Sunday, July 26, 2026

துரியம் கடந்த சுடர் 9 - நால்வேதம் ஆறங்கமான ஞானச்சுடர்

                                                                         [1]

நம் பாரதத்தின் தென்பகுதியில் பல லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்த தொல்மானுட மூதாதை கண்ட முதல் தெய்வ வடிவம் என ‘சுயம்பு லிங்க'த்தை கண்டோம். அதுவே மானுடம் கண்ட ஆதி தெய்வ வடிவாக இருக்கச் சாத்தியமென இரு கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

1.     அதன் சீர்மை. அழகே மானுடம் புறவயமாக உணர்ந்த இறை வெளிப்பாடு. அழகு என்பது தன்னளவில் சீர்மையே. அந்த சீர்மையை மானுடம் தான் உருவாக்கிய முதல் கருவியிலேயே கொண்டு வந்து விட்டது. அந்த கருவியைப் போன்றே சீர்மையாக அமைந்த ஒரு கல்லையே அது முதல் தெய்வ வடிவாக, தன்னால் உருவாக்கப்பட்ட அழகின், தெய்வத் தன்மையின் வெளிப்பாடாகக் கருதியிருக்கக் கூடும்.

2.     அதன் நிமிர்வு. மானுடம் எப்போதுமே வானைப் பார்த்தே வாழ்ந்து வந்திருக்கும். ஏனெனில் வெளிச்சம் குறைந்த இரவுகளில் அவர்களைத் தொடர்ந்து ஈர்த்து வந்த ஒன்று ஆகாயமே. குறிப்பாக வானில் இருந்த நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை. தொல்மானுடர்களுக்கு தாங்கள் இருக்கும் இடத்திற்கான எல்லை நன்கு தெரியும். ஆனால் மேலே இருந்த விசும்பு எல்லையின்மை என்பதையே தன் இயல்பாக கொண்டிருந்தது. மேலும் இரவில் ஒரு மாதிரியாகவும், பகலில் வேறு மாதிரியாகவும் தென்பட்டதும் அதுவே. எனவே மானுடம் தெய்வம் என்பது வானில் தான் இருக்கும் என நம்பியதில் வியப்பில்லை தான். அந்த வானை எட்டிப் பிடிக்கக் கூடிய ஒன்றையே அது தெய்வத்தின் குறியீடாகக் கொண்டிருக்கும். வானை நோக்கி எழும்பியது மானுடத்திற்கே உரித்தான தனித்தன்மையான நிமிர்வு தான். லிங்கம் என்பது ஒரு முனை புவியிலும், மறுமுனை வானை நோக்கியும் எழும்பி நிற்கும் ஒரு நிமிர்வே.  

அந்த கல்லாயுதம், கற்கைக்கோடரி, மானுடத்தின் முதல் தெய்வ உருவகமாக இருந்திருக்க சாத்தியமான இரு காரணங்களை மேலே கண்டோம். ஆனால் அந்த கல் தான் அந்த தெய்வ உருவு என்பதைத் தூண்டியிருக்கும் என்பதற்கு என்ன ஆதாரம்? வேறு ஏதேனும் ஒன்று கூட மானுடத்திடம் அந்த உணர்வைத் தூண்டியிருக்கக் கூடாதா? இக்கேள்விக்கு பதில், தூண்டியிருக்கக் கூடும் என்பது தான். ஆனால் அவை எதுவும் இன்று வரை நீண்டு நம் முன் வந்து சேரவில்லை. எனவே அவற்றைப் பற்றி ஊகிக்கும் அளவிற்குக் கூட நம்முன் எந்த தரவுகளும் இல்லை. அப்படியெனில் இந்த கல்லாயுதத்திற்கு மட்டும் அவ்வாறு ஊகிக்கச் சாத்தியமான தரவுகள் இருக்கின்றனவா? ஆம். முதல் காரணம், அவை கல்லால் செய்யப்பட்டவை என்பதே. செய்தவர், அதைப் பயன்படுத்தியவர் மறைந்தாலும் அவை தங்கின. ஆதி மானுடத்திற்கு தன் வாழ்நாளைத் தாண்டியும் இருக்கக் கூடிய ஒன்றை தான் செய்திருக்கிறோம் என்பதை அறிந்த கணம் எவ்வளவு பெரிய திறப்பாக இருந்திருக்கும்!! எனவே அவர்கள் அதை மதிக்கத் துவங்கினர். இதற்கான முதல் பெரும் ஆதாரம், மத்திய ஸ்பெயினின் அடப்யூர்கா என்னும் ஊரின் மலையுச்சியில் இருக்கும் குகையொன்றில் கிடைத்தது, 2003ல். அந்த குகை மானுட வாழ்க்கைக்குரியதல்ல. மாறாக அது ஒரு இறந்தவர்களை கொண்டு சென்று இடும் இடுகாடு. அங்கே குறைந்தது 28 பேரின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. நான்கு லட்சம் வருடங்களுக்கு முற்பட்டவை. கூடவே ஒரே ஒரு ஊதா மற்றும் பழுப்பு நிறத்தின் கலவையில் அமைந்த ஒரு கற்கைக்கோடரியும் கிடைத்திருக்கிறது. அந்த கைக்கோடரிக்கு ‘எக்ஸ்காலிபர்' என்று பெயரிட்டிருக்கின்றனர். இதுவே இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஆகப் பழைய இடுகாட்டு தொல்லியல் சான்று. அந்த மானுடர் மரணித்தவரின் கூடவே வைத்து அனுப்பும் அளவிற்கு அந்த ஆயுதத்திற்கு மரியாதை அளித்திருக்கின்றனர். இதைத் தவிர இன்னும் ஒரு பெரிய ஆதாரம் நம் பாரதத்தில் இருக்கிறது. இன்றளவும் தெய்வ உருவங்களுக்கு, குறிப்பாக ஆலயத்தில் வைக்கப்படும் தெய்வ உருவங்களுக்கு நமது முதல் தேர்வு கல் தானே!!. ஏனெனில் மானுடம் தன்னால் கையாள இயன்ற அகால ரூபம் என கல்லையே கண்டுகொண்டது. அந்த அறிதல் தொல்மானுட மூதாதையருக்கே இருந்திருக்கிறது என்பதையே அந்த ‘எக்ஸ்காலிபர்' கல் காட்டுகிறது.

இவ்வாறு வானை நோக்கி எழும்பி நிற்கும் தொல்கால கற்கள் இன்று உலகெங்கும் காணக்கிடைக்கின்றன. ஆனால் தற்காலத்தில் நம் பாரதத்தில் மட்டும் தான் அவை சிவலிங்கங்களாக வழிபடப்படுகின்றன. காரணம், பல லட்சம் வருடங்களாக அறுபடாமல் நீளும் சிந்தனை மற்றும் பண்பாட்டு தொடர்ச்சி. எனவே தான் அந்த ஆதி தெய்வ வடிவம் தெய்வ வெளிப்பாடு என்ற நிலையில் இருந்து குறியீடு என்றாகி, கனவாகி, மொழியில் நுழைந்து கலையாகி, வெளிப்படுத்தக் கூடிய கருத்தாகி, அது சுட்டி நிற்கும் கருவாகி, தன் மீது ஏற்றிக் கொள்ளச் சாத்தியமான அத்தனை அறிதல்களையும் ஏற்றுக் கொண்டு தத்துவமாகி,  இவையனைத்தையும் மீண்டும் குறியீட்டு வழியில் விளக்கும் வழிபாடுகளாகி, சடங்குகளாகி நம் அகங்களிலும், இல்லங்களிலும், ஆலயங்களிலும் இன்று நாம் காணும் தெய்வ வடிவாகி, சிவமாகி, லிங்க ரூபமாகி நம்முன் நிற்கிறது. இந்த பரிணாம வளர்ச்சிக்குத் தான் இத்தனை லட்சம் வருடங்கள் ஆகி இருக்கின்றன. உலகின் பிற பகுதிகளில் இந்த தொடர்ச்சி இல்லாமல் ஆனதால் அவை இந்த வளர்ச்சி நிலைகளின் வெவ்வேறு படிகளில் தங்கி விட்டிருக்கின்றன அல்லது உறைந்து விட்டிருகின்றன. அவ்வாறு உறைந்து போனவற்றின் எச்சங்களையே நாம் உலகெங்கும் கண்டடைந்து வருகிறோம்.

அவ்வாறெனில் ஆதி தெய்வ வடிவு சிவலிங்கம் என்பது பாரதத்திற்கு மட்டுமே பொருந்த கூடிய ஒன்றா? நாம் சென்ற பதிவில் கண்ட நடுகற்கள் மற்றும் பிற தொல்லியல் ஆதாரங்கள் எல்லாம் தொல்லியல் தடயங்கள். அவை நமது லிங்கம் என்ற கருத்துருவைப் போன்றதா அல்லது அவற்றிற்கு வேறு ஏதேனும் பொருள் இருந்திருக்கக் கூடுமா? குறிப்பாக அவை வழிபடப்பட்டவையா அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்திற்காக நிறுவப்பட்டவையா? வழிபடப்பட்டவை எனில் அந்த வடிவங்களின் தன்மைகளாக, அர்த்தங்களாக அந்த மக்கள் முன்வைத்தவை, இன்று நாம் சிவலிங்கத்திற்குக் கொடுக்கும் அதே தன்மைகள், அர்த்தங்கள் தாமா? அவர்களின் வழிபடு முறைகளுக்கும், நம் வழிபடு முறைகளுக்கும் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா? இன்று இவ்வுலகில் பாரதம் தவிர வேறு ஏதேனும் பகுதிகளில் இறை வழிபாடு நாம் முன்மொழிந்தவாறு சிவலிங்கம் அல்லது அதை சுட்டி நிற்கும் ஏதேனும் ஒரு வடிவில் நிகழ்கிறதா எனத் தேடினால் மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். முக்கியமாக இயற்கை மதங்களை பின்பற்றும் மக்கள் கூட்டத்தைத் தேடவேண்டும். அவ்வாறு பதில்களைத் தேடும் முன் இரு கேள்விகளை நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

1.     அது என்ன இயற்கை மதம்?

2.     சிவலிங்கம் என்பதற்கு நாம் அளிக்கும் விளக்கம் என்ன?

        [2]

     முதலில் மதம் என்றால் என்ன? மதம் என்ற கருத்து பொதுயுகம் (கிபி) பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் உருவான ஒன்று. மதம் என்பதை குறிக்கும் ரிலிஜியன் (Religion) என்னும் வார்த்தை பிரெஞ்சு வார்த்தையான ரிலிஜியோ (Religiō) என்பதில் இருந்து வந்தது. பதினேழாம் நூற்றாண்டு வரை அதற்கு புனிதமானவற்றை வழிபடுவதுஎன்றுதான் அர்த்தம். பொ.யு பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்து பல கிறிஸ்தவப் பிரிவுகள் உருவாயின. அவற்றை புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம், அல்லது சீர்திருத்த கிறிஸ்தவம் என்பார்கள். அந்த கிறிஸ்தவப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டவே ரிலிஜன் என்னும் சொல் பயன்பாட்டுக்கு வந்தது. காலப்போக்கில் அதுவே மதம் என்று நாம் இன்று சொல்லும் அர்த்த்தை அடைந்தது. அந்த அர்த்தம் முழுக்கமுழுக்க ஐரோப்பாவில் கிறிஸ்தவ நம்பிக்கை சார்ந்து உருவான ஒன்று. இன்றுவரை ஐரோப்பிய அறிஞர்கள் மதம் என்று சொல்லும்போது அளிக்கும் அர்த்தம் அதுதான். அவர்களின் உருவகத்தின்படி ஒரு மதத்தில் நான்கு அம்சங்கள் இருக்கும்.

1.     வழிபாட்டுக்குரிய தெய்வம் அல்லது தெய்வங்கள்

2.     வழிபாட்டுக்குரிய வழிமுறை மற்றும் வழிபாட்டு இடங்கள்

3.     வழிபாட்டுத் தத்துவங்கள் மற்றும் அவற்றை முன்வைக்கும் புனித நூல்கள்

4.     வழிபாட்டை கட்டுப்படுத்தும் நிர்வாக அமைப்பு,

இந்நான்கும் இருந்தால்தான் அது மதம். இந்த வரையறை இன்று உலகில் இருக்கும் அத்தனை மதங்களுக்கும் பொருந்துமா எனில் பெரும்பான்மையான, அதிலும் குறிப்பாக முதன்மை மதங்களான கிறித்தவம், இஸ்லாம், பௌத்தம், சீக்கியம், சமணம், பார்ஸி, யூதம் போன்றவற்றிற்கு  நிச்சயம் பொருந்தும்.

மேற்கூறிய பட்டியலில் இந்து மதம் இல்லை. மதம் என்பதற்கான இந்த ஒட்டுமொத்த வரையறை இந்து மதத்திற்கு பொருந்துமா எனக் கேட்டால், அதற்கு முதல் மூன்று அம்ச்சங்கள் மட்டுமே பொருந்தும். இந்து மதத்திற்கென தனியான மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு கிடையாது. சைவத்திற்கு பொருந்துமா எனக் கேட்டால் அதற்கும் ஒரு பொதுவான நிர்வாக அமைப்பு கிடையாது. ஆதினங்கள், மடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறுங்குழுவினை நிர்வகிப்பவை. பெரும்பாலான சைவர்கள் இந்த அமைப்புகளுக்கு வெளியே தான் இருக்கின்றனர். வைணவத்திலும் இதே தான் நிலை. சிவன் கோவில்களிலேயே வெவ்வேறு வகை வழிபாடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. வைணவம், சாக்தம் என பிற பிரிவுகளிலும் இது தான் நிலை. நம் பாரதத்தினைப் பொறுத்தவரை மையப்படுத்தப்பட்ட, ஒருமுகப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு என ஒன்று கிடையாது. ஒருமுகப் படுத்தப்பட்ட வழிபாட்டு விதிகள் என ஒன்று கிடையாது. சரி, நான் சைவன். அதனால் சிவனைத் தவிர வேறு யாரையும் வழிபட மாட்டேன் என சொல்வேனா என்றால் அதுவும் கிடையாது. எனக்கு பெருமாளைப் பார்க்கவோ, அம்மை முன் நின்று வேண்டவோ எந்த தயக்கமும் கிடையாது. இமயத்தின் திபெத்திய நிலத்தின் கலாச்சார நீட்சியென்றே தோன்றும் ஸ்பிடி, லடாக் பகுதிகளில் இருக்கும் புத்த மடாலயங்களுக்கு சென்று போதிசத்வருக்கு முன் நின்று வேண்டிக் கொள்வதிலும் எந்த விலக்கமும் கிடையாது. பாரதத்தின் இந்து தர்மத்தை பின்பற்றும் கோடிக் கணக்கானவர்களில், சில லட்சம் தீட்சை போன்றவற்றைப் பெற்று, தீவிர மையத் தெய்வ வழிபாட்டிற்குள் சென்ற வீரசைவர்கள், ஶ்ரீவைணவர்கள் போன்றவர்களைத் தவிர பெரும்பாலான இந்துக்கள் அனைத்து தெய்வங்களையும் வணங்குபவர்கள் தாம். எனில் இந்து மதத்தைப் பொறுத்தவரை மதம் என்பதன் வரையறை என்ன? மதம் என்றால் உறுதியான தரப்பு என்றே பொருள். முதன்மையான ஒரு தெய்வம், விரிவான வழிபாட்டு முறைகள் மற்றும் முழுமையான பிரபஞ்சப்பார்வை எனத் தன்னளவில் முழுமையான, உறுதியான ஒரு தரப்பே மதம் என்றழைக்கப்படுகிறது. நம் பாரதம் முழுமையிலும் பல தரப்புகளாக இருந்து வந்த மதங்களை, ஒன்றிணைத்து அவற்றை ஆறு பெரும் பிரிவுகளாக, சமயங்களாக, மதங்களாக வகுத்தளித்தவர் ஆதி சங்கரர். எனவே தான் அவர் ‘ஷ்ண்மத சங்கிரகர் – அறுசமய ஒருங்கிணைப்பாளர்' என்றழைக்கப்படுகிறார். அப்படியெனில் இந்து மதம் தன்னை எவ்வாறு அழைத்துக் கொள்கிறது. இந்து தர்மம் என. ஆம், இந்து மதம் தன்னை ஒருபோதும் மதம் எனச் சொல்லிக் கொள்வதில்லை. தர்மம், வழி என்று தான் எப்போதும் முன்வைக்கும். இந்த இடத்தில் தான் இயற்கை மதம் என்ற கருத்துரு வருகிறது.

[3]

பொதுவாக இன்று இருக்கும் மதங்களை இரு வகையாக பிரிக்கலாம்.

1.     இயற்கை மதங்கள்

2.     தீர்க்கதரிசன மதங்கள்

தீர்க்கதரிசன மதங்கள் – இவற்றின் பெயர் சுட்டுவது போலவே இம்மதங்கள் ஒரு தீர்க்கதரிசியினால் உருவாக்கப்பட்டவை. அந்த தீர்க்கதரிசி தன் இயல்பான ஆன்மிகத் தேடலின் பாதையில், அதுவரை திகழ்ந்து கொண்டிருந்த தத்துவங்கள், தரிசனங்கள் என அனைத்தையும் தொகுத்து, தன்னுடைய தேடலுக்கு இயைந்த ஒத்த கருத்துள்ள முன்தோன்றிய ஞானிகள் காட்டிய வழிகள் ஊடே சென்று தனக்கென ஒரு முழு தரிசனத்தை கண்டடைந்து, விரிவாக கட்டமைத்து  முன்வைத்திருப்பார். அது அவரது தொடர் பிரசங்கங்கள், உரையாடல்கள், கருத்துக்கள், நூல்கள் என வெளிப்பட்டு, முக்கியமான ஒற்றை வரிகளாக மக்களிடையே கொண்டு செல்லப்படும். அந்த தரிசனம் தத்துவ தளத்தில் இருந்து அன்றாட தளத்திற்கு, விசேஷத்தில் இருந்து சாமானியத்திற்கு வருகையில் அன்றாடம் பின்பற்றப்பட வேண்டிய ஆசாரங்கள், அனுஷ்டானங்கள், தெய்வங்கள், அவற்றின் உருவங்கள், அடையாளங்கள், குறியீடுகள், செய்ய வேண்டிய வழிபாடுகள், சடங்குகள், சமூக பழக்க வழக்கங்கள் என விரிவாக பெருவாரியான மக்கள் திரளுக்கு உகந்த வகையில் விரித்தெடுக்கப்படும். இந்த விரிவு அந்த தீர்க்கதரிசியில் இருந்து துவங்கி அவரது மாணவர்கள், பின்பற்றுவோர் என ஒரு மாபெரும் குழாத்தால் உருவாகிவரும். இந்த குழாம் காலப்போக்கில் இவற்றை நிர்வகிக்கும் ஒரு மைய அதிகார அமைப்பாக மாறியிருக்கும். இப்படித் தான் தீர்க்கதரிசன மதங்கள் நாம் மேற்கண்ட வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன. இன்னும் சொல்லப்போனால் அந்த மதங்களில் இருந்து நாம் மேற்கண்ட வரையறையையே பெற்றிருக்கிறோம். எப்போதுமே இலக்கியத்தில் இருந்து தான் இலக்கணம். மகதி கோசாலன் உருவாக்கிய ஆசிவகம், மகாவீரர் உருவாக்கிய சமணம், புத்தரில் துவங்கிய பௌத்தம் துவங்கி குருநானக் உருவாக்கிய சீக்கியம், மிர்ஸா குலாம் அஹமத் உருவாக்கிய அகமதியா என பாரதத்திலேயே பல தீர்க்கதரிசன மதங்கள் இருக்கின்றன. இன்று உலகளவில் மிகப் பிரபலமான தீர்க்கதரிசன மதங்கள் கிறித்தவம் மற்றும் இஸ்லாம். இவையனைத்துமே நாம் பொது வரலாறு என ஒன்றை உருவாக்கிக் கொண்ட காலத்திற்குப் பிறகே தோன்றின. பொ.மு. ஆறாம் நூற்றாண்டு துவங்கி இன்று வரை உருவாகிக் கொண்டே தான் இருக்கின்றன.  

தீர்க்கதரிசன மதங்களுக்கு நேர் மாறானவை இயற்கை மதங்கள். இவற்றின் வேர், ஆதி, தோற்றம் என எதையும், யாரையும், எந்த ஒரு காலத்தையும் சுட்டிக் காட்ட இயலாது. வரலாறு சென்று தீண்டாத, மொழி கூட சென்று தீண்டாத காலத்தில் இருக்கின்றன இவற்றின் வேர்கள். அந்த தொல்காலங்களில் வாழ்ந்தவர்கள் எழுப்பிக் கொண்ட கேள்விகள், அவற்றிற்கு அவர்கள் கண்டடைந்த பதில்கள், அறிதல்கள் மற்றும் தரிசனங்கள் மெல்ல மெல்ல ஒன்றிணைந்து, உருமாறி, மாறி வரும் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை புதுப்பித்துக் கொண்டு இன்று நம் முன் வந்து நிற்பவை இத்தகைய இயற்கை மதங்கள். எங்கெங்கெல்லாமோ துவங்கி, பாய்ந்து, ஓடி, ஒன்றோடு ஒன்று என இணைந்து ஒரே நதியென ஆகும் கங்கை போன்ற ஒரு பெருநதியின் வளர்ச்சிக்கு ஒப்பானது ஒரு இயற்கை மதத்தின் பரிணாமம். எனவே தான் நம் மரபில் நதி மூலம் காணக் கூடாது என்பார்கள். இம்மதங்களுக்கு பெயர்களும் கால ஓட்டத்தில் வெவ்வேறாக இருந்து கொண்டே தான் இருக்கும்.

உலகில் பல இயற்கை மதங்கள் இருந்தன. எகிப்திய மதம், சுமேரிய மதம், கிரேக்க மதம், கெல்டிக், நார்ஸ், பாஸ்கெ உள்ளிட்ட பல ஐரோப்பிய பாகனிய மதங்கள். யூத மதம், ஜப்பானிய ஷிண்டோ மதம், திபெத்தின் பான் மதம், நம் இந்து மதம் ஆகியவை இயற்கை மதங்களுக்கு உதாரணங்கள். இவற்றில் இந்து மதம் மட்டுமே இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே இயற்கை மதம். யூத மதம் தன் கடந்த காலத்திலேயே தேங்கிவிட்ட ஒன்று என்றாலும் இன்றும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவால் முதன்மையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. திபெத்தின் பான் மற்றும் ஜப்பானின் ஷிண்டோ மதங்கள் பெயரளவிற்கு இருந்து கொண்டிருக்கின்றன. பிற அனைத்துமே அழிந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டு விட்டன.

[4]

இரண்டாவது கேள்விக்கு வருவோம். நாம் சிவலிங்கம் என்பதற்குக் கொடுக்கும் அர்த்தம், பொருள் என்ன? இன்று நாம் காணும் சிவலிங்க உருவம் என்பதற்கும் ஒரு பரிணாம வளர்ச்சி உள்ளது. ஆனால் அவையனைத்தும் அந்த சுயம்பு லிங்கத்தைக் கண்ட அந்த தொல்மூதாதையின் உணர்வில், கனவில், அறிதலில் இருந்து தோன்றி வளர்ந்தவையே. அந்த ஆதி லிங்கம் எப்படி தோற்றமளித்திருக்கும் என்பதைக் கற்பனை பண்ணி பாருங்கள். மண்ணில் புதைந்து ஒரு சிறு உயரத்திற்கு எழும்பியிருக்கும் ஒரு கல். இன்று ஜ்யோதிர் லிங்கங்களான காசியின் புடவிக்கிறைவனானாலும் சரி, உஜ்ஜயினி மகாகாலரானாலும் சரி, ஓம்காரேஷ்வரின் ஓம்காரேஷ்வரானாலும் சரி, மம்லேஷ்வரானாலும் சரி அந்த லிங்கங்கள் இப்படித்தான் இருக்கின்றன. அவற்றைச் சுற்றி தரையில் பதிந்து வைத்ததைப் போன்ற ஒரு ஆவுடை இருக்கும். அந்த ஆவுடையின் இடப்புறமாக ஒரு கை வடிவில் அபிஷேக நீர் செல்லும் பாதை இருக்கும். அந்த லிங்கத்தின் மீது எப்போதும் நீர் தாரை ஊற்றும் வண்ணம் ஒரு நீர்க் கலசம் சிறிய துளையுடன் தொங்கவிடப்பட்டிருக்கும். லிங்கத்தின் தலை, ஆவுடை போன்ற பகுதிகளில் எல்லாம் மலர் மாலைகளும், உதிரி மலர்களும் அலங்காரமென சாற்றப்பட்டிருக்கும். தமிழகத்தில் கருவறையில் இருக்கும் லிங்க ரூபங்களுக்கு முகம் எழுதுவதோ, முகத்தோடு கூடிய அங்கி மாட்டுவதோ, லிங்கத்திலேயே முகம் செதுக்கப்பட்டு இருப்பதோ இல்லை. திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர், காஞ்சி கச்சபேஸ்வரர், திருக்கொட்டையூர் கோடீஸ்வரர் என மூவருமே தமிழகத்தில் உள்ள முக லிங்க சந்நிதிகள். இவை தவிர திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட சில கோவில்களில் பரிவார தெய்வங்களாக முகலிங்க மூர்த்திகள் காணப்படும். ஆனால் கர்நாடகத்தில் இருந்தே சிவலிங்கத்திற்கு முகம் அளிப்பது பரவலாகக் காணப்படுவது தான். பெரும்பாலான முகங்களில் நன்கு வளைந்த மீசையும், உறுத்த விழிகளுமாக சிவன் காணப்படுவார். ஒருவகையில் இது வேடுவ முகம். ஏன் வேடுவர்? இந்த கேள்விக்கான பதிலையும், பிற சிவ மூர்த்தங்களின் பரிணாமத்தையும் நாம் பிறிதொரு பதிவில் விரிவாகக் காணலாம்.  

உஜ்ஜயினி மகாகாலருக்கு மூன்று கண்களுடன் மானுட முகம் எழுதப்படும். உஜ்ஜயினியில் அதிகாலை ஆலயம் திறந்த உடன் நிகழும் நிர்மால்ய தரிசனத்தில் இந்த அலங்காரங்கள் எவையும் இன்றி, அந்த  சிவம் தான் ஆதியின் தோன்றிய அதே நிலைக்குச் செல்வதையும், அதன் பிறகு பால், தயிர், நெய், தேன், இளநீர், சந்தனம், விபூதி என் ஒவ்வொன்றினாலும் முழுக்காட்டு செய்து, நீர்தாரை ஒழுக சுடராட்டுகள் நிகழ்த்தி, இறுதியில் மலர்களாலும், மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு, அந்த தெய்வ உருவம் தன் ஆதி ரூபத்தில் இருந்து, இத்தனை லட்சம் வருடங்களாகத் தன் மீது ஏற்றிக் கொண்ட அத்தனை பொருள் பொதிந்த தத்துவங்களோடு உருப்பெற்று வருவதை நேரில் தரிசிக்கும் ஒரு பேரனுபவம் வாய்க்கும். கண் முன்னே கல்பங்கள் ஓடும் ஓர்‌ அனுபவம். குறிப்பாக அந்த முகம் எழுந்து வரும் கணம். நம் தென்னக கோவில்களில் இருப்பது போல் இங்கே திரை மூடி அலங்காரங்கள் நிகழ்த்தப்படுவதில்லை. பக்தர்கள் கண்ணாரக் காணும் வகையிலேயே அந்த கோவிலின் அர்ச்சகர் முகமெழுதுவார். தலைமுறை தலைமுறையாக அவர்கள் பயின்று வந்த ஒன்று. எனவே கணுவிடையளவும் பழுதின்றி நிகழும் அச்சடங்கு. நம் கண் முன் வளர்ந்து வரும் அந்த மகாகாலரின் முகம் அந்த அர்ச்சகர் முடித்து சுடராட்டு நிகழும் அந்த கணத்தில், இன்னும் முழுமையாகப் புலராத காலையின் மணிவெளிச்சத்துடன் மட்டும் இருக்கும் ஆலயத்தில், மரபார்ந்த எண்ணெய் விளக்கு ஒளிகளால் மட்டுமே பிரகாசித்துக் கொண்டிருக்கும் கருவறையில், அப்போது தான் அந்த லிங்கத்தில் தோன்றிய ஒன்றென பார்த்துக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு தோற்றமளிக்கும். அதுவரை நம் கண்முன் வளர்ந்து வந்து கொண்டிருந்த முகத்தில் ஒரு சிறு மாற்றம், கனிந்த, எல்லாம் அறிந்த ஒரு ஞானியின் புன்னகை ஒன்று அம்முகத்தில் மலர்ந்து நின்றிருக்கும்.

மேலே கண்ட இந்த சடங்கு உஜ்ஜயினியில் அனுதினமும் அதிகாலை நான்கு மணி துவங்கி ஏழு மணி வரை நிகழும் ‘பஸ்ம ஆர்த்தி – விபூதி சுடராட்டு' எனும் சடங்கில் கடந்த பல நூற்றாண்டுகளாக, தொடர்ந்து, இன்றும் கூட நிகழ்ந்து வருகிறது. லிங்கத்திற்கு இத்தகைய அலங்காரங்கள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும்? முதன்மையாக லிங்கம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? லிங்கம் என்றால் அடையாளம், குறி என்று பொருள். சமஸ்கிருதத்தில் லிங்கம் என்பது ஆண்பால், பெண்பால் என்பதில் வரும் பால் என்ற சொல்லுக்கு இணையான பொருள் கொண்டது. குறி என்ற பொருள் இருப்பதாலேயே சிவலிங்கத்தை ஆண் பிறப்புறுப்போடு பொருள் சுட்டப்படுவதும் உண்டு. ஆனால் பொதுவான பொருள் அடையாளம் அல்லது குறி என்பது தான். குறி என்பதும் குறித்தலையே முதன்மையாக பொருள் கொண்டிருப்பது தானே. எனில் லிங்கம் எதன் அடையாளம்? அது எதைக் குறிக்கிறது? இதற்கான விடையென ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பார்க்கலாம். சிவ தியான ஸ்லோகம் என்றழைக்கப்படும் இது பொதுவாக சிவனுக்கு அபிஷேகம் நடக்கையில், கிருஷ்ண யஜுர் வேதத்தில் வரும் ஶ்ரீருத்ரம் பாராயணத்தின் இறுதி போன்ற தருணங்களில் பாடப்படும்.

[5]

पीठं यस्य धरित्री जलधरकलशं लिङ्गमाकाशमूर्तिम्

नक्षत्रं पुष्पमाल्यं ग्रहगणकुसुमं चन्द्रवह्न्यर्कनेत्रम्।

कुक्षिः सप्तसमुद्रं भुजगिरिशिखरं सप्तपाताळपादम्

वेदं वक्त्रं षडङ्गं दशदिश वसनं दिव्यलिङ्गं नमामि॥

இதன் தமிழ் வடிவம் பின்வருமாறு. சரியான சமஸ்கிருத உச்சரிப்புக்கு மேற்கண்ட வடிவை உசாத்துணையாகக் கொள்க. 

“பீடம் யஸ்ய தரித்ரி ஜலதரகலஷம் லிங்கமாகாஷமூர்த்திம்

நக்ஷத்ரம் புஷ்பமால்யம் க்ரஹகணகுசுமம் சந்த்ரவஹ்ன்யர்கநேத்ரம்

குக்ஷிஹ் ஸப்தஸமுத்ரம் புஜகிரிஷிகரம் ஸப்தபாதாளபாதம்

வேதம் வக்த்ரம் ஷட்டங்கம் தஷதிஷ வஸனம் திவ்யலிங்கம் நமாமி”

இதன் தமிழாக்கம்:

“புவியே பீடமாய் கொண்டல்களே நீராட்டு கலமாய் விசும்புருவே அடையாளமாய்

விண்மீன்களே மலர்மாலைகளாய் கோள்களே மலர்களாய் திங்கள் அவியழல் ஞாயிறுகளே கண்களாய்

ஏழு பெருங்கடல்களே உதரமாய் மலைமுடிகளே தோள்களாய் ஏழாழங்களே பாதங்களாய்

வேதம் ஆறங்கங்களே வாயாய் பத்து திசைகளே ஆடையாய் கொண்டது எதுவோ அந்த புனித லிங்கத்திற்கு வந்தனங்கள்" 

நேரடியான விவரணம் தான். சிவபெருமானின் புடவிவடிவ (விஸ்வரூப) தரிசனங்கள் குறித்து பல பாடல்கள் நம் திருமுறைகளில் உள்ளன. சட்டென நினைவுக்கு வருவது திருவாசகத்தின் திருவண்டப் பகுதி. அந்த அனைத்து பாடல்களில் இருந்தும் இந்த ஸ்லோகத்தை வேறுபடுத்துவது அந்த புடவி ரூபத்தை சிவலிங்கத்தில் கண்டுகொண்டது தான். இதன் பொருள்: எது இந்த பூமியையே தன் பீடமாகக் கொண்டிருக்கிறதோ, எது ஆகாயத்தில் உலாவரும் சூல்கொண்ட கருமேகங்களையே தன் மீது நீர்தாரை பொழியும் அபிஷேக கலமாகக் கொண்டிருக்கிறதோ, எது இந்த அகன்று விரிந்த விசும்பையே தன் உருவாக, அடையாளமாக, குறியாகக் கொண்டிருக்கிறதோ, எது சுழன்று வரும் கோள்த் திரள்களையே மலர்களாகவும், அக்கோள்களை அவ்வாறு சுழல வைக்கும் விண்மீன்களையே தன் மீது சாற்றப்பட்ட மலர்மாலைகளாகவும் கொண்டிருக்கிறதோ, எது சந்திரன், வேள்வியில் எழுந்து நம் பிரார்த்தனைகளை தேவர்களுக்கும் வாழும் விண்ணிற்குக் கொண்டு செல்லும் ‘வஹ்னி' என்றழைக்கப்படும் அவி பெற்று எழுந்தாடும் அழல் மற்றும் கதிரவன் ஆகிய மூன்று ஒளிகளையும் தன் முக்கண்களாகக் கொண்டிருக்கிறதோ, எது லவண (உப்பு), இக்‌ஷு (கரும்புச் சாறு), சுரா (மது), க்ருத(நெய்), தாதி (தயிர்), க்ஷீர (பால்), சுத்தோதக (நன்னீர்) ஆகியவற்றால் ஆன ஏழு பெருங்கடல்களையும் உயிர்ப்பிக்கும் உதரமாகக் கொண்டிருக்கிறதோ, எது உயரமான மலைமுடிகளை தன் தோள்களாகக் கொண்டிருக்கிறதோ, எது அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மகாதலம் மற்றும் பாதாளம் எனப்படும் ஏழு ஆழுலுகங்களையும் தன் பாதங்களாக கொண்டிருக்கிறதோ, எது வேதத்தையும், உச்சரிப்பின் இலக்கணமான சிக்ஷா, மொழியின் இலக்கணமான வியாகரணம், சொல்லின் இலக்கணமான நிருக்தம், செய்யுளின் இலக்கணமான சந்தஸ், வானவியல், மானுடம், புவி, காலநிலைகள், பருவநிலைகள் மீதான அதன் தாக்கம் ஆகியவற்றின் இலக்கணமான ஜோதிடம், வேதங்கள் கூறும் வேள்விகள் உட்பட வேதங்கள் சுட்டும் செயல்களின் இலக்கணமான கல்பம் ஆகிய ஆறு வேத உறுப்புகளையும் தன் வாயாகக் கொண்டிருக்கிறதோ, எது எட்டு திக்குகளோடு, மேலே மற்றும் கீழே ஆகிய இரண்டோடும் சேர்த்து பத்து திசைகளையும் தன் ஆடையாகக் கொண்டிருக்கிறதோ அந்த புனிதமான லிங்கத்தை வணங்குகிறேன்.

பூமிக்கு மேல் நிற்கும் அந்த லிங்கம், தன் பீடமாக பூமியையே கொண்டிருக்கிறது. பூமிக்குள் நிற்கும் அதன் பாகங்களில், அதன் பாதம் ஏழு ஆழ் உலகங்களில், ஏழாம் உலகமான பாதாளம் வரை சென்று பதிந்து நிற்கிறது. அந்த லிங்கம் பூமியுடன் தொட்டுக் கொண்டிருக்கும் மையப்பகுதி, மானுட உடலின் மையப்பகுதியான வயிற்றுடன் ஒப்பிடப்படுகிறது. இங்கே வயிறு என்ற வார்த்தைக்குப் பதிலாக உதரம் என்ற வார்த்தை தரப்பட்டுள்ளது. ஏனெனில் உதரம் என்பதில் இருந்து தான் உயிர்கள் உதிக்கின்றன. ஒரே உதரத்தில் பிறப்பதால் தான், ஒரே உதரத்தைப் பகிர்ந்து கொள்வதால் தான், சக உதரனாக, சக உதரியாக இருப்பதால் தான் உடன்பிறந்தவர்கள் சகோதரன் என்றும், சகோதரி என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கே அந்த உதரத்தில் ஏழு பெருங்கடல்கள் உறைகின்றன என்கிறது இந்த ஸ்லோகம். மேலே கண்டவாறு ஏழு கடல்களும் ஏழு வகை பொருட்களின் கரைசலால் உருவானவை. உதாரணத்திற்கு லவணசமுத்திரம் என்றால் உப்பு சமுத்திரம். உப்பு அதிகம் உள்ள சமுத்திரம். இது நாம் வாழும் ஜம்புத்வீபம் – ஜம்பு தீவைச் சுற்றி இருப்பது. இதைப் போன்றே ஒவ்வொரு சமுத்திரமும் ஒவ்வொரு தீவைச் சுற்றி இருக்கின்றன. மேலும் இக்‌ஷு சமுத்திரம் – கரும்புச் சாறு சமுத்திரம் என்றால் கரும்புச் சாறு போல இனிக்கும் நீர் கொண்ட சமுத்திரம் என்பதல்ல பொருள். கரும்புச் சாற்றின் பச்சை வண்ண நீர் கொண்ட சமுத்திரம் என்றே பொருள் கொள்ள வேண்டும். அதே போல் க்ஷீர சமுத்திரம் – பால் சமுத்திரம் என்றால் அது வெண்மையான நீர் கொண்ட சமுத்திரம். அப்படியே நிறம் வைத்து பொருள் கொண்டால் இவை இன்று இப்புவியில் இருக்கும் கடல்களைச் சுட்டுவது புலப்படும். ஏழு கடல்கள், ஏழு மேலுலகங்கள். அதாவது புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலங்கள். இந்த நிலங்களில் உயிர் தோன்றி வந்தது அவற்றைச் சுற்றி இருக்கும் கடல்களின் நீரில் இருந்து தான். எனவே தான் உயிர்ப்பிக்கும் பெருங்கடல்கள் லிங்கத்தின் மையமான உதரத்தில் இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் ஏழு ஆழ் உலகங்கள், எழு மேலுலகங்கள் (ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டவை) என ஈரேழு பதினான்கு லோகங்களும் லிங்கத்தினுள் அடக்கம். பூமிக்கு மேல் உயர்ந்து நிற்கும் மலைகளில், அவற்றிலும் உயரமான சிகரங்கள் அந்த லிங்கத்தின் தோள்களாக இருக்கின்றன. அதாவது இந்த பூமியில் இருப்பவை எல்லாம் தோள்கள், வயிறு, கால்கள் லிங்கத்தின் உடல்பகுதிகளாகவே குறிப்பிடப்பட்டுவிட்டன. உண்மையில் லிங்க வடிவாக ஒரு மானுட உருவத்தையே சுட்டி நிற்கிறது இந்த ஸ்லோகம். யோசித்துப் பார்த்தால் பூமியின் உயரமான மலைகள் மண்ணுக்கு மேலே எழுந்து நிற்கும் லிங்கம் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்!! ஆனால் அவை தோள்களா கருதப்பட்டுள்ளன. ஏன் கைகள் சென்று இணௌயும் தோள்கள்?

இதற்கான பதில் ‘ஜலதரகலஷம்' என்ற சொல்லில் இருக்கின்றது. ‘ஜல’ என்றால் நீர். ‘தர' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பிடித்து வைத்துக் கொள்வது' என்று பொருள். நீரைப் பிடித்து வைத்துக் கொள்வது சூல் கொண்ட கொண்டல்கள் தாமே. அந்த மேகங்கள் புவி மீது பொழியும் மழை அந்த லிங்கத்திற்கு நிகழும் அபிஷேகம். எனவே அந்த மழை மேகங்களே அபிஷேக நீரை வைத்திருக்கும் பாத்திரம், கலசம். அப்படி செய்யப்படும் அபிஷேக நீர் பூமியில் முதலில் வந்தடைவது மலையுச்சிகளுக்குத் தாமே. அந்த மலையுச்சிகளில் இருந்து வழிந்து வரும் நீர், லிங்கத்தின் மீது செய்யப்படும் அபிஷேக நீர் வழிந்து ஓடும் கைப்பகுதி போலத் தானே காணப்படுகிறது. எனவே தான் மலையுச்சிகள் தோள்கள் எனப்பட்டன. மண்ணில் மேகங்களின் தாரையெனப் பொழியும் மழையை இறை தன் மீது தானே பொழிந்து கொள்ளும் நீராட்டு எனப பார்க்கும் இந்த கண்ணோட்டம் தான் இன்றும் ஆலய கருவறையில் லிங்கத்தின் மேல் தொங்கும் அபிஷேகக் கவசமாக மாட்டப்பட்டிருக்கிறது. ஒரு இயற்கை நிகழ்வு குறியீடென, கனவென, கவித்துவமென, கருத்தென, கலையென, வழிபாடென நம்முன் வந்து விற்பதன் மிகச்சிறந்த உதாரணம் இது.

எனில் லிங்கம் எனக் கருதப்பட்டது எது? இந்த இடத்தில் தான் இந்த ஸ்லோகம் தத்துவத்திற்குள் நுழைகிறது. ‘லிங்கம் ஆகாஷ மூர்த்திம்' என்கிறது. அதாவது புவியின் மேல் ஆகாயத்தை நோக்கி நிமிர்ந்து நின்ற அந்த அடையாளம், குறி என்னவென்றால் அந்த அகல் விசும்பு தான். இங்கே அது நாம் காணும் மேகங்கள் உலவும் வானத்தைக் குறிக்கவில்லை. விசும்பைக் குறிக்கிறது. எல்லைகளற்று, பரந்து விரிந்து கிடக்கும், மேல், கீழ், திசைகள் எதுவும் அற்ற விசும்பு. உருவாகும் ஒளி கூட ஒரு பருவுருவென மாயம் காட்டும் மகா இருள் நிறைந்த அந்த விசும்பு. அது நாம் இரவில் காணும் இருள் அன்று. அது ஒளி இல்லாததால் தோன்றும் இருள். ஆனால் விசும்பின் இருள், நாம் பொதுவாகக் கூறும், ஒளி, இருள் என்ற இருமைகள் உருவாவதற்கும் முன்பு இருந்த ஒன்று. இன்னும் சொல்லப்போனால் நாம் காணும் இருமைகள் எவையும் தோன்றும் முன்பு இருந்த ஒருண்மை கரைந்திருந்த இருள். இங்கே நாம் காணும் பஞ்ச பூதங்களும் ஒடுங்கி இருந்த இருள். இந்த அகன்று விரிந்த, விரிந்து கொண்டிருக்கும் புடவி உருவான, இறுதியில் சென்று ஒடுங்கும் இருள். பூதவிருள். எங்கே ஒடுக்கமோ, அங்கே இருப்பதே பிறப்பும். ஆம், அதுவே ஆதி. அந்த ஒருண்மையும் ஒடுங்கும் ஒன்று. பிறிதொரு ஒருண்மை தோன்றும் ஒன்று. அனைத்தையும் தோற்றுவித்து, அனைத்தும் சென்று ஒடுங்கும் பூதவிருளின் வண்ணம் உடையதே அந்த லிங்கம். அந்த பூதவிருள் கவிந்திருக்கும் இந்த அகல் விசும்பு. இந்த விசும்பின் துளி விழுந்ததால் உருவானதே இப்புவி. அந்த துளி விழுந்ததால் தோன்றியதே இப்புவியின் முதல் உயிர். அது வீழாமல் இப்புவியில் பசும்புல்லின் தலையை நாம் காண்பது அரிது. அந்த விசும்பின் உருவே அந்த லிங்கம் என்கிறது இந்த ஸ்லோகம்.

அப்படிப்பட்ட அந்த லிங்கம், அவ்வாறு தன்னை அறியத் தந்த அந்த லிங்கம், அவ்வாறு தன்னை அறிபவர்கள் வாழும் இந்த பூமியையே தன் பீடமாகக் கொண்டிருக்கிறது. இப்புவியையே பீடமாகக் கொண்டிருப்பதால் அதன் முகம் வானில் இருக்கிறது. முகத்திற்கு அலங்காரம் செய்து அழகு பார்ப்பது நம் மரபு. அந்த அலங்காரங்கள் அழகானது என நாம் எண்ணுபவற்றால் நிகழ்த்தப்படும். ஏன் அழகு? ஏனெனில் மானுடம் தன்னைத் தவிர்த்து, சூழ இலங்கும் இயற்கையில் தெய்வ வெளிப்பாடு என முதலில் கவனித்தது அழகென வெளிப்படும் ஒன்றையே. இயற்கையழகின் உச்சங்கள் தாவரங்களில் அதிலும் குறிப்பாக செடிகளில் மலரும் மலர்களிலேயே முதன்மையாக வெளிப்படும். எனவெ தான் வழிபாட்டுக்கு இயல்பாக மலர்களைத் தேர்ந்தெடுத்தது மானுடம். இவ்வுலகெங்கும் இன்றும் மலர்களுக்கு இருக்கும் மவுசிற்கு முதன்மையான காரணம் இந்த அழகுணர்வே தான் அல்லவா!! இங்கே லிங்கத்திற்கு மலர்களால் ஆன மாலை – புஷ்ப மால்யம் – என நட்சத்திரங்கள் இருக்கின்றன. லிங்கத்தின் மீது தூவப்பட்ட மணமிக்க, அழகுமிக்க, ஒளி மிக்க மலர்கள் என, குசுமம் என, வானில் சுழலும் கோள்கள் இருக்கின்றன.

அந்த முகத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று கண்கள் இருக்கின்றன. எப்படி மூன்றாவது கண் என்ற கருத்துரு உருவாகி இருக்கும்? வானில் மானுடர் கண்ட இரு பெரும் சுடர்கள், சூரியனும், சந்திரனும். இவையிரண்டின் ஒளியே மானுடரின் கண்களுக்கு இந்த புவியை, இயற்கையை, சூழலைக் காண்பதற்கு உதவின. இவையிரண்டும் இல்லாத இடங்களில் கண்கள் இருந்தும் எந்த பலனும் இல்லை அல்லவா? எனவே தான் இவையிரண்டையும் அந்த தெய்வ ரூபத்தின் கண்கள் எனக் கண்டனர் நம் முன்னோர். இந்த இரண்டையும் தவிர மானுடர்க்கு காட்சிகளைக் காட்டிக் கொடுத்த மூன்றாவது ஒரு ஒளி ஒன்று இருந்தது. அது தீ எனப்படும் அக்னி. இங்கே இந்த ஸ்லோகத்தில் ‘சந்த்ரவஹ்ன்யர்கநேத்ரம்' என்று சொல்லப்படுகிறது. இது சந்திரன், வஹ்னி, அர்கன், நேத்ரம் நான்கு சொற்களின் கூட்டு. சந்திரன் என்றால் நிலா. அர்கன் எனில் சூரியன். வஹ்னி என்றால் அவியழல். அதாவது வேள்விக் குண்டங்களில், தர்ப்பையில் பற்றி, அவி பெற்று, வானோக்கி நின்றாடும் அழல். அந்த அவியழலே நம் பிரார்த்தனைகளை விண்ணுக்குக் கொண்டு சென்று அங்குள்ள தெய்வங்களிடம் சேர்ப்பிக்கும். அந்த அவியழலை லிங்கத்தின் கண்களில் ஒன்றாகச் சொல்கிறது இந்த ஸ்லோகம். அப்படித் தான் இந்த மூன்றாவது கண் என்ற கருத்துரு உருவாகி இருக்கும். நாம் சென்ற பதிவில் கண்டவாறு மானுடம் கண்ட ஆதி தெய்வ வடிவான இந்த லிங்கத்திற்கே அதே த்ரியம்பகத்தை, மூன்ற் கண்களை அளித்து விட்டிருக்கிறது இந்த ஸ்லோகம்.

இத்தகைய ஸ்லோகங்கள், துதிகள், சூத்திரங்கள் போன்றவற்றை பார்க்கையில் அவற்றில் பயின்று வரும் வரிசைகளையும் நோக்க வேண்டும். இங்கே சந்திரன், வேள்வித் தீ, சூரியன் என்ற வரிசை வருகிறது. எது எந்த கண் என்பது அல்ல இங்கே வந்திருக்கும் வரிசை. மாறாக அந்த ஒளிகளின் தன்மைகளின் படி இந்த வரிசை அமைக்கப்பட்டுள்ளது. மானுடம் முதலில் ஒளி என்பதன் தேவையை உணர்ந்தது இரவு நேரங்களில் தான். ஏனெனில் பகல் என்பதில் கண்ணுக்கெட்டும் தொலைவிற்கு சூரிய ஒளி இருக்கும். இரவில் துவக்கத்தில் மானுடத்திற்கு இருந்த ஒரே ஒரு ஒளியாதாரம் நிலவு மட்டுமே. அதன் பிறகே தீ. தீயை மானுடம் தோற்றுவிக்கவும், அணைக்கவும் என கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் அதுவும் இரவுகளில், அதிலும் குறிப்பாக அம்மாவசை இரவுகளில், முக்கியமான ஒளியாதாரமாக அதுவும் ஆகிப் போனது. இப்போது அந்த வரிசையை பார்த்தால் ஒன்று துலங்கி வரும், இரவின் ஒளிகளில் இருந்து பகலின் பேரொளிக்கு செல்கிறது அந்த வரிசை. இருளில், தமஸில் இருந்து, வெளிச்சத்திற்கான, ஜோதிக்கான ஒரு வரிசை. ஆம், ‘தமஸோமா ஜ்யோதிர் கமய' என்பது தானே மரபு.

[6]

இந்த ஸ்லோகம் சிவலிங்கம் என்பதன் உருவ இலக்கணங்களை விரிவாக முன்வைக்கிறது. முதன்மையாக சுயம்பு லிங்கங்களின் இலக்கணம். இன்னும் குறிப்பாக உஜ்ஜயினி மகாகாலரின் அலங்காரங்களை அப்படியே விவரிக்கிறது. முன்பே கண்டது போல இலக்கியத்திற்கு தான் இலக்கணம். எனவே இந்த பாடலும், இயற்கையாக, சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்தை முன்வைத்து தான் தன் கவித்துவ உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று நாம் காணும் அத்தனை லிங்கங்கள் இருக்கும் கருவறைகளிலும் இதே கோலம் தான். லிங்கம் என்பதற்கு நம் மரபு அளித்திருக்கும் தத்துவார்த்த பொருளுக்கு சிறந்த விளக்கம் இந்த ஸ்லோகம் தான். மண்ணுக்கும், விண்ணுக்குமான இணைப்பே லிங்கம். இதுவே சிவலிங்கத்திற்கான ஒரு வரி விளக்கம். இந்த பின்னணியில் இருந்து நாம் நமது தேடலை அந்த ஆதிகாலத்தில் அல்லது அதற்கு நெருக்கமான ஒரு காலத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சாரங்களை கண்டடைந்து, அவற்றில் லிங்க வடிவிற்கு இணையான ஒன்று இருந்தால், அதற்கு அவர்கள் அளிக்கும் பொருள் என்ன என்று உசாவியறிந்து, சிவலிங்கமே மானுடம் கண்ட ஆதி தெய்வ வடிவு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இன்னும் விரிவாக நிகழ்த்தலாம்.

 (சிவம் வளரும்)

உசாத்துணைகள்:

1.     மதங்கள் குறித்து : https://www.jeyamohan.in/174140/

2.     எக்ஸ்காலிபர் கற்கைக்கோடரி: https://www.theguardian.com/world/2003/jan/09/research.highereducation

3.     சிவ தியான ஸ்லோகம்: https://kanfusion.blogspot.com/2017/02/the-universal-form-of-lord-of-lords.html

4.     முக லிங்கம் - https://tamil.wiki/wiki/64_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:_3%E2%80%93%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF


துரியம் கடந்த சுடர் 1






கட்டுரையாளர்: அருணாச்சலம் மகாராஜன் அருணாச்சலம் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருக்கிறார். பள்ளிப் பருவம் முழுவதும் கிராமத்திலேயே தமிழ் வழிக் கல்வியாக நிகழ்ந்தது. தந்தை வழி திருக்குறளும், சுவாமி விவேகானந்தரும் அறிமுகம். பள்ளியில் பயிலும் காலத்தில் ஊரில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சனிக்கிழமை தோறும் நிகழ்ந்த கம்பராமாயண வகுப்புகள் வாயிலாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார். தீவிர இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு மூலம் நுழைந்தார். வெண்முரசு நாவல் வரிசைகளுக்கு எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் வாயிலாக இந்திய ஞான மரபு, வரலாறு, தத்துவங்கள் ஆகியவற்றில் தன் தேடல்களை கண்டடைந்தார்.


0 comments:

Post a Comment