Thursday, July 3, 2025

வினைக் கொள்கை - 1 - தாமல் கோ.சரவணன்

உடம்பை பற்றிய ஆராய்ச்சி இன்றைக்கு  அறிவியலில் மேம்பட்டு இருக்கிறது. உள்ளத்தை பற்றிய ஆராய்ச்சி உளவியல் என்கிற அடிப்படையிலே கொஞ்சம் கடினமானதாகக்  கையாளப்படுகிறது   . அதேசமயம்  உயிரை பற்றிய ஆராய்ச்சி என்பது அறிவியலில்  பூஜ்யத்தில் தான் இன்னும் தேங்கி நிற்கிறது . அதற்கு முதல் காரணம் அறிவியல் உயிர் என்ற ஒன்று தனித்து இருப்பதாக நம்பவில்லைஅது  உடம்பின் உயிர்ப்பு நிலை; உடம்பு உயிர்ப்பற்ற நிலை என்ற இரண்டினோடு நிற்கிறது. மேலும்  உடம்பு உயிர்ப்போடு இருக்க உயிர் என்ற ஒன்று அதனுள் இருக்கிறது உடம்பு உயிர்ப்பற்ற நிலையில் அந்த உயிர் உடம்பை  விட்டு வெளியேறிவிடுகிறது என்ற உயிர் மைய கோட்பாட்டை அறிவியல் நிராகரிக்கிறது.

அதனால் அந்த உயிர் மீண்டும் இன்னொரு தேகம் எடுக்கும் என்பதையும் அவ்வாறு  எடுக்கும் போது கடந்த பிறப்பில்  வாழும் போது செய்த வினைகளின்  ( நல்ல மற்றும் தீய செயல்களின்  ) பலன்களை அது அனுபவிக்கும் என்பதையும் , அந்த உயிர் ஒவ்வொரு பிறவியிலும் விலங்காய் , தாவரமாய் பிறப்பெடுக்கும் என்பதையும் அறிவியல் துளியும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அதே சமயம் ஒரு உயிர் வாழ்வதற்கான எல்லா ஏற்பாட்டோடு ஒரு சதைப்  பிண்டத்தை அறிவியல் உண்டாக்கினாலும் அதில் உயிர்த்  தன்மையைக்  கொண்டு வர  அறிவியலுக்கு தெரியவில்லை . ஒரு முழு உடலை திசு வளர்ப்பின் ( Tissue culture ) மூலம் அறிவியல் உண்டாக்கினாலும் அதற்கு உயிரை கொடுக்க தெரியவில்லை . அதே போல ஒரு உடம்பை விட்டு உயிர் வலுக்கட்டாயமாக பிரியும் போது அதை தடுக்கவோ , இறந்த உடலுக்கு செயற்கை உயிரை கொடுக்கவோ அறிவியலால் முடியவில்லை . உயிரற்ற உடம்பின் செல்களை உயிர்ப்போடு செயற்கையாய் வைக்கும் ஆற்றல் வரப்பெற்றாலும் உண்மையாக அந்த உடம்பை நடமாட வைக்கும் செயற்கை உயிரை தரும் வல்லமை அறிவியலுக்கு இல்லை .   

அறிவியல் இந்த உயிர் எது என்பதையும் அது எங்கே இருக்கிறது என்பதையும் கேட்கிறது ஆனால் அதே சமயம் இந்த உடம்பின் உயிர்ப்புத்  தன்மை எங்கே என நாம் கேட்கும் பட்சத்தில் அறிவியல் தடுமாறுகிறது . உயிரானது உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளதென்றால் தினமும் சில செல்கள் இறக்கத்தான் செய்கிறது எனும்  படியால் உயிர் போய்விட்டது என்று சொல்ல முடிதற்கில்லை , அல்லது உயிர் உடம்பின் இருதயத்தில் உள்ளதென்றால் இன்றைக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் சுலபமாக செய்யப்படுகிறதே அப்படியெனில் இதயம் இல்லாமலும் உடம்பு இருந்து மீள்கிறதென்றால் இருதயம் உயிராகாது . ஒருவேளை எல்லாவற்றுக்கும் ஆதாரமான மூளை தான் உயிர் என்றால் மூளையே இறந்தும் கூட உடம்பு உயிர்ப்போடு இருக்கிற பல சம்பவங்களை நாம் பார்க்க முடிகின்றது . இதனால் உயிரை உடம்பில் காட்ட அல்லது உடம்பாய் காட்ட முயற்சிக்கும் அறிவியல் இந்த இடங்களில் எல்லாம் தோற்று நிற்கிறது .   இந்த அறிவியலின் தோல்விகளில் தான் உயிர் என்னும் ஆன்மாவைப்  பற்றிய ரகசியங்களும், கதைகளும், அமானுஷ்யங்களும் உலகளாவிய எல்லா சமூகங்களிடமும் கொட்டி இருக்கின்றன . 'ஆன்மா' 'உயிர்' என்பதான இவற்றைப்  பற்றிய  உலகத்தின் கற்பனை , கட்டுக்கதை, குழப்பக் குவியல் மூட்டைக்குள் தான் ஆன்மாவை பற்றிய அறிவு ரீதியான ஆன்மீக ரீதியான உண்மை புதையலும் இருக்கின்றது  அதுவே தமிழில் உண்டாக்கப்பெற்ற சித்தாந்தம்.( சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் ). நாம் ஆன்மாவை பற்றி அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இன்றைய கல்வி முறை போன்றே இரண்டு வழி முறைகள் இருக்கின்றன  . அவற்றில் ஒன்று தேற்றம் (Theoretical study ) அடிப்படையிலான கற்றல்  மற்றொன்று  செய்முறை /உணர்ந்து அறிதல்  (Practical study ) அடிப்படையிலான கற்றல் .  

உலகத்தில் சிவபரத்துவத்தின் திருவருளால் தமிழகத்தில் தோன்றி தெய்வ தமிழால் தாங்கள் உணர்ந்து நெகிழ்ந்து அனுபவித்ததையெல்லாம்  பாக்களாக நமக்கு தந்த தேவார திருவாசக திருமுறைகளை படித்து நாமும் அனுபவித்து ஆன்மாவையும் ஆண்டவனையும் உணர்ந்து அறிதல் என்பது ஒருவகை (Practical study ) . இறைவன் திருவருளால் சந்தானகுரவர்கள் என்று  சொல்லப்படும் அருளாளர்களால் எழுதப்பட்ட சாத்திர நூல்களை படித்து தேற்ற நிலையில் ஆன்மாவையும் ஆண்டவனையும் அறிதல் என்பது இன்னொரு வகை  (Theoretical study ). இந்த இரண்டையும் உள்வாங்கி இரண்டிலும் தேர்ச்சி பெற்று இறைவனோடு இரண்டறக் கலந்தவர்கள் சிலர்தான்  . தாயுமானவரும் , திருவருட்ப்ரகாச வள்ளலாரும் இன்னும் சிலரும்   அந்த வகையில் பொருந்துவர் .

ஆன்மா என்னும் இந்த உயிர் எப்படி பட்டது . இதன் இயல்பு என்ன , குணம் என்ன என்கிற அடிப்படை புரிதலை நாம் உண்டு பண்ணிக்கொள்ள வேண்டியது முதலில் அவசியம் .  


இந்த ஆன்மா உடம்பை எடுத்தபின்னே அந்த ஆன்மாவைக்  கட்டுக்குள் வைத்திருக்கும் அதாவது நம்மை கட்டுக்குள் வைத்திருக்கும் பாசத்தை பற்றி தெரிந்துகொள்வது இரண்டாவது அவசியமான விஷயம் ஆனால் இந்தப் பாசத்தைப் பற்றி தெரிந்து கொள்ள  முடியாதபடி  ஏதோ ஒன்று  தடுக்கிறது . பாசம் என்றால் கயிறு என்று பொருள் . அதாவது கட்டு என்று திருத்தமாக  சொல்லலாம் ஏனென்றால் உயிரை எது கட்டுக்குள் வைத்திருக்கிறதோ அதுதானே கட்டு . ஆக பாசம் தான் கட்டு . இந்தப்  பாசம் என்னும் ஒரு விஷயம் எப்போது வந்தது எப்படி வந்தது என்ற  விசாரனைக்கெல்லாம் இடமே கிடையாது . காரணம் பதியாகிய சிவத்தைப்  போல பசுவாகிய ஆன்மாவைப்  போல பாசமாகிய மலமும் தொடக்கமும் முடிவும் இல்லாத உறுதிப்  பொருள். மலம் என்ற ஒன்று எங்கேயோ தனியாக கிடக்கின்றவரைக்கும் நமக்கு எந்தப்  பிரச்சனையும் இல்லை. ஆனால் வருத்தமான செய்தி என்னவென்றால் அந்த மலம் இயல்பிலேயே ஆன்மாவோடு ஒட்டியிருக்கிறது அதாவது நம்மோடு சேர்ந்திருக்கிறது  . எப்போது ஆன்மா அதனுடன் சேர்ந்தது அல்லது மலம் எப்படி ஆன்மாவோடு சேர்ந்தது என்கிற கேள்விக்கெல்லாம் விடைகளில்லை . காரணம் நெல்லிலே அரிசி தோன்றும் போது உமி  எப்போது தோன்றியது என்று கேட்க முடியாதல்லவா அப்படித்தான்  அரிசி தோன்றும் போது உமியும் அதனோடு ஒன்றாக தோன்றுவதைப்  போலத்  தான் ஆன்மா தோன்றும் போதே அதனோடு மலமும் அழுந்தி தோன்றுகிறது . இப்படி ஒரு ஒட்டுண்ணியைப்  போல ஆன்மாவை ஒட்டியிருக்கும் மலங்கள்தான் ஆணவம் , கன்மம், மாயை என்பன  . 


இதிலே ஆணவம்தான் மூலமலம் அதனுடைய அல்லது அதனில் இருந்து கிளைக்கும் பரிவாரங்கள் தான் கன்மம் மாயை என்பன  எல்லாம் . ஆன்மா பிறப்பெடுக்காமல் கேவல நிலையில் செயலற்று கிடப்பதை போலதான் ஆன்மாவோடு கூடிய ஆணவமும் செயலற்று இருக்கும். அந்த ஆன்மா சகல நிலையாக பிறப்பெடுத்து உடம்பு என்கிற சடப்   பொருளைக்  கொண்டு இயங்கும் போது ஆணவமும் இயங்கத்  தொடங்கும். இந்த ஆன்ம பிறப்பெடுப்பதுவும் அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் ஆணவமும் அதனோடே செயல்படுவதுமான இந்த இடத்தை நம் ஞானிகளும் யோகிகளும் நிறைய யோசித்தார்கள் . நிறைய குழம்பினார்கள் தங்கள் குருமார்களிடம் இது குறித்து நிறைய கேள்விகளும் கேட்டார்கள் .

இந்த இடத்தில்  ஒன்றை நாம் நமக்கே சொல்லிக்கொள்ள வேண்டிஇருக்கிறது, யார் ஒருவர் அதிகமான கேள்விகளையும் குழப்பங்களையும் அடைகிறார்களோ அவர்களே ஞானத்தின் பயணத்திற்கு பாதை சமைக்கிறார்கள் அதே போல் யாரொருவர் பதில் கிடைக்கின்ற நேரம் நீண்ட ஆழமான மௌனத்தை கடைபிடிக்கிறாரார்களோ அவர்களே அத்தகு ஞானப்  பாதையின் பயணத்தில் பரிபூரணத்தை அடைகிறார்கள் . சரி ,விஷயத்திற்கு வருவோம் அன்றைக்கு யோகியரும் ஞானியரும் அவர்கள் குருமார்களிடம் தங்களுக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு பதில் வேண்டி நின்றார்கள்   .  உதாரணமாக ஆன்மா உயிருள்ள பொருள் மலம் உயிரற்ற பொருள் . உயிருள்ள பொருள் உடம்பு என்கிற சடம் கிடைத்ததும் அதனை கருவியாகக் கொண்டு இயங்குகிறது . ஆனால்  இயல்பிலேயே  மலம் உயிரற்ற சடம் அது ஒரு உயிரற்ற சடத்துக்குள் ஆன்மாவோடு வருகின்றபோது எப்படி இயங்க முடியும் என்ற கேள்வியை அருள்நந்தி சிவம் என்னும் சீடர் அவர் குருவை கேட்கிறார் . அந்த கேள்விக்கு அவர் துணை கொண்ட உதாரணம் தான் சிறப்பே . அவர் கேட்டார் "குருவே ஆன்மா உயிறுள்ளது அதனால்  அது ஒரு  சரீரம் எனும் சடம் கிடைத்ததும் அதை கொண்டு இயங்கலாம் ஆனால் மலம் உயிரற்ற சடம் அது ஒரு சரீரம் என்னும் உயிரற்ற சடலத்தில் எப்படி இயங்க முடியும் . உடம்பை பெற்ற ஆன்மா உடம்பை இயக்கலாம் அதே உடம்பை பெற்ற சட்டை உடம்பை  இயக்க முடியுமா அல்லது செயல் படமுடியுமா ? அப்படிதானே மலங்களும் ? உயிரற்ற சட்டையால் உடம்பையும் அது கொண்ட உயிரையும் எப்படி ஒன்றும் செய்ய முடியாதோ  அப்படிதானே உயிரற்ற மலமும் என்னும் போது அதுமட்டும் எப்படி செயல்படுகிறது ". என்று கேட்டு முடித்தார் . இக்கேள்வி அடிப்படையில் சரியென்றே தோன்றும் . எல்லார்க்கும் இந்த கேள்வி தோன்றவும்  வேண்டும் .    ஆனால் இந்த கேள்விக்கு அவருடைய குரு மெய்கண்டார்  சொன்ன பதில்தான் அலாதியானது .  


அவர் இந்த மலம் என்னும் சடப்பொருளுக்கு உதாரணமாக சட்டைக்கு பதில் விஷத்தை முன்னிறுத்துகிறார் . விஷமானது சடப்பொருள் உயிரற்றது ஆனால் அது ஒரு உயிருள்ள உடம்பில் செல்லும்போது இயங்கி உயிரையும் அது சார்ந்த உடம்பையும் கெடுக்கும் அது போலவே இம்மலமும் உயிரற்ற சடமாயினும் உயிரோடு சேர்ந்து வந்து உடம்பை அடைந்ததும் தன் வலிமையை வீரியத்தை வெளிப்படுத்தும் என்றார் . இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று ஆணவம் என்னும் மலம் விஷத்தை விட கொடியது என்கிறார் ஏனெனில் சடப்பொருளாகிய விஷம் உயிர்க்கு தீங்கு செய்து அதை அழித்தும் உடம்போடு இருந்து அதுவும் வீரியம் குறைந்து அழிந்தும்போகிறது . ஆனால் ஆணவ மலம் உடம்போடு வீரியம் குறைந்து அழிவதில்லை மாறாக அது அழியாது உயிரோடே இருந்து தொடர்கிறது . இவ்வளவிலே ஆணவ மலம் விஷத்தை போல சடமான பொருளாயினும் உயிருள்ள உடம்பில் செயல்படும் என்பதையும் ஆணவ மலமானது விஷத்தை   விட கொடியது என்னும் செய்தியையும் பூடகமா சொல்வதை உணர்ந்து கொள்வோர் உணரலாம்  .  இந்தப்  பதில்  நம் எல்லோர்க்கும் ஒரு புரிதலை தந்திருக்கும் என்று நம்புகிறேன்


ஆணவ மலம் தான் மூல மலம் அதிலிருந்தே கன்மமும் மாயயையும் வியாபிக்கிறது மலங்கள் மூன்றாக இருந்தாலும் பொதுவில் நம்  ஆன்மா ஆணவத்தோடு ஒன்றி இருக்கிறது என்பதே அடிப்படையில்  சொல்லப்படும்  கூற்று காரணம் அதுவே மூல மலம் . இந்த ஆணவ மலத்தை பற்றி இந்த உயிர்கள் தெரிந்துகொள்ள தொடங்கும் போது இந்த ஆன்மா மேல்நிலை நோக்கி நகர முயற்சிக்கிறது . அதற்கான தொடக்கத்தை நாம் இங்கிருந்து தொடங்குகிறோம் . ஆணவம் என்ற சொல் பொதுவில் திமிரோடும், 'நான்' , 'என்னால்' என்ற அகந்தையோடும் பொருள் சொல்லப்பட்டாலும் . அணு என்கிற வேர்ச்சொல்லில் இருந்தே ஆணவம் என்ற சொல் தோன்றுகிறது . அணு படுத்துதல் என்றால் சிறுமை படுத்துதல் என்று அர்த்தம் . ஆன்மாவோடு இருக்கின்ற இந்த மலம் ஆன்மாவை சிறுமைப்படுத்துவதால் இது ஆணவம் ( அணுவம் ) எனப்படுகிறது


ஆணவம் என்கிற மலம் ஆன்மாவோடு ஒட்டியிருக்கிறது என்று சொல்லப்படுவதால் எல்லோரும்   பொதுவில்  ஆணவம் என்பது பாக்கு மரத்தோடு சுற்றியிருக்கும் கொடியை போல மனதிலே உவமை செய்துகொள்கிறார்கள் இது தவறு. மரத்தில் படர்ந்த கொடி  என்றால் எளிதில் அதை பிடிங்கி வீசலாம் ஆனால் ஆணவம் அப்படியானதில்லைஅது ஆன்மாவோடு கலந்தது ( Inbuild ) . சடம் என்று சொல்லப்படும் ஆணவம் வேறொன்றுமில்லை ஆன்மாவின் இயல்பானதாக ஒன்றியிருக்கம் ஒழுக்க கேடுகள் அல்லது தீய குணங்களேயாகும் . இந்த ஒழுக்கக்  கேடுகள் எட்டு வகை. இதை எட்டும் சேர்ந்தது தான் ஆணவம் . இந்த  எட்டும் ஆன்மாவை விட்டு  அகலாது அழியாது . நீங்கள் ஒருவேளை இந்த எட்டையும் உணர்ந்து அதை பலவீனப்படுத்தி ஆன்மாவை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கினால் அதுவே உண்மையில் ஆன்மீக பயணம் ஆகும் . ஆணவம் என்றால் ஏதோ வேதாளம் விக்ரமாதித்தன் முதுகுகில் சவாரி செய்வது போல் ஆன்மாவின் மீது இருக்கிறது என்று  நினைக்கிறார்கள் உண்மையில் ஆணவ மலம்  என்பது ஆன்மாவை பீடித்திருக்கிற தவறான வழியில் செலுத்துகிற அஞ்ஞானத்தில் அழுத்துகிற கெட்ட குணங்களாகும் . அந்த எட்டினை சாத்திரங்கள் விகற்பம், கற்பம் , குரோதம் , மோகம் , கொலை , அஞர் , மதம் , நகை என்கிறது . இவையெல்லம் கேட்பதற்கும் படிப்பதற்கும் புதிதாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம் நீங்களும் நானும் இடைவிடாது செய்கிற அல்லது நமக்கு இருக்கிற அழுக்கான எண்ணங்களும் குணங்களும் தான் இவை


நமக்கு புரியும் மொழியிலே இந்த ஆணவத்தின் எட்டு குணங்களை ( காரியப்படுதலை ) நாம் சிந்திப்போமேயானால் .,

 

எந்த ஒரு விஷயமும் என்னால் அன்றி வேறு யாராலும் செய்ய முடியாது என்று அழுத்தமாக நம்பி நம்மை நாமே சிறப்பித்துக் கொண்டு நமக்கு நாமே கிரீடம் சூடிக்கொண்டு தற்பெருமை படுத்திக்கொள்வதே விகற்பம் . தன்னை வியத்தல் என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொள்ளலாம் . இதே போல் சில விஷயங்கள் தனக்கு துளியும் செய்ய வராது என்ற போதும் பிறரால் அது முடியாது என்னாலேயே  முடியும் என்று " ஆட  தெரியாதவன்  மேடை கோணல்   என்று ஆடிக்கொண்டே இருக்கிற அற்ப அறிவே கற்பம் ".தனக்கும் வராது அது பிறருக்கு வருவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று உயிரை நம்ப வைப்பது கற்பம்


தனக்கு ஒன்று கிடைக்காத பொது , தனக்கு ஒன்று நடக்காத பொது , தனக்கு ஒன்று வராத பொது அடுத்தவர்க்கு இது கிடைக்கிறதே நடக்கிறதே வருகிறதே என்று மனதிலே அடித்துக்கொண்டு அவர்கள் மேல் பகையும் வஞ்சமும் பொறாமையும் பூசலும் கொள்வது குரோதமாகும் . சுருங்கச்  சொன்னால் அடுத்தவன் நன்றாக இருக்கிறானே என்று அடிவயிற்றில் எரிவது   குரோதம்


பார்க்கின்ற பொருளெல்லாம் , மனம் பிடிக்கின்ற விஷயமெல்லாம் தனக்கு கிடைத்தே ஆகவேண்டும் என்று விரும்பி நிற்பது மோகம் .அது கிடைத்தால்தான் நன்றாக இருக்கும் அது இருந்தால்தான்  எனக்கு மகிழ்ச்சியே என்கிற மயக்கமே மோகம்புத்தனின் மொழியில் சொன்னால் ஆசையே மோகம் .


தனக்கு ஏதோ ஒரு விதத்தில் தேவை என்பதற்காக தனக்கு நல்லது என்பதற்காக தான் சுகம் காண வேண்டும் என்பதற்காக ஒரு உயிரை பறிப்பதே  கொலைஉணவுக்காக ஆடு மாடு முதலிய உயிர்களை கொள்வதும் இதில் அடங்கும் . வள்ளலார் மொழியில் சொன்னால் ஜீவகாருண்யம் இல்லாமல் இருப்பதே கொலை


வாழ்க்கையில் வினைகளால் செய்யும் செயல்களால் அதனால் விளையும் சூழலால் துன்பம் ஏற்படும்போது அதற்கு வருந்தி உழல்வதே அஞர் எனப்படும் . ஏதாவது ஒன்றுக்காக கவலை பட்டுக்கொண்டே இருப்பதுவே அஞர் . பொதுவாகவே நம் எல்லோர்க்கும் ஒரு சோகத்தின் மீது கள்ளக்காதல் இருக்கத்தான் செய்கிறது. சோகமாக இருப்பதை சில நேரம் மனம் வேண்டுமென்றே எதிர்பார்க்கிறது. துன்பத்துக்கு ஆன்மா அழுந்துவதும் அழுவதும்  இதனாலேயே  ஆகும்


சொல்கின்ற வார்த்தையிலும் , செயலிலும், மனதிலே ஏற்படுகிற நினைப்பிலும் தானே மேலானவன் என்று  நினைக்கின்ற மிதப்பே மதம். செருக்கு கர்வம் போன்ற எல்லா சொல்லும் இங்கு பொருந்தும் . இதிலிருந்தும்  இம்மலதன்மையில் இருந்தும்  விடுபட்டதாலேயே மணிவாசகர் தன்னை நாய் என்றும் வள்ளலார் தன்னை புழுவிலும் இழிந்தவன் என்றும் சொல்லிக்கொள்ள முடிந்தது . நம்மால் அது வாய்ப்பே  இல்லை . காரணம் ஆணவ மலத்தின் அங்கமான மதம் தடுக்கிறது


நம்மை சுற்றி பலர் வாழ்கிறார்கள் பல உயிரினங்கள் வாழ்கிறது நம்மை போலவே அதுவும் ஏதாவது ஒரு காரணத்தால் துன்பத்தில் அழுந்தும் போது அச்சோ இப்படி இம்சிக்கின்றதே என்று இரக்கம் கொள்ளாமல் அந்த துன்பத்திலும் இன்பம் காணுதலும் அதன் துன்பத்தை அதன் துன்பமாகவே எண்ணி எனக்கென்ன என்று இருக்கும் மரத்தன்மையும் நகை எனப்படும் . இன்றைக்கு இந்த உலகத்தில் பாதி பேர் அடுத்தவன் துன்பத்தை பார்த்து சந்தோஷப் படுபவனாகவும் அடுத்தவன் கஷ்டத்தில் குளிர்காய்பவனாகவும்தான் இருக்கிறான்


மேற்சொல்லப்பட்ட எட்டும்தான் காலம்காலமாக சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற ஆணவ மலம் என்பதாகும் . இந்த எட்டையும் சுருக்கித்தான் நான் எனது என்ற தன்மையே ஆணவம் என்று பரவலாக்கி விட்டார்கள் . நம்மக்கள் தம் குறைகளை பெரிதாக சொல்லிக்கொள்ள மாட்டாத இயல்பு இயற்கை தானே .


இந்த எட்டு ஆணவ காரியங்களும் எல்லாருடைய ஆன்மாவுடனும் பீடித்திருக்கின்றன  .அது உங்களுக்குள்ளும் இருக்கிறது எனக்குள்ளும் இருக்கின்றன   ( எட்டுக்கும் தோற்றுவாயாக இருக்கும் பட்சத்தில்  ஆணவம் காரண ஆணவ மலமாகவும் , எட்டையும் தோற்றுவித்து ஆன்மாவை மழுங்க செய்யும் போது காரிய ஆணவ மலமாகவும் பெயர் சொல்லப்படுகிறது ) இந்த ஆணவ மலத்தை அழிக்க முடியாது ஒடுக்க மட்டுமே முடியும் . இறைவனின் மேலான எல்லைக்குள் ஆன்மா பிரவேசிக்கிற போது இந்த ஆணவம் ஒடுங்குகிறது . கவனம் அது அழிவதில்லை . அதனாலேயே சித்தாந்தம்  ஆணவம் இறைவனிடம் ஆன்மா சரணாகதி அடைகின்ற பொது  வறுத்த வித்து போல் ஆகின்றது என்று உவமை சொல்கிறது. வறுத்த வித்து முளைக்காது என்றாலும் அதன் வித்துதன்மை உள்ளேயே கிடக்கும் . காரணம் ஆணவம் ( பாசம்கடவுளை ( பதியை) போல , உயிரை ( பசுவை ) போல அழிவற்றது


இத்தகைய குரூரமான ஆணவத்தில் அழுந்திக்கிடக்கிற ஆன்மா கடையேற வேண்டும் என்று இறைவன் விரும்பி அவன் இயற்கையான கருணை தன்மையால் அறிவற்று ஆணவத்தோடு அஞ்ஞானத்தில் இருக்கும் ஆன்மா தப்பித்து தன்னை சேர அறிவு வேண்டும் படியால் அதனை கேவல நிலையில் இருந்து உடலையும் உலகத்தையும் மாயையில் இருந்து உருவாக்கி ஆன்மாவிற்கு தருகிறார் . அப்படி வந்த உயிர் தனியே வராமல் கூடவே இருக்கிற ஆணவ மலத்தோடு வருவதால் கருவிகள் இருந்தும் அஞ்ஞானத்தில் கிடந்து உழன்று வாழ்கின்ற  போது செய்யும் செயல்களால் அதற்கான பலன்களை பெறுகிறது அதுவே கன்மம் எனப்படுகிறது. ஆணவத்தில் அழுந்தி அதாவது விகற்பம், கற்பம் , குரோதம், மோகம், கொலை, அஞர் , மதம், நகை முதலியவற்றால் தன்னை கெடுத்து கொண்டு இறைவனை சிந்தியாமல் ஒழுக்க கேடுகளில் உழன்று அதனால்   இந்த  வாழ்க்கையில் செய்வதறியாது  நல்ல விஷயங்கள் செய்து நற்பலன்களையும் கெட்ட விஷயங்களை செய்து கேட்ட பலன்களையும் பெற்று அந்த பலன்களை அனுபவிப்பதற்காக மீண்டும் இந்த உலக மாயையில் சம்பந்தப்பட்டு மீண்டும் மீண்டும் பிறந்து சாகிறது . இந்தச்  சுழற்சியை ஏன் இறைவன் தடுப்பதில்லை என்று நீங்கள் கேட்கலாம் . அதற்கு காரணம் ஒரு உயிர்  மீண்டும் மீண்டும் பிறந்து வினை செய்து அதற்கான வினைபயனை அனுபவித்துக்  கொண்டே இருக்கும் போது ஆன்மாவுடன் ஒட்டியிருக்கும் ஆணவ மலம் பலவீனம் அடையும் என்று சாத்திரம் சொல்கிறது . பலவீனம் அடைதல் என்றால் ஒன்றுமில்லை உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்ந்து அனுபவப்படும்போது தன்னின் ஒழுக்க கேடுகளான ஆணவ மலத்தின் எட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து அதிலிருந்து தன் இயல்பை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும் அந்த முயற்சியின் வெற்றியே மலத்தின் பலவீனம் . இந்த பலவீனத்தை ஆன்மாவே செய்துகொண்டால் உண்டே தவிர இறைவனால் செய்ய முடியாது காரணம் இறைவன் செய்ய நினைத்தாலும் ஆன்மாவும் ஆணவமும் தனித்து இயங்கும் தன்மை என்பதால் அதை ஆன்மா பயன்படுத்தாது கெடுத்துக்கொள்ளும் ஆணவம் பயன்படுத்திக்கொள்ள விடாமல் தடுக்கும் எனவே தான் ஆண்டவன் உயிரே தன்னிச்சையாக அறிவு கொண்டு மீள வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை மட்டும் செய்து தருகிறார்  . இந்த ஏற்பாடுதான் இறைவனின் நான்காம் தொழிலான மறைத்தலாகும்


இதன் மூலம் நாம்  தெரிந்து கொள்ள வேண்டியது இறைவன் அமைத்து தந்திருக்கும் இந்த கருவிகள் கொண்ட சகல நிலையில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் சுழற்சியை உணர்ந்து அதற்கு காரணமான ஆணவத்தையும் அந்த ஆணவத்தால் உண்டான கன்மத்தையும் கன்மம் எனும்படியில் முக்கியமான வினைகளை பற்றியும்  புரிந்து செயல்பட ஆரம்பிக்க வேண்டும் . வினையை அறுத்தால் கன்மம் அழியும் கன்மம் அழிந்தால் ஆணவம் ஒடுங்கும் ஆணவம் ஒடுங்கினாள் ஆன்மா அஞ்ஞானத்தில் இருந்து மீண்டு சுத்த அறிவை பெறும் அப்போதுதான்  பரம்பொருள் தென்படும் . இதுவரை ஆணவத்துக்கு ஏதுவாக இருந்த கடவுள் அமைத்து தந்த மாயை இப்போது கடவுளை காணுவதற்கு உதவும் சுத்த மாயையாக மாறும்


நீங்கள் இப்படி கற்பனை செய்யுங்கள் ஒரு குழிக்குள் விழுந்திருக்கிறீகள் . அங்கே ஆணவம் இருளாக சூழ்ந்திருக்கிறது . கடவுள் உங்களை காப்பாற்ற கட்டைகளை போட்டிருக்கிறார் . நீங்கள் இருளுக்கு ஆகுதியாக அந்த கட்டைகளை எரித்து கொண்டு இருந்தால் அந்த வெளிச்சத்திலும் கத கதப்பிலும் சுகம் கண்டு அங்கேயே இருக்க வேண்டும் . நெடு நாள் இருந்து அறிவு வந்து இருளை யோசிக்காமல் கடந்து வெளியே வர யோசிக்கும்போது கடவுள் தந்த விறகை பாதி நெருப்புமூட்டி வெளிச்சமாகி மீதியை ஏணியாக்கி அந்த வெளிச்சத்தில் ஏணியேறி மேல வந்தால் அவன் ஈடேறமுடியும்  . இதுவே ஆன்மாவுக்குமாகும் . ஆணவத்தை சுகமூட்ட கடவுள் கொடுத்த மாய உலகத்தை வீணடித்து இங்கே உழலாமல்  ஆணவ மலத்தை அறுத்து கடவுள் கொடுத்த மாய உலகத்தையே ஏணியாக்கி இறையை அடைய வேண்டும் .


கட்டுரையாளர்: தாமல் கோ.சரவணன் M.Sc., M.Ed., எழுத்தாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்

உயிரிதொழில் நுட்பவியல் ( master in Biotechnology) ல் முதுநிலையும் பெற்றவர்.

தற்போது ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் ( Director of Syllabus committee board ) அமெரிக்காவின் Florida International University –யின் வள்ளலார் ஆய்விருக்கைக் குழு உறுப்பினராகவும் ( board member of vallalar chair) காஞ்சிபுரம் ஊர்க்காவல் படையின் மண்டலத் துணைத் தளபதியாகவும் (Deputy Area Commander of TamilNadu home guards) பிஏவி பன்னாட்டுப்பள்ளியில் துணை முதல்வராகவும் (vice principal) பொறுப்பு வகிக்கின்றார்.எழுதிய நூல்கள்.

1.வள்ளலார் வளர்த்த தமிழ்

2.தமிழ் வளர்த்த சான்றோர்கள்

3.காப்பியங்கள் அணிந்த காலணிகள்

4.கம்பன் கவியில் காத்திருப்பு



0 comments:

Post a Comment