துரியம் கடந்த சுடர் 1
துரியம் கடந்த சுடர் 2
துரியம் கடந்த சுடர் 3
“நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?”
“ஆம், குழந்தை... உன்னைக் காண்பதைப் போலவே அவரைக் கண்டிருக்கிறேன். உன்னை காண்பதை விட இன்னும் தீர்க்கமாக, இன்னும் அழுத்தமாக, இன்னும் தெளிவாக”.
நம் பாரத தேசத்திற்கு என ஒரு ஆன்மா இருப்பதாக எனக்கு எப்போதுமே தோன்றும். இத்தேசம் தத்தளித்த பொழுதுகளில் எல்லாம் கைத்தூக்கி விடவும், இம்மண்ணிலேயே தகுந்தவர்களை உருவாக்கி முன்னகரச் செய்யவும் இம்மண்ணின் மைந்தர்களான நம்முடன் தோன்றாத் துணையாக இருக்கும் ஒரு பேரிருப்பாக அதை நான் உணர்ந்திருக்கிறேன். புறவயமான தொல்லியல் ஆதாரங்கள், கால வரிசையை முன்வைத்த நவீன வரலாற்றில் பாரதத்தின் முதல் பேரரசான மௌரியப் பேரரசு துவங்கி, சாதவாகன பேரரசு, குப்த பேரரசு என தொடர்ந்து ஹர்ஷரின் பேரரசு வரை, பாரதத்தின் பெருநிலம் தொடர்ந்த வேத நெறி பாலிக்கப்பட்ட ஆட்சிகளுக்கு உட்பட்டிருந்தது. இந்த பேரரசுகளின் வீழ்ச்சிகளுக்குப் பிறகு இந்நிலத்தின் பெரும் அரசாக தக்காணத்தை ஆண்ட சாளுக்கிய அரசு மட்டுமே இருந்தது. அதைத் தவிர பிற அனைத்தும் சிறு நிலப்பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த அரசுகள். அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் ஒரு தேக்கம். இவ்வாறு பாரத தேசமே தனித்தனியாகப் பிரிவுண்டு கிடந்த காலத்தில் தான், ஏழாம் நூற்றாண்டு முதல், தெற்கே திருஞானசம்பந்தர் முதலான நாயன்மார்கள் துவங்கி, ஆழ்வார்கள், சைதன்ய மகாபிரபு, மீராபாய் என நீண்ட பக்தி இயக்கம் இப்பெருநிலம் எங்கும் பரவி அனைத்து மக்களையும், அவர்களின் குலம், வர்ணம் பாராமல் ஒன்றிணைத்து இம்மண்ணில் பெருந்தெய்வங்களை நிலைநிறுத்தி பேரரசுகள் அமைய வழிகோலியது. பக்தி இயக்கம் வழியாக ஒரு திரண்ட மைய வழிபாடு இந்நிலத்தில் உருவாகி வந்தது. மக்கள் திரளின் தெய்வங்கள் அன்று நிலவிய ஆறு பெருமதங்களின் கடவுளர் நிரையில் சென்று அமர்ந்தன. நிலையான அவ்வரசுகள் கலை, தத்துவம், அறிவியல் என மானுடம் மலர வழிகோலின. பக்தி இயக்கம் துவங்கி பரவத் துவங்கிய ஒரு நூற்றாண்டு காலத்தில், அதாவது எட்டாம் நூற்றாண்டில் சங்கரர் என்னும் மகாஞானி மண் நிகழ்ந்து இங்கு திகழ்ந்த ஆறு சமயங்களையும், ஆறு தரிசனங்களையும் ஒன்றிணைக்கும் தத்துவ அடித்தளத்தை உருவாக்கி பாரத நிலமெங்கிலும் அருவமாக திகழ்ந்து கொண்டிருந்த அக ஒருங்கிணைவை முழுமையான புறவய பண்பாட்டு ஒருங்கிணைவாக்கினார். அவருக்குப் பின் வந்த ராமானுஜர், மத்வர், நிம்பார்க்கர் என நீண்ட ஞானிகளின் நிரை கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் இம்மண்ணில் தத்துவ விவாதங்களை நிகழ்த்தி அந்த ஒருங்கிணைவை மேலும் செழுமைப்படுத்தினர். இவர்கள் ஒருபுறம் முழுமையான தர்க்க ரீதியான தத்துவ புலத்தையும், அதன் மறுபுறமாக அனைத்து மக்களுக்குமான சமய வழிபாட்டு முறைகளையும் ஒருங்கு படுத்தி அளித்தனர். அன்னியப் படையெடுப்புகளால் இம்மண்ணின் தரிசனங்களும், தத்துவ விரிவுகளும், இந்து மரபுகளும் சிதையத் துவங்கிய போது சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமை ஆசிரியரான வித்யாரண்யர் எழுந்து வந்து ஹரிஹர் மற்றும் புக்கர் என்னும் இரு சகோதரர்களின் மூலம் இந்து ஞான மரபுகளையும், இந்து சமயத்தையும் மீட்டெடுத்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை தோற்றுவித்தார். இந்த காலங்களுக்குள் பக்தி இயக்கம் இந்நிலம் முழுமையையும் பாரதப் பண்பாடு என்ற ஒற்றைச் சரடில் கோர்த்து விட்டுருந்தது. அதன் பிறகு முகலாயப் பேரரசு, பாளையங்கள், ஜமீந்தார்கள், ஆங்கிலேயர் ஆட்சி என ஆட்சிகளும், அடக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மக்கள் ஒரு புறம் பண்பாட்டால் ஒன்றிணைந்து இருந்தனர். இந்த பண்பாட்டு ஒருங்கிணைந்து தான் நம்மை இன்றும் ரத்தம் உலராமல் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்காவில் இருந்து நம்மை வேறுபடுத்துகிறது. ஆனால் அதையும் அசைத்துப் பார்த்தது ஆங்கிலேயர் ஆட்சிகாலங்களில் நிகழ்ந்த தொடர்ச்சியான பஞ்சங்களும், அதன் விளைவான பட்டினியும். வாழ்வதே பெருஞ்சவால் என்று ஆன தேசத்தில் மதமென்ன, மரபென்ன, தரிசனமென்ன, தத்துவம் என்ன!! மீண்டும் அனைத்தும் அழிந்து கொண்டிருந்தன. மாபெரும் ஆன்ம வீழ்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருந்தது. அதைக் கண் முன் என கண்டவர்கள் மேலைத் தேய அறிஞர்கள். அவர்களுக்கு இந்தியா மற்றொரு ஆப்பிரிக்காவாகத் தான் தோன்றியிருந்தது. எனவே தான் விடுதலைக்குப் பின் இந்தியா ஒன்றாக இருக்காது எனவும், இங்கு ரத்தம் உலரப் போவதில்லை எனவும் எழுதினர். அவ்வாறு தான் நிகழும், நிகழ்ந்தாக வேண்டும் என்றும் எதிர்பார்த்திருந்தினர். நிகழவில்லை என்ற போது ஏமாறவும் செய்தனர். தவிர்க்கவே இயலாது என்றும், தடுக்கவே இயலாது என்றும் இருந்த அந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் மரபான பாரதத்தை மீட்டெடுத்த இம்மண்ணின் மகத்தான ஞானியர் நிரையில் அமர்ந்த ஒரு மாமனிதர் தன் குருவை கண்டடைந்த திருப்புமுனை தருணத்தில் நிகழ்ந்த உரையாடல் தான் நாம் துவக்கத்தில் கண்டது.
நான் முன்பே சொன்ன நம் தேசத்தின் ஆன்மா அந்த வீழ்ச்சியைத் தடுக்க தகுதியான ஒருவரை கண்டடைந்திருந்தது. நவீன கல்வி முறையில் முதன்மை மாணவராகவும், தனிப்பட்ட வாழ்வில் பிறவியில் இருந்தே தியானம் கைகூடியவராகவும் இருந்த தகிக்கும் ஞான சூரியன் அவர். தான் அடைந்த அத்தனை ஞானங்களின் உலகியல் விளைவு என்பது அனைத்துயிரிகளின் மீதான பெருங்கனிவே என கனிந்தவர் அவர். “வயிறு காய்ந்தவர்களுக்கானதல்ல மதம்” என மானுட சேவையையே தான் நிறுவிய மடங்கள் அனைத்திற்கும் முதல் கடனாக வைத்தவர். மேலைக் கல்வி அவரிடம் இயல்பாகவே இருந்த தர்க்கத்தை மேலும் கூர்மைப் படுத்தி இருந்தது. நாம் கண்ட அந்த உரையாடலின் முதல் கேள்வியோடு தகித்துக் கொண்டிருந்தார் அவர். பிரம்ம சமாஜம் முதல் பல்வேறு ஞானிகள், துறவிகள் என பலரிடமும் அந்த கேள்வியையும், அதைத் தொடர்ந்த உப கேள்விகளையும் கேட்டு தன்னால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பதிலைக் கண்டடையாமல் தவித்துக் கொண்டிருந்தார். நண்பர்கள் ஊகித்திருப்பீர்கள். ஆம், இத்தேசத்தின் மீது கவிந்திருந்த அஞ்ஞான இருளை போக்க உதித்த ஞான சூரியனான சுவாமி விவேகானந்தர் தான் அவர். அவர் தன் குரு ராமகிருஷ்ணரை அவரது தட்சிணேஸ்வர ஆலயத்தில் முதன் முதலில் சந்தித்தபோது கேட்ட கேள்வி தான் அது. அதற்கு அவர் அளித்த பதிலில் அது நாள் வரை தன் தர்க்கத்தை மீறிய எந்த பதிலையும் ஏற்றுக் கொள்ளாத அவர் அப்பதிலில் தன் தேடலின் முடிவைக் கண்டு கொண்டார். அப்பதிலிறுத்தவரை தன் குருவாக ஏற்றும் கொண்டார்.
சுவாமி விவேகானந்தரின் கேள்வியை சற்று ஆழமாக நோக்குவோம். அவரது வினா கடவுளைக் காண முடியுமா என்பது தானே அன்றி கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதல்ல. கடவுளின் இருப்பு குறித்து அவருக்கு எந்த ஐயமும் இல்லை. நேர்மாறாக அவரைக் காண இயலுமா என்ற குழந்தையின் ஆர்வமே அந்த வினாவில் தொக்கி நிற்கிறது. நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்தது போல் ஒன்றுடன் ஒன்று நேரடியாகவோ, ஏதேனும் ஒரு மறைமுக சரடாலோ எவ்விதத்திலும் தொடர்பற்ற, தனித்துவமான, அவையவற்றிற்கென பிரத்யேக தன்மையையுடைய நிகழ்வுகள், உயிரினங்கள், பருப்பொருட்கள், வானியல் கோளங்கள், நட்சத்திரங்கள், தாரகைத் தொகுதிகள்(Galaxy), அவை உலாவும் இப்பெரு ககனப் பெருவெளி என அனைத்தும் முற்றிலும் ஒத்திசைந்து, ஒன்றையொன்று நிரப்பிக் கொண்டு, எண்ணவும் இயலாத ஒரு பெரு நியதிக்கு உட்பட்டு இலங்கிக்கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம் என்னும் புடவி நிகழ்விற்குப் பின்னால் நிச்சயம் ஒரு படைப்பு சக்தி இருக்கும். எனவே கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு நாமும் வந்துவிடலாம். எனவே சுவாமிஜியின் வினாவில் இருந்தே நாமும் துவங்கலாம்.
இங்கே இன்னும் சில கேள்விகள் வரலாம். அந்த படைப்பு சக்தி ஆண்பாலா? பெண்பாலா? அல்லது ஏதேனும் ஒரு பாலடையாளத்துடன் தான் இருக்கவேண்டுமா? சரி படைத்தவரைப் பற்றி தான் இவ்வளவு குழப்பம் என்றால், படைக்கப்பட்ட இந்த புடவி என்பது என்ன? எதனால் ஆக்கப்பட்டது? எங்கிருந்து வந்தது? இப்படி ஒரு புடவியைப் படைக்க என்ன நோக்கம்? இவையெல்லாம் இன்று நேற்று கேட்கப் பட்டவை அல்ல. இம்மண்ணில் மானுடம் சிந்திக்கத் துவங்கிய தொல்பழங்காலத்தில் இருந்தே கேட்கப்பட்டவை தான். எனவே தான் இந்த வகைக் கேள்விகளுக்குப் பதில் தேட நாம் நம் மரபின் ஞானச் சுரங்கமான வேதாந்தங்களைத் நாட வேண்டும். நம் மண்ணில் தோன்றிய அத்துணை மரபுகளுக்கும், தத்துவங்களுக்கும், தரிசனங்களுக்கும், சமயங்களுக்கும், தெய்வங்களுக்கும் வேதங்களும், அவற்றின் இறுதியான வேதமுடிபு என்றழைக்கப்படும் வேதாந்தமுமே அடிப்படை. அனைத்தும் அவற்றை ஏற்றோ, மறுத்தோ, விரிவாக்கம் செய்தோ தான் இம்மண்ணில் நிகழ்ந்தன. சைவ சித்தாந்தத்திற்கும் பொதுப் பிரமாணம் வேதமே. அனைத்து வகை அத்வைத தத்துவங்களுக்கும் வேத, வேதாந்தங்களே அடிப்படை. அத்வைதத்தை முன்வைத்த சங்கரரும் சரி, விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்த ராமானுஜர், பின்பு வந்த மத்வர், வல்லபர் போன்ற அத்வைத பள்ளியினர் மட்டுமல்லாமல் காஷ்மிர சைவத்தின் தத்துவ அடிப்படைகளை வரையறுத்த அபிநவகுப்தர் உட்பட அனைத்து ஞானிகளும் வேதமுடிபின் உச்சங்களுள் ஒன்றான கீதைக்கு தத்தமது பார்வையில் உரை எழுதியவர்கள் தாம். அந்த உரைகளின் ஊடாகவே அவர்கள் தத்தமது தத்துவங்களையும், தரிசனங்களையும் ஒருங்கு திரட்டிக் கொண்டனர். எனவே இந்த புடவி உருவாக்கத்தைக் குறித்த நம் தேடலை வேதமுடிபில் இருந்து தான் துவங்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக பிரபஞ்சத் துவக்கம் குறித்து அறிவியல் என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.
[2]
இந்த புடவி எங்ஙனம் உருவானது? மேற்கத்திய அறிவியலாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலும் கூட இந்த புடவி இப்படி இருப்பது போன்றே என்றென்றைக்கும் இருந்து கொண்டிருப்பதாகத் தான் நம்பி வந்தனர். அந்த கருதுகோளின் படி இப்புடவி என்பது மாறாத, நிலையான ஒரு நிகழ்வு. அதற்கு தோற்றமும், வளர்ச்சியும், அழிவும் கிடையாது. அதாவது இந்த புடவியில் நாம் காணும் ஒவ்வொரு நட்சத்திரமும், தாரகைக் தொகுதிகளும் அவையவற்றின் இடத்தில் அப்படியே சுழன்ற்கொண்டே இருக்கும் என்றது இந்த கருதுகோள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுழி வடிவ தாரகைக்தொகுதிகள்(Spiral Galaxies) நம் பூமியில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றன என்ற கண்டடைதல் அந்த கருதுகோளை வலுவாக அசைத்துப் பார்த்தது. அந்த விலகலின் வேகத்தை அளந்து காட்டிய கணித சமன்பாடுகள் அந்த கருதுகோளின் ஏற்பை கேள்விக்குறியாக்கின. எனவே இவற்றைக் கண்டடைந்த வானியலாளர்கள் தோற்றமும், முடிவும் அற்ற ‘நிலைப்புடவி’ என்ற கருதுகோளுக்குப் பதிலாக இப்புடவி ஒரு ஆதியணு ஒன்றில் இருந்து தோன்றி, வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற மாற்று கருதுகோளை முன்வைத்தனர். அது தான் தற்போதைய அறிவியலில் இந்த பிரபஞ்சத் தோற்றம் பற்றி பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘பெருவெடிப்புக் கொள்கை’ எனப்படும் பிக்பேங் தியரி. அந்த கொள்கைக்கு ‘பெரு வெடிப்பு – Big Bang’ என்ற பெயர் வந்தது மிகச் சுவாரசியமான ஒரு கதை. ஒரு வானொலி உரையாடலில் ‘நிலைப்புடவி’ கொள்கைக்கு ஆதரவாக பேசிய வானியலாளர் ஒருவர், அதை மறுத்து முன்வைக்கப்பட்டிருந்த ஒரு ஆதியணுவில் இருந்து தோன்றியது தான் புடவி என்ற கருதுகோளை நையாண்டி செய்யும் விதமாக அதை ‘பெருவெடிப்புக் கொள்கை’ என்றழைத்தார். முரணாக அந்த பெயரே அக்கொள்கைக்கு நிலைத்து விட்டது. நாம் மேற்கண்ட தாரகைத் தொகுதி விலகலை அளக்கும் சமன்பாடுகளை காலத்தில் பின்னிழுத்துக் கொண்டு சென்று தோராயமாக இப்புடவி உருவான அந்த முதல் கணத்தைச் சென்றடைந்தனர் அவர்கள். அதன் படி சுமார் 13.8 பில்லியன், 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகச் சிறிய, கருத்துக்கும் எட்டாத அளவு சிறிய ஒன்று இருந்தது. அளவிடவியலா அந்த மீச்சிறிய ஒன்றிற்குள் அளவிறந்த ஆற்றலும், அளவிறந்த பொருண்மையும், அளவிறந்த அடர்த்தியோடு, அந்த ஆற்றலையும்(Energy), பொருண்மையையும்(Matter) ஒன்றிணைக்கும் அளவிறந்த அழுத்தத்தில் குடிகொண்டிருந்தன. அந்த ஒன்றை அறிவியல் Singularity – ஒருண்மை என்றழைக்கிறது. எண்ணியிரா மகாகணம் ஒன்றில் அந்த ஒருண்மை அளவிறந்த விசையோடு வெடித்துச் சிதறியது. அக்கணத்தில் இந்த பிரபஞ்சம் பிறந்தது. அக்கணம் துவங்கி இந்த பிரபஞ்சம் விரிந்து பரவத் துவங்கியது. இப்புடவி எங்கும் நிறைந்திருப்பது அந்த ஒருண்மைக்குள் அடங்கியிருந்த பொருளும், ஆற்றலும் தான். பொருள் என்றதும் ஏதேனும் உருவுடைய பருப்பொருள் என்ற அர்த்தம் இல்லை. நாம் காணும் அனைத்து பருப்பொருட்களுக்கும் ஆதாரமாக அமைந்த அணுக்கள் கூட உருவாகாத காலம் அது. அணுக்களின் உள்ளிருக்கும் நேர்மின், எதிர்மின் மற்றும் மின்னிலி போன்ற துகள்களும் கூட உருவாகாத காலம். அந்த ஒருண்மைக்குள் இருந்த பொருள் என்பது இந்த நுண்ணணு துகள்களுக்கும் அடிப்படையாக அமைந்த துகள்கள். அவை துகள்களா, ஆற்றலா என்று கூட தெரியாதவாறு, கணத்துக்கொரு தன்மை கொண்டிருந்த காலம் அது. எனவே தான் அதை பொருள் என்று ஆகச் சாத்தியம் உள்ள நுண்மை என்ற வகையில் பொருண்மை என்றழைக்கிறோம். அந்த ஆற்றலும், பொருண்மையும் அப்பெரு வெடிப்பிற்குப் பின் ஒன்று இரண்டென, இரண்டு நான்கென, நான்கு எட்டென பல்கிப் பெருகி இப்புடவியை நிறைக்கத் துவங்கின. அப்படி பல கோடி வருடங்கள் அவை அப்படி பெருகிக் கொண்டிருந்தன. அதன் பிறகு அவை இணைந்து இன்று இருக்கும் அடிப்படை அணுத்துகள்கள், அதன் விளைவான அணு என ஆகின. அப்படியாக முதல் வாயுவான ஹைட்ரஜன் தோன்றியது. ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து எடை மிக்க வாயுக்களும், பின்னர் திரவங்களும் இறுதியாக கடின உலோகங்கள் எல்லாம் உருவாகத் துவங்கின. கடினமாகும் தோறும் பெரு மேகங்களும், கோள்களும், நட்சத்திரங்களும் என புடவி முழுவதும் நிறையத் துவங்கிய போது சில பல நூறு கோடி ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அப்படியாக நம் சூரியக் குடும்பம் தோன்றி, குளிர்ந்து, பூமி உருவாகி, அதுவும் குளிர்ந்து இன்றிருக்கும் நிலை ஏற்பட்டு இதை வாசித்துக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற மனித இனம் தோன்ற 1380 கோடி ஆண்டுகள் ஆகி விட்டிருக்கின்றன. நாம் சென்ற பதிவில் கண்டது போல, இன்றிருக்கும் மானுடர்களின் மூதாதை தோன்றி வெறும் மூன்று லட்சம் வருடங்கள் தான் ஆகின்றன என்னும் வகையில் நாம் தான் இப்புடவியின் மிக இளைய உயிரினங்கள், பொருட்கள்!! புவியில் இருந்து விலகிச் செல்லும் தாரகைத் தொகுதிகள் இந்த பெருவெடிப்புக் கொள்கைக்கான அசைக்கவியலா ஆதாரமாக மாறி இந்த கொள்கையை தற்போது வரை அறிவியல் அரங்கில் புடவியின் தோற்றம் குறித்த பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாக மாற்றியிருக்கிறது. நம் புடவிக்கு ஒரு துவக்கத்தை காலத்தில் கண்டடைந்த போது மானுடம் அதுவரை சேகரித்து வைத்திருந்த அறிதல்கள் அனைத்தையும் ஒரு கோர்க்கும் ஒரு அறிவுச் சரடு நமக்கு கிடைத்தது. நாம் மேற்கண்ட நிகழ்வுகள் இன்றும் புடவியின் ஏதேனும் ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். ஆற்றலும், பொருண்மையும், அவையிணைந்து உருவான நட்சத்திரங்களும், தாரகைத் தொகுதிகளும் பரவி, விரிந்து கொண்டே, ஒன்றை விட்டு ஒன்று விலகி சென்று கொண்டேயிருக்கின்றன என்பதெல்லாம் சரி... அவை அப்படி எதில் விலகி, பரவிக் கொண்டிருக்கின்றன?
பெருவெடிப்பு கொள்கை எனக்கு முதன்முதலாக அறிமுகமானது என் பள்ளிப்பருவத்தில். என் தந்தை அவர் பணியாற்றிய இந்திய விண்வெளி ஆராய்ச்ச்தி நிறுவனத்தின் நூலகத்தில் இருந்து மாதாமாதம் கலைக்கதிர் என்ற அறிவியல் இதழை எடுத்து வருவார். வழவழப்பான, கண்ணைக் கவரும் அறிவியல் புகைப்படங்கள் அடங்கிய அட்டைகளுடன், அபாரமான பதிப்புத் தரத்துடன் எழுத்தாளர் சுஜாதாவின் வணிக எழுத்துக் கொடையான ஆர்வமூட்டும், சிக்கலான விஷயங்களையும் அதன் வீச்சு நீர்த்து விடாத எளிய நடையில் பல அறிவியல் கட்டுரைகள் அந்த இதழில் வந்து கொண்டிருந்தன. என்னுடைய அறிதலின் எல்லைகளை விசாலப்படுத்தியதில் அவ்விதழின் பங்கு மிக அதிகம். அதில் சமீபத்தில் மறைந்த, தமிழில் அறிவியல் எழுத்தை மட்டுமே முன்னெடுத்துச் சென்ற, பல அறிவியல் கலைச் சொற்களை அறிமுகம் செய்த, நெல்லை சு. முத்து அவர்களின் கட்டுரை ஒன்றின் மூலம் அறிமுகமானது இந்த புடவித் துவக்க நிகழ்வான பெருவெடிப்பு. அந்த வயதில் உருவான அறிதலின் பெரும் பரவசங்களுக்குப் பின், பெருவெடிப்பைப் பற்றி புரிந்து கொண்டதை மீளாய்வு செய்து பார்த்ததில் இரு கேள்விகள் எழுந்து வந்தன. அந்த முதல் கேள்வி தான் சென்ற பத்தியில் நாம் கண்டது. அதற்கான பதிலாக அந்த கட்டுரை கூறியது, இப்புடவியில் தான் என்பதே. அதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. எனவே அந்த கேள்வியை அப்படியே வைத்திருந்தேன், அதற்கான பதில் என்னைத் தேடி வரும் வரை. சில வருடங்களுக்குப் பிறகு இயற்பியலில் நுபுணரான என் தந்தையின் அலுவலக நண்பர் ஒருவர் அதை எனக்குப் புரியும் படி விளக்கினார். அந்த ஒருண்மைக்குள் அடங்கியிருந்த ஆற்றலும், பொருண்மையும், இந்த நட்சத்திரங்களும், தாரகைத் தொகுதிகளும் இப்பிரபஞ்சத்திற்குள் இருக்கும் ககனவெளியில் (space) தான் பரந்து விரிந்து சென்றுகொண்டிருக்கின்றன. அதை அவர் இப்படி விளக்கினார். நீங்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். பேருந்து வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. அந்த பேருந்திற்குள் உங்களால் நடக்க இயலும் அல்லவா. அந்த பேருந்து தான் இப்பிரபஞ்சம், அதில் பயணம் செய்யும் நீங்கள் தான் அந்த ஆற்றலும், பொருண்மையும். இப்போது அவை அந்த பிரபஞ்சத்திற்குள் பரவிச் செல்கின்றன. அந்த உவமானம் அவை பரவும் இடத்தைப் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது. கூடவே அடுத்த கேள்வியையும் உருவாக்கியது. நான் பேருந்தின் இறுதி இருக்கையில் இருந்து நடக்கத் துவங்குகிறேன் என வைத்துக் கொள்வோம். ஒரு பதினைந்து அடி வைத்தால் பேருந்தின் முதலிருக்கையை அடைந்து விடுவேன். அதன் பிறகு எங்கு நடப்பது? அறிவியல் அந்த தாரகைத் தொகுதிகள் இன்னும் விலகிச் சென்று கொண்டிருக்கின்றன என்று அல்லவா சொல்கிறது. அப்படி எனில் இப்புடவியும் விரிந்து கொண்டே இருக்கிறதா? ஆம். அதை அவர் பின்வரும் உவமானத்தால் விளக்கினார். ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறு கடுகை இடுங்கள். இப்போது அந்த பலூனை ஊதுங்கள். பலூன் விரிய விரிய பலூனுக்குள் மேலும் மேலும் இடம் கிடைத்துக் கொண்டே இருக்கும் அல்லவா!! அந்த இடங்களிலும் கடுகு செல்ல இயலும் அல்லவா!! ஊத ஊத விரிந்து கொண்டே இருக்கும் பலூன் போல இந்த பிரபஞ்சமும் விரிந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு விரிய விரிய இப்பிரபஞசத்துள் ஆற்றலும், பொருண்மையும், தாரகைத் தொகுதிகளும் விரியத் தேவையான புது ககனவெளியும் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆம் இந்த பிரப்ஞ்சம் பிறந்த அப்பெருவெடிப்பிற்குப் பின்பே வெளி என்பதும் பிறந்தது. நாம் கண்ட பலூன் உவமானத்தில் பலூன் விரிய ஊதப் படும் காற்று உருவாக்கும் விசை காரணம். அது அந்த பலூனுக்கு வெளியே இருந்து பலூனுக்குக் கடத்தப் படுகிறது. நம் புடவி இவ்வாறு விரிந்து கொண்டே இருப்பதற்கான விசை எங்கிருந்து வருகிறது? வேறு எங்கு இருந்து, பெருவெடிப்பில் இருந்து தான். இங்கே நம் பிரபஞ்சம் உருவான ஒருண்மையில் அளவிறந்த ஆற்றலும், அளவிறந்த பொருண்மையும், அளவிறந்த அழுத்தத்தில் குடியிருந்தன எனக் கண்டோம். எனவே அந்த ஒருண்மை வெடித்துச் சிதறிய போது அதனுள் குடியிருந்த அனைத்தும் வெடித்துச் சிதறின. அவ்வாறு அவை சிதறத் தேவையான அளவிறந்த அழுத்தமும் அதனுள் இருந்ததால் தான் பிரபஞ்சம் இன்றும் விரிந்து கொண்டே செல்கிறது. பிரபஞ்சம் விரிய விரிய அதனுள் வெளியும் உருவாகிக் கொண்டே இருக்கிறது. வெளியும், அதில் ஆற்றலும், பொருண்மையும் பரவத் தேவையான விசையும் உருவாகி வந்த அந்த கணத்திலே தான் இந்த விசை, வெளி இரண்டையும் இணைக்கும் காலமும் பிறந்தது. அப்படியாக நம் கற்பனைக்கும், அறிவுக்கும் புலனாகும் ஆற்றல், பொருள், வெளி (இடம்), காலம், விசை என அனைத்தும் பிறந்தது அந்த ஒருண்மையின் வெடிப்பு கணத்தில் தான். அவ்வாறெனில் இவ்வைந்தும் ஒருண்மைக்குள் கருநிலையில் அடங்கியிருந்திருக்கின்றன, மாபெரும் ஆலமரம் ஒன்று அத்தனை சிறிய விதைக்குள் அடங்கியிருப்பதைப் போல. அந்த ஒருண்மைக்குள் இவ்வைந்திற்கும் இடையே வேறுபாடு இருந்ததா, இல்லை அனைத்துமே ஒன்றாகத் தான் இருந்ததா என்பதையெல்லாம் அறிவியல் இன்னும் முழுமையாகக் கண்டடையவில்லை.
எனக்கு இரண்டு கேள்விகள் இருந்தன என்று சொல்லியிருந்தேன் அல்லவா. அதில் முதல் கேளிவிக்கான பதிலையும், அதன் தொடர்ச்சியான சில விளக்கங்களையும் நாம் கண்டோம். இரண்டாவதாக ஒரு கேள்வி இருந்தது. பெருவெடிப்பிற்கு முன் இருந்த அந்த ஒருண்மை எங்கு இருந்தது? மேலே கண்ட விளக்கத்தின் படி இந்த புடவி விரிந்து கொண்டிருக்கிறது என்றால், அது எதில் விரிந்து கொண்டிருக்கிறது? இதன் கூடவே தோன்றிய துணைக் கேள்வி, அந்த ஒருண்மை எப்படி தோன்றியது? என் தந்தையின் நண்பர் கைகளைத் தூக்கிவிட்டார். நாம் அறிந்த அறிவியலின் எல்லை இது. இக்கேள்விகளுக்கு நாம் அறிந்துள்ள தற்போதைய அறிவியலால் பதிலிறுக்க இயலாது. ஏன்?
[3]
மேலே நாம் கண்ட ஒருண்மையின் விவரிப்பில் மீண்டும் மீண்டும் வரும் ‘அளவிறந்த’ என்பதை எண்ணவே இயலாத அளவு, வரம்பே இல்லாத அளவு, அலகே இல்லாத அளவு, முடிவே இல்லாத அளவு, முடிவிலி அளவு உடைய என்றும் பொருள் கொள்ளலாம். முடிவிலி என்பதற்கான சமஸ்கிருத வார்த்தை அனந்தம் என்பதாகும். அந்தம் என்றால் இறுதி, முடிவு. வேத அந்தம் வேதாந்தம், வேதமுடிபு. அன் + அந்தம் என்றால், அந்தம் இன்மை, அந்தம் இலி, முடிவிலி. ஆங்கிலத்திலும் கூட முடிவிலி என்பதை ‘Infinite – In + Finite’ என்றே அழைக்கின்றனர். Finite என்ற வார்த்தைக்கு வரம்புடையது எனப் பொருள். In + Finite என்னும் பொழுது அது வரம்பு இல்லாதது, வரம்பிலி என்றாகிறது. கணிதத்தில் எந்த ஒரு எண்ணையும் பூச்சியத்தால் வகுத்தால் வருவது முடிவிலி என்று நாம் கற்றிருக்கிறோம் இல்லையா! பூச்சியம் என்பதை, ஒன்று முதல் பல்லாயிரம் கோடிகள் வரை பெரிய எண்களை எல்லாம் நம்மால் ஊகிக்கவும், உணர்ந்து கொள்ளவும் எளிதாக இயலும். ஆனால் முடிவிலி என்பதை? பொதுவாக முடிவிலி என்பதை ஆகப் பெரிய ஒன்றாகத் தான் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். ஆகப் பெரிய, இருப்பதிலேயே பெரிய, நம் எண்ணத்திற்கும், கற்பனைக்கும், கனவுக்கும் அப்பாற்பட்ட அளவே நம்மைப் பொறுத்தவரை முடிவிலி. முடிவிலி என்பது அலகிலியான, அளவேயில்லாத ஒன்று என்றால் அது பெரியதாகத் தான் இருக்க வேண்டுமா? மிக மிக மிக மீச்சிறிய ஒன்றிற்கும் இதே ‘அலகிலி’, ‘அளவிறந்த’ போன்ற அடைமொழிகள் பொருந்தத்தானே செய்யும். அப்படியெனில் அது சிறியதா? உண்மையில் பெரியது - சிறியது, மேல் - கீழ், முன் - பின், துவக்கம் – முடிவு, அளவை - அலகு போன்ற இருமைகள் எல்லாம் முடிவிலிக்குப் பொருந்துமா? பொருந்தாது என்றே தான் தோன்றுகிறது அல்லவா? எனவே தானே அவையெல்லாம் இல்லாதது என அதை அலகு இலி – அலகிலி, முடிவு இலி – முடிவிலி என்றழைக்கிறோம். முடிவிலி என்னும் போது அதற்கு துவக்கமும் இல்லை என்பது தான் உள்ளார்ந்த அர்த்தம்.
இப்போது ஒன்றை எண்ணிப் பாருங்கள். நான்கில் இருந்து மூன்றை எடுத்தால், எஞ்சுவது ஒன்று. நான்கில் இருந்து நான்கையே எடுத்தால் எஞ்சுவது பூச்சியம் அல்லது இன்மை. சரி முடிவிலியில் இருந்து முடிவிலியை எடுத்தால் என்ன எஞ்சும்? பூச்சியமா?? இல்லை. முடிவிலியில் முடிவிலியை எடுத்தாலும் முடிவிலியே எஞ்சும். இங்கே தான் நம் கற்பனை தள்ளாடுகிறது. ஒரு பொருள் இருக்கிறது. அதில் இருந்து அதையே அழித்துவிட்டால் அந்த பொருள் இல்லாமல் ஆவது தானே இயல்பு. அது தானே இவ்வுலகின் ஏன் பிரபஞ்சத்திற்குமே இயலும் பொருண்மை விதி. ஆனால் அந்த இயல்பு முடிவிலிக்கு பொருந்தாது. நம்மால் நாம் அறிந்த மொழிகளில் இருக்கும் எந்த வார்த்தையாலும், அடைமொழியாலும் சுட்ட இயலா ஒன்றை ‘நாம் அறிந்தவை இல்லை அது’ என்ற பொருள் வரும் வகையில் சுட்டப்படும் ஒன்றிற்கு நாம் அறிந்த இந்த பிரபஞ்சத்தின் விதிகள் பொருந்தி வராததில் எந்த வியப்பும் இல்லை அல்லவா? ஒரு முடிவிலிக்கே பொருந்தாத நம் பிரபஞ்சத்தின் விதிகள், ஆற்றல், பொருள், வெளி (இடம்), காலம், விசை என ஐந்து முடிவிலிகள் ஒன்றிணைந்து குடியிருந்த அந்த ஒருண்மைக்கு பொருந்துமா!! பொருந்தாது. சென்ற பதிவில் பரிணாமங்கள் என்ற ஒரு வார்த்தையை கண்டோம். நாம் அனைவருமே முப்பரிமாணம் என்பதை அறிந்திருப்போம். நீள, அகல, உயரங்களே அந்த மூன்று பரிமாணங்கள். இந்த பூமி, பிரபஞ்சம் அனைத்துமே இந்த மூன்று பரிமாணங்களில் அமைந்தவை தான். எனவே நம்முடைய இயற்பியல் விதிகள், அறிவியல் அனைத்தும் முப்பரிமாண வெளி, காலம் என்ற நான்கு பரிமாணங்களில் மட்டுமே செல்லுபடியாகத் தக்கவை. ஏனெனில் ஒரு மானுட அறிவிற்கு இவை மட்டுமே புலப்படும். (பெருவெடிப்பு கொள்கையின் சில விடுபடல்களை நிரப்பும் வகையில் 1960களில் முன்வைக்கப்பட்ட மற்றொரு கொள்கையான ‘தந்திக் கொள்கை – String Theory’ என்பதில் கிட்டத்தட்ட பதினொரு பரிணாமங்கள் பேசப்படுகின்றன. அவற்றிலும் நாம் கண்ட அந்த நான்கு பரிணாமங்களுக்கு மேல் மற்றவை எல்லாம் வெறும் கணிதச் சமன்பாடுகளாகவே எஞ்சுகின்றன. அவற்றைப் பற்றி பிறிதொரு பதிவில் இயலுமெனில் காணலாம்.) முடிவிலி என்பதே இந்த நான்கு பரிமாணங்களுக்குள் அகப்படாது என்றால், ஒருண்மை என்பதும் இவற்றுக்குள் அடங்காது இல்லையா!! முன்பே கண்டவாறு ஒருண்மைக்குள் அடங்கி இருந்த ஐந்து முடிவிலிகளில் வெளியும், காலமும் அடங்கும் என்னும் போது, அந்த வெளியும், காலமும் அந்த ஒருண்மை வெடித்த அந்த மகாகணத்தில் தான் பிறந்தன என்னும் போது, வெளியும், காலமும் இல்லாத ஒன்றிற்குள் அவற்றில் மட்டுமே செல்லுபடியாகும் நமது அறிவியல் விதிகள் எவ்வாறு பொருந்தும்!! எனவே தான் ஒருண்மை எங்கே இருந்தது? அது எப்படி உருவானது அல்லது எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விகளுக்கு நாம் அறிந்த அறிவியலால் பதில் சொல்ல இயலாது. அதுவே நம் அறிவியலின் எல்லை.
‘ஆன்மிகமில்லா அறிவியல் முடமானது; அறிவியல் இல்லா ஆன்மிகம் குருடானது’ – என்பது இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இயற்பியலாளரும், பிரபஞ்ச இயக்கவியல், பிரபஞ்சத்தின் துவக்கம் மற்றும் நாம் மேலே கண்ட ஒருண்மையில் அடங்கியிருந்தது இன்று பிரபஞ்சம் எங்கும் பரவி நிற்கிற ஆற்றல், பொருண்மை, வெளி, காலம், ஈர்ப்பு விசை என ஐந்து அடிப்படை கூறுகளையும் ஒன்றிணைக்கும் பொது சார்பியல் கொள்கை – General Relativity Theory உள்ளடக்கிய பல இயற்பியல் விதிகளைக் கண்டடைந்தவருமான ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் வரி. ஆம், அறிவியலின் எல்லையில் ஆன்மிகம் துவங்கத் தானே வேண்டும். அதுவும் எதையும் பகுத்தாராயும், தர்க்கத்தைத் தேடும் இந்த காலத்தில் வெறும் ஆன்மிக நோக்கில் மட்டுமே நம் தத்துவங்களையும், தரிசனங்களையும் பொருள் கொள்வது என்பது நம் அறிதலை கட்டுப்படுத்துவது அல்லவா. எனவே தான் சென்ற இரு பதிவுகளாக உயிரியல், பரிணாமம், இயற்பியல் என நாம் எழுப்பிக் கொள்ளும் அடிப்படைக் கேள்விகளுக்கான அறிவியல் கருதுகோள்களை சற்று விரிவாகவே பார்த்தோம். அதனூடாக அறிவியலின் எல்லைகளையும் அறிந்து கொண்டோம். இனி அறிவியலால் பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு நம் இந்திய மெய்ஞானம், குறிப்பாக சைவ சித்தாந்தம் என்ன வகையில் பதிலிறுக்கிறது என்பதை வரும் பதிவுகளில் காண்போம்.
கட்டுரையாளர்: அருணாச்சலம் மகாராஜன்
அருணாச்சலம் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருக்கிறார். பள்ளிப் பருவம் முழுவதும் கிராமத்திலேயே தமிழ் வழிக் கல்வியாக நிகழ்ந்தது. தந்தை வழி திருக்குறளும், சுவாமி விவேகானந்தரும் அறிமுகம். பள்ளியில் பயிலும் காலத்தில் ஊரில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சனிக்கிழமை தோறும் நிகழ்ந்த கம்பராமாயண வகுப்புகள் வாயிலாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார். தீவிர இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு மூலம் நுழைந்தார். வெண்முரசு நாவல் வரிசைகளுக்கு எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் வாயிலாக இந்திய ஞான மரபு, வரலாறு, தத்துவங்கள் ஆகியவற்றில் தன் தேடல்களை கண்டடைந்தார்.
0 comments:
Post a Comment