ஆன்ம அவத்தைகள் - பாகம் 1
உடம்பு என்கிற இந்த வசதிமிக்க பெரிய வீட்டின் உரிமையாளர்தான் ஆன்மா. இந்த வீட்டில் ஆன்மா புழங்குகின்ற முக்கிய அறைகள் ஐந்து – புருவமத்தி, கழுத்து, இருதயம், தொப்புள், மூலாதாரம் என்பவையே அவை ஆன்மா என்கிற உரிமையாளர் தன் தேக வீட்டின் புருவமத்தி அறையில் இருக்கின்ற போது நனவு என்கிற அனுபவத்தையும், கழுத்துப்பகுதிக்கான அறைக்கு வரும்போது கனவு எனும் அனுபவத்தையும், நெஞ்சத்து அறைக்கு வருகிறபோது உறக்கம் எனும் அனுபவத்தையும், தொப்புள் அறைக்கு வருகின்றபோது துரியம் எனும் அனுபவத்தையும், மூலாதார அறைக்கு வருகின்ற போது துரியாதீதம் எனும் அனுபவத்தையும் பெறுகிறது. அந்தந்த அறைக்குச்சென்று அந்தந்த அனுபவத்தைப் பெறுகின்றது என்பதைவிட அந்தந்த அனுபவத்தைப் பெற அந்தந்த அறைக்குத் தானே போய்விடுகிறது என்பது சாலப் பொருந்தும்.
ஆன்மா ஒரு சதசித்து என்பதை நாம் ஏற்கனவே அறிந்ததுதான், தானாக அறியும் அறிவற்றது, அறிவதற்குரிய கருவிகள் அமையும்போதே அறிகின்றது கருவிகள் என்ன அறியமுடியுமோ அதையே அறிகின்றது “அறிய அறிவிக்கும் அறிவு”. ஆன்மாவினுடைய இந்த அறிவுநிலை காரிய அவத்தைகளான இந்த ஐந்தினுள் ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொருமாதிரி மாறுபடுகிறது. அறிய அறியும் தன்மைக்கேற்ற ஆன்மாவின் அறிவனுபவத்திற்குரிய கருவிகள் ஒவ்வொரு நிலைகளிலும் மாறுபடுகிறது அல்லது குறைகிறது. புருவமத்தியில் இருந்து மூலாதாரத்தை நோக்கி ஆன்மா கீழாக வருகிற போது அறிய அறியும் கருவிகளை இழந்துகொண்டே வருகிறது அதாவது அதன் அறியும் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. அதனாலே இந்த புருவமத்தி – மூலாதார ஆன்ம பயணத்தை கீழாலவத்தை என்கிறோம். அறிவுடைய ஆன்மா அறிவற்ற தன்மைக்கும், சித்தான ஆன்மா அசித்தான நிலைக்கும், போகிற தன்மையாலேயே இதை கீழாலவத்தை என்கிறோம். இந்த நிலையில் சகல நிலைக்கு கருவிகளைக் கொண்டு உடம்போடு வந்த ஆன்மா உடம்புக்குள்ளேயே கருவிகளற்ற அறிவற்ற கேவல நிலைக்குரிய அனுபவத்தை நோக்கிச் செல்வதால் இந்த கீழாவலத்தையின் ஐந்து நிலைகளை கேவல சாக்கிரம், கேவல சொப்பனம், கேவல சுழுத்தி, கேவலதுரியம், கேவலதுரியாதீதம் என்கிறோம்.
ஆன்மா மீண்டும் மூலாதாரத்தில் இருந்து கருவிகளை ஒவ்வொன்றாய் பெற்றுக் கொண்டு மேலேறி புருவமத்திக்கு வருவது மேலாலவத்தை என்படுகிறது. புருவமத்தியை அடைந்த ஆன்மா அங்கேயே நிலைபெற்று ஐந்து அனுபவங்களை உணர்வது மத்தியாலவத்தை எனப்படுகிறது. சகல என்பதே அறிவோடு கூடிய நிலை என்பதால் அந்த அறிவோடு புருவமத்தியில் ஆன்மா நின்ற படியே நனவு, கனவு முதலான ஐந்து நிலைகளையும் அனுபவிக்குமேயாயின் அதனை மத்தியாலவத்தை என்போம். சகலத்தின் தன்மையை இது குறிப்பதால் இதற்குரிய 5 நிலைகளை சகல சாக்கிரம், சகல சொப்பனம், சகல சுழுத்தி, சகலதுரியம், சகலதுரியாதீதம் என்பர். கீழால் மேலால் என்கிற இந்த இரண்டு அவத்தை நிலைகளை விடுத்து இந்த ஆன்மா முழுக்க சிவத்தோடு கலந்து சிவமாய் நின்று இந்த ஐந்தையும் அனுபவிக்குமேயானால் அவை சுத்த சாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, சுத்த துரியம், சுத்த துரியாதீதம் எனப்படுகிறது.
தெளிவுடைய மனிதர்களாகி நாம் சகல காரிய அவத்தைகளையும், கேவல காரிய அவத்தைகளையும் அனுபவிக்கிறோம், உணர்கிறோம், புரிந்து கொள்கிறோம் ஆனால் சுத்த காரிய அவத்தையை நாம் உணர்வதில்லை என்பதால் அதற்குரிய அனுபவத்தை சொல்ல முடிவதற்கில்லை ஒருவேளை நீங்கள் சிவத்தோடு கலக்கின்ற வித்தையைப் பெற்றால் “சுத்த காரிய அவத்தை” என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போதைக்கு நமக்கு இது ஏட்டுப்படிப்புதான். இப்போது 5 (சகல காரிய அவத்தை கேவல காரிய அவத்தை + சுத்த காரிய அவத்தை 5+5+5 =15) காரிய அவத்தைகள் என்ன என்பது நம் அறிவுப் பார்வைக்கு வந்திருக்கும் என்று நம்புகிறோம். 5, 5, 5, என்றும் சகல, சுத்த, கேவல என்றும் பதினைந்தாக பிரித்து பெயர்பெயராக வைப்பதால் நீங்கள் குழப்பமடைய வேண்டாம் எல்லாவற்றையும் தாண்டி நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது 5 நிலைதான். ஆன்மா புருவமத்தியில் எப்படி செயல்படும் அப்படி செயல்படும்போது என்னென்ன கருவிகள் துணை நிற்கும், ஆன்மா கழுத்துப்பகுதிக்கு எப்போது வரும் அப்படி செயல்படும்போது என்னென்ன கருவிகள் துணை நிற்கும், என்னென்ன கருவிகள் விட்டோடும், ஆன்மா நெஞ்சுப்பகுதிக்கு எந்த நிலையில் வரும் அங்கே எவை காணாமல் ஓடும், ஆன்மா தொப்புளுக்கு எப்போது வரும் அங்கே என்ன கருவிகள் மிஞ்சி நிற்கும், அங்கே அதன் அனுபவம் என்னவாக இருக்கும், நிறைவாக மூலாதாரத்தை தொடும்போது ஆன்மாவின் நிலை என்ன அங்கே அது எந்தக் கருவிகளும் இல்லாமல் இருப்பதால் அதன் அனுபவம் என்ன என்பதான இந்த ஐந்து நிலைகளையும் அதில் ஆன்மா அனுபவிக்கின்ற அனுபவங்களையும் கருவிகளின் துணைகளையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டாலே பெரிய அறிவுதான்.
நனவு நிலை - ஆன்மா விழிப்பு நிலையிலே இருக்கின்ற பூரண அறிவினைப் பெறுகின்ற இயக்க நிலை. இங்கு இயக்கநிலை என்கிற சொல்லை நான் பயன்படுத்துவதற்குக் காரணம் உயிர் தன்னை 34 தத்துவக் கருவிகளோடு இணைத்துக்கொண்டு வேலை செய்கிறது. 34 கருவிகளைத் துணையாகக்கொண்டு அறிவை பெறுகிறது நாம் இப்போது இந்த நனவு நிலையில்தான் இருக்கிறோம். நீங்கள் இந்த எழுத்துகளை கண்களால் பார்க்கிறீர்கள் வாய் வாசிக்கிறது அது மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது கைகளில் புத்தகத்தை பிடித்திருக்கிறீர்கள். நீங்கள் உயிர்ப்போடு இதை படிக்க மூச்சுக்காற்று ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. Active state எனும் இந்த விழிப்பு நிலையில்தான் ஆன்மா திறந்த நிலையில் தன்னை உலகத்தோடு பொருத்தியும் தன்னை தான் இயக்க நிலையிலும் வைத்திருக்கிறது, இதுவே அறிவுவிழிப்புணர்வு நிலையின் பிரதானநிலை.
விழிப்பு என்கிற உணர்வினை பெறக்கூடிய நிலையாக இது சொல்லப்பட்டதன் காரணம் ஆன்மா இந்த நிலையில்தான் 34 தத்துவங்களை (கருவிகளை) செயல்படுத்தி அதில் தன்னையும் உட்படுத்தி இந்த அகண்ட பிரபஞ்சத்தோடு பார்த்து, கேட்டு, சுவைத்து, பிடித்து, இப்பிரபஞ்சத்தை அல்லது உலகத்தை உலகத்தின்மூலம் தன்னை தன்னுள்ளான இறையை அறிகிறது அல்லது அறிய முயற்சிக்கிறது.
இந்நிலையில் புருடன் எனும் ஆன்மா தான் அறிய அறியும் தன்மையான குணத்தை விசேஷிக்கிறது. பேசுவதற்குரிய தொழில் செய்கிற வாயுடன் இணைந்து பேசுகிறது அவ்வாறு அது பேசுவதற்கான வாய்க்கு சூட்சுமமாக இருப்பது வசனம். கால்களைக் கொண்டு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கிறது இந்த நகர்வை கால்களுக்குத் தரும் சூட்சும இயக்கம் கமனம். கையைக்கொண்டு எடுத்தல், வைத்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்கிறது. இந்த உபகாரத்திற்கு சூட்சும இயக்கக் காரணி தானம். மலத்துவாரத்தின் வழியே உட்கொண்ட உணவை செரித்து கழிவாக வெளியேற்ற உதவும் சூட்சும பொருள் விசர்க்கம். இனப்பெருக்கத்திற்கான பிறப்புறுப்பின் இயக்கத்திற்கு காரணப்பொருள் ஆனந்தம் என்பனவாகும். இதே போல் செவிக்கு சத்தம், உடம்புக்கு பரிசம், கண்ணுக்கு உருவம், வாயிற்கு சுவைக்க ரசம், மூக்கிற்கு மணம், உணர கந்தம் என்று கர்மேந்திரிய, ஞானேந்திரியங்கள் பத்துடன் அதன் தன்மாத்திரை, சூட்சுமகாரணிகள் பத்தும் ஆக இருபது தத்துவங்கள் நனவு நினைவில் மிக விழிப்போடு இயங்குகிறது.
இந்திரியங்கள் மற்றும் அவ்விந்திரியங்களின் மூலக் காரணிகள் என்கிற மேற்சொன்னவற்றைத் தாண்டி தசவாயுக்கள் என்று சொல்லப்படும் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகிய பத்தும் இந்த உடம்பின் நனவுநிலையில்தான் இயக்கத்தோடு இருக்கின்றன. நம் மெய்யியல் தசவாயுக்களைப் பற்றிய அரிய செய்திகளையும், அதன் பயன்பாட்டையும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
மனித உடம்பில் நவத்துவாரங்கள் இருப்பது எப்படியோ அதே போல தசவாயுக்கள் உள்ளன. மனித உடலிற்குள் இந்த பத்து விதமான வாயுக்கள் சுற்றி சுற்றி வந்து ஆட்சி செய்கிறது. இவற்றில் வரும் ஏற்ற தாழ்வுகள் உடலில் பலவித வியாதிகளை உருவாக்குகிறது. உடம்பில் சின்ன சின்ன வலிகள் பிடிப்புகள் எற்பட்டால் கூட வாயு பிடிப்பு என்று சொல்வது அதனால்தான். தும்மல், விக்கல், இருமல் என அனைத்து வேலைகளையும் செய்வது இந்த வாயுக்கள்தான். உடலை விட்டு உயிர் இந்த இடத்தில் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும், உயிர் வெளியே புறப்படும் நாள் நேரம் நெருங்கிய உடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு எல்லாவிதமான வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக்கொண்டே வரும். உயிர் பிரியும் முன்பாக நமது அனைத்து உறுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஒவ்வொன்றாக நிறுத்தி நமது நடு நெஞ்சுக்கு கொண்டுவந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும் உயிரானது சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், சிலருக்கு உச்சி மண்டையின் வழியாகவும், இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும், சிறுநீர் பாதை வழியாகவும், காதின் வழியாகவும், மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் தச வாயுக்களின் ஒன்பது வாயுக்களும் நிறுத்தப்பட்டு அது செயல்படுத்தும் உறுப்புக்களும் முழு நிறுத்தம் கண்டு எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்செயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்துச் செல்லும் அதன் பின்னரே உயிர் பிரியும் மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையையும் அந்த தனஞ்செயன் தான் செய்யும் இப்படி மனிதஉடலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பத்து வாயுக்களும் முழு விழிப்பு நிலையில் இயங்கும் நிலை நனவுநிலையே ஆகும். ஆன்மா நனவுநிலையில் இவ்வாயுக்களோடு என்னென்ன செய்கிறது என்பதையும் அறிவோம்.
சுவாசக்காற்று அல்லது பிராணன்: மூக்கின் வழியாக விடப்படும் மூச்சுக்காற்று உயிர்க்காற்று நம்முடலுக்குத் தேவைப்படும் உயிர்வளி (oxygen) நுரையீரலுக்குக் கொண்டு செலுத்தப்படுவதும், கழிவுக் காற்றாக மீண்டு வரும் காற்றை (co2 ) வெளியே மூக்கின்வழி வெளியேற்றுவதும் பிராணன் எனும் இதுவே செய்கிறது.
அபானன் – நம்முடைய மூத்திரப்பையில் (Bladder) இருந்து சிறுநீரை வெளியேற்றவும் அல்லது சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் மூத்திரப்பைக்கு அனுப்பப்படுவதும் இந்த அபானன் எனும் காற்றின் அழுதத்தில் தான். சிறுநீரை கீழ்நோக்கி அனுப்பும் பணியையும் மலம் கழிக்கும்போது ஆசனவாயை விரிப்பதும் முடிந்தபின்னர் சுருக்குவதுமான பணிகளையும் இதுவே செய்கிறது.
வியானன் – மூளையில் இருந்து வருகின்ற கட்டளைகள் அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்வதில் இவ்வாயு இணைந்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உறுப்புகளை நீட்ட மடக்க உணர்ச்சிகளை அறிய, உணவின் சாரத்தை உடல் முழுதும் எடுத்துச் செல்ல, vocal guard எனும் குரல் நான்களை அதிரச் செய்து ஒலியை உண்டாக்க இது மாதிரி பல இன்றியமையாத உடல் செயல்பாடுகளை இவ்வாயு செய்கிறது அதனாலேயே இதனை தொழில்காற்று என்கிறோம்.
சமானன் – உண்ணும் உணவு ஜீரணத்துவம்பெற உதவுகிறது, நாபியிலிருந்து கால்வரை உள்ள வாயுக்கள் அதிகப்படாமல் சரிசெய்கிறது.
நாகன் – உடம்பில் சேரும் நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது – குறிப்பாக இமை ஒவ்வொரு முறை இமைக்க இந்தக் காற்று உதவுகிறது வாந்தி எடுத்தல் குமட்டல் போன்ற வேலைகளைச் செய்யவும் இந்த வாயு உதவுகிறது.
கூர்மன் - கண்ணில் நிற்கும் வாயு, கொட்டாவி, வாய் மூட, கண் இமைக்க, கண்ணீர் வரவழைக்க வேலை செய்கிறது
கிருகரன் - நாம் மிகக் காற்றுப்பலத்தோடு தும்மல் போடுகிறோமே அதை செய்வதே இந்த கிருகரன்தான் மேலும் இருமலை உண்டுபண்ணுவதும் இதுதான் மிக முக்கியமாக பசியை வரவழைக்கும் வாயு இதுவென நம்பப்படுகிறது.
தேவதத்தன் – கொட்டாவி, விக்கல் போன்றவை ஏற்பட காரணமாக இருப்பது மூளைக்குப் போகும், வாயுவை குறைத்தல், ரத்தத்தில் பிராணவாயுவின் அளவை அதிகரித்தல், உடல் ஓய்வு நிலைக்குத் தயாராதல், சோம்பல், தூங்கி எழும்போது ஒரு வித சோர்வை தருவதெல்லாம் இந்த வாயுதான்.
தனச்செயன் – ஒருவர் உயிரோடு இருக்கும்போது மேற்சொன்ன ஒன்பது வாயுக்களும் ஒன்றாக வேலை செய்யும் உயிர் பிரிந்தபின்னர் ஒன்பது வாயுக்களும் செயல்பாட்டை நிறுத்திய பின்னர் இந்த தனஞ்செயன் வாயு செயல்படத் தொடங்கும். உடல் முழுதும் வீக்கத்தை ஏற்படுத்தும், நுண்ணுயிர்கள் மூலம் உடலை அழுகச் செய்யும், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெளியே செல்லும்.
மேற்சொன்ன பத்து வாயுக்களைப் படிக்கிற போது உங்களுக்கு ஒருவிஷயம் நன்றாகப் புலப்படும் இந்த உடம்பில் உறுப்புகளால் செயல்பாட்டில் இல்லாத இமைத்தல் விக்கல், சோம்பல், கொட்டாவி, குமட்டல், விக்கல், போன்ற பல விடயங்களை காற்றே செயல்படுத்துகிறது அதனால்தான் என்னமோ “காலமே இது பொய்யடா வெறும் காற்றடைத்தப் பையடா” என்றார்கள், போலும், இந்த பத்து வாயுக்களும் தத்தம் வேலைகளைச் செய்வது நனவு நிலையிலும் பின்னர் கனவு நிலையிலும் மட்டுமே ஆகும். தும்மல் விக்கல், கொட்டாவி, ஏன் சிறுநீர் கூட கனவு நிலையில் வருமேயொழிய உறக்க நிலைக்கு போனபின்பு வருவதில்லை நிறைவாக மனம், புத்தி, அகங்காரம் சித்தம் எனும் நான்கு அந்தக் கரணங்களுடன் மொத்தம் 34 தத்துவங்கள் + புருடன் சேர்ந்த நிலையே நனவு நிலை என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
கனவுநிலை - கனவு என்பது முழு உறக்கமற்ற நிலை கனவிலும் நனவிக்குரிய பேசுதல், படித்தல், சுவைத்தல், கேட்டல் எல்லாம் உணர்ந்து அனுபவிக்கப்படும் ஆனால் அவை அவ்வவற்றின் இந்திரியங்களைக் கொண்டு செய்யப்படுவதில்லை கனவில் ஓடினால் உண்மையில் ஒடிய உணர்வு வருகிறது ஆனால் கால்கள் ஒடவில்லை, சுவைக்கிற உணர்வு இருக்கிறது ஆனால் நாக்கு செயல்படவில்லை ஒலியைக் கேட்கிறது ஆனால் காது உண்மையில் எந்த ஒலியும் கேட்டதில்லை எனவேதான் கனவு நிலையில் கன்மேந்திரிய, ஞானேந்திரியங்கள் இல்லாது அவைகளுக்கு அவ்வுணர்வுதரும் தன்மாத்திரையும், சூட்சம காரணிகள் மட்டும் செயல்படுகிறது. ஆக கன்ம, ஞானேந்திரியங்கள் (5+5=10 போக மீதி எல்லாம் செயல்படும் என்பதால் கனவு நிலையில் 24 தத்துவங்கள் +புருடன் என்று உள்ளது.
உறக்க நிலை - ஆழ்ந்த உறக்க நிலையில் கனவுகள் கூட இல்லாத நிலைக்கு ஆன்மா தள்ளப்படுகிறது. ஏற்கனவே கன்மேந்திரிய, ஞானனேந்திரியங்கள் (5+5=10) போனநிலையில் கனவுகளற்றத் தன்மையில் தன்மாத்திரைகள் (5), சூட்சம காரணிகள் (5) கூட இல்லாமல் போவதால் கேட்டல், சுவைத்தல், அசைதல், போன்ற எந்த உணர்வும் அதன் அனுபவநிலையில் இல்லாது போகின்றது. மேலும் தசவாயுக்களில் பிராணன் எனும் மூச்சுக்காற்றைத் தவிர, மற்ற எல்லாமும் போய்விடும் அந்தக்கரணத்திலும் சித்தம் மட்டுமே நிற்கும் ஆக பிராணன் + சித்தம் + புருடன் என்கிற நிலையே உறக்க நிலை.
துரியநிலை - இங்கே மிக ஆழ்ந்த உறக்கம் உண்டாகிறது. சித்தமும் செயல்படாது போகிறது வெறும் பிராணன் + புருடன் மட்டுமே இருக்கிறது.
துரியாதீத நிலை - இங்கே பிராணனும் இன்றி புருடன் மட்டுமே இருக்கிறது. இந்நிலையை பெரிதும் நாம் அனுபவிப்பதில்லை ஒருவேலை ஆழ்ந்த உறக்கத்தில் ஒருசில நொடி பிராணனும் அற்ற ஆன்ம நிலைக்கு உயிர் போய்வரும் என்றே கருதப்படுகிறது. நனவு நிலையில் பெரிய பரிவாரங்களோடு தாம் தூம் என்று இருக்கும் உயிர் துரியாதீத நிலையில் புருடன் மட்டுமாய் உயிர்மட்டுமாய் நிற்பதும், துரியாதீத நிலையில் தனித்து இருக்கும் உயிர் மேலேறி மீண்டும் பரிவாரங்ளோடு சேர்ந்து விழிப்புக்கு வருவதையும் சித்தாந்தம் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு உவமையைக் கையாள்கிறது. உயிரை மன்னனாகவும், கருவிகளை கீழ்கண்ட அரசப் பரிவாரங்களாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஐவகைப் படை (கர்மேந்திரியம்)
வாக்கு – குதிரைப்படை
கால்கள் – யானைப்படை
கைகள் - தேர்ப்படை
ஆசனவாய் – காலாட்படை
பிறப்புறுப்பு – படைத்தளபதி
ஐம்பெருங்குழு (ஞானேந்திரியம்)
செவி - மிலேச்சர்
மெய் - ஒற்றர்
கண் - தூதர்
வாய் - ஏவலர்
மூக்கு - புரோகிதர்
பரிவாரங்கள் பத்து - (தன்மாத்திரை, சூட்சும காரணி) சத்தம், பரிசம், உருவம், ஏசம், கந்தம், வசனம், கமனன், தானம், விசர்க்கம், ஆனந்தம்
உறுதிச் சுற்றம் - பத்து வாயுக்கள்
பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனச்செயன்,
அமைச்சர்கள் - அந்தக்கரணங்கள் (மனம்,புத்தி, அகங்காரம் சித்தம்)
புருடன் – அரசன்
ஆன்மா மூலாதாரத்தில் இருந்து புருவமத்திக்கு வரும்போது தத்துவங்களற்ற நிலையில் இருந்து தத்துவங்கள் ஒவ்வொன்றாய் துணைக்கொண்டு புருவமத்தியைச் சேர்வதும், புருவமத்தியில் இருந்து தத்துவங்களை விலக்கிக்கொண்டு ஏதுமற்று மூலாதாரத்தை அடைவதும் எப்படியானதெனில் ஒரு அசரன் அந்தப்புரத்தில் இருந்து உலாவுக்குப் புறப்படும்போது அரண்மனையில் ஒவ்வொரு நிலையில் அவனின் காவலர்களும், அமைச்சர்களும், சேவகர்களும், படைபரிவாரங்களும், சேர்ந்து கொண்டு செல்வதையும், மீளும்போது ஒவ்வொருவராக விடுபட்டு இறுதியில் அவன் அந்தப்புரம் நுழையும்போது அவன் மட்டுமே தனியாக உட்செல்வதையும் ஒத்தது ஆகும், என்கிறது சித்தாந்தம்.
கட்டுரையாளர்: தாமல் கோ.சரவணன் M.Sc., M.Ed., எழுத்தாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்
உயிரிதொழில் நுட்பவியல் ( master in Biotechnology) ல் முதுநிலையும் பெற்றவர்.
தற்போது ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் ( Director of Syllabus committee board ) அமெரிக்காவின் Florida International University –யின் வள்ளலார் ஆய்விருக்கைக் குழு உறுப்பினராகவும் ( board member of vallalar chair) காஞ்சிபுரம் ஊர்க்காவல் படையின் மண்டலத் துணைத் தளபதியாகவும் (Deputy Area Commander of TamilNadu home guards) பிஏவி பன்னாட்டுப்பள்ளியில் துணை முதல்வராகவும் (vice principal) பொறுப்பு வகிக்கின்றார்.எழுதிய நூல்கள்
1.வள்ளலார் வளர்த்த தமிழ்
2.தமிழ் வளர்த்த சான்றோர்கள்
3.காப்பியங்கள் அணிந்த காலணிகள்
4.கம்பன் கவியில் காத்திருப்பு
0 comments:
Post a Comment