Saturday, March 1, 2025

சித்தாந்த வினா விடை - 2 - அருணைவடிவேல் முதலியார்

 சித்தாந்த வினா விடை 1

சித்தாந்தப் பொருள்வகை


மாணவன் : ஆசிரியரே நீங்கள் எனக்கு சித்தாந்தப்பொருளை  உரைக்க வேண்டும்.

ஆசிரியர் : நன்று!  கேட்பாயாக. சித்தாந்த நூல்கள், எல்லாப் பொருள்களையும் மூன்று வகையுள் அடக்கிக் கூறும்; அவை, 'பதி' 'பசு' 'பாசம்' என்பன. 'பதி' என்பது கடவுள்; 'பசு' என்பது உயிர்; 'பாசம்' என்பது, அவ்வுயிர்களைப் பற்றியுள்ள பிணிப்பு. இவை முறையே, 'இறை, உயிர், தளை' எனவும் கூறப்படும்.


இம் முப்பொருள்கள் பற்றிய ஆராய்ச்சியை நான்கு வகைகளில் வைத்து சித்தாந்த நூல்கள் கூறும். அவை


1 பிரமாணம், 

2 இலக்கணம், 

3 சாதனம், 

4 பயன், என்பதாகும்.


பிரமாணமாவது, 'பதி, பசு, பாசம், என்னும் முப்பொருள்களையும், 'உள்ளன' என அளவை முறையால் துணிந்து சொல்லுதல் ஆகும். 


இலக்கணமாவது 'உள்ளன' எனத் துணிந்து சொல்லப்பட்ட அம்முப்பொருள்களின் இயல்பு இவை எனக் கூறுதல் ஆகும். 


சாதனமாவது, முப்பொருள்களில் பயனை பெறுவது எதுவென்றும், அதனைப் பெறுதற்கு உரிய வழியையும்,  அவ்வழியில் செல்லும்  முறை பற்றியும் கூறுதல்.


பயனாவது, 'பயனைப் பெறுதற்குரிய வழியில் முயன்ற பின்னர், அம்முயற்சியால் அடையும் பயன்கள் இவை' எனக் கூறுதல்.


பிரமாணம்-அளவை இயல்


தர்க்கர்கள் முதலியோர் பிரமாணங்களைப் பலவாக விரித்துக் கூறுவர். உலகாயதரும் (நாத்திகர்), பௌத்தரும் ஒன்றிரண்டு பிரமாணங்களை மட்டும் கொண்டு, ஏனையவைகளை விலக்கி விடுவர்.

சைவ சித்தாந்தம்,  'இன்றியமையாத பிரமாணங்களை விலக்குதலும் தவறு, சிறுசிறு வேறுபாடுகொண்டு பிரமாணங்களைப் பலவாக விரித்தலும் தேவையற்றது’ எனக்கூறி,  மூன்று பிரமாணங்கள் இன்றியமையாதன எனவும், அவற்றிற்கு வேறாகச் சொல்லப்படும் பிரமாணங்கள் அனைத்தும் அம்மூன்றிலே அடங்கிவிடும் எனவும் சொல்கிறது.


மாணவன்: சைவசித்தாந்தம் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள் எவை? 


ஆசிரியர் :   சைவ சித்தாந்தங் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள், 

'காட்சி, கருதல், உரை, என்னும் மூன்றுமாம்.


மாணவன்:  தர்கத்தார் முதலியோர் பலவாக விரித்துக் கூறும் பிரமாணங்கள் யாவை? 


ஆசிரியர் : 

1. காட்சியளவை (பிரத்தியட்சப் பிரமாணம்)   

2. கருதலளவை (அனுமானப் பிரமாணம்)

3. உரையளவை அல்லது ஆகமப் பிரமாணம் (சத்தப் பிரமாணம்)

4. இன்மையளவை (அபாவப் பிரமாணம் அல்லது அனுபலத்திப்   பிரமாணம்)

5.  பொருளளவை (அருத்தாபத்திப் பிரமாணம்) 

6.  உவமையளவை (உபமானப்பிரமாணம்)

7.  ஒழிபுஅளவை (பாரிசேடப்பிரமா ணம்)

8.  உண்மையளவை (சம்பவப்பிரமாணம்) 

9. வழக்களவை (ஐதிகப் பிரமாணம்)

10. இயல்பு அளவை (சகசப் பிரமாணம் அல்லது சுபாவப் பிரமாணம்) 


ஆகியவை தர்கத்தார்  முதலியோர் வேறு வேறாக விரித்துக்கூறும் பிரமாணங்கள். அவற்றுள் காட்சி முதலிய மூன்றினைத் தவிர, ஏனைய பிரமாணங்களும் அக்காட்சி முதலியவற்றின் வகையேயன்றி வேறல்ல என்பதே சைவசித்தாந்தத்தின் துணிபு.


பிரமாணங்களின் இயல்பு


மாணவன் :

பிரமாணங்கள் இவை என ஒருவாறு உணர்ந்தேன், இனி, பிரமாணங்களின் இயல்பு இவை எனக் கூற வேண்டும்.


ஆசிரியர் :

1. காட்சியளவை அல்லது பிரத்தியட்சப் பிரமாணம் என்பது, இது குடம்,  இது ஆடை என்றாற்போலக் கண் முதலிய பொறிகள் வாயிலாகப் பொருள்களைப் பொருந்தி நின்று உணரும் உணர்வு.


2. கருதலளவை அல்லது அனுமானப் பிரமாணம் என்பது, புகையைக் கண்டவுடன்  நெருப்பு உண்டு என்று சொல்லுதல் போல. இங்கே நெருப்பை கண் முதலிய பொறிகள் பார்க்கவில்லை. ஆனால் அங்கே புகையை கண்ட உடன் நெருப்பு இருக்கிறது என்று சொல்வது,  வழி வழியாக புகையை நெருப்போடு பொருத்திப் பார்த்த அனுமானத்தால். இதனால், இது 'வழியளவை' என்றும் சொல்லப்படும். 'அனுமானப் பிரமாணம்' என்று கூறுப்படுகிறது.


3. உரையளவை அல்லது ஆகமப் பிரமாணம் என்பது, மேற்கூறிய இரு வகையாலும் உணர முடியாத பொருளை, பெரியோரது பெரு மொழிகள் கொண்டு உணரும் உணர்வு.


பெரியோர்கள் எனப்படுபவர்கள், 'காமம், வெகுளி, மயக்கம்' என்னும் முக்குற்றங்கள் சிறிதும் இல்லாது முற்றும் நீங்கிய தூயோர். காமம் என்பது விருப்பு: வெகுளி என்பது வெறுப்பு; மயக்கம் என்பது ஒன்றை மற்றொன்றாக உணரும் விபரீத உணர்வு. இக்குற்றங்கள் சிறிது இருப்பினும், பொருள்களை உள்ளவாறு உணரவும், உணர்ந்தபடியே சொல்லவும் இயலாது; ஆதால் இக்குற்றங்கள் முற்றும் நீங்கப்பெற்றவரின் உரையே, 'ஆப்த, வாக்கியம்' (நம்பத்தகுந்த சொல்) எனப்படும்.


இயல்பாகவே இக்குற்றங்கள் இல்லாதவன் இறைவன். அதனால், அவனது திருமொழியே உண்மை ஆப்தவாக்கியமாகும். ஆயினும், அவன் சொற்களை ஒவ்வொரு காலத்திலும் பாட்டாகவும், உரையாகவும் சொல்லுதல் இல்லை, மாறாக அச்சொற்களையெல்லாம் தன்னையே சார்ந்து, தானாய் நிற்கும் பெரியோர் வாயிலாகவே சொல்விப்பான். அதனால் அவரது திருமொழிகளும் அவன் திருமொழியேயாகும் என்று கருத வேண்டும். 

 
'இவர் இறைவனைச் சார்ந்து இறைவனாகவே  நின்றார்' என்பது எவ்வாறு தெளியப்படும் எனின், அவரது உண்மை வரலாற்றாலே அது அறியப்படும். அதாவது இறைவன் நேர்நின்று அவர்களை ஆட்கொள்ளுதல், அவர்கள் திருமொழியை விரும்பிக் கேட்டல், தன்னாலன்றிப் பிறரால் இயலாத வியத்தகு செயல்களை அவர்கள் வாயிலாக உலகத்தில் நிகழ்வித்தல், போன்ற முறைமையால் அவர்கள் முக்குற்றங்களும் அகன்று முதல்வனேயாய் நின்றார்கள் என்பது தெளியப்படும். சில பெரியோர்களுக்கு உண்மை வரலாறு இல்லாமல் போனாலும் மரபு வழி தொன்று தொட்டு சொல்லப்படும் உரைகளும் ஆப்த வாக்கியங்களாகும்.

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால், 

மனக்கவலை மாற்றலரிது" எனவும், 

 

"அறவாழி யந்தணன் தாள் சேர்ந்தார்க்

கல்லால்-பிறவாழி நீந்தலரிது" எனவும், 

 "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் - பற்றுக பற்றுவிடற்கு"  

எனவும் அருளிச்செய்தபடி, இயல்பாகவே குற்றமில்லாத இறைவனைச் சார்தலைத்தவிரக் குற்றங்கள் நீங்குதற்கு வழியில்லாமையால் கடவுள்கொள்கை இல்லாதவர்க்குக் குற்றங்கள் நீங்காது. அதனால், அவர்களுடைய சொற்கள் ஆப்தவாக்கியம் ஆகாது.


இனிச் சிலர், பெரியோரது திருமொழிகள் ஆப்தவாக்கியங்களேயாயினும், அவை இயல்பாகவே குற்றம் இல்லாத இறைவன் திருமொழியோடு ஒப்புதல் பிரமாணம் ஆகுமா?" என ஐயப்படுவர்.  அவை ஏற்கனவே இறைவன் திருமொழியோடு ஒப்பப்பிரமாணம் ஆனது என்பதை பலவிடத்தில் பல்லாற்றாலும் விளங்கியும், இறைவனாலும், பெரியோராலும் விளக்கப்பட்டும் இருக்க , அதன் குற்றம், நன்மை போன்ற விஷயங்களை சாதாரண மனிதர்கள் ஐயப்படக் கூடாது. பெரியோர் திருமொழிகளும், இறைவன் திருமொழிகளும் ஒப்பப்பிரமாணம் தான்  என்பதை இனிது விளக்கவே,


"கண்டபெரு மந்திரமே மூவர் பாடல்-கைகாணா மந்திரம் கண்ணுதலோன் கூறல்" (திருமுறை கண்ட புராணம்) என்பது போன்ற வாக்கியங்கள் எழுந்தன. 


பெரியோர் திருமொழிகளைச் சிறந்த பிரமாணமாகக் கொள்ளாதவர்க்கு, காலப்போக்கில்  அவை பற்றின கருத்தும், சிந்தனையும், வரலாறும், இல்லாமலாகி, முடிவில் உரையளவையே இல்லாமலாகிவிடும். எனவே காட்சியளவை, கருதலளவை மற்றும் உரையளவை இவை மூன்றுமே சைவ சித்தாந்தம் எடுத்துக் கொள்ளும் பிரமாணங்கள்.



கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு


1 comment:

  1. அருமையான தொடர். உங்கள் இணையதளம் வருங்காலத்தில் மிக முக்கிய ஆவணமாக போகிறது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்

    ReplyDelete