துரியம் கடந்த சுடர் 10 – நிமிர்ந்தாடிய நெடுஞ்சுடர்
[1]
“The story of the weeping camel” – “கலுழும் ஒட்டகத்தின் கதை” என்றொரு ஆவணப்படம் இருக்கிறது. 2003 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதிற்கு சிறந்த ஆவணப் பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பெருமை இதற்கு உண்டு. தற்போது காணோடையில் (யூட்யூப்) காணக்கிடைக்கிறது. மங்கோலியாவில் ஒட்டகங்கள், ஆடுகள் மேய்த்து வாழும் நாடோடி குடும்பம் ஒன்றின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது. அவர்களது வாழ்க்கை முறை, அன்றாட நிகழ்வுகள், குழந்தை வளர்ப்பு, பொழுதுபோக்கு, உணவு, நம்பிக்கைகள், வழிபாடு, கலாச்சாரம், உறவுகள், வீடு, சுற்றிலும் இருக்கும் பரந்து விரிந்த நிலம் இவற்றின் கூடவே அவர்களுக்கும் அவர்கள் வளர்ப்பு விலங்குகளுக்குமான உறவு என விரிவாக நமக்கு, நாம் அறியாத ஒரு நிலத்தில், நமக்கு முற்றிலும் அயலான ஒரு வாழ்வியலை அறிமுகப்படுத்துகிறது இந்த ஆவணம். இதன் நிகழ்விடம் தெற்கு மங்கோலியாவின் தெற்கு கோபி மாகாணத்தில் வரைபடத்தில் கூட கண்டறியவியலாத ஓரிடம். கோபி உலகின் பெரிய குளிர் பாலைவனம். மங்கோலியா மற்றும் சீனாவின் பெரும்பகுதி இந்த பாலைவனம் தான். வெப்ப பாலைகளான நமது தார், சஹாரா போல இங்கும் மணல் வெளியும், குத்து புதர் செடிகளும் இருந்தாலும் வெகு தொலைவில் தெரியும் பனி படர்ந்த ‘குர்வன் சைகான்’ மலைத்தொடர்கள் இதன் நிலக்காட்சியை பிற பாலைகளில் இருந்து குளிர்பாலை என வேறுபடுத்துகிறுது.
நமது லடாக் பிராந்தியத்தில் இருக்கும் குளிர்ப்பாலையான நூப்ரா பள்ளத்தாக்கைப் போலவே இரு திமில்கள் கொண்ட பாக்டீரியன் வகை ஒட்டகங்களே இந்நிலத்தின் முக்கிய விலங்கு. பழுப்பு நிறத்தில் உடலெங்கும் அடர்ந்த முடிகளோடு இருக்கும் இந்த ஒட்டகங்கள் கோபி பாலை நில மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. அவர்களிடம் இந்த ஒட்டகங்களைப் பற்றிய பல தொன்மக் கதைகள் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று - அவர்களின் பன்னிரண்டு ராசிகள் விலங்குகளால் ஆனது. ஒவ்வொரு ராசிக்கட்டத்திற்கும் ஒரு விலங்கு. அந்த ராசிக் கட்டத்தில் ஒட்டகம் கிடையாது. எனவே ஒட்டகம் கடவுளிடம் முறையிட்டதாம். கடவுளும் சரி உனக்கு அந்த பன்னிரண்டு விலங்குகளில் இருந்து எலியின் காதுகள், எருதின் வலுவான முதுகு, புலியின் பாதங்கள், நாயின் விசுவாசம் என ஒவ்வொரு விலங்கின் சிறப்பம்சத்தையும் உனக்குத் தருகிறேன் என வரம் வழங்கினாராம். எனவே தான் ஒட்டகம் பாலையின் மிகச் சிறந்த, உயர்வான விலங்காகத் திகழ்கிறதாம் - பால், கூடாரங்கள் துவங்கி அவர்களின் அன்றாடத்தில் பலவிதங்களிலும் பயன்படும் கயிறுகள் மற்றும் கம்பளிக்குத் தேவையான முடி, பாலையில் வழியறிந்து பயணம் செய்வதற்கான வாகனம் என அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு முக்கியத் தருணத்திலும் உடனிருக்கும் ஒரு துணை இந்த ஒட்டகங்கள். எனவே அவர்களுக்கு இந்த ஒட்டகங்கள் வெறும் விலங்குகள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களில் ஒரு உறுப்பினர். எனவே அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை நடத்துவது போலவே இந்த ஒட்டகங்களையும் நடத்துகின்றனர். ஒட்டகங்கள் போலவே இந்த நாடோடி மக்களின் வாழ்வோடு பிணைந்த மற்றுமொரு விலங்கு ஆடுகள். ஆம், செம்மறி ஆடுகள் தான். அவையும் மேற்கண்ட பயன்பாடுகளின் இன்றியமையா மூலப்பொருட்களைத் தருபவையே. இந்த நிலத்தில் ஒரு குடும்பத்தின் செல்வம் என மதிப்பிடப்படுவது இந்த விலங்குகளே.
இந்த ஆவணப்படத்தின் துவக்கமே அவர்களுக்கும் ஒட்டகத்திற்குமான ஒரு பிணைப்பில் இருந்து தான் துவங்குகிறது. பாலைவனத்தில் ஒட்டகங்களுக்கான உணவும், நீரும் இருக்கும் இடங்களில் அவர்கள் கூடாரம் அமைத்து தங்கிக் கொள்கிறார்கள். காலத்திற்கு ஏற்றவாறு இடம் மாறுவது இவர்களின் வழக்கம். வருடத்தில் நான்கு முறை, கோடைக்காலம், இலையுதிர் காலம், பனிக்காலம் மற்றும் வசந்தகாலம். ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற நிலங்களில் தத்தமது விலங்குகளோடு சென்று தங்குவது அவர்கள் வழக்கம். எனவே தற்காலிக கூடாரங்கள். ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்த நிலத்திற்கு ஏற்றவாறு தகவமைக்கப்பட்ட கூடாரங்கள். இவை வட்டவடிவில் நல்ல இட வசதியோடு, குளிருக்கு அடக்கமாக அமைக்கப்படுகின்றன. வட்டமாக விரியும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட, ‘கானா’ என மங்கோலிய மொழியில் அழைக்கப்படும் மரச்சட்டகங்களை மண்ணில் நட்டு, கதவுகளோடு, அந்த சட்டகங்களை இணைக்கும் வலுவான, அதே சமயம் நெகிழ்வுத்தன்மை உடைய செம்மறி ஆடு மற்றும் ஒட்டக ரோமங்களை நன்கு அழுத்தி செய்யப்பட்ட ‘எஸ்கி’ எனப்படும் ஒருவகை கெட்டித் துணியால் உருவாக்கப்படும் இந்த கூடாரம் ‘கெர்’ என்று அழைக்கப்படும். இந்தியில் வீடு ‘கர்’ என்றே அழைக்கப்படும். இவை ஒரே மூத்த மொழி ஒன்றில் இருந்து கிளைத்து வளர்ந்திருக்கலாம். குளிரைத் தடுத்து வீட்டில் உள்ளே இருக்கும் வெப்பத்தை வெளியே பரவ விடாமல் தடுப்பதில் இந்த ‘எஸ்கி’ பெரும்பங்காற்றுகிறது. இதை காற்று, மணல்புயல் போன்றவற்றில் இருந்து காத்து நிற்க அவர்கள் நவீன கேன்வாஸ்களை பயன்படுத்துகிறார்கள். இந்த ‘கெர்’ அமைப்பின் கூரையில் ‘தூனோ’ என்றொரு மைய வளையம் இருக்கும். இந்த வளையம் தனியாக மூடவும், திறக்கவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த திறப்பு மட்டுமே அவர்களின் கூடாரத்திற்குள் வானம் வரும் வழி. வானம் அவர்கள் வாழ்வியலில் குறிப்பாக சமயம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்களில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. நாடோடிகளின் பொதுவான தன்மையே வானத்தின் கீழ் தங்குவது தான். எனவே வான் வரும் வழி என்பது அவர்களுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. எனவே தான் அதற்கென அவர்கள் மொழியில் ஒரு தனிப் பெயர் – ‘தூனோ’ - இருக்கிறது. வானம் அவர்கள் மொழியில் ‘தெங்க்ரி' என்றழைக்கப்படுகிறது. நாடோடிகள் என்றாலும் அவர்களிடம் நவீனம் வந்து தீண்டாமல் இல்லை. வானொலி, தொலைக்காட்சி போன்றவை அவர்களையும் சென்று தொட்டிருக்கின்றன. மூத்தவர்கள் தொலைக்காட்சியில் ஆழ்ந்திருக்கும் இளையோரை பார்த்து ‘ஆடியின் காட்சிகளில் நாட்களை இழக்காதீர்' என அங்கலாய்ப்பதும் நிகழ்கின்றன. வெகுதொலைவில் இருக்கும் சற்றே பெரிய, நிரந்தரமான குடியிருப்பு பகுதிகளே அந்த ஊரின் நகரங்கள். அங்கே அவ்வப்போது சென்று தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்கிறார்கள். பணம் இருக்கிறது. ஆனால் அதன் மதிப்பு அதைக் கொண்டு எத்தனை ஆடுகளை வாங்க முடியும் என்பதைக் கொண்டே அளவிடப்படுகிறது. இந்த ஆவணப்படம் நிகழும் காலம் வசந்த காலம். படத்தில் எங்கும் தெரியும் பழுப்பு நிற செடிகளைக் கண்டால் அது வசந்தம் தானா என ஐயம் தோன்றுவது இயல்பு தான். வசந்த காலம் அவர்களுக்கு முக்கியமானது. ஏனெனில் இது தான் அவர்களது விலங்குகளின் இனப்பெருக்க காலம். புது வரவுகள் வந்து அவர்களது செழிப்பை மேம்படுத்தும் காலம். இங்கே அந்த படம் காட்டும் குடும்பத்தில் ஒரு வயதான தம்பதியர், இளவயது தம்பதியினர் மற்றும் அவர்களது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் காட்டப்படுகின்றனர். அவர்களின் இரு ஒட்டகங்கள் கருவுற்று நிறை மாதமாக இருக்கின்றன. மொத்த குடும்பமும் புது வரவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றது. ஒரு ஒட்டகம் மிக எளிதாக தன் குட்டியை ஈன்று விடுகிறது. அதை வந்து சொல்லும் தன் மகனிடம் அந்த குடும்பத்தின் மூத்தவரான தந்தை கேட்கும் கேள்வி, ‘அதை அந்த தாய் ஏற்றுக் கொண்டுவிட்டதா?’. உதைத்து எழும்பும் குட்டி நேரே சென்று தாயின் மடியை நக்க, தாய் மகிழ்வோடு அதற்கு பாலூட்ட துவங்குகிறது. தன் குட்டியை நக்கியும், முகர்ந்தும் முழுமையாக தனதாக்கிக் கொள்கிறாள் அந்த ஒட்டகத் தாய். ஆனால் அந்த இரண்டாவது ஒட்டகம் இன்னும் குட்டியை ஈனவில்லை. குடும்பம் கவலை கொள்கிறது. ஒட்டகம் வலியுடன் இருக்கிறது. அதன் உடலில் தோன்றும் மெய்ப்பாடுகளை வைத்துப் பார்க்கையில் அது எப்போதோ ஈன்றிருக்க வேண்டும். ஆனாலும் அது இன்னும் நிகழவில்லை. இரு நாட்கள் நீளும் பிரசவ வேதனையின் முடிவில் அந்த குடும்பத்தின் மருமகளான அந்த இளையவள் தாயின் கருவழியில் தலைமாறி வெளிவரத் துவங்கிய அந்த ஒட்டகக் குட்டியின் கால்களைப் பற்றி வலுவாக இழுக்கிறாள். ஆனாலும் குட்டி முழுமையாக வரவில்லை. அதன் காரணமும் அவர்களுக்குப் புரிகிறது. அது மிகப் பெரிய குட்டி. மேலும் தலை முதலில் வெளி வருவதற்குப் பதிலாக, உடலின் பிற்பகுதியை வெளித்தள்ளியிருக்கிறது. இருந்தும் அவர்கள் விடாமுயற்சியோடு இழுத்து அந்த குட்டியை பிரவிக்கிறார்கள். அந்த குட்டி தாயைப் போல பழுப்பு நிறம் கொண்டிருக்கவில்லை. வெள்ளை நிறம். தலை கடைசியில் வந்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலை சமாளித்து அந்த குட்டி மெதுவாக எழுந்து நிற்கிறது. நேரே தன் தாயின் மடிக்குச் செல்கிறது அந்த குட்டி. ஆனால் அந்த தாய் அந்த குட்டியைத் தள்ளி விடுகிறது. குட்டி மீண்டும் மீண்டும் முயல்கிறது. ஆனால் தாய் அதை தள்ளி விட்டு ஓடிவிடுகிறது. அந்த குட்டிக்கு தாயைத் தொடர்ந்து ஓடும் அளவிற்கு தெம்பு இல்லை. அன்று இரவு அந்த குடும்பத்தினர் கவலையோடு இதைப் பற்றி உணவுடன் பேசிக் கொள்கின்றனர். அக்குடும்பத்தின் மூத்தவர் மீண்டும், ‘அந்த தாய் குட்டியை ஏற்றுக் கொள்ள வேண்டும்' எனக் கூறுகிறார். அவர்கள் மறுநாள் தாயையும், குட்டியையும் சேர்த்து வைக்க முயகின்றனர். நிலைமை என்னவோ ‘பிள்ளை மனம் பித்து, பெத்த மனம் கல்லு' என்று தான் இருக்கிறது. பாலே இல்லாமல் தவிக்கும் குட்டிக்கு, செம்மறி ஆட்டு கிடாவின் கொம்பைக் குடைந்து உருவாக்கிய ஒரு இயற்கையான புட்டியில் ஒட்டகத்தின் பாலைக் கறந்து அந்த குட்டியின் வாயில் வைத்து குடிக்க வைக்கின்றனர். ஆனாலும் குட்டி தாயை நினைத்து ஏங்குகிறது. அடுத்தடுத்த நாட்களிலும் இதே நிலை தான். இந்நிலையில் அந்த நாடோடிக் குடியிருப்பில் இருப்பவர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தும் வழிபாட்டு நாள் வருகிறது. மங்கோலிய நாடோடிகள் கோவிலை உருவாக்குவதில்லை. நிலையாக ஓரிடத்தில் தங்காதவர்களின் தெய்வம் என்னவாக இருக்கும்? வழிபாடு என்னவாக இருக்கும்?[2]
மங்கோலிய நாடோடிகள் இன்றும் பூசாரி வழிபாட்டில் தான் இருக்கிறார்கள். ஆம், இன்றைக்கு கிடைக்கும் மிகத் தொன்மையான, 51000 ஆண்டுகள் பழைய இந்தோனேசியாவின் சுலாவேசி தீவு குகை ஓவியத்தில் காணப்பட்ட மானுடத்தின் ஆகப் பழைய வழிபாட்டு முறையான அதே பூசாரி வழிபாடு தான். பூசாரி வழிபாடு அல்லது ஷாமனிச வழிபாடு என்பது இயற்கையில் திகழும் பல சக்திகளை வழிபடுவது. தெய்வங்கள் பூசாரியின் உடல் வழியாக தங்களை வெளிப்படுத்தும். தெய்வங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த காலத்தில், தெய்வங்களுக்கு உருவம் கொடுக்கப்படாமல் இருந்த காலத்தில், தெய்வம் என்ற ஒன்றே தத்துவார்த்தமாக, முழுமையாக உருவாகாது இருந்த காலத்தில் உண்டானது தான் இந்த பூசாரி வழிபாடு. இதன் வேர்களை நாம் முன்பே விரிவாகக் கண்டுள்ளோம். அந்த பதிவில் கண்டவாறு மானுடம் தன் வேர்களை ஒரு போதும் முற்றிலுமாகத் துண்டித்துச் செல்வதில்லை. சில பல மாற்றங்களுடன் இந்த உலகின் ஏதாவது ஒரு மூலையில் அது நீடித்துக் கொண்டு தான் இருக்கும். மங்கோலிய நாடோடிகளின் ஆன்மிக நம்பிக்கை ‘தெங்க்ரிசம்’ எனப்படும். இதன் முதன்மை தெய்வம் தெங்க்ரி. இன்னும் குறிப்பாக ‘கோக் தெங்க்ரி'. இதன் பொருள் நித்திய நீல வானம். உருவமற்ற, எல்லையற்ற, அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சப் பேராற்றலே தெங்க்ரி. அதன் கண்கண்ட வடிவே வானம். வானம் எப்படி பூமியை எவ்விதத் தடையும் இன்றி தழுவி, மூடியிருக்கிறதோ அதே போல இந்த பிரபஞ்சம் முழுமையும் வியாபித்து, அதன் ஒழுங்கை நிர்வகிப்பதே தெங்க்ரி. இது ஒரு வகை கருத்து முதல் வாத தரிசனம். நம் இந்திய மரபின் பார்வையில் பிரகிருதி, புருஷன் ஆகிய தத்துவங்களுக்கு இணையானவை. ஈஸ்வர சாங்கிய தரிசனத்துக்கு அருகில் வருவது தெங்க்ரிசம். இந்த தரிசனத்தில் வானம் தந்தை வடிவாகவும், பூமி தாய் வடிவாகவும் பார்க்கப்படுகிறது. இன்று உலகில் இருக்கும் அனைத்து கடவுள் முதல் மதங்கள்’, நம்பிக்கைகள், சமயங்கள் அனைத்திலும் அதனதன் கடவுளர்கள் வானில் இருப்பதாகவும், முழு முதல் கடவுள் ஆணாக, குறிப்பாக தந்தையாக இருப்பதாகவும் தான் இருக்கிறது அல்லவா? நம் பாரதத்தின் ஆறு முதன்மை சமயங்களான சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம் மற்றும் சௌரம் ஆகியவற்றிலும் சக்தி முதன்மையான சாக்தம் தவிர்த்து பிற ஐந்து சமயங்களின் முதன்மை தெய்வங்கள் ஆண்களே. நமக்கும் சிவனே முதல் தெய்வம். சிவம் என்பது அதற்கும் மேற்பட்ட உருவற்ற, அனைத்தறிந்த, அனைத்திலங்கும் சிவத்தன்மையின் பெயராகச் சொன்னாலும், சிவனே நம் திருமுறைகள் வழிபட்ட முதல் கடவுள். ஏன் இப்படி? நவீன அறிவுஜீவிகள் இந்து தர்மம் ஒரு ஆணாதிக்க, பெண்ணடிமை சமூகத்தின் மதம் என ஒரே போடகப் போட்டுவிடுவார்கள். பிற சமயங்களிலும் அப்படித் தானே என்றால், அதற்கான பதில் தெளிவாக வருவதில்லை. ஆனால் இங்கே நாம் கண்டு கொண்டிருக்கும் நாடோடிகளின் தரிசனமான தெங்க்ரிசத்திலும் முதன்மைத் தெய்வமான தெங்க்ரி தந்தை வடிவாக, ஆணாகத் தான் கருதப்படுகிறது. அது ஏன்? அதைவிட முதன்மையான கேள்வி ஏன் இத்தொடரில் நாடோடி மதமான தெங்க்ரிசத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான், இல்லையா? முதன்மைக் காரணம் அந்த தரிசனத்தின் தொன்மை மற்றும் அதன் அறுபடா தொடர்ச்சி. தெங்க்ரிசம் மத்திய ஆசியாவின் ஸ்டெப்பே புல்வெளிகள் துவங்கி கோபி பாலை வரை பரந்து விரிந்திருந்த ஒரு பெரு நிலத்தின் நாடோடி வாழ்வியலில் கிளைத்து வளர்ந்த ஒரு தரிசனம். நாம் முன்பே பார்த்தவாறு மானுடம் தன் பரிணாமத்தின் பெரும்பகுதி காலங்களில் தன் உணவிற்கென சார்ந்திருந்தது இரண்டு வழிகள் தான். ஒன்று வேட்டை, இரண்டாவது சேகரித்தல். வேட்டையில் மானுடம் உண்ணத் தகுந்த விலங்குகளை குழுவாக அல்லது தனித்து வேட்டையாடி கொன்று உண்டது. இரண்டாவது வழியில் காடுகளில் கிடைக்கும் தாவர உணவுகளைத் தேடித் தேடி சேகரித்து உண்டது. வேட்டை பொதுவாக மழைப் பொழிவு திகழும் காடுகளில், விலங்குகள் நிறைந்த கானகங்களில் நிகழ்ந்த ஒன்று. ஆனால் அத்தகைய வளமான காடுகள் மிகச்சிறிய நிலப்பரப்புகளே இருந்தன. பெரும்பகுதி மழை குறைவான புல்வெளிகள் தாம். காரணம் மிக மிக நீண்டிருந்த உறைபனிக் காலம். எனவே மானுடம் ஓரிடத்தில் தங்கி வாழ்ந்திருந்தது என்பது கிட்டத்தட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இல்லாமலேயே இருந்தது. நிரந்தரமாக உணவு சேகரிப்புக்கான சாத்தியங்கள், அதன் தொடர்ச்சியான வேளாண்மை மட்டுமே மானுடத்தை ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்கி வைக்கத் தேவையான காரணிகள். அந்த காரணிகள் திகழ்ந்த இடங்கள் மிக மிக குறைவே. எனவே மானுடப் பரிணாமத்தின் பெரும்பகுதி மானுடம் நாடோடிகளாக, பருவநிலை மற்றும் உணவின் இருப்பு ஆகியவற்றைப் பொறுத்து இடம் மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. மெல்ல மெல்ல மானுடம் தன் பிற தேவைகளுக்கு என விலங்குகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை வந்த போது இயல்பாக காட்டு விலங்குகளை வளர்ப்பு விலங்குகளாக்குதல் நிகழ்ந்தது. அதன் நீட்சியாக மேய்ச்சல் தொழிலும், மேய்ச்சல் சமூக வாழ்வியலும் உருவாகி வந்தன. ஒரு வகையில் காட்டில் தேடிச் சென்று விலங்குகளை வேட்டையாடுவதற்கு பதிலாக மானுடம் தங்கள் கூடவே அவ்விலங்குகளை வளர்த்தி, பயன்படுத்திக் கொள்ளத் துவங்கியது எனலாம். இதைப் போன்று தான் கானகத்தில் தேவையான தாவர உணவுகளைத் தேடித் தேடி சேகரிப்பதற்குப் பதில் மானுடம் அவற்றை தாமே வளர்த்திக் கொள்ளலாம் என கண்டுகொண்ட போது உருவானதே வேளாண்மை. அப்படியாக வேட்டையின் நீட்சியாக மேய்ச்சல் மற்றும் சேகரிப்பின் நீட்சியாக வேளாண்மை சமூகவியல் உருவாகி வந்தது. இவற்றில் ஒரே இடத்தில் நிலைத்து வாழ்ந்தவை வேளாண்மை சமூகங்களே. மேய்ச்சல் சமூகங்கள் நாடோடி வாழ்வியலையே முதன்மையாகக் கொண்டன. நிலைத்து ஓரிடத்தில் வாழத் தேவையான மேற்கூறிய காரணிகள் திகழ்ந்த வெகு சில இடங்களில் ஒன்று தான் நம் பாரதம், குறிப்பாக அதன் தென்பகுதியான, தற்போதைய தமிழ் நிலம். அங்கே நிகழ்ந்த மானுடப் பரிணாமத்தின் தொடர்ச்சியையும், அதன் ஆன்மிகத்தையும், அதன் உச்சமாக அது கண்டடைந்த சிவலிங்கம் என்னும் குறியையும், அதன் பொருளையும் முந்தைய பதிவுகளில் கண்டோம். ஆதிகால சேகரிப்பின் நீட்சியாக வேளாண்மை தோன்றி மானுடத் தொடர்ச்சி முழுமையாக, பல லட்சம் வருடங்கள் நிகழ்ந்த, மானுடம் தங்கி வாழ்ந்த ஒரு நிலத்தின் ஆதி ஆன்மிகத்திற்கும், வேட்டையின் நீட்சியான மேய்ச்சல் சமூகவியலில், நாடோடி வாழ்வியல் நிகழ்ந்த ஒரு பரந்து விரிந்த நிலத்தின் ஆதி ஆன்மிகத்திற்கும் இடையேயான ஒற்றுமைகள் உள்ளனவா என்பதை ஆராயவே தெங்க்ரிசத்தை விரிவாக காண்கிறோம்.
[3]
இப்போது அந்த முதல் கேள்விக்கு வருவோம். கடவுள் அல்லது முழு முதல் இறை ஏன் பெரும்பாலும் ஆண்பாலாக, தந்தையாக இருக்கிறது? இந்த கேள்வியை நாம் இதற்கு முன்பும் கண்டிருக்கிறோம். இதற்கான பதில் நாம் இதற்கு முன் பார்த்த மானுடம் இறைத்தன்மையை உணர்ந்த தருணங்களில் ஒன்றான பிறப்பு என்பதில் இருக்கிறது. அந்த ஆதி மானுட முதாதை ‘தான்' என தன்னை உணர்ந்த அந்த தருணமே மானுடம் கண்டடைந்த முதல் இறையனுபவம் என்பதை முன்பே கண்டோம். அந்த தருணம் மானுடத்திற்கு கொடுத்தது ஒரு பெரும் பரவசம். கிட்டத்தட்ட அதே பரவசத்திற்கு இணையானது தான் மானுடம் பிறப்பு என்பதன் ரகசியத்தை அறிந்து கொண்ட அந்த தருணத்தில் உணர்ந்தது. எனவே தான் பிறப்பு என்பதை இரண்டாவது இறையனுபவத் தருணமாக நாம் முன்வைக்கிறோம். அந்த தருணம் மானுடத்திற்கு ஒன்றை சொல்லியது. ஆண், பெண் என இரு வகைமைகள் அவர்களுக்கு இருக்கிறது என்பதை. அது ஒரு அறிதல். ‘நான்’ என உணர்ந்த அந்த தன்னுணர்வு மேலும் கூர் கொண்டு, இரண்டாகப் பிரிந்த ஒரு தருணம். ஆணிடம் இருந்து பெண்ணுக்குள் தரப்படும் ஏதோ ஒன்று அவர்களைப் போன்ற ஒரு சிறிய உயிரென சில காலத்தில் வெளிப்படுவதன் வியப்புணர்வே அந்த பரவசம். அந்த அறிதல் மானுடத்திற்குத் தந்தது ஒரு சிந்தனைக் கருவி. ஒன்று என்பது இரண்டாகப் பிரிந்து பல்கிப் பெருகும் என்ற ஒரு சிந்தனை. எனவே மானுடம் இருமையை கண்டடையத் துவங்கியது. பிறப்பு என்பதை அறிந்த தருணத்திலேயே இறப்பு என்பதையும் அது அறிந்து கொள்ளத் துவங்கியது. ஆக்கத்தை அறிந்த அத்தருணத்திலேயே அழிவு என்பதையும் அறிந்து கொண்டது. ஆக்கத்தை அதிகரிக்கும் வழிகளைக் கண்டடைவதன் மூலம் அழிவைக் குறைத்துக் கொள்வதன் சாத்தியங்களைக் கண்டடையத் துவங்கியது. இந்த சாத்தியங்களே மானுடத்தின் சமூக, பொருளாதார, அறிவியல் முன்னேற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன, இன்று வரை. மானுடம் தன்னைச் சூழ்ந்திருந்த இயற்கையை அவதானித்து கொண்டிருந்தது. இரவில் வானத்தை ஆராய்ந்தது. இயற்கையின் தோற்றம், மறைவு, மாற்றங்கள், அவற்றின் காரணங்கள், காரணிகள் போன்றவற்றை அறியத் துவங்கியது. அந்த அறிதலின் தொடர்ச்சியான தான் வாழும் இடமான பூமி, ஆகாயம், அதில் இருக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள், சூரியன், சந்திரன் இவற்றின் நகர்வுகள், உதயம், அந்திமம் ஆகியவை புவியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என நீண்டது அந்த அறிதல்கள். இவை நம் சிந்திக்கத் தெரிந்த மானுட இனமான ஹோமோ சேபியன்களுக்கும் முந்தைய மானுட இனமான நிமிர்ந்த மானுடமான ஹோமோ எரக்டஸ்கள் காலத்திலேயே, குறைந்தது பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பே நிகழத்துவங்கியிருக்கும். வியப்படையத் தேவையில்லை. மானுடத்தின் முதன்மையறிதல் என்பது வானியல் தான். இதைப் பற்றி இன்னொரு அத்தியாயத்தில் மிக விரிவாகக் காணலாம். அந்த அறிதல்கள் மானுடத்திற்கு முதன்மையாக ஒரு ஒப்புமையைக் காட்டியிருக்கும். வானில் இருந்து வரும் மழை எப்படி தான் வாழும் நிலத்தில் தனக்கான உணவைத் தோற்றுவிக்கிறது என்பதே மானுடம் கண்ட முதன்மையான வானியல் அறிதல். மழை மேய்ச்சல், வேளாண்மை இரண்டிற்குமே இன்றியமையாதது. இவை உருவாகும் முன்பே இருந்த வேட்டை, சேகரம் இரண்டிற்குமே அதே மழை தேவை என்பதை மானுடம் கண்டுகொண்டிருக்கும். ஏனெனில் மழை, அதன் பிறகான புவியின் புல், தானியங்கள், காய், கனிகள் உருவாக்கும் தாவரங்களின் வளர்ச்சி, அவற்றை உண்டு வாழும் சிறு விலங்குகள், அவற்றை சார்ந்த்து இருக்கும் தாம் என மானுடம் ஒரு முழுமையான இயற்கை சங்கிலியை உருவகித்து இருக்கும். இன்னும் சொல்லப் போனால் மழையே, மானுடம் வானைச் சார்ந்து தான் தாம் இருக்கிறோம் என்ற கருத்தை முதன்முதலில் மானுடத்திற்கு அறிவித்திருக்கும். மழை எவ்வகையிலும் இந்த பூமியில் இருக்கும் ஒன்றால் நிகழவில்லை என்பதே அந்த ஆதி மூதாதையின் அறிதலாக இருந்திருக்கும். மழை இங்குள்ள ஒன்று அல்ல, அது வெளியில் இருந்து வருவது என்றே அது எண்ணியிருக்கும். இயல்பாகவே அதை வெளியில் இருந்து தனக்குள் வந்து சேர்ந்த அந்த தன்னுணர்வோடு, அந்த ஆதி இறையனுபவத்தோடு இணைத்து யோசித்திருக்கும். பிறப்பை அறிந்த கணம் அந்த இயற்கை சங்கிலி மானுடத்தின் சிந்தனையில் முழுமையடைந்திருக்கும். அதாவது மழைத் துளி ஆகாயத்தில் இருந்து வந்தது. அது எவ்வாறோ பூமியால் புல்லாக, பூடாக, மரமாக, விலங்குகளாக பிறப்பிக்கப்படுகிறது எனக் கண்டடைந்ததே மானுடம் அறிந்த முதல் கவித்துவ உச்சமாக இருந்திருக்கலாம். இன்றும் கூட பாரம்பரியமான விவசாயிகள், உழுதிட்ட நிலத்தில் மண்புழுக்கள் வெளிக்கொண்டு வரும் செம்மண், மற்றும் அந்நிலத்தில் மழை பெய்து செஞ்சேறு நொதித்து வருவதை நிலமகளின் பூப்பெய்தலாகவே சுட்டுவது இந்த அறிதலின் நீட்சியே. அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற சக்தி பீடமான, இன்றும் தாந்த்ரீகர்கள் முதன்மையாக செயலூக்க நிலையில் இருக்கும் காமாக்யா அன்னை ஆலயத்தில், எல்லா வருடங்களிலும் ஜூன் மாத கடைசியில் மிகச் சரியாக மூன்று நாட்கள் கோவிலின் அருகே ஓடும் பிரம்மபுத்திரா நதி செந்நிறமாக மாறும். அதை அன்னையின் விலக்கு நாளாகக் கருதி அம்மூன்று நாட்களும் ஆலயம் மூடப்பட்டிருக்கும். ஆலயம் மூடப்பட்டிருந்தாலும் இது விழவாகக் கொண்டாடப்படுகிறது. ஆம், காமாக்யா ஆலயத்தில் புகழ்பெற்ற அம்புபாச்சி விழா தான் இது. இங்கும் ஒரு இயற்கை நிகழ்வு பெண்ணின் உயிர் சக்தியோடு இணைத்தே வணங்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது. இதுவும் அந்த தொல்கால மானுட மூதாதையின் அறிதலின் நீட்சியே. மெல்ல மெல்ல அந்த அறிதலை மானுடம் விரிவாக்கிக் கொள்ளத் துவங்கியிருக்கும். கண்ணுக்குத் தெரியாத ஒரு சரடால் இந்த பூமியும், ஆகாயமும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அகல் விசும்பில் நிகழும் ஏதோ ஒன்று இந்த பூமியில் தன் செல்வாக்கைச் செலுத்துகிறது. அந்த செல்வாக்கு தன்னையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அந்த விசும்பில் இருந்து வரும் ஒரு துளி, இப்புவியன்னையின் கருவில் நுழைந்து புத்துயிர்களை பிறப்பிக்கிறது என அந்த அறிதலை தன் கவித்துவ சிந்தனையால் முழுமையாக்கி இருக்கும் மானுடம். இந்த சிந்தனை முழுமையை மிகத் தெளிவாகச் சுட்டி நிற்கும் குறள் என பின்வருவதைச் சொல்லலாம். “விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது” நம் பாரத நிலத்தின் சிந்தனை தொடர்ச்சி தான் எத்தனை தொன்மையானது!!! இந்த சிந்தனை மிகத் தெளிவாகவே ஒன்றைச் சுட்டுகிறது. பூமி அன்னை எனில், அவளில் இருந்து உயிர் தோற்றுவிக்கும் துளியைத் தருவதால் விசும்பு, ஆகாயம், வானம் தந்தை என்பது தான் அது. இது மங்கோலிய நாடோடிகளின் தரிசனமான தெங்க்ரிசத்தின் உச்ச தெய்வமான ‘கோக் தெங்க்ரி – நித்திய நீல வானம்’ தந்தையாக கருதப்படுவதன் மூலம் உறுதியாகிறது. ஆதி மானுடம் தன் தேவைகளுக்காக பூமியைத் தான் நம்பியிருந்தது. பூமி அவற்றை பிறப்பிக்க வானமே காரணம். எனவே பூமியின் உயிர்ப்புக்கு தாம் வேண்டுவது என்றால் அது வானத்திடம் தான். ஏற்கனவே இரவுகளில், ஓய்ந்திருந்த நேரங்களில் மானுடம் மிக அதிகமாக அவதானித்துக் கொண்டிருந்ததும் வானத்தைத் தான். எனவே இயல்பாக வானம் வேண்டத்தகுந்த ஒன்றாக மாறியது. இதுவே பெரும்பாலான இறைவர்கள் ஆணாகவும், வன்பாலை, கொடுங்குளிர் போன்ற உடல் வலியால் அனுதினங்களையும் கடந்தாக வேண்டிய இடங்களில் இருந்த மானுடத்தில் இறை ஒரு தலைவனாக, தந்தை வடிவாகவும் பரிணமித்ததன் காரணம். இயல்பாக வானம் அந்த இறைவர்கள் இருக்கும் இடமாகவும் மாறியது. மானுடத்திற்கே உரித்தான நிமிர்வு, பூமியில் காலும், தலை வானை நோக்கியும் இருந்த நிலையே மானுடத்தின் முதல் இறை வடிவையும் தீர்மானித்தது. லிங்க வடிவம், அதிலும் குறிப்பாக சுயம்பு லிங்கம் ஏன் அத்தகைய மதிப்புக்குரிய வடிவைப் பெற்றது என்பதை நாம் விரிவாக முன்பே பார்த்திருக்கிறோம். வழிபாடு, இறை வடிவங்கள், குறியீடுகள் அனைத்தும் இயல்பாக வானை நோக்கியே சென்றன. வேள்விகளில் அனல் முதன்மையான இடத்தைப் பெற்றதும் அவ்வாறே. இப்புவியில், மண்ணில் அமைந்த வேள்விக் குண்டத்தில், மண்ணில் தோன்றிய மரங்களின் விறகில், நெய் போன்ற விலங்கு கொழுப்புகளின் உதவியால், தர்ப்பையில் பற்றி, கொழுந்து விட்டாடும் அந்த அழல், இப்புவியில் உயிரென மாறி நிறைந்திருக்கும் அனைத்தின் சாரமென விசும்பில் இருந்து வந்த அந்த துளியால், பூமியில் உருவான உயிர்களின் சாரத்தை, புல்லின் சாரமென அது தரும் தானியம், பசுவின் சாரமென அது தரும் பால், நெய், மலர்களின் சாரமென அவற்றின் தேன், உயிர்களின் சாரமென அவற்றை பலியிட்டு அதில் இருந்து வெளிவரும் ஆன்மா என மானுடர் அளிக்கும் அவியைப் பெற்று, அதை செரித்து, தான் பெற்ற அனைத்து அவியின் சாரத்தை மட்டும், எது விசும்பில் இருந்து வந்ததோ அதே சாரத்தை மட்டும், மீண்டும் வானுக்கு எடுத்துச் செல்லும் அழல், அவியழல், வஹ்னி. அந்த அவியழல் நம் மரபில் இத்தனை பெரிய இடத்தைப் பெற்றது இப்படித் தான். இந்த அவியழல் என்பது ஆதிகாலத்திலேயே இருந்திருக்கிறது எனச் சொல்லவில்லை. மானுடம் பிறப்புக்கு இணையாக அறிந்து கொள்ள முற்பட்டது இறப்பையும் கூடத்தான். கானகங்களில் தோன்றும் காட்டுத்தீயே அவர்களுக்கு உயிர்களின் சாரமென அந்த உயிர் வாழும் உடலில் இருந்து இறப்பின் போது ஏதோ ஒன்று பிரிந்து சென்று, வானேகி, மீண்டும் ஒரு சாரமென அமைந்த ஒரு துளியாய் புவிக்கு வந்து புத்துயிர்களாகி இருக்கின்றன என்ற ஒரு பார்வையைத் தந்திருக்கலாம். அந்த சிந்தனை மிக சிறிய ஒரு நலுங்கலாக ஏதோ ஒரு மூதாதையில் துவங்கி, தலைமுறை தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு மெல்ல மெல்ல முழுமையடைந்திருக்கலாம். முழுமையடைந்த அந்த கணம், அந்த தரிசனத்தை குறியீட்டு வடிவில் செய்து பார்க்கத் துவங்கியிருக்கும் மானுடம். அப்படித் தான் நம் மரபில் வேள்விகள் வந்தன. மேற்கூறிய செயல்கள் நடந்தேற சில லட்சம் வருடங்கள், பற்பல தலைமுறைகள் தேவைப்பட்டிருக்கும். இவற்றின் அடிப்படையான ஒரே விஷயம், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் சிந்தனைகள். இதையே நாம் மீண்டும் மீண்டும் அறுபடா சிந்தனைத் தொடர்ச்சி எனக் கூறிவருகிறோம். இப்புவியில் வேறு எந்த நிலத்திற்கும் இத்தனை லட்சம் வருடங்களாக, மானுடத்துக்கு உகந்த காலநிலைகளும், பருவநிலைகளும் வாய்த்திருக்கவில்லை, நம் பாரதத்தைத் தவிர்த்து. எனவே தான் இங்கே இந்த சிந்தனைகளின் நீட்சியை, தொடர்ச்சியை நாம் இன்றும் கண்டுவருகிறோம். அழல் வானை நோக்கிச் செல்கிறது என்பதால் தான் அது இறை வழிபாட்டில் முதன்மையிடம் பெற்றது என்பதை எவ்விதம் உறுதி செய்யலாம்? வானை நோக்கிச் செல்லும் குறியீடு, அழலுக்கு முன்பே, வேறு ஏதேனும் ஒரு வடிவில் இருந்ததா என்பதைக் காண்பதே எளிமையான ஒரு வழி. சென்ற பதிவில் பார்த்தவாறு, சிவலிங்கத்தில் லிங்கமென நிமிர்ந்து நின்றிருக்கும் ஒன்று மண்ணுக்கும், விண்ணுக்குமான ஒரு இணைப்பே. சிவலிங்கம் என்பதே இந்த விசும்பு தந்தையையும், பூமித் தாயையும் ஒரே வடிவில் இணைத்த குறியீடே. சென்ற பதிவில் கண்ட ஸ்லோகம் லிங்கம் ஆகாஷ மூர்த்திம் – அந்த தூண் விசும்பின் வடிவு என்றும், பீடம் யஸ்ய தரித்ரி - பூமியே அதன் பீடம் என்று மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது. இது மண்ணில் இருந்து எழுந்து நிற்கும் ஒரு சுயம்பு லிங்கத்தின் நேரடியான விவரணம் தான் இல்லையா!! இத்தனை பெரிய ஒரு தரிசனம் நம் கண் முன்பே நின்று கொண்டிருந்திருக்கிறது!! லிங்கத்தின் சிற்ப சாத்திர குறிப்புகளிலும், நிமிர்ந்து நின்றிருப்பதை (ஆண்)குறி என்றும், கிடையாக இருப்பதை ‘யோனி’ என்றும் தான் தரப்பட்டிருக்கின்றன. ஒரு தரிசனம், கவித்துவ உச்சம் எத்தனை எத்தனை வடிவுகளாக மானுடத்தால் வளர்த்து எடுக்கப்பட்டுள்ளது. மானுடத்தை இவ்வாறு சிந்திக்க வைத்ததே அந்த ஆதி, சுயம்பு லிங்கம் தானோ?!! எனவே தான் அத்தனை ஆதி அறிதல்களையும் நம் பாரதம் சிவனிடமே கொண்டு சேர்த்திருக்கிறது. அவற்றை விரிவாக வரும் பதிவுகளில் காண்போம். இந்த சிந்தனை, வானுக்கும், மண்ணுக்குமான இணைப்பு என்பது பாரதத்திற்கு மட்டும் உரித்தானது இல்லை, மானுடம் மொத்தத்திற்கும் உரித்தானது என்பதை அறிந்து கொள்ளவே நாம் மங்கோலிய நாடோடிகளின் வாழ்வியலுக்கு வந்தோம் இல்லையா!! எனவே அவர்களின் வழிபாட்டை சற்று நெருங்கி அறிவோம்.
[5]
மங்கோலியாவில் இன்று பல இடங்களில் ஏற்கனவே பல ஓவோக்கள் இத்தகைய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆவணப் படத்தில் அப்படி நிறுவப்பட்ட ஒரு ஓவோவை தேடிச் சென்று தான் வழிபாடு செய்கிறார்கள். அந்த வழிபாட்டில் அந்த குடும்பத்திற்கு ஒரு ஆலோசனை வழங்கப்படுகிறது. அதாவது அவர்களின் மிகத் தொன்மையான ‘ஹூஸ்’ சடங்கை நிகழ்த்துவது தான் அது. ‘ஹூஸ்’ என்பது இத்தகைய அன்னை ஒட்டகம் குட்டியை ஏற்காத சமயங்களில் அந்த ஒட்டக அன்னையை அமைதிப்படுத்த அந்த நாடோடி மக்கள் காலங்காலமாக நிகழ்த்திவரும் ஒரு சடங்கு. சடங்கு என்றதும் இதுவும் ஒரு பேயோட்டல் போல ஒரு நிகழ்த்து சடங்கு என எண்ணத் தோன்றும். ஆனால் இது அப்படிப்பட்ட ஒன்று அல்ல. இதுவும் ஒருவகை நிகழ்த்து சடங்கு தான். ஆனால் இது ஒரு வகை இசைச் சடங்கு. இதில் மொழியிலமையாத, அதாவது பாடல் வரிகள் இல்லாத, ஒரு ராகமாக, பெரும்பாலும் ‘ஹூஸ்’ என்ற ஒலியில் அமைந்திருக்கும் பாடலை, மங்கோலியர்களின் பாரம்பரிய இரட்டை தந்தி வாத்தியமான ‘மோரின் கூர்’ இசையோடு அந்த ஒட்டகத் தாயின் முன் அமர்ந்து பாடுவர். மோரின் கூர் என்பதற்கு ‘குதிரை தலை வயலின்’ என்று பொருள். சில மணி நேரங்கள் வரை நிகழும் இந்த பாடல் சடங்கு. அப்படி ஒரு சடங்கை அந்த ஒட்டகத் தாய்க்கு செய்கிறார்கள் அந்த குடும்பத்தினர். அந்த மோரின் கூர் இசைப்பவர் அமர்ந்து கொண்டு வயலின் வாசிப்பதைப் போல அந்த வாத்தியத்தை இசைக்கத் துவங்குகிறார். வண்டு முரள்வதைப் போல, ஒரு ரீங்கரிக்கும் ஒலியில் அந்த தொன்மையான ‘ஹூஸ்’ பாடலை இசைக்கிறார் அவர். அந்த குடும்பத்தின் மருமகளான, இளம் பெண், அந்த தாய் ஒட்டகத்தை மென்மையாக வருடிக் கொடுத்தவாறு, ‘ஹூஸ் ஹூஸ்’ என அந்த பாடலை பாடத்துவங்குகிறார். மெதுவாக உறுமியவாறு அங்கிருந்த நகர முயலும் ஒட்டகத்தை மென்மையாக தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருகிறார் அந்த பெண். பாடல் தொடரத் தொடர ஒட்டகத்தின் உறுமல், முனகலாக மாறுகிறது. பின் மெதுவாக அந்த முனகலும் ஓய, அந்த ஒட்டகத் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் துவங்குகிறது. அந்த ஒட்டகம் ஓலமிட்டு அழவில்லை. ஆனால் அதன் உடலில் இருந்த இறுக்கம் தளர்ந்து கண்கள் கலுழ்ந்து கொண்டிருப்பதை பார்க்கும் நம்மால் உணரமுடியும். இப்படி கலுழும் ஒட்டகத்தாய் முன் அந்த குட்டியைக் கொண்டு வந்து விடுகின்றனர். குட்டி நேராக மடி தேடிச் செல்கிறது. அந்த தாயும் தன் குட்டியை நக்கி ஏற்றுக் கொள்கிறாள். உண்மையில் சிக்கலான அந்த குட்டியின் பிரசவம் அந்த தாயை ஆழ்ந்த மன அழுத்தத்திற்குத் தள்ளியிருக்கிறது. அந்த அழுத்தம் அந்த ‘ஹூஸ்’ சடங்கின் மூலம் வடிந்து விட்டிருக்கிறது. இது மானுடத்திற்கும், விலங்குகளுக்குமான உறவில் மானுடம் கண்டடைந்த ஒரு உச்ச அறிதலின் நேரடி சாட்சி. இந்த நிகழ்வு மொழி என்பதைப் பற்றிய ஆழமான கேள்விகளை நம்முள் எழுப்புகிறது. மனம் என்பதும், மன அழுத்தம் என்பதும் மானுடத்திற்கு மட்டுமே உரியதா அல்லது மொத்த உயிரினத்துக்கும் உரியதா? இறையனுபவம், இறை என்ற கருத்துருவுக்கும் மொழிக்குமான தொடர்பு என்ன? மொழி இறையை விளக்கியதா அல்லது இன்னும் சிக்கலாக்கியதா? நாம் தொடர்ந்து கண்டு வரும் சிந்தனை தொடர்ச்சி என்பதற்கும், மொழிக்கும் என்ன தொடர்பு? வரும் பதிவில் கண்டடைவோம்.
(சிவம் வளரும்)
உசாத்துணைகள்:
https://www.youtube.com/watch?v=3u5IEMuIhmU
https://www.youtube.com/watch?v=pjFOg285Nlo
