உங்கள் வாழ்க்கையைக் கட்டிப் போட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கயிறு!
நம் வாழ்க்கையில் அவ்வப்போது இப்படிப்பட்ட கேள்விகள் நமக்குள் வரும்:
- “நான் நினைத்ததை அடைய இடைவிடாமல் முயற்சி செய்கிறேன். என்ன சரி, என்ன தவறு என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், நினைத்தது ஏன் நடப்பதில்லை? ஒரு சிலருக்கு மட்டும் எந்த முயற்சியுமே இல்லாமல் எல்லாம் வசப்படுகிறதே, அது எப்படி?"
- "எனக்கு வரும் கஷ்டங்கள் போல வேறு யாருக்கும் இல்லையே? அப்படி என்ன மகா தவறு செய்துவிட்டேன்?"
- “என் முயற்சி போதவில்லையா? அல்லது என் முயற்சிகள் செல்லுபடியாகாத வேறு ஏதோ ஒரு தளம் இங்கே இருக்கிறதா?”
சைவ சித்தாந்தம் இந்தக் கேள்விகளுக்கு ஆழமான ஒரு பதிலைத் தருகிறது. அது முயற்சியை இகழ்வதுமில்லை; அதேசமயம் முயற்சி மட்டுமே எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று குருட்டுத்தனமாகச் சொல்லுவதுமில்லை.
உண்மையில் இந்தக் கேள்விகளுக்குள் நாம் நுழையும்போதுதான், நம்மை அறியாமலேயே நம்மைக் கட்டிப்போட்டிருக்கும் அந்த மர்மக் கயிற்றைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். கன்மம் (கர்மா) என்பது நமக்கு வழங்கப்பட்ட தண்டனை அல்ல. அது தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போது நம்மைப் பிணைக்கும் சங்கிலியாகவும் (பாசம்), விழிப்புணர்வுடன் கையாளப்படும்போது நம்மை விடுவிக்கும் கருவியாகவும் இருக்கிறது. இதுவே, சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கான உண்மையான நுழைவாயில்.
மும்மலங்களின் பிணைப்பு
நமது தத்துவத் தொடரின் முந்தைய அத்தியாயத்தில், மும்மலங்களில் முதன்மையானதும், ஆன்மாவின் அறிவை அநாதியே மறைத்திருக்கும் மூலத் தடையுமான ஆணவ மலத்தைப் பற்றி விரிவாகக் கண்டோம். ஆணவம் என்பது "நான்" என்ற அகங்காரத்தின் மூலம்; அது ஆன்மாவின் எல்லையற்ற இயல்பை (சொரூபம்) மறைத்து, தன்னை ஒரு குறுகிய, சிற்றறிவு கொண்ட ஜீவனாக உணரச் செய்யும் "அறியாமை இருள்" ஆகும்.
ஆனால், இந்த ஆணவ இருள் மட்டும் ஆன்மாவைப் பிறவிச் சுழற்சியில் பிணைத்துவிட முடியாது. ஒரு விதையானது முளைப்பதற்கு நிலமும் நீரும் தேவையோ, அதுபோல, ஆணவம் என்ற விதை செயல்படுவதற்கு அதற்கு மேலும் இரண்டு துணைக் கருவிகள் தேவைப்படுகின்றன. அவையே கன்ம மலம் மற்றும் மாயா மலம்.
ஆணவம் என்பது ஆன்மாவை மறைக்கும் "உமி" (Husk) என்றால், கன்மம் என்பது அதனுடன் அநாதியாக ஒட்டிக் கொண்டிருக்கும் "முளை" (Sprout). மாயை என்பது அந்த விதை முளைத்து, வளர்ந்து, வினைகளை அனுபவிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் "நிலம்" (Field) ஆகும்.
ஆணவ இருளில் (கேவல நிலை) அறிவும் செயலுமற்றுச் சடமாகப் படிந்துள்ள ஆன்மாவின் மேல் கொண்ட பெருங்கருணையினால், இறைவன் தனது திருவருளை இயக்குகிறான். அநாதியாக உயிரைப் பற்றியிருக்கும் கன்மங்கள் நுகர்ச்சிக்கு வராமல் விதை போல ஒடுங்கிக் கிடக்கும் இந்நிலையை மாற்றி, அவற்றைச் செயல்பட வைக்க இறைவன் மாயையை (Matter) பல தத்துவங்களாக விரிக்கிறான். இவ்வாறு இறைவன் மாயையைத் தனுகரணங்களாக (உடல் ,கருவிகள் ) உருமாற்றித் தருவதன் மூலமே, உறங்கிக் கிடந்த கன்மங்கள் உயிரைத் தழுவி நுகர்ச்சிக்கு வருகின்றன. இந்தத் செயல்பாடே ஆன்மாவை 'கேவல' நிலையிலிருந்து, அனுபவங்கள் நிறைந்த 'சகல' நிலைக்கு உயர்த்தி, முப்பத்தாறு தத்துவங்களின் விரிவுக்குள் கொண்டு சேர்க்கிறது.
கன்ம மலம் (Karma Malam)
சைவ சித்தாந்தத்தில் ஆன்மாவைப் பற்றியிருக்கும் மூன்று மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) நாம் தினமும் அனுபவித்து உணரும் ஒரு மலம் 'கன்ம மலம்' ஆகும். இதை எளிமையாக 'கர்மா' அல்லது 'வினைப்பயன்' அல்லது ஊழ்வினை என்கிறோம்.
கன்ம மலம் – வினையின் இயந்திரம்
"கன்மம்" என்ற சொல்லுக்கு "செயல்" என்று பொருள். "மலம்" என்றால் "மாசு" . ஆக, கன்ம மலம் என்பது, செயல்களின் மூலமாகவும், அதன் விளைவுகளின் மூலமாகவும் ஆன்மாவை பிறப்பு- இறப்பு சுழற்சியில் பிணைக்கும் ஒரு மாபெரும் தத்துவமாகும். இதுவே பிறவிச் சுழற்சி என்ற சக்கரத்தின் அச்சாணி.
காரண கன்மம் vs காரிய கன்மம் - ஒரு முக்கிய வேறுபாடு
கன்மத்தைப் பற்றிப் பேசும்போது, சைவ சித்தாந்தம் அதை இரண்டு முக்கிய நிலைகளாகப் பிரிக்கிறது. இதைச் சரியாகப் புரிந்துகொள்வது மிக அவசியம்.
1. மூல கன்மம் அல்லது காரண கன்மம்:
இதுவே "கன்மத்தின் விதை" அல்லது "காரண நிலை" (Causal State).
ஆணவத்தைப் போலவே, இந்த மூல கன்மமும் ஆன்மாவுடன் அநாதியாக, அதாவது தொடக்கம் இன்றி, பிணைந்துள்ளது. ஆணவம் நெல்லை சூழ்ந்திருக்கும் "உமி" என்றால், இது "முளை" போன்றது.
இது ஒரு "நிலைத்த" (Static), உறங்கும், ஆற்றல் வடிவ (Potential) சேமிப்புக் கிடங்கு. ஆன்மா எண்ணற்ற பிறவிகளில் சேர்த்த "சஞ்சித கன்மம்" (Sanchita Karma) என்று அழைக்கப்படும் ஒட்டுமொத்த தொகுப்பும் இங்கு தான் உறங்கிக் கிடக்கின்றன.
நாம் செய்யும் செயல்கள் முதலில் புத்தியில் வாசனையாகப் பதிந்தாலும், அவை இறுதியில் அழியாத 'சஞ்சித கன்மமாக' மாறி, இந்த மூல கன்மம் என்ற மாபெரும் கிடங்கில்தான் நிரந்தரமாகச் சேமிக்கப்படுகின்றன
இது தானாகச் செயல்படாது. அறிவற்ற சடப்பொருள். இது வெறுமனே இருக்கிறது. ஆன்மா, ஆணவ இருளிலிருந்து விடுபட்டு, தனது வினைகளை அனுபவிக்க வேண்டும் என்ற தேடலுக்கு இதுவே மூல காரணமாக அமைகிறது.
மூல கன்மம் அல்லது காரண கன்மம் என்பது ஒரு பெரும் கணினி "வன் தட்டில்" (Hard Drive) சேமிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான கோப்புகள் (Files) போன்றது. அந்தக் கோப்புகள் (சஞ்சிதம்) உறங்கிக் கிடக்கின்றன. அந்த ஹார்ட் டிரைவ் தானாக இயங்காது; அது ஒரு "காரணம்" மட்டுமே.
2. கன்ம மலம் அல்லது காரிய கன்மம்:
இதுவே "கன்மத்தின் செயல்பாடு" அல்லது "காரிய நிலை" (Effect / Action State)
இதுவே அந்த மூல கன்மத்தை "இயக்கும் தத்துவம்" ஆகும். இது அந்த "காரணத்தை" (Cause) எடுத்து, அதை "காரியமாக" (Effect) மாற்றும் செயல்முறையாகும். இது ஒரு "இயக்க" (Dynamic) சக்தி. இதுவே ஆன்மாவைச் செயலில் பிணைக்கும் உண்மையான "மலம்" அல்லது "மாசு" என்று அழைக்கப்படுகிறது.
இந்த கன்ம மலம் என்ற இயக்கும் தத்துவம், இறைவனின் சக்தியால் இயக்கப்படும்போது, இரண்டு முக்கியச் செயல்களைச் செய்கிறது:
பழைய வினையை அனுபவிக்கச் செய்தல் (பிராரப்தம்): இது, மூல கன்மத்தில் (காரண கன்மம்) உள்ள சஞ்சிதக் கிடங்கிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்தெடுத்து, அதை இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக ஆன்மாவிடம் கொடுக்கிறது. இதை பிராரப்த கர்மம் என்போம். இதுவே நாம் அனுபவிக்கும் இன்ப, துன்பங்கள் (இது ஒரு காரியம் / Effect).
புதிய வினையைச் செய்ய வைத்தல் (ஆகாம்யம்): அதே சமயம், இது அமைத்துக் கொடுக்கும் இன்ப-துன்பச் சூழலில், ஆன்மா தனது ஆணவ மலத்தின் காரணமாக 'நானே செய்கிறேன்' என்ற அகங்காரத்துடன் எதிர்வினைபுரிந்து, புதிய செயல்களைச் செய்கிறது (இதுவும் ஒரு காரியம் / Action). இதை ஆகாமிய கர்மம் என்போம்.
மூல கன்மம் (காரணம்) என்பது "ஹார்ட் டிரைவ்" என்றால், கன்ம மலம் (காரியம்) என்பது அந்த ஹார்ட் டிரைவில் உள்ள கோப்புகளைப் படிக்கும் மற்றும் புதிய கோப்புகளை எழுதும் "மென்பொருள்" (Operating System) ஆகும். இந்த மென்பொருளின் இயக்கமே பிராரப்தமாகவும், ஆகாமியமாகவும் வெளிப்படுகிறது.
கன்மம் தானியங்கியானதா?
கன்மம் என்பது ஒரு தானியங்கி இயந்திரம் அல்ல. மூல கன்மமும், கன்ம மலமும் "சடம்" அதாவது அறிவற்றவை. ஒரு ஹார்ட் டிரைவோ அல்லது மென்பொருளோ தானாக இயங்காது; அதை இயக்க ஒரு இயக்குபவர் தேவை.
அதுபோலவே, அறிவற்ற கன்மத்திற்கு, "இந்த ஆன்மாதான் இந்த வினையைச் செய்தது" என்றோ, "இந்த வினைக்கான பலனை, இந்த நேரத்தில், இந்த இடத்தில், இந்த ஆன்மாவுக்குக் கொடுக்க வேண்டும்" என்றோ சுயமாகத் தெரியாது.
ஆகவே, கன்மத்தை நிர்வகிக்க ஒரு புத்திசாலி (Intelligent Agent) தேவை. அந்தக் குறிப்பிட்ட, பேரறிவுள்ள சக்தியே இறைவன் (பதி / சிவம்).
கர்மா எப்படி உருவாகிறது? (திரிகரணங்கள்)
கர்மா என்பது வெளியிலிருந்து வருவதில்லை. அது நம்மிடமிருந்தே மூன்று வழிகளில் உற்பத்தியாகிறது. இவற்றை 'திரிகரணங்கள்' என்பர்:
மனம் : எண்ணங்களால் உருவாக்குவது (பிறருக்கு நன்மை அல்லது தீமை நினைப்பது). 2.
வாக்கு : பேச்சால் உருவாக்குவது.
காயம் : உடலால் செய்வது.
இந்த மூன்றின் வழியாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கர்மாவாகப் பதிவாகிறது.
2. நல்வினை, தீவினை: இரண்டும் கைவிலங்குகளே.
நாம் செய்யும் செயல்களைச் சித்தாந்தம் இரண்டு வகையாகப் பிரிக்கிறது. இந்த இரண்டுமே ஆன்மாவைக் கட்டும் விலங்குகள் (Chains) தான் என்று கூறுகிறது.
தீவினை (பாவம்): இது இரும்பு விலங்கு. துன்பத்தைத் தரும்.
நல்வினை (அறம்): இது பொன் விலங்கு. இன்பத்தைத் தரும்.
எப்போது நாம் செயலின் முடிவில் வரும் இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவித்து (Equanimity), விருப்பு வெறுப்பின்றிச் செயல்படுகிறோமோ, அப்போது மட்டுமே இந்த விலங்குகள் உடையும். இந்தச் சமநிலையே புதிய கன்மம் உருவாவதைத் தடுக்கும் கவசம்.
கன்மம் உருவாகும் உளவியல் முறை
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வந்திருக்ககூடும். கன்மம் எப்படி எனக்குள் உருவாகிறது ?
கர்மா என்பது வெறும் வெளிப்புறச் செயல் மட்டுமல்ல; அது நம் மனதிற்குள் நிகழும் ஒரு நுட்பமான 'பதிவு செய்யும் செயல்முறை' (Psychological Recording Process) ஆகும். ஒரு சாதாரண நிகழ்வு, எப்படி நம் புத்தியில் அழியாத கன்மமாகப் பதிகிறது?
இதை 'அறிவு தோன்றும் முறை' வழியாக நான்கு படிகளாகப் புரிந்து கொள்ளலாம். நாம் கடந்த பகுதியில் பார்த்த பிரத்யட்ச பிரமாண அளவையை நினைவு படுதிக்கொள்ளுங்கள்:
ஒரு நிகழ்வு எப்படி கன்மமாக மாறுகிறது?
ஸ்மார்ட்போனில் வரும் ஒரு குறுந்தகவல் கூட எப்படி உங்களுக்குள் செயல்படுகிறது என்கிற உதாரணத்தின் மூலம் நான்கு நிலைகளாகப் புரிந்து கொள்வோம்.
1. வாயில் காட்சி (இந்திரிய அனுபவ நிலை)
இதுவே அனுபவத்தின் நுழைவாயில்.
இங்கு என்ன நடக்கிறது? உங்கள் மொபைல் திரையில் வெளிச்சம் வருகிறது; ஏதோ எழுத்துக்கள் தெரிகின்றன.
இங்கே மனம், புத்தி இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. "இது என்ன?" என்ற பெயர், மதிப்பீடு எதுவும் இல்லை.
இது வெறும் புலன்களின் வாயிலில் நிகழ்வது. இங்கே பந்தம் (பிணைப்பு) இல்லை.
2. மானதக் காட்சி (மனம்–புத்தி செயல்படும் நிலை)
அந்த அனுபவத்தோடு இப்போது மனமும் புத்தியும் இணைகின்றன.
இங்கு என்ன நடக்கிறது? "ஓ! இது என் நண்பர் ரமேஷ் அனுப்பிய மெசேஜ்" என்று புத்தி அடையாளம் காட்டுகிறது.
நபர் அடையாளம் காணப்படுகிறார். ஆனால் இன்னும் உணர்ச்சி பொங்கவில்லை. இது ஒரு தகவலாக மட்டுமே உணரப்படுவதால இங்கேயும் கன்மம் உருவாகவில்லை.
3. தன்வேதனை காட்சி (பழைய கர்மப்பதிவுகள் தூண்டும் 'ஆட்டோ-மோட்' நிலை)
இங்குதான் பழைய பதிவுகள் வேலை செய்யத் தொடங்குகின்றன.
இங்கு என்ன நடக்கிறது? 'ரமேஷ்' என்ற பெயரைப் பார்த்தவுடனேயே, உங்களுக்குள் ஏற்கெனவே புதைந்து கிடக்கும் பழைய கசப்பான அனுபவம் தூண்டப்படுகிறது.
தானியங்கி வினை (Auto-mode): நீங்கள் யோசிப்பதற்கு முன்பே, ஒரு கோபமோ அல்லது எரிச்சலோ தானாகவே பீறிட்டு எழுகிறது. "இவன் ஏன் அனுப்பினான்?" என்ற உணர்வு வருகிறது. இதுவே நீங்கள் விரும்பும் நபரென்றால் ஒரு இனிமை உருவாகிறது.
இந்த உணர்வு, உங்கள் பழைய கன்மத்தின் எதிரொலி. இது நடந்துவிட்டது. ஆனால் இதற்கு உங்கள் எதிர்செயல் என்ன மற்றும் இதை எப்படிக் கையாள்கிறோம் என்பதில்தான் சூட்சுமம் உள்ளது.
4. சம்ஸ்கார பதிவுகள் (புதிய கன்மம் பதியும் நிலை)
இதுவே இறுதி நிலை. மூன்றாவது நிலையில் எழுந்த உணர்ச்சியை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள்? அதை பொறுத்து கர்ம பதிவுகள் நடக்கும் பகுதி.
முதல் வழி : விழிப்புணர்வு இல்லாத எதிர்செயல் (Unconscious Reaction): அந்தக் கோபத்தில் நீங்கள் மூழ்கி, "இவன் மோசமானவன், இவனை சும்மா விடக்கூடாது" என்று அந்த உணர்ச்சியை இறுகப் பற்றினால், அது ஒரு புதிய வடுவாக/ பதிவாக உங்கள் ஆழ்மனதில் பதிகிறது. இதுவே ஆகாமியக் கன்மம்.
இரண்டாம் வழி : ஆன்ம விழிப்புணர்வு நிலை : ஆனால், மூன்றாவது நிலையில் கோபம் வரும்போதே, உங்கள் ஆன்ம விழிப்புணர்வு செயல்பட்டால் என்ன நடக்கும்?
அந்த 'இடைவெளி' (The Pause): "என் மனம் பழைய நினைவால் கோபப்படுகிறது; ஆனால் நான் மனம் அல்ல, நான் அதைப் பார்ப்பவன்" என்ற ஆன்ம விழிப்புணர்வு அங்கே எழுகிறது.
ஆன்மா அந்த உணர்ச்சியைத் தனது என்று பற்றிக்கொள்ளாமல், ஒரு சாட்சியாக நின்று வேடிக்கை பார்க்கிறது.
அங்கே பதிவு நடக்காது. அந்த உணர்ச்சி வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும்.
பதிவின் வலிமை: நீர், மணல், கல்
நாம் அனுபவிக்கும் எல்லா உணர்வுகளும் ஒரே மாதிரியான கர்மாவாக மாறுவதில்லை. 'தன்வேதனை' நிலையில் நாம் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறோம் என்பதைப் பொறுத்தும் அதற்கு நாம் ஆற்றும் எதிர்வினையைப் பொறுத்தும் அது மூன்று வகையாகப் பதிகிறது:
சலரேகை (நீர் மேல் எழுத்து): உள்ளத்தின் வலிமையான எதிர்செயல் இல்லாமல் செய்யும் செயல்கள் நீரில் கிழித்த கோடு போல உடனே மறைந்துவிடும். இது கர்மாவாகத் தங்காது.
சிகதாரேகை (மணல் மேல் எழுத்து): கொஞ்சம் உணர்ச்சியோடு செய்வது. இது தற்காலிக வடுவை உண்டாக்கும். விழிப்புணர்வால், யோகப்பயிற்சியால், இறைவழிபாட்டால் இதை அழித்துவிடலாம்.
சிலாரேகை (கல் மேல் எழுத்து): மிகத் தீவிரமான விருப்பு வெறுப்போடு (Strong Likes/Dislikes) செய்வது. இது பாறையில் உளி கொண்டு செதுக்கியது போல 'ஆழ்மனதில்' ஆழமாகப் பதிந்துவிடும். இதுவே பிறவிக்குப் பிறவி தொடரும் வினை. இதிலிருந்து விடுபட தீவிர ஆன்ம விழிப்புணர்வும் யோகம் தியானம் போன்ற பயிற்சிகளும் தேவை.
இதுவரை நாம் பார்த்தது நிகழ்காலத்தில் நாம் செய்யும் செயல்களால் உருவாகும் கர்மப்பதிவுகள். இவற்றை ஆகாமிய கர்மம் என்போம். இந்த நல்வினை, தீவினை இரண்டும் பாவ புண்ணியங்களாக புத்தி தத்துவத்தில் பதிந்து அதன் வழியாக சஞ்சித கர்ம மூட்டையாக சேர்ந்து கொண்டே செல்கிறது. இந்த பாவ புண்ணிய பதிவுகள் பக்குவமடையும் போது பிராரப்த கர்மமாக அதாவது இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களாக நம்மை வந்தடைகிறது. கர்மப்பதிவுகள் இருக்கும் வரை உயிர் சட்டையை மாற்றுவது போல் திரும்பத் திரும்ப உடலெடுத்து அதை அனுபவிக்கிறது. நாம் புரிந்து கொள்ள வேண்டியது நல்ல செயல்களும் கர்மபதிவை உருவாக்கும். தீய செயல்களும் அப்படித்தான். என்ன, நல்ல செயல்களால் நல்ல பலன்கள் வரக்கூடும். ஆனால் முடிவில்லாத இந்த ஆட்டம் நிற்காது. கீழேயுள்ள வரைபடம் இந்த சுழற்சியை விளக்குகிறது.
கன்மச் சுழற்சி வரைபடம் (Vicious Cycle of Karma)
சஞ்சிதம் (Storage): நாம் பல பிறவிகளாகச் சேர்த்த 'கல் மேல் எழுத்துக்களின்' மொத்தத் தொகுப்பு.
பிராரப்தம் (Destiny): சஞ்சிதத்திலிருந்து இந்தப் பிறவிக்கு என்று ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி. இதுவே நம் இப்போதைய வாழ்க்கைச் சூழலும் நம்மை அடையும் இன்பதுன்பமும்.
ஆகாமியம் (New Actions): பிராரப்தத்தை அனுபவிக்கும் போது, நாம் மீண்டும் விருப்பு வெறுப்பு வயப்பட்டு புதிதாகச் செய்யும் செயல்களால் உருவாகும் கர்மா.
நவீன உளவியல் பார்வை: கார்ல் யுங் (Carl Jung)
இதை நவீன உளவியலோடு ஒப்பிடுவது மிகப்பொருத்தமானது. உளவியல் மேதை கார்ல் யுங் (Carl Jung) கூறும் கருத்துக்கள் சித்தாந்தத்தின் கன்ம அடிப்படைகளுடன் ஒப்பு நோக்க சுவாரஸ்யமானது.
அவர் கூறும் ஒரு வாக்கியம் 'பிராரப்தம்' (விதி) எப்படி வேலை செய்கிறது என்பதற்கு மிகச்சிறந்த விளக்கம்:
"எதுவரை உங்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் பதிவுகளை (The Unconscious) நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையோ, அதுவரை அந்தப் பதிவுகளே உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும்; அதைத்தான் நீங்கள் 'விதி' என்று அழைப்பீர்கள்."
கார்ல் யுங் மட்டுமல்ல, நியூரோ சயின்ஸ் கூட இதை உறுதி செய்கிறது. ஹெப்ஸ் விதி " நாம் திரும்பத் திரும்பச் செய்யும் செயல்கள் மூளையில் ஆழமான பாதைகளை (Neural Pathways) உருவாக்குகின்றன. இந்த பாதைகளே நம்மை அறியாமல் நம்மை இயக்குகின்றன "என்று சொல்கிறது. இதையே சித்தாந்தம் "வாசனாமலம்" என்கிறது.
மேலும், விக்டர் பிராங்க்ள் (Viktor Frankl) எனும் உளவியல் அறிஞர் " மனத்தில் ஏற்படும் தூண்டுதலுக்கும் (Stimulus) பதில் விடைக்கும் (Response) இடையில் ஒரு இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியில் விழித்திருப்பதே சுதந்திரம்" என்கிறார்.
நாம் இறுதிப்பகுதியில் கொடுத்திருக்கும் பயிற்சி முறையில் இந்த அம்சங்களை காணலாம்.நவீன உளவியல் சைவ சித்தாந்தம் பற்றி பேசவில்லை. ஆனால் இரண்டும் ஒரே விஷயதைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் அணுகி ஒரே முடிவுக்கு வருவதை பார்க்கிறோம்.
"முதல் வினை" எப்போது தொடங்கியது?
பலருக்கும் வரும் முக்கியமான கேள்வி இது: “ஆன்மா ஆரம்பத்தில் (கேவல நிலையில்) அறிவும் செயலும் இன்றித் தூங்கிக்கொண்டிருந்தது என்றால், அது எப்படி ‘முதல் வினையை’ச் செய்திருக்க முடியும்? வினை செய்யாமல் அதற்கு எப்படி ‘முதல் உடல்’ கிடைத்திருக்க முடியும்?”
முதலில் வினையினால் மட்டுமே உடல் உயிருக்கு கிடைக்கிறது என்பது தவறான புரிதல்,
இதற்கு விடை காண, ஒரு “இயந்திரவியல் சுழற்சி நீர் மின் நிலையத்தை” (Mechanical Pumped Storage Plant) உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
இந்த ஆலையில் மின்சாரம் கிடையாது. இது முழுக்க முழுக்க எந்திர விசையால் இயங்கும் ஒரு சுழற்சி அமைப்பு. இதன் அமைப்பைப் புரிந்துகொண்டால், நம் வாழ்க்கையின் புதிர் புரிந்துவிடும்.
சுழலி (Turbine): நீரின் விசையால் சுழலும் சக்கரம் (இதுவே உடல் பொருந்திய ஆன்மா).
ஏற்றி (பம்ப்-Pump): நீரை மேலேற்றும் கருவி (இதுவே புதிய வினைப் பதிவு).
அச்சு & கிளட்ச் (Shaft & Clutch): டர்பைனும் பம்ப்பும் ஒரே அச்சில் இணைக்கப்பட்டுள்ளன. நடுவில் ஒரு ‘கிளட்ச்’ உள்ளது. இந்த கிளட்ச் இணைந்திருந்தால் மட்டுமே பம்ப் சுழலும். இதுவே ஆணவக் கலப்பால் ஏற்படும் அகங்காரம் உள்ளிட்ட குற்றங்களின் தொகுப்பு.
இப்போது இந்த இயந்திரம் செயல்படும் 4 கட்டங்களைப் பார்ப்போம்:
கேவலம்: இயந்திரம் ஓய்வில் இருத்தல் (The Standstill)
மலையின் உச்சியில் உள்ள அணைக்கட்டில் நீர் (சஞ்சித கன்மம்) நிரம்பி வழிகிறது. ஆனால் மதகுகள் மூடப்பட்டுள்ளன. இப்போது தண்ணீர் இருக்கிறது; ஆனால் டர்பைன் ஓடவில்லை. எங்கும் இருள்.
ஆன்ம நிலை: ஆன்மா ஆணவ இருளில், அறிவும் செயலும் இன்றி ஒரு பாறை போலக் கிடக்கிறது.
2. முதல் இயக்கம்: ஆப்பரேட்டரின் கருணை (The First Push)
இந்த இயந்திரம் தானாக இயங்காது. ஒரு ஆப்பரேட்டர் (இறைவன்) வந்து, முதல் முறையாக அந்த மதகின் கதவைச் சற்றுத் திறந்து விடுகிறார்.
* முக்கியமான குறிப்பு: டர்பைன் கேட்டதால் அவர் திறக்கவில்லை; தேங்கி நிற்கும் நீரை இயக்கவே அவர் திறக்கிறார். இதுவே இறைவன் ஆன்மாவுக்குக் கருணையால் வழங்கிய வாய்ப்பு.
3. சகலம்: முடிவற்ற சுழற்சி (The Infinite Loop)
இப்போது நீர் குழாய் வழியே வந்து டர்பைனைத் தாக்குகிறது.
டர்பைன் சுழல்கிறது (வாழ்க்கை): நீர் மோதுவதால் டர்பைன் வேகமாகச் சுழல்கிறது. இந்தச் சுழற்சியே நாம் அனுபவிக்கும் இன்ப-துன்ப வாழ்க்கை (பிராரப்தம்).
பம்ப் இயங்குகிறது (ஆகாமியம்): இங்குதான் சிக்கல். டர்பைனுக்கும் பம்ப்பிற்கும் நடுவில் உள்ள கிளட்ச் (அகங்காரம்) இணைக்கப்பட்டுள்ளதால், டர்பைன் சுழலும் அதே வேகத்தில் பம்ப்பும் சுழல்கிறது.
சுழற்சி: அந்த பம்ப், கீழே விழும் நீரை எடுத்து, குழாய் வழியாக மீண்டும் மேலே உள்ள அணைக்கே ஏற்றுகிறது.
டர்பைன் ஓடுவதாலேயே, பம்ப் இயங்கி அணைக்கட்டை மீண்டும் நிரப்புகிறது. அணைக்கட்டு நிரம்புவதால், நீர் வருவது நிற்பதில்லை. எனவே, இயந்திரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு என இடைவிடாமல் ஓடுகிறது.
4.எப்போது இந்த முடிவில்லாத சுழற்சி நிற்கும் ?
அனுபவம் நடந்தால் → பந்தம் அல்லது கர்ம பிடிப்பு உருவாகிறது → புதிய கன்மம் சேர்கிறது →சுழற்சி தொடர்ந்து ஓடுகிறது.
இந்தச் சுழற்சி எப்போது மாறத் தொடங்குகிறது?
முதல் மாற்றம் – உங்கள் விழிப்பு
அனுபவத்தை விழிப்புடன், சமநிலையுடன் பார்க்கத் தொடங்கினால்,“எனக்கு / என்னுடையது” என்ற பிடிப்பு தளர்கிறது. ஒரு காரில் கிளட்ச் பெடலை மிதிப்பது போல, உங்கள் விழிப்புணர்வு எனும் நெம்புகோலைக் கொண்டு அந்தப் பிடிப்பைத் துண்டிக்கிறீர்கள். அந்த விழிப்புணர்வு இருக்கும் வரை, கிளட்ச் பிரிந்தே இருக்கும்; பம்ப் ஓடாது. அனுபவம் நடக்கும்;ஆனால் புதிய கன்மம் சேராது.ஆகாமிய கன்மம் நிற்கத் தொடங்குகிறது. இந்த ஆன்ம விழிப்புணர்வை வளர்ப்பதும் கூர்மையாக்கிகொண்டே செல்வதும் தான் உண்மையான யோகம் மற்றும் தியான பயிற்சிகளின் நோக்கம். ஞான நூல்களின் நோக்கமும் அதுவே.
இரண்டாவது : அருள்
இந்த நிலையில் பக்குவம் வளரும்போது,இறைவனின் திருவருளால் அணைக்கட்டிலிருந்து புதிய நீர் குழாய்க்கு வரும் முக்கிய வால்வு மூடப்படுகிறது. இனி சஞ்சிதம் புதிய ஓட்டமாகத் திறக்கப்படாது. இதற்கு சில வழிகள் சித்தாந்தம் கூறுகிறது.
இப்போது வாழ்க்கையில் பிராரப்தம் மட்டும் அதாவது உடலெடுத்து வாழும் இந்த பிறவியில் அனுபவித்து கழித்தாக வேண்டிய பகுதி மட்டுமே எஞ்சியிருக்கும். இதை விழிப்போடு அனுபவித்து கழிக்கும் இந்த வாழ்வு நிலையை தான் பொதுவாக “ஜீவன் முக்தி நிலை” என்று சொல்வார்கள். அதாவது வாழும்போதே விடுதலை .
வாழ்க்கை நடக்கிறது; ஆனால் புதிய கர்ம பந்தங்கள் சேரவில்லை.
இறுதியில் குழாயில் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் பிராரப்த நீர் தீரும் போது,டர்பைன் தானாகவே நிற்கிறது.
சுழற்சி முடிகிறது.
செய்முறை பயிற்சி : உங்கள் கன்மச் சங்கிலியை எப்படிக் கண்டுபிடிப்பது?
இப்போது நாம் கற்றுகொண்டவற்றை நம் வாழ்க்கையில் பயன் படுத்துவது எப்படி என்று பார்ப்போம். கடந்த ஒரு வாரத்தில்,நீங்கள் தெரிந்தே செய்த ஒரு செயலை நினைவில் கொண்டு வாருங்கள்.
அந்தச் செயலில்,
நீங்கள் இருந்தீர்களா?
அல்லது உங்கள் பழக்கம் இருந்ததா?
"என் கன்மம் என்ன?" என்று தெரிந்து கொள்ள ஜோதிடரிடம் செல்ல வேண்டியதில்லை. உங்களை அறியாமலே உங்களை இயக்கும் அன்றாடப் பழக்கவழக்கங்களே (habit Patterns) உங்கள் கன்மத்தின் வெளிப்பாடு.
உங்களைக் கட்டிப்போட்டிருக்கும் அந்தப் பழக்கங்களைக் கவனிக்க ஒரு சிறிய பயிற்சி:
படி 1: அன்றாடப் பழக்கங்கள்
சின்ன சின்ன விஷயங்களில் உங்கள் விருப்பு வெறுப்புகளையும் அவற்றின் தாக்கத்தையும் கவனியுங்கள்.
"காலை 6 மணிக்குக் காபி குடிக்காவிட்டால் தலைவலி வந்துவிடும்" என்பது வெறும் பழக்கம் அல்ல; அது உங்கள் மேல் நீங்களே உருவாக்கிய 'கட்டுப்பாடு' (Binding).
"பாகற்காயா? எனக்குப் பிடிக்கவே பிடிக்காது" என்பது சாதாரண மறுப்பு அல்ல; அது ஒரு 'வெறுப்புப் பதிவு' .
இவைதான் உங்கள் வினையின் சிறிய ஆனால் தீவிரமான வடிவங்கள்.
படி 2: நவீன காலப் பதிவு
இன்றைய காலத்தில் நம்மைக் கட்டிப்போட்டிருக்கும் புதிய கன்மம் - ஸ்மார்ட்போன்.
காலையில் கண் விழித்ததும், பல் துலக்குகிறோமோ இல்லையோ, கை தானாக 'வாட்ஸ்அப்' அல்லது 'இன்ஸ்டாகிராம்' பார்க்கச் செல்கிறதா?
ஒரு வேலையில் இருக்கும்போது, ஃபோனில் ஒரு 'நோட்டிஃபிகேஷன்' சத்தம் கேட்டால், உடனே அதை எடுத்துப் பார்த்தே ஆகவேண்டும் என்ற பதற்றம் வருகிறதா?
சிறிது நேரத்துக்கு ஒருமுறை கை தானாகவே ஃபோனை தேடுகிறதா ?
இதுவே 'வாசனை'. அறிவு வேலை செய்வதற்கு முன்பே, பழைய பதிவு (Conditioning) உங்களை பொம்மை போல இயக்குகிறது.
தீர்வு:
விழிப்புணர்வோடு நாளை ஒரு நாள் மட்டும், காபியைத் தவிர்த்துப் பாருங்கள். அல்லது காலையில் முதல் 15 நிமிடங்கள் ஃபோனைத் தொடாமல் இருந்து பாருங்கள்.
மனம் "ஐயோ! வேண்டும்" என்று அலறினால், அந்த அலறலை வேடிக்கை பாருங்கள். அடக்க முயலாதீர்கள். பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு இதுதான். மனதில் நீங்கள் விரும்பாத ஏதாவது எண்ணமோ உணர்ச்சியோ நடந்தால் அதை தடுக்கவோ அடக்கவோ முயல்வது தான். இது உங்கள் பிரச்சினையை அதிகமாக்கும். எப்போது எதிர் செயல் செய்யவேண்டும் என்ற அந்த உந்துதலை (Urge) நீங்கள் வெற்றி கொள்கிறீர்களோ, அப்போதே உங்கள் 'ஆகாமியக் கன்மம்' உடைபட ஆரம்பிக்கிறது. இதை திரும்ப திரும்ப பல விஷயங்களில் பயன்படுத்தி பாருங்கள்
இன்பம், துன்பம் இரண்டையும் ஒரு பார்வையாளர் மன நிலையிலிருந்து சமமாகப் பாவிப்பதே "இருவினை ஒப்பு" என்கிற சித்தாந்தம் சொல்லும் தீர்வு. இந்தப் பக்குவம் வரும்போது, பழைய வினைகள் கழன்று விழும்; புதிய வினைகள் ஒட்டாது. இதுவே பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பிக்கும் வழியாகும். இந்தப் பயிற்சி அதை நோக்கி உங்களைச் செலுத்தும்.
0 comments:
Post a Comment