Thursday, July 3, 2025

சித்தாந்த அறிஞர்கள் - சூளை சோமசுந்தரநாயகர்

பாஸ்கர சேதுபதி மன்னர் அவர்களால் வைதீக சைவ சித்தாந்த சண்ட மாருதம் என்னும் விருதளிக்கப்பட்டதோடு சிறப்பிக்கப்பட்டவர் சூளை சோமசுந்தர நாயகர். திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியால் "பரசமயக் கோளரி" (மற்ற சமயங்களை வாதில் வென்றவர் என்ற பொருள்படும்) என்னும் பட்டமளிக்கப்பட்டு பாராட்ட பெற்றவர் சபையோர்களால் "சைவ மார்த்தாண்டன்" என சிறப்பிக்கப்பட்டவர். 

19ஆம் நூற்றாண்டின் தமிழ் உலகத்தில் தத்துவ வித்தவராக விளங்கியவர் சூளை சோமசுந்தர நாயகர். மேலும் தமிழ் உரைநடை வரலாற்றுக்கு முன்னவராக இருந்து 50-ற்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை படைத்தவர், தனித்தமிழ் உரைநடை தொடங்குவதற்கு மூல காரணமாக இருந்தவர்.


06.08.1816 ல் பிறந்து 22.02.1901 இல் இறைவனடி சேர்ந்த சோமசுந்தர நாயகர், ராமலிங்க நாயகருக்கும் அம்மணி அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர். சிவஞானம் என்னும் அம்மையாரை திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தியவர். ஜெகதாம்பாள், விசாலாட்சி, லோகாம்பாள் என்னும் மூன்று பெண் மக்களும் "சிவபாதம்" என்னும் கடைசியாக பிறந்த ஆண் பிள்ளையும் அவருடைய மக்கள்கள். லோகாம்பாள் இளமையிலேயே இறந்து விட்டார் மற்ற பெண் பிள்ளைகளை முறையாக இல்லற வாழ்வில் ஈடுபடுத்தி அமைத்தார்.


என் 69 விஜய விக்னேஸ்வரர் கோவில் வீதி சூலை சென்னபட்டினம் என்பது நாயகரின் இல்ல முகவரியாக நூல்களில் காணப்படுகின்றது.


தொடக்கத்தில் தோல் கிடங்கில் கணக்கராக வேலை பார்த்து கொலை தொழில் மூலமாக காசு வேண்டாம் என அதனை விடுத்து சென்னை நகரான்மை கழகத்தில் வேலை பார்த்தார் அங்கும் பொய் சொல்லுதல் என்று வரும்போது அதனையும் விடுத்து 35 ஆம் வயதில் சைவத்தொண்டில் ஈடுபாடு செய்ய ஆரம்பித்தார். 


வைணவ குடும்பத்தில் பிறந்த சோமசுந்தர நாயகரின் இளமைப் பெயர் அரங்கசாமி தமிழிலும் வடமொழியும் கற்ற நாயகர் சென்யன் பெயஜதானிக் கல்லூரியில் (மாநிலக் கல்லூரி) ஆங்கிலமும் தெலுங்கு தேர்ச்சி அடைந்து "அச்சுதானந்தர் தேர்ந்தர்" என்று குருவின் சீடராக முதலில் சங்கர வேதாந்த தத்துவத்தில் சேர்ந்தார்.


சோமசுந்த நாயகர் அவர்கள் தம் 25 ஆம் வயதிற்குள் முதல் நூலை வெளியிட்டிருந்தார். கிபி 1868 இல் வெளிவந்த "வேத பாஷய சமாஜ கண்டனம்" என்பது நாயகரின் முதல் நூல். வேத சமாஜம், பிரம்ம சமாஜம் பரவ தொடங்கி உருவ வழிபாட்டு மறுப்பு வந்த போது அதனை எதிர்த்து உருவ வழிபாட்டின் உண்மையை விளக்கி நாயகர் எழுதிய நூல் அது. வேத மற்றும் பிரம்ம சமாஜக் கொள்கை எதிர்ப்பில் நாயகர் அவர்களின் ஆளுமை தொடக்கத்தில் அதிகமாக வெளிப்பட்டது. அடுத்து கிறிஸ்துவ பரப்புரைக்கு எதிர்ப்பாக எழுதியது "சிவ வாக்கிய தெளிவுரை" என்ற நூலாகும்.


வடமொழி நூல்களை பலவாறாக கற்று, வடசொல் நுண்பொருள்களை விரிப்பதில் வல்லவராகவும் தத்துவ நூல் அறிவில் தன் உழைப்பை செலுத்தியும் உள்ளார். மெய்கண்ட சாத்திரங்கள் தன் கைக்குக் கிடைத்த போது சைவ சித்தாந்தியாக உருவெடுத்த சோமசுந்த நாயகரின் ஆளுமை, தமிழகத்தில் சைவம் மற்றும் தமிழ் என இரண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆளுமையாக பரிணமித்தது.


தம் மாணவர்கள் பெயரிலும், அரக்கோணவாசி. அத்வைதி, வீரபத்திரமூர்த்தி, என பல பெயர்களில் வாதப்பூர் நிகழ்த்தினார் வைதீக சைவ சித்தாந்த சண்டமாருதம் சூளை சோமசுந்தர நாயகர். நூற்றுக்கும் மேற்பட்ட நாயகரின் படைப்புகள் அவரின் தமிழ், சமய, தத்துவ புலமையை பறைசாற்றும் வண்ணமாக இன்றும் உள்ளன.


( 1901ல் சித்தாந்த தீபிகை இதழில் நாயகர் மறைவின்போது இதழின் ஆசிரியர் ஜே எம் நல்லுசாமி பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அவருடைய இறுதி மரியாதை கட்டுரை . தமிழில் செல்வி அகிலாண்டேஸ்வரி எம் ஏ அவர்கள் மொழிபெயர்த்து உள்ளார்)


சைவ சமயச் சான்றோரும் அச்சமய சித்தாந்திகளில் துறை போகியவருமான சோமசுந்தர நாயகரின் மறைவு சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவர் பிரபவ ஆண்டு ஆவணித்திங்கள் இரண்டாம் நாள் பிறந்தார். தன்னுடைய 55 வது வயதில் இயற்கை எய்தினார். "அரங்கசுவாமி" என்ற இயற்பெயராகிய இவர் வைணவ குடும்பத்தில் பிறந்தாலும் இளமையிலேயே தம்முடைய உறவினரும் சைவத் துறவியுமான  ஏகாம்பர சிவயோகியால் வளர்க்கப்பட்டார். தம்முடைய புலமைத்திறத்தால் குருவுக்கு பெருமை சேர்த்தார் இவர் காரணமாகவே உலகினர் இவருடைய குருவை அறிந்தனர்.


படித்த பாடத்தில் பட்டம் பெறவில்லை என்றாலும் மாநிலக் கல்லூரியில் சில காலம் பயின்றார்.  யூசிஎஸ் தேர்வில் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் தேர்ச்சி பெற்றார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் போது  சமய போதனை மற்றும் இலக்கியப் பணிகளின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இரு குதிரைகளின் மீது ஒரே நேரத்தில் பயணிக்க முடியாது என்று முடிவெடுத்து 1881 ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகினார். உலக விருப்பத்தில் அவர் அதிக நாட்டம் செலுத்தியிருந்தால் பதவியில் நிலைத்திருந்து தம்முடைய கூர்ந்த மதியாலும், கடின உழைப்பாலும், உயரிய பதவியை பெற்றிருப்பார். ஆனால் அவர் அத்தகைய சிறப்புகளை சைவ சமயத்தின் மூலம் பெற்றார் என்பது உண்மை.


ஏகாம்பர சிவயோகியிடம் தம்முடைய சமயப் பணிக்காக பயிற்சி பெற்ற நாயகர், அவருக்கு எக்காலத்திலும் நன்றி உடையவராக இருந்தார். சிவயோகி ஒரு வேதாந்தி என்ற காரணத்தினால் நாயகர் முதலில் வேதாந்தத்தை கற்று உணர்ந்தார். வைணவராக பிறந்து, வேதாந்தியாக வளர்ந்த நாயகர், சைவ சித்தாந்தியாக உருப்பெற்றது அவரின் அறிவின் தேடலாலும், தனித்துவ நாட்டத்தாலும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணகாரியங்களில் அடிப்படையில் எதனையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை படைத்தவர் நாயகர். மேலும் அவருடைய எல்லா எழுத்துக்களும் "அறிவே நமது வழிகாட்டி" என்பதை உணர்த்தும்.


இதன் காரணமாக நாயகர் தம்முடைய குருவின் உபதேச போதனை கூற்றுகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். இந்நிலையில் புகழ்பெற்ற பண்டிதரும் சைவ சித்தாந்த பதிப்பாசிரியரும் ஆகிய மதுர நாயக வாத்தியார் 14 சித்தாந்த நூல்களை நாயகருக்கு அளித்தார். அந் நூல்கள் தம்முடைய ஆன்மத் தேடல்களுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்திருப்பதை உணர்ந்த சோமசுந்தர நாயகர் அதனை நுண்மையாக கற்று உணர்ந்தார் .சைவ சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டார். அன்று முதல் தம்முடைய வாதத்திறனால் பலரையும் சித்தாந்தியாக மாற்றினார்.


வைணவம் பெரும் செல்வாக்குடன் விளங்கிய அக்கால சமூக சூழலில் நாயகரின் பணி மிகவும் பெரிய பணியாக கருதப்பட்டது. வைணவ போதகர்கள் சைவத்தை மிகவும் அருவருக்கத் தக்க முறையில் சாடியதை கண்ட நாயகரின் நண்பர்கள் சிலர், அவர்களின் தவறான கருத்துக்களை நாயகர் பேச்சாலும் எழுத்தாலும் மறுக்குமாறு வேண்டினர். இதன் காரணமாக "சிவாதிக்யாரத்னாவளி" என்ற நூலை இயற்றி அந்நூலில் வைணவ மற்றும் வேதாந்த கருத்துக்களை மறுத்ததோடு தம் சமய உண்மைகளையும் புலப்படுத்தினார். 1873இல் எழுதப்பட்ட இந்நூல் திறனாய்வு போக்கில் அமைந்த மிக அரிய நூலாகும். 1878ல் இருந்து சித்தாந்த ரத்னாகரம் (ocean of truth)என்ற தொடர் பதிப்புகளை வெளியிட்டார்.


இந்நூலில் பிற சமய வாதங்களின் மறுப்புரைகளோடு (வைணவம் மற்றும் வேதாந்த வாதங்கள்) சைவ சமய உண்மைகளையும் எடுத்துரைத்தார். பிற்காலத்தில் அவருடைய மாணவரின் பெயரால் "சித்தாந்த ஞான போதம்" என்ற இதழை நடத்தினார். ஆசிரியராக பணி புரிந்ததோடு சமய போதகரமாகவும் கட்டுரைகள் பல எழுதினார். இக்கட்டுரைகளால் சித்தாந்த கருத்துகள் தமிழகமெங்கும் பரவியது என்றால் அது மிகையாகாது. சைவம் என்பது நகைப்புக்குரியதாகவும், பொருளற்றதாகவும், கோயிலுக்குள் செல்லும் ஒரு சடங்காகவும் கருதப்பட்டு வந்த காலத்தில், இவர் ஆற்றிய பணி மிகச் சிறந்ததாக கருதப்பட்டது. சித்தாந்த நூல்கள் கற்றுணர்த்தப்படாமல் பெயரளவில் மட்டும் அறியப்பட்டதாய் அமைந்திருந்தது.


திருச்சிராப்பள்ளி மதுரை கோயம்பத்தூர் சேலம் பெங்களூர் மற்றும் இன்ன பிற நகரங்களிலும் பெரும் கூட்டத்தினர் நடுவில் நாயகர் உரையாற்றினார் ஐரோப்பிய அறிஞர் ஒருவரால் "திராவிட அறிவுத்திறனில் விளைந்த நல்முத்து" (the choicest product of Dravidian intellect) என்று வர்ணிக்கப்பட்டார். தத்துவ உண்மையையே தன்னுடைய சமய அமைப்பிற்கு பின்புலமாக அமைந்துள்ளது என்பதை ஒவ்வொரு சைவனுக்கும் உணர வைத்தார். 


சோமசுந்தர நாயகர் சித்தாந்தத்தின் உலகப் பொதுமையை சுட்டியதோடு பிற தத்துவங்கள் அனைத்தும் அதன் பகுதிகளே என்பதை உணராது, மக்கள் தங்களுக்குள் முரண்படுகின்றனர் என்றார். இந்நிலைக்கு "குருடர்கள் கண்ட யானையை" உவமை ஆக்கினார். சைவ சமயத்தையும் அதன் தத்துவங்களையும் பேரரசனின் அரண்மனைக்கு உவமையாக்கி அரண்மனையானது அரசனுக்கும், அரச குடும்பத்தினருக்கும் மட்டும் உரியதாக அமைவது, அதன் உட்புற எழிலானது சாதாரண பார்வையாளனின் கண்ணிற்கும் கருத்திற்கும் எட்டாத வகையில் அமைந்திருப்பது என்றார்.


இடையறாது பணியாற்றிய இவருடைய செயல் திறனை இன்று 100 தனி பதிப்புகளாக கிட்டும் அவருடைய எழுத்துக்களே உணர்த்துகின்றன. நாயகரின் எழுத்து நடை தனித்தன்மை உடையதாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது. எளிய உரைநடையில் சைவ சமய மற்றும் சித்தாந்த உண்மைகளை எடுத்துரைத்த பெருமை இவரை சாரும். இதற்கு முன்னர் ஆறுமுக நாவலர் வினா விடை போக்கில் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.


மடாதிபதிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என பலராலும் சிறப்பு செய்யப்பட்ட சோமசுந்தரர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். பணியில் இருந்து விலகிய பின் இவர்கள் அன்பின் காரணமாக செய்த பொருள் உதவியினாலே வாழ்வை செம்மையாக மேற்கொண்டார். இவருடைய இறுதி காலத்தில் பெரும் வேலை சுமை காரணமாக உடல் தளர்வுற்றது. இவருடைய மரணமும் உடல் தளர்வினால் ஏற்பட்டதே அன்றி நோயினால் ஏற்படவில்லை. இறுதிவரை இவருடைய பார்க்கும் திறனும் அறிவு சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இலக்கியப் பணி தடைப்படவில்லை. இவருடைய உடல் நிலையை சுட்டி சில நண்பர்கள் இரண்டு மாதங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு வேண்ட, தான் விரும்பினாலும் அது இயலாது என்றார்.


சமூகத்தில் சிறந்த நண்பராக, கடமையுள்ள கணவராக, பாசமுள்ள தனையனாக வாழ்ந்தார். தீவிர சைவராக இருந்த பொழுதிலும் வைணவர்களையும் வேதாந்திகளையும் நண்பர்களாக பெற்றிருந்தார். எல்லா நிலைகளிலும் வீண் புகழ்ச்சியாளர்களை வெறுத்த அவர் மிகச்சிறந்த வாழ்வை வாழ்ந்து காட்டினார். தன்னை ஒரு துறவியாக எக்காலத்திலும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. வழிபாட்டின் வாயிலாக பக்தி செலுத்தியதை விட, சித்தாந்த பேராசானாகவும், எழுத்தாளராகவும் அரும் பணி செய்தார், எனினும் கோவில் வழிபாட்டை மறுத்தவரும் இல்லை. கோவில் வழிபாடு குறித்து அவர் ஏற்றிய "அர்ச்சாதீபம்" மிகச் சிறந்த நூலாகும்.


தெய்வக் குழந்தையாகிய ஞானசம்பந்தரை அடியொற்றியவர் இவர். அப்பர் சுந்தரர் மணிவாசகர் சம்மந்தர் போன்ற பெரும் அருளாளர்களையும், ஆசாரியர்களையும், வழிபடும் போக்கினை ஏற்படுத்தினார். அவருடைய வாழ்வும் வாக்கும் குறித்த நூல் விரைவில் வெளியிடப்படும்.


நாயகரின் மரணமும் அவர் விருப்பப்படி அமைதியாக ஏற்பட்டது. நாயகரின் குருக்கள் வரவழைக்கப்பட்டார். திருநீறு தரப்பட்டது. திருவாசகம் ஓதப்பெற்றது. சிவ நாமத்தை மூன்று முறை உச்சரித்து இறைவனடி சேர்ந்தார். 


நாயகரின் நினைவினை போற்றும் வகையில் நண்பர்களும் அன்பர்களும் நினைவு மண்டபம் ஒன்றினை எழுப்பி அதில் அவருடைய உருவப்படம் ஒன்றினை வைத்து அழகு செய்ய விரும்புகின்றனர்.


கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு

0 comments:

Post a Comment