Tuesday, November 18, 2025

சித்தாந்த வினா விடை - 6 - அருணைவடிவேல் முதலியார்

சித்தாந்த வினா விடை 1

சித்தாந்த வினா விடை 2

சித்தாந்த வினா விடை 3

சித்தாந்த வினா விடை 4

சித்தாந்த வினா விடை 5

சித்தாந்தத் தொகைப் பகுதி


சித்தாந்தப் பொருளைப் பிறமதப் பொருள்களோடு  வைத்து விரிவாக ஆய்ந்துணர்வதற்கு முன், அதனைத் தொகை முறையில் முதலில்  உணர்தல் வேண்டும். 

மாணவன்:  அவ்வாறு இருப்பின் சிலவற்றை  உரைத்தருளல் வேண்டும். சித்தாந்தம் என்பதன் பொருள் என்ன ? 

ஆசிரியர்: சித்தாந்தம்' என்பதற்கு 'முடிந்த முடிபு' என்பது பொருள். ஒரு பொருளைப் பற்றி முதலில் ஒரு முடிவு கொள்ளப்படும், பின்பு நன்றாக ஆராய்ந்து பார்த்து முடிவாக ஒரு முடிவு கொள்ளப்படும். அதுவே முடிந்த முடிவாகும். சிலவற்றில் முதலிலயே  முடிந்த முடிபாகவும் வரலாம்; ஆயினும், அது ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலைபோல இல்லாமல், நிலைத்து நிற்கும் முடிவாகி விளங்குமாகையால், அதுவே 'முடிந்த முடிபு' எனப்படும்.

மாணவன்: ஒவ்வொரு சமயமும் அது  கொண்ட முடிவை, 'முடிந்த முடிவு' என்றுதான் கூறுகின்றது; அதனால், ஒவ்வொரு சமயத்தின் முடிவும் சித்தாந்தம் என்றுதான் முடிவாகின்றது; ஆகவே, 'சித்தாந்தம்' என்பது எது?

ஆசிரியர்: ஆம், உண்மைதான்; நீ கூறியபடி, பௌத்த சித்தாந்தம், சமண சித்தாந்தம், வைணவ சித்தாந்தம், சைவ சித்தாந்தம்' எனப் பலவகைச் சித்தாந்தங்கள் உள்ளன. ஆயினும், சைவ சமயத்தின் முடிவுகள் உண்மைச் சித்தாந்தமாய் உள்ள சிறப்புப்பற்றி, 'சித்தாந்தம்' என்பது, சைவசித்தாந்தத்திற்கே பெயராயிற்று. உதாரணமாக  'மலர்' என்பது தாமரை மலரையே குறிப்பது போன்று, 'பழம்' என்பது, வாழைப் பழத்தையே குறிப்பது போன்றதாகும். 

சைவ சித்தாந்தமே உண்மைச் சித்தாந்தம் என்பதனை, “சித்தாந்தமே சித்தாந்தம்; அதற்கு வேறானவை பூருவ பட்சங்கள் ("சித்தாந்த ஏவ சித் தாந்த: பூர்வபட்சாஸ்தத: பரே”) என விளக்குகின்றது, 'இரத்தினத்திரயம்' என்னும் வடநூல். ‘சித்தாந்தம்' என்பது, சைவசித்தாந்தத்திற்கே பெயராதலை மேற்காட்டிய வாக்கியத்தால் உணரலாம். ”பிற நூல்- திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்தமாகும்” என்பது சிவஞான சித்தி. (பூர்வ பட்சம்- முன்னர் வந்த முடிபு).

மாணவன்: அப்படி இருப்பின் , சைவ சித்தாந்தப் பொருளைத் தொகுத்தருளிச் செய்தல் வேண்டும்.

ஆசிரியர்: சமய வாதங்கள் நம் நாட்டில் தோன்றிய காலத்தில், சமயப் பொருள்களைச் சில பகுதிகளாக வைத்து ஆராயும் முறை தோன்றிற்று, அப்பகுதிகள்,

(1) இறைவன் இவன், (2) அவனாற் சொல்லப்பட்ட முதல்நூல் இது, (3) உள எனக் கொள்ளப்படும் பொருள்கள் இவை (4) அப்பொருள்களின் இயல்புகள் இன்னது (5) மாணாக்கர் செய்யவேண்டிய முயற்சி இது(6) அம் முயற்சியினால் அடையும் பயன்கள் இவை' என்பன.

மாணவன்:  சித்தாந்தத்தில் சொல்லப்படும் இறைவன் யார்?

ஆசிரியர்:  சித்தாந்தத்தில் சொல்லப்படும் இறைவன் சிவபிரான்.

"சொல்லும் பொருள்களும் சொல்லா தனவும் அங்கு அல்லனாய் ஆனான்          என்றுந்தீபற அம்பிகை பாகனென்றுந்தீபற" - திருவுந்தியார்

அனாதி சிவனுடைமையால் எவையும் ஆங்கே அனாதியெனப் பெற்ற அணுவை- அனாதியே ஆர்த்த துயர்அகல அம்பிகையோடு எவ்விடத்தும் காத்தல் அவன்கடனே காண் " - திருக்களிற்றுப்படியார் 

அந்தம் ஆதி", "சங்காரமே முதல்" - சிவஞானபோதம் 

"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு                  பாகனார்தாம் வருவர்; மற்றத்தெய்வங்கள் வேதனைப்படும் பிறக்கும் இறக்கும்மேல் வினையும் செய்யும் " -சிவஞானபோதம் 

“கந்தமலர் அயன்படைக்கும் உலக மெல்லாம் கண்ணன் அளித்திடும் அவைஎம் கடவுள் தானே அந்தமுற அழித்திடுவன் ஆதலாலே அயன் அரியும் அவனதுயர் அதிகா ரத்து வந்தமுறை தன்தொழிலே மன்னுவிப்பன்" 

இவ்வாறு சிந்தாந்த நூல்கள்  "சிவனே" இறைவன் என்று பலவாறாக கூறுகிறது. 

மாணவன் : சித்தாந்தத்தின் முதல் நூல்கள் எவை என்பதைத் தெரிவித்தருள்க.

ஆசிரியர் : சித்தாந்தத்தின் முதல் நூல்கள், "வேதம், சிவாகமம்" என்னும் இரண்டுமாம்.

"வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூல்இவற்றின் விரிந்தநூல்கள் ஆதிநூல் அனாதி அமலன் தருநூல் இரண்டும்’

என்பதை அறிய வேண்டும்.  ‘அனாதி அமலனாய இறைவன், முதல் நூலைத் தானே நேரே அருளிச்செய்தும்,  தன்னைத் தலைப்பட்டுத் தானேயாய் நின்ற பெரியார் வாயிலாகவும் அருளிச்செய்வன்" என்பது சித்தாந்தம்.

"சிவனும் இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றும் உடனாகி நின்று கொள்வன் "  எனவும்,

“துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும் பிரியாதே நிற்கின்ற பெம்மான்-துரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளித்தான்செய்யுந்தன்மைகளும் ஆக்கியிடும் அன்பர்க் கவன் " எனவும் சித்தாந்த நூல்கள் கூறுகின்றன.

மாணவன் : 'சிவனைத் தலைப்பட்டுச் சிவனேயாய் நின்றவர் இவர்" என்பதனை அறிவது எவ்வாறு?

ஆசிரியர்: அவர் வாயிலாக இறைவன் இயற்றியருளும் அதியற்புதச் செயல்களாலே அதனை நாம் அறிந்து கொள்ள முடியும். இதுபற்றியே, "ஓடம் சிவிகை" என்பது முதலிய நான்கு வெண்பாக்களால் நால்வர் ஆசிரியர் வாயிலாக நிகழ்ந்த அதியற்புதச் செயல்களை  'திருக்களிற்றுப்படியார்' என்னும் சித்தாந்த உயர்நூல் எடுத்துரைக்கிறது. இவற்றாலும், " தெய்வப் புலமைத் திருவள்ளுவர் மொழிந்த - மெய்வைத்த சொல்" என்றதாலும், தேவார திருவாசகம் முதலிய திருமுறைகளும், திருக்குறளும் சித்தாந்த முதல் நூல்களாதல்  விளங்கும்.

மாணவன்: இறைவன் ஏதேனும் ஒரு நூலை முதல் நூலாகச்செய்யாமல், முதலில், 'வேதம், சிவாகமம்' என இரண்டு நூல்களையும், பின் 'திருக்குறள், திருமுறை' என இருவேறு வகைப்பட்ட நூல்களையும் ஏன் முதல் நூலாகச் செய்தல்வேண்டும்?

ஆசிரியர்: நல்ல வினா கேட்டாய்! நூலைக் கற்று அதன் வழிநின்று பயன்பெறுவார் ஒருதிறத்தினராய் இல்லாது இருதிறத்தினராய் இருத்தலே, நூலை ஒன்றாகச் செய்யாது இரண்டாகச் செய்தமைக்குக் காரணம்.

மாணவன்: இருதிறத்தினராவார் யாவர் ?

ஆசிரியர் : அறத்தின் பெருமையை உணர்ந்து அதன்வழி ஒழுகி, இம்மை மறுமை இன்பங்களை அடைவார் ஒருதிறத்தினர்; இறைவனது அருளின் பெருமையை உணர்ந்து அதன்வழி ஒழுகி வீட்டின்பத்தினை அடைவார் மற்றொரு திறத்தினர். இவ்விரு திறத்தினரும் முறையே, 'உலகர்’·எனவும் ’சத்திநிபாதர்' எனவும் சொல்லப்படுவர். உலகர் பொருட்டுச் செய்யப்பட்ட நூல், அறநூல்' எனப்படும் பொதுநூல். சத்திநிபாதர் பொருட்டுச் செய்யப்பட்ட நூல், ‘அருள் நூல்' எனப்படும் சிறப்பு நூலாகும்.

“ஆரண நூல் பொது; சைவம் அருஞ்சிறப்பு நூலாம் - நீதியினால் உலகர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது”   என்னும் சிவஞானசித்தியினையும், (சூ. 8-15.) 

“வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல் - ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன” என்னும் திருமந்திரத்தினையும் (2397) 

“உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும், நிலவுமெய்ந்நெறி சிவநெறிய தென்பதும்” என்றருளிய சேக்கிழார் விளக்கத்தினையும் (திருஞா. பு. 820) நோக்கினால், திருக்குறள் பொதுநூல் மற்றும் திருமுறைகள் சிறப்புநூல் என்பதும் தெளிவாகும்.


கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு


0 comments:

Post a Comment