வினை என்று நாம் பொதுவாகச் சொல்லும் கன்மம் உண்மையில் நம் நன்மைக்காகவே உண்டாகின்றது. பொதுவில் ஆணவம் , கன்மம், மாயை என்று மும்மலங்களில் ஒன்றாக கன்மம் சொல்லப்பட்டாலும் உண்மையில் உயிரைப் பற்றியிருக்கிற ஆணவ மலத்தை நீக்குவதற்காகவே இறைவன் கன்மம் ,மாயை என்றவற்றை உயிருக்கு கூட்டுகிறான். கூட்டுவது அவனாயினும் கூடும் அளவும் ஸ்திரமும் உயிர்கள்தான் செய்து கொள்கின்றன. உயிர்களுக்கு உடம்பை எடுத்த பின்னும் சரி தவறு என்பதை உணரும் அறிவும், நல்லது கெட்டது என்று எதன் மேல் பிரியம் வைக்க வேண்டும் என்ற இச்சையும் அதற்கான செயலை செய்யும் தன்மை இருப்பினும் அதனை செய்ய விடாமல் ஆன்மாவை அறியாமையிலேயே அழுத்துவதே ஆணவத்தின் தன்மை. உயிரின் அறிவு இச்சை செயல் போன்றவற்றை ஆணவமானது மறைக்குமே ஒழிய அழிக்காது. அவ்வாறு மறைத்து நிற்கும் ஆணவத்தை விளக்குவதே கன்மம் தான். ஆணவம் என்கிற எதிராளியின் கூட்டாளியாய் இருக்கிற கன்மம் எப்படி எதிராளியையே அழிக்கும் என்று நமக்கு தோன்றும். இந்த இடத்தை நாம் குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஆணவம் என்பது அறியாமை. கன்மம் என்பது வினை. வினை என்றால் ஒரு உயிர் பிறந்து பிறந்து வாழ்ந்து சேர்க்கிற புண்ணிய பாவம். அந்த புண்ணிய பாவத்தால் அதற்கான பலனை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறது. ஒரு சூடான பால் நக்கினால் சுடும் என்கிற அறிவை ஒரு பூனையை பக்கத்தில் உட்கார வைத்து எவ்வளவு தான் வகுப்பெடுத்தாலும் அதற்கு புரியப்போவது இல்லை. காரணம் அது அறியாமையில் இருக்கிறது. அதை உங்கள் அறிவைக் கொண்டெல்லாம் பக்குவப்படுத்த முடியாது. நாலு முறை அதுவே போய் வாய் வைக்கும் நாக்கை சுட்டுக்கொள்ளும் ஐந்தாவது முறை நீங்கள் ஆறிய பாலையே வைத்தாலும் உடனே வந்து தொடாது. காத்திருக்கும் இல்லையேல் மேலோட்டமாய் சூட்டினை அளந்து பார்த்து குடிக்கும். இப்போது இந்த அறிவு அந்தப் பூனைக்கு எப்படி வந்தது? ஒன்றுமில்லை பட்டுத் திருந்தியது அவ்வளவே. அப்படிதான் வினைப் பயனால் இந்த உயிர் அனுபவப்பட்டு அனுபவப்பட்டு பக்குவம் அடைகிறது, அறிவை பெறுகிறது. அறிவை பெற்ற உயிர் இறைவனை நோக்கி நகர்கிறது. இப்போது பாருங்கள் ஆணவத்தின் அறியாமையில் இருந்த உயிருக்கு அறிவைத்தூண்டியது எது என்றால் ஆணவத்தின் கூட்டாளியான கன்மம் என்கிற வினையே ஆகும். ஆக, ஆணவத்திற்கும் ஆண்டவனுக்கும் இடையிலே நிற்கிற ஆன்மாவை ஆணவத்திலேயே அழுந்த வைப்பதும் ஆண்டவனை நோக்கி வரவைப்பதும் கன்மத்தின் கையில்தான் இருக்கிறது. இவ்வளவு முக்கியமான கன்மத்தை புரிந்து கொண்டு அதை கையாளத்தெரிந்தால் அதுவே யோகம் தான்.
கன்மம் என்னும் வினை தன்னை செயல்படுத்திக் கொள்ள நம்மிடம் உள்ள மூன்று விஷயங்களை பயன்படுத்தி கொள்கிறது. அவை மனம், வாக்கு, காயம் (உடம்பு). அதாவது உயிர் உடம்பால், வார்த்தைகளால் மற்றும் மனத்தால் செய்கிற பாவ புண்ணியங்கள் அந்த உயிருக்கே இன்ப துன்பமாய் வந்து சேரும். இந்த மனம், வாக்கு, உடம்பு மூலம் நாம் சேர்த்துக்கொள்கிற பாவ புண்ணியங்கள் ஆகாமியம் எனப்படுகிறது. இந்த பாவ புண்ணியம் இந்த பிறவியிலேயே உயிருக்கு திருப்பி தரும் வரை அல்லது அடுத்த பிறவிக்கு கொண்டு வந்து தரும் வரை சூட்சுமமாய் நிற்கும் இந்நிலைக்கு சஞ்சிதம் என்று பெயர். சஞ்சிதமாய் இருந்த நல்வினை தீவினை அந்த உயிர்க்கு பாவம் செய்த தகுதிக்கேற்ப துன்பத்தையும் புண்ணியம் சேர்த்த அளவிற்கு இன்பத்தையும் கொடுக்கும் வெளிப்பாட்டு நிலைக்கு வரும்போது பிராரத்தம் எனப்படுகிறது .
நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆகாமியம் சேர்க்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரார்ரத்தமாய் வந்து சேரும். அதாவது நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்கிறீர்களோ அவ்வளவும் உங்களுக்கு நன்மையாகவும் எவ்வளவு பாவம் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு தீமையாகவும் உங்களுக்கே வந்து சேரும். நம் பாவ புண்ணிய கணக்கை சித்திர குப்தன் என்கிற யாரோ ஒருவன் தொப்பி போட்டுகொண்டு எழுதுகிறானோ இல்லையோ நம் உயிரில் பிணைந்திருக்கிற கன்மம் அதை கண கச்சிதமாய் நம்மிடம் சேர்க்கும. செய்த பாவத்திற்கு அடி வெளுக்கவும் செய்யும், புண்ணியத்திற்கு இன்பத்தை தந்தும், கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும் என்று கன்மம் கறாராக இருக்கும் .
நம் வாழ்வின் இன்ப துன்பங்களை தீர்மானிக்கிற இந்த வினையை உயிர் எப்படியெல்லாம் பெறுகிறது என்று திருவருட்பிரகாச வள்ளலார் சொல்வார். அது ஒன்றே இதை புரிந்து கொள்ள போதுமானது. “நன்மை தீமை என்பவை யாவை? நன்மை தீமையென்பவை புண்ணிய பாவம். புண்ணிய மென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். பாவ மென்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.
புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வாறடைகின்றன? மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும். மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால் வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மையடையும், அவையாவன:- மனத்தினால் பரதாரகமனம் பண்ண நினைத்தல் (பிறன்மனை விழைதல்), அந்நியருடைய சொத்தை கிரகிக்க நினைத்தல், அந்நியருக்கு தீங்கு செய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் – இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள். வாக்கினால் பொய் சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் – இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள். தேகத்தினால் பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்கு செய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் – இந்நான்கும் தேகத்தாலுண்டாகும் பாவங்கள். இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மையுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் – இவை மனத்தால் வரும் புண்ணியங்கள். பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் – இவை நான்கும் வாக்கினாலுண்டாகும் புண்ணியங்கள். அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான தேகத்தாலுண்டாகும்
அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும்? அறிந்த பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின், “நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும் அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே!” என்று பச்சாத்தாபப் பட்டுப் பெரியோர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச்சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்வதுமன்றி, யாத்திரை மேற்கொண்டு, புண்ணிய ஸ்தலங்களிற் சென்று வசித்து, இயன்ற அளவில் அன்ன விரயஞ்செய்தால் நீங்கும். மேலும், சத்தியற்றவர்கள் மகான்களுக்குத் தொண்டு செய்தும், மகான்கள் நேரிடாத பட்சத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து அவர்கள் தரத்திற்கொத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் நீங்கும்.
அறியாத பாவங்கள் எனபது, நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் நேரிடும் பாவங்களாம். அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகும். இவைகள் யாவும் தினமும் செய்யும் ஜபத்தாலும், பாராயணத்தாலும், ஸ்தோத்திரத்தாலும், விருந்து உபசரித் தலாலும் நீங்கும்.
பிராயச்சித்த முதலியவைகள் செய்யாவிட்டால் பாவங்களால அடையும் கதியென்ன? மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி (இழிபிறப்பு) சரீரமுண்டாகும். வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும். தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்”. என்று முடிக்கிறார் .
மேற்கண்ட வள்ளலாரின் உபதேசத்தில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய சங்கதிகள் பல இருக்கிறது. அதாவது மனத்தால் வரும் பாவங்கள் என்று நான்கையும், வாக்கால் வரும் பாவங்கள் நான்கையும், உடம்பால் உண்டாகும் பாவங்கள் நான்கையும் சொல்கிறார். இது அவருடைய பார்வை. இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயம் என்னவென்றால் ஒரு பொருளை கைக் கொண்டு திருடினால் பாவம், கை கொண்டு திருடினால் மட்டுமல்ல திருடலாம் என்று பேசிக்கொண்டாலே பாவம் தான், பேசிக்கொண்டால் மட்டுமல்ல திருடலாம் என மனதில் நினைத்தாலே பாவம் தானாம். உடலால் செய்த பாவங்களால் உயிர் உடலாலேயே துன்பம் பெறும், வார்த்தைகளால் செய்யும் பாவங்களால் உயிர் வார்த்தைகளாலே துன்பம் பெறும், மனத்தால் செய்யும் பாவங்களால் உயிர் மனத்தாலே துன்பம் பெறும் என்பதை நாம் உணர வேண்டும். பாவ புண்ணியம் தொடரும்.
கட்டுரையாளர்: தாமல் கோ.சரவணன் M.Sc., M.Ed., எழுத்தாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்
உயிரிதொழில் நுட்பவியல் ( master in Biotechnology) ல் முதுநிலையும் பெற்றவர்.
தற்போது ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் ( Director of Syllabus committee board ) அமெரிக்காவின் Florida International University –யின் வள்ளலார் ஆய்விருக்கைக் குழு உறுப்பினராகவும் ( board member of vallalar chair) காஞ்சிபுரம் ஊர்க்காவல் படையின் மண்டலத் துணைத் தளபதியாகவும் (Deputy Area Commander of TamilNadu home guards) பிஏவி பன்னாட்டுப்பள்ளியில் துணை முதல்வராகவும் (vice principal) பொறுப்பு வகிக்கின்றார்.எழுதிய நூல்கள்.
1.வள்ளலார் வளர்த்த தமிழ்
2.தமிழ் வளர்த்த சான்றோர்கள்
3.காப்பியங்கள் அணிந்த காலணிகள்
4.கம்பன் கவியில் காத்திருப்பு
0 comments:
Post a Comment