சைவசித்தாந்தாம் கூறும் முப்பொருள் உண்மை பதி, பசு, பாசமாகும். இந்த அநாதி நித்யப்பொருள்களை அனுமானித்து நிச்சயித்து அறிதற்கு ஏதுவும், உவமையும் இன்றியமையாதன. "விளம்பிய ஏது நோக்கிப் பெருகிய வுவமை நான்கின் பெற்றியின் நிறுவிப் பின்முன் தருமலைவு ஒழிய" என்பது சிவப்பிரகாசம். இதனையே ''ஏதுவும் ஒது நால்வகை உவமையும் திகழ்தர அருள்சேர் மாந்தர் வெருள் சேராமல்” என்று சங்கற்ப நிராகரணமும் கூறும்.
எனவே, அளவை நூலில் குறிப்பிட்டுள்ள இயல்பு, காரியம், அனுபலத்தி என்ற மூன்று ஏதுவினாலும் ஆராயவேண்டும். "வினையன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்"? "விரவியும் வருஉம் மரபின" எனவரும் தொல்காப்பிய நூற்பாக்களின்படி, தொழில்காரணமாக வரும் வினையுவமை, பயன்காரணமாகவரும் பயன் உவமை, வடிவம் காரணமாக வரும் மெய் உவமை, நிறம் காரணமாக வரும் உரு உவமை என்ற நான்கின் தன்மையால் நிறுத்தி, முன்னுக்குப்பின் உண்டாகி நிற்கும் முரண்பா ஒழியத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.ஏதுவையும், உவமையையும் அடிப்படையாகக் கொண்டு ஆணவத்தின் பயன்களை சிறிது ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆணவமலம்
ஆணவம் என்பது இறையும் உயிரும் போன்று அநாதியானது. உயிரைப் பற்றி இருப்பதால் அதற்கு இடம் உயிராகும். உயிரின் அறிவை மறைக்கும் தன்மையால் ஆணவம் இருள் என்றும் சொல்லப்படும். தொழிலால் மறைக்கும் சக்தியும், உருவத்தால் அஞ்ஞானமாகவும், இருள் என்று சொல்லப்படுவதால் அதன் நிறம் கருமையாகவும், ஆணவம் பொருட்டே ஆன்மாவிற்கு விளைபோகங்களும், அதன்வழியே இறைவனது திருவடியை அடைய உதவும் காலத்தில், தன் சக்தி நீங்கிப் பயன்தருதல் ஆகும்.
"நிந்தஉரு இருள்சொரூபம் அறியாமை பண்ணல் நிலையாய சுபாவம் அவத்தைப்படுத்தல் நாளும் வைத்தகுணம் அறிந்தவற்றை மீளமறப்பித்தல் வருவிசேடம் எல்லையினில் தசைத்தி மாய்தல் ஒத்தவியாகம் பரனும் உயிரும் அறியாமல் உடனிற்றல் வியாத்தி மூவகை உயிரும் உறுதல் அத்தினனங் கருமை தரிசனம் இதனை அறிதல் அதிற்சுத்தி நீங்கி அருளுடன் நிற்பதுவே"
எனவரும் 'தத்துவப் பிரகாசம்' ஆணவத்தின் வினை, மெய், உரு, பயன் ஆகியவற்றை விரிவாக விளக்கும்.
ஆணவத்தால் பிறப்பும், உடம்பும்
ஆன்மா ஆணவமாகிய இருளில் கட்டுண்டு தன் செயலின்றி, அதாவது அறிவு. இச்சை. செயல்கள் தொழிற்படாமல் அறியாமையில் தடுக்கப்படுதலாகும். இந்நிலை அனாதி கேவலநிலை எனப்படும். அதனால் அந்நிலையிலிருந்து விடுபட்டு தான்யார்? உலகம் யாது? இறைவன் யார்? என்ற சிந்தித்தறிய இறைவன் ஆன்மாவிற்கு தனு, கரண, புவன போகங்களை அளிக்கின்றான்.
"சுடரால் இருள் தேடச் சொல்லார்கள் எந்தாய் சுடரால் இருள்தேடச் சொன்னாய் - சுடர்கின்ற ஞானத்தால் ஆணவத்தை நாடரிது நாடுவதென் ஞானத்தால் ஆணவத்தை நான்"
என்றும் சதமணிக்கோவை அனுமானக்காட்சியால் ஆணவம் இல்லாமல் ஜனனம் உண்டாகாது என்கின்றது.
ஆணவமலம் பிணிப்பின் காரணமாக வினையும், வினைகாரணமாக உடம்பும் இறைவனால் கொடுக்கப்படுவதே பிறப்பு எனப்படும். எனவே. இந்நிலைமை
"மலம்தங்கிய பிறப்பு" என்ற சுந்தரர் அருள்வர்.
மலமடைய மாயா நனுவிளையும்" என்று உபாய நிட்டையில் அம்பலவாணதேசிகள் குறிப்பர், ஆன்மாவிற்கு ஆணவமலத்தால் கிடைத்த இவ்வுடம்பை 'அத்திபழுத்தது' என்று திருவுந்தியார் குறிப்பிடும்.
"முக்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்து
அத்தி பழுந்ததென்றுந்தீபற”
உயிர் வினைக்கேற்ப தொன்று தொட்டு உடம்பெடுத்தும், அதனோடு திரிந்தும், அதனைவிட்டும் வருகின்றது. அது நிலையுடையதாகாது. ஆதலின் இறையருள் பெறுவதற்கு முன் உடல் நிலையுடையதாகாது.
"அநாதிஉடல் ஒன்றினைவிட்டு ஒன்றுபற்றிக்கனமால்
ஆய்அழிந்து வருவதால் அந்தம் இல்லை”
ஆனால், மூலமலமான ஆணவத்தை ஒழித்தற்கு உரிய மருந்து இந்த உடம்பேயாகும்.
"மனாதிஉடல் ஆதி காரியத்தால் அநாதி மலம் அறுக்கும் மருந்து"
என்று சித்தியார் உரைக்கும். அறியாமை நிறைந்த உடம்பாகிய இதனைச் சுமந்து இளைத்தேன் என்று
"இருளார் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன்”
எனப் பிரார்த்தனைப்பத்தில் மாணிக்கவாசகர் அருளிச்செய்வர்
"ஆவியை காயத்தடக்கி அஞ்ஞானத்தழுத்தி மலம் மேவியதால்"
எனும் நிட்டை விளக்கத்தில், ஆணவமலச் சார்பே 'ஆன்மாவை அஞ்ஞானத்தில் அழுத்தும்' என்று அம்பலவாண தேசிகர் அருள்வர்.
அஞ்ஞானம் என்ற இருளை விளைவிக்கும் 'முன்மலமாகிய' ஆணவமலம் நீங்க வேண்டி, சிறிது வெளிச்சம்தரும் பொருட்டு, கலை முதலிய 'நிகழ்மலமான' மாயையின் காரியங்கள் ஆன்மாவைப் பொருந்துகின்றன.
"புகலும்மலம் ஒழித்தற்குக் கலாதி முதன்மாயை பொருந்தியிடும் அரனருளால்"
என்று சிவப்பிரகாசம் காட்டும். இந்நிலை. மாயையின் காரியப் பொருள்களாகிய உடல், கருவி, நுகர்பொருள் ஆகியவற்றைப் பெற்றுள்ள இவ்வுலகின் நிலை "சகலநிலை" எனப்படும். இருள்தந்த துன்பத்தால் விளக்கை கையில் எடுப்பவர்கள் கண்ணுக் அவ்விளக்கு பொருள்களை காட்ட வேண்டுதல் போலாகும். அதாவது இருளைப் போக்க ஒளியை ஏற்ற வேண்டும் ஆனால் அந்த இருளில் தான் விளக்கை தேட வேண்டும்.
"இருட்டதால் விளக்கைக் கையில் எடுத்திருவார்கள்கட்டுபொருட்டர் வேண்டுமா போல் பொருத்திய மலத்தினாலே
தெருட்டிடுங் களாநி வந்து"
என்று தக்காரியம் குறிக்கும்.
ஆணவத்தால் உலகத் தோற்றம்
ஆன்மாக்கள் உடல்பெற்று, கருவிகள் பெற்று, போகம் அனுபவிக்கும் நிலைக்கலமான இவ்வுலகை ஆணவமலம் நீக்குதல் பொருட்டு இறைவன் தோற்றுவிக்கின்றான்
"தோற்றியதிதியே ஒடுங்கி மலத்து உளதாம்”
என்பது சிவஞானபோதம்,
"ஒடுங்கி நின்ற இவ் உலகத்தை மீளத் தோற்றுவிப்பது எதன் பொருட்டு எனில் உயிர்களைப் புற்றியுள்ள ஆணவத்தை நீக்குதற் பொருட்பேபாரும்" என்பது பொருள்.
இங்கு, 'ஒடுங்கியிருப்பது விரியத்தானேச் செய்யும்' (Evolution presupposes involution)
என்று அரவிந்தர் அருளியது சிந்திப்பதற்குரியது.
ஆணவம் ஆன்மாவின் அறிவினை மறைப்பதால் ஒவ்வொரு ஆன்மாவும் தனக்கு தோற்றுவிக்கப்பட்ட உடல்கருவிகளால் அவ்வாணவத்தின் தடையை சிறிது கடக்கும். இவ்வாறு ஆன்மாவிற்கு என்றே உடல்கருவிகள் தோற்றுவிக்கப்படும். தோற்றுவிக்கப்பட்ட உடல் கருவிகளின் ஒடுக்கமும் இவ்வாணவ நிவர்த்தியின் பொருட்டே நிகழும். வருத்தமான தொழிலைச் செய்யும் ஒருவன் அத்தொழிலை இடைவிடாது செய்யின் அதனைச் செய்து முடிக்க இயலாது போகும். ஆனால் அவன் இடையில் இளைப்பாறிச் செய்வான் எனில் ஒரு காலத்தில் செய்து முடிப்பான். ஆன்மா, உடல் கருவிகளின் உதவியைக் கொண்டு ஆணவ நிவர்த்தி பெறுவதும் இவ்வாறே. இவ்வுயிர், உடல் கருவிகளோடு இடைவிடாது தொழில் செய்யின் சலிப்பெய்தி ஆணவ நிவர்த்தி பெறாது நின்றுவிடும். இஃதன்றி இடையில் ஒடுங்கி இளைப்பாறுமானால் என்றேனும் ஆணவநிவர்த்தி பெறுவதில் சந்தேகமில்லை. ஆதலால், இவ்வுலகின் ஒடுக்கமும் அதன் தோற்றம்போல ஆணவ நிவர்த்தியின் பொருட்டேயாகும். இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள நிலைத்தொழிலும் அதன் பொருட்டேயாகும். ஆகவே, உலகின் முத்தொழில்களும் உயிர்களின் ஆணவமல நிவர்த்தியின் பொருட்டே என முடியும்.
"கவ்விய மலத்து ஆன்மாவைக் சுருதியே ஒடுக்கி ஆக்கி பவ்வம் ஈண்டு அகலப் பண்ணிப் பாரிப்பன்”
என்னும் உண்மைநெறி விளக்கம் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
ஆணவமே காரணம்
சிருஷ்டி முதலியவற்றால் ஆன்மாக்கள் போகத்தை அனுபவித்தும், சாதனங்களான கலை முதலியவற்றை தோற்றுவித்தலும், அவற்றை விருத்தி செய்தலும் ஆகிய மாயையின் வியாபாரமும், போக்கியங்களை அநுபவித்தல் ரூபமான பசுக்களின் வியாபாரமும் ஆன்மாவை மறைக்கும் மலத்தினாலேயே நிகழ்கின்றன. எதனால் எனின் மலமிருக்கும் பொழுதுதான் இவையனைத்தும் நிகழுமாதல் என்க' என்று ஆணவமல சம்பந்தமே ஆன்மாவின் போகங்களுக்கு காரியமாகும்' என போக காரிகை சூத்திரம் 145 விருத்தியுரை கூறும்.
ஆணவம் ஒன்று இல்லையெனில்...
ஆணவமாம் ஒன்று இன்றெனின், முக்தியுண்டாக மாட்டாது
..... அஃதின்றெனின்
என்னை பரதந்தரிய மியல்பெனின்
முன்னோர் ஓதிய முத்தி மன்ண
தாகும்
என ஞானமிர்தம் 19ம் அகவல்கூறும். இவ் அகவலுக்கு உரைகூற வந்த ஒளவை. சு.துரைசாமி.
"ஆணவம் ஒன்று இல்லையெனில் ஆன்மாக்களுக்கு முக்தியே இல்லாமற் போய்விடும். ஈசுவரனுக்கும் ஈசுவரத்தன்மை இல்லாமை நேரிடும்" எனும் போககாரிகை சூத்திரத்தை எடுத்துக்காட்டி விளக்குவர்.
ஏது காரணமாக இப்படியொரு ஆணவமலம் உண்டென்று சொல்லவேண்டும் எனில் ஆன்மாக்களின் ஞானத்தைத் தடுப்பதற்கு ஆணவமலமாகிய ஒன்று இல்லையாகில், ஆன்மா பிறப்பு, இறப்புகளை பொருந்தாது. மிகவும் பெரிய துக்கங்களை பொருந்தாது சிற்றறிவும் இல்லாமம், எவ்வறிவும் எல்லா வல்லமையும் பொருத்தி விடும். ஆன்மா ஞானவுரு. ஆதலால் சிவணைப் போலவே நிற்கும்.
ஒண்றினால் விடப்பதற்கு மோட்சம் என்று பெயர். உபாதியற்ற மோட்சம் எந்தப் பொருளினால் விடப்பட்டது என்று விசாரிக்கையில் இந்த ஆணமலம்' தான் என்று சொல்லும் காலத்தில் அறியலாம். இதனை
"ஏதுக்கா வாணவமுன் டென்ன வேண்டு மெனிலுயிர்கள் ஞானத்தைத் தடுப்பதொன்றிங் சிலையேல் மாதுக்க முறாவுயிர்கள் எவ்வறிவு மெல்லா வல்லமையுஞ் சுதந்திரமும் மருவியிடும் பிறப்பாழ். த்துற்று வருந்தாது ஞானவுரு வாமாற் சிவன்போலவே நிற்குஞ் சிற்றறிவு மாகா கோதற்ற முத்தியென்பது ஏதுவிடில் என்றே குறித்திடில் இவ் வாணவமாம் கூறும் காலே"
என சிவநெறிப் பிரகாசத்தில் ஸ்ரீ நந்தி சிவாக்கிர யோகிகள் அருளிச் செய்தார்.
ஆணவம் ஏன் வேண்டும்?
ஆணவமலத்தை இறைவன் ஏன் அழிக்கவில்லை? எனக் கேட்கலாம். நித்தியப் பொருள் அழிக்கவாராது! இறைவன், தன் சக்தியால் அதனை அழிக்கின்றார் எனக் கொள்வோம். அதனை அழித்துவிட்டால் பலவீனமான உயிர்க்கு ஆணவமலத்தைப் பற்றி இன்பதுன்பங்களை அநுபவித்து பயிற்சி வன்மையால் இறைவனை அடைந்து பேரின்பத்தை நுகரக்கூடிய வாய்ப்பில்லாமல் போகும். பயிற்சி பெறுதுவதற்காக உயிர்களுக்கு 'ஆணவமலம்' தேவைப்படுகிறது - இதனை 'ஆணவமல உபகாரம்' என்ற சாத்திரம் சொல்லும். இப்பயிற்சிக்காகவே உயிர்கள் ஆணவமல வயப்படுதலைத் தடுக்காமல் விட்டு வைத்திருக்கின்றான் இறைவன். உயிரை இறைவன் படைக்கவில்லையாதலால் அது படிப்படியாக உணரும் தன்மை உடையதாய் இருப்பதற்கு அவன் பொறுப்பாளியாக மாட்டான் என்று முரு.பழ. இரத்தினம் செட்டியார் அவர்களின் கருத்து இங்கு குறிக்கத்தக்கது.
இத்தை விளைவிந்தம் மலம்
சைவ சித்தாந்த சத்காரிய வாதத்தின் படி உள்ளது எனக் கூறப்படும் எந்தப்பொருளும் உள்ளபொருள் ஆகும். ஆணவம் என்றும் உள்ளதேயன்றி ஒரு காலத்தில் இருந்து மற்றொரு காலத்தில் இல்லாமல் அழிந்துவிடுவதில்லை. ஆன்மா ஆணவத்தின் நீங்கி முக்தியடைதலும் முக்தியிலும் ஆணவம் இருந்தலும் எவ்வாறு எனும் வினாவிற்கு,
"முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்தஅநு போகத்தைத் துய்த்தல் அணு மெத்தவே இன்யம் கொடுத்தல் இறை இந்தை விளைவித்தல் மலம் அன்புடனே கண்டுகொள் அப்பா"
என்று உண்மைவிளக்கம் விடைதருகிறது. பேரின்பத்தை ஆன்மா நுகரும். இறைவன் அவ்வின்பத்தை விளைவித்து நிற்பது என்பது முக்கியக் கருத்தாகும்.
துன்பத்தை விளைவிக்கும் மலம் இன்பத்தை விளைவிக்க மாட்டாது. இருள் ஒளியைச் செய்தல் எக்காலத்தும் இல்லை. இதுபற்றி சைவ அறிஞர்களின் கருத்துக்களை சிறிது ஆராய்வது இங்கு நலம் தரும்.
"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சள்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉம் எல்லாம் மழை"
மழை பெய்யாது நின்று, உலகை கெடுக்கவும் செய்யும்: பெய்து நின்று உலகை வாழ்விக்கவும் செய்யும். இங்கு உலகைக் கெடுத்தலாவது மழை பெய்யாதிருப்பதன்றி வேறில்லை. எனவே. 'மழை கெடுப்பதூஉம்' என்பது மழையின்மை என்பது பொருளாகும். அதைப்போன்றே, மலமும் முக்திநிலையில் உயிர்க்கு இன்பத்தை விளைவித்தல் என்பது உயிருக்குத் தடை செய்யாதிருப்பதே ஆகும். இவ்வகையில், இத்தை விளைவித்தல் மலம்" என்பது ஆன்மா அவ்வின்பத்தை நுகர்வதற்கு மல நீக்கமும் காரணம்' என்பார் ஆ ஈஸ்வரமூர்த்திபிள்ளை "
“இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்கு எதிர்செய் இறை என்கொல் எனத் தொழுவார்34 'மன்னும் பதிகமது பாடியபின் வயிறுற்றடு சூலை மறப்பிணிதான் அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும் "
என்னும் பெரியபுராணம் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணச் செய்யுள்களை எடுத்துக்காட்டி.
"சூலைநோய் காரணமாக சிவபிரானையை அடைந்ததனால் சூலைநோய் நீங்கி சிவானந்தம் பெற்றமையின் சிவானந்தானுபவ காலத்தும் சூலைநோய் சக்தி கெட்டிருந்ததென்று கொள்ளுதல் கூடாதவாறுபோல, முக்திபெற்றவுயிரிலடத்து மலச்சக்தி கெட்டு இருக்குமென்று கொள்ளுதல் கூடாதென்பதாம்" என்று கூறி மேலும்,
"அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லம் மா ஞாலம் கரி"
என்னும் குறளை எடுத்துக் காட்டுவார் பொ.முத்தையாபிள்ளை. அருள் உடையார்க்கு இப்பிறப்பிலும் ஒரு துன்பமும் உண்டாகாது. அவர்க்கு துன்பம் உண்டாக ஒருவரும் கண்டறிவார் இல்லாமையால், இவ்வுலகத்து வாழ்வாரே சான்றாவார் என்று விளக்கம் கூறினார்.
'இத்தை விளைவித்தல் மலம் பேரின்பத்தை விளையும்படி செய்வதற்கு ஏதுவாய் இருந்தல், வினைத்தல் என்றிருப்பின் அம்மலம் கொடுத்ததென்றும் உடனிற்பதென்றும் பொருள்படும். அங்ஙனமின்றி விளைவித்தல் என்றிருப்பதால் ஏதுவாக தன்மாத்திரையே. நோயுடையான் ஒருவன் படும்துன்பம் கண்டு அந்தண்மை வாய்ந்த மருத்துவன் ஒருவன் தக்க மருந்து நல்கி அந்நோயினைப் போக்கி நதைநினை இன்புறச் செய்கின்றான். ஆனாம். அவ்வின்பம் அந்நோயாளனுக்கு மருத்துவனால் ஏற்பட்டதேயன்றி அந்நோயினால் அன்று. மருத்துவனால் இன்பமாக்க நோய் ஏதுவாய் இருந்தது. அது போன்றதேயாகும்'. என 'மலம் ஏதுவாக இருக்கும் என்பது ப.ராமநாதபிள்ளை கருத்தாகும்.
விளைதல் தன்வினை. விளைவித்தல் பிறவினை விளைவது பேரின்ப நுகர்ச்சி பேரின்பம் இயல்பாதலின் அது விளையாது : விளைவிக்கப்படாது ஆன்மாக்களுக்கு பேரின்ப நுகர்ச்சி விளைகின்றது. அந்நுகர்ச்சியை விளைவிப்பது. மலம். பேரின்பத்தை நுகர்ந்தது ஆன்மா. செய் நுகர்தல் செய்தது - ஆன்மா. நுகர்தலாகிய வினைக்கு முதல் ஆன்மா. அவ்வினைக்கு திருவருட்பேறும் மலநீக்கமும் கருவி வினைமுதல் ஒன்றே செய்வது. வினைமுதல் அல்லாத கருவி முதலான அவ்வினைக்கு முதல்வினைக்கு செய்விப்பனவாகும்.
"வினையே செய்வது செயப்படுபொருளே நிலனே காலம் கருவி என்றாலும் இன்னதற்கிது பயன் இரண்டொடும் தொகைஇ ஆயெட்டென்ப தொழின் முதனிலையே"
என்பது தொல்காப்பியம் சூத்திரம், இதன்படி பேரின்பம் நுகற ஆகிய ஆன்ம வினைக்கும். மலம்தான் அவ்வானமாவின் நீாங்கி ஏனை பெதடத்து நிற்கும் திறத்தால் செய்விப்பதாகிறது. ஆகவே. விளைவித்தல் அம்மலத்துக்குரித்தாயிற்று" என்று தொண்டை மண்டல் ஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் கூறுவர்
மேலும், மூலமலம் ஆனது வினை உள்ள அளவும் உயிரை மறைத்து அருள் வினைப்பயனை ஊட்டுவதற்குத் துணையாகும். அருள் மிக்க போது உயிரை மறைத்து மூலமலத்தை அவ்வருள் மறைத்துப் பேரின்பம் ஊட்டும் என்பதும்
"முன்னைவினை யுள்ளளவும் மூலமலம் நான்அருண
உன்னை மறைத்து அவ்வினைகள் ஊட்டுவிக்கும் பின்னைஅருள்
மன்னிமிகுத் துன்னை மறைத்ததொழில் மூலமலந்
தன்னைமறைத் தின்பம் தரும்”
என்ற ஞானசாகர வெண்பாவால், இந்தை விளைவித்தல் மலம் என்பதன் கருத்து விளங்கும் என்று எடுத்துக்காட்டி விளக்குவர்.
வீடுபேற்றில் மலம் உண்டு என்று ஒப்புக் கொண்டாலும் அது வீடு பேறடைந்த உயிர்களை சிறிதும் பாதிக்காது என்பது தேற்றம். மலம் எங்கும் நிறைந்தபொருள். எனவே, அது எவ்விடத்தும் நீங்காது. ஆனால் மலந்தொடக்கு என்பது மலத்தின் செயலே அன்றிப் பொருள் அன்று. அச்செயல் உயிரைப் பாதித்த நிலையே தொன்மைநிலையாம். வீடுபேற்று நிலையில் அச்செயல் உயிரைப் பாதிக்காது.
"அழிந்திடும் சக்தி நிந்தம் அழிந்திடாது வொளியின் முன்நேர் அழிந்திடும் இருளும் நாசம் அடைந்திடா மிடைந்திடாவே""
என்னும் சிவப்பிரகாசத்தின்படி,
ஆன்மாவின் அறிவை மறைக்கின்ற மலத்தின்காரியமாகிய சக்தியே அழியும். பாசத்தின் அநாதித் தன்மைக்கு அழிவில்லை அஃது எப்படியென்றால் சூரியன் முன் நில்லாத இருளானது அழிந்தது இல்லை. முனைத்து நிற்பதும் இல்லை. இக்கருத்தையே.
“ஞாலத்தே ஆதித்தன் சந்நிதியில் அந்தகாரம் போல ஓதிற்றென் மெய்கண்டாய் உற்று" என்று சதமணிக் கோவையும்.
"பரிதிமுன் இருள் என மலம் பரையிடைமாயும்" என்று திருவானைக்காபுராணமும்.
"ஆதித்தன் முன்னிருள் போல் தீயமலம் முற்றும்" என்று சித்தாந்த சிகாமணியும் கூறுகின்றன.
எனவே, மலம் நரித்தலாவது தனது மறைத்தற் சக்தி மடங்கிக் கீழ்ப்படுதல் மாத்திரையே பிரிதன்று.
"அதுவதுவாய் நின்றநுபவிக்கும் ஆன்மா ஏனையவற்றையும் அறிவுவழிச் சிவாநுபவ விளைவிற் குறைபடுமாகலின் ஏனையவற்றையறிதல் முத்திப் பெரும்பயனுக்கு இடையூறென்பதும் ஏனையவற்றை யறியாமையை முற்றிப் பெரும்பயனுக்குச் சிறந்த காரணமென்பது முணராது. இக்கருத்துப் பற்றியன்றே 'இன்பம் கொடுத்தல் யிறை யித்தை விளைவிந்தன்மலம்' என்றோதினார் என்க" என்று சிவஞானசுவாமிகள் மாபாடியத்தில் அருளிச் செய்தார். இதற்கு பொருள் நிலை விளக்கமாக அருணைவடிவேலு முதலியார் கூறுவது வருமாறு:
சிவத்தை இனிதுணர்ந்து நிற்றலால் சிறிதும் குறைவில்லாத இன்பமே ஆன்மாவிற்கு உளதாவதன்றி துன்பம் சிறிதும் உண்டாகாமையால், பிறிதொரு பொருளையும் உணரமாட்டாமை பற்றி ஆன்மாவிற்கு உண்டாவதொரு குறையில்லை.
சிவமில்லாத ஏனைப் பொருள்களையுணருமாயின் அவ்வாறு உணர்தலே அதற்குப் பந்தமாய்விடும். அந்தபந்தம் முக்தி பெரும்பயனுக்கு இடையூறாய்விடும். பெத்தநிலையில் சிவனை அறியவொட்டாது மறைத்திருந்த ஆணவமலம், முக்திநிலையில் சிவனைத் தவிர ஆன்மா பிறபொருளை அறியவொட்டாது அதனை மறைத்து நிற்கும். ஆகவே, முக்திநிலையில் ஆணவத்தின் மறைப்பு ஆன்மாவிற்கு இன்பத்திற்கே ஏதுவாகும்."
சுருங்கக் கூறுதல் என்னும் குணத்தை கடைபிடிக்கும்பொழுது மயங்கக் கூறுதல் என்னும் மயகத்தில் விழாமல் செல்ல வேண்டும்.
'இன்பம் கொடுத்தல் இறை' என்பதிலிருந்து இறைவனால் இன்பம் விளைகின்றது என்பது தெளிவாகிறது. ஆகவே இத்தை விளைவித்தல்' என்பது மீண்டும் இன்பத்தினை விளைவித்தல்' எனப் பொருள் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 'சுத்த அநுபோகத்தைத் துய்த்தல் அணு' 'இன்பம் கொடுத்தல் இறை' எனக் கூறிப் பின்னர் 'இத்தை விளைவித்தல் மலம்' என்பதால், 'இந்த நிலையினன விளைவித்தல் மலம் எனப் பொருள் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.
நிறைவாக
அன்றே உயிரைப் பிணித்து இன்றளவும் நீங்காதிருப்பதாகிய ஆணவமலச்சார்பால் ஆன்மாக்கள் வினை போகங்களை அனுபவிக்கும் உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருட்கள் பெற்று பிறப்பு, இறப்புகளில் மாறி மாறி உழல்கின்றன.
இறைவன் அவற்றைப் படைத்து நிலைபெறுத்தி மீள அவற்றை ஒடுக்கி முத்தொழில்களைப் புரிகின்றான். அவற்றுள் மறைத்தலும், அருளலும் அடங்கும். மறைத்தல், அருளம் இவற்றைச் செய்யும்பொழுது இறைவன் திரோதானச்சத்தியின் மூலமே செய்வான். அச்சந்தியே ஆன்மாக்களின் மலச்செறிவு நீங்ருமளவும் மறைப்பாக நின்று, ஆன்மாவின் பக்குவ நிலையில் அருட்சத்தியாக மாறி பரமனின் திருவடிகளை அடையும்படி மிகவும் இரங்கிக் கருணை செய்யும்.
இங்ஙனம், ஆணவம் ஆன்மாக்களுக்கு வீட்டின்ப வடிவாக இருக்கும் இறைவனை உணர்ந்துவதுடன் கருணையைப் பெறுவதற்கும் உதவுகின்றது.
படைப்புந்நிலை யிறுதிப் பயன்
எனவரும் சம்பந்தர் தேவாரம், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரிந்து அவற்றின் முடிந்த பயனாய் வீட்டின்ப வடிவாய் நிற்கும் இறைவனை பயன்தரும் பயனாகப் போற்றுகின்றது.
கட்டுரையாளர்: அ வே சாந்திகுமார சுவாமிகள்
அ.வே. சாந்தி குமார சுவாமிகள் மதுரையில் வசிக்கும் முக்கிய சைவ சித்தாந்த துறவி. உமாபதி சிவம் எழுதிய சிவப்பிரகாசம் என்ற நூலை முக்கிய ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பல நூல்களும் கட்டுரைகளும் எழுதி ல்ந்து கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment