்டால் கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில், அரசுப் பள்ளியில் பயின்று, தமிழ்ப் பாடல்களை இலங்கை வானொலியில் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் யானி வந்து சேர்ந்திருக்க மாட்டார். தமிழில் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தவனுக்கு அறிவை வழங்க கோகுலம் இதழும், கலைக்கதிர் இதழும் வீடு தேடி வந்திருக்காது. மூன்றாவது வகுப்பிலேயே சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ண பரமஹம்சரும் அறிமுகம் ஆகி இருக்க மாட்டார்கள். இயல்பாக கன்னியாகுமரியை தலைமையகமாகக் கொண்ட விவேகானந்த கேந்திரத்துடன் தொடர்பு உருவாகி அவர்கள் பதிப்பித்த புத்தகங்கள் என் வாசிப்புக்கு வந்திருக்காது.
ஆம், இவற்றை வாசிப்பதில் என் தேர்வுகளும், ஆர்வங்களும் பெரும்பங்கு ஆற்றின என்பது உண்மை தான். இவையெல்லாம் தற்செயல்கள் அல்லது என் முயற்சிகளுக்கான விளைவுகள் எனவும் ஒரு விளக்கம் தரலாம் தான். அப்படித் தான் நானும் என் அறிவுத் தேடல்களை எண்ணி இறுமாந்து இருந்த இளமையில் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கையில் அவற்றை மேற்கூறியவகையில் ஒற்றைப்படையாக வரையறுத்து விட இயலாது என்றே நினைக்கிறேன். தற்செயல் என்ற வார்த்தையிலேயே ஒருவித அவநம்பிக்கை தொனிக்கிறது. அந்த வார்த்தையே நம் பகுத்தறிவுக்கு வெளியே ஏதேனும் ஒன்று இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்தையும், அப்படி எல்லாம் ஒன்று இருக்க இயலாது என்ற முழுமையாக அறுதியிட இயலாத ஒரு கூற்றின் மீதான நம்பிக்கையின்மையையும் சேர்த்தே சுட்டி நிற்கின்றது. என் முயற்சிகளுக்கும், தேடல்களுக்கும் மேல் ஏதோ ஒன்று என்னைத் தேடி அந்த தகவல்களை என் முன் வந்து கொடுத்துக் கொண்டு இருந்தது என்பதை இப்போது உணர்கிறேன். எப்போதும் மிகச் சரியான ஒரு கணத்தில், அந்த தகவல்களை நான் உட்கிரகிக்கத் தயாரான சமயத்தில் அவற்றை என் முன் கொண்டு வந்து கொடுத்தது அது. அப்படித் தான் அது என்னை ஆசான் ஜெயமோகனிடம் கொண்டு சேர்த்தது. என்னை வெண்முரசிடமும் கொண்டு சென்று சேர்த்தது. என் இளவயதில் ராமகிருஷ்ண பரஹம்சரின் காளியைப் பற்றிய 'ஆமி எந்த்ரா, துமி ஏந்த்ரி - நான் எந்திரம், நீ அதை இயக்குபவள்' என்ற வரி ஒரு ஆப்த மந்திரம் போல் அலைக்கழித்திருக்கிறது. அதன் நிரூபணம் போல என்னை ஒரு எந்திரமாக்கி தன்னை இவ்வாறு நிகழ்த்திக் கொண்டது அது என்ற அறிதலை நான் அடைந்தது என் வாழ்வின் ஆசிர்வதிக்கப்பட்ட கணங்களில் ஒன்று.உள்ளங்கை நெல்லிக்கனி என அறிதலைத் துவக்கும் பயணத்தில் மின்னல் ஒளியில் விரியும் மலையென, வெள்ளிடை மலை என தன்னை ஒரு கணத்தில் காட்டி மீளும் அந்த இருப்பை அறிவதல்ல, உணர்வதே அறிதலின் உச்சம், இறையனுபவம் என வரையறுக்கிறது நம் மரபு. எங்கிருந்து, எந்த துறையில் இருந்து அறியத் துவங்கினாலும் இந்த உச்சத்தை சென்று தொட ஒரு பாதை இருக்கத்தான் செய்கிறது நம் மரபில். அந்த உச்சத்திலேயே இருக்க இயலுமென்றால் அதுவே மீட்பு, விடுதலை, மோட்சம், முக்தி, இரண்டற்ற நிலை. அது அல்லது அந்த இருப்பு என்பது என்ன? எங்குள்ளது? இங்கே இருக்கும் எனக்கு அது எவ்விதம் பொருள் படுகிறது? பொருள் பட்டு தான் ஆக வேண்டுமா? பொருள்படாவிடில் இவையெல்லாம் என்ன? ஏன் இவ்விதம் இங்கிருக்க வேண்டும்? அதற்கும், என்னைச் சுற்றி நிகழும் இந்த பிரபஞ்சத்திற்கும், எனக்கும் என்ன தொடர்பு?
வினாக்கள்... பலமுறை, பலராலும், பலவாறாக விவாதிக்கப்பட்டு, வரையறுக்கப்பட்டு, விளக்கப்பட்டு, இதோ கண்டடைந்து விட்டோம் என முடிவு செய்யப்பட்ட பிறகும் அவ்வாறே நின்று கொண்டிருக்கும் வினாக்கள். மானுடம் தன்னுணர்வென, ஒன்றை உணரத்துவங்கிய அம்முதற்கணம் தொட்டு எழும்பி வந்த வினாக்கள். மானுடம் பரிணமிக்கும் தோறும், புலம் பெயர்ந்து, தங்கி வாழ்ந்து, மேம்படுந்தோறும், மொழியென ஒன்றை அடைந்து, கவிதையென வெளிப்படுத்தி, சுருதியென கண்டடைந்து, ஞானம் என கனியுந்தோறும் கூர்மையாகிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் வினாக்கள். இத்தனை வேதங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், சூத்திரங்கள், தத்துவங்கள், தரிசனங்கள் என அனைத்தும் இவ்வினாக்களுக்கெனவே உருவாக்கப்பட்டன. இன்னமும் உருவாகும். இவ்வினாக்களே நம்மை நம் அன்றாடத்தில் இருந்து, சாமானியத்தில் இருந்து விடுவிக்கும். இவற்றிற்கான தேடலே நம்மை நமக்கேயான ஒரு பாதையில் முழுமையாக, தனியாக பயணப்பட வைக்கும். அவ்வாறான ஓர் பயணமே நம்மை இப்பிறப்பின் நிறைவை நோக்கி நகர்த்தும். இப்புனித பாரத பூமி அவ்வாறு பயணப்படும் பல்லாயிரவரின் காலடிகள் கொண்டது. அவ்வாறு பயணப்பட்டவர்களில் சிலர் நமக்கென கனிந்து அருளியவையே நம் இந்து ஞான மரபு. அம்மரபின் தத்துவ தரிசனங்களின் உச்சம் என தன்னை முன்னிறுத்தியது ஆதி சங்கரர் முன்வைத்த அத்வைதம்.
நான் குருவென கண்டடைந்த எழுத்தாளர் ஜெயமோகன் அத்வைதத்தை முன்னிறுத்தும் நாராயணகுரு பரம்பரையின் நீட்சி. அவர் எழுதிய, தமிழின் மகத்தான பெரும்பபடைப்புகளுள் ஒன்றான வெண்முரசு இயல்பாகவே வேதாந்தத்தையும், அத்வைதத்தையும் நோக்கிச் செல்லும் பாதையை முன்னிறுத்துவது. வெண்முரசின் நிகழ்நேர, நிரந்தர வாசகனாக நான் இயல்பாக சென்றடைய வேண்டிய புள்ளியும் அதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னை வெண்முரசை நோக்கிச் செலுத்திய 'அதற்கு' வேறு திட்டங்கள் இருந்திருக்கக் கூடும். வாழ்வின் ஒரு முறிவு கணத்தில், தத்தளித்துக் கொண்டிருந்த என்னை, நான் சைவன் என்பதால், காசிக்கு சென்று வரும்படி ஆற்றுப் படுத்தினார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்கு முன்பே கிராதம் வாசித்து முடித்திருந்தாலும், இளமையில் இருந்தே சிவ வழிபாடு என்பதும், தேவாரமும், திருவாசகமும் துதிகளாக அறிமுகமாகி இருந்தாலும், சித்தாந்த சைவம் நோக்கி நான் சென்றதில்லை. என்னை ஒரு சைவனாக உணர்ந்ததும் இல்லை. ஆனால் அந்த காசி பயணம் ஒரு முகூர்த்தம். புடவிக்கிறைவன் முன் திக்கற்றவனாக நின்ற எனக்கு திசை காட்டப்பட்டது. அதன் பிறகே கிராதத்தைக் குறித்து ஒரு விரிவான கட்டுரை ஒன்றை எழுதினேன். அதன் வாயிலாக அத்வைதத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த என் பயணம் சைவ சித்தாந்தத்தை நோக்கித் திரும்பியது. கிராதம் குறித்த அந்த கட்டுரை என்னுடைய பார்வைகளை, தகவல்களைத் தொகுத்து அறியும் முறைகளை திருத்தியமைத்தது. இயல்பாகவே ஒரு தத்துவத்தை, தரிசனத்தை வெவ்வேறு கோணங்களில் இருந்து கண்டடைவது என்னுடைய வழியாகியது. அப்படி சைவ சித்தாந்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் என் பயணத்தில், என் முன் வந்து சேர்ந்த தகவல்கள், அவற்றில் இருந்து வந்த கருத்துக்கள், கருத்துக்கள் முரணியங்கி என்னுள் நிகழ்ந்த அறிதல்கள், அந்த அறிதல்களின் தொகுப்பான கருதுகோள்கள் என கண்டடைந்தவைகளையே இந்த கட்டுரைத் தொடரில்
1. சிந்தனை கருவிகள் -
அவற்றின் பயன், பயன்படுத்தப்பட்ட விதம், மூன்று முக்கிய கருவிகள் 1. வர்ணாசிரமம் (4 வர்ணங்கள், அடிமை முறை) 2. உற்பத்தி, உபரி, அதிகாரம், வர்க்க அடுக்குகள் 3. ஞானங்களின் பரிணாமம்
2. இறையும் இறையிலியும் -
முதன் முதலில் மனிதன் எப்படி இறை என்பதை உணர்ந்திருப்பான்? இறை என்பது, வழிபாடு என்பது எவ்வாறு துவங்கி இருக்கும்? அவற்றின் தேவை எதுவாக இருந்து இருக்கும்? இனி வரும் காலங்களில் இறை வழிபாட்டின் தேவை என்னவாக இருக்கக் கூடும்? இறை தத்துவங்களின் இடம் என்ன? பக்தியும் ஞானமும் தனித்தனியா?
3. ஞானங்களின், வேதங்களின் பரிணாமம்.
4. சைவத்தின் சிந்தனை வரைபடம் - கற்காலம் துவங்கி இன்று வரை தொடரும் சிவ வழிபாடுகளின் பரிணாமம். ஒரு கூழாங்கல்லில் இருந்து மலையை உருவகித்தனரா? சைவத்தின் பழங்குடி கூறுகள் - அதன் தொடர்ச்சி - பக்தி காலகட்டத்திற்கு / இயக்கத்திற்கு சைவத்தின் பங்களிப்பு -
5. சித்தாந்த சைவத்தின் பரிணாமம் - வேதங்கள், அத்வைதம், சுத்தாத்வைதம், சமணம், பௌத்தம் போன்றவற்றுடனான முரணியக்கம்
முடிவாக ஞான வழியும், அறிதல்களும் - அவற்றின் ஊடான மீட்பின் பாதை - மறுபிறப்பு என்பவற்றை எல்லாம்,
முன்வைக்கலாம் என இருக்கிறேன். இங்கு தரப்படும் கருத்துக்கள் எவையும் புதியதாகக் கண்டடையப்பட்டவை அல்ல. சைவத்தை முழுமையாக வரையறுப்பவையும் அல்ல. அதன் தத்துவத்திற்கான நவீன விளக்க உரையும் அல்ல. ஜெயமோகனின் வாசகர்கள், அவரது முழுமையறிவு இயக்கத்தில் பங்கு பெற்றவர்கள், அவரது உரைகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்கள், தமிழ் விக்கியின் பயனுறுநர்கள், சைவம் குறித்த இணைய தேடல்களில் ஆர்வமுடன் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த கட்டுரைத் தொடரில் எடுத்தாளப்படும் கருத்துக்கள், கருதுகோள்களுக்கு முன்னரே அறிமுகம் ஆகி இருக்கக் கூடும். அதன் பிறகும் இதை ஏன் வாசிக்க வேண்டும் என்றால் இக்கட்டுரைகள் என் சுய அறிவுத்தேடலின் விளைவாக நான் அறிந்து கொண்டவையும், அவற்றை தொகுத்துக் கொண்ட முறைகளையும் மட்டுமே முன்வைக்கின்றன என்பதால் தான். முன்பே சொன்னது போன்று இவை இவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற அளவில் முக்கியமானவை. அந்த தொகுத்துப் பார்த்தல் என் போன்ற சக வாசகர்களுக்கு ஒரு அறிதல் பாதையை காட்டக் கூடும். அதன் வழியாக அவர்கள் தங்கள் அறிதல்களை மேம்படுத்திக் கொள்ள இயலும். இவை வெறும் வழிகாட்டி என்ற தெளிவுடன் வாசிக்கும் எவரும் இவற்றில் தரப்பட்டிருக்கும் கருத்துக்களை தங்களுடையதாக ஆக்கிக் கொள்வர். இதைச் சொல்லும் என் தகுதி நான் வெண்முரசு என்ற பெருங்காவியத்தின் வாசகன் என்பது மட்டுமே. எனவே அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இந்த தொடரைத் துவங்குகிறேன், உடன்வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
கட்டுரையாளர்: அருணாச்சலம் மகாராஜன்
Valgha valamudan. All the best
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎளிய வாக்கியத்தால் , தேடல் தற்செயல் நிகழ்வது அழகாக விளக்கி உள்ளீர்கள். நான் வெண் முரசு படிக்க ஆரம்பித்த காலத்தில், உங்களின் கடிதங்களை கோனார் உரைகளாக ஏற்றுப் பயனடைந்தேன். மிக்க நன்றி.
ReplyDeleteமீனாட்சி
மிகச் சிறப்பு. சைவ சித்தாந்தம் தேடல் கொண்ட நவீன வாசகர்களுக்கு ஏற்ற தளம்.
ReplyDelete