Friday, April 17, 2026

துரியம் கடந்த சுடர் 8 - ஆதியந்தமில் அரும்பெருஞ்சோதி

[1]

1863 ஆம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி. இருபத்து ஒன்பதே வயதான ஒரு பிரிட்டிஷ் நிலவியலாளர் ஒருவர் தான் இருந்த ராணுவ குடியிருப்பு மைதானத்தில் உலவிக் கொண்டிருந்தார். அந்த மைதானத்தில் ஏதோ ராணுவ நிகழ்வுகளுக்காக ஆழமான குழிகள் தோண்டப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணும், கற்களும் குழிகளுக்கு அருகிலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தன. இயல்பாக வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவரிடம் அந்த கற்களில் ஒன்று தன்னை கையில் எடுத்து பார்க்குமாறு கூறியது. கையில் எடுத்தவருக்கு உடனடியாக ஒன்று புரிந்தது, தன்னிடம் பேசியது கல் அல்ல, தன் தொல் மூதாதை ஒருவர் என. ஆம், அது சாதாரண கல் அல்ல. அது மானுடம் செய்த தொல் பழங்கால கருவி. இயல்பிலேயே நிலவியலாளரான அவருக்கு நிலத்தை தோண்டி ஆழம் செல்கையில் வரும் நில அடுக்குகள் பற்றியும், அந்த அடுக்குகளை முன்வைத்து காலத்தைக் கணிக்கும் முறையும் தெரிந்திருந்ததில் வியப்பில்லை தான். ஆனால் கூடுதலாக அவருக்கு அந்த காலகட்டங்களில் உலகில் கண்டடையப்பட்ட தொல் பழங்கால கற்கருவிகளைப் பற்றிய தொடர் வாசிப்பும் இருந்தது. அந்த 1863 ஆம்  வருடத்திற்கு ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு தான் பிரான்ஸின் ‘ஸேய்ன்ட அஸ்ஷுள்’ என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான கற்கருவிகள் கண்டடையப்பட்டிருந்தன. கற்கைக்கோடரிகள் (Hand-Axes), கல்வெட்டிகள் (Cleavers) என அவை வகைப்படுத்தப்பட்டிருந்தன. இவை பொதுவாக ‘அஸ்ஷுளியன் கருவிகள்’ என்றே அழைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் அறிந்திருந்த அவருக்கு தன் கையில் இருப்பது ஒரு அஸ்ஷுளியன் கைக்கோடரி தான் என முடிவெடுப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அது கிடைத்த ஆழத்தில் இருந்த நில அடுக்கை வைத்தும், அந்த கைக்கோடரியின் அமைப்பை வைத்தும் அது மிக மிகத் தொன்மையான, இன்றைக்கு சுமார் இருபத்தைந்து லட்சம் வருடங்களுக்கு முன் துவங்கி பதினோராயிரம் வருடங்கள் வரை நீண்ட பழங்கற்காலத்தைச் சார்ந்தவை அக்கருவிகள் என மதிப்பிட்டார் அவர். அது சர்வ நிச்சயமாக ஒரு மாபெரும் வரலாற்று தருணம். இன்றிருப்பது போல தகவல்கள் விரல்நுனியில் இருந்த காலமன்று அது. அதுவும் இது போல தொல்லியல் சார்ந்த தகவல்கள் மிக மிகக் குறுகிய வட்டத்தில் மட்டுமே பகிரப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட காலம். அதுவும் ஐரோப்பாவில் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அத்தகைய ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து ஒருவர் நம் பாரதத்திற்கு வருவதும், அவர் கண்ணில் அத்தகைய ஒரு கல் படுவது என்பதும் ஒரு தெய்வம் நிச்சயம் செய்த கணமாகத் தானே இருக்க முடியும்!! எனவே தான் தன்னை மற்றொரு கல்லென கடந்து சென்ற எத்தனையோ மானுடர்களில் இவரை குறிப்பாக தெரிவு செய்தார் அந்த தொல்மூதாதை. “முன்னறியா என் தொல் மூதாதை ஒருவரோடு கை குலுக்கியது போல் உணர்ந்தேன்” என்றே பின்னாளில் அந்த கணத்தை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்தார் அவர். அந்த கணத்தில் பாரதம் இப்புவியின் மானுட பரிணாமத்தில் தன்னுடைய இடத்தை அழுத்தம் திருத்தமாக பதித்தது. அந்த கணத்தை நிகழ்த்திய அந்த மாமனிதர் பிரிட்டிஷ் நிலவியலாளரான சர். ராபர்ட் புரூஸ் ஃபூட். மிகச் சரியாக இந்திய தொல்லியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் அவர். அவர் அந்த கல்லை கண்டுபிடித்த இடம் தருமமிகு சென்னையில் இருக்கும் பல்லாவரம். ஆம், நம் தமிழகம் தான். அந்த கைகோடரியை இன்றும் சென்னை எழும்பூரில் இருக்கும் அருங்காட்சியகத்தின் தொல்லியல் பகுதியில் காணலாம். அவர் பல்லாவரத்தில் கண்டுபிடித்த கருவி ஒரு துவக்கம் தான். அவர் தன் சக நிலவியலாளரான வில்லியம் கிங் என்பவருடன் இணைந்து சென்னைக்கு அருகில், கொசஸ்தலை ஆற்றின் படுகையில் இருக்கும் அதிரம்பாக்கம் என்னுமிடத்தில் அகழ்வாய்வு செய்து பல நூறு தொல்கற்காலக் கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். மிக விரிவாக இந்த கருவிகளை ஆராய்ந்த அவர் அக்கருவிகளின் உருவாக்கத்திற்கும், வடிவத்திற்கும் அது வரை உலகில் கண்டடையப்பட்ட பிற கற்கருவிகளுக்குமான வேறுபாடுகளை முன்வைத்து அவற்றின் தனித்துவத்தை நிரூபித்தார். மேலும் அதிரம்பாக்கத்தில் கிடைத்த கருவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், அங்கு கிடைத்த இக்கருவிகள் உருவாக்கத்தின் போது மீந்த கல் கழிவுகளை வைத்தும் அவர் அதிரம்பாக்கத்தில் அந்த கருவிகள் உருவாக்கும் தொழிற்சாலை இருந்திருக்கக் கூடும் என்ற முன்கோளையும் முன்வைத்தார். இந்த இரு கூறுகளைக் கொண்டு அவ்விடத்தில் ஒரு மிகத் தொன்மையான தொல் கற்கால பண்பாடு இருந்திருக்கிறது என்று நிறுவினார் அவர்.

தொன்மையான பண்பாடு என்பது சரி, ஆனால் எவ்வளவு தொன்மை? அதை ராபர்ட் அறுதியாகச் சொல்லவில்லை. அவர் இந்த கருவிகள் பழங்கற்காலத்தைச் சார்ந்தவை என்று மட்டுமே சொன்னார். பழங்கற்காலம் என்பது சில லட்சம் ஆண்டுகள் நீடித்த ஒரு காலம். எனவே அந்த கற்கருவிகளின் சரியான ஆண்டு எது என்பது சில காலம் தெரியாமலேயே இருந்தது. 1930களில் டி. டி. பீட்டர்சன் மற்றும் ஹெச். தெ டெர்ரா என்ற இரு யேல் பல்கலைக்கழக அகழ்வாய்வாளர்கள் இந்த கற்கருவிகளை, இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் ஸோன் நதிப் பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்ட கற்கருவிகளோடு ஒப்பிட்டு இவை ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவை என வரையறுத்தனர். அவர்களே ராபர்ட் ப்ரூஸ் கண்டடைந்த இந்த பண்பாட்டிற்கு ‘மதராஸியன் கல்சர் – மதராஸ் பண்பாடு’ என்ற பெயரையும் அளித்தனர்.

துரியம் கடந்த சுடர் 1





[2]

மானுடத்தின் பரிணாமவியலில் பாரதத்தின் பங்கு என்ன? நெடுங்காலம் இக்கேள்விக்கு பதிலென, “பெரிதாக ஒன்றுமில்லை” என்பதே இருந்து வந்தது. சென்ற பதிவில் நாம் கண்டதைப் போல பாரதத்திற்கு நவீன மானுடர்கள் வந்ததே சுமார் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோள். அதற்கும் முன் சுமார் பதினெட்டு, பதினேழு லட்சம் வருடங்களுக்கு முன்‌ பாரதத்திற்கும், ஆசியாவிற்கும் இடம்பெயர்ந்த நிமிர்ந்த மனிதர்கள் என்ன ஆனார்கள்? நெடுங்காலம் அறிவுலகம் இந்த கேள்வியை தவிர்த்தே வந்திருக்கிறது. முதல் பெருங்காரணம் பாரத்தில் தொல்மானுடரின் புதைபடிவங்கள் (ஃபாசில்கள்) பெரிதாகக் கிடைக்கவில்லை. மேலும் மேற்கின் அறிவுலகத்திற்கு இயல்பாக பாரதத்தின் மீது இருந்த ஒவ்வாமையும் ஒரு காரணம். இத்தனைக்கும் 1930 களிலேயே ஐந்து லட்சம் வருடங்களுக்கு முந்தைய ‘மதராஸ் பண்பாடு’ என ஒரு பழங்கற்கால பண்பாடு இருந்தது என்பது நிறுவப்பட்டு இருந்தது. 1990களுக்கு முன்பு வரை இந்த பதினேழு லட்சம் வருடங்களுக்கு முந்தைய பரவல் என்ற கருதுகோள் வலுவாக இருக்கவில்லை. அன்று இருந்த கொள்கை பாரதத்திற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மானுட மூதாதைகள் வந்து சேர்ந்தது ஐந்து லட்சம் வருடங்களுக்கு முன் தான். இது இயல்பாக ‘மதராஸ் பண்பாட்டின்’ காலத்தை முன்வைத்து தான் நிறுவப்பட்டிருந்தது. பிரச்சனை அந்த ஐந்து லட்சம் வருடங்கள் தான். அது மானுடம் ஆப்பிரிக்காவில் பரிணாமத்தில் முன்னேறத் துவங்கிய மிகப் பிற்காலத்தில் தான் பாரதத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று தான் சொல்கிறது. அதன் படி பாரதம் என்பது மானுடப் பரவலின் வழியில் இருந்த ஒரு பாதை தானே ஒழிய இங்கு மானுடம் பரிணமித்து வரவில்லை. மானுடப்பரிணாமம் முழுக்க முழுக்க ஆப்பிரிக்காவில் நிகழ்ந்து உலகெங்கும் பரவியது என்பதே அன்றிருந்த கொள்கை. அந்த மதராஸ் பண்பாட்டின் மிகச் சரியான காலத்தை ஐயம் திரிபற, உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளும் வகையில், முழுமையான பல்துறை அறிவியல் முறைகளை வைத்து நிறுவினார் ஒருவர். நம் தமிழ் பெருமை பேசுவோர் என்றென்றைக்கும் நினைவில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் அவர். தொல்லியல் ஆய்வாளர்கள் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்து கொல்கத்தாவில் தன் இளமைக் காலத்தை கழித்து இயல்பாகவே தொல்லியலில் தன்னறத்தை கண்டடைந்தவர் அவர். புனேவில் இருக்கும் தக்காண கல்லூரியில் தொல்லியல் பிரிவில் முதுகலை படிப்பை முடித்த அவர் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்தது, ராபர்ட் புரூஸ் ஆய்வு செய்த அதே அதிரம்பாக்கத்தைத் தான்.

1990களின் முற்பகுதி. சென்னைக்கு அருகில், கொசஸ்தலை ஆற்றின் கரையில் இருக்கும் குக்கிராமமான அதிரம்பாக்கத்திற்கு அதிகாலையிலேயெ தனியாக, பெரிய வாளி, மண்ணில் துளையிடும் கருவிகள், மண்ணள்ளும் மண்வாரி, வித விதமான அளவுகோல்கள் என கனமான உபகரணங்களோடு வந்து சேர்கிறார் ஒரு பெண். எப்போதுமே குறைந்த அளவு நீர் பாய்ந்து கொண்டிருக்கும் கொசஸ்தலை ஆற்றின் கரையில் தரையில் எதையோ தேடிக்கொண்டிருக்கிறார் அவர். ஊர் மக்களுக்கு இவர் யார் என்று ஒரு குழப்பம். அதை விட பெரிய வியப்பும், ஐயமும் அவரது அடுத்தடுத்த செயல்களால் அவர்களுக்கு ஏற்பட்டது. சிறு சிறு சதுரப் பகுதிகளாக நிலத்தைத் தோண்டத் துவங்கினார் அவர். உணவு, தங்கும் இடம், போக்குவரத்திற்கான சரியான சாலை வசதிகள் போன்றவற்றை கூட விடுங்கள், இயற்கை உபாதைக்கு கூட எந்த ஏற்பாடும் இல்லாத, அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் வனாந்திர பகுதிக்கு காலை வெயிலில் நடந்தே வந்து, மாலை வரை நிலத்தைத் தோண்டி கற்களை பொறுக்கிக் கொண்டிருந்த அவரை அம்மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனதில் வியப்பில்லை தான். இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் தொடர்ந்து நாட்கணக்கில் அவர் அந்த ஊரில் தோண்டிக் கொண்டே இருந்தார். அவரின் விடாமுயற்சியையும், உழைப்பையும் அவ்வூர் மக்களால் உதாசீனப்படுத்த இயலவில்லை. எனவே இயல்பாக அவருக்கு வேண்டிய உதவிகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்யத் துவங்கினர். அப்படி அந்த பெண் அந்த ஊரில் இருந்து அகழ்வாய்வு செய்து சில ஆண்டுகளில் அவ்வூர் மக்களும் தங்களால் இயன்ற அளவு அவருக்கு உறுதுணையாக இருந்தனர். அவரும் அந்த மக்களை தன்னுடைய ஆய்வில் முழுமையாக இணைத்துக் கொண்டார். அவர்களுக்கு அவர் செய்வது என்ன என்பதை முறையாகப் புரியவைத்து அம்மக்களையும் ஆர்வமுடன் பங்களிக்க வைத்தார். பகலில் அவர் தோண்டிச் சென்ற இடங்களை இரவில் முறை வைத்து அம்மக்களே காவல் காத்தனர். நாட்கள், வாரங்கள் இல்லை, வருடங்களாக நீண்ட அகழ்வாய்வில் அவரின் உழைப்பிற்கும், தேடலுக்கும் ஒரு சோறு பதமென ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு நாள் கைகள் முழுவதும் ரத்த சிராய்ப்புகளுடன், அங்கு கிடைத்த ஒரு கல்லை மற்றொரு கல்லால் விடாமல் அடித்து வடிவமைத்துக் கொண்டிருந்தார் அவர். ஏன் அப்படி செய்கிறீர்கள் என கேட்டவர்களுக்கு அவர் அளித்த பதில் – “நான் நம் மூதாதை வழியில் அவர்கள் எப்படி இந்த கற்கருவிகளைச் உருவாக்கி இருப்பார்கள் என செய்து பார்க்கிறேன்”. அந்த ரத்தமும், அவரது ஆர்வமும் வீண் போகவில்லை. அவையனைத்தும் அவரது முனைவர் பட்ட ஆய்வேட்டை முனைவர் பட்டத்திற்கென மேற்கொள்ளப்படும் மற்றுமொரு ஆய்வறிக்கை ஆக்காமல் உலகின் அனைத்து தொல்லியல் மேதைகளும் இன்றும் தங்கள் ஆய்வேடுகளில் மேற்கோள் கொள்ளத்தக்க அருந்தகுதி கொண்டதாக மாற்றின. இன்றைக்கு உலகில் இருக்கும் மிகச் சில பழந்தொல்லியல் ஆய்வாளர்களுள் முதன்மை ஆளுமை என இருக்கும் அவர் முனைவர் ஷாந்தி பப்பு.

1996 ல் அவர் தன் ஆய்வேட்டை இறுதி செய்து புனே தக்காண கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார் அவர். அவரது ஆய்வு பழந்தொல்லியல் கருதுகோள்களை மறுஆய்வுக்கு உட்படுத்தியது. வேதியியல் தனிமங்களின் சிதைவுக் காலத்தை முன்வைத்து பழமையை அளவிடும் மிகத் துல்லியமான அறிவியல் அளவையை பயன்படுத்தி அதிரம்பாக்கத்தில் கிடைத்த நூற்றுக்கணக்கான கற்கருவிகளின் வயதைக் கண்டடைந்தார் அவர். அதன்படி அந்த நிலத்தில் கிடைத்த மிகப் பழைமையான அஸ்ஷுளியன் கற்கருவி இன்றைக்கு பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்தது. அந்த பகுதியில் கிடைத்த புதிய கற்கருவி சுமார் ஒருலட்சத்தி எழுபத்திரெண்டாயிரம் வருடங்களுக்கு முந்தையதாக இருந்தது. அதாவது இந்த கொசஸ்தலை ஆற்றங்கரை சுமார் பதினான்கு லட்சம் வருடங்கள் மானுட மூதாதைகள் தொடர்ந்து வாழ்ந்து வந்த ஒரு பகுதி என முழுமையான அறிவியல் தரவுகளுடன் நிறுவினார் அவர். அவரது கண்டடைதல்கள் மானுடப் பரவல், மானுடப் பரிணாமம் குறித்த கொள்கைகளை மறுஆய்வுக்கு உட்படுத்தி மானுடம் சுமார் பதினேழு லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே பாரதத்திற்கு வந்து சேர்ந்திருக்கக் கூடும் என்றும், பாரதத்திலும் மானுடம் தன் அறிவு சார் பரிணாமத்தை தொடர்ந்திருக்கும் என்றும், இந்த பரிணாமம் ஆப்பிரிக்காவிற்கு இணையாகவே நிகழ்ந்திருக்கக் கூடும் என்றும் புதிய கொள்கைகளை முன்வைத்தது.

[3]

உண்மையில் இன்றைய தொல்லியல் உலகில் அதிரம்பாக்கம் ஒரு உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு இடம். ஏனெனில் உலகில் இத்தனை லட்சம் வருடங்கள் தொடர்ந்த ஒரு மானுட வாழ்வு நிகழ்ந்த வேறோர் இடம் இதுவரை கண்டடையப்படவில்லை. சந்தேகமே இல்லாமல் அது ஒரு மகத்தான தொல்மானுடப் பண்பாடு தான். நாம் முன்பே பார்த்தவாறு சிந்திக்கத் தெரிந்த மானுடத்தின் முதல் மூதாதை தோன்றியது மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பு தான். அப்படியெனில் இந்த நதிக்கரையில் வாழ்ந்தவர்கள் அதற்கும் முன்பு இருந்த தொல்மானுட மூதாதை. இப்போதைக்கு அவர்கள் நிமிர்ந்த மனிதர்கள் என்றழைக்கப்பட்ட ஹோமோ எரக்டஸ்களாகத் தான் இருக்க இயலும். ஆனால் அவ்வாறு அறுதியிட்டு சொல்லவும் முடியாது. ஏனெனில் அன்று வாழ்ந்த எந்த மனிதர்களின் புதைபடிவங்களும் இங்கு கிடைக்கவில்லை. இங்கு என்று இல்லை, பாரதத்தின் எந்த ஒரு இடத்திலும் அப்படி ஒரு புதைபடிவம் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் இந்த நிலம் மிகவும் வளமான நிலம். எப்போதும் நீர் ஓடிக் கொண்டிருந்த நிலம். மேலும் நிலத்தின் தன்மையில் அமிலச் சத்தும் அதிகம். மட்டுமல்லாது இந்த நிலம் முழுவதும் தொடர்ந்து மானுடம் வாழ்ந்து வந்துள்ளது. நன்கு யோசித்துப் பாருங்கள், பதினான்கு லட்சம் வருடங்கள் தொடர்ச்சியாக மானுட நடமாட்டம் இருந்த கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் இன்றும் கூட மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எத்தனை பெரிய கலாச்சார, மரபியல் மற்றும் மரபுத் தொடர்ச்சி!!! கிராமங்களுக்கு மேல் கிராமங்கள், நகரங்களுக்கு மேல் நகரங்கள் என பன்னெடுங்காலமாக மானுடம் வாழ்ந்து வந்துள்ள நிலம் இது. எனவே புதைபடிவங்கள் என ஒன்று தங்குவது சாத்தியமில்லா ஒன்று. எனவே தான் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டடையப்படும் ஆதாரங்களை மட்டும் வைத்து இம்மண்ணின் வரலாற்றை, வயதை, தொன்மையை அறிந்து கொள்ள முயல்வது என்பது நீர் நிறைந்த கிணறின் ஆழமென நிலத்தில் இருந்து நீர் தென்படும் தொலைவைச் சொல்வது போலத்தான். தொல்லியல், புவியியல், கடலியல், வானியல், நிலவியல், தொல்நதியியல், மரபணுவியல், மானுடவியல் என பல்துறை சார்ந்த அறிதல்களைத் தொகுத்து, நம் மானுட கலாச்சார நினைவுகளில் இருக்கும் புராணங்கள், கதைகள், இலக்கியங்கள், வேதங்கள் ஆகியவற்றோடு இணைத்து மறுவிளக்கம் கொள்வதன் மூலமே நம் தொன்மையை, வரலாற்றை அறிந்து கொள்ள இயலும்.

நாம் முன்பே கண்டவாறு உலகெங்கும் தொடர்ந்து நீடித்த உறைபனிக்காலத்தில் மானுடம் வாழத்தகுந்த அளவு சற்றேனும் வெப்பமாக இருந்த இடங்கள் பூமத்தியரேகைக்கு ஒட்டிய இடங்களே. அதிலும் புவிமையக்கோட்டிற்கு கீழே கடலே இருந்தமையால், மேலே இருந்த நிலப்பகுதிகளே வாழத்தகுந்த இடங்களாக இருந்து இருக்கும். நாம் முன்பே கண்டவாறு அன்று இருந்த கடல் இப்போது இருந்ததை விட நூற்று இருபத்தைந்து முதல் நூற்றி நாற்பது மீட்டர்கள் கீழே இருந்தது. எனவே இன்றைய பாரத நிலம் குமரிக்குத் தெற்கேயும், கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் இன்னும் அகன்றும் இருந்தது. இன்றைய இலங்கை நம் பாரதத்தோடு நில வழியாக இணைந்திருந்த காலம் அது. மேலும் இன்றைய இந்தியப் பெருங்கடலில் பலப் பல சிறு தீவுகள் இருந்திருக்கின்றன. இன்றைய சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்ட சுந்தாலாந்து  என்னும் ஒரு பெரும் நிலப்பரப்பும் இருந்திருக்கிறது. இவையனைத்தும் நிலநடுக்கோட்டிற்கு அருகில் இருந்திருக்கின்றன என்பதை நினைவில் கொண்டால் அந்த உறைபனி காலங்களில் உயிர்கள் சற்றேனும் நிம்மதியாக வாழ்ந்திருக்க சாத்தியமான நிலப்பகுதிகள் இவையே என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். மேற்கே ஆப்பிரிக்காவில் துவங்கி கிழக்கே பப்புவா நியூ கினியா வரை பரவி இருந்த இந்த நிலப்பகுதிகளில் நம் பாரத துணைக்கண்டம் மட்டுமே மானுடம் உட்பட பல வகை உயிரினங்களும் தங்கி, தழைத்து வாழத் தகுந்த இடமாக இருந்திருக்கிறது. ஏன் பாரதத்திற்கு மட்டும் அப்படி ஒரு தனிச் சிறப்பு?! காரணம் இருக்கிறது. உலகில் வேறெந்த நிலத்திற்கும் இல்லாத ஒரு தனித்தன்மை நம் பாரதத்திற்கு இருக்கிறது. அது வேறென்ன, நம் மன்னும் இமயமலை தான். வடதுருவத்தில் இருந்தும், மத்திய ஆசிய பகுதிகளில் இருந்தும் பெருகி வரும் உறைபனி மற்றும் கொடுங்குளிர் காற்றுகளைத் தடுத்து, கடலில் இருந்து எழும் வெப்ப காற்றை வடக்கே செல்ல விடாமல் நிறுத்தி பருவ மழை தருவித்த இயற்கை பெருஞ்சுவர் அது. சரஸ்வதி, சிந்து, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா என வற்றாத உயிர் நதிகளை பிறப்பித்த பெரும் உறைபனியாறுகளைக் கொண்ட ஹிமத்தின் (பனியின்) ஆலயம் அது, ஆப்பிரிக்காவில் இந்த அமைப்பு இல்லாததால் அங்கே மழை மிகவும் குறைவு. எனவே அங்கு இருந்தது வெறும் புல்வெளிகள் மட்டுமே. மிகவும் வறண்ட வானிலையும், அதோடு இணைந்த கடுங்குளிரும் என ஆப்பிரிக்கா இருந்திருக்கும். கிட்டத்தட்ட இதே நிலை தான் புவி நடுக்கோட்டிற்கு அருகே இருந்த சுந்தாலாந்து நிலப்பகுதிக்கும் ஏற்பட்டிருக்கும். இன்றிருப்பது போல வெப்பச்சலன மழையும், அதை மையமாகக் கொண்ட மழைக்காடுகளும் அந்த உறைபனிக் காலங்களில் இருந்திருக்காது. எனவே அங்கும் புல்வெளிகளே மிஞ்சியிருக்கும். காடுகளும், வளமான வண்டல் நிலங்களும், விதவிதமான தாவர மற்றும் விலங்கு உணவுகளும், மிதமான குளிருமென மானுடம் வாழ மிகச் சிறந்ததொரு நிலமாக பாரதமே இருந்திருக்கும். முனைவர் ஷாந்தி பப்பு அவர்களின் ஆய்வில் கண்டடையப்பட்ட மற்றொரு முக்கியமான அறிதல் அந்த பதினான்கு லட்சம் வருடங்களில் இருந்த காலநிலை மற்றும் புவிநிலை அந்த உறைபனிக் காலத்தில் பாரதத்தின் தென்பகுதி தொடர்ந்த பருவமழை பெற்று வந்த ஈரப்பதமான நிலம். அதன்படி கொசஸ்தலை ஆறு இன்றிருப்பது போல வெறும் மழைக்காலத்தில் மட்டும் ஓடும் ஒரு சிறுநதி அன்று. கங்கை போல ஒரு வற்றாத நதி. அந்த நதிப்படுகை மானுடம் தங்கி வாழத் தேவையான உணவு, தங்குமிடங்கள், கால்நடைகள் என அனைத்தையும் வழங்கி வந்த ஒரு இடம். எனவே தான் இங்கு வந்தடைந்த தொல்மூதாதையர் அடுத்த பல லட்சம் வருடங்கள் இங்கேயே தங்கி வாழ்ந்திருந்தனர். இங்கிருந்தும் கிளம்பி தெற்கு, கிழக்கு, வடக்கு என சென்று இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையோர் இங்கேயே தங்கி விட்டிருக்கின்றனர். அந்த தொடர்ச்சி இன்று வரை நீண்டிருக்கிறது என்பதே இந்த இடத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. இந்த கண்டடைதல் நாம் சென்ற பதிவில் கண்ட புவியில் காலநிலை வரலாற்றோடு பொருந்துகிறது.

இவையெல்லாம் சென்று சுட்டி நிற்பது ஒன்றைத் தான். இன்றைய மானுடப் பரவல் கொள்கைகள் சொல்வது போல ‘ஆப்பிரிக்கா மட்டுமே மானுடத்தின் பரிணாமத் தொட்டில் மற்றும் மானுடப் பரவலின் ஊற்று’ என்பது முழு உண்மை அல்ல என்பது தான். இன்று கிடைத்திருக்கும் ஆகப் பழைமையான அஸ்ஷூளியன் கற்கோடாரி கென்யாவில் 1.7 மில்லியன், பதினேழு லட்சம் வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்து கிடைத்த மிகவும் பழைமையான கற்கோடாரி நம் அத்திரம்பாக்கத்தில் தான். அதன் வயது பதினைந்து லட்சம் வருடங்கள் எனக் கொண்டால், ஆப்பிரிக்காவில் இருந்து அந்த தொல்மானுட மூதாதை இரண்டே லட்சம் வருடங்களில், நம் பாரதத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். நில வழியில், அராபிய தீபகற்பம் வழியாக, அரபிக்கடலோரமாக வந்து குமரி நிலம் வழியாக இன்றைய தமிழ் நிலத்தின் உச்சியில் இருக்கும் அதிரம்பாக்கத்திற்கு அவர்கள் ஓடியே வந்திருக்க வேண்டும். இப்புவியின் பரிணாம மாறுபாடுகளின் கால அளவில் வைத்துப் பார்க்கையில் இந்த இரண்டு லட்சம் வருடங்கள் என்பது ஒரு நொடிக்கும் குறைவான கால அளவிற்கே சமம். அதுவும் இந்த இரண்டு லட்சம் வருடங்களில் அவர்கள் ஆப்பிரிக்காவில் செய்த அதே தொழில் நேர்த்தியோடு இங்கும் கற்கருவிகளைச் செய்திருக்கும் திறமையோடு இருந்திருக்கின்றனர். இதன் பொருள் அவர்கள் வரும் வழிகளில் இங்கே இருப்பது போல தங்கி வாழ நினைக்கவில்லை. தொடர்ந்து பயணம் செய்து கொண்டே வந்து இறுதியாக இங்கே தங்கி வாழத்துவங்கினர். இந்த நிலையை பாரதத்தின் பிற வரலாற்றுக்கு முந்தைய அகழ்வாய்வு களங்களான சிவாலிக் குன்றுகள், கர்னூல் குகைகள், கர்நாடகாவின் இஸாம்பூர் ஆகியவற்றிலும் காணலாம். இந்த பகுதிகள் எல்லாம் அதிரம்பாக்கத்திற்கு பிந்தையவை, சிவாலிக் குன்றுகளைத் தவிர்த்து. அது இருபது லட்சம் வருடங்களுக்கும் முந்தைய கற்கருவிகளைக் கொண்டிருருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த களங்கள் அனைத்தும் ஒன்றை உரக்கச் சொல்கின்றன. மானுடம் தன் அறிவுப் பரிணாமத்தை பாரதத்திலும் நிகழ்த்தியிருக்கிறது.

[4]

மானுட பரிணாமத்தில் பாரதத்தின் தொன்மை பொது கருதுகோள்களின் படி அறுபதாயிரம் வருடங்களுக்கு முன் தான் துவங்குகிறது என்றாலும், தொல்லியல் தரவுகள் தொல்மானுட மூதாதையர் காலத்தில் இருந்தே பாரதத்தில் மானுடம் மற்றும் மானுட மூதாதையர் இருந்ததை உறுதிப்படுத்தியிருக்கின்றன. பிற நிலங்களைப் போலல்லாது, பாரத நிலத்தில் மானுடர்கள் வாழத் தேவையான நல்ல காலநிலை, வானிலை துவங்கி வளமான மண், தாவரங்கள், பல்லுயிர்ப்பெருக்கம் என அனைத்தும் அபரிமிதமாகவே இருந்தன. எனவே மானுடத்திற்கு இங்கே தங்கி வாழ்வதில் எந்த தடையும் இருக்கவில்லை. பிற நிலங்களைப் போல உயிர் வாழவே நிதமும் போராட வேண்டிய தேவையின்றி, இயல்பாகவே தங்கி வாழ அவர்களால் இந்நிலத்தில் இயன்றது. இது அவர்களுக்கு அளித்தது உபரியான காலம். இந்த உபரி காலம் அவர்களை சூழலை உற்று நோக்க, சூழலில் வெளிப்பட்ட அழகை ரசிக்க, தங்களிடையே நிகழ்ந்த மரணங்களைப் பற்றி சிந்திக்க, மேலே இருந்த வானத்தை உற்று நோக்க தூண்டியது. அப்படித் தான் மானுடம் தன்னோடு பரிணமித்த பிற உயிரினங்களைப் போல தங்கி வாழ, பல்கிப் பெருக மட்டுமே செயல்படாமல் அறிவை நோக்கி பயணப்பட இயன்றது. மேலும் மானுடம் தன் வழக்கப்படி இந்நிலம் முழுவதும் பரவி, பயணித்துக் கொண்டே இருந்தது. இதை எப்படி நம்மால் உறுதியாகச் சொல்லவியலும்? வடக்கே இமயத்தையும், தெற்கே குமரியையும் இப்பெரு நிலத்தின் எல்லைகளாக மானுடர் எழுத்தறியும் முன்பே அறிவித்து விட்டிருந்தனர். எனவே தான் இந்த நீள நிலப்பகுதியில் பண்பாடு என ஒன்று உருத்திரண்டு வந்தது. இந்நிலத்தின் மேற்கு, கிழக்கு எல்லைகளில் எச்சமென இருந்த அந்த பண்பாடு, மேற்கே சிந்து நதி துவங்கி, கிழக்கே பிரம்மபுத்திரா என நதிகள் பாய்ந்த நிலங்களில் ஒன்றென இன்றும் நிலைத்து நின்று கொண்டிருப்பதே இந்நிலத்தின் மற்றும் இந்த பண்பாட்டின் தொன்மையையும், தொடர்ச்சியையும், அழியாத்தன்மையையும் பறைசாற்றும்.

பண்பாடு என்று பொதுவாகச் சொன்னாலும் நம் பாரதத்தில் ஒவ்வொரு ஐம்பது கிலோமீட்டர்களுக்கும் ஒரு மாற்றம், காத்திரமான, தெளிவான, தனித்தன்மையான ஒரு கலாச்சார கூறு, உணவு சார்ந்து, உடை சார்ந்து, சமூக அமைப்பு சார்ந்து, வழிபாடு சார்ந்து என வந்து கொண்டிருப்பதை நாம் இன்றும் காணலாம். எனில் ஒரே பண்பாடு என எதைச் சொல்கிறோம்? அன்றாட பழக்க வழக்கங்களுக்கு அடியில் ஒரு மானுடக் குழு தன் சிந்தனையில் ஒரு பொதுமையை அடைய இயலுமெனில் அதுவே அதன் பண்பாடு எனப்படும். சிந்தனையில் பொதுமை என்பது அந்த மானுடக் குழு அனைத்துக்குமான பொதுவான தேடல்கள் சார்ந்தது. நாம் இதற்கு முந்தைய பதிவுகளில் கண்டவாறு மானுடம் எழுப்பிக் கொண்ட தேடல்கள், அந்த தேடல்களுக்கு காரணமான அந்த ‘நான்' என்னும் தன்னுணர்வு சார்ந்து இந்த நிலத்தில் தோன்றிய சிந்தனைகள், தத்துவங்கள், தரிசனங்கள், சமயங்கள் என்ற மிக விரிவான அறிவும், அனுபவமும் சார்ந்த கண்டடைதல்களுக்குப் பின்னால் மிக நெடுங்காலம், அதாவது பல லட்சம் ஆண்டுகள் நீண்ட ஒரு நெடுங்காலத்தில் தொடர்ந்து இங்கு தங்கி வாழ்ந்த மானுடர்களில் நிகழ்ந்த சிந்தனைத் தொடர்ச்சியே காரணம்.

இந்த சிந்தனை தொடர்ச்சி எங்ஙனம் நிகழ்ந்திருக்கும்? முதலில் அப்படி ஒரு தொடர்ச்சி நிகழ்ந்தது என்பதை எப்படி உறுதிப்படுத்த இயலும்? முக்கியமான வினா. விடைக்கு நாம் முனைவர் ஷாந்தி பப்புவிற்குத் தான் கடமைப்பட்டிருக்கிறோம். பதினான்கு லட்சம் வருடங்கள் ஒரே இடத்தில் விதவிதமான கற்கருவிகளின் பரிணாம முன்னேற்றம் நம் கண் முன்னால் கண்டடையப்பட்டுள்ளது. முதன்முதல் கிடைத்த பதினைந்து லட்சம் வருடங்களுக்கு முன்பான கற்கைக்கோடரியின் முக்கியமான தன்மை என்ன? ஒரு கண்ணீர் துளியின் வடிவில் ஒரு முனை கூர்மையாக குத்தி கிழிக்க ஏதுவாகவும், மறுமுனை அகன்று கூராக வெட்ட ஏதுவாகவும் இருக்கும் அந்த கைக்கோடரியின் பார்த்தவுடன் நம்மை கவர்வது அதன் சீர்மை. ஒரு கண்ணீர்த் துளியின் வடிவு என ஏன் சொல்கிறோம் எனில் அதன் கூரான மேற்பகுதியில் இருந்து அதன் அகன்ற அடிப்பகுதிக்கு ஒரு கோடு இழுத்தால் அக்கோட்டின் இருபுறமும் மிகச் சமமான அளவில் அந்த ஆயுதம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் காண இயலும். இதுவே அந்த கல்லை, இயற்கையிலேயே உருவான ஒரு கூரான கல்லில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம். சீர்மை, வடிவ ஒழுங்கு, ஜியோமிதி என்று இன்று சொல்லப்படும் துறையின் ஆதி வடிவம். கார்ல் சகன் ஒரு முற்றிலும் புதிய கிரகத்தில் புத்திசாலித்தனமான உயிர்கள் இருக்கிறது என்பதன் அடையளாமாக முன்வைப்பது அந்த கிரகத்தின் இயற்கையில் இருந்து மாறுபட்டு இருக்கும் உருவாக்கப்பட்ட சீர்மை மற்றும் ஜியோமிதி வடிவங்களைத் தான். அதன் வேர் என இந்த ஆதிகால தொல்மானுட மூதாதைகள் உருவாக்கிய இந்த கற்கருவிகளைச் சொல்ல இயலும். அதுவே மானுட அகத்தில் தோன்றிய அனுபவங்களில் மானுடத்தால் வெளிப்படுத்த இயன்ற, புறவயமாக வரையறுக்க இயன்ற முதல் உருவம், புறவயமான வெளிப்பாடு. அழகு என மானுடம் உணர்ந்ததெல்லாம் இந்த சீர்மையைத் தான். அதை கச்சிதமாக வெளிப்படுத்தியதே அந்த கற்கருவி. அது மட்டுமல்ல, அதன் பிறகு உருவாக்கப்பட்ட அனைத்து கருவிகளிலும் இயல்பாகவே இந்த சீர்மை குடிகொண்டு விட்டிருந்தது. மானுடம் தன் அறிவில் மேம்பட மேம்பட இந்த கருவிகள் அளவில் சிறியனவையாகவும், ஒரே அளவிலும் உருவாகத் துவங்கின. ஒரே அளவு என்பது சீர்மையின் அடுத்த கட்ட நகர்வு. ஒரே அளவு எப்படி வந்திருக்கும்? அந்த மானுடர் கருவியாக மாற்றத் தோதுவான ஒரு கல்லில் அவர் எண்ணியிருந்த அளவிற்குத் தேவையான வகையில் அக்கல்லை உடைப்பார். அந்த அளவு வந்தவுடன் ஒரே போடாக அதன் முனைகளைக் கூராக்குவார். இத்தகைய கற்கருவிகள் அத்திரம்பாக்கத்தில் சுமார் 3,85,000 வருடங்களுக்கு முன்பிருந்தே கிடைக்கத் துவங்குகின்றன. இதன் பொருள் மானுடம் தன் அகத்தில் இருந்து ஒரு வடிவை புறத்தில் உருவாக்குவதில் அடுத்த கட்ட பரிணாம நகர்வை நிகழ்த்திவிட்டது என்பது தான்.

[5]

மானுடம் கல்லை கல்லால் அடித்து உருவாக்கிய அந்த கற்கைக்கோடாரியின் மேல் பாதி பூமிக்கு வெளியேயும், அடிப்பகுதி கீழேயும் இருக்கும் வகையில் புதையுண்ட ஒரு கருவியை கற்பனை செய்து கொள்ளுங்கள். உண்மையில் அது ஒரு கருவி அல்ல, இயல்பாக புதையுண்டிருந்த ஒரு கல். அதன் வெளியில் தெரியும் வடிவம்,  மானுடம் செய்த கூரான ஒரு முனையில் துவங்கி அடிப்பகுதி நோக்கி இரு புறமும் சீராக விரிந்து செல்லும் ஒரு கற்கைக்கோடரியின் மேற்பகுதி போலவே தோற்றமளிக்கும் ஒரு கல். அதைக் கண்ட அந்த மானுட மூதாதைக்கு என்ன தோன்றியிருக்கும்? தாங்கள் உழைத்து உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு சீர்மையின் செம்பாதி தங்கள் கண்முன் எழுந்து நிற்பதாகத் தானே தோன்றியிருக்கும்!! அப்படிப் பார்த்தால் அது தான் அந்த மானுட தொல் மூதாதை முதன் முதல் கண்டடைந்த இறை வடிவம். இன்றைய மொழியில் சொன்னால் ‘சுயம்பு லிங்கம்’.

மிக நேரடியாகவே ஒரு தெய்வ உருவத்திற்கு வந்து விட்டோம். நாம் இந்த கட்டுரையை மிக முக்கியமாக இறைமுதல் வாதம் என்ற புள்ளியில் இருந்து தான் துவக்கியிருக்கிறோம். ஆதி மானுடம் தன் பரிணாமச் சங்கிலியில் அது தங்கி வாழ தடையென அமைந்த உடலமைப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முதன்மைக் காரணம் மானுடத்திற்கென அமைந்த தன்னுணர்வு. அதுவே மானுடம் கொண்ட ஆன்மிகத்தின் ஆதாரம். அந்த தன்னுணர்வு தான் மானுடத்தை தன் அறிவின் துணை கொண்டு இவ்வுலகில் வாழத் தூண்டியது. மானுடம் தன் பரிணாமத்தின் துவக்க காலம் துவங்கியே தன்னுள் உருவான அந்த தன்னுணர்வை வெளிப்படுத்தத் துடித்துக் கொண்டே தான் இருந்து இருக்கும். எண்ணிப் பாருங்கள், எத்தனை லட்சம் வருடங்களாக அந்த தவிப்பு நம் மூதாதைக்கு இருந்திருக்கும்!!! அத்தனை தவிப்பும் ஒரு புள்ளியில் வடிந்தது என அமைந்தது தான் அந்த சுயமாக மண்ணிற்கு வெளியே தலைகாட்டிய அந்த சமச்சீர் வடிவான கல். அதை சுயம்பு லிங்கம் எனச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இன்றளவும் நம் பாரத நிலம் முழுக்க இருக்கும் சுயம்பு லிங்கங்கள் அனைத்துமே இதே வடிவில் தானே இருக்கின்றன!! காசியின் புடவிக்கிறைவன், உஜ்ஜையின் மகாகாலர், ஓம்காரேஷ்வர், சோம்நாத், கேதார்நாத் என அனைவருமே இவ்வடிவில் தானே இருக்கின்றனர்!! இந்த சுயம்பு லிங்கங்களுக்கு வயது என்பதை அனுமானிக்கவே இயலாது என்பதால் தானே அவை கல்பகோடி வருடங்கள் மூத்தவை எனப்படுகின்றன.

அந்த சீர்மையான கல் பிறகு மரத்தால் உருவாக்கப்பட்டு தெய்வமெனவே வழிபடப்பட்டது. அதற்கு நம் தமிழ் அளித்த பெயர் தான் ‘கந்து' வழிபாடு. கல் கந்துவென உருமாறிய போதே அதில் அருவமென இறை உறைகிறது என்ற சிந்தனையும் உருவாகிவிட்டது. அந்த முதல் இறை வடிவின் முன்பே நம் பூசாரிகள் வெறியெழுந்து ஆடினர். குறி சொல்லினர். அதில் உறைந்த இறை நம் பூசாரியின் வழி வெளிப்பட்டது என்றே நம் மூதாதையர் நம்பினர். அந்த கல் தான் மானுடத்தை முதலில் ஒரே இடத்தில் தங்கச் சொல்லித் தூண்டியிருக்கும். நன்கு யோசித்துப் பாருங்கள். இப்படி ஒரு தெய்வ உருவை முதலில் கண்ட மானுடம் அத்தகையதோர் உருவை தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தேடத் துவங்கியிருக்கும். அப்படி எல்லா இடங்களிலும் ‘சுயம்பு லிங்கம்' இருந்திருக்குமா என்ன? எனவே அவர்கள் அந்த தெய்வம் தோன்றிய இடத்திற்கு அருகிலேயே தங்கி வாழ முடிவெடுத்திருப்பர். நல்வாய்ப்பாக நம் பாரதப் பெருநிலம் அத்தகையதோர் வாய்ப்பை அவர்களுக்கு அளித்திருந்தது. அந்த லிங்கத்திற்கு கூரை அமைத்த போது தான் மானுடத்திற்கு தங்களுக்கு எனவும் கூரை அமைத்துக் கொள்ள முடியும் என்பதே தோன்றியிருக்கும். அவ்வாறாக சிவமே இன்று நாம் காணும் மானுட வாழ் நெறிகளின் அடிப்படைகளை உருவாக்கி அளித்தது. அந்த சுயம்பு வடிவிற்கு சிவம் என்னும் பெயர் அமைய இன்னும் சில பல லட்சம் வருடங்கள் ஆகியிருந்தது. ஆனால் நாம் முந்தைய பதிவொன்றில் கண்டவாறு ‘பை’ என்ற பெயர் மானுடர் அளித்த ஒன்று தான். அதற்கு பெயர் என ஒன்று இல்லாமல் இருந்தாலும் அதன் தன்மையும், இருப்பும், செயலும் மாறியிருக்காது. அதே போல சிவம் என்ற பெயர் மானுடம் இட்ட ஒன்றே. ஆனால் அவ்வாறாக அந்த சுயம்பு வடிவில் வெளிப்பட்ட ஒன்று என்றுமிருக்கும் ஒன்று. மணிவாசகர் சொல்வது போல நாமமே இல்லாத ஒன்று. ‘ஒரு நாமம், ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமங்களை’ பின்னால் வந்தவர்கள் சூட்டி தெள்ளேனம் கொட்டிக் கொண்டார்கள். ஆனால் அந்த மூதாதை இத்தனை நாமங்களாலும் சுட்டப்பட்ட ஒன்றை அந்த சுயம்பு வடிவில் கண்டு கொண்டார். தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்ள அந்த வடிவையே தலையாய்க் கொண்டார்.

முதல் தெய்வ வடிவம் இது தான் என எப்படி கூற இயலும்? நியாயமான கேள்வி. மண்ணில் இருந்து செங்குத்தாக வான் நோக்கி எழுந்த கல்லை தெய்வமாகக் கண்டது என்பது பாரதத்திற்கு மட்டுமே உரித்தான ஒன்று அல்ல. உலகெங்கும் அத்தகையதோர் வடிவத்தை வழிபாட்டுக்கு உரியதாகக் கருதியதற்கான ஆதாரங்கள் ஏராளனமானவை கிடைக்கின்றன. மாலி நாட்டில் வாழும் டோகோன் பழங்குடிகள், தெற்கு ஆப்பிரிக்காவின் சான் பழங்குடிகள் ஆகியோரிடம் இன்றும் இத்தகையதோர் செங்குத்தான ஸ்தம்ப வழிபாடுகள் காணப்படுகின்றன. எத்தியோப்பியா, நைஜீரியா, அல்ஜீரிய சஹாரா பாலையில் காணப்படும் தஸிலி நஜர் கல்தூண்கள் என மானுடம் துவங்கிய ஆப்பிரிக்காவில் கூட இதன் தடயங்கள் இன்றும் காணப்படுகின்றன.

இவையனைத்தையும் விட ஒரு முதன்மையான ஆதாரம் ஒன்று உண்டு. குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு சிவராத்திரியை ஒட்டியும் இரவு முழுவதும் பன்னிரு சிவாலயங்களுக்கு ஓடியே சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் என்ற ஒரு நிகழ்வு உண்டு. அந்த பன்னிரண்டு சிவதலங்களில் எட்டாவது சிவதலம் மேலாங்கோடு என்னுமிடத்தில் இருக்கும் அருள்மிகு காலகாலர் ஆலயம். இக்கோவிலின் கருவறைக்கு பின்புறம் தலவிருட்சம் இருக்கும் சிறிய நந்தவனத்தில் இரு நெடுங்கற்கள் நின்றிருக்கின்றன. இரண்டு ஆள் உயரத்திற்கு கையகல கற்கதவுகள் போல் நின்று கொண்டிருக்கும் அவை. மேலே தெரியும் அதே அளவு உயரம், மண்ணிற்கு கீழேயும் சென்றிருக்கும் என்பது பொதுவாக இந்த நெடுங்கற்களின் அமைப்பு. இவை பல்லாயிரம் வருட பழக்கம் உள்ளவை, கற்காலத்தைச் சார்ந்தவை. இவை எதற்காக நிறுவப்பட்டன என்பதைக் குறித்த தெளிவான தரவுகள் இல்லை. ஆனால் இவை உலகெங்கும் இருக்கின்றன என்பது மிகவும் வியப்பான ஒரு உண்மை. இதன் பொருள் இன்றைக்கு இருக்கும் மானுடம் நிலத்தால், பண்பாட்டால், மத வழிபாட்டால் வேறுபட்டு நிற்கும் முன்பு, மானுடம் முழுமைக்கும் பொதுவான ஒரு பண்பாடு இருந்திருக்கலாம் என்பது தான். இங்கே பண்பாடு என்னும் போது நாம் அக்கால மானுடரின் ஆதி தேடலையும், அதற்கு அவர்கள் கண்ட பதிலையும் மட்டுமே முன்வைக்க முடியும். ஏனெனில் அதைத் தவிர பிற அனைத்தும் உயிர் வாழத் தேவையான செயல்களே. அவை மானுடம் வாழ்ந்த இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருந்திருக்கும். ஆனால் நாம் முதலிலே கண்ட அந்த ஆன்மிக அனுபவம் மானுடம் முழுமைக்கும் பொதுவானது தானே. அந்த அனுபவத்தின் புறவயமான வெளிப்பாடு என மானுடம் முதலில் கண்டது இந்த ஒரு சீர்மையான கல்வடிவைத் தான் என்பதற்கு உலகெங்கும் காணப்படும் இந்த நெடுங்கற்களை விட வேறு ஒரு ஆதாரம் வேண்டுமா என்ன!!

இத்தகைய கற்கள் வழிபடப்பட்டன என்பதற்கு இன்று கிடைத்திருக்கும் மற்றொரு பெரும் ஆதாரம் ஒரு கோவில். ஆம், இன்று வரை மண்ணில் இருந்து கிடைத்த, அகழ்ந்தெடுத்த மிக மிகப் பழைமையான கோவில். அதன் வயது சுமார் பதினொன்றாயிரம் ஆண்டுகள். பொமு 9000 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கோவில் அது. அது இங்கே நம் பாரதத்தில் கண்டடையப்படவில்லை. இன்றைய துருக்கியில் ‘கோபெக்லி தபே’ என்னும் இடத்தில் இருக்கிறது அக்கோவில். அதன் படங்களைப் பார்த்தால் ஒன்று தெரியும், முதன்மையாக அங்கு இருப்பவை இருநூறு கற்தூண்கள். அந்த கோவில் கூரை அற்ற ஒன்று. எனவே அந்த தூண்கள் கூரையைத் தாங்க நிறுவப்படவில்லை. வழிபாட்டிற்காகவே நிறுவப்பட்டிருக்கின்றன. இந்த தூண்களில் சில உருவங்களும் வரையப்பட்டிருக்கின்றன. அந்த கோவில், தூண்கள், அவற்றில் வரையப்பட்டவை பற்றி பிறிதொரு பதிவில் விரிவாகக் காணலாம்.

[6]

மிகத் தெளிவாகவே மானுடம் தன்னுள் உணர்ந்த தெய்வத்தன்மை என்ற ஒன்றை புறவயமாகக் கண்ட முதல் வடிவு இந்த ‘சுயம்பு லிங்க' வடிவே எனக் கண்டோம். அத்தகைய வடிவும், வழிபாடும் உலகெங்கும் திகழ்ந்து வந்ததையும் கண்டோம். முன்பே கூறியவாறு அந்த வடிவிற்கு சிவம் என்றும், லிங்கம் என்றும் பெயரிடுவதற்கு முன்பே அந்த வடிவம் மானுடத்துக்குள் ஒரு வழிபடு நிலையில் தன்னை நிறுவிக் கொண்டது. எதனால் அத்தகையதோர் ‘சுயம்பு லிங்க' வடிவு இப்படி ஒரு இடத்தை மானுடத்துள் அடைந்தது? அந்த வடிவு உலகெங்கும் பரவியிருந்தாலும், தற்காலத்தில் நம் பாரதத்தில் மட்டுமே அதே மதிப்புடன் வழிபடப்படுவது எதனால்?

அந்த ‘சுயம்பு லிங்க’ வடிவக் கல் என்பது மானுடம் முதன்முதலில் தன்னுள் உணர்ந்து ரசித்த அழகு என்ற ஒன்றை சீர்மை எனக் கண்டுகொண்டு, அதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய ஒரு கற்கருவியின் பாதி உருவில், இயற்கையாகத் தோன்றிய ஒன்று என்பதே முதல் காரணம். ஆனால் அது மட்டுமே முதன்மைக் காரணம் அல்ல. புவியில் இருந்து வான் நோக்கி உயர்ந்த ஒரு கல் மானுடத்துள் அத்தகையதோர் உணர்வை எழுப்ப முதன்மைக் காரணம் அதன் நிமிர்வே. யோசித்துப் பாருங்கள், இன்று புவியில் வாழும் உயிர்த் தொகைகளில் புவிக்கு கிடைமட்டமாக முகம் காட்டாத ஒரே உயிரினம், மானுடம் தான். தாவரங்கள் நகர்வதில்லை. எனவே அவற்றின் வேர்கள் புவியோடு தான் பிணைந்துள்ளன. பறவைகளும் வானுக்கும், புவிக்கும் கிடைமட்டமாகவே பறக்கின்றன. இருகால்களில் எழுந்து நின்ற போதே மானுடம் தன்னை பிறவற்றில் இருந்து வேறுபடுத்திவிட்டது. எனவே இயல்பாக அது தன்னுள் உணர்ந்த அந்த தெய்வீகத்தருணத்தை வெளிப்படுத்த தன்னைப் போன்ற நிமிர்ந்த ஒன்றைத் தானே தேர்வு செய்திருக்கும்!!

இந்த ‘சுயம்பு லிங்கம்' உலகெங்கும் மானுடத்தில் தன் செல்வாக்கை பல ஆண்டுகள் செலுத்தி வந்திருக்கிறது என்பதன் பல ஆதாரங்களை நாம் கண்டோம். ஆனால் உலகின் பிறபகுதிகளில் அவை வழக்கொழிந்து போனாலும் நம் பாரதத்தில் அது இன்று வரையிலும் தொடர்ந்து வரும் ஒரு அறுபடாத பண்பாட்டு தொடர். அதன் காரணம் நாம் முன்பே கண்டவாறு இந்த நிலம் மட்டும் தான் உலகில் பூமியின் மாறிவந்த அத்தனை காலநிலைகளிலும் மானுடம் தங்கி, தன் வம்ச நீட்சியை அறுபடாது தற்காத்து தொடர்ந்து தக்கவைத்து செழித்து வாழ வகை செய்து கொடுத்தது. இந்நிலத்தில் வாழும் மானுடத்தின் தொன்மை பல லட்சம் வருடங்கள். அத்தனை நீண்ட வருடங்களாக மானுடத்தின் சிந்தனை தொடர்ந்து இம்மண்ணில் நிகழ்ந்து வருகிறது. இம்மண்ணில் பிறந்து வாழும் ஒவ்வொருவருக்கும் அந்த அறுபடாத சிந்தனைக் கண்ணியில் தம் சிந்தனையை இணைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நாம் ஒன்றும் செய்ய வேண்டியத் தேவையில்லை. நம் மரபுடன் எவ்வகையிலேனும் ஒரு பிணைப்பைக் கொண்டிருந்தால் போதும், அந்த சிந்தனைக் கண்ணி நம்மைத் தீண்டிவிடும், தன்னோடு இணைத்துக் கொள்ளும். அப்படித்தான் அது என்னைத் தீண்டியது. இதோ வாசித்துக் கொண்டிருக்கும் உங்களையும் தீண்டியிருக்கிறது. தொடர்ந்த சிந்தனை எந்த ஒரு வடிவையும் குறியீடாக, படிமமாக, தொன்மமாக, தத்துவார்த்தமான அடர்த்தியான பொருளேற்றம் கொண்டதாக மாற்றிவிடும். அவ்வாறு மாற மாற அந்த வடிவம் நம் ஆழ்மனதிற்கு ஊடுருவி விடும். ஆழ்மனதிற்கு ஊடுருவிய அந்த படிமம் இயல்பாக மானுடம் கண்டடையும் எந்த ஒரு அறிதலையும் தன் மீது இயல்பாக ஏற்றிக்கொள்ளும். அப்படித்தான் வானோக்கி நிமிர்ந்த அது வானையும் மண்ணையும் இணைக்கும் ஒரு பாலமாக ஆனது. மானுடம் கண்ட பெரும் இயற்கைப் பேரழிவான டோபா எரிமலை வெடிப்பை வானைத் தாண்டிச் சென்ற, மண்ணின் ஆழத்தில் இருந்து கிளம்பிய ஒரு நெருப்புத் தூண் என்றானது. அந்த தூணை பின்னர் மால் அயன் இருவராலும் காண இயலாத அடி, முடி இல்லாத அரும்பெருஞ்சோதியெனக் கொண்டது. அவ்வடிவிற்கு நம் மரபு இட்ட பெயர் சிவம். இந்நிலம் முழுமையும் பரந்திருந்த மானுடம் சிவத்தையே தன் அறிதல்களுக்கு முதன்மையாகக் கொண்டது. பிற தெய்வ வழிபாடுகள், சமயங்கள் தோன்றி வளர்ந்த போதும் சிவம் தன் இருப்பை இந்நிலத்தில் இருந்து ஒரு போதும் அகற்றவில்லை.  சிவம் எவ்வாறெல்லாம் நம் மரபில், அதன் அறிவில், ஞானத்தில் ஊடுருவி நின்றிருந்தது என்பதை வரும் பதிவுகளில் விரிவாகவே காணலாம்.

நம் பாரதத்தின் அறுபடா பண்பாட்டு நிகழ்வுக்கு முதன்மைக் காரணம் இமயம் தான். எனவே உலகின் வேறெந்த மலைக்கும் கிடைக்காத வழிபாட்டுடன் கூடிய தனிச்சிறப்பு இமயத்திற்கு இன்றும் கூட கிடைக்கிறது. இதன் பொருள் இந்நிலத்தின் வளங்கள், காலநிலை, பருவ மழை, பருவ காலங்கள் என அனைத்திலும் இமயத்தின் பங்கை நம் முன்னோர் அறிந்திருந்தனர் என்பதே. நீங்கள் முதன்முதலில் இமயத்தை தரிசித்த தருணத்தை எண்ணிப்பாருங்கள். நிச்சயமாக சிலிர்ப்புடன் அல்லாது அந்த தருணம் கடந்திருக்காது அல்லவா?! சிவனின் இடமென நாம் இமயத்தை, அதிலும் குறிப்பாக கைலாயத்தை அறிந்தது தற்செயல் அல்ல. நாம் வாழ சிவம் காரணம் என்றால், அந்த சிவம் இமயத்தில், வானோக்கி நிமிர்ந்த ஒரு சீர்மையான ‘சுயம்பு லிங்க’ மலைமுடியைத் தானே தன் இருப்பிடமாகக் கொண்டிருக்க இயலும்!!!

(சிவம் வளரும்)

உசாத்துணைகள்:

ராபர்ட் ப்ரூஸ் ஃபுட்

https://journal.skbu.ac.in/published/paper_full_text/908881663758353.pdf?v=1752737060

முனைவர். ஷாந்தி பப்பு

https://www.researchgate.net/publication/249179533_Excavations_at_the_Palaeolithic_Site_of_Attirampakkam_South_India_Preliminary_Findings

https://www.nature.com/articles/nature25444


கட்டுரையாளர்: அருணாச்சலம் மகாராஜன் அருணாச்சலம் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருக்கிறார். பள்ளிப் பருவம் முழுவதும் கிராமத்திலேயே தமிழ் வழிக் கல்வியாக நிகழ்ந்தது. தந்தை வழி திருக்குறளும், சுவாமி விவேகானந்தரும் அறிமுகம். பள்ளியில் பயிலும் காலத்தில் ஊரில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சனிக்கிழமை தோறும் நிகழ்ந்த கம்பராமாயண வகுப்புகள் வாயிலாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார். தீவிர இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு மூலம் நுழைந்தார். வெண்முரசு நாவல் வரிசைகளுக்கு எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் வாயிலாக இந்திய ஞான மரபு, வரலாறு, தத்துவங்கள் ஆகியவற்றில் தன் தேடல்களை கண்டடைந்தார்.

0 comments:

Post a Comment