வீட்டில் அரிசி பையை வாங்கி அதை அவிழ்ப்பது ஒரு அழகியல் தருணம். பையின் ஒரு மூலையில் ஒரு முடுச்சு இருக்கும். அதை "ஒழுங்காக" பிரித்தால் போதும். மொத்த பையும் சரசரவென பிரிந்து விடும். ஆனால் அப்படி பிரிக்கவில்லை என்றால் அவிழ்ப்பது சிரமமாகத் தோன்றும். கலை, தத்துவம், எல்லாம் அப்படித்தான் என்று தோன்றும். தத்துவத்தை சரியான பார்வையில் பார்க்க தொடங்கிவிட்டோம் என்றால் அது பை அவிழ்வது போல் புலப்படத் தொடங்கி விடும்.
தமிழ்நாட்டில் தோன்றிய சைவ சித்தாந்தம் என்ற முழுமை படுத்தப்பட்ட தத்துவம், காலத்தால் பின் வந்தது . அது பல தத்துவத்தின் சாரத்தை எடுத்தும், விடுத்தும் மேலெழுந்து ஒரு முழுமை நோக்கோடு காட்டுகிறது. அந்த சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளையும், அதன் உள்ளார்ந்த பார்வைகளையும் அறிமுகம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தோம். பல்வேறு நபர்கள் பலவாறாக எழுதியும் பேசியும் வந்திருக்கின்றனர். இன்றும் வந்துகொண்டு இருக்கின்றனர்.
அதன் நீட்சியாக சித்தாந்த அறிஞர்களின் அறிமுகங்கள், தொடர்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், பழைய சிந்தாந்த அறிஞர்கள் எழுதிய முக்கிய நூல்களை நவீன மொழிநடைக்கு மறு ஆக்கம் செய்தல், என்று இந்த இதழ் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இதழை தமிழ்நாட்டில் முதன்மை சிந்தாந்த அறிஞர்களில் ஒருவராகிய அ.வே. சாந்திகுமார சுவாமிகள் அவர்களின் திருக்கரங்களால் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த இதழை "தொடர்ந்து " படித்து வருபவர்களுக்கு சைவசிந்தாந்தம் பற்றின ஒரு முழுமையான பார்வை நிச்சயம் வரக்கூடும்.
'மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்'
இதழ் ஆசிரியர்கள்
செ.பவித்ரா
உ.முத்துமாணிக்கம்
தொடர்புக்கு
siddhantham.blog@gmail.com