Tuesday, September 16, 2025

சித்தாந்த வினா விடை- தொடர் 5 - அருணைவடிவேல் முதலியார்

சித்தாந்த வினா விடை 1

சித்தாந்த வினா விடை 2

சித்தாந்த வினா விடை 3

சித்தாந்த வினா விடை 4

அளவைகளும் மதங்களும்

'காட்சி, கருதல், உரை' என்னும் மூவகை அளவைகளில், உலகாயதர் காட்சியளவை (பிரத்தியட்சப் பிரமாணம்) ஒன்றை மட்டுமே ஏற்றுக்கொள்வர். ஏனைய அளவைகளை  ஏற்க மாட்டார்கள்.

மாணவன்: 'உலகாயதர்' எனப்படுவோர் யார்?

ஆசிரியர்: 'உலகம் ஒன்றே உண்டு; ஏனைய உயிர், இறைவன் முதலிய பொருள்களுள் ஒன்றும் இல்லை' என்போரே உலகாயதர். முதன்மையான பொருள்களை, 'இல்லை' எனக் கூறுதலால், இவர் 'நாத்திகர்' எனப்படுவர்.

மாணவன்: உலகாயதர் உரையளவையேயன்றி அனுமான அளவையைத் தானும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், புகையைக் கண்டபோது, 'இங்கு நெருப்பு உண்டு' என்று, அதனைப் பாராமலே இவர் உணரமாட்டாரோ?

ஆசிரியர்: உணர்வர், ஆயினும் அவ்வாறு உணர்வதையும் அவர், 'காட்சி' எனக் கொள்வர், 'அனுமானம்' எனக் கொள்வதில்லை.

மாணவன்: அனுமானத்தை, அவர், 'காட்சி' என்பது எவ்வாறு?

ஆசிரியர்: புகையுள்ள இடத்திலெல்லாம்  நெருப்பு இருப்பது பல இடங்களில்  காட்சியால் உணரப்பட்டதே, ஆகையால், ஓர் இடத்தில்  நெருப்பைக் காணாது புகையை மட்டும் கண்டு நெருப்பு உண்டு எனத் துணிதலும் காட்சி பற்றித் துணிதலே என்பர் அவர்.

மாணவன்: அப்படி கூறுதலில் தவறு என்ன?

ஆசிரியர்: அதில் தவறு யாதும் இல்லையோ? ஓர் இடத்தில் நெருப்பைக் கண்ணாறகண்டு, 'இங்கு நெருப்பு உள்ளது' என உணர்வதும், நெருப்பைக் காணாது புகையை மட்டும் கண்டு இங்கும் நெருப்பு உள்ளது' என்று உணர்வதும் ஆகிய இரண்டும் ஒன்றுதானோ? 'ஒன்றுதான்” என்றால், விளக்கை ஓர் இடத்தில் அதன் ஒளியினால் மனங்கவரப்பட்டுத் தீண்டி, அது சுடுதலை மெய்யினால் உற்றறிந்த ஒருவன், பிறிதோர் இடத்தில் விளக்கைக் வெறும் கண்களால் மட்டும் கண்டு அதை  பற்றித் தீண்டாது, அதன் முன் நின்றே இது சுடும் எனத் துணியுமிடத்தும் முன் தீண்டியது போல அந்தச்  சூட்டினால் தாக்குண்டது போல அவன் தாக்குண்ணுதல்  வேண்டும்.

அவ்வான்றி, 'தீண்டியறிந்ததும் வேறே; தீண்டாது கருதி அறிந்ததும் வேறே என்பது அவர்களுக்கு இரண்டும் ஒன்று தான் என்பது போல. ஆகவே, பொருள்களை நேரே காணாமல், ஓர் ஏதுவைக்கொண்டு கருதியுணரும் உணர்வையும் 'காட்சியுணர்வே' எனக் கூறுவது, கூற்றுப் போலியே என்பது தெளிவாகின்றதா?

 மாணவன்: ஆம்! ஆம்!! நன்கு தெளிவித்தருளினீர்கள்! கருதலளவையையும், 'காட்சியளவையே' எனக் கூறுதல் அறிவுடையோர்க்கு சிரிப்பு வரவழைப்பது  என்பதை இப்போது நன்கு உணர்கின்றேன். ஆகவே, உலகாயதர் கருதலளவை பற்றி அறியாது, அதை ஏற்றுக்கொண்டு, 'யாம்' கருதலளவையை ஏற்பதில்லை' எனக் கூறுகின்றனர் என்பது விளங்குகின்றது.

உரையளவையையும் இவ்வாறு தம்மை அறியாது அவர் ஏற்றுக்கொள்கின்றனரோ?

ஆசிரியர்: 'ஆகமப் பிரமாணம்' எனப்படும் உரையளவையை உலகாயதர் இவ்வளவு தெளிவாக உடன்படவில்லை" ஆயினும், ஒருவாறு உடன்பட்டே வருகின்றனர்.

மாணவன்: அது எவ்வாறு?

ஆசிரியர்: 'கடவுள் உண்டு; நல்வினை தீவினை உண்டு; சுவர்க்கம் நரகங்கள் உண்டு; மறுபிறப்பு உண்டு' என்பன போலக் கூறும் வாக்கியங்களை உலகாயதர் ஏற்றுக் கொள்ளாது இகழ்ந்தாலும், சோதிட நூல், மாந்திரீக நூல், மருத்துவ நூல் (வைத்திய சாத்திரம்) முதலியவற்றை ஓர் அளவிலேனும் உடன் படவேண்டியவராகின்றனர். ஏனெனில், அவற்றில் சொல்லப் பட்டவை பயன்தருதல் அவர்க்கும் சில சில சமயங்களில் அனுபவமாகின்றது. அப்பொருள்கள் 'காட்சி கருதல்களால் அறிய வராது' என்பதை அவரும் உணர்வர். ஆகவே, அனுபவத்தில் மெய்யாகக் காணப்படுவதை மெய்யல்ல என்று கூறினால், அவர்கள் உண்மைகள் பலவற்றை இழப்பர்.

இனி, பௌத்தர் மூன்று அளவைகளையும் உடன்பட்டே, உரையளவை வேறு அளவையன்று, அனுமானமே' என்பர். ஆகவே, அவர் 'காட்சி, கருதல் என அளவை இரண்டே' எனக் கொள்வர்.

மாணவன்: உரையளவையாகிய ஆகமப் பிரமாணத்தை அவர் அனுமானப் பிரமாணம் என்பது எவ்வாறு?

ஆசிரியர்: அதாவது, நாம் 'மரம் பூத்தது'  என்ற சொற்கள் மூலம் இயல்பு ஏதுவைக் கொண்டு, அப்பொருளைக் காணாமலே உணர்வதை அனுமானம் எனக் கூறியதுபோல, பௌத்தர்கள், 'நூலை, ஏதுவாகக் கொண்டு நூற்பொருளை உணர்தலும் அனுமானமே' என்பர்.

மாணவன்: அவர் கூற்றுப் பொருந்தாதவாறு இருப்பது  எப்படி?

ஆசிரியர்: அனுமானமாவது, துணியப்படும் பொருளோடு அதனைத் துணிதற்கு ஏதுவாய் உள்ளபொருள் எவ்விடத்தும் விட்டு நீங்காது உடன் நிகழ்தலை உணர்ந்த பின் நிகழ்வது. ஆனால், காட்சி என்பது  கருதல்களால் அறியப்படாது. உரையளவையினாலே அறியப்படுவனவாகிய மேலுலகம் கீழுலகம் முதலிய வற்றோடு, நூலாகிய ஏதுப்பொருள் உடன் நிகழ்தலை நாம் நூலையுணர்தற்கு முன்னர் உணருமாறில்லை; நூலால் அவற்றை உணர்ந்து, உணர்ந்தவாறே துணிகின்றோம்; ஆகையால், நூல் ஏதுவும், அதிற்சொல்லப்படும் பொருள் துணிபொருளும் ஆகாது. ஆகவே, உரையளவை அனுமான அளவை இல்லை. இனி, மரம் முதலிய பொருள்களையும், அவை 'மரம்' முதலிய பெயர்களாலேயே குறிக்கப்படுவன என்பதையும் முன்னர் உணர்ந்து, அதன்பின்னே, 'மரம்' முதலிய சொற்களை பொருளாகக் கொண்டு அப்பொருள்களை உணர்தலால், அது அனுமானமாம். எனவே, 'காட்சி, கருதல், உரை என்னும் மூன்றளவைகளும் இன்றிமையாத அளவைகளாகும்.

உலகாயதரும், பௌத்தரும் தவிர ஏனையோர் அனைவரும் எல்லா அளவைகளையும் உடன்படுவர். இங்கு மற்றொன்றை உணர்தல் வேண்டும். அதாவது, பௌத்தர் ஆகமப்பிரமாணத்தையும் அனுமானம் என்பர். அதுபோலத் தார்க்கிகர், மரம் முதலிய சொற்கள் பற்றி மரம் முதலிய பொருள்களை உணர்தலாகிய அனுமானத்தையும் உரையளவை; அஃதாவது 'சத்தப் பிரமாணம்' என்பர். காட்சியளவையினாலும், கருதலளவையினாலும் அறிய முடியாத பொருள்களை அறிவிப்பதே உரையளவை ஆகையால், மரம் முதலியன காட்சி முதலியவற்றால் அறியப்படுவனவாய் இருந்தாலும், மரம் முதலிய பொருள்களை மரம் முதலிய சொற்களைச் கொண்டு உணர்தல் உரையளவையாகாது; அனுமான அளவையாகும்.

மாணவன்: அளவைகள் பற்றி அறியவேண்டியது  இவ்வளவுதானா?

அளக்கப்படும் பொருளியல்பு

ஆசிரியர்: இல்லை, இன்னும் சில உள்ளன; இதுவரை அளவைகள் பற்றிச் சில கூறினோம்; இனி அளக்கப்படும் பொருள்களது (பிரமேயங்களது) இயல்பு பற்றிச் சில கூறுதல் வேண்டும்.

மாணவன்: அவை இன்றியமையாதனவாயின், அவைகளையும் தெரிவித்தருளல் வேண்டும்.

ஆசிரியர்: மேற்கூறிய அளவைகளைக்கொண்டு பொருள்களை அறியுமிடத்து அப்பொருள்கள் இருவகையில் அறியப்படும். அவை, 'பொதுவியல்பு சிறப்பியல்பு' என்பன.

மாணவன்: பொதுவியல்பு, சிறப்பியல்பு  என்பன யாவை?

ஆசிரியர்: பொருள்களின் இனம், 'தன்னினம்' வேற்றினம்' என இரண்டு உண்டு. எடுத்துக்காட்டாக  'மாமரம்' என்னும் பொருளுக்கு, 'பலா, புளி' முதலிய மரங்கள் யாவும் தன்னினம்; விலங்கு, பறவை, மக்கள் முதலிய பொருள்கள் யாவும் வேற்றினம். இவற்றுள், வேற்றினத்தில் இல்லாது தன் இனம் முழுவதிலும் உள்ள தன்மை பொதுவியல்பு; வேற்றினத்திலும் இல்லாது, தன் இனத்திலும் இல்லாது தன்னிடத்தில் மட்டும் உள்ள தன்மை சிறப்பியல்பு. 

எடுத்துக்காட்டாக:- 'மாமரம்' என்னும் பொருளில் 'மா' என்னும் தன்மையும், 'மரம்' என்னும் தன்மையும் ஆக இரு தன்மைகள் உள்ளன: அவற்றுள் 'மரம்' என்னும் தன்மை விலங்கு, பறவை, முதலிய வேற்றினங்களில் இல்லாது 'பலா, புளி' முதலிய தன் இனம் எல்லாவற்றிலும் இருப்பதால், அது பொதுவியல்பு.

 'மா' என்னும் தன்மை, 'விலங்கு, பறவை' முதலிய வேற்றினத்திலும் இல்லாது, 'பலா புளி' முதலிய தன் இனத்திலும் இல்லாது, தன்னிடத்தில் மட்டும் இருத்தலால், அது சிறப்பியல்பு. ஆகவே, 'மாமரம்' என்னும் பொருளை நாம் அறியுமிடத்து முதற்கண் 'மரம்' என்னும் பொதுத்தன்மையும், பின்னர் 'மா, என்னும் சிறப்புத் தன்மையும் ஆகிய இருவகையில் அறிகின்றோம். இதையே சிறப்பியல்பு, தன்னியல்பு' என்று சொல்லப்படும்.

இவ்வாறு, ஒரு பொருளை, பொதுவியல்பு வகையிலும், சிறப்பியல்பு வகையிலும் அறியும் அறிவே பிரமாணமாகும். இவ்விரண்டு வகையிலும் அன்றி 'மாமரத்தை' 'மனிதன்' முதலியன போல, வேற்றியல்பு வகையில் ஒருவனது அறிவு அறியுமாயின் அவ்வறிவு சிறிதும் பிரமாணமாகாது, முற்றிலும் "அப்பிரமாணமேயாம்". மாமரத்தை 'புளியமரம்' என்பதுபோலப் பொது வியல்பை உள்ளவாறு அறிந்து, சிறப்பியல்பைப் பிறழ அறியுமாயின், அவ்வறிவு, ஒரு வகையில் (பொதுவியல்பில்) பிரமாணமாயும், ஒரு வகையில் (சிறப்பியல்பில்) பிரமாணம் அன்றியும் இருக்கும்.

மாணவன்: ஒருவன் தனது அறிவினால் ஒரு பொருளை அறியுமிடத்து, அவ்வறிவைத் தவிர அவனுக்கு வேறு கருவி இல்லாமையால், அவ்வறிவு அப்பொருளை உள்ளவாறு அறிகின்றது அல்லது தவறாக அறிகின்றது என்பதை அறிவது எப்படி?

ஆசிரியர்: இது அளவை இயலில் ஒரு முதன்மையான வினா. இதற்குத் தார்க்கிகர் முதலியோர், 'ஒருவனது அறிவு பொருள்களை அறியுமிடத்து, அது உண்மையறிவு அல்லது பொய்யறிவு என்பது, அவ்வறிவின் வழியே முயன்று, குறித்த பயனை அடைதல் அல்லது அடையாமையால் பின்னர் அறியப்படும்' என்பர். அப்படிக் கூறின், 'அப்பயன்தானும் உண்மை அல்லது பொய் என்பது எவ்வாறறியப்படும்?' என்னும் வினா எழும். அங்ஙனம் எழும் வினாவிற்கு, 'அதுவும் வேறொரு வகையாலே அறியப்படும்' என விடை கூற வேண்டிவரும்; அவ்வாறு கூறின், மேலும் அவ்வினா நிகழ, இப்படி வரம்பின்றி வினா எழுந்து கொண்டே இருக்கும். ஆதலால், ஓர் அறிவு, தான் பிரமாணம் என்பதைத் தானே அறியும்; பிரமாணம் இல்லையென்பதை மட்டும் வேறொன்றால் அறியும் என்பதே சித்தாந்தமாகும்.

'பொதுவியல்பு, சிறப்பியல்பு' என்பன பொருள்களை நுனித்து நோக்கும் வகைக்கேற்ப வேறு வேறாய் நுணுகிச் செல்லும். எடுத்துக்காட்டாக, 'இது மாமரம்; அது பலாமரம்' என உணருமிடத்து, மரத்தன்மை பொதுவியல்பு; மாத் தன்மையும் பலாத் தன்மையும் சிறப்பியல்பு. 'இது தேமாமரம், அது புளிமா மரம்' என உணருமிடத்து; மாமரத் தன்மை பொது வியல்பு; தேத் தன்மையும் புளித் தன்மையும் சிறப்பியல்பு. 'இத்தேமா மரம் நன்று; அத்தே மாமரம் தீது' மிடத்து தேமாமரம் முழுவதும் பொதுவியல்பு; 'இது அது எனச் சுட்டுதற்கு ஏதுவாய் நின்ற தன்மை சிறப்பியல்பு. 

 தார்க்கிகர், பொதுவியல்பை, 'சாமானியம் அல்லது சாதி' என்றும், சிறப்பியல்பை, 'விசேடம் அல்லது இலக்கணம்' என்றும் கூறுவர். இவ்விடத்தில் ஒன்றை இன்றியமையாது உணர்தல் வேண்டும். அளவை நூல் முறைப்படி கூறப்படும் 'பொதுவியல்பு சிறப்பியல்பு' என்பது வேறு! சைவசித்தாந்தம் தனது நெறியிலே தான் கூறும் 'பொதுவியல்பு, சிறப்பியல்பு' என்பது வேறு; அவற்றுள் அளவை நூல் முறைப்படி சொல்லப்படும் பொதுவியல்பு சிறப்பியல்புகளே இங்குச் சொல்லப்பட்டன; சைவசித்தாந்தம் கூறும் பொதுவியல்பு சிறப்பியல்புகளைப் பின்னர்க் கூறுவோம்.

கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு

0 comments:

Post a Comment