சிவாலயங்களில் நடராஜப் பெருமான் சந்நிதிக்குச் செல்லும் பொழுது இனம் புரியாத ஒரு உணர்வு வந்து ஆட்கொள்வதை சிவவழிபாட்டில் இருக்கும் அனைவரும் உணர்ந்திருப்போம். ஒருவித ஆனந்தம், ஒருவித பெருமிதம், ஒருவித ஆச்சரியம், ஒருவித பயம், ஒருவித வேதனை, ஒருவித உவகை, ஒருவித அன்பு என்று பலவிதமான உணர்வுகள் கலந்து வந்து உள்ளம் உருக கண்களிலிருந்து கண்ணீர் பெருகும். மற்றவர்கள் அறியாவண்ணம் கண்ணீரைத் துடைத்து விட்டு நடராஜப் பெருமானை மனம் நெகிழ வழிபட்டு மகிழ்வோம். ஒவ்வொரு முறையும் நடராஜப் பெருமானை வழிபடும் பொழுது, இந்த உணர்வு மேலும் மேலும் அதிகரிப்பதை நம்மால் உணரமுடியும். ஏன் இப்படி? நடராஜப் பெருமானின் திருமேனியில் அப்படியென்ன மாயாஜாலம் இருக்கிறது? ஏன் நம் உள்ளம் உருகுகிறது? நம் கண்களிலிருந்து வழியும் அந்த கண்ணீருக்குக் காரணம்தான் என்ன? சாத்திரம் என்ன சொல்லுகிறது?
1) திருக்கூத்து அனுபவம்:
திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்ளும் மகாவிஷ்ணு, ஒருமுறை அப்படி பள்ளி கொள்வதைத் தவிர்த்து, சிவபக்தி மேலிட, அரகர சங்கர என்று போற்றி, சிரசின்மேல் கரங்களைக் குவித்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் அருவியென பொழிய, காற்றின் முன் தீபம் அசையாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி வீற்றிருந்தார். அதைக் கண்டு திருமகள் திகைத்து நின்றாள். ஆதிஷேஷனோ, தம்மீது பள்ளி கொள்ளாமல் திருமால் தவிர்க்கிறார் என்று தவிதவித்தார்.
சிறிது நேரம் சென்றதும் செங்கன் நெடுமாலும் தன் திருவிழிகளை மலர்த்த, பணிந்து நின்ற ஆதிஷேசனிடம், தாருகாவனத்தில் தமக்கு ஏற்பட்ட திருக்கூத்து தரிசனத்தை விவரிக்க, கேட்ட மாத்திரத்திலேயே அனுபவம் கிடைக்கப்பெற்றார் ஆதிஷேசன். அதைக்கண்ட நெடுமாலும், இனி இவர் தமக்கு பாயலாக இருத்தல் முறை இல்லை. சிவதொண்டில் ஈடுபடுதலே சரி என்று ஆதிஷேசனிடம் விடைகொடுக்க, ஆதிசேஷனும், பதஞ்சலி முனிவராய், சிவபெருமானை நோக்கி தவம் செய்து, வியாக்கரபாதரோடு சேர்ந்து தில்லையில் திருக்கூத்தை தரிசிக்கப்பெற்றார். இது ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் அருளிச் செய்த கோயில் புராணத்தில் பதஞ்சலி சருக்கத்தில் வருகிறது.
நாதனின் அந்த நடனத்தை மூன்று வகைகளில் தரிசிக்கலாம் என்கிறது மெய்கண்ட சாஸ்திர நூலான உண்மைவிளக்கம். திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானத்தின் பரமாச்சாரியரான ஸ்ரீ மெய்கண்ட சிவத்தின் நேரடிச் சீடரான ஸ்ரீ திருவதிகை மனவாசகம் கடந்தார் அவர்கள் அருளிச் செய்த உண்மைவிளக்கம் என்ற சித்தாந்த சாஸ்த்திரநூல் இறைவனின் இந்த மூவகை நடனத்தை விவரிக்கிறது. மெய்கண்ட சாஸ்த்திர நூல்கள் பதினான்கில் உண்மைவிளக்கம் மட்டுமே நாதன் நடனத்தை விரிவாகச் சொல்லுகிறது.
தோற்றமில் காலத்தில், அநாதிகேவலநிலையில், அறிவற்ற பொருள் போல, பாடாணம் போல கிடந்த உயிர்களாகிய நம்முடைய ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி என்ற மூன்று சக்திகளும், ஆணவமலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டிருந்தன. நம் மீது கொண்ட பேரன்பினாலும், பெரும்கருணையினாலும், இந்த நிலையிலிருந்து நம்மை மீட்டெடுக்க, தனக்கென ஊரும், பெயரும் உருவமும் ஒன்றும் இல்லாத பெருமான், திருக்கூத்து இயற்றும் கோலம் கொள்கிறான். இறைவனின் இந்த திருநடனக் கோலம் அவனது முழுமுதற்தன்மையையும், பரிபூரண அனுக்கிரக நிலையினையும் குறிக்கிறது.
2) திருகூத்து இயற்றும் கோலம்:
இறைவனுக்கு அவனுடைய திருவருளே அதிசூக்கும வடிவு. இறைவனின் அருட்சக்தியால் வியாபிக்கப்பட்டு செலுத்தப்படும் உயிர்களாகிய நாம், அவனின் சூக்கும வடிவம். ஓங்காரத்தோடு கூடிய திருவைந்தெழுத்து அவனின் தூல வடிவம். திருக்கூத்து இயற்றும் பொழுது அவன் திருவைந்தெழுத்தால் உருக்கொள்கிறான்.
அவனது அங்கம் எப்படி அமைந்திருக்கிறது தெரியுமா?
உயிர்களை ஆட்கொள்ளும் திருவடி - ந காரம்
திருவயிறு - ம காரம்
உயர்ந்த திருத்தோள் - சி காரம்
வேதாகமங்களை அருளிய திருமுகம் - வ காரம்
திருமுடி - ய காரம்
அவனது பிரத்தியங்கம் எப்படி அமைந்திருக்கிறது தெரியுமா?
துடி சேர்க்கும் திருக்கரம் - சி காரம்
வீசுங்கரம் - வ காரம்
அபயகரம் - ய காரம்
அக்னி ஏந்திய திருக்கரம் - ந காரம்
ஊன்றிய திருவடி - ம காரம்
அவனுக்கு உபாங்கமாக அமைந்திருக்கும் திருவாசி ஓங்காரம். அந்த திருவாசியில் அமைந்திருக்கும் சுடர்கள் மாத்ருகா மந்திரங்கள். அந்த பிரணவத்தை விட்டு நீங்காத பஞ்சாக்கரமே உள்ளொளி. “ஓம்” என்னும் அமைப்பைக் கொண்ட திருவாசியின் உள்ளொளியாக விளங்கும் அம்பலவாணனின் வடிவம் ஐந்தெழுத்தாக காட்சி அளிக்கிறது. ஆக, “ஓம்” என்னும் மந்திரமும், பஞ்சாக்கரமும் ஒன்றே. ஓங்காரம் உலகை இயக்கும் பஞ்சாக்கரம். “சிவாயநம” உயிரை இயக்கும் பஞ்சாக்கரம்.
ஐந்தெழுத்து மந்திரம், அம்பலவாணனின் ஐந்தொழில்களை குறிக்கிறது.
துடி சேர்க்கும் திருக்கரம் - சி காரம் - படைத்தல்
அபயகரம் - ய காரம் - காத்தல்
அக்னி ஏந்திய திருக்கரம் - ந காரம் - அழித்தல்
ஊன்றிய திருவடி - ம காரம் - மறைத்தல்
வீசுங்கரம் - வ காரம் - அருளல்
இப்படி, ஐந்தெழுத்தையே திருமேனியாகக் கொண்டு, உயிர்களாகிய நம் துன்பமான பிறப்பு இறப்பு நீங்குவதற்காக, நாதத்தின் முடிவில், திருவைந்தெழுத்தால் திருஉருக் கொண்டு, தன் திருவடியை ஊன்றி, திருநடனம் புரிக்கிறான், ஐந்தொழில் புரிக்கிறான் நாதன்.
3) இறைவன் புரியும் ஐந்தொழில்:
எப்பொழுது ஐந்தொழில் புரிகிறான்? உயிர்கள் வேறுபட்ட பக்குவ நிலையிலிருக்கும்போது செய்கிறான். அது என்ன வேறுபட்ட பக்குவ நிலை? கேவல நிலை, சகல நிலை, சுத்த நிலை என்ற மூன்று நிலைகள். இதில் கேவல நிலையில் இருக்கும் போது சூக்கும ஐந்தொழிலும், சகல நிலையில் இருக்கும்போது தூல ஐந்தொழிலும், சுத்த நிலையில் இருக்கும்போது அதிசூக்கும ஐந்தொழிலும் புரிகின்றான். இது மட்டும்தானா? அறிகரணங்களில் ஐந்தொழில், உட்கரணங்களில் ஐந்தொழில், சமாதியில் ஐந்தொழில், முத்தியில் ஐந்தொழில் என்று உயிர்களுக்காக ஐந்தொழில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான். எங்கு நிகழ்த்துகின்றான்? உயிர்களிடத்திலும், சடப்பொருள்களிடத்திலும் நிகழ்த்துகின்றான். எதற்காக நிகழ்த்துகின்றான்? உயிர்கள் உன்னத நிலையை அடைய வேண்டும், உயிர்கள் வேண்டியதை வேண்டியவாறு பெற வேண்டும் என்ற பெரும் கருணையால் நிகழ்த்துகின்றான்.
தோற்றமில் காலத்தில், உயிர் தன்னையும் அறியாமல், தன்னை மறைத்திருக்கும் ஆணவமலத்தையும் அறியாமல், மாயையையும் அறியாமல், வினையையும் அறியாமல், உருவத்தையும் அறியாமல், நிகழ்வையும் அறியாமல், ஏன் எந்த விதப் பொருளையும் அறியாமல், போக்கும் வரவும் இல்லாமல் முடமாகக் கிடந்தது. அந்த நிலையிலிருந்து உயிர்களை மீட்டெடுக்க சூக்கும ஐந்தொழில் நிகழ்த்துகின்றான். ஐந்தொழில் என்றால் “படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்” என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அது என்ன கேவல நிலையில் ஐந்தொழில்?
அ) சூக்கும ஐந்தொழில்:
படைத்தல் : கேவல நிலையில் இருக்கும் உயிர்கள் சகல நிலைக்குச் செல்வதற்கான பக்குவத்தை, பரிபாகத்தை அடைந்திருக்கின்றனவா என்பதை இறைவன் சங்கல்பத்தினால் அறிவது படைத்தல்.
காத்தல் : சகல நிலைக்குச் செல்வதற்கான பக்குவத்தை, பரிபாகத்தை அடையவில்லை என்பதை உணரும் இறைவன், அந்த உயிர்களை பக்குவம் அடையும் வரை கேவல நிலையில் நிலைபெற வைத்தல் காத்தல்.
அழித்தல் : பக்குவமடைந்த உயிர்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை சகல நிலைக்குக் கொண்டு செல்வதற்காக, கேவல நிலையிலிருந்து நீக்குதல்.
மறைத்தல் : பரிபக்குவம் அடையாத உயிர்கள், தாம் கேவல நிலையில் இருக்கிறோம் என்று உணர முடியாதவாறு இருக்கச் செய்தல்.
அருளல் : கேவலத்தில் இருக்கும் உயிர்களின் பரிபக்குவம் அறிந்து அவற்றைச் சகலத்தில் தோற்றம் பெற விடுத்தல்.
இப்படி உயிர்கள் எல்லாவற்றிருக்கும் எது சரி என்பதை அறிந்து இறைவன் அந்தந்த உயிர்களை அந்தந்த நிலைகளில் நிலைப்பெற்றிருக்கச் செய்யும் தொழிலைச் செய்கின்றான். இது கேவல நிலையில் இருக்கும் உயிர்களுக்காகச் செய்யும் ஐந்தொழில்.
கேவல நிலையிலிருந்து சகல நிலைக்குக் கொண்டு வந்து தோற்றம் பெறச் செய்கின்றான். அந்தத் தோற்றத்திலிருந்து காத்தலையும், அழித்தலையும், மறைத்தலையும், அருளலையும் செய்கின்றான். இது உயிர்களுக்காக, உடல், உலகம், கருவி ஆகியவற்றில் இறைவன் செய்யும் ஐந்தொழில். இதைத்தான்,
“ தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் “ என்கிறது சிவஞானபோதம்.
“ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய். போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்” என்கிறார் மாணிக்க வாசகப்பெருமான்.
“மலப்பரிபாக தாரதம்மியத்திற்குத் தக்கபடி அறிவிக்கத் தக்கவர்களை அறிவித்துக் கொண்டும், திரோதான சக்தியால் மறைக்கத் தக்கவர்களை மறைத்துக் கொண்டும், உயிர்களின் கன்மங்களைப் பக்குவப்படுத்திக் கொண்டும், மாயா காரியங்களை வெளிப்படத் தகுந்தவைகளாகச் செய்து கொண்டும், தோன்றுதற்குரிய சடமும் சித்துமாகிய எல்லாப் பதார்த்தங்களையும் பார்த்துக் கொண்டுமிருக்கிறார்” என்கிறார் சிவஞான மாமுனிவர் சிவஞான பாடியத்தில்.
இனி, சகல நிலையில் நடக்கும் தூல ஐந்தொழில் பற்றி பார்க்கலாம்.
ஆ) தூல ஐந்தொழில்:
படைத்தல் : உயிர்கள் தாம் புரிந்த வினைகளை அனுபவித்துக் கழிப்பதற்க்கென, தனு கரண புவன போகங்களை மாயையிலிருந்து தோற்றுவித்தல்.
காத்தல் : தோற்றவிக்கப்பட்டவற்றை நிலைப்படுத்தி, உயிர்களின் நன்மைக்காக அவற்றை காத்து நிற்றல்.
அழித்தல் : உயிர்கள் தாம் புரிந்த வினைகளை அனுபவிக்கும் போது ஏற்படும் களைப்பையும் இளைப்பையும் போக்கி, மீண்டும் அவ்வினைகளை புதுத் தெம்புடன் அனுபவிப்பதற்காக, மாயையில் தோன்றிய தனு கரண புவன போகங்களை அழிப்பது. அழிக்கப்படுவது மாயையில் தோன்றிய தனு கரண புவன போகங்கள் மட்டும்தான். மாயையும் அழிவதில்லை. உயிர்களும் அழிவதில்லை. வினைகளும் இந்த நிலையில் அழிவதில்லை. ஒடுக்கம் என்று சைவ சித்தாந்தம் சொல்லுவது இதைத்தான்.
மறைத்தல் : உயிர்கள் சகலத்தில் இருக்கும்போது அனுபவிக்காமல் மீதி இருக்கும் வினைகளையும், வினைப்பயன்களையும் மாயையோடு சேர்த்து சூக்கும தேகத்தோடு மறைத்து வைத்தல்.
அருளல் : அப்படி ஒடுக்கத்தில் இருந்த தனு கரண புவன போகங்களை மீண்டும் தோற்றுவித்தல் அருளல். ஒடுக்கத்தின் போது உறக்க நிலையிலிருந்த உயிர்களையும் வினைகளையும் மீண்டும் பொருந்த வைத்து, அவற்றை உயிர்கள் அனுபவித்துக் கழிப்பதற்கான ஆற்றலைக் கொடுப்பது அருளல். “எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” என்ற இளைப்பை ஆற்றி மீண்டும் வினைகளை அனுபவிப்பதற்கான உற்சாகத்தைக் கொடுப்பது அருளல்.
இந்த தூல ஐந்தொழிலின் போது என்ன நிகழும்? “ சடமதனில் சிருட்டி திதி சங்காரம் நிகழும். தருமுயிரில் திரோபவம் அனுக்கிரகம் தங்கும்” என்கிறார் போரூர் சிதம்பர ஸ்வாமிகள் பஞ்சாதிகாரம் என்ற நூலில்.
அடுத்து சுத்த நிலையில் நடக்கும் அதிசூக்கும ஐந்தொழில்.
இ) அதிசூக்கும ஐந்தொழில்:
படைத்தல் : உயிர்களுக்கு மெய்ப்பொருளை உணர்த்துதல். உண்மைப் பொருளை அறிவித்தல்.
காத்தல் : உயிர் தான் உண்மை என்று அறிந்த அந்த மெய்ப்பொருளில் அழுந்தி நிற்றல்
அழித்தல் : முன்பு சகல நிலையில் உயிர்கள் இருந்த போது அறிந்திருந்த பாச பசு அறிவை நீக்கி பதியறிவை பதிக்கச் செய்தல். வைராக்கியமாக நிற்றல்.
மறைத்தல் : ஒன்றினை அறிய வேண்டும் என்ற நிலையில் இன்னொன்றை அறிய விடாது மறைத்தல்.
அருளல் : அறிந்தவற்றை அனுபவிக்கச் செய்தல் .
இப்படி இறைவன் கேவலம், சகலம், சுத்தம் என்ற மூன்று நிலைகளிலும் நம்முடன் ஒன்றாய் உடனாய் வேறாய் நின்று அருள்பாளிக்கின்றான்.
4) திருகூத்து தரிசனம்:
அவனுடைய திருக்கூத்தின் இயல்பை யான்-எனது என்ற செருக்கு அற்றவராலேயே அறிய முடியும். இதனை அறிந்து தரிசிப்போர்கள் பிறப்பறுப்பது நிச்சயம். அவனுடைய திருக்கூத்து உயிர்கள் உலக இன்பங்களை அனுபவிப்பதற்கும் துணை செய்கிறது; உலகை விட்டு வீடுபேறு அடைவதற்கும் துணை செய்கிறது. இந்த இரண்டு நிலைகளிலும் ஒரே நடனம் துணை செய்வதால், உலகியல் இன்பத்துக்காக செய்யும் பொழுது ஊன நடனம் என்றும், வீடுபேறு அடைவதற்குத் துணை செய்யும் பொழுது ஞான நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஐந்தெழுத்து மந்திரத்தில் ‘சிவ’ என்பது ஞான நடனத்தையும், ‘நம’ என்பது ஊன நடனத்தையும் குறிக்கிறது. ‘ய’ என்னும் உயிர், அவ்விரு கூத்தின் பயனையும் நுகரும்.
சகலவர்க்கத்தில் உள்ள உயிர்கள் பக்குவம் அடைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நடனம் ஊன நடனம். பக்குவம் அடைந்து சத்திநிபாதம் பெற்றவர்களை ஞானத்துள் செலுத்துவதற்காக நடத்தப்படும் நடனம் ஞானநடனம். பரமுத்தி நிலையில் உள்ள உயிர்களை பேரின்பத்தில் அழுத்தி வைப்பதற்காக நடத்தப்படும் நடனம் ஆனந்த நடனம்.
அ) ஊன நடனம்:
உலகியல் இன்பத்துக்காக செய்யும் நடனம் ஊன நடனம் என்று அழைக்கப்படுகிறது. ஞானம் இல்லாத, பக்குவம் இல்லாத உயிர்கள் பக்குவம் அடைய வேண்டும் என்ற கருணையுடன் இறைவன் ஆடும் நடனம் ஊன நடனம். அந்த ஊன நடனத்தின் பொழுது ஐந்தொழில் எவ்வாறு நிகழ்கிறது என்பதை உண்மை விளக்கத்தின் 35 வது பாடல் விவரிக்கின்றது.
தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்முத்தி
நான்ற மலப்பதத்தே நாடு. (உ. வி : 35)
இறைவனின் ஊன நடனத்தில், உடுக்கை ஏந்திய திருக்கரம் படைத்தல் தொழிலையும், அமைந்த திருக்கரம் காத்தல் தொழிலையும், அக்னி ஏந்திய திருக்கரம் அழித்தல் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளல் தொழிலையும் குறிக்கிறது.
ஆ) ஞான நடனம்:
இறைவன், உயிர்கள் வீடுபேறு அடைய வேண்டும் என்ற கருணையுடன் நிகழ்த்துவது ஞான நடனம். அந்த நடனத்தின் பொழுது ஐந்தொழில் எவ்வாறு நிகழ்கிறது என்பதை உண்மை விளக்கத்தின் 36 வது பாடல் விவரிக்கின்றது.
மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தான்எடுத்து – நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பாதம் தான். (உ. வி : 36 )
உடுக்கை ஏந்திய திருக்கரம் , மாய மலத்தை நீக்கும் தொழிலைச் செய்கிறது. பக்குவம் அடைந்த உயிர்களின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்கச் செய்கிறது. நெருப்பு ஏந்திய திருக்கரம் கன்ம மலத்தைச் சுடும் தொழிலைச் செய்கிறது. அந்த உயிரின் தொல்வினைகள் மீண்டும் முளைக்க முடியாதபடி சுட்டு எரிக்கிறது. ஊன்றிய திருவடி ஆணவமலத்தின் வலிமை கெடச் செய்யும் தொழிலைச் செய்கிறது. ஆணவமலத்தின் இரண்டு சக்திகளையும் (ஆவாரக சத்தி & அதோநியமிகா சத்தி) வலிமை இல்லாமல் ஆக்குகிறது. தூக்கிய திருவடி பேரின்பம் அருளுதல் தொழிலைச் செய்கிறது. சகலம் கேவலம் என்று ஏறியும் இறங்கியும் சுழன்று வந்த உயிரை, தடுத்தாட்க்கொண்டு, அவற்றில் மீண்டும் விழாதபடி தடுக்கிறது. அமைந்த திருக்கரம் இந்த பேரின்பத்தில் உயிரை அழுத்தும் தொழிலைச் செய்கிறது. ஆனந்த நிலையில் என்றும் நிலைபெறும்படிச் செய்கிறது. இப்படி பாசநீக்கம், வீடுபேறு என்று ஞானத்தொழில்கள் இரண்டையும், ஐந்து வகைகளில் செய்யும் இந்த நடனம் ஞான நடனம் என்று அழைக்கப்படுகிறது.
இ) ஆனந்த நடனம்:
ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களும் நீங்கி, யான் எனது என்ற செருக்கு அற்ற நிலையில் உள்ள, ஞானவரம்பின் உச்சமான மோன நிலையில் உள்ள மாமுனிவர்கள், சிவானந்த அமுதத்தை வாரி வாரி கண்களால் அருந்தி பேரின்பத்தில் திளைக்க வேண்டும் என்பதற்காக வெளியே புலப்பட நின்று ஆடுதலே திருவருளையே காணும் வடிவமாகக் கொண்ட அம்பலத்தான் கூத்து ஆனந்த நடனம்.
மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தான்அந்தம் ஆனஇடத்தே தங்கியிடும் – ஆனந்தம்
மொண்டுஅருந்த நின்றுஆடல் காணும்அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து.
மோனந்த மாமுனிவர்களின் உள்ளத்தில் விளங்கும் ஞானமே அம்பலம். அங்கு பொங்கி எழும் பேரின்பமே சிவம். அப்படி பொங்கி வரும் சிவஞானத்தை, ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக, குணம் ஒரு மூன்றும் சாத்துவீகமேயாக கண்டு மகிழும் நடனம் அது. காண்பான், காணப்படும் பொருள், காட்சி என்ற மூன்றும் மறைந்து அந்தமில்லா ஆனந்தம் ஒன்று மட்டுமே அங்கு நிலைபெறுகிறது. ஆனந்தம் என்பது விவரிக்கவோ விளக்கவோ எடுத்துக் கூறவோ முடியாத உள்ளத்தின் ஒருநிலை. மேல் மனதில் ஏற்படும் மகிழ்ச்சி, இன்பம் போன்ற உணர்ச்சி அல்ல இது. இந்த ஆனந்தம் சித்தத்தில் தித்திப்பது. நம்முடைய முயற்சியால் இதைத் தோற்றுவிக்கவோ, உள்ளே செலுத்தவோ முடியாது. அவன் தோற்றுவிக்க அனுபவிக்கும் ஆனந்தம் இது. கட்புலன்களுக்கு உட்படாத ஆனந்தம் என்னும் பண்பு வெளிப்பட்டுத் தோன்றும் வடிவம் இது.
வாக்காலும் மனதாலும் அளந்து அறியப்பட முடியாத ஒப்பற்ற பரம்பொருள், தன் திருவருளையே ஆடல் அரங்காகக் கொண்டு, நாம் உய்வடைய வேண்டும் என்ற பெரும் கருணையால் திருநடம் புரிகிறான். திருவைந்தெழுத்தை அருள் திருமேனியாகக் கொண்டு ஆடுகிறான். அவனுடைய அருள் ஆகிய அன்னை காண திருநடனம் ஆடுகிறான். அந்த ஆட்டத்தை நம் பொருட்டு தரிசித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை. அத்தகையதொரு திருக்கூத்தை, சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, உணர்ந்து, விரும்பித் தொழுபவர்களுக்கு மீண்டும் பிறப்பில்லை என்கிறது.
சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
கட்டுரையாளர்: சிவத்திருமதி. உமாபாரதி, சைவ சித்தாந்த பேராசிரியர், திருவாவடுதுறை ஆதீனம்- செங்கல்பட்டு மையம்.

0 comments:
Post a Comment