Friday, December 20, 2024

ஆன்ம அவத்தைகள் - 1 - தாமல் கோ.சரவணன்

ஒருவர் அலுவலகத்தில் தன்னுடைய வேலை முடிந்தபின்பு வண்டியை எடுத்துக்காண்டு வீட்டை நோக்கி ஓட்டிவருகிறார். சாலையில் பச்சை விளக்கு ஒளிர்கின்றவரை பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறார். தீடீரென்று சிவப்பு விளக்கு ஒளிரவும் தன் வண்டியை வேகம் குறைத்து நிறுத்திவிடுகிறார். மீண்டும் பச்சை விளக்கு ஒளிரும்போது வண்டியை ஓட்டிக் கொண்டு வீடுபோய் சேர்கிறார். நீங்கள் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர் வண்டியில் ஏறி உட்கார்ந்து அதை ஓட்டத் தொடங்கியதும் இனி எங்கே போக வேண்டும் என்பது தெரியாமல், பச்சை விளக்கு ஏன் போடுகிறார்கள், சிவப்பு விளக்கு ஏன் போடுகிறார்கள் என்றும் தெரியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டேயிருந்தால் எவ்வளவு பரிதாபத்திற்குரியதாக இருக்குமோ, அத்தகைய பரிதாபம் என்றேனும் உங்கள்மேல் வந்திருக்கிறதா? நான் ஏன் என்மீது பரிதாபப்படவேண்டும் என்று நீங்கள் முணுமுணுப்பதை என் எழுத்துகள் ஒட்டுக் கேட்கின்றன. உண்மையில் அந்த எதுவும் தெரியாத வாகன ஓட்டியும் நாமும் ஒன்றுதான். இந்த உலகத்திற்கு உடம்பு என்கிற வண்டியை வாங்கி அதற்குள் உட்கார்ந்து கொண்டு இந்த உயிர் எங்கே போய் சேருவது என்று தெரியாமல், பிறப்பு என்கிற பச்சை விளக்கும், இறப்பு என்கிற சிவப்பு விளக்கும், இடைஇடையே ஏன் வருகிறதென்றும் அறியாமல் இந்த உடம்பை ஓட்டிக்காண்டே திசை தெரியாமல் இருக்கிற உயிருக்குச் சொந்தக் காரர்களாகிய நம்மைப் பார்த்து நாம் பரிதாபம் படவேண்டும்தானே!




அத்தகு பரிதாபத்திற்குரிய மனிதக்கூட்டத்தில் யாரோ சிலர் அருளாளர்கள் என்றபடியாக இந்தப் பூமியில் தோன்றி இந்தப் பரிதாப நிலையை உணர்ந்து பிறப்பையும், மரணத்தையும், வீட்டையும் (முக்தி) உடம்பையும், உயிரையும் பற்றி தெரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முயற்சி செய்தார்கள். அதில் பலர் வென்றனர். அதில் சிலர் வென்றதைச் சொன்னனர். திருவள்ளுவர் தொட்டு திருமூலர் தொடர்ந்து வள்ளலார் வரையுமான அவர்கள்தான் மேற்சொன்ன வென்றவர்களில் வென்றதைச் சொன்னவர்களில் Toppers.

  அப்படி அருளாளர்கள் எழுதிப் போன இறை இரகசியங்களில் முக்கியமானதும் இன்றியமையாததுமானதுதான் சைவசித்தாந்தம் எனும் உண்மைத் தத்துவம். நான் வெறுமனே தத்துவம் என்று சொல்லாம் ஏன் உண்மை என்கிற ஒன்றை அழுத்திச் சொல்கிறேன் என்றால் சைவசித்தாந்தம் ஏதேதோ பொருள்களைப் பற்றிச் சொல்லாமல் உயிர் (பசு) உலகம் (பாசம்) கடவுள் (பதி) என்கிற மூன்று உண்மைப் பொருள்களைப் பற்றிச் சொன்னதால் சைவசித்தாந்தத்தை உண்மைத் தத்துவம் என்கிறேன்.

  தத்துவம் என்றாலே பலருக்குத் தக்காளிப் பழத்தைத் தின்பதைப் போல புளிக்கலாம். ஏனென்றால் அதை அப்படிதான் நமக்கு இதுகாறும் திணித்திருக்கிறார்கள் நான் எப்போதோ ஒருமேடையில் கேட்ட நினைவு, ஒருவர் சொன்னார் தத்துவத்திற்கும், பெரிய தத்துவத்திற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?... பார்வையாளர்கள் அமைதியாக இருந்தனர். அந்தப் பேச்சாளர் சொன்னார் சொல்பவனுக்குப் புரிந்து கேட்கிறவனுக்குப் புரியவில்லை என்றால் அது தத்துவம் சொல்கின்றவனுக்கும் புரியாமல் கேட்கின்றவனுக்கும் புரியால் இருந்தால் அது பெரியதத்துவம். சொல்லி முடித்ததும் அவை சிரித்து ஓய்ந்தது. இப்போதெல்லாம் தத்துவங்கள்கூட standup comedy-யின் கண்டென்டுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன சரி போகட்டும், சைவசித்தாந்தம் மூன்று உண்மைப் பொருள்களைச் சொல்கின்ற பெரிய பொக்கிஷம். இதனை மிகச் சாதாரணமாகக் கடந்து போகிறோம். ஆனால் உங்களுக்குள்ளே இருக்கிற உயிர் என்கிற Super Biological Matter உங்களை நீங்கள் என்று காட்டுகிற உடம்பும், அது நுகர்கின்ற உலகம் முதலான Super Physiological Matter நிறைவாக எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றிற்கும் உள்ளேயும் இருப்பதாலேயே "கட” “வுள்” என்ற பெயர் பெற்றிருக்கும் இறைவன் என்கிற “Super Spritual Matter” ஆகிய மூன்று பொருள்களைப் பற்றிய நீள, அகல, ஆழ உயர உண்மை இரகசியங்கள் எல்லாம் சைவசித்தாந்தம் என்கிற வங்கியில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. மனிததேகத்தைப் பெற்று அளப்பரிய சிந்திக்கின்ற பேராற்றலைப் பெற்றிருக்கிற நாமெல்லாம் உயிர் (super Biological matter) இறைவன் (super Spritual matter) உலகம் (super physiological matter) என்ற மூன்றினைப் பற்றிய ஆய்வினை, அகப்பயணத்தை நிச்சயம் தொடங்க வேண்டியது அவசியம். இம்மூன்றுள் இன்னும் அறிவியலுக்குப் புலப்படாத மேலும் அறிவியலுக்கு நேரெதிராக நிறுத்திவைக்கப் பட்டிருக்கிற இறையையும், நமக்கு வெளியேயான உலகையும் அறியும் முன்னர் நாமாகிய நமக்கு உள்ளேயிருந்து நம்மை செலுத்துகின்ற நமக்குள் உயிர்ப்புத்தன்மையின் உஷ்ணத்தை உண்டுபண்ணிக் கொண்டே இருக்கிற ஆன்மாவினைப் (உயிர்) பற்றி முதலில் அறிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

  இந்தச் சொல் இந்திய ஆன்மிகத்தில் மிகப்பிரபலமான ஒன்று. மகாபாரதத்தில் குருசேத்திரப் போர்க் களத்தில் எடுத்த காண்டீபத்தை தூக்கி எறிந்து உட்கார்ந்துவிட்ட அர்ஜூனனுக்கு கண்ணன் உபதேசித்த பகவத்கீதையின் அடிநாதமே ஆன்மாதான். தமிழர் மெய்யியலும் கூட ஆன்மா என்ற ஒன்றினை மையப்படுத்தியே பேசப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன் என்பான்கூட குற்றமே செய்யாமல் கள்வனாக அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதன் காரணம் அவன் முற்பிறப்பிலே நீலி என்பாளுக்கு செய்த பாவமே ஊழாக வந்து அவன் ஆன்மாவை மறுபிறவி எடுக்க வைத்து அனுபவிக்கச் செய்தது என்கிறார் இளங்கோவடிகள். ஆன்மாவைப் புரிந்து கொள்ளாமல் ஆன்மிகத்தைப்  புரிந்து கொள்ள நீங்கள்  நினைப்பது நீரற்ற கடலில் நீந்த நினைப்பதாகும்.

  ஆன்மாவைப் பற்றி நான் நினைக்கின்றபோதும் பிறருக்குச் சொல்ல முற்படும்போதும் எப்போதோ படித்த உபநிடதத்தின் ஒரு கதைதான் முந்திக்கொண்டு வரும்.

“ஆன்மாவை பசி, தாகம், மூப்பு, மரணம்,  எவையும் தீண்டாது. ஆன்மாவே அறியத்தக்கப் பொருள். அதையறிந்தபின் எல்லா இன்பங்களையும் எல்லா பதங்களையும் அடைந்தவராவார்” என்று ஞான குருவாகிய பிரஜாபதி சொன்னதைக் கேள்வியுற்ற தேவர்களும், அசுரர்களும் எப்படியாவது அந்த இன்பத்தையும் பதத்தையும் அடைய வேண்டும் என்று, வட்டமேசை சதுரமேசை மாநாடெல்லாம் செய்து தேவர்கள் சார்பாக இந்திரனையும், அசுரர் சார்பாக விரோசனையும் பிரஜாபதியிடம் ஆன்மாவை அறிந்து கொள்ளும்பொருட்டு அனுப்பி வைத்தார்கள்.

  பிரமசரிய விரதத்தை ஏற்று பல ஆண்டுகள் குருகுலத்திலேயே வசித்த இருவரையும் பிரஜாபதி அழைத்து “என்ன காரணத்திற்காக இங்கே வந்தீர்கள்” என்று கேட்டார். அவர்கள் இருவரும் ஒருசேர “ஐயா மூப்பு, மரணம், பசி, தாகம், இவைகளில் எதுவும் தீண்டாத ஆன்மா ஒன்று உண்டென்றும் அதுவே அறியத்தக்க அடையத்தக்கப் பொருளென்றும் சொன்னீர்களாமே, அந்தப் பொருளைக் காண வந்தோம்” என்றனர்

  கண்களை மூடிய பிரஜாபதி எதிரே இருப்பவர்களுக்கு “கண்களுக்குள் தோற்றப்படுபவனே ஆன்மா” என்றார். இது ஒரு மந்திரச்சொல்……. எண்களே தெரியாதவர்க்கு Formula சொன்ன கதையாக இது இருந்தது. என்ன சொல்ல வருகிறார் என்பதை அமைதியாக, கேட்கவும் கிரகிக்கவும் பொறுமையில்லாத இருவரும் “நீரினில் பார்க்கும் போதும் கண்ணாடியில் பார்க்கும் போதும் ஒன்றைக் காண்கிறோமே அதுதான் ஆன்மாவா? என்று கேட்டனர். பிரஜாபதிக்கு ஒன்று நன்றாக புரிந்தது இவர்களுக்கு எது ஆன்மா என்று சொல்லவதைவிட எதுவெல்லாம் ஆன்மா இல்லை என்பதை உணரவைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

  அவர்கள் மனோநிலையைக் கண்டு பிரஜாபதி அதிகம் வளர்க்காமல், “ஆம் இவை அனைத்திலும் ஆன்மாவைக் காணலாம்” என்று சொல்லி, போய்த் தண்ணீர்க் குடத்தில் ஆன்மாவைப் பார்த்து, கண்டதும் காணாததும் வந்து சொல்லுங்கள்” என்றார்.

அவ்வாறே அவர்கள் தண்ணீர்க் குடுத்தில் தங்கள் முகத்தை நன்றாகப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாகத் திரும்பினார்கள்.

  “ஆன்மாவைப் பார்த்தீர்களா?” என்றார் குரு.

  “ஆம், பார்த்தோம்; மயிர், நகம் உள்பட எல்லாம் சரியாகக் கண்டோம்” என்றார்கள்

  “குளித்து, நல்ல உடுப்பு அணிந்து, மறுபடி தண்ணீர்க் குடத்தில் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார்.

அவர்கள் அவ்வாறே செய்தார்கள். “என்ன பாத்தீர்கள்?” என்று கேட்டார் “நாங்கள் இருந்தபடியே, ஆன்மாவும் குளித்து நல்ல உடையும் ஆபரணமும் அணிந்திருக்கக் கண்டோம்” என்றார்கள்.

  “சரி! அழிவற்ற பொருளைக் கண்டீர்கள்” என்றார். அதைக் கேட்டுத் திருப்தியடைந்து இருவரும் தத்தம் இருப்பிடம் திரும்பினார்கள். விரோசனன் மிக்க மகிழ்ச்சியுடன் அசுரர்களுக்குத் தான் கற்றதைப் போதித்தான். “சரீரமே ஆன்மா; அதற்கே சேவை செய்யுங்கள். பூசிக்கத்தக்கது தேகமே; அதைச் சரியாக உபாசித்தால் எல்லாச் சுகமும் அடைவோம்” என்று அசுரர்களுக்கு உபதேசித்தான்.

      விரோசனன் திருப்தி அடைந்துவிட்டபோதிலும் இந்திரன் கொஞ்ச தூரம் நடந்ததும் ஐயங்கொண்டான். ‘இதென்ன? நான் குடத்தில் பார்த்தது சரீரத்தின் பிம்பந்தானே? தேகம் அலங்கரிக்கப்பட்டபோது அலங்கரிக்கப் பட்டவாறும், குளித்தபோது குளித்தவாறும், உடையும் ஆபரணமும் தரித்தபோது உடையாபரணம் தரித்தவாறும் இருந்தது இந்தப் பிம்பம் கையில்லாமல் போனால் கையில்லாமலும், காலில்லாமல் போனால் காலில்லாமல் வேறு அங்கம் இழந்தால் அவ்வாறே அதுவும் அங்கக்குறைவோடும் குடத்தில் காணப்படும் இந்தப் பிம்பமும் மாறுபட்டுத் தோன்றும். நாம் தேடிய அழிவற்றதும், வேறு பாடற்றதும், பயமற்றதுமான ஆன்மா இது எவ்வாறு ஆகும்? நான் உண்மையைக் காணவில்லை’ என்று தனக்குள் சந்தேகங்கொண்டு திரும்பினான்.

  மறுபடியும் பிரஜாபதியிடம் நின்றான். “ஏன் திரும்பினாய்? விரோசனனும் நீயும் திருப்தியடைந்து போனீர்களே? என்றார் பிரஜாபதி. குருவே! தாங்கள் செல்லிக் காண்பித்த ஆன்மா இந்தச் சரீரத்தைப் போலவே, உடை, ஆபரணம், நோய், அவயவக் குறைகள், அனைத்தும் கொண்டதாகவே இருந்தது. இது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை” என்றான் இந்திரன்.

  “நீ சொல்வது உண்மை உனக்கு இன்னும் உபதேசம் செய்வேன். நீ இங்கே தங்குவாயக” என்றார் பிரஜாபதி. சில ஆண்டுகளுக்குப் பின் பிரஜாபதி இந்திரனைப் பார்த்து, ஒருவன் தூங்கும்போது கனவு கண்டு, உடலை விட்டு வெளியேகி, எதேச்சையாக மகிழ்ந்து செல்லுவது நீ அறிவாயல்லவா? அவனே ஆன்மா” என்றார்.

  இதைக் கேட்ட இந்திரன், உடலினின்று வேறான ஆன்மாவை அறிந்ததாகத் திருப்தியடைந்து விடைபெற்றுச் சென்றான். ஆனால், போகும் வழியில் முன்போலவே மறுபடியும் பெரிய சந்தேகம் தோன்றிற்று “பார்வையற்று இருந்தாலும், வேறு அங்கக் குறைகளிருந்தாலும், கனவு காணும் ஆன்மா அக்குறைகளில்லாமலிருப்பது உண்மையே. ஆயினும் கனவு காணும் போது, அடிபட்டும் வெருட்டப்பட்டும் துயரப்பட்டும் கண்ணீர் விட்டழுதுங்கூட அலைகிறோம். கனவிலும் நான் என்று வருவது என் உடலின் உருவமாகத்தானே இருக்கிறது. மேலும் மனம் ஆசைப்படுகின்ற, பயம் கொள்கின்ற விஷயங்கள் எல்லாம்தானே கனவில் வரும் என்னில் பிரதிபலிக்கிறது எனில் மனம் எப்படி ஆன்மாவாக முடியும் இது சரியல்ல. நான் உண்மையைக் காணவில்லை” என்று பிரஜாபதியிடம் மறுபடியும் வந்து நின்றான்.

  இந்தக் கதையைக் படிக்கின்றபோது ஆன்மா என்பது வெளியே தெரிகின்ற உடம்போ அல்லது மனமோ இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம், பிரஜாபதியும் இந்திரனுக்கு எது ஆன்மா என்று சொல்வதைவிட எதுவெல்லாம் ஆன்மா இல்லை என்று சொல்ல நினைத்ததால் இதனைச் செய்தார். உடம்பும், மனமும் ஆன்மா இல்லை என்றால்  எதுதான் ஆன்மா………? “உடம்பும், மனமும் இயங்குவதற்குக் காரணமாய் இருக்கின்ற உயிர்தான் ஆன்மா”.

  உயிர் (ஆன்மா) என்ற ஒன்றினை சைவசித்தாந்தம் பசு என்று சொல்கிறது பசு என்றதும் மாடு என்று நேரே பொருளுக்குப் போய்விடாதீர்கள். தத்துவப்படி பசு என்றால் “கட்டுண்டது” என்று பொருள். எதனால் கட்டுண்டது எனில் பாசம் (கட்டு) என்பதால் கட்டுண்டது பாசம் என்பது யாதெனில் உலகம் என்று பொதுவாக வைத்துக்கொள்ளுங்கள் பின்னால் தனியே இதைப்பற்றி விவரிக்கலாம் இந்த கட்டுண்ட பசுவே ஆன்மா. ஆன்மா என்பது உயிர் அது இங்கே ஒன்று, இரண்டல்ல எண்ணிலடங்கா கணக்கில் இருக்கின்றது. நீங்கள் கண்ணில் பார்க்கின்ற மரங்கள், பறவைகள், விலங்குகள் என எல்லாவற்றுக்குள்ளும் ஜீவனாய் இந்த ஆன்மாவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆன்மாவிற்கு தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை. கிட்டத்தட்ட கடவுளின் நிலைதான் ஆனால் எங்கே இது கடவுளிடம் இருந்து வேறுபடுகிறது தெரியுமா? கடவுள் மலமற்ற நிமலனாக இருக்கிறார், ஆனால் ஆன்மா இயற்கையாகவே ஆணவம் என்கிற மலத்தையும் அதன்பின்னால் கன்மம், மாயை என்கிற மலங்களையும் பெறுகின்றது. இறைவன் ஆதி அந்தமில்லாத பேரொளி ஆனால் ஆன்மா கோடி சூரியப் பிராகசமாக இருந்தாலும் ஆண்டவனின் அருள் ஒளி அளவிற்கு முன்னால் ஆயிரம் கோடி மடங்கு அற்பச் சிறியது இந்த ஆன்மா மேலும் ஆண்டவனின் அருள்ஒளியானது எல்லாம் அறிகின்ற பேரறிவினைக் கொண்டது. ஆனால் ஆன்மா தானே உணர்கின்ற ஆற்றல் இல்லாதது “அறிவிக்க அறியும் அறிவு” என்பார்கள் அதாவது ஆன்மா உடம்பினைப் பெற்று இங்கே வந்து இந்த உடம்பின்மூலம் என்ன அறியுமோ அதை அறிந்துணரும் அதனாலே அதனை சிற்றறிவு என்கிறோம் இதனை “சார்ந்து அதன் வண்ணமாதல்” என்பார்கள்.

  தோற்றம் இல்லாததும், அழிவு இல்லாததும், சிற்றறிவு கொண்டதும், கோடி சூரியப் பிரகாசம் கொண்டதும் நம் உடம்பில் நெற்றிக்கு நடுவே உள் நாவுக்கு மேலே வெச்ச விளக்காக எரிகின்றதுமான ஆன்மாவின் அடிப்படை குணங்களைத் தெரிந்து கொண்டோம். இப்போது அதன் நிலையினை என்னவென்று உணர முயல்வோம்.

  “Status of Anma” என்று சொன்னால் உங்களுக்கு இன்னும் விளங்கும் இந்த ஆன்மாவின் நிலைகளைத்தான் சைவ சித்தாந்தம் “ஆன்ம அவத்தைகள்” என்று குறிப்பிடுகின்றது. அடிப்படையில் ஆன்மாவின் நிலைகள் மூன்று அவை “கேவலம்” “சகலம்” “சுத்தம்”. இதைப் படித்ததும் எங்கிருந்துதான் இந்த சொற்களை இறக்குமதி செய்தார்களோ என்று நொந்து கொள்ள வேண்டாம். இந்தச் சொற்பிறப்பியலை ஆய்ந்தால் ஆச்சரியமானதாக இருக்கும். அது இங்கே அவசியமில்லை என்பதால் அதற்குறிய விளக்கங்களுக்குச் செல்வோம். சகலம் என்பது ஆன்மாவானது பிறப்பு இறப்பு என்னும் சூழலில் உள்ள நிலையாகவும், கேவலம் என்பது பிறவிச் சுழலுக்கு வருவதற்கு முன்னான நிலையாகவும், சுத்தம் என்பது மலங்களின் பிடியில் இருந்து விடுபட்ட முக்தி நிலையாகவும் சொல்லப்படுகிறது.

  ஒரு ஆன்மா தன்னை ஆன்மா என்று உணராமல் இருப்பதற்குக் காரணம் அரிசியை உமி மூடியிருப்பதைப் போல ஆணவம் என்கிற இயற்கை மலம் இயற்கையாகவே ஆன்மாவை மறைத்து நிற்கிறது இப்படி உயிர்களானது ஒரே மலமான ஆணவத்தோடு (அழுக்காடு) திரிகின்ற நிலை “கேவல நிலை” (pre life state ) இந்த நிலையில் உயிர்கள் அறிவும் இன்றி செயலும் இன்றி “do nothing” எனும் நிலையில் இருக்கும். இவ்வாறு ஆணவத்தில் மறைப்புண்டு துன்புறுகின்ற உயிர்களைக் கண்டு கருணை, அருள், தயவு என்கிற  ஒன்றையே தானாகக் கொண்ட கடவுள் அவை அம்மலம் நீங்கி வாழும் பொருட்டு அவ்வுயிர்களை உலக வாழ்க்கைக்கு அனுப்புகிறது. அறிவும், செயலும் அற்ற ஆன்மா அறிந்து கொள்ளவும், செயல்கள் செய்யவும் ஏதுவாக இவ்வுடம்பையும் அது நுகர்ந்து வாழ உலகையும் தந்தருள்கின்றது இந்த நுகர்வுக்குரிய உலகம்தான் மாயை ( tool of creation ). மாயையிலிருந்துதான் இந்த உடலும், உலகமும் உருவாக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளது.

  அவ்வாறு ஆணவம் என்கிற அழுக்கைக் கழுவிக்கொள்ள இந்த ஆன்மாவை இங்கே அனுப்புகிறபோது மாயையோடு சம்பந்தப்படும் நிலையிலே அது இப்போது கேவலநிலையில் இருந்து சகல நிலைக்கு (living state ) முன்னேறுகிறது.

  முதல் நிலையான கேவல நிலையில் (pre life state) இருந்த ஆன்மாக்கள் அறிவற்றும் செயலற்றும் இருந்தது.  இப்போது சகலநிலையில் (living state) அறியும் வண்ணமும், செயலாற்றும் திண்மையும் பெறுகின்றது. இதை எளிமையாக எப்படி புரிந்து கொள்ளலாம் என்றால், இன்றைய அறிவியலில் மின்சாரம் எனப்படுவது எந்த கருவிகளும் இல்லாத போது எந்த செயலும் அற்று இருக்கிறது. ஆனால் அது மின்விளக்கோடு சம்பந்தப்படும் போது வெளிச்சத்தை தருவதாயும், மின்விசிறியோடு சம்பந்தப்படும்போது காற்றை வீசுவதாயும், மின் அடுப்போடு சேரும் போது வெப்பத்தை உண்டுபன்னுவதாயும் இருக்கிறது. வெளிச்சமும், காற்றும், வெப்பமும் இன்னபிறவும் தருகின்ற மின்சாரம் இந்த கருவிகள் இல்லையென்றால் எதுவும் தராமல் செயலற்ற நிலையில் ஆனால் அதே ஆற்றலோடு சும்மா இருப்பதைப் போலத்தான் ஆன்மா ஆற்றலோடு சும்மா கேவல நிலையில் இருக்கிறது. உலகம் உடல் என்கிற கருவி கிடைத்தவுடன் அதனூடாக செயல்படுகின்றது. இந்நிலையே சகல நிலை.   அவ்வாறு கடவுளின் திருவருளால் இதனைப்பெற்ற உயிர்கள் இவ்வுலகில் நன்மையே அறிந்து நன்மையே புரிந்து வாழாமல் ஆன்மாவிற்குரிய தனித்த தான்தோன்றித் தனத்தால் அது தனித்து இயங்கும் வல்லபம் பெற்றதால் அது இங்கே குற்றங்களையே அறிந்து குற்றங்களையே புரிந்து வினை என்கிற கன்மத்தை combo Offer ஆக நல்வினை, தீவினையாகப் பெறுகின்றது. (மும்மலம்: ஆணவம், கன்மம், மாயை)

  இவ்வாறு ஆணவம் என்கிற மலத்தினை துடைக்க மண்ணில் உடம்பைப்பெற்ற ஆன்மாக்கள் மாயையில் மயங்கி கன்மத்தைப் பெறுவதால் நல்வினைக்கு நல்ல பயனையும், தீவினைக்கு தீயப் பயனையும் அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கின்றன. இந்த சுழற்சியில் சகல நிலையில் (living state) தொடர்ந்து ஆன்மா மாட்டிக்கொண்டு உழல்கிறது. இந்த நிலையின் பரிதாபத்தை உணர்ந்துதான் மணிவாசகர் “செல்லா நின்ற இத்தாவரச் சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்” என்றும் வள்ளலார் “இறந்து இறந்து இளைத்ததெல்லாம் போதும்” என்றும் பாடினர். இங்கே அவர்கள் இளைத்தது என்று குறித்தது உடம்பையல்ல பலபல பிறவிகளை எடுத்துத் தேய்ந்த ஆன்மாவை. அவ்வாறான மயக்க சுழற்சியில் உள்ள ஆன்மாக்கள் திருவருளாலும், ஆன்மாவின் சுதாரிப்பாலும் இந்த கன்மம் மாயையை உணர்ந்து நிறுத்தி, ஆணவத்தையும் அவித்துக் கொண்டு இனி பிறப்பு இறப்பில்லாது இறைவனின் பெருஞ்ஜோதியில் கலந்து பேரின்பம் அடைகின்றன இந்நிறைவான நிலையே “சுத்த நிலை” ( eternal life state) எனப்படுகிறது.

  இங்கே இதை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்கள் எல்லோரும் கேவலநிலையைக் கடந்து சகலநிலை எனும் இரண்டாம் நிலையில் இருக்கிறீர்கள். நம்முடைய சுதாரிப்பு கைக்கொடுக்குமேயானால் இந்த ஆன்மாவை சுத்த நிலைக்கு (Eternal life state) கொண்டுபோக முயற்சி செய்யலாம்.

  ஆன்மச் சசோதரர்களே மேற்சொன்ன கேவல, சகல, சுத்த என்கிற மூன்று நிலையும் ஆன்மாவின் காரண நிலைகளாகும். அதாவது காரண அவத்தைகள். (Fundamental state) இதனுள் ஐந்து ஐந்து என்று பதினைந்து காரிய நிலைகள் விரிகின்றன (Common states)

  ஆன்மாவினுடைய இந்த மூன்று காரண நிலைகளை உணர்ந்து கொண்ட நீங்கள் காரிய நிலைகளான 15 யும் தெரிந்துகொண்டால் ஆன்மாவின் நிலையைப்பற்றி முழு அறிவினைப் பெற முடியும்.

கட்டுரையாளர்: தாமல் கோ.சரவணன் M.Sc., M.Ed., எழுத்தாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்

உயிரிதொழில் நுட்பவியல் ( master in Biotechnology) ல் முதுநிலையும் பெற்றவர்.

தற்போது ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் ( Director of Syllabus committee board ) அமெரிக்காவின் Florida International University –யின் வள்ளலார் ஆய்விருக்கைக் குழு உறுப்பினராகவும் ( board member of vallalar chair) காஞ்சிபுரம் ஊர்க்காவல் படையின் மண்டலத் துணைத் தளபதியாகவும் (Deputy Area Commander of TamilNadu home guards) பிஏவி பன்னாட்டுப்பள்ளியில் துணை முதல்வராகவும் (vice principal) பொறுப்பு வகிக்கின்றார்.எழுதிய நூல்கள்

1.வள்ளலார் வளர்த்த தமிழ்

2.தமிழ் வளர்த்த சான்றோர்கள்

3.காப்பியங்கள் அணிந்த காலணிகள்

4.கம்பன் கவியில் காத்திருப்பு




3 comments:

  1. Good article in simple language

    ReplyDelete
  2. துரியம் கடந்த சுடர் - தொடக்கம் முடித்து திரும்பினால் உங்களின் ஆன்ம அவத்தைகள். என்னை போன்றோருக்காக. தாங்கள் தொடர்ந்து சித்தாந்தத்தை விளக்கி அருள வேண்டும் . நன்றி!

    ReplyDelete
  3. மிக அருமையான கட்டுரை. சைவ சித்தாந்த வகுப்பில் கேட்டு தெரிந்து கொண்ட பல விஷயங்களை படித்து தெரிந்து கொள்வது மகிழ்வாக உள்ளது. தங்கள் பணி தொடர வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete