Tuesday, November 18, 2025

ஏகன் - உ. முத்துமாணிக்கம்

சிவத்தை அறியும் ஞானத்திற்கு திறவு கோலாக

இருப்பவை உபநிஷத்துக்களின் மகா

வாக்கியங்களாகும்.


பிரக்ஞானம் பிரம்மம் - அறிவே பிரம்மம் என்றும்


அகம் பிரம்மாஸ்மி -  நான் பிரம்மம் என்றும் 

தத்வமஸி - நீ அதுவாய் இருக்கின்றாய் என்றும் 

அயம் ஆத்மா பிரம்மம் - இந்த ஆத்மாவே பிரம்மம் என்று கூறுகின்றன.


இவைகளின் கருத்து என்பது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே தன்மை,  இரண்டும் சச்சிதானந்தப் பொருட்கள் எனப் பொருள்படும். அது மட்டுமல்ல, நாம் இன்று சொல்கின்ற அனைத்து தத்துவங்களும் சிவத்தின் அம்சமே. "தத்வம்" என்ற பதத்திற்கே, "பொருள்" அது அதுவாய் இருக்கிறது என்பதாகும். 

குட்டை, குளம், ஏரி, கடல் முதலியவைகளில் நீர் இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் ஆதாரமாய் இருப்பது கடலின் நீராகும். அதுபோல் பதி, பசு, பாசம் முதலியவற்றிற்கு அடிப்படையாக, ஆதாரமாக ஒன்று உள்ளது. அது "ஒன்றே" ஒன்றுதான். அதை பிரம்மம் என்றும் கூறலாம் அல்லது சிவம் என்று சொல்லலாம். அதுதான் முடிவான மெய்ப் பொருள் (Ultimate Reality). இது  "இரண்டற்ற ஒன்றே ஒன்று" எனக்கூறப்படுகின்றது. அதற்கு நாமம் கிடையாது. "பொருள்” என்றே சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆனால் பலசமயத்தினர்கள் அதற்குப் பல பெயரிட்டு அழைக்கின்றனர். இதனையே   “ஒர்நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம்பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ” என்று திருவாசகம் கூறுகிறது. "பொருள் ஒன்றே, அதற்கு அறிஞர் பல பெயரிட்டு அழைக்கின்றனர்" என்பதாகும்.

சரி இப்படி இருப்பின் அப்பொருள் எப்படிப்பட்டது? எத்தன்மையது? என்று யோசித்தோமேயானால் அதை  யாராலும் உறுதி பட கூறமுடியவில்லை. வேதங்களே அதைத் தேடி ஓலமிடுகின்றன என்றும் பிரம்மா விஷ்ணு இவர்கள்கூட பலகாலம் தேடியும் காண முடியவில்லை என்றும் நூல்கள் கூறுகின்றன. 

அது கால, தேச, வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டது; மனம், வாக்கு,  காயம் முதலானவற்றிற்கு அப்பாற்பட்டது.  அப்பாழுக் கப்பாலாய் உள்ளது. ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லனாக உள்ளது. சத்திற்கும் அசத்திற்கும் அப்பாற்பட்டது; சித்திற்கும் சடத்திற்கும் அப்பாற்பட்டது. சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டது. எல்லா மறுதலை இருமைகளும் (pairs of opposites) அப்பாற்பட்டது. இது அல்ல, இது அல்ல என்று சொல்லுவதே அதன் இலக்கணமாகும். அதைக் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.

அழிவற்றதும் ஆதியந்தமற்றதுமான அந்த மேலான சிவத்தில்  வித்தை, அவித்தை இரண்டும் அடங்கியுள்ளன. அதாவது  சத்தாகவும் அசத்தாகவும் இருக்கின்றன.

சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லையென்ற நித்தன் பரம குருநேசத்தால் சுத்தநிலை பெற்றோமே'' என்கிறார்  தாயுமானாரும்.

அப் பரம்பொருளைப்பற்றி மெய்நூல்களில் ஒரே ஒரு பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. அதுதான் "ஓம்"  என்றபிரணவ அக்ஷரம், 

எல்லா மெய்நூல்களும் எதைச் சொல்லுகின்றனவோ, எல்லா தபசும் எதைச் சொல்லுகின்றனவோ, எதை ஆசிரியத்து பிரம்மச்சரியத்தை மேற்கொள்கின்றார்களோ,  அது தான் "ஓம்". அந்த அக்ஷரமே சிவம். 

இந்த "ஓம்" ஓர் அக்ஷரத்தால் (ஓ, ம்) குறிக்கப்படும் ஓரசைச் சொல். இது "ஓ" என்ற சித்தாகிய உயிரும்,"ம்" என்ற சடமாகிய மெய்யும் கூடியது. இந்த மெய்யோடு (சடத்தோடு) உயிர் (சித்து) கூடாமல் மெய் (சடம்) இயங்காது. மற்றும் இந்த "ஓ" என்ற உயிரில் (சித்தில்) "அ", "உ" என்ற இரண்டு உயிர்கள் (சித்துக்கள்) அடங்கியுள்ளன.

இவ்வாறு ஓர் அக்ஷரத்தால் குறிக்கப்படும் ஓரசைப் பதமாகிய ஓம் ல் - அ, உ, ம், என்ற மூன்று அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. மகரமெய்யில் அகர உயிர் கூடினாலும், உகர உயிர் கூடினாலும் அது இயங்கும். ஆதலால் இந்த மகரமெய் அ, உ என்ற இரண்டு உயிரையும் இணைக்கும், மூன்றுமாக  சேர்ந்ததுதான் "ஓம்" என்ற பிரணவ அக்ஷரம். "ஓம்" என்று சேர்த்துப் பார்ப்பது சமஷ்டி என்றும், அதை அ, உ, ம் என்று பிரித்துப் பார்ப்பது வியஷ்டி என்றும் சொல்லப்படும். அக்ஷரம் என்றால் அழிவற்றது என்பது பொருள். இந்த ஓம் என்ற பிரணவத்திற்கு பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு எடுத்துக்கொள்வோம்.

சிவத்திற்கு இரண்டு நிலைகள் உள்ளன. அவை ரூபம், அரூபம். நித்தியம், அநித்தியம். கண்டம், அகண்டம்; சத், அசத் என்பதாம். பிரணவத்தை ஓம் என்று சமஷ்டியாகப் (ஒருங்கிணைந்த)  பார்ப்பது மேல் நிலை; அதைப் பிரித்து அ, உ, ம், என்று  பார்க்கும் வியஷ்டி (தனித்தனியாக) கீழ்நிலையாம்.

சிவத்திற்கு நிர்க்குணம் என்ற பரநிலையும், சகுணம் என்ற அபரநிலையும் ஆக இரண்டு நிலைகள் உள்ளன. ஓம் என்பது நிர்க்குணம். அ, உ, ம், என்பது சகுணம்.

சிவம் பிரபஞ்சத்தொடு தொடர்பு கொள்ளும் போது அது அடையும் மூன்று அவத்தை நிலைகளையும் அ, உ, ம் என்ற மூன்று அக்ஷரங்களும் குறிக்கின்றன.

“அ” என்ற அக்ஷரம் ஜாக்கிரதாவஸ்த்தை நிலையையும், "உ" என்ற அக்ஷரம் சொர்ப்பனாவஸ்த்தை நிலையையும், "ம்" என்ற அக்ஷரம் சுழுத்தி அவஸ்த்தை நிலையையும் குறிக்கின்றன.

சமஷ்டியாகிய "ஓம்" சிவத்தையும், வியஷ்டியாகிய "அ" உருத்திரனையும், "உ" விஷ்ணுவையும், "ம" பிரம்மாவையும் குறிக்கின்றன.  அதாவது ஒரே ஒரு கடவுள் படைத்தல், காத்தல் அழித்தற்கேதுவாக பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் எனப் பதவி, நாமத்தை அடைகின்றான்.

மற்றும் சமஷ்டி, ஓங்காரம் சிவமாகவும், வியஷ்டி "அ" = அரன் (பதி), '' உ" = உயிர் (பசு), "ம" = மாயை (பாசம்) ஆகவும் கூறப்பட்டுள்ளது. பதியாகிய "அ"வும், பசுவாகிய "உ"வும் "ஓ" என்ற சிவசத்தினின்றே பிறந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்த இரண்டையும் பிணிப்பது "ம" என்ற பாசமேயாகும்.

"ஓங்காரத்துட் பொருளாய் நின்றான் கண்டாய்" - என்கிறார் அப்பர்.

எல்லா மதங்களிலுமே இந்தப் பிரணவ ஓங்காரமே கடவுள் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. கிருஸ்து சமயத்தவர் "ஆமென்" எனச் சொல்லுவார்கள். கிருஸ்த்துவ ஆகமத்தில் "ஆதியில் வார்த்தை இருந்தது, வார்த்தை தேவனிடத்தில் இருந்தது; வார்த்தையே தேவன்" என்று கூறப்பட்டிருக்கிறது. முகம்மதியர்கள் “ஆமீன்” என உச்சரிப்பர். 

மேலே கூறியவாறு "முடிவாக உள்ள பொருள் (The Absolute Ultimate Reality) . ஒன்றே ஒன்று தான். அதைத்தான் பிரம்மம் அல்லது சிவம் என்கிறோம். அது கால (Time), தேச (Space), வர்த்தமானங் (Causation) கட்கு அப்பாற்பட்டது; மனோவாக்குக் காயங்கட்கு எட்டாதது. அது சத்து, அசத்து; சித்து, சடம்; சுகம், துக்கம்; ஆண், பெண்; இரவு, பகல் என்ற எல்லா மறுதலை இருமைகட்கும் (pairs of opposites) அப்பாற்பட்டதும், அவற்றிற்கு நிலைக்களமாகவும் உள்ளது என்றும், அதுவே சத்து, அசத்து, சித்து (spirit), சடம் (Matter) முதலிய மறுதலை இருமைகளாகப் பிரிந்து இச் சேதனா சேதனப் பிரபஞ்சங் களாகத் திரிந்தது.

மேற்கூறிய காரண காரியங்களால் சிவத்தைத்தவிர வேறு ஒன்றுமில்லை என்றாகிறது. ஓங்காரமே சிவம் அதிலிருந்தே சமுத்திர அலைகள் போல் பிரபஞ்சம் தோன்றுகின்றது; அதில் நிலைத்து, அதிலே மறைகின்றது; அதைத்தவிர வேறு ஒன்றுமில்லை" அப்போது சத்துமில்லை, அசத்துமில்லை, அதைத்தவிர வேறு ஒன்றுமில்லை. அதாவது சர்வம் சிவமயமாக இருக்கிறது.

சர்வமும் அதனுடைய பிரஞ்ஞை (Cosmic-consciousness) தவிர வேறு ஒன்றுமில்லை. அணு முதல் அண்டம் வரை எல்லாம் அவன் பிரஞ்ஞையே - அவனும் பிரபஞ்சமும் என்பதில்லை; அவனே பிரபஞ்சமாக இருக்கின்றான் என்பதாகும். அது உயிர்களாய் இருப்பதினால்தான் உயிர்கள் அதை அறிய ஏதுவாய் இருக்கிறது என்பது ஒரு நியதி (Law). அதன் தன்மை உன்னிடம் இல்லையேயானால் நீ அதை அறியமுடியாது என்பது அதன் பொருள்.

கந்த புராணத்திலும் "யாககுண்டமும் அவனே, யாகாக்னியும் அவனே, யாகம் வளர்ப்பவனும் அவனே, யாகத்தை ஏற்பவனும் அவனே, அவிர்ப்பாகமும் அவனே அவிர்ப்பாகத்தை  ஏற்பவனும் அவனே, யாகப் பொருட்களும் அவனே, எல்லாம் சிவனே, அவனைத் தவிர வேறு ஒன்றுமில்லை' எனக்கூறப்பட்டிருக்கிறது.

"எல்லாம் சிவன் எனநின்றாய் போற்றி " - அப்பர்

இதன் மூலம் ஒருவாறு சிவம்  "ஏகனாக" இருப்பதை அறிய முடிகிறது. சரி "அது" ஒன்று தானா? பிறகு ஏன் இத்தனை கடவுள்கள் ?.....

சிந்திப்போம்.


கட்டுரையாளர்: உ. முத்துமாணிக்கம் 

0 comments:

Post a Comment