Tuesday, September 16, 2025

சித்தாந்த அறிஞர்கள் - சீகாழி சிற்றம்பல நாடிகள்

சோழ நாடு சோறுடைத்து என்பது ஒளவையின் வாக்கு. சோறு என்ற பதம் உணவு என்ற பொருளை மட்டும் குறிப்பது அன்று. அதற்கு முக்தி என்ற பொருளும் உள்ளது. சோழ நாடு பல முக்திமான்களை வழங்கிய மண். சைவம் செழித்து இருக்கும் மண். அதில் சிற்றம்பல நாடிகள் ஒரு அநுபூதிமான்.



சிற்றம்பல நாடிகள் சோழ நாட்டில் சீகாழிப் பதியில் (புள்ளிருக்கு வேளூர்)  வேளாண் குடியில் பிறந்தவர். இவர் கங்கை மெய்கண்டார் என்பவரிடம் உபதேசம் பெற்று அவர் முத்தி அடைந்தபின் தாமே அந்த ஞான பரம்பரையின் தலைவரானார். தில்லைச் சிற்றம்பலவருடைய திருவருளையே நாடி நின்ற வகையில் இவர் சிற்றம்பல நாடிகள் எனப்பட்டார். இவரிடம் உபதேசம் பெற்றவர்களில் சம்பந்தமுனிவர், தத்துவப் பிரகாசர், தத்துவநாதர் போன்றோர் சிறந்து விளங்கியவர்கள். இவர்களை அன்றி ஞானப்பிரகாசர், கண்ணப்பர், மலபாடி பண்டாரம் போன்ற 63 பேர் அவருடன் சீடராக வாழ்ந்து வந்தார்கள். கௌரிமாயூரம் என்னும் மயிலாடுதுறையில் சிற்றம்பல நாடிகள் தன் குருவான "தத்துவப் பிரகாசருடன்" வழிபாடு மேற்கொண்டு சில காலம் இருந்தார்.

ஒரு நாள் இவர்களுடைய பரிசாரகன் (சமையல்காரன்) அவர்கள் உண்ணும் போது கவனக்குறைவால் வேப்பெண்ணெயைக் கொண்டு வந்து நெய் என்று உண்ணும் கலத்தில் படைத்து விட்டான். சிற்றம்பல நாடிகளும் மற்றைய அடியார்களும் கசப்புச்சுவை உணர்ச்சிக் காட்டாது உணவு உண்டனர். கண்ணப்பர் என்பவர் மட்டும் வேப்பெண்ணை என்று உணர்ந்து முகம் சுளித்தார். இதனைக் கண்ட சிற்றம்பல நாடிகள் "அவிச்சுவை அறிவான் தவச்சுவை அறியான்" என்று கூறினார். இதற்கு மிகவும் மனம் வருந்திய கண்ணப்பர் திருக்கூட்டத்தினின்று தாமே நீங்கி வடக்கு நோக்கிப் பயணித்து விட்டார்.

சில காலம் சென்ற பின்னர் சிற்றம்பல நாடிகள் தம் மாணவர்களுடன் சமாதியில் இறங்குவதாக அந்நாட்டை ஆண்ட அரசனுக்கு அறிவித்து சமாதி அமைக்கக் கட்டளையிட்டார். சமாதிகள் தயாராயின. இந்த அற்புத நிகழ்ச்சியைக் காண மக்கள் பெருந்திரளாக வந்து கூடினர். குறித்த நேரத்தில் சிற்றம்பல நாடிகள் அனைவரையும் ஆசீர்வதித்து மூன்று வெண்பாக்கள் பாடி நிட்டையில் இருந்தார். மாணவர்கள் அவரை வணங்கி ஒவ்வொரு வெண்பா பாடித் தத்தம் சமாதியில் இறங்கி அவர்திருவடியில் மனம் ஒன்றச் செய்து அவர்களும் சமாதி கூடிவிட்டார்கள். அந்தநேரம் அங்கிருந்த மக்கள் வடக்கே சென்ற கண்ணப்பர் என்ன ஆனாரோ என்று எண்ணியபோது கண்ணப்பர் அங்கு வந்து தனக்கு ஒரு சமாதி அமைக்கப் பெறாமைகண்டு சிற்றம்பல நாடிகள் சமாதியை வலம் வந்து வணங்கி  இங்கு நமக்கோர் இடம் தகுமாறு இரைஞ்ச " ஆண்ட குரு சிற்றம்பலவா அடியேற்கா"  எனத் தொடங்கும் ஒரு வெண்பா பாடினார். உடனே சிற்றம்பல நாடிகளின் சமாதி திறந்தது.  சிற்றம்பல நாடிகள் கண்விழித்து நோக்கிக் கண்ணப்பரைத் தழுவித் தன் மடியில் இருத்தி தம்மோடு இரண்டறக் கலக்கச் செய்தார். இவ்வற்புதம் நிகழ்ந்த இடம் இன்று மாயூரத்திற்கும்  மேற்கே சிறிது தூரத்தில் "சித்தர் காடு" என்ற ஊராகிவிட்டது. சமாதி ஒரு கோயிலாகக்கட்டப்பட்டுள்ளது.

சிற்றம்பல நாடிகள் பரம்பரையை விளக்கமாகக் கூறுகின்ற வெள்ளியம்பலவாணத் தம்பிரான் "ஏககாலத்தில் அறுபத்து மூன்று திருப்பெயருக்குச் சாம்பவ தீக்கையால் சத்தியோ நிர்வாண தானம் பண்ணித் தாமும் சிவகதி அடையும் பெருமையுடைய சிற்றம்பல நாடி பண்டாரம் "  என்று நாடிகளைக் குறிப்பிடுகிறார். ஒரே காலத்தில் 63 பேர்களுடன் சமாதி அடைந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும் பழைய பாடல்,

முத்தர் அறுபத்து மூவர் பணிந்தேத்தும்

சித்தர் வனந் தில்லைச் சிற்றம்பலவா - பத்தர்

பவ இருளை நீக்கி அருள் பானுவே! துய்ய

தவவடிவே நின்தாள் சரண்         


சிற்றம்பலநாடிகள் அருளிய நூல்கள்

சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்து என்ற ஒரு நூல் திரட்டு ஏட்டுச் சுவடிகளில் உள்ளது. அதை முதன் முதலில் திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை 1904 ஆம் ஆண்டு அச்சிட்டார். பொதுவாக வழங்கும் சிற்றம்பல நாடிகள் வரலாறு அந்நூல் முகவுரையில் அவர் எழுதியதே ஆகும். இச்சாத்திரக் கொத்து ஒன்பது பிரிவுகளை உடையது. இவற்றுள் சிற்றம்பல நாடிகள் பாடியனவும் அவர் மாணவர்கள் பாடியனவும் அடங்கியுள்ளன.

சாத்திரக் கொத்திலுள்ள நூல்கள்

துகளறு போதம்

செல்காலத்திரங்கல்

வருகாலத்திரங்கல்

நிகழ்காலத்திரங்கல்

சிற்றம்பலநாடிகள் அனுபூதி விளக்கம்

சிற்றம்பலநாடிகள் தாலாட்டு

சிற்றம்பலநாடிகள் வெண்பா

சிற்றம்பலநாடிகள் கட்டளைக் கலித்துறை

திருப்புன் முறுவல் என்பன.

இவற்றுள் துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன் முறுவல் ஆகிய ஐந்தும் சிற்றம்பல நாடிகள் பாடியவை. மற்ற நான்கும் அவருடைய மாணவர்கள் பாடியவை என்று சொல்லப்படுகிறது. (தமிழ் இலக்கிய வரலாறு பொ.ஆ.பி. 14ஆம் நூற்றாண்டு மு. -அருணாசலம் எம்.ஏ, பக்கம்185,186)

துகளறு போதம்

இந்நூல் மதுரை சிவப்பிரகாசர், திராவிட மாபாடியம் செய்த சிவஞான சுவாமிகள் போன்ற சிறந்த சித்தாந்த உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற பெருமை உடையது. கற்பக விநாயகர் காப்புச் செய்யுளும், 100 வெண்பாக்களும், இறுதியில் நூற்பொருள் கூறும் இரு பிற்கால வெண்பாக்களும் உள்ளன. சிறப்புப்பாயிர அகவல் ஒன்றும் நூற்பொருளும் செய்யுள் தொகையும் கூறும் அகவல் ஒன்றும் உள்ளன.

சைவ சித்தாந்தத்தில் தசகாரியம் என்பது,

தத்துவ ரூபம்,

தத்துவ தரிசனம்.

தத்துவகத்தி,

ஆன்ம ரூபம்,

ஆன்ம தரிசனம்,

ஆன்ம சுத்தி,

சிவ ரூபம்,

சிவதரிசனம்,

சிவயோகம்,

சிவபோகம்

என சாத்திர நூல்கள் கூறும்.  இவற்றை சில சாத்திரங்கள் முப்பது நிலைகளாகத் தொகுத்துக் கூறும். இவ்வாறு கூறும் முதல் சாத்திரம் துகளறு போதம். நூற்பெயரின் பொருள், ஆன்மாவிடத்தில் உள்ள துகளாகிய தொல்லை மலம் அறுவதற்கு ஏதுவாகிய துகளறு போதம் என்னும் சிவஞானத்தை விளைவிப்பதாகும்.

இந்நூலின் வெண்பாக்கள் சித்தியார், உண்மைவிளக்கம் போன்ற முந்தைய சாத்திரங்களின் கருத்தையும் மொழியையும் எடுத்தாளுகின்றன. "திருவருளைப் பெற்று அனுபவித்த அடியார் வாக்கு" என்று மதுரை சிவப்பிரகாசர் சிற்றம்பல நாடிகளைப் போற்றிக் கூறி இருக்கிறார்.

சிற்றம்பலநாடிகள் சரியையாகிய தாச மார்க்கத்தைக் கூறும்போது திருவலகு, திருமெழுகு, திருவிளக்கு என்பவற்றைச் சொல்லிய பின் சிவபெருமானுக்குப் புதிய கோயில் எடுப்பவர்களும் சீரழிந்த பழைய கோயில்களைப் புதுப்பிப்பவர்களும் சிவலோகம் அடைவார்கள் என்று ஒரு புதிய பணியையும் சேர்த்து சொல்கிறார்.

சிற்றம்பல நாடிகளின் காலம் 1325 - 1350 என்று குறிப்பிட்ட அருணாசலம் அவர்கள் 1310 இல் டில்லி சுல்தானின் படைத்தலைவனாகிய மாலிக்காபூர் என்பவன் மதுரையின் மீது படையெடுத்துச் சென்று அழித்ததை அறிந்த சிற்றம்பல நாடிகள் மனம் வருந்தி திருக்கோயில் சீரமைப்புப் பணிகளையும் சேர்த்து  செய்திருப்பார் என்று கருதுகிறார்.

குருபூஜை

ஒவ்வொரு சித்திரை திருவோணத்தன்றும் சிற்றம்பல நாடிகளின் குருபூஜையும் அவர் சீடர்களுடன் சமாதியடைந்த நிகழ்வும் சித்தர்காடு ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றன.

கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு


0 comments:

Post a Comment