Tuesday, September 16, 2025

துரியம் கடந்த சுடர் - 5 - அருணாச்சலம் மகாராஜன்

துரியம் கடந்த சுடர் 1
துரியம் கடந்த சுடர் 2
துரியம் கடந்த சுடர் 3
துரியம் கடந்த சுடர் 4

[1]

எழுத்தாளர் ஜெயமோகன் அவ்வப்போது கட்டண உரைகள் நிகழ்த்துவார். ஏதேனும் ஒரு மைய கருத்தை வைத்துக் கொண்டு அரங்கில் பேசப்பேச அவற்றை விரிவாக்கி, ஒன்றில் இருந்து மற்றொரு கருத்து எனத் தொட்டு தொட்டு விரிந்து செல்லும் பேச்சு, முடிக்கையில் ஒரு பெருங்கோலம்  நம்முன் தீட்டியிருக்கும். வெறும் ஐந்து அல்லது ஆறு வரி குறிப்புகளுடன் தான் அவர் அரங்கிற்கே வருவார். மீதி அனைத்தும் அரங்கில் இருக்கும் நம்முன், அங்கேயே சிந்தித்து அங்கேயே நிகழும். பேச்சு என்ற ஊடகத்தின் மூலம் பார்வையாளர்கள் முன், பார்வையாளர்களின் முழுமையான கவனத்தையும், உற்சாகமான பங்கேற்பையும் கோரும் கதகளி போன்றதொரு செவ்வியல் நிகழ்த்துக் கலை அந்த உரைகள். மானசீகமாக அரங்கில் உள்ள ஒவ்வொருவருடனும் உரையாடுவார் அவர்.

அப்படி அவர் ஆற்றிய உரைகளில் தனித்துவமான ஒன்று “உரு அரு அருவுரு” என்பது. அதில் இவ்வுலகில் மானுடம் கண்டடைந்த ‘வடிவம்’ என்ற கருத்துரு பற்றி ஆராய்கிறார். வடிவம் என்பது அறிவுடைய மானுடத்தால் உருவாக்கப்பட்டதா அல்லது இயல்பாகவே பிரபஞ்சத்தில் வடிவம் என்பது இருக்கிறதா என்ற கேள்வியில் துவங்குகிறது அவ்வுரை. அதன் பதில் குறைந்தது ஒரு வடிவம் இயற்கையிலேயே இருக்கிறது என்பதே. அது வட்டம் மற்றும் அதன் முப்பரிமாணமான கோளம்.

மண்ணைத் தொட்டுக் கொண்டு, காற்றில் ஆடும் ஒரு முட்கிளை மண்ணில் வரைவது வட்டத்தைத் தானே. கரையான் குழி எடுத்தால் உருவாவதும் வட்டம் தானே. வீழும் எந்த நீர்மையும் தேர்ந்தெடுப்பது கோளத்தைத் தானே. நிறை என்ற ஒன்று இப்புடவியில் உருவான காலத்தில் இருந்தே இயல்பாக கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் முதல் விசும்பில் உலவும் பெரும் நட்சத்திரங்கள் வரை எடுக்கும் வடிவும் கோளம் தானே. கோள்கள் தாங்கள் இருக்கும் நட்சத்திரக் குடும்பத்தின் நட்சத்திரத்தையும், அந்த நட்சத்திரங்கள் தாங்கள் இருக்கும் தாரகைத் தொகுப்பின் மையத்தையும் சுற்றி வரும் பாதையும் இயல்பாகவே வட்டத்தின் மாறுபாடுகள் தானே!! இவை மானுடம் இருக்கும் இக்காலத்திலும், இல்லாமல் இருந்த பல கோடி வருடங்களிலும் அப்படியே தானே இருந்திருக்கும்.

அவ்வாறெனில் இவ்வடிவங்கள் ஒரு அறிவார்ந்த உயிரால் கண்டடையப்படவில்லை. பிரபஞ்சத்திலே அதன் தன்னியல்பாகவே உருவானவை என்ற முடிவிற்கு வரலாம். இப்போது ஒரு கேள்வி, ஏன் வட்டம் அல்லது கோளம் போன்ற சுழற்சியின் வடிவத்தை இந்த பிரபஞ்சம் தேர்ந்தெடுத்தது என்பதல்ல? மாறாக இப்பிரபஞ்சம் விரும்பினால், அப்படி ஒரு வாய்ப்பு அல்லது சக்தி அதற்கு இருக்குமெனில், இந்த சுழற்சியின் வடிவை அதால் மாற்ற இயலுமா? இன்றிலிருந்து வட்டம் அல்ல சதுரமும், கனசதுரமுமே என் அடிப்படை வடிவங்கள் என இப்புடவியால் முடிவெடுக்க இயலுமா?

இப்போது நாம் அறிந்திருக்கும், நாம் இருக்கும் பிரபஞ்சத்தால் அது இயலவே இயலாது. அப்படியெனில் பிரபஞ்சம் இயங்குவதற்கென குறைந்தபட்சம் ஒரு மாறவே இயலாத விதி என ஒன்று உள்ளது. அந்த விதியை மானுட அறிவு சென்று சந்தித்த புள்ளியில் தோன்றியது தான் π என்னும் கணித குறியீடு. வட்டத்தை, கோளத்தை, சுழற்சியை வழிநடத்தும் விதி இந்த ‘π’ என்னும் குறியீட்டில் தான் ஒளிந்துள்ளது. இந்த எண் ஒரு முடிவிலி என்பது பிரபஞ்சத்துடனான அதன் தொடர்பை நமக்கு உணர்த்திக் கொண்டு இருக்கிறது.

கிபி 1700 களில் துவங்கி பத்தொன்பதாம் ‌ நூற்றாண்டில் வொர்ட்ஸ்வொர்த் போன்ற கவிகளால் விரிவாக்கி எடுக்கப்பட்ட இயற்கைவாதம் நம்மைச் சுற்றி இயங்கும் இயற்கையையும், அதன்‌ இயங்கு விதிகளையும் அன்றிருந்த நிறுவனப் படுத்தப்பட்ட மதங்கள் முன்வைத்த அனைத்தும் அறிந்த, அனைத்தையும் ஆற்றும், அனைத்து வல்லமை பொருந்திய கடவுள் என்பதற்கு மாற்றாக வைத்தது. இயற்கையின் உள்ளுறை இறை என்றது அது. ஓவியன் இங்கு இல்லை.

ஆனால் ஓவியம் நம் முன் உள்ளது. இந்த ஓவியத்தில் எங்காவது ஓரிடத்தில் அவன் கையெழுத்து இருக்கும். ஓவியத்தை அறிவதன் மூலம் அதை வரைந்த ஓவியனையும் அறிய இயலும் என்பது அதன் முதன்மை கருத்துரு. இயற்கைவாதம் என்பது கவிஞர்களின் தரிசனம்.

இதை முழுமையான ஒரு தத்துவ மரபாக வளர்த்தெடுத்தவர் அமெரிக்கரான எமர்சன். அவர் முன்வைத்த ஆழ்நிலைவாதம் இயற்கைவாதத்தின் முழுமையான தத்துவ கட்டுமானத்தை அளித்தது. நம்மைச் சூழ்ந்திருப்பவை வெறும் வெளிப்பாடுகளே. வெளிப்பாடுகளில் ஆழ்ந்து சென்றால் அதில் வெளிப்பட்டுள்ளதை அறியலாம் என்பதே ஆழ்நிலை வாதம். இப்பிரபஞ்சமாக வெளிப்படும் ஒன்று, இங்கிருக்கும் ஒவ்வொன்றின் ஆழத்திலும் உறைந்திருக்கிறது. அதை ஆழ்ந்து சென்று அறிவதே இந்த தத்துவம். இவர்கள் சொல்லும் ஓவியனின் கையெழுத்து ஒரு முக்கியமான படிமம். அப்படிப்பட்ட ஒரு கையெழுத்து தான் ‘π’.

இங்கே ஒவ்வொரு கோளும், நட்சத்திரமும், தாரகைத் தொகுதியும் எண்ணுதற்கெட்டா வேகத்தில் சுற்றிக் கொண்டும், நகர்ந்து கொண்டும் இருக்கின்றன. அவற்றின் சுழற்சியைத் தீர்மானிக்கும் முக்கிய விதியாக இருக்கிறது ‘π’. முன்பே பார்த்தவாறு இந்த பிரபஞ்சத்தாலும் மீற முடியாத ஒரு விதி இந்த ‘π’. அவ்வாறெனில் இந்த விதி பிரபஞ்சத்துக்கு வெளியில் இருந்து இதற்குத் தரப்பட்டிருக்கவே சாத்தியம். இதுவே பிரபஞ்சத்தின் இருப்பிற்குப் பின் ‘ஒன்று’ இருக்கிறது என்பதற்கான சான்று அல்லவா!

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியின் புகழ்பெற்ற பாடலான ‘உருவாய் அருவாய்’ பாடலில் வரும் ‘கதியாய் விதியாய்’ என்னும் வரி நினைவிற்கு வருகிறது. கதி என்னும் வார்த்தைக்கு வேகம், விசை என்பது பொருள். இங்கே இலங்கும் அனைத்து விசைகளாகாவும், அந்த விசைகளை ஆளும் விதிகளாகவும் இருப்பவனே என முருகனைச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

‘π’ போல மேலும் பல பிரபஞ்ச விதிகள் இருக்கின்றன. நிறை, ஈர்ப்புவிசை போன்று. நம் பூமிக்கென பல விதிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு பனிக்கட்டி மிதக்கும், வெப்பமான வாயு மேலே ஏறும். அழுத்தமான இடத்தில் இருந்து காற்று அழுத்தமில்லா இடத்திற்கு பாயும் போன்றவற்றைச் சொல்லலாம். இவையெல்லாம் மாறாதவையே. இவற்றை மானுடம் அறிந்தாலும், மானுடம் என்ற ஒன்றே தோன்றாமல் இருந்தாலும் கூட அவ்வாறே இருக்கக் கூடியவையே.

இவ்விதிகளில் ஒன்று மாறினாலும் கூட இந்த பூமி, புடவி என அனைத்தும் நிலைகுலையும், அழியும். இந்த பிரபஞ்சத்தின் இயக்க விதிகளையும், அவை மீறப்பட்டால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்த மானுடம், தான் தங்கி, தழைத்து வாழ தனக்கும் விதிகளும், நெறிகளும் தேவை என்பதைக் கண்டு கொண்டது. இந்த விதிகள் இங்கே அழியாமல், தங்கி வாழத் தேவையானவை ஆகின்றன.

நாம், நம் குடும்பம், சுற்றம், சமூகம், ஊர், தேசம், பண்பாடு என அனைத்தும் விதிகளால் ஆக்கப்பட்டவையே. விதிகளை சமைப்பவர்களும், அதை ஆள்பவர்களாலும் ஆக்கப்பட்டவையே. விதி சமைத்தல், விதி ஆள்தல், விதியில் வாழ்தல் என்பதே நம் ஒவ்வொருவரின் அன்றாடம். நாம் அமைத்த விதிகள், நம்மால் மீறப்படும் விதிகள், நாமே உருவாக்கும் விதிகள், நாம் விரும்பாத, மீற முயலாத விதிகள், நம்மால் மீளவே முடியாத விதிகள், நாம் அறிந்த விதிகள், நம்மால் அறியவே முடியாத விதிகள் என இங்கனைத்துமே விதிகள் தான். எனவே தான் நம் தமிழ் மானுட வாழ்வின் போக்கை வழிநடத்துகிற, மானுடத்தால் முழுமையாக அறிய இயலாத ஒழுக்கை, அந்த ஒழுங்கை விதி, ஊழ் என்றே அழைத்தது.

இந்த ‘π’ என்பது மானுடம் தோன்றும் முன்பே, இந்த பூமியில் முதல் உயிர் என ஒன்று தோன்றும் முன்பே, அறிவு என ஒன்று இந்த பிரபஞ்சத்தில் செயல்படும் முன்பே உருவானது. அது பிரபஞ்சத்தின் விதி. பிரபஞ்சத்தின் தரப்பில் என்றும் இருந்து கொண்டு இருப்பது. அந்த விதியை மானுட அறிவு சென்று தொடும் போது, அது தன்னை அறியத் தருகிறது. அந்த அறிதலை மானுடம் ‘π’ என்னும் குறியீடாக, ‘பை’ என்னும் பெயராக உருவகித்துக் கொண்டது. ஆம், நம்மால் எதையும் ஒரு பெயராக மட்டுமே அறிய இயலும். பெயரிடப்படவில்லை என்றால் அது அறியப்படவில்லை என்றே பொருள். எனவே தான் மானுடம் தான் அறிந்த ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரை இட்டுவிட்டிருக்கிறது. ‘பை’ என்பதற்குப் பதிலாக ‘கை’ எனப் பெயரிட்டிருந்தாலும் அந்த விதி அவ்வாறே தான் இருக்கும், மாறப்போவதில்லை.

மேற்கூறிய சுழற்சி பற்றிய பிரபஞ்ச விதியை மானுடம் அறிந்து கொண்ட விதத்தில், நம் அறிதல் மற்றும் அறியப்பட்டவை பற்றிய ஒரு முக்கியமான கூறு ஒன்றை நண்பர்கள் கவனித்திருக்கலாம். ‘பை’ என்று மானுடம் அதை அறிந்த தருணம் பிரபஞ்சம் தன் தரப்பில் இருந்து தரும் அறிபடு பொருளும் (இந்த விதி) மானுடம் தன் தரப்பில் இருந்து அளிக்கும் அறிவும் சந்திக்கும் புள்ளியில் நிகழ்ந்தது. இதையே நாம் நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்து அறிதல்களுக்கும் பொருத்திப் பார்க்கையில் இந்த பிரபஞ்சம், இயற்கை உட்பட அனைத்து அறிதல்களும் அறிவும், அறிபடு பொருளும் சந்திக்கும் அந்த புள்ளியில் நிகழ்கிறது என்பதை அறியலாம்.

நாம் மேற்கண்ட விதியைப் போன்ற ஒன்றே அவ்விதியை உருவாக்கி இந்த பிரபஞ்சத்திற்கு அளித்த அந்த ‘ஒன்றும்’. அதையறிய மானுடம் மேற்கொண்ட முயற்சிகளே இங்கு பல்வேறு தத்துவங்களாக, தரிசனங்களாக, சமயங்களாக நிலைபெற்றுள்ளன. நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்திலும் உள்ளுறைந்து, மறைந்து இருப்பதாலேயே அதை மறைந்திருந்தது என்னும் பொருளில் ‘இறை’ என அழைத்தோம். தமிழ் இலக்கணத்தில் நேரடியாக அறியும் பொருளுக்குள், மறைந்து பயின்று வரும் உள்ளுறைப் பொருள் ‘இறைச்சிப் பொருள்’ என்றே அழைக்கப்படுகிறது என்பதை நினைவுகூறலாம். உதாரணத்திற்கு இந்த குறளை எடுத்துக் கொள்வோம்.

ஏதிலார் போல பொதுநோக்கு நோக்குதல்

காதலர் கண்ணே உள

பாடல் நேரடியான பொருளைத் தான் தருகிறது. முன் பின் அறியாதவர் போல பொதுவிடத்தில் பார்த்துக் கொள்வது காதலர்களின் இயல்பு என்பது தான் பொருள். ஆனாலும் காதலர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று அந்த பார்வையின் வழியாக அவர்களுக்குள் நடக்கும் ஒரு உரையாடல். அது அந்த அனுபவம் அடைந்தவர்களுக்கு கிடைக்கும் மேலதிகமாக, பாடலில் மறைந்து பயின்று வரும் இறைச்சிப் பொருள். எனவே இறை என்ற சொல்லிற்கு மறைந்திருப்பது என்பதே அர்த்தம். நன்கு கவனியுங்கள், இல்லாமல் இருப்பதல்ல. இருக்கும் ஒன்று ஆனால் மறைந்திருக்கிறது. மிகத் தெளிவாகவே நம் தமிழ் இருக்கும் அந்த ‘ஒன்றிற்கு’ இறை எனப் பெயரிட்டிருக்கிறது. இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் எல்லாம் இல்லை. இருக்கிறது, ஆனால் மறைந்திருக்கிறது.

[2]

கடந்த இரு பதிவுகளில் இந்த பிரபஞ்சம், அதன் துவக்கம், அதன் அசாத்தியமான ஒத்திசைவு, அவற்றை நிகழ்த்தும் பிரபஞ்சத்தின் விதிகள் போன்றவற்றை விரிவாகப் பார்த்தோம். கூடவே இத்தனை பெரிய பிரம்மாண்டத்தை நிகழ்த்த, பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டு ஒரு படைப்புச் சக்தி, ‘ஒன்று’ இருக்கும் என்பதையும் உறுதிசெய்து கொண்டோம். அறிவியலின் படி இந்த பிரபஞ்சம் மொத்தமும் ஒரு ஒருண்மையில் இருந்து பிறந்தது என்பதையும் விரிவாகப் பார்த்தோம். ஆனால் அந்த ஒருண்மையைப் பற்றிய மேலதிகக் கேள்விகளை எழுப்புகையில் தற்கால அறிவியலின் எல்லையையும் கண்டுகொண்டோம். அந்த கேள்விகளை மேற்தொடர வேண்டுமெனில் அறிவியலின் துணை அல்ல, இறையியலின் துணையே தேவை என்பதையும் கண்டோம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது?

உலகில் உள்ள அனைத்து சமயங்களுமே இந்த கேள்விக்கு விடையளித்திருக்கின்றன. ஆபிரகாமிய மதங்கள் பொதுவாக இந்த பிரபஞ்சமும், அதில் இந்த பிரபஞ்சமும், பூமியும், அதில் வாழும் மானுடரும் மற்றும் சகல அசையும், அசையா பொருட்களும் என அனைத்தும் எல்லாம் வல்ல, அனைத்தும் அறிந்த, அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கின்ற முழு முதல் பேரிறைவனால் படைக்கப்பட்டவை, உருவாக்கப்பட்டவை என்றே சொல்கின்றன. ஆறு நாட்களில் இறைவன் இப்புவியையும், இங்குள்ள அனைத்தையும் படைத்துவிட்டு ஏழாம் நாள் முதல் மானுடர்களை தன் சாயலில் படைத்துவிட்டு ஓய்வெடுக்கத் துவங்கினார் என்கிறது யூத, கிறித்தவ மதங்களின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் பகுதி. ஸ்பானிய படையெடுப்பால் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்ட தென்னமெரிக்க நிலத்தின் மாயன்களின் புனித நூலான ‘போப்பா வு’ படைப்பின் பொறுப்பை டெபெயு, க்யுக்யுமட்ஸ் மற்றும் ஹ்யுன்ராகன் என்ற மூன்று கடவுளர்களுக்கு கொடுக்கிறது. அவர்களின் படைப்பு தொன்மம் சுவாரசியமானது. அந்த கடவுளர்கள் முதலில் உலகைப் படைக்கலாமா வேண்டாமா என ஒரு நீண்ட விவாதம் செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் உலகைப் படைத்து, அதில் தங்களை வணங்கும் அறிவுடைய உயிர்களைப் படைப்பதே. உலகைப் படைத்துவிட்டு அதன் பிறகு விலங்குகளைப் படைத்தனர். ஆனால் விலங்குகளுக்கு அவர்களை வணங்கத் தோன்றவில்லை. எனவே மனிதர்களைப் படைக்கத் துவங்கினர். முதலில் மண்ணிலிருந்து உருவாக்கினர். அந்த மனிதர்களால் நகர முடியவில்லை. அதை விட மோசம் அவர்கள் பொருளற்ற முறையில் ஓயாமல் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். கடவுளர்களுக்கு தாங்க இயலவில்லை. எனவே அவர்களை மொத்தமாக அழித்துவிட்டனர். பின்னர் மனிதர்களை மரங்களில் இருந்து உருவாக்கினர். இவர்கள் மண் மானுடரை விட கொஞ்சம் பரவாயில்லை ரகம். இவர்களால் நகர, ஓடியாட முடிந்தது. பேச முடிந்தது. ஆனால் அவர்களுக்கு மனம், உணர்வுகள் போன்றவை இல்லை. எனவே இவர்களாலும் அந்த கடவுளர்களை வணங்க முடியவில்லை. கடுப்பான அவர்கள் ஒரு பெரிய வெள்ளத்தை தோன்றச் செய்து அந்த மர மானுடர்களையும் அழித்துவிட்டனர். அதில் கொஞ்சபேர் மட்டும் தப்பி பிழைத்தனர். அவர்களே தற்போதைய குரங்குகள். தங்கள் முயற்சியில் சற்றும் மனந்தளராத அந்த விக்கிரமாதித்யர்கள் மீண்டும் மனிதர்களை உருவாக்கத் துவங்கினர். இம்முறை மனிதர்களை சோள மாவில் இருந்து உருவாக்கினர். இம்முறை அவர்களுக்கு முழு வெற்றி கிடைத்தது. நன்கு நடக்கும், நன்கு பேசத் தெரிந்த, நன்கு உணர்வுகள் மற்றும் மனம் படைத்திருந்த மானிடர்கள் உருவானர்கள். அவர்கள் தங்களை உருவாக்கிய அந்த கடவுளர்களை மனதார வணங்கவும், அவர்களிடம் நன்றியுடனும் இருந்தார்கள். ஆனாலும் ஒரு புது சிக்கல் கடவுளர்களுக்கு வந்து சேர்ந்தது. இந்த சோள மாவு மனிதர்களிடம் அறிவு வளரத் துவங்கியது. அவர்களின் அறிவு மெல்ல மெல்ல கடவுளர்களையே அசைத்துப் பார்க்கத் துவங்கியது. எங்கே இவர்களால் தங்கள் கடவுள் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ எனப் பயந்த அவர்கள், மானுடரின் அறிவிற்கு ஒரு வலுவான திரையொன்றை இட்டனர். அதன் மூலம் அவர்களால் அனைத்தையும் அறிந்து கடவுளாக மாறுவதற்கு இருந்த சாத்தியத்தை என்றென்றைக்குமாக அழித்தனர்.

உலகில் பல சமயங்கள் உள்ளன. பெரும்பாலான சமயங்கள் இவ்வுலகை கடவுள் படைத்தார் என்றே சொல்கின்றன. ஜப்பான், பசிபிக் கடல் தீவுகளின் தொன்மங்களில் ஆண் மற்றும் பெண் கடவுள்கள் இணைந்து படைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மேற்கு நோக்கிச் செல்லச் செல்ல மிகத் தெளிவாகவே ஆண் கடவுள் தான் படைத்தார் என்றே வருகிறது. அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள் வழியாக நம் அனைவருக்கும் பரிச்சையமான சுத்தியலுடன் சுற்றிக் கொண்டிருக்கும் தோர் தெய்வமாக இருக்கும் நார்ஸ் தொன்மங்களில் மிக மிக முன்னர் இருந்த யமிர் என்னும் பனியால் ஆன பிரம்மாண்டமான பூதம் ஒன்றை நார்ஸின் தெய்வங்களான ஓடின் முதலியோர் கொன்று, அதன் உடலில் இருந்து பூமியைப் படைத்ததாக சொல்லப்படுகிறது. கிரேக்க, சுமேரிய தொன்மங்களும் பல கடவுளர்கள் இணைந்து படைத்ததாகத் தான் சொல்கின்றன. பாரதத்திலும் ஒன்றிற்கு மேற்பட்ட படைப்புத் தொன்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அனைத்துமான கடவுள் ஒருவரை தன் முதல் தெய்வமாகக் கொண்ட நம் மதங்கள் அனைத்திலும் அவரால் இந்த பிரபஞ்சம் உருவாக்கப்பட்டதாக ஒரு கதை இருக்கிறது. புராணங்கள் ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்றவாறு ஒரு படைப்புக் கதையைச் சொல்கின்றன. நாகர்கள் நாகங்களின் இணைவால் உருவானது இப்புடவி என ஒரு கதை சொல்கின்றனர். முடிவற்ற இருள் வெளியென கிடந்த கடலில் அனந்த நாகத்தில் படுத்திருந்த விஷ்ணுவின் நாபியில் இருந்து தோன்றிய தாமரையில் வாழ்ந்த பிரம்மாவால் படைக்கப்பட்டது இந்த புடவி என்கிறது மற்றொரு கதை. இங்கனைத்தும் நானே, நானன்றி வேறில்லை என இப்புடவியை தேவியின் தோற்றமாகவும் படைப்பை தேவியின் கருணையாகவும் காட்டுகிறது ஒரு கதை.

இங்கே எடுத்தாளப்பட்டுள்ள படைப்பு தொன்மங்கள் அனைத்துமே சில ஆயிரம் வருடத் தொன்மை கொண்டவை. அனைத்துமே இந்த பிரபஞ்சம் கடவுள் அல்லது கடவுளர்களின் விருப்பத்தால், அவர் விரும்பிய நேரத்தில் உருவாக்கப்பட்டதாகவே சொல்கின்றன. அவர்கள் சொல்லும் கடவுள் என்ற கருத்துரு முன்பே குறிப்பிட்டது போல எல்லாம் வல்ல, அனைத்தும் அறிந்த, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஒருவர். முழுமுதல் தெய்வம். பெரும்பாலும் ஆண். சாக்த மரபில் மட்டுமே தேவி. இங்கு ஒவ்வொரு மரபும் ஒவ்வொரு பெயரை தத்தமது தெய்வங்களுக்கு இட்டிருப்பதை நாம் கவனிக்கலாம். அந்த ‘பை’ என்ற பெயரை அந்த பிரபஞ்ச விதிக்கு மானுடம் இட்ட நிகழ்வோடு இதை பொருத்திப் பார்க்கலாம். முன்பே பார்த்தவாறு மானுட அறிவும், அறிபடு பொருளும் சந்திக்கும் புள்ளியில் நிகழ்கிறது மானுட அறிதல். அவ்வாறு பார்க்கையில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த மானுடம் உணர்ந்த ஒரு பிரபஞ்ச இருப்பிற்கும், அவ்வாறாக மானுடத்திற்கு தன் இருப்பை வெளிப்படுத்திய ‘அதுவும்’ சந்தித்த புள்ளியில் இடப்பட்டவையே அந்த பெயர்கள். அதை ஒவ்வொரு மானுட இனமும் தத்தமது சூழல், மன ஓட்டங்களைப் பொறுத்து ஒவ்வொரு விதமாக அறிந்தன. வன்பாலையான அரேபிய, ஆப்பிரிக்க பாலைகளில் உதயமான யூத மதத்தை முன்னோடியாகக் கொண்ட ஆபிரகாமிய மதங்கள் அதை ஒரு விதிகளை நிலைநிறுத்தும் ஒரு பெருஞ்சினமும், பேரருளும் கொண்ட பெருந்தந்தையாக (ஜேகோவா) உணர்ந்தன, அறிந்தன என்றால், மக்காசோளம் அபரிமிதமாக விளைந்த ஒரு நிலத்தில் தங்கி வாழ்ந்த, இன்றைய மெக்ஸிகோ மற்றும் அதையொட்டிய தென்னமெரிக்க நாடுகளில் வாழ்ந்த மாயன்கள் தங்கள் வாழ்வாதாரமான சோளத்தின் உற்பத்தியை நிர்வகிக்கும் ஆகாயம் (டெபெயூ) கடல்கள் (க்யுக்யுமட்ஸ்), மற்றும் காற்று (ஹ்யுன்ராகன்) ஆகியவற்றின் வடிவாக தங்கள் தெய்வங்களை உணர்ந்தன. வன்பாலை திகழ்ந்த அரேபிய நிலங்களில் தோன்றிய மதங்கள் தத்தமது கடவுள்களை பாலையின் குணங்களான சினத்தையும், அருளையும் கண்டடைந்தனர் என்றால், கொடுங்குளிரில் வாழ்ந்து கொண்டிருந்த நார்வே, ஃபின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் உட்பட்ட ஸ்காண்டிநேவிய நார்ஸ் மக்கள் தங்கள் தெய்வங்களைக் கொடுங்குளிர் பூதம் ஒன்றில் இருந்து காப்பாற்றிய வீரர்களாகக் கண்டன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் மட்டுமே பரவி இருந்த பசிபிக் கடலில், பாலையில் சிதறிய கையளவு கடுகுத் துகள்கள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த தீவுகளால் ஆன பாலினேஷியா மக்கள் கூட்டங்கள் தங்கள் தெய்வங்களை கடலில் இருந்து நிலத்தை, தத்தமது தீவுகளை, வெளியில் எடுத்தவர்களாகக் கண்டன. எனவே ஒவ்வொரு இனமும் தாங்கள் அறிந்த வகையில், தத்தமது மொழியில், தத்தமது அடிப்படை தேவைகளை நிர்வகிக்கும், அவற்றை ஒட்டிய வேண்டுதல்களை நிறைவேற்றும் ஒன்றாகவே அறிந்திருக்கின்றன, பெயரிட்டிருக்கின்றன.

இந்த தெய்வங்கள் அனைத்தும் மானுடம் தனது அறிவில், மொழியில் நெடுந்தொலைவு முன்னேறிய பின்னர் அறியப்பட்டவை, பெயரிடப்பட்டவை என்பதை எளிதாக உணரலாம். அவ்வாறெனில் தெய்வங்கள் மானுடத்தால் கண்டடையப்பட்டு சில ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறதா? இந்த தொடரில் நாம் பலமுறை பதில் கண்ட கேள்வி தான் என்றாலும் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்வோம். தெய்வங்கள் என்பதே மானுடத்தின் கண்டடைதலா? மானுடமே தோன்றியிருக்கவில்லை எனில் தெய்வங்கள் இருந்திருக்காதா? ‘பை’ என்ற விதிக்கு நாம் கண்டடைந்த பதில் தான் இதற்கும். மானுடம் ‘பை’ என அறிந்து இருக்காத காலத்திலும், மானுடம் தோன்றுவதற்கு முன்பும், மானுடம் ஒருவேளை அழிந்து போன பின்பும் கூட அந்த விதி அப்படியே தான் பிரபஞ்சத்தில் இருக்கும் இல்லையா. அதுவே தான் ‘இறை’ என்பதற்கும். மானுடம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அறிந்தாலும், அறியாவிட்டாலும் ‘இறை’ என்பது இருக்கத்தான் செய்யும். அந்த இறை நாம் மேலே கண்ட பல பெயர்கள் உடைய, அத்தனை அருங்குணங்கள் கொண்ட, அத்தனை பராக்கிரமம் உடைய ஒன்றா? அல்லவா? அத்தனை அருங்குணங்கள் உடையவர் கடவுள் என்றால் எதற்கு இத்தனை விகாரங்கள் இவ்வுலகில்? அழிவுகள் எதனால்? துன்பங்கள் எதனால்? தீமைகள் எதனால்? அனைத்தும் இன்பமென, நன்மையென, அழகு மட்டுமென இருக்கலாமே? இவை அறிவியல் அறிஞர்கள் சென்ற நூற்றாண்டில் ‘இறை’யியலாளர்களை நோக்கி வைத்த கேள்விகள் தான். இங்கு தங்களை நாத்திகர்கள், பகுத்தறிவு வாதிகள் என தங்களை அழைத்துக் கொள்பவர்களும் அரை நூற்றாண்டாக நம் முன் வைக்கும் கேள்விகள் தான் இவை. இக்கேள்விகளை எந்த வித மழுப்பலும் இல்லாமல், முழுமையான தர்க்கத்தின் மொழியில் நாம் எதிர்கொள்ள இயலும். நாம் மேற்கண்ட கேள்விகள் அனைத்துமே அனைத்தறிந்த, அனைத்தாற்றும், அனைத்திலங்கும் முழுமுதல் தெய்வம் எனும் கருத்துருவுக்கு எதிராக, அந்த முழுமுதல் தெய்வத்தை முன்வைத்து உருவாக்கப்பட்ட, விரிவான நிர்வாக அலகுகள் நிறைந்த மதம் என்னும் நிறுவனத்திற்கு எதிராக எழுப்பட்டவை. மானுடம் முதலில் உணர்ந்ததே இந்த முழுமுதல் தெய்வம் என்பதைத் தானா? இல்லை மானுடம் போலவே தெய்வங்களுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கிறதா?

[3]

இக்கேள்விக்கு பதிலை நாம் நம் பாரதத்தின் தெய்வங்களை முன்வைத்து தேடலாம். நம் மரபைப் பற்றிச் சொல்லும் போது, கடல் மணலைக் கூட எண்ணிவிடலாம், ஆனால் தெய்வங்களை எண்ண இயலாது என்பார்கள். அது பெருமளவு உண்மை. என்னையே எடுத்துக் கொள்வோம். அடிப்படையில் நான் சைவன். என் முழு முதல் தெய்வம், பெருந்தெய்வம் சிவன். என் குலதெய்வம் சிவாம்சம் கொண்ட சித்தூர் தென்கரை மகாராஜர். என் மனைவிக்கு மேலும் ஒரு சிறப்பம்சம், அவர்கள் குடும்ப தெய்வமாக தடிவீரன் சாமி எனப்படும் மந்திர மூர்த்தி சுவாமி. ஊரெல்லையில் காவல் இருக்கும் சுடலை, மாடன் போன்ற தெய்வங்கள், என் ஊருக்கே உரித்தான முத்தாரம்மன் போன்ற தாய் தெய்வங்கள், நாகர் வழிபாட்டு தெய்வங்கள். இவை தவிர பிட்சாடனர், காலபைரவர், அகோர வீரபத்ரர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், சரஸ்வதி, லட்சுமி என ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒரு தெய்வம். இதிலேயே நான்கு அடுக்குகளில் தெய்வங்கள் இருப்பதைக் காணலாம். முதலில் குடும்ப மற்றும் குல தெய்வம், ஊர்த் தெய்வம், நோயிலிருந்து காக்கும் காவல் தெய்வம் போன்ற சிறு தெய்வம் அல்லது நாட்டார் தெய்வம், அதன் மேல் அன்றாட வேண்டுதல்களுக்கான செயல் தெய்வங்கள். அதன் மேல் முழு முதல் பெருந்தெய்வம்.

மானுடத்தின் பரிணாமம் போலவே தெய்வங்களுக்கும் ஒரு பரிணாமம் இருக்கிறது. மானுடம் முதன் முதலில் தெய்வம் என்பதை எப்போது உணர்ந்திருக்கும்? எப்படி உணர்ந்திருக்கும்? அந்த தருணத்தில் தெய்வம் என்பது இன்றைய வரையறையையோ, வடிவையோ கொண்டதாக நிச்சயம் இருந்திருக்காது அல்லவா!! ஏனெனில் நாம் உசாவும் அந்த முதல் தருணம் மானுடத்தின் ஆதி நாட்களில் ஒன்றாக, கற்காலத்திற்கும் முந்தைய ஒன்றாக இருப்பது. அன்று மொழி இல்லை, அறிதல் என்பதை மானுடம் முழுமையாக உணர்ந்திருக்க கூடச் செய்திருக்காத ஒரு காலம். இரு கால்களில் எழுந்து நின்ற ஒரு மூதாதை, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒன்றாக அது இருந்திருக்கும். ஆம், அது நம் மானுட மூதாதைக்குள் தன்னுணர்வு என்ற ஒன்று நுழைந்து அந்த மூதாதை தன்னை ‘நான்’  என உணர்ந்த தருணம். அந்த தருணத்தில் தோன்றிய பெரும் பரவசத்திற்கு அடியில், ஒரு மிக மிகச் சிறிய நலுங்கலாக அந்த உணர்வு, அனுபவம் இருந்திருக்கும். அதை அந்த மூதாதை தவற விட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் அந்த பரவசத்தை மீண்டும் அடைய மானுடம் முயன்று கொண்டு தான் இருக்கிறது. இன்று வரை மானுடம் ஒட்டுமொத்தத்திற்குமான ஒரு தேடல் என்பது பரவசத்தை நோக்கிய ஒன்று தானே. எத்தனை எத்தனை சாகச விளையாட்டுகள், நாயக வழிபாடுகள், குறுங்குழு பின்தொடர்தல்கள், பொழுதுபோக்குகள். அத்தனையும் நமக்குள் இருந்து வெளிப்படச் சாத்தியமான அந்த பரவச தருணத்திற்காகவும், அந்த தருணத்தைக் கொண்டாடவும் தானே.

அந்த பரவசம் ஏன் தனக்கு வந்தது என்பதை மானுடம் கண்டடைந்த அடுத்த தருணமாக ஒன்றை நாம் ஊகிக்கலாம். அது தன்னைப் போன்ற ஒரு உயிர் பிறந்ததை கண்ட தருணம். தங்களில் ஒரு பாதி இனத்தில் இருந்து மட்டுமே இப்படி அடுத்த, புதிய உயிர் ஒன்று உருவாவதையும், அது எதனால், எப்படி உருவானது என்பதை அறிந்து கொண்டதுமே மானுடத்தின் இரண்டாவது பரவசத் தருணம். அந்த தருணம் மானுடத்திற்கு ஒன்றை சொல்லியது. ஆண், பெண் என இரு வகைமைகள் அவர்களுக்கு இருக்கிறது என்பதை. அது ஒரு அறிதல். ‘நான்’ என உணர்ந்த அந்த தன்னுணர்வு மேலும் கூர் கொண்டு, இரண்டாகப் பிரிந்த ஒரு தருணம். உடல் ரீதியான வேறுபாடுகள் முன்பே அவர்களால் உணரப்பட்டிருந்தாலும், அந்த வேறுபாடுகளின் அடிப்படை பயனை அவர்கள் உணர்ந்து கொண்ட தருணமாக அது இருந்திருக்கும். ஆணிடம் இருந்து பெண்ணுக்குள் தரப்படும் ஏதோ ஒன்று அவர்களைப் போன்ற ஒரு சிறிய உயிரென சில காலத்தில் வெளிப்படுவதன் வியப்புணர்வே அந்த பரவசம். அதன் பிறகே மானுடம் தன்னைச் சூழ இருந்த உயிர் வெளி அனைத்திலும் பிறப்பு என்பது நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதையும், அப்படி நிகழும் பிறப்பே தங்களுக்குத் தேவையான உணவாகவும், தங்கள் வாழ்வாதாரமாகவும் மாறுகிறது என்பதையும் உணர்ந்த மானுடம், பிறப்பை கொண்டாடி இருக்கும். இன்று வரையும் நாம் அந்த கொண்டாட்டத்தை தவறவிடுவதில்லை என்பதையும் நாம் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படியும் நமக்கு உயிர் உருவாவதன் வியப்பு, அதை பெருமளவு அறிந்த பின்னும் கூட, தீரவில்லை என்பது நம் மனதில் இன்றும் இருக்கும் அந்த மூதாதை கொண்ட வியப்பின், பரவசத்தின் எச்சத்தால் தானோ!! ஆம், பூவிற்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் தான் இல்லையா!!

பிறப்பு ஏன் அந்த பரவசத்தை மானுடத்துக்கு முதலில் அளித்தது? மானுடம் முதன் முதலில் உணர்ந்த பரவசம் அதனுள் நுழைந்த, உதித்த தன்னுணர்வு எனக் கண்டோம். அது மானுடம் மனம் என ஒன்றை, அதில் அதன் உடலுக்கும், சூழலுக்கும் முற்றிலும் தொடர்பற்ற ஒரு உணர்வு, எப்படி தோன்றியது என்று கூட கண்டறிய முடியாத ஒரு உணர்வு, எந்த புறப் புலன்களாலும் உணர்ந்து கொள்ள இயலாத ஒன்றை மனம் என்னும் ஆறாவது புலனால் அறிந்து கொண்ட தருணம். அதே போன்றதே மானுடம் முதன் முதலில் பிறப்பு என்பதை அறிந்த கணமும். தன் எந்த புலன்களாலும் அறிய, உணர முடியாத ஒன்றில் இருந்து ஒரு உயிர்ப் பொருள் வருவதன் அதிசயமே அந்த பரவசம். புறப் புலன்களுக்கு எட்டாத, அதே சமயம் தன் அகப்புலன் ஒன்றில் தோன்றும் ஒன்றுக்காக மானுடம் ஏங்கத் துவங்கியதும் அந்த புள்ளியில் இருந்து தான். அப்படித் தான் மானுடம் தன் கனவை, கனவில் எழும் கற்பனையை அறிந்தது. கற்பனை, இல்லாத ஒன்றைப் பற்றிய எண்ணங்கள், கருத்துக்கள் மானுடத்துள் நுழைந்த அந்த தருணம் மானுடம் பரிணாமச் சங்கிலியில் பிற அனைத்தையும் விடத் தாவி முன்னகரத் துவங்கிய பயணத்தின் முதற்புள்ளி.

அதன் பிறகு முதன் முதலாக தன்னை சூழ இருந்த இயற்கையை பேரழகு வாய்ந்த ஒன்றாக அந்த மூதாதை உணர்ந்த தருணத்தில் தான் இறையனுபவத்தின் முதல் துளி மானுடத்திற்கு சித்தித்திருக்கும். அழகு என்ற ஒன்று தன்னாலோ, தன்னைச் சேர்ந்தவர்களாலோ உருவாக்கப்படவில்லை, ஆனால் இங்கே இவ்வளவு அழகாக ஒன்று இருக்கிறது என்ற உணர்வே மானுடம் தன்னை மீறிய ஒன்றை உணரச் சாத்தியமான முதல் தருணம். இதுவும் ஒரு பரவச உணர்வு தான் என்றாலும் அதில் இருந்த பேருணர்வு என்பது வியப்பு தான். தன்னை மீறிய ஒரு விம்மல். இன்றளவும் நம் ஒவ்வொரு அசைவிலும் நாம் உத்தேசிப்பது அழகைத் தானே!! வீடுகளை அலங்கரிப்பதிலும், நம்மை நாமே அலங்கரித்துக் கொள்வதிலும், வழிபாட்டிலும் இறைவனை அலங்கரிப்பதிலும் எல்லாம் மானுடம் கண்டடைவது அந்த அழகென்னும் பேருணர்வு தந்த பரவசத்தை, வியப்பினை மீட்டிக் கொள்ளவே அல்லவா!! அந்த அழகென்பது எது? அந்த அழகாக வெளிப்படுவது எது? இந்த கேள்விகள் மானுடத்தை தன்னைச் சூழ்ந்து விரிந்திருக்கும் அழகை இன்னும் உற்று நோக்கச் செய்திருக்கும். இரவில் கவிந்திருக்கும் ஆகாயமும், அதில் நிறைந்து, இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களும், மானுடத்தின் அழகு நோக்கிய தேடல்களை இன்னும் அதிகரித்து இருக்கும். பகலில் சூழ்ந்திருந்த இடத்தைப் பற்றிய அறிதல்கள் அவர்களின் தங்கி வாழத் தேவையானவை. ஆனால் இரவில் அகல் விசும்பென விரிந்து கிடந்த வானில் அவர்கள் கோள்களை, நட்சத்திரங்களை, நட்சத்திர தொகுதிகளை, தாரகைத் தொகுப்புகளை அறிந்து கொண்டது, அவற்றின் நகர்விற்கும், தாங்கள் வாழும் இடத்திற்குமான தொடர்புகளை அறிந்து கொண்டது என மானுடம் கொண்ட தேடல்களின் பதிலாகத் தான் அது ஒத்திசைவு என்ற ஒன்றை அறிந்திருக்கும். நம் வடிவங்கள், கட்டுமானங்கள், கலைகள் அனைத்திலும் நாம் கொண்டு வந்திருப்பது ஒத்திசைவைத் தான். மானுடம் முதன்முதலாக ஒத்திசைவு என்பதை அறிந்த கணம் மானுடத்தின் அறிதல் பயணத்தில் கிட்டத்தட்ட நெருப்பை மானுடம் கையாளத் தெரிந்த தருணத்திற்கு இணையானது. ஒன்றுடன் ஒன்று எவ்விதத்திலும் தொடர்பில்லாத, அதே சமயத்தில் முழுமையாக ஒத்திசைந்த ஒரு ஒழுக்கென, பிரவாகமென தன்னைச் சூந்திருந்த இயற்கையை அறிந்த அந்த புள்ளியில் முழுமையான முதல் இறையனுபவம் நிகழ்ந்திருக்கும். ஆம், இந்த புடவி என்பது ஒரு பிரம்மாண்டமான, கற்பனைக்கும் எட்டாத, எண்ணற்ற பொருட்தொகுதிகளின் அபாரமான ஒத்திசைவே. அந்த ஒத்திசைவை ஒரு இருப்பென உணர்ந்த அந்த முதல் மானுட முதாதைக்குத் தான் மானுடத்தின் முதல் இறையனுபவம் சித்தித்தது. அந்த மூதாதை என்ன ஆகியிருப்பார்? வெண்முரசின் மொழியில் சொல்வதானால், மின்னல் பட்டெரிந்த பனைமரமென ஆகியிருப்பார். அது முழுப் பித்து நிலை. ஆம், அவன் தான் நம் மானுடம் கண்ட முதல் பித்தனாக இருந்திருப்பான். ஆனாலும் என்ன, அவன் இறையனுபவத்தை தன்னுள் ஏந்தியவன் அல்லவா, அதை மாந்தியவன் அல்லவா!!

                                                                    (மேலும்)


கட்டுரையாளர்: அருணாச்சலம் மகாராஜன்

அருணாச்சலம் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருக்கிறார். பள்ளிப் பருவம் முழுவதும் கிராமத்திலேயே தமிழ் வழிக் கல்வியாக நிகழ்ந்தது. தந்தை வழி திருக்குறளும், சுவாமி விவேகானந்தரும் அறிமுகம். பள்ளியில் பயிலும் காலத்தில் ஊரில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சனிக்கிழமை தோறும் நிகழ்ந்த கம்பராமாயண வகுப்புகள் வாயிலாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார். தீவிர இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு மூலம் நுழைந்தார். வெண்முரசு நாவல் வரிசைகளுக்கு எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் வாயிலாக இந்திய ஞான மரபு, வரலாறு, தத்துவங்கள் ஆகியவற்றில் தன் தேடல்களை கண்டடைந்தார்.

0 comments:

Post a Comment