Friday, May 2, 2025

ஆறு ஆதி இல் - கோமதி சூர்யா மூர்த்தி

 சைவ சித்தாந்தத்தில் அடிப்படையாகக் கொள்ளப்படும் பொருட்கள் மூன்றாகும். அவை பதி, பசு, பாசம் என்பவை. பொருட்களைப் பதி, பசு, பாசம் என மூவகைப்படுத்திப் பேசுவது வேத ஆகம காலத்திலேயே உள்ளது.



 "பலகலை ஆகம வேதம் யாவையினு கருத்துப் பதிபசு பாசம் தெரித்தல்" (சிவப்பிரகாசம்)

பதி என்பது தானே அறியும் இறைவனைக் குறிக்கும். பசு என்பது அறிவிக்க அறியும் உயிர்களைக் குறிக்கும். பாசம் என்பது அறிவித்தாலும் அறியாத ஆணவம், கன்மம், மாயை இவற்றைக் குறிக்கும். எனவே பாசம் மூவகைப்படும் என்பர். இம்மூன்றுடன் மாயேயம், திரோதானம் என்ற இரண்டையும் கூட்டிப் பாசம் ஐந்தாகும் என்றும் சிவப்பிரகாச நூல் கூறுவதுண்டு . மாயேயம் என்பது மாயையின் காரியங்களான தனு (உடம்பு), கரண (கருவிகள்), புவன (உலகம்), போகத்தைக் (அனுபவம்) குறிக்கும். சடமாகிய பாசங்களை இயக்கும் இறைவனின் மறைப்புச் சக்தியே திரோதானம் எனப்படும்.சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருட்களும் அநாதி. இதனை,

 "பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனாதி" (திருமந்திரம்) என்று திருமூலர் கூறுகின்றார். 

ஆறு ஆதி இல் என்பதில்  

ஆறு என்று கூறப்படுவது  இறைவன், உயிர்கள்,  ஆணவம், கன்மம்,  சுத்தமாயை, அசுத்த மாயை என்பனவாம். பாசத்துள் ஒன்றான மாயையை சுத்தமாயை, அசுத்தமாயை என விரித்துக் கூறுவர்.

ஆதி இல் - ஆதி என்றால் தோற்றம். ஆதி இல் என்றால் தோற்றமில்லாதது எனப் பொருள். தோற்றம் இல்லாததால் அழிவும் இல்லை. தோற்றமும் அழிவுமில்லாததை அனாதி என்ற சொல்லால் குறிப்பிடுவர். ஆறு ஆதி இல் என்றால் பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்தமாயை, அசுத்தமாயை என்ற ஆறும் அநாதி எனப் பொருள். இதனை,


"ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை இரண்டு

 ஆக இவை ஆறு ஆதி இல்" (திருவருட்பயன்)

என்று உமாபதி சிவம் கூறுகிறார். இந்த ஆறு பொருட்களும் அநாதி என்பதனைத் திருமுறைகளிலிருந்தும் சாத்திர நூல்களிலிருந்தும் மேற்கோள் கட்டி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பதி அநாதி

இறைவனை நாம் பலவித வடிவங்களில் வழிபடுவதால் கடவுள்கள் பலரோ என்ற ஐயம்  உண்டாகலாம். இறைவன் ஒருவனே என்பதை வலியுறுத்தி உணர்த்தவே அவனை "ஏகன்” என்ற சொல்லால் உமாபதி சிவம் குறிப்பிடுகின்றார். இறைவன் பிறப்பு, இறப்பு இல்லாதவன் என்பதை, 

"பிறப்பில் பெருமானை"  (1-80-2)

"பிறப்பாதியில்லான்" (1-134-4)

"தோற்றங் கேடில்லாதவன்" (2-178-9)    என்று திருஞானசம்பந்தரும்,


 "இறப்பொடு பிறப்பிலானை" (4-74-3)

"பிறப்பிலார் இறப்பிலார் பிணி ஒன்றிலார்" (6-223-8)

"பிறவாதும் இறவாதும் பெருகினான்" (6-287-6)   என்று திருநாவுக்கரசரும், 

"முப்பதுமில்லை பிறப்பதுமில்லை இறப்பதில்லை" (7-18-1)  

"பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்” (7-41-6) என்று சுந்தரரும் பாடியுள்ளனர்.  

இறைவனுக்கும் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை என்று கூறுவது அவன் அநாதி என்பதனை உணர்த்தும். 

மாணிக்கவாசகரும் திருவாசகத்தில்  "போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே"  (சிவபுராணம்,வரி, 77) எனப் போற்றுகின்றார். (போக்கு என்றால் இறப்பு. வரவு என்றால் பிறப்பு ஆகும். எனவே இறைவன் அனாதி என்பதால் அவன் என்றுமுள்ள நித்தப் பொருள் என்பது தெளிவு. தோற்றமும் நிலைபேறும் ஒடுக்கமும் உள்ள உலகைப் படைக்கும் இறைவன் தோற்றமும் அழிவுமில்லாத சிவபெருமான் என திருமுறைகளும் சாத்திர நூல்களும் கூறும்.

 பசு அநாதி

இறைவன் எப்படி அனாதியோ அதைப்போல உயிர்களும் அனாதி "உயிர்கள்தோறும் இன்ப துன்ப நுகர்ச்சி வேறுபாடும் அறிவு வேறுபாடும் காணப்படுவதால் உயிர்கள் பலவாகும்" (சிவநெறிப் பிரகாசம்).  உமாபதி சிவம் உயிர்கள் எண்ணிக்கையில் அடங்காதன என்பதனை, "உயிர்கள் முன்பு பிறந்த நாளுக்கும், இனிமேல் பிறக்கப் போகிற நாளுக்கும் இத்தனையென்று தொகை இல்லாததுபோல, இவ்வுலகைத் துறந்து வீடுபேறு அடைந்தவர்களுக்கும் இனிமேல் அடையப் போகிறவர்களுக்கும் அளவில்லை"  என்கின்றார். உயிர்கள் பல. அவை அனாதி ஆதலால் உமாபதி சிவம் "அநேகன் ஆதி இல்" என்கிறார். திருஞானசம்பந்தர், "விளையாததொர் பரிசில்வரும் பசு"  என்று கூறுவது உயிர் ஒரு காலத்துத் தோன்றியது எனப்படாமல் அநாதியாக உள்ளது என்ற பொருளைத் தரும். திருநாவுக்கரசரும், "கற்றைச் செஞ்சடையாளன் உளன் நாமுளோம்" என்று இறைவன் அநாதியே உள்ளதுபோல, உயிர்களாகிய நாமும் அநாதியே உளோம் என்கின்றார்.

எல்லா உயிர்களும் அநாதியே, சிவனுக்கு உடைமை ஆகையால் சிவனைப் போல உயிர்களும் அநாதியானவை என,

"அனாதி சிவன் உடைமையால் எவையும் ஆங்கே

அனாதி எனப் பெற்ற அணுவை” திருக்களிற்றுப்படியாரில்  என்ற திருக்கடவூர் உய்யவந்த தேவர் கூறுகின்றார். உயிரின் வியாபக அறிவை ஆணவம் அணுத்தன்மைப்படுத்துவதால், உயிரை அணு என்ற சொல்லால்"  குறிப்பிட்டார். உமாபதிசிவமும் பசு இலக்கணம் கூறும்பொழுது 'எண்ணரிதாய நித்தமாய்" (சிவப்பிரகாசம்) என்கின்றார். நித்தம் என்றது அநாதி என்பதை உணர்த்தும். உயிர்கள் ஒருவனால் படைக்கப்படவில்லை, அவை அநாதி. உயிர்கள் செய்த வினைக்கேற்ப இறைவனால் தூல உடம்பு கொடுக்கப்படுவது பிறப்பு என்றும், வினைப்பலன்களைத் துய்த்து முடிந்ததும் உயிர் தூல உடம்பிலிருந்து பிரிதல் இறப்பு என்றும் சொல்லப்படும். தூல உடம்பிற்குத்தான் தோற்றமும் அழிவும் உண்டு என்பது சைவ சித்தாந்தக் கோட்பாடு.

 ஆணவம் அநாதி 

உயிர்கள் இறைவனை உணராவண்ணம் தடை செய்யும் முதல் மலம், உயிர்களோடு உடன் தோன்றிய மலமான (சகச மலம் - சகசம் - உடன் தோன்றியது) ஆணவமே ஆகும். ஆணவம் உயிர்களின் அறிவு, இச்சை, செயல் நிகழவொட்டாமல் தடை செய்கிறது. உயிர்களிடத்து அறியாமையை உண்டு பண்ணுகிறது. ஆணவத்தின் இந்த மறைத்தல் சக்தி காரணமாகவே அஃது இருள் என்று திருமுறைகளிலும் சைவ சித்தாந்த சாத்திர நூல்களிலும் கூறப்படுகின்றது. “இருள் ஆதி இல்” என்று ஆணவமும் அநாதி என உமாபதி சிவம் உணர்த்துகின்றார்.

 "விளையாதொர் பரிசில்வரு பசுபாசவேதனை ஒண்தலையாரின்"....

 என்ற திருஞானசம்பந்தர் பாடல் தொடர்களில் பசுபாசம் என்ற சொல் ஆனத்தை குறித்தது. அதற்கு அடைமொழியான "விளையாததொர் பரிசில் வரு" என்ற  தொடர் அது அநாதி என்பதை உணர்த்திற்று.

 "அநாதி எனப் பெற்ற அணுவை அநாதியே ஆர்த்த துழை (திருக்களிற்றுப்படியார்)

 என்பதில் துயர் என்றது இருளாகிய ஆணவத்தைக் குறித்தது. "இருள் இன்றே துன்பு என்" (திருவருட்பயன்) என்று உமாபதிசிவம் கூறுவது இங்கு நினைவுகூர்தற்குரியது. அநாதியான உயிரைத் துன்பத்திற்குக் காரணமாக ஆணவம் அநாதியே பிணித்துள்ளது என்று திருக்கடவூர் உய்ய வந்த தேவன் கூறுகின்றார்(ஆர்த்த -  பிணித்த).  

உமாபதி சிவம் மற்றொரு குறளில், 

"அன்றளவி உள்ளொளியோடு ஆவி இடை அடங்கி இன்றளவும் நின்றது இருள்” (திருவருட்பயன்)  என்கின்றார். உயிரிடத்தில் இரண்டறக் கலந்து நிற்கும் உள்ளொளியாகிய இறைவனை போல ஆணவமாகிய இருளும் அன்றே உடன் கலந்துள்ளது. அந்த இருள் அன்று தொட்டு இன்று வரையில் உயிரைவிட்டு நீங்காமலேயே உள்ளது என்கின்றார். இங்கு ஓர் ஐயம் எழும். உலகியலில் ஒரே இடத்தில் ஒளியும் இருளும் இருப்பதில்லை. இங்கு உயிர்களோடு உள்ளொளியாகிய இறைவனும் இருளாகிய ஆணவமும் இருப்பது எங்ஙனம் ? ஆணவம் உயிரோடு கூடியுள்ள இறைவனைப் பற்றாது உயிரை மட்டும் பற்றுவது எப்படி ? என வினாக்கள் எழும்.

 "ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக்கும்” (கொடிக்கவி) என்று உமாபதிசிவம் கூறுவது முதல் வினாவிற்கு விடையாய் அமையும். இறைவன், உயிர், ஆணவம் மூன்றும் கலந்துள்ள நிலைக்குத் "தன் கடல் நீர் உப்பை" உவமையாகக் கூறுவர். உப்பு பருப்பொருள். அது நுண்ணியதாகிய கடல்வெளியைப் பற்றுவதில்லை. பருப் பொருளாகிய நீரையே பற்றி நிற்கும். அதுபோல ஆணவம் நுண்பொருளாகிய இறைவனைப் பற்றுவதில்லை பருப்பொருளாகிய உயிரையே பற்றி நிற்கும்.

ஆணவம் உயிர்களை இடையில் வந்து பற்றியது என்று கூறலாகாதா  எனச் சிலர் வினா எழுப்புவர். உமாபதிசிவம் அவர்கட்குப் பின்வருமாறு விடை உறுவார். உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம் இடையில் ஒரு காலத்தில் வந்து கூடியது என்று கூறினால், முன்னமே தூயதாயிருந்த உயிரை அக்குற்றம் வந்து பொருந்த காரணம் யாது என்று கூறல் வேண்டும். என்ன காரணம் கூற முடியும்?  தூயதாகிய அறிவுடைய உயிர் தனக்குத் துன்பம் தரும் ஆணவத்தைத் தானே விரும்பிப் பற்றாது, ஆணவம் அறிவற்ற சடம். ஆதலால் அது தானே வந்து உயிரைப் பற்றாது. இறைவனோ பேரருள் உடையவன். ஆதலால் உயிருக்குத் துன்பத்தைத் தரும் ஆணவத்தை அதனோடு சேர்ப்பிக்கவும் மாட்டான். ஆகவே எந்த விதத்திலும் காரணம் கூற இயலாது.

இனி ஆணவம் காரணமின்றி உயிரை வந்து பொருந்தும் என்று கொண்டால் என்ன காரணம் எனச் சிலர் வினவுவர். அவ்வாறு காரணமின்றி வந்து பொருந்தும் என்று கூறினால் காரணமின்றி முக்தி நிலையிலும் வந்து பொருந்தும் என்று ஆகிவிடும் அல்லவா? அப்படியானால் முக்தி என்பதே இல்லையாகி விடும். எனவே, 

"ஆசாதி யேல்அணைவ காரணம்என் முத்திநிலை

பேசா தகவும் பிணி ” (திருவருட்பயன்)

 என்று ஆணவம் இடையில் வந்தது அன்று என்கின்றார் உமாபதி சிவம்.

"நெல்லுக்கு உமியும் நிகழ் செம்பினிற் களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மல கன்மம் அன்று உளவாம்" (சிவஞானபோத உதாரண வெண்பா)  என்று மெய்கண்டதேவர் உவமை மூலம் விளக்குவார். நெல்லில் உமியும், செம்பில் களிப்பும் ஒருவர் கூட்டக் கூடியதன்று. நெல்லும் செம்பும் உள்ள அன்றே அவையும் உள்ளது, அதுபோல மாயை, ஆணவம், கன்மம் முதலியன அன்றே உள்ளன என்கின்றார்.


"அனாதியே மறைத்துநிற்கும் பசுத்துவம் உடையனாகிப் பசு எனதிற்கும் ஆன்மா" (சிவஞானசித்தியார் சுபக்கம்)

 

என்று அருணந்தி சிவாசாரியாரும் ஆணவம் அனாதி என்கின்றார். (பசுத்துவம்-ஆணவம்) மேலும் அருணந்தி சிவாசாரியார்,


"ஒன்றதாய் அநேக சக்தி உடையதாய் உடனாய் ஆதி

அன்றதாய் ஆன்மாவின் தன அறிவொடு தொழிலை ஆர்த்து நின்று போத்திருத்துவத்தை நிகழ்த்திச் செம்பினிற் களிம்பேய் என்றும் அஞ்ஞானம் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே"

 (சிவஞான சித்தியார் சுபக்கம், செ.70)

என்று ஆணவமல இலக்கணம் கூறும் பாடலில், "ஆதி அன்றதாய்" என்ற சொல்லால் ஆணவம் அநாதி என்பதை உணர்த்துகின்றார்.

ஆணவம் அநாதி என்றால், முக்தியில் ஆணவத்தின் நிலைமை யாது என்ற வினா எழும். சைவ சித்தாந்தம் சத்காரியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சத்காரியவாதமாவது உள்ளது போகாது; இல்லாதது தோன்றாது என்னும் கொள்கையாகும். எனவே ஆணவம் அழியும் என்று கூறினால் அது சத்காரியவாதத்திற்கு முரணாகும். அதே சமயம் ஆணவத்தின் மறைத்தல் சக்தி இருந்தால் உயிர் பேரின்பம் அனுபவிக்க முடியாது. எனவே முக்தியில் ஆணவம் தன் சக்தி கெட்டு நிற்கும் என்பது சைவ சித்தாந்திகள் கூறும் விடையாகும். முக்தியில் ஆணவம் தன் சக்தி கெட்டு நிற்பதற்கு மருந்தினால் தடுப்புண்ட விடத்தையும் ஒளியின் முன்னர் இருளையும் தேற்றாங்கொட்டை இடப்பட்ட கலங்கல் நீரையும் உவமையாகக் கூறுவர். 

"உரியமலம் ஔடதத்தால் தடுப்புண்ட விடமும் ஒள்ளெரியின் ஒளிமுன்னர் இருளும் தேற்றின் வருபரல்சேர் நீர் மருவு கலங்கலும் போல் ஆகி மாயாதே தன் சக்தி மாய்த்து... தேயும்"

(சிவஞான சித்தியார் சுபக்கம்)  என்று அருணந்தி சிவாசாரியார் கூறுகின்றார். 

ஒளியின் முன்னர் இருள் முனைத்துத் தோன்றாது. கலங்கல் நீரில் தேற்றாங்கொட்டை இட்டதும் கலங்கள் அடியில் தங்கிவிடும். அதுபோல முக்தியில் ஆணவம் அழியாது, தன்முனைப்புத் தோன்றாது, உயிர் பேரின்பம் அனுபவிப்பதற்குத் தடை செய்யாமல், தன் மறைத்தல் சத்தி அடங்கி நிற்கும். இதனை "மாயாதே தன் சக்தி பாய்ந்து" என்ற தொடர் உறுதி செய்யும். ஆணவத்தின் மறைத்தல் சக்தி அடங்கி நிற்பதை, அந்தர்ப் பாவித சக்தி" என்பார் அருணை வடிவேல் முதலியார். அந்தர்ப் பாவிதம் என்றால் அடங்கிக் கிடத்தல் எனப் பொருள். 

முக்தியில் ஆணவத்தின் நிலைமையை உண்மை விளக்கம் என்ற நூல் "இத்தை விளைவித்தல் மலம்"  என்பதால் உணர்த்துகின்றது. இத்தை என்றது இச்சிவானுபவத்தை எனப் பொருள். சிவானந்தத்தை விளைவித்தல் மலம் என்பதன் நுட்பம் சிந்தித்தற்குரியது. பெத்த நிலையில் ஆணவத்தின் மறைப்பால் தன்னிடத்தே நிறைந்து நிற்கின்ற சிவானந்தத்தை அறிந்து அனுபவிக்காது உயிர் துன்புற்றது. முக்தி நிலையில் ஆணவம் மறைத்தலை ஒழித்ததால் உயிர் சிவானுபவத்தை இடையீடின்றி அனுபவிக்கின்றது.

 கன்மம் அநாதி

 கன்மம் இரண்டு வகை 

1. காரண கன்மம் 2 காரிய கன்மம். 

காரண கன்மமாவது செயல் நிகழாத போதும் அது நிகழும் தன்மை பொருளிடத்தில் இருத்தல், அச்செயல் என்ன தன்மை உடையதாயிருக்கும் என்று சொல்ல முடியாது. எடுத்துக்காட்டாக நடப்பனாகிய ஒருவனுக்கு அங்ஙனம் அவன் நடப்பதற்கு முன்பும் நடக்கும் தன்மை அவனிடத்தில் உள்ளதேயாம். அஃது அவன் நடக்கும்போது வெளிப்படுகின்றது. அங்ஙனம் வெளிப்படாதிருக்கும் பொழுது அவன் நடை எப்படி இருக்கும், எந்தத் திசையை நோக்கி இருக்கும் என்பதைத் திட்டமாக அறிய இயலாது. யாதொரு செயலும் வெளிப்படாது பொருளின்கண் உள்ள நிலை காரண நிலை. செயல் வெளிப்பட்டு நிகழும் நிலை காரிய நிலை. காரணநிலை சமய நூல்களில் மூல கன்மம் எனப்படும்.

உடம்பெடுத்த பின்னர்ச் செய்யப்படும் காரியங்களின் வேறுபாட்டுக்கு மூலமாக உடம்பெடுக்காத முன்பே ஒரு காரணம் இருத்தல் வேண்டும். அது கேவல நிலையிலேயே ஆன்மாவிடம் இருந்திடல் வேண்டும். அதனை மூலகன்மம் என்பர் அறிவுடையோர். மூல கன்மம் என்பது ஆணவமலச் சேட்டையினால் ஆன்மாவிடம் கேவலநிலையில் தானே அமைந்து கிடக்கும் விருப்பும் வெறுப்பும் ஆகும்.

இவ்விருப்பு வெறுப்புக்கள் இல்லாத ஆன்மாக்களே இல்லை எனலாம். இந்த மூலகன்மத்தின் தொடர்பு கொண்டுதான் சகலநிலையில் (பிறப்பெடுத்த நிலையில்) காரிய கன்மம் உண்டாகின்றது. இதனை, "கன்மமும் மூலம் காட்டி காமியம் நிற்கும்" (சிவஞான சித்தியார் சுபக்கம்) என்று அருணந்தி சிவம் கூறுகின்றார். இந்த மூலகன்மமே அநாதி ஆகும். காரிய கன்மத்திற்குத் தோற்றம் அழிவும் உண்டு. மூல கன்மத்தில் நன்மை, தீமை என்ற பாகுபாடு இல்லை. காரிய கன்மத்தில் அப்பாகுபாடு உண்டு. நல்வினை தீவினை எனப்படும் கன்மம் மனம், வாக்கு, காயங்களினால் செய்யப்படுதலின் தோற்றம் உண்டு அவை இன்ப துன்பங்களாக அனுபவித்துக் கழிவதால் அவற்றுக்கு அழியும் தன்மை உண்டு.

"இருவினை அநாதி, ஆதி இயற்றலால், நுகர்வால் அந்தம்” (சிவஞான சித்தியார் சுபக்கம்)

 என்று அருணந்தி சிவாசாரியார் கூறுகின்றார்.

 

இங்கு அநாதி என்று கூறுவதன் நுட்பம் சிந்திக்கத்தக்கது. இருவினைகளானது தோற்றமும் அழிவும் உடையதாய் தொடர்ச்சியாய் செய்த உயிர்களைப் பற்றி, தொன்றுதொட்டு வருதலின் பிரவாகாநாதி ஆகும். இங்கு அநாதி என்பது பிராவாகாநாதி எனப்படும். இதற்கும் அநாதிக்கும் என்ன வேறுபாடு ? அநாதி - தோற்றமும் அழிவும் இல்லாதது. பிரவாகாநாதி என்றால் இடையறாது ஓடும் நீர்ப் பெருக்குப் போலத் தொடர்ச்சியாய் தொன்று தொட்டு வருவது. இதனை, "நாசோற்பத்தி பண்ணிவரும் ஆதலால் அநாதியாகி" (சிவப்பிரகாசம்) என்று உமாபதி சிவமும் கூறுகின்றார்.

 

நாசோற்பத்தி என்றால் ஒரு வினை அனுபவித்துக் கழியும்போது அது நாசமாகிறது. அவ்வாறு அனுபவிக்கும்போது உண்டாகும் விருப்பு, வெறுப்பு காரணமாகப் புதிய செயல்கள் செய்வதால் உற்பத்தியுமாகிறது. ஆன்மா உள்ளவரை இந்தக் கன்மமும் உளதாதலால் அநாதி என்கின்றார். பின் சங்கார காலத்திலே மாயா காரணத்திலே சென்று பொருந்தும், ஆதலால் அநாதி, இதனை, 

"அநாதியாகிப் பலவாகி அணுக்கள் தொறும் படர்வதாகி எண்ணிவரு மனவாச கன்மத்தால் இயற்றும்

இயல்பினதாய் மதி கதமாய் இரு பயனாம் பாவ 

புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப் பொருத்தும் இது கன்மமலம் புகலுமாறே"

(சிவப்பிரகாசம், செ.28) 


என்பதால் அறியப்படும். (புலர்காலை - சங்காரகாலம்) புலர்காலை மாயை மேலிப் பொருந்தும் என்பதற்கு இருவிதமாகப் பொருள் கூறலாம். 1.உலகமும் உயிர்களும் மாயா காரணத்திலே ஒடுங்குகின்ற சங்கார காலத்தில் இந்தக் கன்மமும் மாயா காரணத்தில் ஒடுங்கும். 2. சங்கார காலத்தில் மாயா காரணத்தில் ஒடுங்கின ஆன்மாக்களையும் அவை செய்த கன்மம் சென்று கூடும்.


மாயை அநாதி

மாயை கன்மத்துக்குப் பற்றுக்கோடாக விளங்குவது. மாயா என்ற சொல்லின் திரிபே மாயை ஆயிற்று. மா - ஒடுங்குதல். யா- வருதல் தோன்றுவதும், ஒடுங்குவதும் ஆகிய தன்மையினை உடையதாக இருப்பதால் அது மாயா எனப்பட்டது. 

"நித்தமாய் அருவாய் ஏகநிலையதாய் அகிலத்துக்கோர் வித்துமாய் அசித்தாய் வியாபியாய் விமலனுக்கோர் சக்தியாய்ப் புவன போகம் தனு கரணமும் உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யுமன்றே"   (சிவஞான சித்தியார் சுபக்கம்)

என்று அருணந்தி சிவாசாரியார் கூறுகின்றார். மாயை எல்லாக் காரியங்கட்கும் காரணமாயிருத்தலின் நித்தம் எனப்பட்டது. காரணப் பொருள் அநாதி, காரியப் பொருளுக்கே தோற்றமும் அழிவும் உண்டு. மாயை உலகிற்குக் காரணப் பொருளாதலால் அஃது அநாதி ஆகும். ஏக நிலையதாய் என்றது. "ஒன்றாய்" எனப் பொருள். 

உமாபதி சிவமும் "உண்மையதாய் நித்தமாய் ஒன்றாய்" (சிவப்பிரகாசம், ) என்று மாயையை ஒன்று என்றும், நித்தம் என்பதால் அநாதி என்றும் உணர்த்துகின்றார். மற்றொரு பாடலிலும் 'பகர் மாயை ஒன்று" (சிவப்பிரகாசம்) என்றும் கூறுகின்றார். அப்படியானால் திருவருட்பயனில் மாயை இரண்டு என்று கூறுகிறாரே என ஐயம் எழலாம். குன்றிமணி என்பது ஒன்றே. ஒரு பகுதி சிவந்த நிறத்துடனும், மற்றொரு பகுதி கருத்த நிறத்துடனும் இருப்பது போன்று, ஒன்றாகிய மாயை மலத்தோடும் கன்மத்தோடும் விரவிய பகுதியில் அசுத்தம் என்றும், அவை இரண்டோடும் விரவாத பகுதி சுத்தம் எனப்படும் என்றும் சிவஞான முனிவர் விளக்குகின்றார். 

சுத்த தத்துவங்கள் ஐந்தும் சுத்த தத்துவத்திலிருந்தும், வித்தியா தத்துவங்கள் ஏழும் அசுத்த மாயையிலிருந்தும் தோன்றும். அப்படியானால் ஆன்ம தத்துவங்கள் 24ஆம் தோன்றுவதற்குக் காரணமான பிரகிருதி மாயையையும் சேர்த்து மாயை மூன்று எனக் கூறினால் என்ன என்ற கேள்வி எழும். மாயை பொருளால் ஒன்று. பயன்பட்டு வகையால் மூன்று, ஆயினும் மாயை இரண்டு எனக் கூறக் காரணம் மூவகை மாயைகளுள் சுத்தமாயையும், அசுத்த மாயையும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றாத காரணப் பொருட்கள். பிரகிருதி மாயை அசுத்த மாயையிலிருந்து தோன்றிய காரியப் பொருளாதலால் மாயை சுத்த மாயை அசுத்த மாயை என இரண்டேயாம் என்றார். இவ்விரண்டும் அநாதி. 

 மெய்கண்டாரும்,

"நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பினிற் களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்று உளவாம்" (சிவஞானபோதம்)

 என்ற மாயை, ஆணவம், கன்மம் மூன்றும் அநாதி என்கின்றார். வல்லி என்றால் பெண். இங்கு மாயையைக் குறித்தது. மாயை இறைவனுக்குப் பரிக்கிரக சக்தியாய் (வைப்பு ஆற்றல் - வேண்டும் போது பயன்படுத்துவது) அமையும். சிற்சக்தியை நங்கை என்று கூறுவதுபோல, பரிக்கிரக சக்தியாகிய மாயையையும் வல்லி என்ற பெண்பாலால் மெய்கண்டார் குறித்தார். உமாபதி சிவமும்,

 “உயிருண்டாவே உளதுமலம், மலம் உளதாய் ஒழிந்த எல்லாம் நெல்லின் முளை தவிடு உமி போல் அநாதியாக நிறுத்திடுவர். இது சைவம் நிகழ்த்து மாறே.” (சிவப்பிரகாசம்)

என்கிறார். ஆன்மா என்று தோன்றியதோ  அன்றே உளது ஆணவமலம். அந்த ஆணவமலம் உண்டாகவே மற்றுள்ள மாயா மலமும், கன்ம மலமும் நெல்லின் முளை, தவிடு, உமி போல் இவையும் அநாதி என்று பெரியோர்கள் நிச்சயிப்பார்கள். இப்படிச் சிவாகமஞ் சொல்லும் என்கின்றார் உமாபதி சிவம். இதற்கு முன்னோடியாக திருமூலரும்,

 

"ஆணவ மாயையும் கன்மமும் மாமலம் காணு முளைக்குத் தவிடு உமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் மற்று தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே" (திருமந்திரம், 2192)

 திருஞானசம்பந்தர் உயிர்கட்குச் சிறிது அறிவு விளக்கத்தைத் தரும் மாயையை "ஒண்தளை” என்று குறிப்பிடுகின்றார். "விளையாததொர் பரிசில் வரு ஒண்தளை"  என்று திருஞானசம்பந்தரும் மாயை அநாதி என உணர்த்துகின்றார்.

இவ்வாற்றால் இறைவன், உயிர்கள், இருள் எனப்படும் ஆணவம், மூல கன்மம், காரணநிலையிலுள்ள சுத்த மாயை, அசுத்த மாயை ஆறும் அநாதி என்பது தெளிவு.


கட்டுரையாளர்: கோமதி சூர்யா மூர்த்தி

கோமதி சூர்யா மூர்த்தி அவர்கள் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சைவ சித்தாந்த துறையில் மிகப்பெரிய ஆளுமை. பல்வேறு நூல்களும், கட்டுரைகளும், எழுதி உள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த துறையில் தலைமை பொறுப்பு வகித்தவர்.



0 comments:

Post a Comment