Thursday, July 3, 2025

சித்தாந்த வினா விடை- தொடர் 4 - அருணைவடிவேல் முதலியார்

 

 சித்தாந்த வினா விடை 3

சித்தாந்த வினா விடை 2

 சித்தாந்த வினா விடை 1


அனுமான அளவையின் வகை


இனி, காணப்பட்ட ஏதுவைக்கொண்டு காணப்படாத துணிபொருளை உணர்வதாகிய அனுமான அளவை,தன் பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம்' என இருவகைப்படும்.



(அ) தன் பொருட்டு அனுமானம்

துணிபொருளை மூன்றிடங்களில் வைத்து மூன்று வகை யான ஏதுக்களால் ஒருவன் தானே ஆராய்ந்து துணிவது, தன் பொருட்டனுமானமாகும். துணிபொருளை,சாத்தியம்' என்பர் வட நூலார்.


மூன்று இடங்களாவன: 'தனது ஆராய்ச்சிக்கு அப்

பொழுது உரியதாய் உள்ள இடம், அந்த இடத்தைப் போலவே நின்று அதற்கு உபமானமாவதற்கு உரிய இடம், அந்த இடத் திற்கு நேர்மாறான இடம்' என்பன. எடுத்துக்காட்டாக,

ஒருவன் ஒருமலைமேற் புகையைக் கண்டபொழுது,இம்மலை புகையுடையதாய் இருத்தலால், தீயுடையது' என்று ஆராய்ந்து துணியுமிடத்து, அத் துணிவிற்கு அவன் முன்பு அடுக்களையில் (சமயலறையில்) புகையைத் தீயுடன் கண்ட காட்சியே காரண மாகும்; ஆகவே, 'இம்மலை அடுக்களை போன்றுள்ளது' என்ற உவமையுணர்ச்சி அப்பொழுது அவனுக்கு உளதாகும். மேலும்தீ இல்லாத இடத்தில் புகை இருத்தல் இல்லையோ? என அதனை எதிர்மறுத்து உணருமிடத்து, தீயோடு சிறிதும் இயைபில்லாத தாமரை ஓடைக்கண் புகையில்லாமை அவனுக்குத் தோன்றும். அதனால், தீயை அவன்,மலை, அடுக்களை, தாமரையோடை' என்னும் மூன்றிடங்களில் வைத்துத் துணிபவனாதலறிக.


மூன்றிடங்கள்


மூன்றிடங்களும் 'மூன்று பக்கம்' (பட்சம்) என வழங்கப் படும். அவற்றுள், ஆராய்ச்சிக்குரிய இடம், பக்கம் (பட்சம்) என் வழங்கப்படும். அதற்கு உபமானமாதற்குரிய இடம்,ஒத்த பக்கம் (சபட்சம்)' எனப்படும். அதற்கு மறுதலையாய் உள்ள இடம் 'ஒவ்வாப் பக்கம் (விபட்சம்)' எனப்படும். மேற்காட்டிய உதாரணத்தில், மலை பக்கம்; அடுக்களை சபக்கம்; தாமரை யோடை விபக்கம். பக்கத்திலும், சபக்கத்திலும் துணியப்படும் பொருள் இருக்கும்; விபக்கத்தில் அப்பொருள் இராது.


மூன்று ஏதுக்கள்


இனி, மூன்று ஏதுக்களாவன: 'இயல்பு ஏது, காரிய ஏது, இன்மை ஏது' என்பன. காரிய ஏது என்பதனாலேயேகாரணஏதுஎன்பதும் தழுவிக் கொள்ளப்படும். இன்மை எதுவை அனுபலத்தி ஏது' என்பர்.


இயல்பு ஏது


இயல்பு ஏதுவாவது, பொருள்களை உணர்தற்குச் சொற்கள் ஏதுவாதல்; அஃதாவது, மரம் பூத்தமையை நேரிற் காணாதிருக்கின்ற ஒருவனிடத்தில் மற்றொருவன் வந்து, மரம் பூத்ததுஎன்று சொல்வானாயின், கேட்டவன் அச்செய்தியை இனிது உணர்கின்றான். அவ்வாறு உணர்தற்கு ஏதுவாய் நின்றது எது? ஒருவன் வந்து சொல்லிய அச்சொல்லே. அச்சொல் அப்பொருளை எவ்வாறு உணர்த்திற்று? என்று வினவினால், `'இவ்வாறு உணர்த்திற்றுஎன விளக்கிக் கூற முடியுமோ? முடியாது: ஆகவே, ஒவ்வொரு சொல்லும் அதனதன் பொருளை உணர்த்துவதில் இயல்பாகவே ஓர் ஆற்றல் பெற்றிருக்கின்றது என்று கொள்ள வேண்டும்; அதனால் பொருளை நேரே காணாமல் பிறர்சொல்லும் சொல்லால் உணருமிடத்து அச்சொல்லாகிய ஏது,இயல்பு ஏது' எனப்படுகின்றது. "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றாஎன்பது தொல் காப்பியம்.


காரிய ஏது


காரிய ஏதுவாவது, காணப்படாத காரணப்பொருளை உணர்தற்கு, காணப்பட்ட அதன் காரியப்பொருள் ஏதுவாய் நிற்றல். உதாரணமாக, காணப்படாத நெருப்பை உணர்தற்கு ' அதன் காரியமாகிய புகை காணப்பட்டு ஏதுவாய் நிற்றலைக் காண்க.


காரண ஏது


காரண ஏதுவாவது, காரியம் நிகழாதிருக்கும்பொழுதே அது நிகழும் என உணர்தற்கு அதன் காரணப் பொருள் ஏதுவாய் நிற்றல். உதாரணமாக மழை பெய்யாதிருக்கும் பொழுதே மழைபெய்யும் என உணர்தற்கு, இடித்தும், மின்னியும் இருண்டும் எழுகின்ற மேகம் ஏதுவாய் நிற்றலை அறிக.


'காரிய ஏது' என்பதனாலேயே ஒற்றுமைபற்றிக் காரண ஏதுவும் தானே பெறப்படும் என்பதுபற்றி இதனை வேறுகூறாமல் 'மூன்று ஏது' என்றே கூறுவர்.


 இன்மை ஏது அல்லது அனுபலத்தி ஏது


இன்மை ஏது அல்லது அனுபலத்தி ஏதுவாவது, காரணப் பொருளினது இன்மையை உணர்தற்குக் காரியப்பொருளினது இன்மையும், காரியப் பொருளினது இன்மையை உணர்தற்குக் காரணப் பொருளினது இன்மையும் ஏதுவாதல். எடுத்துக் காட்டாக, குளிர் இல்லாமை, 'பனி இல்லை' என்று உணர்தற்கும், பனி இல்லாமை, 'குளிர் இராது' என்று உணர்தற்கும் ஏதுவாய் நிற்றல் உணர்க. குளிர், காரியம்; பனி, காரணம்.


(ஆ) பிறர்பொருட்டனுமானம்


மேற்சொல்லியவாறு, காணப்படாத பொருளை ஏதுக் களால், தான் அனுமித்து (கருதி) உணர்ந்ததை அம்முறையிலே பிறர் உணரும்படி எடுத்துச் சொல்வது பிறர்பொருட்டனுமான மாகும். எனவே, 'உள்ளத்துள்' உணர்வது தன்பொருட்டனு மானம்' என்பதும், 'அதனை வெளியில் சொல்லால் சொல்லி உணர்த்துவது பிறர்பொருட்டனுமானம்' என்பதும் விளங்கும்.


பிறர் உணரும்படி சொல்லப்படும் சொல், 'உடன்பாட்டுச் சொல், எதிர் மறைச் சொல்' என இருவகைப்படும். உடன் பாட்டினை, 'அந்நுவயம்' என்றும், எதிர்மறையினை, 'வெதிரேகம்' என்றும் வடநூலார் கூறுவர்.


i உடன்பாட்டுச் சொல்


'இம்மலை புகையுடைமையால் தீயுடையது; புகையுள்ள விடத்துத் தீயுண்டு, அடுக்களைபோல், என இவ்வாறு உடன் பாட்டுவகையில் சொல்லப்படுவது, உடன்பாட்டுச் சொல்.


ii எதிர்மறைச் சொல்


இம்மலை தீயுடையதே, புகையுடைமையால், தீ இல்லாத விடத்துப் புகை உண்டாதல் இல்லை, தாமரை ஓடைபோல' என இவ்வாறு எதிர்மறை வகையில் சொல்லப்படுவது எதிர்மறைச் சொல். இவ்வாறு எதிர்மறை வகையால் உணர்வதையேஅருத்தாபத்தி' எனச் சிலர் வேறோர் அளவையாகக் கூறுவர் என்பது முன்பு சொல்லப்பட்டது.


iii அனுமான உறுப்பு ஐந்து


பிறர் பொருட்டுச் சொல்லப்படும் அனுமான வாக் கியத்தை ஐந்து உறுப்புக்கள் உடையதாகத் தார்க்கிகர் முதலி யோர் கூறுவர். அவை, 'மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமனம்' என்பன.


1. மேற்கோள்


மேற்கோளாவது, தான் துணிந்து கொள்ளும் கொள்கை. அதுஇம்மலை தீயுடையது' என்றல் போல்வது. மேற்கோளை வடநூலார், 'பிரதிக்ஞை' என்பர்.


2. ஏது


ஏதுவாவது தனது துணிவிற்குக் காரணமாய் நிற்பது, அதுபுகையுடைமையால்' என்றல்போல்வது: 'ஏது' என்பது, வடசொல்லே. இதனைத் தமிழ்ச் சொல்லால் கூறுதல் இல்லை.


3. எடுத்துக்காட்டு


எடுத்துக்காட்டாவது, ஏதுவாகக் குறிக்கப்பட்ட பொருள் மேற்கோளாகத் துணியப்படும் பொருளோடு எப்பொழுதும் விட்டு நீங்காது உடன் நிகழ்தலை வலியுறுத்துதற்கு எடுத்துக் காட்டப்படுவது. அதுபுகையுள்ள இடத்துத் தீயுண்டு, அடுக்களை போல' என்றல்போல்வது. இதுவே, எதிர்மறையில் 'தீயில்லாத இடத்தில் புகையில்லை; தாமரை ஓடைபோல' என்று வரும். இவையே 'ஒத்தபக்கம் (சபட்சம்); ஒவ்வாப்பக்கம் (விபட்சம்). என முன்பு கூறப்பட்டன. எடுத்துக்காட்டினை, 'உதாரணம்' என்றும், 'திருட்டாந்தம்' என்றும் வடநூலார் கூறுவர். விட்டு நீங்காமை,அவினாபாவம்' எனப்படும்.


4. உபநயம்


உபநயமாவது, ஒத்த பக்கத்தினது (உபமானத்தினது). தன்மையைப் பக்கமும் (உபமேயமும்) உடையதாய் இருக் கின்றது எனப் பொருத்திக் காட்டுதல். அது,இம்மலையும் புகையுடையது' என்றல் போல்வது.


5. நிகமனம்


நிகமனமாவதுமேற்கோளாகச் சொல்லிய பொருளை, இவ் வாற்றால் இங்ஙனம் சொல்லப்பட்டது' என முடிந்தது முடித் தலாகக் கூறி முடித்தல். அது,ஆதலின், இம்மலையும் தீயுடையது' என்றல் போல்வது. 'உபநயம், நிகமனம் என்பன வடசொற்களே. இவற்றையும் தமிழ்ச் சொல்லாற் கூறுதல் இல்லை.


'உபநயம், நிகமனம்' என்னும் இரண்டும் இன்றியமை யாத உறுப்புக்கள் அல்ல; அதனால் சைவ சித்தாந்திகள், மேற் கோள், ஏது, எடுத்துக்காட்டு' என்னும் மூன்று உறுப்புக்களை மட்டுமே கூறுவர்.


மேற்கோள் முதலிய மூன்றும் தம் தம் இயல்பிற் குறை யாது நிரம்பி நிற்கும்பொழுதே அனுமான அளவை, அளவை யாகக் கொள்ளப்படும். அவை குறைபாடுடையனவாய்விடின், 'போலி' எனப்பட்டு, அனுமான அளவையும் போலி என ஒதுக்கப்படும். அனுமானப் போலியை, 'பக்கப்போலி, ஏதுப் போலி உவமப்போலி' என மூன்றாகப் பகுத்து, ஒவ்வொன்றையும் பலவாக்கிப் பலவாறாக விரிப்பர். அவையெல்லாம் அவ்வாறே நாம் விரிக்க வேண்டுவது இல்லை. போலியை வடநூலார் 'ஆபாசம்' என்பர்.


இனி, அனுமானம், காட்சியில் அனுமானம், கருத்தில் அனுமானம், உஉரையில் அனுமானம்' என வேறொரு வகையில் மூன்றாகச் சொல்லப்படும்.


ஓர் இடத்தில் மலரின் மணத்தை நுகர்ந்த ஒருவன், 'இங்கு மலர் உண்டு' எனத் துணிதல் போல்வன காட்சியில் அனு மானம்; என்னையெனின், மலர் காட்சிப் பொருளாதலின் என்க; எனவே புகையைக் கண்டு நெருப்பு உண்டு என உணர்தலும் இதுவேயாயிற்று.


6. உரையளவையின் வகை


இனி, 'காட்சி, கருதல்' என்னும் இரண்டு அளவைகளாலும் அறிய வாராதவற்றை அறிய உதவுவதாகிய உரையளவை, தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை' என மூன்று வகைப்படும். இவை முறையே, கருமகாண்டம், உபாசனாகாண்டம், ஞான, காண்டம் எனப்படும்.


(அ) தந்திரகலை


தந்திரகலை அல்லது கருமகாண்டம்' என்பது நித்திய, நைமித்திய, காமிய கருமங்களாகிய ஒழுக்கங்களைக் கூறுவது. அதனை உபதேசகலை அல்லது ஞானகாண்டத்தொடு மாறு கோளின்றி உள்ளவாறுணரும் உணர்வே தந்திரகலையளவை யாகும்.


(ஆ) மந்திரகலை


'மந்திரகலை அல்லது உபாசனாகாண்டம்' என்பது மேற் கூறிய நித்தியம் முதலிய மூவகையிலும், ஐம்பொறி முதலிய வற்றை அடக்கித் தெய்வங்களை வழிபடும் முறையைக் கூறுவது. அதனை உள்ளவாருணரும் உணர்வே மந்திர கலையளவையாகும்.


(இ) உபதேசகலை


உபதேசகலை அல்லது ஞானகாண்டம் என்பது, 'பதி, பசு பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு -விரித்துக் கூறுவது. இதுவே,தத்துவ ஆராய்ச்சி' எனப்படும். அதனை உள்ளவாறுணரும் உணர்வே உபதேசகலையளவையாகும்.


இவ்வாறு உரையளவையின் வகைகளை உணர்ந்துகொள்க. இங்ஙனம் மூவகை அளவைகளின் இயல்பையும் ஒருவாறு உனக் குத் தொகுத்துக் கூறினோம்.


கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு



0 comments:

Post a Comment