சைவ சமயத்தின் முக்கிய விழா – ஆருத்ராதரிசனம்
சைவ சமயத்தின் முக்கிய விழா ஆருத்ராதரிசனம். ஆருத்ரா தரிசனம் என்றாலே சிதம்பரம் நடராசப் பெருமான் நினைவு வரும். திருவாதிரையில் நடராசரை வழிபட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது.
எவ்வாறு கார்த்திகை விளக்கீடு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் இடம் திருவண்ணாமலை என்று கருதப்படுகின்றதோ, அதுபோல மார்கழித் திருவாதிரை நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும் இடம் சிதம்பரமாகும்.
இச்சிதம்பர நடராசர் மீது குமரகுருபரர் பாடிய நூல்கள் சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பர செய்யுட் கோவை என்ற இரண்டாகும். இவ்விரு நூல்களின் துணை கொண்டு குமரகுருபரர் கண்ட நடனம் காண்போம்.
தில்லைக் காட்சி
குமரகுருபரர் சிவானுபவம் பெற்ற சைவ மெய்ஞ்ஞானி. தத்துவப் பேரறிஞர்; செந்தமிழ்ப் பற்று மிக்கவர்; இவற்றோடு கற்பனை வளமிக்க கவிஞருமாவார்.
அவர் துறவு மேற்கொள்ளும்முன், தன் ஞானாசிரியர் கட்டளைப்படி, காசித்தலயாத்திரை செல்வதற்கு முன், சில காலம் சிதம்பரவாசம் செய்ய வருகின்றார்.
சிதம்பரத்திற்குரிய வேறு பெயர்கள் தில்லை, புலியூர், புண்டரீகபுரம் முதலியன. பூக்களில் சிறந்தது தாமரைப் பூ என்று கூறப்படும்.
சிதம்பரம் வந்தடைந்த குமரகுருபரர் அந்நகரைத் தாமரை மலராகக் கற்பனை செய்கின்றார். அங்குள்ள பொன்மன்றம் தாமரைப் பொகுட்டாகவும், அதைச் சுற்றியுள்ள மதில்கள் இதழ்களாகவும், மேகங்கள் வண்டுகளாகவும் காட்சியளிக்கின்றன.
பொய்கைக் காட்சி
குமரகுருபரர் கோயிலை வந்தடைகின்றார். தாமரைப் பொய்கையைக் காண்கின்றார்.
அவருக்கு அது திருமால் பள்ளிகொண்ட திருப்பாற்கடலாகத் தோன்றுகின்றது. திருமால் நடராசப் பெருமானின் திருவடி காணத் தவங்கிடந்தார் என்பது புராண வரலாறு.
மேலும் தில்லையில் நடராசருக்கு முன் திருமால் கிடந்த கோலத்திலிருப்பதும் நினைவுகூரத்தக்கது.
பொன்னம்பலக் காட்சி
குமரகுருபரருக்கு பொன்னம்பலம் அழகிய தாமரை மலராகவும், அதில் ஆடும் திருமேனி தேனாகவும், உமையம்மையின் கண்கள் அத் தேனை உண்டு மகிழும் வண்டுகளாகவும் காட்சியளிக்கின்றன.
“உமையாட்கென்றும் தேனவன் காண்” என்ற திருநாவுக்கரசர் வாக்கும் இங்கு பொருந்துகின்றது.
நடராசர் திருவுருவக் காட்சி
குமரகுருபரர் நடராசப் பெருமானைத் தரிசிக்கின்றார். அவரது திருக்கோலம் “ஓம்” எழுத்தைப் போல் அமைந்துள்ளது.
“ஓமெனு மெழுத்தின்வடி வாய்நட நவிற்றுபுலி யூரன்”
என்று கூறுகின்றார்.
இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களைச் செய்கின்றார்.
- உடுக்கை ஏந்திய கரம் – படைத்தல்
- அபய கரம் – காத்தல்
- நெருப்பு ஏந்திய கரம் – அழித்தல்
- ஊன்றிய பாதம் – மறைத்தல்
- தூக்கிய பாதம் – அருளல்
காலைத் தூக்கியாடக் காரணம்
பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் காண இறைவன் நடனம் ஆடியதாக புராணம் கூறுகிறது.
பூமியைச் சுமக்கும் ஆதிசேடன் பாதிக்கப்படாதபடி, இறைவன் ஒரு காலைத் தூக்கி ஆடுவதாக குமரகுருபரர் நயமாக விளக்குகின்றார்.
மேலும், தேவர்கள் தம் முடிகளால் இறைவன் காலில் வணங்குவதால் புண் ஏற்படாதபடி ஒரு காலைத் தூக்கி நிற்பதாகவும் கூறுகின்றார்.
இடக்காலைத் தூக்கியாடக் காரணம்
திருமாலும் பிரம்மனும் தலைமை குறித்து வாதிட்டபோது சிவபெருமான் சோதி வடிவில் தோன்றினார்.
அடியும் முடியுமைக் காண முடியாமல் அவர்கள் தோல்வியுற்றனர்.
அந்த நினைவின் அடிப்படையில், தன் பாதத்தை எளிதில் காண முடியாதபடி சிவன் இடக்காலைத் தூக்கி ஆடுகின்றார் என்று குமரகுருபரர் கூறுகின்றார்.
திருவடிச் சிவப்பிற்குக் காரணம்
நடராசரின் திருவடிகள் சிவந்திருப்பதைக் கண்ட குமரகுருபரர் அதன் காரணத்தை யோசிக்கின்றார்.
ஆடுவதாலோ? உமையம்மை தொடுவதாலோ? என்று சிந்தித்து, இறுதியில் தேவர்கள் தம் தலைகளில் சூடும் காரணமாகவே அது சிவந்திருக்கிறது என முடிவு செய்கின்றார்.
ஆடல் பற்றிய வருணனை
இறைவன் ஆடும்போது:
- வண்டுகள் பாடுகின்றன
- மகுடங்கள் ஆடுகின்றன
- பிறை ஆடுகின்றது
- புலித்தோல் ஆடுகின்றது
அண்டங்களெல்லாம் அசைந்து உலகமே அதிர்கின்றது.
இத்தகைய பேராண்ட நடனத்திற்குச் சிற்றம்பலம் போதுமோ என்று குமரகுருபரர் வியக்கின்றார்.
அம்பிகை காண ஆடிய நடம்
நடராசப் பெருமான் சிவகாமியம்மை காணத் திருநடனம் ஆடுகின்றார்.
தாய் குழந்தைக்கு உணவின் பலனைப் பாலின் வழி அளிப்பதைப் போல, அம்பிகை அந்த நடனத்தின் பலனை உயிர்களுக்கு வழங்குகின்றாள் என்று குமரகுருபரர் அழகாக விளக்குகின்றார்.
நடனத்தைத் தரிசிப்பதன் பயன்
“சிதம்பரம் தரிசிக்க முக்தி” என்பது பழமொழி.
அதன்படி, நடராசர் தரிசனம் பிறவாமையை அளிக்கும்.
குமரகுருபரர், தாம் அம்பல தரிசனத்தால் பிறவா நெறி பெற்றதாகக் கூறுகின்றார்.
ஆனால், “வேதம் கூறுவது உண்மை அல்லையோ?” என்று பிறர் ஐயப்படாதபடி இறைவன் அருள் புரிய வேண்டுகின்றார்.
ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விட்டு, குஞ்சிதபாதத்தை சரணமாக கொண்டு முக்தி அடைய வேண்டுமெனக் குமரகுருபரர் அழைக்கின்றார்.
“கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா” என்ற உண்மையை உணர்த்தி, இறைவனை வணங்குவது வீடுபேற்றை விட உயர்ந்தது எனக் கூறுகின்றார்.
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற எண்ணத்தோடு, அம்பலக்கூத்தன் திருநடனத்தை நாம் அனைவரும் தரிசிக்க அழைக்கின்றார்.
கட்டுரையாளர்:
கோமதி சூரியமூர்த்தி
0 comments:
Post a Comment