Friday, May 2, 2025

சித்தாந்த வினா விடை- தொடர் 3 - அருணைவடிவேல் முதலியார்

சித்தாந்த வினா விடை 2

 சித்தாந்த வினா விடை 1

 (சென்ற தொடரில் பிரமாணம் என்பது என்ன?, அவற்றின் இயல்பு பற்றி மாணவன் கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் கூறிய பதிலின் தொடர்ச்சி)



இன்மை அளவை அல்லது அபாவப்பிரமாணம் அல்லது அனுபலத்திப்பிரமாணம் : 

குடத்தைத் தேடிக் காணாத ஒருவன், 'இங்குக் குடம் இல்லை' என்று உணர்தல், குளிர் இல்லாமை கண்டு, 'பனி இல்லை' என்று உணர்தல் அனுபலத்திப்பிரமாணமாகும். இருத்தலை உணர்தல் காட்சியாகும், இல்லாமையை உணர்தல் காட்சியாகாது என்று கொண்டு இவை காட்சியளவையும், அதன் வழியதாகிய அனுமான அளவையோடு சேராமல் வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், இவையும் உண்மையில் காட்சியும் அதன் வழிதான அனுமானமுமேயாகும்.


பொருளளவை அல்லது அருத்தாபத்திப் பிரமாணம்:  

ஒருவன் இரவில் மறைந்து உண்டு, 'யான் உண்பதில்லை' என்று கூறினால், அவன் உடல் மெலியாதிருத்தல் கண்டு அவன் இரவில் மறைந்து உண்கின்றான் எனத் துணிதல் அருத்தாபத்திப் பிரமாணமாகும். இவ்வாறு இல்லையாயின் இஃது இயலாது என உணர்தல். இஃது உண்மையை எதிர்மறை முகத்தான் உணரும் அனுமானமேயாகும்.


உவமையளவை அல்லது உபமானப் பிரமாணம்:


காட்டுப் பசு என்பது ஒன்று உண்டு என்று அறியாதவன், காட்டுக்குள் அதனைக் கண்ட பொழுது, நாட்டுப் பசுப்போல இருத்தலால் இது காட்டுப் பசுவாகும் என்று உணர்தல் உபமானப் பிரமாணமாகும். இது, கண்டமாத்திரத்தில் துணியப் படாமையால் காட்சியளவையுமல்ல, பொருளைக் கண்டே துணிதலால் அனுமானமும் அல்ல, வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், காட்சியால் பொதுத்தன்மையைக் கண்டு அதன் மூலம் 'காட்டுப் பசு' என்னும் சிறப்புப் பொருளைக் கருதி உணர்தலால் இதுவும் அனுமானமே ஆகும்.


ஒழிபளவை அல்லது பாரிசேடப் பிரமாணம்:


மூவர் உள்ள இடத்தில் ஒரு பொருள் களவு செய்யப்படின், இருவர் கள்வர் அல்லர் என்பது தெளியப்பட்டால், மீதமுள்ள மற்றொருவனே கள்வன் எனத் துணிதல் பாரிசேடப் பிரமாணமாகும். இஃது ஒருவன் கள்வன் என்பதை அதற்கு உரிய சான்று கொண்டு துணியாது, இருவர் கள்வராகாமையால்  அவன் கள்வன் என்பது அனுமானமன்று, வேறோர் அளவையாம் என்பர் சிலர். ஆயினும், மூவருள் ஒருவன் கள்வன் என்பது முன்னரே துணியப்பட்டமையாலும், இருவர் கள்வர் ஆகாமை பின்னர்த் துணியப்பட்டதாலும் இதுவும் அனுமானமேயாகும்.


உண்மையளவை அல்லது சம்பவப் பிரமாணம்:


ஓரிடத்தில் நூறு இருக்கிறதென்றால் அவ்விடத்துப் பத்தும் உண்டென்று உணர்தல் சம்பவப் பிரமாணமாகும்.  நூறும் பத்தும் காட்சிப் பொருள் இல்லாததால் இது காட்சியளவையும் அதன் வழித்தாகிய அனுமானமும் இல்லை என்பர் சிலர். ஆனால் கருத்துப் பொருளைக் கருத்துப் பொருள் ஏதுவாக ( சான்றாக)  உணரும் அனுமானமே இது.


வழக்களவை அல்லது ஐதிகப்பிரமாணம்:


ஒருமரத்திற் பேய் உண்டென்று வழிவழியாகச் சொல்லிவரும் வழக்குப் பற்றித் தானும் அவ்வாறே உணர்தல்  ஐதிகப்பிரமாணமாகும்.  இது, நூலில் இல்லாததால் உரையளவையாகாது வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், அஃது உண்மை வழக்காயின் உரையளவையே. பொய் வழக்காயின் அளவை இல்லையென்றாகும்.


இயல்பளவை அல்லது சுபாவப்பிரமாணம் 


மரம் பூத்தது என்று ஒருவன் கூறக் கேட்டு, அச்சொல்லாலே அப்பொருளை உணர்தல் சுபாவப்பிரமாணம். சொற்கள் பொருளோடு பிரிப்பின்றி நிற்பதில்லை, எனவே அவைகளைக் கொண்டு பொருளை உணர்தல் அனுமானமாகாது, இது வேறோர் அளவை என்பர் சிலர். இருப்பினும் சொல்லுணர்வு பொருளுணர்வோடு இயல்பாய் உடன் நிகழ்வதால் இஃது அனுமானமேயாகும்.


இவ்வாறு பிறர் வேறு வேறு கூறும் பிற அளவைகளும் காட்சி, கருதல், உரை  என்னும் மூன்று அளவைகளுள்ளே அடங்கிவிடும்.


 

4. காட்சியளவையின் வகை


மாணவன்: காட்சி முதலிய மூன்று அளவைகளின் இயல்பை பற்றி சுருக்கமாக கூறினீர்கள், அவைபற்றி அறிய வேண்டுவன அவ்வளவுதானா, வேறு எவையேனும் உள்ளதா?


ஆசிரியர்: உள்ளது.. வாயிற் காட்சி (இந்திரியப் பிரத்தியட்சம்), மானதக் காட்சி (மானசப் பிரத்தியட்சம்), தன் வேதனைக் காட்சி (சுவவேதனாப் பிரத்தியட்சம்), யோகக் காட்சி (யோகப் பிரத்தியட்சம்) எனக் காட்சியளவை நான்கு வகைப்படும்.


 வாயிற் காட்சி:


கண் முதலிய பொறிகள் வாயிலாகப் பொருள்களைப் பொருந்தி உணர்வதே காட்சியளவை என்று முன்பு கூறினோம். அவ்வாறு நாம் உணருமிடத்து அக்காட்சி முதலில் பொதுவாகவும், பின்பு சிறப்பாகவும், அதன் பின்பு அனுபவமாகவும் நிகழும்.


பொதுவாக நிகழும் காட்சி, 'நிருவிகற்பக் காட்சி' என்று சொல்லப்படும். அஃதாவது, இஃது ஓர் உருவம், இஃது ஓர் ஓசை,  இஃது ஒரு சுவை,  இஃது ஒரு மணம், இஃது ஓர் உராய்வு என்று மட்டும் தோன்றுவது. இவ்வாறு கண் முதலிய பொறிகளால் பொதுவாக உணரும் உணர்வே, வாயிற் காட்சியாகும்  (வாயில்-பொறி).


மானதக் காட்சி:


பொருள்களை வாயிற்காட்சியால் பொதுவாக உணர்ந்த பின்பு, சிறப்பாக உணர விரும்பினால், நாம் அந்தப் பொதுக்காட்சியை மறவாமல் பற்றி, மேலே மனம் முதலிய உட்கருவிகளைச் செலுத்தி, 'இஃது யாது?, என்று ஆராய்ந்து, 'இன்னது' என்று உணர்வோம்; இவ்வாறு உணர்வதே சிறப்புக் காட்சியாகும். இது, 'சவிகற்பக் காட்சி' எனப்படும். இது மனம் முதலிய உட்கருவிகளாலே உண்டாவதால், 'மானதக் காட்சி' எனப்படுகின்றது.


கண் முதலிய பொறி அளவில் பொருள்களைப் பொதுவாக உணர்கின்ற வாயிற் காட்சியோடு நின்றுவிட்டால், அவை இன்னது எனத் தெரியாது, அதனால், அப்பொருள்களைப்பற்றிய நினைவும் பின்னர் உண்டாகாது. மனம் முதலிய கருவிகளைக் கொண்டு, பொருள்களை ஆராய்ந்து சிறப்பாக உணர்கின்ற மானதக் காட்சி நிகழ்ந்த பின்பே, அவை இன்னது என விளங்கும். அவ்வாறு விளங்க உணர்ந்த பொருள்களே பின்னர் நினைவுக்கு வரும்.


வாயிற் காட்சியால், 'இஃது ஒரு பொருள் தோன்றுகிறது' என்று தெரிந்த பின்பு, அதனை 'இன்னதென அறிதல் வேண்டும்' என்ற எண்ணம் உண்டாகுமாயின், 'இஃது யாது?" என்னும் ஆராய்ச்சி தோன்றும். எடுத்துக்காட்டாக, கண் வாயிலாக 'இஃது ஓர் உருவம் தோன்றுகிறது, என உணர்ந்த பின்பு 'அதனை இன்னதென உணர்தல் வேண்டும்' என்ற எண்ணம் தோன்றினால், 'இவ்வுருவம் யாது?' என்ற ஆராய்ச்சி          உண்டாகும். அப்பொழுது, 'இது குற்றியோ? அல்லது மனிதனோ? என்ற ஐயப்பாடுகள் உண்டாகும். (குற்றி! என்பது பசுக்கள் நிற்குமிடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல். அது சில வேளைகளில் ஆள் போலத் தோன்றும்). 'குற்றியோ' என உடன்பாட்டு வகையில் எண்ணுவது ‘சங்கற்பம்' என்றும், இல்லை என்று அதனை எதிர் மறுத்து எண்ணுவது 'விகற்பம்' என்றும் சொல்லப்படும். இச்சங்கற்ப விகற்பங்களாகிய ஐயப்பாடு ஐயக்காட்சியாகும்.


ஐயப்பாடு நிகழ்ந்த பின்னர், இதனை இன்னதெனத் துணிதல் வேண்டும் என்ற ஓர் எழுச்சி உண்டாகும். அப்பொழுது அப்பொருள் ஐந்து வகையில் வகுத்து உணரப்பட்டு, 'இஃது இன்னது' எனத் துணியப்படும். அவை ”பெயர், சாதி, குணம், தொழில், உடைமை” என்பன. அவ்வைந்து வகையில் வகுத்துணரப்பட்ட உருவம் மனிதனாயின், 'இவன் சாத்தன், மனிதன், கரியன், கடுநடையன் குழையினன்' என்றாற்போல உணர்தலாம். இவ்வாறு வேறு வேறு வகையில் பகுத்து உணர்தல் பற்றியே, இச்சிறப்புணர்வு, 'சவிகற்பக்காட்சி' என்றும், இவ்வாறு உணராத பொதுஉணர்வு ’நிருவிகற்பக்காட்சி' என்றும் சொல்லப்படுகின்றன. 


சவிகற்பம் வேறுபாட்டோடு கூடியது. நிருவிகற்பம்-வேறுபாடு இல்லாதது. (விகற்பம்- வேறுபாடு). சில சமயங்களில் வேறு பொருட்குரிய பெயர் முதலியவற்றை, காணப்பட்ட பொருட்குரியனவாகக் கருதுதலால், குற்றியை மனிதன் என்றும், மனிதனைக் குற்றியென்றும் மாறித் எண்ணக் கூடும். அது திரிவுக்காட்சி யாகும். ஐயக்காட்சியும், திரிவுக்காட்சியும் குற்றமுடையன. அதனால், அவை பிரமாணமாகாது. பொருள்களை அவ்வவற்றிற்குரிய பெயர் முதலியவற்றால் சவிகற்பமாக உள்ளவாறு உணர்தலே உண்மைக் காட்சி. அதுவே பிரமாணமாகும்.


தன் வேதனைக் காட்சி


பொருள்களை, வாயிற்காட்சியால் நிருவிகற்பமாகவும், மானதக் காட்சியால் சவிகற்பமாகவும் உணர்ந்த பின்னர், அப்பொருளில்  மீது       உணர்வு உண்டாகுமாயின், இன்ப நுகர்ச்சியோ அல்லது துன்ப நுகர்ச்சியோ உண்டாகும். அந்த நுகர்ச்சி உணர்வே தன்வேதனைக் காட்சியாகும். 'வேதனை என்பதை நாம், 'துன்ப அனுபவம்' என்ற பொருளில் வழங்கினும் அது, துன்ப அனுபவம், இன்ப அனுபவம் இரண்டிற்கும் பொதுவேயாகும்.


 யோகக்காட்சி


மேற்கூறிய, வாயிற்காட்சி முதலிய மூன்றும் எல்லாருக்கும் நிகழ்வன. யோகக் காட்சி, அவ்வாறின்றிச் சிலர்க்குமட்டுமே நிகழும். அஃதாவது, யோக நெறியில் உள்ள 'இயமம், நியமம் முதலிய எண்வகை நிலைகளில் நின்று, அவற்றின் முடிந்த நிலையாகிய, 'சமாதி' என்னும் நிலை கைவரப்பெற்றவர்களுக்கே நிகழும் என்பதாம். இவர்கள் உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் கட்டுக்களை  சிறிது நெகிழ்த்துக் கொள்ளுதலால், ஏகதேச உணர்வு சிறிது நீங்கி, வியாபக உணர்வு சிறிது உண்டாகும். அதனால் அவர்கள் ஒருகாலத்தில், ஓர் இடத்தில் இருந்தே, எக்காலத்திலும் எல்லா இடத்திலும் உள்ள பொருள்களை உணர வல்லவராவர். அவ்வாறு உணரும் உணர்வே யோகக் காட்சியாகும். நம்மால் உணர முடியாத பலவற்றை முனிவர்கள் தம் யோகக் காட்சியால் உணர்ந்து நமக்கு நூல்கள் வாயிலாகச் சொல்லியிருத்தல் போன்றாகும்.


இவையே வாயிற்காட்சி முதலிய நால்வகைக் காட்சியளவைகளின் இயல்பாகும்.



கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு


0 comments:

Post a Comment