துரியம் கடந்த சுடர் 7 – பழைமைப் பெருஞ்சுடர்
[1]
மானுடர்களை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுவது எது? சென்ற பதிவில் பார்த்தவாறு மேலைத் தேய அறிவியலாளர்கள் நெடுநாட்களாக, 1960கள் வரையிலும் கூட, கருவிகளை உருவாக்கியதும், அவற்றை திறமையாகப் பயன்படுத்தியதுமே தான் மானுடர்களை, குறிப்பாக மானுட ஆண்களை, விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தியது என்றே எண்ணியிருந்தனர். அந்த எண்ணத்தில் மண்ணையள்ளி போட்டார் ஒருவர். ஒரு பெண். தனது இருபத்தாறாவது வயதில், வெறுமனே ஒரு தொலைநோக்கு ஆடியுடன், ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குப் பகுதியான தான்சானியா நாட்டில் இருக்கும் கோம்பே வனப்பகுதிக்கு 1960ல் வந்து சேர்ந்தார். சும்மா அல்ல, ஏழு கடல், ஏழு மலை தாண்டி, தான் பிறந்து வளர்ந்த இங்கிலாந்து நாட்டில் இருந்து கிளம்பி வந்திருந்தார் அவர். அந்த வனப்பகுதி எளிதில் அணுக இயலாதது. ஏனெனில் அதற்கு இன்றும் கூட முறையான சாலை கிடையாது. உலகின் மிக நீளமான ஏரியான டங்கன்யீகா ஏரியில் (அந்த ஏரி மொத்தமாக 660 கிலோமீட்டர் நீளம் கொண்டது) சில நூறு கிலோமீட்டர்களை படகில் பயணம் செய்து அந்த வனத்தை வந்தடைந்திருந்தார். எந்த ஒரு வசதியும் இல்லாத, அடர் வனம். வெறுமனே விலங்குகளை, குறிப்பாக மானுடர்களின் மிக நெருங்கிய விலங்குலக உறவினரான, சிம்பன்சிக்களை அணுகி அறிய வேண்டும் என்ற ஒற்றை ஆர்வத்தில் மட்டுமே வந்தவர் முறையாக விலங்கியலோ, அறிவியலோ படித்தவர் அல்ல. அன்று அவர் கண்டடைந்தவை மானுடம் விலங்குலகைப் பற்றி கொண்டிருந்த பல அறிதல்களை, நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தது. அப்படி அவர் உலகிற்கு அறிவித்த ஒரு அறிதல் தான், சிம்பன்சிக்களும் கருவிகளைச் செய்கின்றன, அவற்றை தனக்கான தேவைகளுக்காக பயன்படுத்துகின்றன என்பது. இதை அவர் வெளியிட்ட போது மிகக் கடுமையான கல்வியுலக எதிர்ப்புகளுக்கு ஆளானார். ஆனால் அவர் அந்த ஏற்புகளுக்காக வேலை செய்தவர் அல்லவே! எனவே தன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். பின்னர் புகழ்பெற்ற ‘நேஷனல் ஜியோகிராபிக்’ இதழ் அவருக்கு நிதியளித்து அந்த அறிதலுக்கான ஆதாரங்களை வெளிகொணர்ந்தது. அந்த பெண், தனது தொண்ணூற்று ஒன்றாவது வயதிலும் கூட, தாய்மையின் கனிவு பொலிந்த அழகோடு, உலகின் பல இடங்களுக்கும் பயணம் செய்து காடுகளை, கானுயிர்களை காப்பாற்ற வேண்டிய தேவையை மானுடம் முழுமைக்கும் எடுத்துச் சென்று கொண்டிருந்த, கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி, ஆன்மபூதி அடைந்த ‘டேம் வலேரி ஜேன் மோரிஸ் கூடால்’ என்னும் ‘ஜேன் கூடால்’. எனக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத ஒருவர். ஆயினும் அவர் மரணம் என் விழிகளின் திரையை ஒரு கணம் மறைக்கச் செய்தது. தன்னறம் என்பதைக் கண்டடைந்து தன் வாழ்வின் இறுதிக் கணம் வரை அதை மகிழ்வுற நிறைவேற்றி, முழுமையான வாழ்வொன்றை வாழ்ந்தவர். வள்ளுவர் சொல்லும் ‘வாழ்வாங்கு வாழ்ந்த’ ஒருவர். இந்திய மரபில் வந்த எனக்கு அவரை வானுறையும் தெய்வத்துள் வைக்க எந்த ஒரு தயக்கமும் இல்லை.
அவர் உலகுக்கு அறிவித்தவற்றில் மிக வியப்பான ஒரு காட்சி துணுக்கு ‘யூட்யூபில்’ காணக் கிடைக்கிறது. கோம்பே காட்டில் ஆர்ப்பரிக்கும் ஒலியுடன் விழும் ஒரு சிறு அருவி. அதனருகே ஒரு ஆண் சிம்பன்சி வருகிறது. அருகில் இருக்கும் மரக்கிளைகளைப் பற்றி அந்த அருவியின் மேல் பகுதிக்குச் செல்கிறது. பின் அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் விழுதுகளைப் பற்றி ஒருவகையான, ஒத்திசைவுடன் ஆடுவது போன்ற ஒரு ஆட்டம் போடுகிறது. அது பொதுவாக விலங்குகளிடம் காணப்படும் ஒழுங்கற்ற அசைவு அல்ல. ஒரு சீரான, ஒழுங்குடன் இருந்த ஆடல். பின்னர் அங்கிருக்கும் சில கற்களை எடுத்து அருவியுடன் சேர்த்து கீழே போடுகிறது. அதன் பின் அருவியின் கீழே வந்து, பாய்ந்து கொண்டிருக்கும் அருவியை நோக்கியபடியே ஒரு பத்து நிமிடங்களுக்கு அமைதியாக இருக்கிறது. பின் எழுந்து செல்கிறது. ஜேன் கூடால் இதை சிம்பன்சிகளின் “தண்ணீர் மெய்ப்பாடு” என்று அழைக்கிறார். இது பல சிம்பன்சிக்களும் செய்வது தான் என்கிறார். மேலும் நல்ல மழையில், திடீரென சுழன்றடிக்கும் காற்றில் எல்லாம் சிம்பன்சிக்கள் இதே போன்ற ‘மெய்ப்பாடுகளை – நடனங்களை’ வெளிப்படுத்துகின்றன என்கிறார் அவர். மேற்கு ஆப்பிரிக்கா, கினியா நாட்டில், சவானா புல்வெளிகளில் வாழும் சிம்பன்சிக்கள் இன்னும் வித்தியாசமான, ஆச்சரியமான ஒரு செயலை செய்கின்றன. குறிப்பிட்ட வகை மரத்தின் ஆழமான பொந்துகளில் கற்களை அடுக்கி வைக்கின்றன. இன்னும் சில சிம்பன்சி குழுக்கள் அந்தவகை மரத்தின் அடிமரத்தில் கற்களை எறிகின்றன. இந்த மரங்கள் இருக்கும் இடமும் சரி, அந்த மரங்களும் சரி எவ்விதத்திலும் அந்த சிம்பன்சிக்களுக்கு உணவாகவோ, இருப்பிடமாகவோ பயன்படாதவை. சில ஆய்வாளர்கள் அந்த மரங்களும், கற்கள் குவிப்பும் அந்தந்த குழுக்களின் எல்லைகளை வரையறுப்பவை என்னும் பார்வையை முன்வைக்கின்றனர். ஆனாலும் சில மரங்கள் மற்றும் கற்குவியலின் இடங்கள் மானுடர்கள் வாழும் இடங்களின் அருகில் அமைந்திருக்கின்றன என்பதும், இன்னும் சில இடங்கள் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து தொலைவில் உள்ளன என்பதும் இந்த பார்வைக்கு இயல்பான மறுப்பைத் தெரிவிக்கின்றன. இன்னும் சிலர் மரங்களின் அடித்தூரில் கல்லெறிவது என்பது கொட்டடிப்பதற்கு இணையானது என்றும், அவை வாழும் சவானா புல்வெளிகளில் சிம்பன்சிக்களுக்கு கொட்டுகள் கிடைப்பது அரிது என்பதால் இவ்வழியைத் தேர்ந்தெடுக்கின்றன என்றும் சொல்கின்றனர். ஆனால் அவர்களால் சில இடங்களில் மரங்களின் அடித்தூரில் கல் எறிவதற்குப் பதில், அவற்றின் பொந்துகளில் கற்களை அடுக்கி வைப்பதற்கு எவ்வித பதிலையும் சொல்ல இயலவில்லை. எனில் அவ்விடங்களில் சிம்பன்சிக்கள் இவ்வாறு செய்வதை எவ்வகையில் எடுத்துக் கொள்வது?
ஜேன் கூடால் சிம்பன்சிக்களின் “தண்ணிர் மெய்ப்பாடு”களை அவற்றின் ஆன்மிக அனுபவங்களாக இருக்கக் கூடும் என மதிப்பிடுகிறார். அருவி, மழை, காற்று போன்றவற்றில் அவை உணரும் ஒரு பிரமிப்பு, ஆஹ் என்ற ஒரு உணர்வு, அவற்றையே அவை அவ்வகை மெய்ப்பாடுகளென வெளிப்படுத்துகின்றன என்கிறார். இனி அவரின் வார்த்தைகளில், “நம்மைப் போலவே சிம்பன்சிகளும் ஆன்மிகமானவையே என்று தான் எண்ணுகிறேன். என்ன, அவற்றால் நம்மைப் போல அந்த ஆன்மிகத்தை ஆராய இயலவில்லை, வெளிப்படுத்த இயலவில்லை. அவை அந்த உணர்வைப் பற்றிப் பேசுவதும் இல்லை. அந்த உணர்வை அவற்றால் விளக்கி கூறவும் இயலவில்லை. அந்த பேருணர்வுகள் எல்லாம் அவற்றினுள்ளேயே பூட்டிக் கிடக்கின்றன. அவ்வுணர்வுகளை வெளிப்படுத்த அவற்றிற்கு இருக்கும் ஒரே வழி இந்த அபாரமான, ஒத்திசைந்த நடனங்கள் மட்டுமே. ஒரு சிம்பன்சியின் ஆன்மிக அனுபவத்தை நெருங்கி அறிவது என்பது ஒருவகையில் நம்முடைய ஆதி மூதாதை மதம், சமயம், ஆன்மிகம் என்ற ஒன்றை எப்படி உணர்ந்திருக்கக் கூடும் என்பதற்கான ஒரு வாசலும் கூட. நாமும் இப்படித் தான் இருந்திருப்போம், நம் ஆதி மூதாதைகள் மொழி என்ற ஒன்றை கண்டுபிடித்திருக்காவிட்டால். வரலாற்றிற்கும் முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த நம் மூதாதைகள் பேச்சு மொழி என்ற ஒன்றை கண்டடைந்ததாலேயே இத்தகைய அந்தரங்கமான அனுபவங்களை பகிரவும், உரையாடிக் கொள்ளவும் முடிந்தது. இந்த உரையாடல்கள் தான் மானுடத்திற்கென ஒரு பொதுவான நம்பிக்கையை உருவாக்க முடிந்தது. (விலங்குகளைப் பற்றியும், வரலாற்றிற்கும் முந்தைய காலகட்டங்கள் பற்றியும்) நமக்கிருக்கும் முன்முடிவுகளையும், மானுட மையச் சார்புகளையும் தாண்டி அறிவியல் கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது.”
கிட்டத்தட்ட அறுபதாண்டு காலம் சிம்பன்சிக்களின் வாழ்வியலை ஆராய்வதிலேயே செலவிட்ட ஒருவரின் முதிர்ந்த அனுபவ மொழிகளே மேற்கண்டவை. நாம் முதலில் கேட்டுக் கொண்ட கேள்விக்கு பதிலாகவும் அதுவே அமைகிறது. ஆம், மானுடம் விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு இருக்க, இந்த உயிர்ச் சங்கிலியில் முதன்மையாக இருக்க, மானுடம் தன் மூளையில் மட்டுமே தொடர்ந்து பரிணாமத்தில் மாற்றங்கள் பெற்றுக் கொண்டிருக்க, ‘தங்கி வாழ்க’, ‘பல்கி பெருகுக’ என்ற விலங்குகளுக்கான இரண்டு கட்டளைகளோடு மூன்றாவதான ‘அறிந்து அமைக’ என்ற கட்டளை மானுடத்திற்கு மட்டுமே கிடைக்க முதன்மை காரணங்கள் மானுடம் உணர்ந்த ‘இறையனுபவமும்’ அந்த அனுபவத்தை வெளிப்படுத்த மானுடம் கண்டடைந்த மொழியும் தான்.
[2]
ஜேன் கூடாலின் கூற்றில் இருக்கும் ஒரு முக்கியமான கலைச்சொல் ‘வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம்’. வரலாறு துவங்கும் காலகட்டம் என்பது மானுடம் எழுதும் முறைகளைக் கண்டடைந்த பிறகே என்பது இன்றைக்கு இருக்கும் வரையறை. இது மேற்கின் வரையறை தான். நாம் இன்னும் நமக்கான வரையறைகளை உருவாக்கவே துவங்கவில்லை. இன்றைக்கு நமக்கு கிடைக்கும் மிகப் பழைமையான எழுதும் முறை சுமார் ஐந்தாயிரத்து இருநூறு வருடங்களுக்கு முந்தைய சுமேரிய (இன்றைய ஈராக்) எழுத்து முறையான ‘க்யூனிஃபார்ம்’ தான். சுமேரிய கலாச்சாரமே உலகின் முதல் கலாச்சாரமாக இன்றைக்கு பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது. இதன் துவக்கம் இன்றைக்கு ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு, பொ,மு 4000ல் இருந்தே இருந்தாலும் வரலாற்று காலகட்டம் என்பது அவர்களின் எழுத்து முறை கண்டடையப்பட்ட பொ.மு. 3200 ல் இருந்தே துவங்குகிறது. எகிப்தின் வரலாற்று காலகட்டமும் கிட்டத்தட்ட இதே சமயத்தில் இருந்தே துவங்குகிறது. பிரமிடுகள் இதற்குப் பிறகே கட்டப்பட்டன. நமது சிந்து சமவெளி நாகரிகத்தின் முதல் கண்டடைதல்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்றவையும் இதே காலகட்டத்தில் இருந்து தான் துவங்குகிறது. இம்மூன்றிலும் மிகவும் தொன்மையானது என சுமேரிய நாகரிகத்தையே பொதுவாகச் சொல்கிறார்கள். அந்த தொன்மை நூறு அல்லது இருநூறு வருட வித்தியாசம் தான் என்பதால் மூன்று நாகரிகங்களும் மானுடத்தின் ஆதி நாகரிகங்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சுமேரிய ‘க்யூனிஃபார்ம்’, எகிப்திய ‘ஹைரோகிளிஃப்’ ஆகிய இரண்டு எழுத்துமுறைகளும் இன்று படிக்கப்பட்டு விட்டன. ஆனால் சிந்து சமவெளியின் எழுத்துக்கள் இன்னும் படிக்கப்படவில்லை. அப்படி துவங்கிய இந்த வரலாறு பாரதத்தைப் பற்றி என்ன சொல்கிறது?
முதலில் அந்த வரலாறு நமக்கு ஏன் முக்கியம்? இந்த தொடரினை நாம் இறை என்ற கருத்துரு, இறை என்ற ஒன்று, இறையனுபவம் என்ற ஒன்று எப்படி மானுடத்திற்கு சித்தித்தது, மானுட உருவாக்கத்தில், மானுடப் பண்பாட்டின் உருவாக்கத்தில், மானுட சிந்தனைகள், மானுட பரிணாமம் போன்றவற்றில் அதன் தாக்கம் என்ற புள்ளியில் இருந்து துவங்கியிருக்கிறோம். எனவே தான் இந்த பிரபஞ்சத்தின் துவக்கத்தில் இருந்தும், மானுடம் என்ற ஒன்று உருவான காலகட்டத்தில் இருந்தும் நமது தேடல்களை விரிவாக நிகழ்த்தி வருகிறோம். மானுடத்தின் இறையனுபவங்களின் துவக்க காலங்களை நாம் பார்த்தோம். சென்ற பதிவிலேயே இறையுருக்களைப் பற்றி பார்க்கத் துவங்கிவிட்டோம். இந்த இறையுருக்கள் நம் பாரத நிலத்திற்கே உரியவை. பிற கலாச்சாரங்களிலும் அவை இருக்கின்றன. ஆனாலும் நாம் பாரதத்தையே முதன்மையாகக் கொண்டு நம் தேடலைத் தொடர இருக்கிறோம். இந்த மானுடத்திற்கே மொத்தமான இறையுணர்வு என்பதை வெறுமனே பாரதத்தை மட்டுமே முன்வைத்து பார்ப்பதற்கு என்ன காரணம், அது சரி தானா? இந்த கேள்விக்கான எளிய பதில், நாம் பாரதத்தின் புதல்வர்கள், நம்மால் பாரத மரபை ஒட்டியே அறிய முடியும். ஆனால் அது அல்ல முதன்மை காரணம். இன்றைக்கு மானுடம் பல்கிப் பெருகி, தங்கி வாழும் இப்புவியில் பாரத்தத்தைப் போல் பிரபஞ்சத்தைப் பற்றியும், தன்னுணர்வு – பிரக்ஞை, மனம் போன்றவற்றைப் பற்றியும் மிக விரிவான, அறிவின் துணை கொண்ட, தர்க்க ரீதியான புரிதல்களை, அறிதல்களை முன்வைத்த மரபுகளைக் கொண்ட வேறேதாவது நிலம் இப்புவியில் இருக்கிறதா என்ன? எத்தனை தரிசனங்கள், எத்தனை சமயங்கள், எத்தனை தத்துவங்கள், எத்தனை எத்தனை ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள், கவிகள், மாமனிதர்கள், பெருநிலை எய்தியோர்!! இதற்கிணையான ஒரு தேசம் இப்புவியில் இருக்கிறதா!! ஆம், நம் பாரத பூமி பழம்பெரும் பூமி, பாருக்கெல்லாம் திலகம், நாம் அதன் புதல்வர்கள். அந்த நினைவை அகற்றலாமா நாம்!! இந்நிலம் மட்டுமா பழைமையானது, நம் ஈசனும் பழைமையானவனல்லவா!!! மணிவாசகர் பிரபஞ்சத் தோற்றத்தைச் சொல்லும் திருவண்டப் பகுதியில், “முன்னோன் காண்க”, “பழையோன் காண்க”, “சொற்பதங் கடந்த தொல்லோன்” என்றல்லவா சொல்கிறார். அதில் மட்டுமா, இம்மார்கழியில் பாடும் திருவெம்பாவையிலும் “முன்னை பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே” என மீண்டும் மீண்டும் தொன்மையை அன்றோ வலியுறுத்துகிறார்.
பழைமை என்றால் எவ்வளவு பழைமை? ஏன் இம்மண்ணில் மட்டும் இத்தனை ஞான மரபுகள்? ஏன் அத்தனை தெய்வங்களும் இம்மண்ணில் தோன்றினர்? அத்தனை பழைமை நம் சிந்தையின் தொடர்ச்சியாக எங்ஙனம் வந்தது? அதற்கு இம்மண்ணின் ஞானியரும், ரிஷிகளும் என்ன செய்தனர்? முதன்மையாக நம் வேதங்கள். ஏன் அவை தெய்வங்களால் நமக்கு உரைக்கப்பட்டன? உண்மையில் தெய்வங்கள் மண்ணிறங்கி வந்தா சொல்லின? அல்லது இவை எழுதப்பட்டவையா? எனில் தெய்வங்கள் என்பவை என்ன? இவற்றிற்கும் இம்மண்ணின் வரலாற்றிற்கும் என்ன தொடர்பு? இந்த தெளிவு வந்தால் மட்டுமே வேதம், வேதாந்தம், ஆகமம், புராணம் போன்றவை எங்ஙனம் நம் தேடலில் முக்கிய அறிதல்களை நல்குகின்றன என்பதன் அருமை நமக்குப் புரியும். இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா!! எனவே தான் வரலாறு முக்கியம். நமக்குத் தெரிந்த வரலாறும் சரி, அதன் இடைவெளிகளும், கற்பிதங்களும், அவற்றின் மீதான மாற்று வரலாற்றுப் பார்வைகளும் முக்கியம். இந்த கேள்விகளுக்கான பதில்களை முழுமையான தரவுகள் மற்றும் ஆதாரங்களோடு விளக்குவது இந்த தொடரின் நோக்கமன்று. ஆனாலும் ஒரு பருந்துப் பார்வை நமக்கு அவசியம்.
[3]
இன்றுள்ள பொது தள வரலாற்று மொழிபின் படி நம் பாரதத்தின் வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து தான் துவங்குகிறது. அதாவது பொ.மு 3300களில் இருந்து. சிந்து சமவெளி நாகரிகம் பொ.மு 1900களுக்குப் பிறகு மறைந்து விட்டது. இந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் நமது வேதங்களின் தடயம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இந்த நாகரிகம் வேத காலத்திற்கும் முற்பட்டது எனப்பட்டது. வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருந்ததாலும், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருந்ததாலும், சமஸ்கிருதத்திற்கும் ஈரானிய, ஐரோப்பிய மொழிக்குடும்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாலும், சிந்து சமவெளியில் குதிரைகளைப் பற்றிய எந்த தடங்களும் கிடைக்காமல் இருந்ததாலும், வேத நாகரிகம், வேதங்கள் போன்றவை வெளியில் இருந்து பாரதத்திற்கு வந்திருக்க வேண்டுமென கருதப்பட்டது. குதிரைகள் நடமாடும், ஸ்டெப்பே புல்வெளி நிலங்களான இன்றைய உக்ரேன், ருமேனியா, கஸகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்றவற்றில் இருந்து வந்த ஆரியர்கள் எனும் இனத்தவர் சிந்து சமவெளி மக்களை வென்று அடக்கி, வேதங்களின் கொடியைப் பரவ விட்டனர் எனப்பட்டது. இதுவே புகழ்மிக்க ஆரிய படையெடுப்புக் கோட்பாடு. இந்த படையெடுப்பு பொ.மு 1900 களில் நிகழ்ந்ததாக நம்பப்பட்டது. எனவே வேதகாலம் என்பது பொ.மு 1500க்குப் பின் துவங்கியதாகச் சொல்லப்படுகிறது. எனவே வேதங்களில் பழைமையான ரிக் வேதம் பொ.மு. 1500ல் அல்லது அதற்குப் பிறகு எழுதப்பட்டது எனப்பட்டது. 1990கள் வரையிலும் கூட ஆரிய படையெடுப்பு கொள்கை மிகவும் முதன்மையான ஒன்றாகத் தான் இருந்தது. ஆனால் ஒரு முக்கியமான பிரச்சனை இருந்தது. அப்படி ஒரு அலையென பெரும் படையெடுப்பு மத்திய ஆசியாவில் இருந்து நடந்திருந்தால் பெரும் போர் ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டுமல்லவா?! அப்படி ஒரு போர் நிகழ்ந்திருந்தால் இறந்தவர்களின் பெரும் இடுகாடு ஒன்று இருந்திருக்க வேண்டுமல்லவா?! சிந்து சமவெளி நகரங்கள் எவற்றிலும் இதற்கான தடயங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை. மேலும் சிந்து சமவெளி மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவும் இல்லை. எனவே 1990களுக்குப் பிறகு ஆரிய படையெடுப்பு அல்ல, அது ஆரியர்களின் பரவல் என அந்த கோட்பாடு மாற்றப்பட்டது. அதன்படி பொ.மு 1900களில் புலம் பெயர்ந்த ஆரியர்கள் இங்கிருந்தவர்களோடு கலந்து விட்டனர். அவர்களே சமஸ்கிருதத்தையும் வேதங்களையும் தம்முடன் கொண்டு வந்திருந்தனர். சரி இந்தியாவில் ஆரியர்களுக்கு முன்பு இருந்த, குறிப்பாக சிந்து சமவெளியில் இருந்தவர்கள் யார்? அவர்கள் பொ.மு 7000 களில் வேளாண்மை துவங்கியிருந்த இன்றைய சிரியா, ஈரானிய பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்து சிந்து நதிக்கரைகளில் குடியேறியவர்கள். அவர்கள் தான் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தனர். ஆனால் இந்த பரவல் எல்லாம் வட இந்தியாவில் மட்டும் தான் நிகழ்ந்தது. தென்னிந்தியாவில் திராவிடர்கள் இருந்தனர். அவர்களிடம் இந்த ஆரிய ரத்தம் கலக்கவில்லை. என்றால் திராவிடர்கள் தான் இந்தியாவின் பூர்வகுடிகளா? அதுவும் இல்லை, இவர்கள் இன்றைக்கு சுமார் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். இது மானுடப் பரவல் குறித்து இன்றைக்கு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையின் ஒரு பகுதி தான். இது தான் வரலாறுக்குப் பின் இந்தியாவைக் குறித்த பார்வையின் ஒரு சுருக்கமான வடிவம். இவ்வளவு நேரம் சிரிக்காமல் படித்தீர்கள் என்றால் சென்ற நூற்றாண்டின் அளவுகோலில் நீங்கள் ஒரு அறிவு ஜீவி.
நாம் மேலே கண்ட இந்த மானுடப் பரவல் வரலாறு அற்ற காலகட்டத்தில் மூன்று அடுக்குகளாக நிகழ்ந்தது என்கிறது இந்த கோட்பாடு. அதை சற்று விரிவாகவே காணலாம். சென்ற பதிவிலேயே ஹோமோ எரக்டஸ், ஹோமோ சேபியன்ஸ் போன்ற பெயர்களைப் பார்த்தோம். இவர்கள் யார், இவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? நம்மில் பலர் இப்பெயர்களை யுவால் நோவா ஹராரி எழுதிய புகழ்பெற்ற ‘சேபியன்கள்’ புத்தகத்தில் படித்திருக்கலாம். மானுடத்தின் பரிணாமம் சுமார் 80 லட்சம் வருடங்களுக்கு முன் துவங்கியது என்பதைக் கண்டோம் (துரியம் கடந்த சுடர் - 3). இரு கால்களில் நிற்கத் துவங்கிய ஒரு மூதாதை, மெல்ல மெல்ல தன் முதுகுத் தண்டை நிமிர்த்தி, கைகளை நடப்பதற்கும், உடல் எடையைச் சமன்செய்து கொள்வதற்கும் அன்றி வேறு செயல்களுக்குப் பயன்படுத்தலாம் எனக் கண்டுகொண்டு முழுமையான இருகாலியாக மாற மேலும் ஐம்பது லட்சம் ஆண்டுகள் ஆகியிருந்தன. அதாவது இன்றைக்கு சுமார் இருபத்து ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பேரினமான ஹோமோ இனத்தின் முதல் மூதாதை – ஹோமோ ஹேபிலிஸ் தோன்றினர். இவர்களே முதன் முதலில் கற்களால் ஆன ஆயுதத்தை பயன்படுத்தினர். அதற்கு முன்பும் நம் மூதாதையர் கற்களை, கற்களாக எறிந்து எதையாவது உடைக்கப் பயன்படுத்திக் கொண்டு தான் இருந்தனர். ஆனால் இந்த ஹோமோ ஹேபிலிஸ் மக்கள் தான் கற்களை கூர்மையாக்கி, அதை ஒரு கருவியாக உருவாக்கினர். அவர்கள் இதை வேட்டை மிருகங்களை வெட்டப் பயன்படுத்தினர். பரிணாமச் சங்கிலியில் ஒரு உயிரினம் கருவி என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என எண்ணியதே முதன் முதல் நிகழ்ந்த அறிவுப் பாய்ச்சல். அதாவது புறவயமாகத் தெரிந்த அறிவுப் பாய்ச்சல்.
இந்த ஹோமோ ஹேபிலிஸ்களுக்குப் பிறகு வந்தவர்களே முழுமையான நிமிர்ந்த மனிதர்கள். இவர்களே ஹோமோ எரக்டஸ் – நிமிர்ந்தோர்கள், எனப்பட்டனர். நம் மானுட பரிணாமத்தில் மிக நீண்ட காலம், சுமார் இருபது லட்சம் வருடங்கள், வாழ்ந்தவர்கள் இவர்களே. எனவே மானுடப் பரிணாமத்தில் நமக்கு முதன்மையான மூதாதை இவர்களே. இவர்கள் தான் முதன்முதலாக நெருப்பை கையாளத் தெரிந்தவர்கள். சுமார் பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பே இவர்கள் நெருப்பை கையாண்டதற்கான ஆதாரங்கள் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றன. நெருப்பு மட்டுமல்ல, இவர்கள் மேலும் ஒரு முதன்மைக்கும் சொந்தக்காரர்கள் தான். இவர்கள் தான் கற்கால கருவிகள் என இன்று பொதுவாக ஏற்கப்படும் இரு முனைகளிலும் கூர்மையான கைக்கோடாரிகளை உருவாக்கினர். நடுவில் பெருத்தும், இரு முனைகளில் ஒடுங்கி, கூர்மையாக இருக்கும் இக்கருவிகளை கையில் வைத்துக் கொண்டு வெட்டவும், குத்தவும் அவர்கள் பயன்படுத்தினர். இந்த கருவிகளை அஷூலியன் கருவிகள் என்றழைக்கின்றனர். சுமார் பதினேழு லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே இக்கருவிகள் ஆப்பிரிக்காவில் கிடைக்கத் துவங்குகின்றன. இவர்களே முதன் முதலாக ஆப்பிரிக்காவில் இருந்து உலகின் பிறபகுதிகளுக்கு இடம்பெயரத் துவங்கியவர்கள். இன்று உலகில் இருக்கும் அத்தனை மனிதர்களும் இவர்களின் வழித்தோன்றல்களே.
முதலில் ஒரு கேள்வி வரலாம், ஏன் மானுடம் முதன் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்க வேண்டும்? ஆசியாவிலோ, அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ கூடத் தோன்றியிருக்கலாம் அல்லவா? எப்படி ஆப்பிரிக்கா தான் என்ற முடிவிற்கு வந்தனர்? ஆப்பிரிக்கா தான் மானுடத்தின் தொட்டில் என்பதை முதன்முதலில் முன்வைத்தவர் பரிணாமவியலின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் டார்வின் தான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் எழுதிய “தி டிஸ்ஸெண்ட் ஆஃப் மேன்” என்ற புத்தகத்தில் அவர் இதை முன்மொழிந்தார். அவர் இதை ஒரு எளிய, நேரடிக் காட்சியில் இருந்து முன்மொழிந்தார். அது, நமது நெருங்கிய விலங்குலக உறவினர்கள், சிம்பன்சிக்கள், கொரில்லாக்கள் போன்றவை ஆப்பிரிக்காவில் தான் இருந்தன. எனவே மானுடமும் ஆப்பிரிக்காவில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என்றார் அவர். அப்போது இது பெரிதாக ஏற்கப்படவைல்லை. ஏனெனில் ஆசியாவே மானுட நாகரிகத்தின் தொட்டில் என்னும் கருத்தே அப்போது ஓங்கியிருந்தது. பின்னர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே ஆப்பிரிக்காவில் நம் முன்னோர்களின் தடயங்கள் புதைபடிவங்களாக தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கத் துவங்கின. அது இக்கொள்கைக்கு வலுசேர்த்தது. பின்னர் 1987ல் மிகப் புகழ்பெற்ற ஆய்விதழான ‘நேச்சர்’ இதழில் வெளிவந்த மரபணுவியல் ஆய்வு அறிக்கை ஒட்டுமொத்த நவீன மானுடத்துக்குமான ஆதி மரபணுத் தாய் என இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்பான ஒரு பெண்ணை, ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பெண்ணைச் சுட்டிக் காட்டி நிறுவியது. அது இக்கொள்கையை அறுதியாக்கியது. இன்று உலகெங்மும் வாழும் மானுடர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றி, புலம் பெயர்ந்தவர்கள் தான் என்ற கொள்கையே பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது.
இக்கொள்கையின் படி மானுடம் பல படிநிலைகளாக ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி உலகெங்கும் பொடிநடையாகவே வலம் வந்தனர். இந்த பரவல் சில அலைகளாக நிகழ்ந்தது. முதல் பரவலில் சுமார் பதினெட்டு, பதினேழு லட்சம் வருடங்களுக்கு முன் மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்து சேர்ந்தனர் அப்போதிருந்த மானுட இனமான ஹோமோ எரக்டஸ்கள். இதுவே முதல் பெரும் பரவல். அவர்களே ஆசியாவின் பலபகுதிகளில் தங்கி வாழத் துவங்கினர். இவர்களது உடலமைப்பு நீண்ட தூரம் நடை மற்றும் ஓட்டத்திற்கு இசைவாக இருந்ததே இந்த பரவல் சாத்தியமானதன் முதல் காரணம். ஒரு பக்கம் பரவல் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் மானுடம் தன் பரிணாமத்தில் மேலும் மாறிக் கொண்டிருந்தது.
நாம் முன்பே கண்டவாறு இந்த மாற்றம் உடலமைப்பைத் தவிர பெருமளவு மூளையிலேயே நிகழ்ந்தது. மூளையின் அளவு பெரிதாகிக் கொண்டிருந்தது. மானுட சிந்தனையும், சூழலுக்கு ஏற்ப தகவமைந்து வாழ்வதும் அறிவுச் செயல்பாடுகளாக ஆகிக் கொண்டிருந்தன. அவ்வாறு சுமார் ஏழு லட்சம் வருடங்களுக்கு முன் ஹோமோ எரக்டஸ்களைவிட சற்று பெரிய மூளையளவும், சற்றே சிக்கலான சமூகம் என்று சொல்லத் தக்க குழுக்களாகவும், கற்கருவிகளை மரத்தில் பொருத்தி ஈட்டிகளைச் செய்து வேட்டையாடவும் செய்த “ஹோமோ ஹெய்டெல்பெர்ஜென்ஸிஸ்” என்னும் இனத்தவர் ஆப்பிரிக்காவில் தோன்றினர். இவர்கள் சுமார் ஆறு லட்சம் வருடங்களுக்கு முன் ஆசியாவிற்கும், முக்கியமாக ஐரோப்பாவிற்கும் பரவினர்.
நாம் எண்பது லட்சம் வருடங்களில் இருந்து இரண்டே பத்திகளில் ஆறு லட்சம் வருடங்களுக்கு வந்து விட்டோம். இப்போது இப்புவியில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் மானுட மூதாதைகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆசியாவில் ஹோமோ எரக்டஸ்களும், ஐரோப்பாவில் ஹோமோ எரக்டஸ்கள் மற்றும் ஹோமோ ஹெய்டெல்பெர்ஜென்ஸிஸ்களும், ஆப்ப்ரிக்காவிலும் இந்த இரு பேரினங்களும் வேறு சில ஹோமோ இனங்களும் இந்த சமயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். காலத்தில் இவர்கள் மேலும் பரிணாமம் அடைந்து கொண்டிருந்தனர். ஆசியாவில் இருந்த ஹோமோ எரக்டஸ்கள் சைபீரியா மற்றும் திபெத் போன்ற குளிர் நிலங்களில் தங்கி வாழத் தேவையான உடலமைப்பு கொண்ட ஹோமோ டெனிசோவன்களாகவும், உணவு மற்றும் பிற வளங்கள் குறைந்த இந்தோனேசியா போன்ற தீவுகளில் வாழத்தேவையான குள்ளமான உடலமைப்பு கொண்ட ஹோமோ ஃபிளாரெஸியன்ஸிஸ்களாகவும் பரிணமித்தனர். ஐரோப்பாவில் வாழ்ந்தவர்கள் கடுங்குளிரைத் தாக்குப் பிடிக்கும் ஹோமோ நியாண்டர்தாலர்களாக பரிணமித்தனர். இவர்களின் பரிணாமம் எல்லாம் உடலின் தகவமைப்புகளாகவே அமைந்திருப்பதை கவனித்திருக்கலாம். இவையெல்லாம் சுமார் நான்கு லட்சம் வருடங்களுக்கு முன்பாக நிகழ்ந்தவை.
மாறாக ஆப்பிரிக்காவில் வாழ்ந்தவர்கள் மேலும் மேலும் மூளையின் அளவு பெரிதாகி சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பாக இன்றைய நவீன சிந்திக்கத் தெரிந்த மனிதனாக – ஹோமோ சேபியன் சேபியன்களாக பரிணமித்தனர். இவர்கள் சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் துவங்கினர் என்று அனுமானிக்கப்படுகிறது. இவர்களே சுமார் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தென்பகுதிகளில், அந்தமான் மற்றும் தென்னிந்திய தீபகற்பத்தில் குடியேறியவர்கள். கடற்கரையோரமாக நடந்து வந்தனர். சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் ஆஸ்திரேலியா வரை பரவினர்.
அப்படியே இந்த மானுடர்கள் நாற்பத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவிற்கும், வடக்கு ஆசியாவிற்கும் (இன்றைய சைபீரியா) பரவினர். சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் முதலில் வட அமெரிக்காவிற்கு அலாஸ்கா வழியாகச் சென்றனர். பின்னர் தென்னமெரிக்காவிற்கும் பரவினர். இப்படி பரவிய ஹோமோ சேபியன்கள் தங்கள் அறிவால் மாறிக் கொண்டிருந்த புவியின் பருவநிலை மாற்றங்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளில் இருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டிருந்தனர். இதன் பொருள் பிற ஹோமோ இனங்கள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தனர். ஆனால் சேபியன்கள் புத்தகத்தில் யுவால் சொல்வது போல் நாம், அதாவது ஹோமோ சேபியன்கள், அவர்களை கொன்றழிக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எப்போதுமே பரிணாமம் அப்படித் தான் செயல்படும். தக்கன பிழைக்கும், தகாதன மறையும். எது தக்கது, தகாதது என்பதை இயற்கையே தேர்ந்தெடுக்கும். வள்ளுவர் மொழியில் சொன்னால், அவரவர் எச்சங்களை, அடுத்த தலைமுறைகளை, வைத்து இதை முடிவு செய்யலாம். சேபியன்களின் தலைமுறைகள் தங்கினர். பிறர் காலத்தில் இயல்பாக நீட்சியின்றி மறைந்தனர். ஆனால் மொத்தமாக மறையவும் இல்லை. இத்தனை மானுட மூதாதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மரபணுக்கள் இன்றும் நம் மரபணுக்களில் பதிந்து தான் இருக்கின்றன. எனவே நாம் என்பது நமக்கு முந்தைய அத்தனை ஹோமோ பேரினத்தவரின் நீட்சியும் கூடத்தான்.
[4]
மானுடப் பரவல் குறித்த மேற்கண்ட சித்திரத்தில் எழுந்து வரும் ஒரு விசித்திரம் மானுடர்கள் நடந்தே ஆஸ்திரேலியாவிற்கும், அமெரிக்காவிற்கும் பரவினர் என்பது. இன்றிருக்கும் உலக வரைபடத்தை வைத்து நோக்கினால் நில வழியாக இந்த கண்டங்களுக்கு எந்த வழியும் இல்லை அல்லவா? அப்படியெனில் எப்படி நடந்திருக்க முடியும்? மேலே கண்டவாறு மானுடப் பரவலின் துவக்கத்திலேயே நம் மூதாதைகள், ஹோமோ எரக்டஸ், சைபீரியா வரை சென்று விட்டிருந்ததைக் கண்டோம். அங்கேயே அவர்கள் பரிணமித்தனர் என்பதையும் கண்டோம். இன்றும் நார்வே போன்ற ஆர்டிக் பிரதேசங்களில் சில ஆயிரம் ஆண்டுகளாகவே மானுடர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நன்கு யோசித்துப் பாருங்கள், இன்றிருக்கும் வெப்பமூட்டும் வசதிகளோடு கூட இத்தகைய குளிர் பிரதேசங்களில் வாழ்வது என்பது மிக மிகக் கடினம். ஆனால் இவை எதுவுமே இல்லாத பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இத்தகைய கடுங்குளிர் பிரதேசங்களில் மானுடர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது வியப்பாக இல்லையா!! அவர்களால் எப்படித் தாக்குப்பிடிக்க முடிந்தது? இதை அறிய நாம் நம் பூமியின் காலநிலை மற்றும் அந்த காலநிலையைப் பாதித்த நிகழ்வுகளைப் பற்றி அறிய வேண்டும். பலவிதங்களில் அது மிக முக்கியமான ஒன்று.
நாம் வாழும் இந்த பூமி இப்படியே வெப்பமாக எப்போதும் இருந்ததில்லை. கடந்த இருபது லட்சம் வருடங்களில் பதினெட்டரை லட்சம் வருடங்கள் கொடுங்குளிர் உறைபனிப் பருவங்களே. மிகக் கடுமையான உறைபனி புவியின் பெரும்பகுதிகளை மூடியிருந்தது. இடையிடையே சில வெப்பமான பகுதிகள் வந்து சென்றன. ஒவ்வொன்றும் சில ஆயிரம் வருடங்களே நீண்ட வெப்பமான பகுதிகள். இன்னும் சொல்லப் போனால், பூமியின் வரலாற்றிலேயே இத்தகைய வெப்பமான பருவங்கள் கடந்த இருபது லட்சம் வருடங்களில் மொத்தமே ஆறு முறைகள் தான் இருந்திருக்கின்றன. அவையும் பெரும்பாலும் இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வருடங்களே நீண்டிருக்கின்றன. மொத்தமாகப் பார்த்தால் கடந்த இருபது லட்சம் வருடங்களில் பூமி இப்போது இருப்பதைப் போல வெப்பமாக ஒன்றரை லட்சம் வருடங்கள் இருந்திருந்தால் அதிகம். எனவே மானுடம் பரிணமித்து வந்த காலத்தில் பூமி நீண்ட உறைபனிக்காலத்தில் தான் இருந்து வந்தது.
இக்காலங்களில் பூமியின் வடகோளத்தின் பாதி, வடதுருவத்தை மையமாகக் கொண்டு உறைபனியால் மூடப்பட்டிருந்தது. தென்கோளத்தின் பாதியும், தென்துருவத்தை மையமாகக் கொண்டு கடல் பகுதிகள் அனைத்தும் நீரால் மூடப்பட்டிருந்தது. நிலம் என இருந்தவை பூமத்திய ரேகைக்கு மேலும் கீழும் இருந்த பகுதிகள் மட்டுமே. அதிலும் பூமத்திய ரேகைக்கு கீழே பெரும்பாலும் கடல் தான் இருந்தது. அந்த கடல் நீர்மட்டம் இன்றிருந்ததை விட 120 மீட்டர்கள் கீழே இருந்தது. எனவே பூமத்திய ரேகைக்கு மேலே இருந்த நிலங்கள் இன்றிருப்பதை விடவும் அதிகமாக இருந்தன. இந்தியாவும், இலங்கையும் நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தது. நம் குமரி முனைக்கு கீழேயும் நிலம் நீண்டிருந்தது. இன்றைய பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் அதன் தீவுகள் போன்றவை ஒரே நிலமாக இணைந்து, சுந்தாலாந்து என்னும் பெரும் நிலப் பகுதியாக இருந்தது. கீழே ஆஸ்திரேலியா, பாப்வா நியூகினியா மற்றும் டாஸ்மேனியா பகுதிகள் ஒன்றாக இணைந்து சாஹுல் என்னும் மற்றொரு நிலப்பகுதியாக இருந்தது. இந்த இரு நிலப்பகுதிகளும் ஆழமற்ற ஒரு நீரிணையால் பிரிக்கப்பட்டிருந்தன. சுமார் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிற்கு வந்து தங்கிய மானுடர்கள் இந்த நிலப்பகுதிகள் மற்றும் ஆழமற்ற நீரிணையின் வழியாகவே ஆஸ்திரேலிய பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தனர். அதே போன்று ஆசியாவின் சைபீரிய பகுதிகள், அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியோடு பேரிங்க் கடல் பகுதியில் உறைபனிப் பாலமாக இணைந்திருந்தது. இவ்வழியாகவே சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க கண்டங்களுக்கு பரவினர்.
கடந்த பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு நாற்பத்தோராயிரம் ஆண்டுகள் சுழற்சியில் உறைபனிக்காலம் வந்து கொண்டு இருந்தது. ஆனால் கடந்த பத்து லட்சம் வருடங்களாக இந்த சுழற்சி ஒரு லட்சம் வருடங்களாக அதிகரித்தது. அதாவது உறைபனிக்காலம் என்பது கிட்டத்தட்ட ஒரு லட்சம் வருடங்கள் நீண்டிருந்தது. இடையிடையே சில வெப்ப பருவங்கள், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு நீண்டு கொண்டிருந்தன. எனவே நம் மானுடப் பரிணாமம் பெரும்பாலும் உறைபனிக்காலத்திலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. எனவே தான் நம் இயல்பாகவே குளிருக்கு பழக்கப்பட்டிருந்தோம். கடுங்குளிர் பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தோம்.
கடந்த ஒரு லட்சம் வருடங்களில் நிகழ்ந்த கால மாற்றங்களைக் குறித்த அறிவியல் தரவுகள் மிக அதிகமாகவே நமக்கு கிடைக்கின்றன. நாம் முன்பே பார்த்தவாறு சுமார் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாம் வாழும் காலத்தின் கடைசி பனிக்காலம் துவங்கியது. சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய இந்தோனேசியாவில் இருந்த டோபா என்னும் எரிமலை வெடித்தது. இப்புவியின் வரலாற்றிலேயே மிகப் பெரிய எரிமலை வெடிப்பு என்றால் அது டோபா எரிமலை வெடிப்பு தான். அதனால் எழும்பிய புகை புவியின் வளிமண்டலத்தை மூடி சில வருடங்களுக்கு சூரிய ஒளியே பூமியில் படாதவண்ணம் செய்து, ஏற்கனவே இருந்த உறைபனிக்காலத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்தது. இந்த எரிமலை வெடிப்பில் பெரும்பாலான உயிரினங்கள், மானுடர்கள் உட்பட பேரழிவைச் சந்தித்தன. சில ஆய்வாளர்கள் இவ்வெடிப்பிற்குப் பின் மூவாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான மானுடர்களே எஞ்சினர் என்று மதிப்பிடுகின்றனர். சிலர் நிலைமை அத்தனை மோசமில்லை என்கின்றனர். எப்படியானாலும் டோபா எரிமலை வெடிப்பு பேரழிவை இப்பூமிக்கு கொண்டுவந்தது என்பதில் ஐயமில்லை.
இதற்கிடையே உறைபனிக்காலம் நீண்டு கொண்டே இருந்தது. இதன் உச்சம் என்பது கடந்த இருபத்தாறாயிரம் வருடங்களுக்கு முன் துவங்கி இருபதாயிரம் வருடங்கள் வரை நீண்டது. இது “கடைசி உறைபனி உச்சம்” எனப்பட்டது. மானுடம் வாழத்தகுந்த இடங்கள் என இப்பூமியில் மிகச் சிறிய நிலப்பகுதியே எஞ்சியது. அவற்றிலும் பெரும்பாலும் புல்வெளிகளே எஞ்சின. ஏனெனில் குளிர்காலம் என்பது வறட்சியும் கூடத்தான். மழை என்பது சுத்தமாக இல்லாமல் இருந்த காலம். எனில் எப்படி காடுகள் செழித்திருக்கும்? எனவே பெரும்பாலான இடங்கள் புல்வெளிகளாகவே இருந்தன. இருபதாயிரம் வருடங்களுக்கு முன்பு துவங்கி புவி மீண்டும் வெப்பமாகத் துவங்கியது. சரி எல்லாம் நன்றாக போகிறது எனப் பார்த்தால், திடீரென மீண்டும் கொடுங்குளிர் திரும்பியது. இன்றைக்கு பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பொ.மு. 10000 வாக்கில் மற்றோர் உறைபனிக்காலம் துவங்கியது. ‘யங்கர் ட்ரயஸ்’ எனப்படும் இக்காலம் நல்ல வேளையாக ஆயிரத்து இருநூறு வருடங்களே நீண்டது. அதன் பிறகு தான் இப்போது இருக்கும் காலநிலை பொ.மு. ஒன்பதாயிரத்துக்குப் பிறகு துவங்கியது. இதன் பிறகே இப்புவியின் பல்லுயிர்ப் பெருக்கம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. மானுடம் பல்கிப் பெருகத் துவங்கியதும் இக்காலகட்டத்தில் தான்.
“கடைசி உறைபனி உச்சத்திற்குப் பிறகு வந்த வெப்ப காலங்களில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வு நடந்தது. அது நிலத்தில் அல்லாமல் கடலில் நிகழ்ந்தது. வெப்பம் ஏற ஏற உறைபனி உருகத் துவங்கியது. அப்படி உருகிய நீர் எங்கு சென்று சேர்ந்திருக்கும்? கடலில் தானே!!. எனவே கடல் மட்டம் ஏறத்துவங்கியது. இந்த கடல் மட்ட உயர்வும் சீராக வருடங்கள் அனைத்திலும் ஏறிக் கொண்டிருந்தாலும் மூன்று முறை அழிவூட்டும் வகையில் உயர்ந்தது. இந்த மூன்று நிகழ்வுகளும் ‘பேரழிவு ஓத ஏற்றங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. சுமார் பதினான்காயிரத்து எழுநூறு வருடங்கள் முன் முதல் ‘பேரழிவு ஓத ஏற்றம்’ நிகழ்ந்தது. கடல்மட்டம் சுமார் பதினாறு முதல் இருபத்தைந்து மீட்டர்கள் சில ஆண்டுகளில் உயர்ந்தது. பூமியின் பல பகுதிகளில் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கின. அதே போன்று சுமார் பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓத ஏற்றம் நிகழ்ந்தது. இந்த இரண்டாவது பேரழிவு ஓத ஏற்றமே இன்றும் உலகின் பல கலாச்சாரங்களிலும் தொன்மமாக நினைவு கூரப்படும் பெருவெள்ளக் கதைகளாக நீடிக்கின்றது.
ஒருவழியாக இந்த பூமியில் மானுடப் பரவல், பூமியின் காலநிலை, பருவகாலங்கள் பற்றிய ஒரு பருந்துப் பார்வையை செய்துவிட்டோம். இனி பாரதத்தின் நிலை இக்காலகட்டங்களில் எப்படி இருந்தது, பாரதத்தில் மானுடர்கள் எவ்வளவு காலம் வாழ்ந்து வந்திருந்தனர் மற்றும் மேலே நாம் கண்ட பாரதம் குறித்த சில கேள்விகளுக்கான விரிவான பதிலை அடுத்த பதிவில் காண்போம்.
(மேலும்)
உசாத்துணைகள்:
சிம்பன்சிகளின் ஆன்மிகம்
https://www.researchgate.net/publication/276915021_The_Case_for_Chimpanzee_Religion_2014
https://news.janegoodall.org/2019/12/17/chimpanzees-culture-and-spirituality
https://www.youtube.com/watch?v=EgsEKh4cRW4
https://www.researchgate.net/publication/276915021_The_Case_for_Chimpanzee_Religion_2014
Darwin
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4844272/?hl=en-IN#:~:text=Introduction,1
மரபணு தாய்
https://www.nature.com/articles/325031a0
மானுடப் பரவல்
https://en.wikipedia.org/wiki/Early_human_migrations
பூமியின் பருவநிலை
https://en.wikipedia.org/wiki/List_of_periods_and_events_in_climate_history
https://science.nasa.gov/science-research/earth-science/milankovitch-orbital-cycles-and-their-role-in-earths-climate/
மேலும்...
கட்டுரையாளர்: அருணாச்சலம் மகாராஜன்
அருணாச்சலம் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருக்கிறார். பள்ளிப் பருவம் முழுவதும் கிராமத்திலேயே தமிழ் வழிக் கல்வியாக நிகழ்ந்தது. தந்தை வழி திருக்குறளும், சுவாமி விவேகானந்தரும் அறிமுகம். பள்ளியில் பயிலும் காலத்தில் ஊரில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சனிக்கிழமை தோறும் நிகழ்ந்த கம்பராமாயண வகுப்புகள் வாயிலாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார். தீவிர இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு மூலம் நுழைந்தார். வெண்முரசு நாவல் வரிசைகளுக்கு எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் வாயிலாக இந்திய ஞான மரபு, வரலாறு, தத்துவங்கள் ஆகியவற்றில் தன் தேடல்களை கண்டடைந்தார்.

0 comments:
Post a Comment