ஐந்தொழில் - படைத்தல் ( ஆக்கல் )
உயிர் அறிவினை துணையாகக் கொண்டு செயல்படக்கூடியது . ஆனால் தனித்த உயிருக்கு அறிவு உண்டாவதில்லை . அது அதனை பெற உடம்பு என்கிற ஜடம் தேவைப்படுவதாய் இருக்கின்றது. தன் ஆன்ம வளர்ச்சிக்கு தேவைப்படும் அறிவின் கருவியாக இருக்கிற உடம்பை தனக்குத் தானே உண்டுபண்ணிக்கொள்கிற வல்லபமும் உயிருக்கு இல்லை . உயிரோடு தன்னை உட்படுத்திக்கொள்ளும் வல்லபம் ஜடத்துக்கும் இல்லை . ஜடம் உயிருக்கு அறிவார்ந்து செயல்படுவதற்கான தன்மையை வழங்குமே ஒழிய அந்த ஜடம் அறிவற்றது . இந்த இக்கட்டான நிலையில் தான் ஜடத்தையும் உயிரையும் ஒன்று சேர்க்க ஒரு கர்த்தா தேவைப்படுவதாய் இருக்கிறார் . அவர் எப்படியானவராக இருக்கிறார் என்று யோசிக்கும் போது உயிரை போல தன்னிச்சையாக சிந்திக்கும் அறிவற்றவராக இல்லாமல் தானே பேரறிவாளராக இருக்கிறார் . ஜடத்தோடு தானே சேர்ந்து கொள்ள முடியாத உயிராக இல்லாமல் . ஜடத்தை தனக்கு வேண்டிய வண்ணம் ஆக்குபவராயும் அதனுள் உயிரை புகுத்துபவராயும் சர்வ வல்லவராய் இருக்கிறார் . சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மையில் உயிரை விடவும் , மலங்களை விடவும் எண்ணுதற்கு எட்டாத உயர் நிலையில் இறைவன் இருக்கிறான் . அவன் அருள் சக்தி ரூபமாய் வெளிப்பட்டு கர்த்தாக்களை உண்டு பண்ணி இந்த உயிரை உடம்போடு சேர்த்து இந்த உடம்போடான உயிரை உலகத்தில் சேர்த்து அவர் செய்கிற முதல் க்ரித்தியம் தான் படைப்பு .
இந்த இடத்தில் ஒரு வெளிப்படையான உண்மையை நாம் மனதில் கொள்ள வேண்டும் . இறைவன் செய்கிற படைப்பு புதிதாக ஒன்றை உண்டுபண்ணுவதில்லை . அதே போல் உயிரை ஒருபோதும் இறைவன் படைப்பதில்லை உயிருக்கான உடம்பை மட்டுமே படைக்கிறான் . உயிர் இறைவனை போலவே அநாதியானது. அந்த உடம்பையும் தானே படைப்பதில்லை ஏற்கனவே அநாதியாக இருக்கிற மாயையில் இருந்து உடம்பையும் உலகத்தையும் உண்டுபண்ணிக்கொள்கிறான் . இங்கே படைப்பு என்பது புதிதான ஒன்றின் தோற்றம் அல்ல . சூட்சுமம் தூலமாக்கப் படுகின்றது அவ்வளவே . தன்னை வந்து சேராமல் இருக்கிற உயிர் அதனை தன்னிடம் வந்து சேர்ப்பிக்க தன்னை சேரவிடாமல் தடுக்கிற மும்மலங்களில் ஒன்றான மாயையில் இருந்தே தனு கரண புவன போகங்களை உண்டுபண்ணி தன்னை வந்து சேர்ப்பிக்க வைக்கிற இறைவனின் பேராற்றல் பெருங்கருணையின் முதல் வெளிப்பாடு தான் படைத்தல் தொழில் .
இந்தப் படைப்பு தொழிலை நேராக இறைவன் செய்யாமல் தன் அருள் ஆற்றலால் அதனை செய்கிறான் . அந்த ஆற்றல்தான் சக்தி . அது பராசக்தியாகவும் ஆதிசக்தியாகவும் வெளிப்படுகிறது . பின் அந்த சக்தி இச்சா சக்தியாக, கிரியா சக்தியாக , ஞான சக்தியாக வகைப்படுகிறது . மாயையில் இருந்து ஒன்றை உருவாக்க அந்த ஆற்றல் விரும்ப வேண்டும் அதுவே இச்சை சக்தி இந்த விருப்பம் தன் செயலை நோக்கி நகர்த்தும் . பின் அதை எவ்வாறு செயல் படுத்துவது என்று முன்னேறும் அது கிரியா சக்தி . அச்செயல்முறைக்கான அறிவு கூறுகளை நின்று வழங்குவதாக ஞான சக்தி நிற்கிறது . இந்த மூன்று நிலையிலான ஆற்றல்தான் பிரம்மன் என்ற கர்த்தாவை நிறுவி படைப்பையும் , விஷ்ணு என்ற கர்த்தாவை நிறுவி காத்தலையும் , ருத்ரன் என்ற கர்த்தாவை நிறுவி ஒடுக்குதலையும் , மகேஸ்வரன் என்ற கர்த்தாவை உண்டுபண்ணி மறைத்தலையும், சதாசிவன் என்ற கர்த்தா மூர்த்தியை கொண்டு அருளலையும் செய்கிறது . இந்த சக்தி தத்துவத்தையே நாம் சக்தி ரூபமாக அம்மை என்ற நிலையிலே வணங்குகிறோம் . இந்த அம்மை என்ற சக்தி தனித்து இருப்பவள் அல்ல அவளும் சிவத்தின் கூறு என்பதால் தான் மாதொரு பாகனாக சிவபெருமானை ஆராதிக்கிறோம் . சிவனே ஐந்தொழிலும் செய்தாலும் செய்யப்படும் நிலை சக்தி நிலைதான் அதனாலே அபிராமி பட்டர் அம்மையை "பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே" என்றார் . படைத்தல் பிரம்மனால் செய்யப்பட்டாலும் அப்படைப்புக்கான ஆற்றல் சக்தியிடம் இருந்தே தரப்படுகிறது . அந்த சக்தி சிவத்திடம் இருந்தே வெளிப்படுகிறது . இதே சூத்திரம்தான் ஏனைய தொழில்களுக்கும் பொருந்தும் .
படைப்பு என்பதுதான் பெரிய தொழில் . உயிரை கொண்டுவந்து உடம்போடு சேர்க்கிற அரிய தொழில் . உயிரின் பக்குவத்திற்கேற்ப உடம்பை உலகத்தை உண்டுபண்ண வேண்டிய நெடிய தொழில் . நாம் இந்த இடத்திலே இன்னொன்றையும் விளங்கிக்கொள்ள வேண்டும் . ஐந்தொழில் எனப்படுவதான படைத்தல், காத்தல், அழித்தல் , மறைத்தல், அருளல் என்பவற்றில் முதல் மூன்று மட்டுமே மாயை என்ற ஜடப்பொருளோடு சம்பந்தம் கொண்டது . மறைத்தாலும் அருளாலும் ஜடப்பொருள்களுக்கில்லை உயிருக்கு மட்டுமே உரியன .
பிரம்மன் என்ற கர்த்தாவின் மூலம் இறைவன் படைக்கின்ற விஷேச விஷயங்கள் நான்கு . அவை தனு, கரண , புவன , போகங்கள் . தனு என்பது உடம்பையும் , கரணம் என்பது மனம் முதலான அந்தக் கரணங்களையும் , புவனம் என்பது உலகம் முதலான பிரபஞ்சத்தையும் , போக என்பது இந்த உலகத்தில் உயிர் நுகர்கின்ற நுகர்ச்சி பொருள்களையும் குறிக்கும் . உயிரினிடத்தில் அறிவு, இச்சை, தொழில்கள் ஏற்படுவதற்காக மாயையிலிருந்து உடல், கரணங்கள், வாழும் இடம் முதலியவற்றை உண்டாக்கிக் கொடுப்பதுதான் படைத்தல் எனப்படுகிறது .
தனு என்னும் உடம்பு மாயையின் தத்துவங்கள் கொண்டு படைக்கப்படுகின்றது . நீர்,நிலம்,கற்று, தீ,ஆகாயம் என்னும் பஞ்ச பூத தத்துவங்களை கொண்டும் அவற்றின் இருந்து விரிந்த கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் , தன்மாத்திரைகள் , தசை வாயுக்கள் ஆகியவற்றை கொண்டு உடம்பு என்கிற ஜடப்பொருளை படைக்கிறார் ஸ்ருஷ்டி கர்த்தா . உயிரானது உணர்ச்சியுற , இச்சை கொள்ள , தொழில் கொள்ள அந்த உடம்புக்குள் , மனம் முதலான காரணங்களை தோற்றுவிக்கிறார் , இந்த உயிர் உடம்போடு இயங்க தச வாயுக்களை உள்ளீடு செய்கிறார் இவையெல்லாம் சேர்ந்து தான் உயிர் பூரண படைப்புக்குள் வருகின்றது . இப்போது இந்த உடல் வந்து வீழவும் , வாழவும் இடம் வேண்டுமல்லவா அதனால் மாயையில் இருந்து பஞ்ச பூதங்களை கொண்டு உலகம் முதலான பிரபஞ்ச வெளியை ஸ்ரிஷ்டிக்கிறார் . இப்போது இந்த உடம்புடன் உயிர் உலகத்தோடு ஒட்ட , உலகத்தை நுகர, போகப்பொருள்களை உண்டு பண்ணிகிறார் . இவை எல்லாம் தோற்றுவிக்கப்படுவதே படைப்பு என்றாகிறது . இது எதுவும் தானாக படைக்கப்படுவதில்லை . மாறாக மாயையில் இருந்து உண்டுபண்ணிக் கொடுக்கப்படுகிறது என்பதே நிலையாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் . இதையெல்லாம் மாயையால் தானாகவும் செய்து கொள்ள முடியாது. உயிரும் தனக்கு தானே இதை செய்தும் கொள்ளாது . அதை செய்விக்க பேரறிவு கொண்ட இறைவனும் அவன் கருணையும் தேவைப்படுகின்றது . படைப்புத்தொழில் அவன் காருண்யத்தின் முதல் அடையாளம் . ஆனந்த திரு நடனத்தை ஆடும் நடராஜ மூர்த்தியின் கையில் விளங்கும் உடுக்கை என்னும் டமருதம் இந்தப் படைப்புத்தொழிலை அவனே செய்கிறான் என்பதன் அடையாளம் ஆகும் .
கட்டுரையாளர் :
ஆசிரியர் குழு
0 comments:
Post a Comment