1. மெய்கண்டார்
'திருமுனைப்பாடி' என்ற நடு நாட்டில் "திருப்பெண்ணாகடம்" என்னும் ஊரில் சைவ வேளாளர் குலத்தில் அச்சுதகளப்பாளர் என்பருக்கு மகனாக தோன்றியவர் மெய்கண்டதேவர். அச்சுதகளப்பாளருக்கு மக்கட்பேறு இல்லாத குறை ஏற்பட்டிருந்தது. ஆதலால் அவர் தம் குல குருவாகிய திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியாரிடம் சென்று தம் குறையை தெரிவித்தார். அப்போது அருணந்தி சிவாச்சாரியார் கயிறு சாத்துதல் என்ற முறைப்படி பலன் சொல்லினார். இந்த கயிறு சாத்துதல் என்பது திருமுறைகளை எடுத்து அதில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்தால் ஒரு பாடல் வரும் அந்தப் பாடலின் பொருளை வந்தவர்களுக்கு பலனாக சொல்லுதல் ஆகும்.அப்படி கயிறு சாற்றும் பொழுது,
“பேயடையா பிரிவைதும்
பிள்ளையோடு உள்ளநினை
வாயினவே வரம்பெறுவர்
ஐயுரவேண் டாவொன்றும்
வேயனேதோள் உமைபங்கன்
வெங்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத்
தோயாவாம் தீவினையே”
ஒருநாள் சிவபெருமான் அச்சுதகளப்பர் கனவில் தோன்றி இப்பிறவியில் உங்களுக்கு பிள்ளை பேறுகிடையாது என்று சொல்லிவிட்டார். இவரோ சிவபெருமானிடம் கனவிலேயே அழுது புலம்பி எங்களுக்கு ஞானசம்பந்தர் போல ஒரு நல்ல ஞான குழந்தை வேண்டும் என்று மன்றாடி வணங்கி கேட்டார். இறைவனும் உமையும் பணிந்து உங்களுக்கு ஞான குழந்தை பிறக்கும் என்று வரம் அளித்தனர். அப்படியே ஒரு ஞானக் குழந்தை பிறந்தது. அவருக்கு சுவேதவனப்பெருமாள் என்று பெயர் சூட்டினார். பின் திருவெண்காட்டில் இருந்து திருப்பெண்ணாடகத்திற்கு வந்தனர். அங்கு சில காலம் வாழ்ந்தனர். பின்பு அந்தக் குழந்தையை திருவெண்ணெய்நல்லூரில் உள்ள தன் மாமனார், எடுத்து தமது இல்லத்திற்கு கொண்டு சென்று வளர்த்து வந்தார். சுவேதவனப் பெருமாள் திருவெண்ணைநல்லூரில் இருந்த பொழுது சனற்குமார முனிவரது ஞானப் புதல்வராகிய சத்ய ஞான தரிசினிகளிடம் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர், பொதிகை மலைக்கு அகத்தியரை காண செல்லும் வழியில் சுவேதவனப்பெருமாளை பார்த்து, அவரது ஞானத்தை போற்றி இவருக்கு உபதேசம் நல்கி மெய்யுணர்வு அளித்து "மெய்கண்டார்" என்று பெயர் சூட்டினார். அன்றிலிருந்து அவருக்கு மெய்கண்டார் என்ற பெயரே உருவானது. பின் அவர் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றி, 49 மாணவர்களை தன் சீடர்களாக உருவாக்கினார்.
இவரது மாணவரது பரம்பரை வாயிலாகவே, தமிழ் நாடெங்கும் சித்தாந்த திருமடங்கள் ஏற்பட்டன. முதல் மாணவர் பரம்பரையில் வந்த நமச்சிவாய தேசிகரால் ஏற்படுத்திய மடம் திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். அதே பரம்பரையில் வந்த ஞானசம்பந்த தேசிகரால் தருமபுர ஆதீனம் ஏற்படுத்தப்பெற்றது. மெய்கண்டதேவரது மாணவருள் முதலில் நின்றவர் அவரது தந்தையாருக்குக் குலகுருவாகிய அருணந்தி சிவாச்சாரியார். பதினான்கு சித்தாந்த நூல்களுள் ஒன்றாகிய உண்மை விளக்கம் நூலாசிரியராகிய மனவாசகம் கடந்த தேவரும் அவர் மாணவருள் ஒருவர். சிற்றம்பலநாத அடிகளும் அவர் மாணவருள் ஒருவர் என்ற கருத்தும் உண்டு. மெய்கண்டதேவர் தமது மாணவருக்கு உண்மைப் பொருள் உணர்த்திய பின்னர் நனவிலேயே, ஐப்பசித் மாதம் சுவாதி நட்சத்திரத்திரத்தில் சமாதி நிலை அடைந்தார் என்று அவரது வாழ்க்கை குறிப்பு கூறுகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைநல்லூரில் இவரது சமாதி கோவில் உருவாக்கப்பட்டு திருவாவடுதுறை மடத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவரது காலம் 13 ஆம் நூற்றாண்டு ஆகும்.
2. அருணந்தி தேவர்
சந்தான குரவர் மரபில் இரண்டாவதாக வருபவர் அருணந்தி தேவர். இவர் ஆதி சைவ மரபைச் சேர்ந்தவர். நடுநாட்டிலேயுள்ள திருத்துறையூரில் வாழ்ந்தவர். மெய்கண்டதேவருடைய தந்தையாருக்குக் குலகுரு. மெய்கண்டதேவர் அவதரிப்பதற்குக் காரணமாயிருந்தவர். இவர் சிவாகமங்களனைத்தையும் கற்றுத் துறை போகிய வித்தகராதலால் 'சகலாகம பண்டிதர்' என்ற உயர்ந்த பட்டம் பெற்றிருந்தார். இவர் வடமொழியில் வேதம் முதலிய கலைகள் யாவற்றையும் கற்றவர். பன்னிரு திருமுறைகளையும் மிக்க பக்தியுடன் கற்றுப்போற்றியவர்.
இவர் தம் நாட்டிலுள்ள சைவர்கள் பலருக்கும் குலகுருவாக இருந்து ஐந்தெழுத்து ஓதுவித்தும், தமது பெரும் போதனையால் சைவ நெறி நிலைநாட்டியும் சைவ சித்தாந்தத்திற்கோர் தலைவராகத் திகழ்ந்தார். அவரிடம் ஞான நூல்களைப் பாடங்கேட்டவர்கள் எண்ணற்றவர். எந்த இடத்திற்கு சென்றாலும் தமது மாணவர்களுக்கு நல்லது போதிக்கும்பொருட்டும், சித்தாந்த உண்மைகளை நிலை நாட்டுதற் பொருட்டும், சிவாகமங்களைத் தனி வண்டியில் ஏற்றிக் கொண்டு போவார் என்று அவர் வரலாறு கூறும். இவர் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு பாதங்களையும் கூறும் மூலாகமங்களையும் உபாகமங்களையும் பாதுகாத்தது போல அவருக்குப் பின், வந்தோர் பாதுக்கக்காமல் ,பல மறைந்து சில மட்டும் எஞ்சி, இன்று காணப் பெறுகின்றன.
மெய்கண்டார் சிறு பருவத்திலேயே மாணவர் பலர்க்கும் ஞானநூல் கற்பிக்கின்றார் என்பதைக் கேள்விப்பட்ட அருணந்திதேவர் வியப்படைந்து தூதர் சிலரை முன் அனுப்பி, திருவெண்ணெய் நல்லூருக்குத் தமது பரிவாரங்களோடும், விருதுகளோடும் புறப்பட்டார். அப்பகுதியிலுள்ள சைவ வேளாளர்கள் யாவரும் தெருக்களெங்கும் வாழை, கமுகு, தெங்கு என்றவற்றால் தோரணம் கட்டி, வீடு தோறும் பூரண கும்பமெடுத்து, மங்கள வாத்தியங்களோடு தங்கள் குருவை எதிர்கொண்டு வணங்கினர்.
மெய்கண்டதேவர் மட்டும் , அருணநந்திதேவரின் வரவை எதிர் கொள்ளாது தமது இருக்கையில் அமர்ந்திருந்தார். அதனைக் கண்ட அருணந்திதேவர் மெய்கண்டதேவருக்கு முன் நேரே சென்று , அவர் தமது மாணவர்க்கு ஆணவமலத்தின் இயல்பினை எடுத்து சொல்வததை கேட்டு, அருள்நந்தி தேவர் மெய்கண்டாரை பார்த்து ஆணவமலம் என்றால் என்ன? என்று கேட்டார். உடனே மெய்கண்டார் இன்முகத்தோடு தன் விரலை அருள்நந்தி தேவரைப் பார்த்து சுட்டிக்காட்டினார். அந்தச் செயலுக்குப் பின் தன் தவறை உணர்ந்து, மெய்கண்டார் திருவடி பணிந்து தமக்கு ஞானம் நல்க வேண்டினார். உடனே அருள் நந்தி சிவத்திற்கு, மெய்கண்டார் திருநீறு அளித்து மெய்யுணர்வு அருளி ,சிவஞான போதப் பொருள் உணர்த்தி, தமது நாற்பத்தி ஒன்பது மாணவருள் முதல் மாணவராகவும் ஆக்கினார். மெய்கண்டார் தமக்குச் செய்த பெரு நன்றியை அருணந்தி சிவம் தாம் சிவஞான போதத்திற்கு வழி நூலாக இயற்றிய சிவஞான சித்தியார் பாயிரத்துள்ளும், இருபா இருபஃது என்னும் சித்தாந்த நூலினுள்ளும் பல பாடலாக எழுதி உள்ளார்.
சிலகாலங்கழித்து அருணந்திசிவம் தமது மாணவர்களுள் சிறந்தவராகிய மறைஞான சம்பந்தருக்கு ஞான உபதேசம் செய்து முக்தி அடைந்தார். மெய்கண்ட தேவரை சிவபெருமானுடனும், அருள்நந்தி சிவத்தை நந்தி தேவருடனும் ஒப்பிட்டுப் போற்றுவர் சைவப் பெருமக்கள்.
3. மறைஞான சம்பந்தர்
சந்தான குரவர் வரிசையில் மூன்றாவதாக வருபவர் மறைஞான சம்பந்தர். இவர் திருப்பெண்ணாகடத்தில் பராசர முனிவர் பரம்பரையில் தோன்றியவர். மறைகள் அனைத்தையும் கற்றுத் தெளிந்தமையால் மறைஞான சம்பந்தர் எனப் பெயர் பெற்றவர். தில்லைவாழ் அந்தணருள் ஒருவர். இவர் அருணந்திதேவரிடம் சென்று 'அடிசேர் ஞானம்' பெற்றவர். இவர் தில்லையில் ஞான பூசை இயற்றியிருக்கும் நாளில் உமாபதி சிவாச்சாரியாரது பக்குவநிலை கண்டு, அவருக்குச் சித்தாந்த ஞானம் உணர்த்தியவர். பின்னர் தில்லைக்கு வடமேற்கிலுள்ள திருக்களஞ்சேரியில் தங்கியிருந்து சமாதி நிலை அடைந்தார். இவரது சமாதியை திருவாவடுதுறை மடத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் ஞானநூல் போதனை மட்டுமே செய்தார், தாமாக சித்தாந்த நூலொன்றும் இயற்றியதாகத் தெரியவில்லை.
4. உமாபதி சிவாச்சாரியார்
சந்தான குரவர் வரிசையில் நான்காவதாக வரும் இவர், தில்லையில் வாழ்ந்த திருவுடை அந்தணர் மரபினில் பிறந்து வளர்ந்து பொன்னம்பலருக்குப் பூசனை புரியும் பேறு பெற்றவர்.
பெருமை வாய்ந்த தில்லையில் உமாபதி சிவம் , சிவாகமங்களையெல்லாம் கற்றுப் பேரறிஞராகத் திகழ்ந்தார். ஒருநாள் அவர் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு முடித்துத் தமது இல்லத்திற்கு வழக்கமாக அமைந்த விருதுகளோடு சிவிகை மேல் சென்று கொண்டு இருந்தார். அப்போது வீதியிலே ஒரு தெருத்திண்ணையில் மறைஞானசம்பந்தர் தமது மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.
அவர் தமது சீடர்களை நோக்கி "பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுவது பாரீர்" என்று கூறினார். இச்சொற்களைக் கேட்ட உமா பதிசிவம், சிவிகையினின்று வேகமாக இறங்கி மறைஞானசம்பந்தரின் திருவடியைப் தொழுது, அவர் சொன்ன கூற்றுக்குப் பொருள் வினவினார். சம்பந்தரும் விளக்கினார். அதன் பொருள் தெரிந்த பின்பு மறைஞான சம்பந்தரை குருவாக ஏற்றுக் கொண்டார்.
அன்றிலிருந்து உமாபதிசிவம் சிவஞானப் போதத்தையே விரும்பி படித்து தன் சாதிகுலப் பிறப்பை உதறித் தள்ளினார். ஒரு நாள் உமாபதி சிவத்தின் பக்குவத்தை அறிய வேண்டும் என்று கருதிய மறைஞான சம்பந்தர் கைக்கோளர் தெரு என்று சொல்லப்படும், நெசவு தொழில் செய்யும் நபர்கள் இருக்கும் தெருவிற்குச் சென்று அங்கு அவர்கள் நூல் நூற்கும் பாவில் செலுத்திய கூழின் மிச்சத்தை வாங்கி உண்டார். அப்போது அவர்தம் புறங்கையில் ஒழுகிய மிச்சத்தை உமாபதி சிவம் ஏந்திப் பருகினார். உடனே மறைஞான சம்பந்தர் அவருக்கு ஞானோபதேசம் செய்து சிவஞான போதப்பொருள் உணர்த்தினர். இவர் இப்படி மரபு கடந்து ஞானம் பெற்றதன் சிறப்பை உணராது மற்ற தில்லை வாழ் அந்தணர்கள் இவரைக் குல முறை தவறியதாக எண்ணிகொண்டு, நடேசப் பெருமானுக்குப் பூசை புரியத் தகுதியற்றவர் என்று இகழ்ந்தனர். ஆதலால் அவர் தில்லைக்குக் கீழ்த் திசையிலுள்ள கொற்றவன்குடி என்னும் ஊருக்குச் சென்று அங்கே மடம் ஒன்று அமைத்து அதில் தம் அடியார்கள் சூழச் சிவபெருமானை விதிப்படி வழிபட்டிருந்தார்.
(கொற்றவன்குடி என்பது அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ளது. 'கொற்றவன்குடிக் குடியிருப்பு" என்ற பெயருடன் வழங்கும் இதில் இப்போது பல்கலைக் கழக ஆசிரியர்கள் வசிக்கின்றனர் )
உமாபதி சிவம் பொன்னம்பலவருக்குப் பூசை செய்யும் வாய்ப்பின்றி கொற்றவன்குடி மடத்தில் தளர்வுற்றிருந்தார். ஒரு நாள் தில்லைவாழ் அந்தணர்கள் சிவபெருமானின் குஞ்சிதபாதம் என்று சொல்லப்படுகிற அவரது திருவடிக்கு கிரீடம் வைக்க அது இருக்கும் பெட்டகத்தைத் திறந்து பார்த்தால் அங்கே அந்த திருவடிவத்தைக் காணா வில்லை. . அப்போது "நம்மைப் பூசையாற்றும் தகுதியுடையவன் உமாபதியாதலால் அவன்பால் அமர்ந்தோம்" என்று அசரீரி ஒலித்தது. .பின் அந்தணர்கள் தவறை உணர்ந்து அவர் இருக்கும் மடத்திற்கு சென்று அழைத்து வந்து பூசை செய்ய வைத்தனர்.
உமாபதிசிவம் தமது சீடர் பலர்களில் புலையர் (திருக்குலத்தார்) குலத்தில் பிறந்த 'பெற்றான் சாம்பான்' என்பவருக்கு முத்தி கொடுத்த வரலாறு மிகவும் அதிசயமானது.
பெற்றான் சாம்பான் தில்லை திருக்கோயிலுக்கு விறகு வெட்டிக் கொண்டு வந்து சேர்ப்பதையே தமது பணிவிடையாகக் கொண்டவர். அவருக்குக் கனவில் நடேசப் பெருமான் தோன்றித் தன்பால் பேரன்புடைய உமாபதி சிவத்துக்கும் பணிவிடை செய்யும்படி கட்டளையிட்டார். அவர் அவ்வாறே சென்று உமாபதி திருமடத்திற்கும் விறகு கொடுத்து வந்தார். ஒருநாள் பெருமழையினால் அவர் விறகு கொண்டு வரத் தாமதித்தமையினால் மடத்தில் சமைக்கக் காலம் தாழ்ந்தது. அப்போது அதற்குக் காரணம் என்னவென்று உமாபதி தமது சீடர்களை கேட்க, சாம்பனாரது விறகு வராமையினால் தடையேற்பட்டது என்று அவர்கள் கூறினர். மறுநாள் அவர் வந்தவுடன் தமக்குத் தெரிவிக்க வேண்டுமென்று உமாபதிசிவம் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மறுநாள் சாம்பனார் மடத்திற்கு விறகு கொண்டு வருவதற்கு முன், கடவுள் ஒரு பெரியவர் வடிவம் போல் அங்கு வந்து ஒரு சீட்டு கொடுத்து அதனை உமா பதியாரிடம் அளித்திடுமாறு சொல்லிவிட்டு சென்று விட்டார். மறுநாள் மடத்திற்கு இரட்டைப் பங்கு விறகு கொண்டு வந்தவுடன் அங்குள்ள மாணவர்கள் உமாபதி சிவத்திற்கு அந்த பெரியவரின் வரவை அறிவித்தனர். அப்போது உமாபதி சிவம் அவர் யாரென்று கேட்க, சீடர்களோ பெரியவர் கொடுத்த சீட்டை அவரிடம் கொடுத்தனர். அந்தச் சீட்டில் வரைந்திருந்த பாடல்:
“அடியாற் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் குடியாற் கெழுதியகைச் சீட்டுப்-படியின்மிசைப் பெற்றான் சாம்பனுக்குப் பேதமறத் தீக்கை செய்து முத்தி கொடுக்க முறை.”
என்பதாகும். இதன்படி பெற்றான் சாம்பனாருக்கு ஞானத் தீட்சையை தொடங்கினார், அப்போதே அவர் வீடு பேறு எய்துவதற்குரிய பக்குவமுடையவராக இருந்தமையால் அதற்குத்தக்க முறையாக சுவாமிகள் அருள் செய்தவுடன் அவர் முக்தி அடைந்தார்.
இதன் உண்மை உணராத சாம்பனாரது சுற்றத்தினரும், துணைவியரும் மனங்கலங்கி மன்னரிடம் சென்று பெற்றான் சம்பானை சுவாமிகள் தீயால் எரித்து விட்டதாகக் குற்றம் சாட்டினர். அப்போது அரசன் சுவாமிகளிடம் சென்று அதைப் பற்றி கேட்டபொழுது சுவாமிகள் தீக்கையின் மேன்மையை எடுத்து விளக்கினார்கள். அரசன், அப்படியானால் மற்றொரு தீக்கை அவ்வாறு செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொண்டான். அப்போது சுவாமிகள் சிவபெருமான் திருமஞ்சன நீராலே வளர்ந்த கோமுகையின் பக்கத்திலே இருந்த முள்ளிச் செடியைத் கண்டார். தமது அருட் பார்வையால் அம்முள்ளிச் செடியை நோக்கியவுடன் அஃது ஒளிமயமாகி ஒரு பிழம்பாக விசும்பில் எழுந்து மறைந்து சிவனோடு கலந்தது. அப்போது அதனைக் கண்ட அரசன் எல்லையற்ற வியப்பும் மகிழ்ச்சியுமடைந்து சுவாமிகளுடைய திருவடிகளை வணங்கி அவருக்குப் பொன்னாடை, மலர் மாலை முதலியன சாத்தித் தன் பிழைபொறுக்கும்படி வேண்டிக் கொண்டு தன் அரண்மனைக்குச் சென்றான்.
பின்னர் ஒருநாள் தில்லையில் திருவிழாவிற்குக் கொடியேற்ற அங்குள்ள அந்தணர்கள் முயன்ற போது கொடி, அதன் மரத்தில் ஏறவில்லை. உடனே சுவாமிகளிடம் எல்லோரும் போய் வணங்கிச் செய்தியைத் தெரிவித்தனர். சுவாமிகளும், அப்படியே விரைவில் தில்லைக்கு வந்து கொடிக்கவி என்னும் அழகிய சிறு நூலிலுள்ள முதற்பாட்டைப் பாடியவுடன் கொடி தானாக ஏறிற்று.
சுவாமிகள் 'சிவப்பிரகாசம்' என்னும் சிவஞான போதச் சார்பு நூலொன்றும், 'உண்மை நெறி விளக்கம்', 'நெஞ்சு விடுதூது', 'வினா வெண்பா', 'திருவருட்பயன்', 'சங்கற்ப நிராகரணம்', 'போற்றிப் பஃறொடை' "கொடிக் கவி "என்னும் எட்டு நூல்கள் எழுதியுள்ளார் . இந்த எட்டு நூல்களுக்கு சைவசித்தாந்த அஷ்டாங்க நூல்கள் என்று பெயர்.
இவை போக, கோவிற்புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராணசாரம், திருப்பதிக்கோவை முதலியனவும் இவரால் இயற்றப் பெற்றனவாகக்கருதுவோரும் உண்டு. வடமொழியில் பௌடகம் என்னும் உபாகமத்திற்கு இவர்இயற்றிய விரிவுரை ஒன்று உண்டு. சீடர்களுக்கு நூல்கற்பித்தலும், பதிநூல் இயற்றுதலும், தக்கவர்க்கு முத்திப் பேறு உதவுதலும்ஆகிய பேருபகாரங்களைச் செய்தலையே தமது கடமையாகக்கொண்டிருந்து, சித்திரை ஹஸ்தம் நாளில் கொற்றவன்குடியில் சமாதி நிலைஅடைந்தார். இம்மடம் வீர சைவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சைவ தத்துவங்களை இவர்கள் நான்கு பேர்கள் தான் உருவாக்கினார்களா என்று நினைத்தோமேயானால், ஒரு தத்துவம் பிறக்க வேண்டும் என்றால் பல நூறு ஆண்டுகள் பல்வேறு தரப்பினர்களால் அது பல தரிசனங்களால் உருவாக்கப் பெற்று முளைத்து வளரத் தொடங்கி இருக்க வேண்டும். பின் 13 ஆம் நூற்றாண்டில் மெய்கண்டார் தத்துவமாக மலரச் செய்கிறார். அவரின் மாணவர்கள் மூவர் அவர் கண்ட அறிவின் ஆழத்தை இன்னும் மேலே எடுத்துச் சென்றார்கள்.அவர்கள் தான் சித்தாந்தத்தை ஒரு முறைபடுத்தப்பட்ட தொகுப்பாக கொண்டு வந்ததனால் அவர்கள் சித்தாந்த முன்னோடியாக, சந்தான குரவர்களாக திகழ்கிறார்கள்.
மேலும் ஒரு சமயம் என்பது பல அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும், ஞானிகளையும் தோற்றுவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அது அறிவின் எல்லையை நோக்கி பயணம் செய்து கொண்டே இருக்க முடியும். இல்லையென்றால் அது கானல் நீர் போல ஆகிவிடும். அப்படிப் பார்த்தால் சைவ சமயத்தில் இந்நால்வருக்கு முன்பும், பின்பும் பலர் தோன்றி சைவத்தை செழுமை படுத்தினார்கள், இன்று வரை அது தொடர்கிறது என்று நம்பலாம்.
கட்டுரையாளர்: உ. முத்துமாணிக்கம்
மிக நல்ல தகவல்களுடன் அமைந்த விரிவான கட்டுரை. வாழ்த்தும் அன்பும்.
ReplyDelete