Sunday, July 26, 2026

ஐந்தொழில் செய்வது யார் , ஏன், எப்படி ? - தாமல் கோ சரவணன்

தில்லை நடராஜரை நாம் தரிசனம் செய்கிறோம் . பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும் ஆடல் வல்லானின் அந்த அசைவைஆட்டத்தை "ஆனந்த தாண்டவம்" என்போம் . அடிப்படையில் அந்த தாண்டவம் உணர்த்தும் செய்தி ஒன்று தான் . அது சிவபெருமான் அருட்கருணையால் புரிகின்ற ஐந்தொழிலே ஆகும்  . தானே சொரூப லட்சணத்தில் இருந்து தடத்த லட்சணத்திற்கு இறங்கி உயிர்கள் உய்யும் பொருட்டு படைத்தல், காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் ஆகிய ஐந்தொழிலையும் தன்  பேராற்றலாலும் பெருங்கருணையாலும் செய்கிறேன் என்பதை தன்னுடைய ஆனந்த தாண்டவத்தில் உணர்த்துகிறார் . அவருடைய நான்கு கரங்களில் ஒன்று துடி என்னும் ஒருவகை டமருதத்தை தாங்கி இருக்கும் . அது படைத்தல் என்னும் தத்துவத்தின் அடையாளமாகும் . துடியை அசைக்க அதிலே  இருந்து ஒலி பிறக்கின்றது . துடி ஒன்றை தோற்றுவிக்கும் வினையை செய்வதால் அது படைத்தல் என்னும் தொழிலின் அடையாளமாக இருக்கின்றது . மற்றொரு கையில்  தகிக்கின்ற நெருப்பை ஏந்தி இருக்கிறார் . அது அழித்தலின் அடையாளமாய் இருக்கின்றது . இயல்பிலேயே நெருப்பானது தன்னை சேர்ந்த எல்லா வஸ்துக்களையும் எரித்து சாம்பலாக்கும் தன்முடையுடையது . அதனாலேயே நெருப்பானது அழித்தல் தத்துவத்தின் அடையாளமாக இருக்கின்றது . அருள் பாலிக்கும் விதமாக விளங்கும் வலது அபய கரம் காத்தல் தத்துவத்தின் அடையாளமாக விளங்குகின்றது .

இவ்வாறு படைத்தல், காத்தல் , அழித்தல் ஆகிய முக்கிய மூன்று தொழில்கள் இறைவனின் திருமேனியில் விளங்கும் கைகளை கொண்டே விளக்கப்படுகிறது . மேற்சொன்ன இந்தப் படைத்தல் , காத்தல் , அழித்தல் ஆகியவை உலகம் முதலான ஜட பொருள்களுக்கும் உயிர்களுக்கும்  பொருந்தும் . இப்போது மிக முக்கியமான இரண்டு தொழில்கள் உயிர்க்கானது   மட்டுமேயாக   கருதப்படுவது மறைத்தல் , ஏனையது அருளல் . இந்த இரண்டும் உயிர்களுக்குரியதே அன்றி உலகம்  முதலான ஜட பொருள்களுக்கானது அல்ல . ஆனந்த தாண்டவம் புரியும் இறைவனின் அற்புத திருநடத்தில் இந்த இரண்டு தொழிலும் மற்றைய தொழில்களை போல் கைகளில் சொல்லப்படாமல் பெருமானின் திருவடிகளில் சொல்லப்பட்டுள்ளது கவனிக்க வேண்டிய தனிச்சிறப்பாகும் .

மறைத்தல் என்னும் தொழிலை இறைவனின் ஊன்றிய திருவடி அதாவது தாருகாவனத்து முனிவர்கள் ஆணவத்தோடு ஏவிய முயலகனை மணையாக்கி அதன் மேல் நின்று அவனை அடக்கும் வலது  திருவடியே திரேதானம் என்னும் மறைத்தல் தத்துவம் . இப்போது மிக முக்கியமான தொழிலில் ஒன்று , இறைவன் உயிர்கள் அஞ்ஞான இருளில் இருந்து விடுபட செய்யும் நிறைவான தொழிலான அருளல் எனப்படுவதாகும்  . நடராஜ பெருமானின் தூக்கிய திருவடியாக விளங்கும் இடது திருவடியே அருளல் தத்துவத்தின் அடையாளம் .

பொன்னம்பலத்தில் ஆடுகின்ற சிவபெருமானின் ஆனந்த கூத்து அவன் புரியும் ஐந்தொழிலின் அடையாளமாகும் . இந்த திருநடத்தை நாம் ஏன் ஆனந்த தாண்டவம் என்கிறோம் என்று ஆயவேண்டும் . அநாகசமான ஒரு புன்னகையோடு பெருமான் திருநடனம் செய்வதை தரிசித்தவர்கள் உணர்வர் . இதனை ஆனந்தம்  என்று அடைமொழியிட்டு சொல்வதின் காரணம் உயிர்களுக்கு பேரின்ப வாழ்வை வழங்கிய இறைவனின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகும் . அவன் கருணையின் செயல்முறைக்கு காரணமான ஐந்தொழிலை செய்வதால் ஆனந்தமாக ஆடுகிறான் . உயிர்கள் ஆனந்தமுறுவதற்கு காரணமான ஐந்தொழிலை செய்வதால் அந்த உயிர்களின் தலைவன் ஆனந்தாமாக இருக்கிறான் .

இத்தொழிலை பற்றிய புரிதலை அடைய நினைக்கின்ற ஆன்மாக்கள் அடிப்படையில் உணர வேண்டிய விஷயங்கள் இரண்டு இருக்கின்றன . ஒன்று ஏன் இறைவன் இதை செய்கிறான் . எவ்வாறு செய்கிறான் . நாம் இங்கே இந்த இரண்டு அடிப்படைகளை தான் உணர முயற்சிக்கப்போகிறோம் .

இறைவன் ஏன் ஐந்தொழில் செய்கிறான் . விருப்பத்தால் செய்கிறான் என்று சொன்னால் இறைவன் விருப்பு  வெறுப்பற்றவன் என்ற அவன் தன்மை முரண்படும் . விரும்பி ஒன்றை செய்யும் அவசியம் அவனுக்கில்லை . எனில் இதை அவன் செய்வதற்கு என்ன காரணம் எனில் , அது கருணை என்ற ஒன்றை தவிர வேறில்லை . உயிர்கள் மேல் கொண்ட கருணையால் இதை அவன் செய்கிறான் .

தொழில் செய்பவன் தொழிலாளி எனப்படுவானே ஒழிய முதலாளி எனப்படமாட்டான் . எனில் தொழில் செய்யும் இறைவன் எப்படி முதலாளியாக இருக்க முடியும் என்று சிலர் நினைக்கின்றனர் . இங்கே நம் அறிய வேண்டிய மிக முக்கியமான ஒன்று இறைவன் ஒருபோதும் நேரடியாக தொழில் செய்வதில்லை . இறைவனின் இயல்பு  இரண்டு நிலைகளில் உள்ளது . ஒன்று ஏதும் செய்யாத எவ்வித அசைவும் இல்லாத சொரூப  லட்சணம். இங்கே சக்தி என்ற ஒன்றின் தோற்றுவாய் வெளிப்பாடு ஏத்துக்க இல்லாமல் சக்தி சிவத்தோடு ஒடுங்கி சிவமான ஒன்றாக அமையும் . உயிர்கள் மேல் கருணை கொண்ட இறைவன் அதற்கு உய்யும் பொருட்டு தன் நிலையை இறுக்கிக்கொண்டு வருகிற தன்மை தடத்த லட்சணம் எனப்படுகிறது .

சொரூபம் என்பது "தனது உண்மையான இயல்பு" என்று பொருள். ஒரு பொருள் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் இழக்காத, பிற காரணங்களைச் சாராத, அதனுடைய இயற்கையான தன்மையே சொரூப லட்சணம் ஆகும்.

சைவ சித்தாந்தத்தில் சிவபெருமானின் சொரூப லட்சணம் குறித்து கூறும்போது, அவர் :

நித்தியர் (என்றும் இருப்பவர்)

சுத்தர் (மலமற்றவர்)

அறிவுமயமானவர்

ஆனந்தமயமானவர்

சுயம்பிரகாசமானவர்

எவராலும் உருவாக்கப்படாதவர்

எதனாலும் மாற்றமடையாதவர்

பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, தேய்ச்சி ஆகிய மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்

என்று விளக்கப்படுகிறார். 

இத்தகைய இயல்புகள் உலகத் தோற்றத்திற்கு முன்னரும் இருந்தன; உலகம் ஒடுங்கிய பின்னரும் இருக்கும். எனவே இவை இறைவனின் மாறாத உண்மை இயல்புகள் என்பதால் சொரூப லட்சணம் எனப்படுகின்றன.

சைவ சித்தாந்தத்தில் சிவபெருமானின் எண்குணங்கள் (தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றுணர்தல், இயல்பாகவே பாசநீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை) ஆகியவை அவருடைய சொரூப இயல்புகளாகவே கருதப்படுகின்றன. இவை இறைவனிடமிருந்து ஒருபோதும் பிரியாத இயல்புகளாகும்.

தடம் என்பது கரை அல்லது எல்லை என்று பொருள். ஒரு பொருளின் உள்ளார்ந்த இயல்பை நேரடியாகச் சொல்லாமல், அது பிற பொருட்களுடன் கொண்டுள்ள தொடர்பு, செயல்பாடு அல்லது விளைவின் மூலம் அறிமுகப்படுத்துவது தடத்த லட்சணம் ஆகும்.

சைவ சித்தாந்தத்தில் சிவபெருமானை:

 உலகைப் படைப்பவர்

காப்பவர்

அழிப்பவர்

மறைப்பவர்

அருள்புரிபவர்

என்று கூறுவது அவருடைய தடத்த லட்சணமாகும்.

ஏனெனில், படைத்தல் முதலான ஐந்தொழில்களும் உலகம் இருக்கும்போது மட்டுமே நிகழ்கின்றன. உலகமே இல்லாத நிலையில் இச்செயல்கள் வெளிப்படையாக இல்லை. ஆனால் சிவபெருமான் அப்போதும் இருப்பார். எனவே படைத்தல் போன்ற செயல்கள் இறைவனின் நிலையான சொரூபம் அல்ல; உலகத்துடனான தொடர்பில் வெளிப்படும் செயல்கள். அதனால் இவை தடத்த லட்சணம் எனப்படுகின்றன.

அதேபோல்,

 உயிர்களுக்கு வினைப்பயன் அளித்தல்,

குருவாக அருள்தல்,

திருமேனி கொண்டு காட்சி அளித்தல்,

ஆகமங்களை அருளுதல்,

திருவிளையாடல் புரிதல்

ஆகிய அனைத்தும் இறைவனின் தடத்த லட்சணங்களாகும்.

இவ்வாறு இறைவன் உயிர்கள் உய்யும்பொருட்டு தன் இயல்பான சொரூப லட்சணத்தில் இருந்து தடத்த லட்சத்திற்கு இறங்குகிறார் . இங்கே தான் சக்தி வெளிப்படுகிறது . தடத்த லட்சணத்தில் இறைவன் அருவம், அருவுருவம் , உருவம் என்று மூன்று படிநிலைகளில் இறங்கி வருகிறான் . தடத்த லட்சணத்தில் சிவம் பராபர சிவம் , பராபர சக்தி என்ற இரண்டு நிலைகளாகிறது இவையே ஆதி சிவன், ஆதி சக்தி . இந்த ஆதி சக்தியே இச்சை சக்தி , கிரியா சக்தி , ஞான சக்தியான உருப்பெறுகிறது . ஆதிவன் நாதம், விந்து , சிவம், சக்திசதாசிவன் ,மகேஸ்வரன் , சுத்தவித்தை , உருத்திரன், மால், பிரம்மன் என்று பரிணமிக்கிறது . இந்த வரிசையில் சொல்லப்பட்ட நாதம் விந்து, சிவம் சக்தி ஆகியவை அறுவை நிலை . சதாசிவன் அருஉருவ நிலை , மகேஸ்வரன் தொடங்கி பிரம்மன் வரை உருவ நிலை .

முன்னர் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது தொழிலை செய்பவன் தொழிலாளி என்றால் இறைவன் எப்படி முதலாளி ஆகா முடியும் என்று . அதற்கான பதில் மிக எளிமை. இறைவன் ஒருபோதும் தானே அந்த தொழில்களை செய்வதில்லை அதனை தன்னுடைய அருட்சக்தியால் கர்த்தா மூர்த்திகளை உண்டு பண்ணி அவர்களை கொண்டே செய்கிறார் .இன்னும் சொல்லப்போனால் பக்குவமடைந்த ஆன்மாக்களுக்கே ஐந்தொழிலில் ஒன்றை அதற்குரிய பக்குவதன்மைக்கு ஏற்றபடி வழங்கி தன் ஆற்றலை கொண்டு தொழில் செய்யவும் வைக்கிறார் .

எப்படியாயினும் சொரூப லட்சணத்தில் இருக்கும் பெருமான் இவ்வளவு தூரம் இறங்கி வருவது நம்மை போன்ற உயிர்களின் மீதான கருணை என்பதை முதலில் இந்த உயிர்கள் உணர வேண்டும் . ஆனதை தாண்டவத்தில் அருள் செய்யும் திருவடியை தூக்கி காட்டுவதே அவர் கருணையின் சிறப்பென்றால் தன்  இன்னொரு கையை அந்த தூக்கிய திருவடியை காட்டிய படி தொங்க விட்டு " இதோ இதுதான் நீ அருள் பெற அடைய வேண்டிய பாதம் " என்று காட்டுவது கருணையின் கருணை .

படைப்பு தொழில்

கட்டுரையாளர்: தாமல் கோ.சரவணன் M.Sc., M.Ed., எழுத்தாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்

உயிரிதொழில் நுட்பவியல் ( master in Biotechnology) ல் முதுநிலையும் பெற்றவர்.

தற்போது ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் ( Director of Syllabus committee board ) அமெரிக்காவின் Florida International University –யின் வள்ளலார் ஆய்விருக்கைக் குழு உறுப்பினராகவும் ( board member of vallalar chair) காஞ்சிபுரம் ஊர்க்காவல் படையின் மண்டலத் துணைத் தளபதியாகவும் (Deputy Area Commander of TamilNadu home guards) பிஏவி பன்னாட்டுப்பள்ளியில் துணை முதல்வராகவும் (vice principal) பொறுப்பு வகிக்கின்றார்.எழுதிய நூல்கள்.

1.வள்ளலார் வளர்த்த தமிழ்

2.தமிழ் வளர்த்த சான்றோர்கள்

3.காப்பியங்கள் அணிந்த காலணிகள்

4.கம்பன் கவியில் காத்திருப்பு

0 comments:

Post a Comment