ஆன்மதத்துவங்கள் : தன்மாத்திரைகளும் பஞ்சபூதங்களும்
முந்தைய அத்தியாயத்தில் மாயையைப் பற்றியும் அதன் வெளிப்பாடுகளான
மாயேயங்களான 36 தத்துவங்களைப் பற்றியும் சுருக்கமாகப்
பார்த்தோம்.
மாயை என்பது ஆன்மாவை ஏமாற்றும் இருள் மட்டும் அல்ல.
அது இறை ஆன்மாவுக்கு அளித்த ஒரு கருவி.
“கதிர் வரும் வரை சுடர் விளக்கு” போல, பதிஞானம் உதிக்கும் வரை ஆன்மா
நடந்து செல்ல மாயை ஒரு வெளிச்சம் தருகிறது என்று பார்த்தோம்.
இப்போது அந்த விளக்கின் ஒளியில், மாயையின் முதல் வெளிப்பாடுகளை
நெருங்கிப் பார்க்கப் போகிறோம். இதுவரை கற்றதைத் தொகுத்துக் கொள்வோம்.
வாக்காலும் மனதாலும் உணர முடியாத இறையின் சக்தி , உயிர்கள் விடுதலை
அடையும் பொருட்டு மாயையை முதற்காரணமாகக் கொண்டு 36 தத்துவங்களை நிகழ்த்துகிறது. இதன் மூலமாக உயிருக்கு உடலும்,
கருவிகரணங்களும், உலகமும் கிடைக்கிறது. அவற்றின் வாயிலாக இன்பதுன்ப அனுபவம் நிகழ்கிறது.
இவற்றுள் முதல் 5 தத்துவங்களான சிவதத்துவங்கள் ஆணவமல கலப்பில்லாத
சுத்தமாயையில் விரிகின்றன. மீதமுள்ள 31 தத்துவங்களும் மல கலப்போடு நிகழ்வதால் இவை அசுத்த
மாயா தத்துவங்கள் எனப்படுகின்றன. இவற்றுள் பிரகிருதி மாயையில் நிகழும் 24 தத்துவங்கள்
தான் ஆன்மாவுக்கான தனு, கரண, புவன, போகங்களை அளிப்பன. நமக்கு உடனடி தொடர்பில் இருப்பவை
.ஆனால் நாம் இன்னும் முழுமையாக உணராதவை. இந்த அத்தியாயத்தில் அவற்றிலிருந்து ஆரம்பிப்போம்.
இதுவரை நாம் மாயை மேலிருந்து கீழாக விரிவதைப் பார்த்தோம்.
இப்போது கீழிருந்து மேலாகப் பார்க்கப் போகிறோம்.
அதாவது, நாம் தினமும் அனுபவிக்கும் இந்த உலகத்திலிருந்து தொடங்கி,
படிப்படியாக அதன் நுட்பமான காரணத்துக்குள் செல்வோம்.
நம் அனுபவமாக அறியும் இடத்திலிருந்து இதுவரை அறியாத ஆனால் நம் அனுபவத்துக்கெல்லாம் காரணமாக
விளங்குபவற்றை நோக்கி ஆழ்ந்து பயணிப்போம்.
ஆனால் இதை ஏதோ ஒரு பழம்
தத்துவப் பாடமாகப் பார்க்க வேண்டாம். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தினசரி
காலை நீங்கள் எழும் தருணத்திலிருந்தே இது நடந்து கொண்டிருக்கிறது.
உறக்கத்திலிருந்து கண் திறந்தவுடன் வெளிச்சம் வருகிறது.
காதில் ஏதோ ஓசை விழுகிறது.உடல் படுக்கையைத் தொட்டிருப்பதை உணர்கிறது.காபியின் வாசனை
மூக்கில் நுழைகிறது.
அதன்பிறகுதான், “நான் உலகத்தில் இருக்கிறேன்” என்ற உணர்வு முழுமையாக
உருவாகிறது.
உலகம் திடீரென்று வெளியே தோன்றவில்லை.
உங்கள் அனுபவத்தில் உலகம் திறந்தது.
இதுதான் தன்மாத்திரைகளின் ரகசியம். தன்மாத்திரைகளைப் பற்றி இன்னும்
கொஞ்சம் ஆழமாக பார்க்கலாம்.
ஒரு சின்ன பரிசோதனை செய்து பாருங்கள். கண்களை மூடினால் உலகம் மறைந்துவிடுகிறதா?
இல்லை. ஆனால் உங்கள் அனுபவத்தில் ஒளி சார்ந்த உலகம் மறைந்துவிடுகிறது. காதுகளை மூடினால்
ஒலி அழிந்துவிடுகிறதா? இல்லை. ஆனால் உங்கள் அனுபவத்தில் ஒலி மறைந்துவிடுகிறது.
இதிலிருந்து ஒன்று புரிகிறது: உலகம் வெளியில் இருப்பது மட்டும்
அல்ல. நம் அனுபவத்தில் திறக்கும் ஒரு உலகமும் உண்டு. இந்த அனுபவத்தின் நுட்பமான அடிப்படையே
தன்மாத்திரைகள்.
ஏனெனில் நீங்கள் இப்போது சுவாசிக்கும் காற்று, பார்க்கும் ஒளி, உண்ணும் உணவு, தொடும் பொருள் — இவை எல்லாம் வெறும் பொருட்கள் அல்ல.
இவை மாயையின் தூல உருவங்கள்.
ஆன்மா விழிப்படைய இறைவன் அமைத்த பயிற்சிக் களம்.
இந்த அத்தியாயத்தில் இந்த உடலும் , உலகமும் தோன்ற காரணமாக உள்ள பஞ்ச பூதங்கள்
,அதற்கும் காரணமாக உள்ள தன்மாத்திரைகள் இவற்றை பற்றி விரிவாக பார்ப்போம். மேல் உள்ள
தத்துவ வரைபடத்தில் 27 முதல் 36 வரை உள்ள தத்துவங்களை பார்க்க இருக்கிறோம்.
மாயையின் வெளிப்பாடு
– ஒரு எளிய பார்வை
இதை மனப்பாடம் செய்ய வேண்டிய பட்டியலாகப் பார்க்க வேண்டாம்.
உங்கள் தினசரி அனுபவம் எப்படி உருவாகிறது என்பதற்கான வரைபடமாகப்
பாருங்கள்.
↓
↓
தன்மாத்திரைகள் — (சூக்கும விதைகள்)
↓
பஞ்சபூதங்கள் — (தூல உருவங்கள்)
↓
உடல் + உலகம் + அனுபவம்
↓
ஆன்மாவின் பக்குவம்
மாயை முதலில் நுட்பமாக வெளிப்படுகிறது.பிறகு அது தூலமாகிறது.
அந்தத் தூல உலகத்தில்தான் நாம் உடல் எடுத்து வாழ்கிறோம், கற்கிறோம், அனுபவிக்கிறோம், விழிப்புணர்வும் கொள்கிறோம்
தன்மாத்திரைகள் – உலகின் சூக்கும விதைகள்
தன்மாத்திரைகள் கண்ணுக்குத் தெரியாத காரண நிலைகள்; அவை வெளிப்படும்போது பஞ்சபூதங்களாகத்
தூலமாகின்றன. “மாத்திரை” என்றால் அளவு.ஒரு நுண்மையான அலகு.
“தன்மாத்திரை” என்றால், அனுபவத்திற்கு அடிப்படையாக இருக்கும் நுட்பமான
சாரம்.
அதாவது பஞ்ச பூதங்களுக்கும் அடிப்படையாக விளங்கும் ஆற்றல்களை தன்மாத்திரைகள்
என்கிறோம். எனவே இவை சூக்கும பஞ்சபூதங்கள் என்றும் வெளிப்பட்டு நம் அனுபவத்தில் தோன்றுபவற்றை
தூல பஞ்சபூதங்கள் என்றும் அழைப்பார்கள்.
தன் மாத்திரைகள் ஐந்து.
அவை சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் எனப்படுவன. (ஓசை, தொடு
உணர்வு, ஒளி, சுவை, நாற்றம்)
இங்கே ஒரு சிறு குழப்பம் வரலாம். “சப்தம்”, “ரூபம்”, “ரசம்” என்ற
வார்த்தைகளை நாம் தினசரி வாழ்க்கையில் புலன் அனுபவமாகப் புரிந்துகொள்கிறோம். ஆனால்
இங்கு தன்மாத்திரை என்று சொல்வது அந்த அனுபவத்தை அல்ல, அதற்குப் பின்னால் இருக்கும்
சூக்கும காரணத்தை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக:
நீங்கள் கேட்கும் ஒலி
= புலன் அனுபவம்
சப்த தன்மாத்திரை = அந்த
ஒலி தோன்றுவதற்கான நுட்பமான விதை
இந்த வித்தியாசத்தை புரிந்துகொண்டால், முழு படமும் தெளிவாகும்.
அதை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொள்வோம்.
சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற வார்த்தைகளை நாம் பொதுவாக தினசரி வாழ்க்கையில் புலன்களின் அனுபவமாகத்தான் புரிந்துகொள்கிறோம். சப்தம் என்றால் காது கேட்கும் ஒலி. ஸ்பரிசம் என்றால் தோல் உணரும் தொடுதல். ரூபம் என்றால் கண் காணும் வடிவம், நிறம், ஒளி. ரசம் என்றால் நாக்கு அறியும் சுவை. கந்தம் என்றால் மூக்கு அறியும் மணம். இது நமக்கு தெரிந்த சாதாரண அர்த்தம்.
ஆனால் இங்கு “சப்த தன்மாத்திரை”, “ஸ்பர்ச தன்மாத்திரை”, “ரூப தன்மாத்திரை”, “ரச தன்மாத்திரை”, “கந்த தன்மாத்திரை” என்று சொல்வது அந்த புலனுணர்வுகளை நேரடியாகக் குறிக்கவில்லை. இங்கு அவை இன்னும் நுட்பமான நிலையை குறிக்கின்றன. அதாவது, நாம் கேட்கும் ஒலி, தொடும் தொடுதல், காணும் வடிவம், சுவைக்கும் சுவை, முகரும் மணம் ஆகிய அனுபவங்களுக்கு பின்னால் இருக்கும் சூக்கும காரண விதைகளைக் குறிக்கின்றன.
இதைக் கற்றுக்கொள்ள ஏற்கனவே கண்ட உதாரணம் மிகவும் பொருந்தும். ஒரு மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் பார்க்கும் மரம் தூலமாக வெளியில் நிற்கிறது. ஆனால் அந்த மரம் ஒருநாள் விதையாக இருந்தது. விதை மரம் அல்ல; ஆனால் மரம் தோன்றுவதற்கான காரணம். அதுபோல, நாம் கேட்கும் ஒலி சப்த தன்மாத்திரை அல்ல. ஆனால் அந்த ஒலி அனுபவம் தோன்றுவதற்கான நுட்ப காரண நிலை சப்த தன்மாத்திரை.
சப்த தன்மாத்திரையிலிருந்து ஆகாயம் என்ற தூல பூதம் வெளிப்படுகிறது. ஸ்பர்ச தன்மாத்திரையிலிருந்து வாயு வெளிப்படுகிறது. ரூப தன்மாத்திரையிலிருந்து அக்னி வெளிப்படுகிறது. ரச தன்மாத்திரையிலிருந்து ஜலம் வெளிப்படுகிறது. கந்த தன்மாத்திரையிலிருந்து பூமி வெளிப்படுகிறது.
அதன்பிறகு, இந்த தூல பஞ்சபூதங்களால் அமைந்த உலகத்தை ஆன்மா அனுபவிக்கிறது. அதற்காகவே ஆன்மாவுக்கு ஐந்து ஞானேந்திரியங்கள் — காது, தோல், கண், நாக்கு, மூக்கு — கருவிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. காது ஆகாயத் தன்மை கொண்ட உலகத்துடன் தொடர்பு கொள்ளும்போது ஒலி அனுபவம் தோன்றுகிறது. தோல் வாயுத் தன்மை கொண்ட இயக்கம் மற்றும் தொடுதலை உணரும்போது ஸ்பர்ச அனுபவம் தோன்றுகிறது. கண் அக்னித் தன்மை கொண்ட ஒளி மற்றும் வடிவத்தைப் பெறும்போது ரூப அனுபவம் தோன்றுகிறது. நாக்கு ஜலத் தன்மை கொண்ட திரவத்தோடு தொடர்பு கொள்ளும்போது ரச அனுபவம் தோன்றுகிறது. மூக்கு பூமித் தன்மை கொண்ட பொருள்களின் மணத் தன்மையை உணரும்போது கந்த அனுபவம் தோன்றுகிறது.
அதனால் ஒரே வார்த்தை இரண்டு நிலைகளில் பயன்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். “சப்த தன்மாத்திரை” என்பது சூக்கும காரணம். “நாம் கேட்கும் சப்தம்” என்பது புலனறிவு அனுபவம். “ரூப தன்மாத்திரை” என்பது சூக்கும காரணம். “நாம் காணும் ரூபம்” என்பது கண் மூலம் வரும் அனுபவம். காரணம் நுட்பத்தில் உள்ளது; அனுபவம் புலன்களில் தெரிகிறது.
பஞ்சபூதங்கள் – உலகின் தூல உருவங்கள்
தன்மாத்திரைகள் நுட்பமான விதைகள்.அவை தூல வடிவம் பெறும்போது பஞ்சபூதங்கள்
உருவாகின்றன.
நாம் கண்ணால் காணும், கையால் தொடும், உடலால் உணரும் உலகம் இந்த
பஞ்சபூதங்களால் அமைந்தது.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம்
இவை வெறும் “ஐந்து பொருட்கள்” அல்ல.உலக அனுபவத்தின் ஐந்து பெரிய
அடித்தளங்கள்.
கீழ் உள்ள அட்டவணையைப் பாருங்கள்.
ஆகாயம் ஒரு குணத்தைக் கொண்டது — சப்தம்.
வாயு சப்தத்தையும் ஸ்பர்சத்தையும் கொண்டது.
அக்னி சப்தம், ஸ்பர்சம், ரூபம் ஆகியவற்றைக் கொண்டது.
ஜலம் அதனுடன் ரசத்தையும் கொண்டது.
பூமி அனைத்தையும் கொண்டது — சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம்.
அதனால் பூமி முழுமையான தூல வெளிப்பாடு.
நாம் நிற்கும் தரை, நாம் உண்ணும் உணவு, நாம் தொடும் உடல் — இவை
அனைத்தும் மாயையின் இறுதி தூல வடிவங்கள்.
ஆனால் இங்கு மறந்துவிடக்கூடாத ஒன்று:
தூலம் என்பது தாழ்ந்தது என்று அர்த்தமல்ல.
தூலம் என்பது ஆன்மா அனுபவிக்கக்கூடிய அளவுக்கு வெளிப்பட்டது என்று அர்த்தம்.
காற்றை நேராகப் பிடிக்க முடியாது.
ஆனால் மூச்சில் உணர முடியும்.
அக்னியை வெறும் தத்துவமாகப் பார்க்க முடியாது.
ஆனால் உடல் வெப்பத்தில், சூரிய ஒளியில், உணவு ஜீரணத்தில் அனுபவிக்க முடியும்.
பூமியை நாம் தினமும் மிதிக்கிறோம்.
ஆனால் அதுவே உடலைத் தாங்குகிறது.
நுட்பமானதை தூலமாக்கி, ஆன்மா புரிந்து கொள்ளும் அளவுக்கு இறை உலகத்தை
அமைத்திருக்கிறது.
தன் மாத்திரைகளைப்பற்றி
விரிவாகப் பார்த்துவிட்டோம். அடுத்த வடிவங்கள் எனக் குறிப்பிடப்பட்டவற்றை பார்ப்போம்.
வடிவங்கள்
இங்கு சொல்லப்படும் வடிவங்களை பூதங்களின் உடல் வடிவம் என்று எடுத்துக்கொள்ள
வேண்டாம். ஆகாயம் உண்மையில் வட்டமாக இருக்கிறது, அக்னி உண்மையில் முக்கோணமாக இருக்கிறது,
ஜலம் உண்மையில் பிறை வடிவமாக இருக்கிறது என்று பொருள் அல்ல. இவை பூதங்களின் குணங்களை
மனத்தில் பதியச் செய்யும் குறியீட்டு வடிவங்கள். உண்மை விளக்கம் கூறும் அடிப்படை என்னவென்றால்,
தன்மாத்திரைகள் சூக்கும காரணங்கள்; அவற்றிலிருந்து தோன்றும் பூதங்கள் தூல காரியங்கள்.
காரணத்தின் தன்மை காரியத்திலும் குணமாக நிற்கிறது. அதனால் ஒவ்வொரு பூதத்திற்கும் ஒரு
சிறப்புக் குணம் உள்ளது. அந்த குணத்தை எளிதாக நினைவில் கொள்ள உதவுவதற்காகவே இவ்வடிவங்கள்
சொல்லப்படுகின்றன.
ஆகாயத்திற்கு வட்டம் கூறப்படுகிறது. வட்டத்திற்கு தொடக்கமும் முடிவும் தெளிவாகத் தெரியாது. அது எல்லாத் திசையிலும் சமமாக விரியும் தன்மையை நினைவூட்டுகிறது. ஆகாயமும் அப்படித்தான். அது எல்லாப் பொருள்களுக்கும் இடம் தருகிறது. எதையும் தடுக்காமல் தாங்கி நிற்கிறது. ஓசை பரவுவதற்கும் ஆகாயத் தன்மை அடிப்படை. அதனால் எல்லையற்ற விரிவு, இடம், ஒலி பரவல் ஆகிய குணங்களை நினைவூட்ட வட்ட வடிவம் ஆகாயத்துடன் பொருந்துகிறது.
வாயுவிற்கு அறுகோணம் கூறப்படுகிறது. வாயுவின் குணம் இயக்கம், பரவல், தொடு உணர்வு. காற்று ஒரே இடத்தில் நிற்காது; அது நகர்கிறது, பரவுகிறது, திசை மாறுகிறது, உடலைத் தொடுகிறது. அறுகோண வடிவம் பல திசைகளில் விரியும் அமைப்பைக் காட்டுகிறது. அதில் சமநிலையும் உண்டு, இயக்கத்தை நினைவூட்டும் பரவலான அமைப்பும் உண்டு. அதனால் வாயுவின் அசைவு, பரவல், தொடுதல், உயிரோட்டம் ஆகியவற்றை மனத்தில் பதிக்க அறுகோணம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
அக்னிக்கு முக்கோணம் கூறப்படுகிறது. முக்கோணத்தின் முனை மேலே நோக்கி நிற்கும் போது அது தீச்சுடரை நினைவூட்டுகிறது. தீ எப்போதும் மேலே எழுகிறது. அதன் குணம் ஒளி, வெப்பம், மாற்றம். இருளில் மறைந்திருக்கும் பொருளை ஒளி வெளிப்படுத்துகிறது; குளிரை வெப்பம் மாற்றுகிறது; உணவை ஜீரணமாக்கும் சக்தியும் அக்னித் தன்மையே. அதனால் மேலே எழும் முக்கோணம், அக்னியின் உயர்வு, ஒளிர்வு, வெப்பம், மாற்ற சக்தி ஆகியவற்றை குறிக்க ஏற்ற வடிவமாகிறது.
ஜலத்திற்கு பிறை வடிவம் கூறப்படுகிறது. நீரின் குணம் ஓட்டம், மென்மை, திரவத்தன்மை, சுவை. நீர் கடினமாக மோதுவதில்லை; அது வளைந்து செல்கிறது, இடத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது, ஒன்றை ஒன்றுடன் இணைக்கிறது. பிறை வடிவமும் நேர்க்கோடு போல கடினமில்லை; அது வளைந்த மென்மையான அமைப்பு. அதனால் ஜலத்தின் ஓட்டம், ஈர்ப்பு, மென்மை, சுவை வெளிப்படும் தன்மை ஆகியவற்றை நினைவூட்ட பிறை வடிவம் பொருத்தமாகிறது.
பூமிக்கு நாற்கோணம் கூறப்படுகிறது. நாற்கோணம் நிலைபெற்ற வடிவம். அதற்கு திசை, எல்லை, ஆதாரம், தாங்கும் தன்மை ஆகிய உணர்வுகள் உள்ளன. பூமியின் குணமும் அதுவே. அது திடம், எடை, உறுதி, வடிவம், தாங்கும் சக்தி ஆகியவற்றை தருகிறது. உடலில் எலும்பு, தசை, தோல் போன்ற உறுதியான அமைப்புகள் பூமித் தன்மையை நினைவூட்டுகின்றன. நாம் நிற்கும் நிலம் நம்மைத் தாங்குவது போல, நாற்கோண வடிவமும் நிலைபெற்ற தன்மையை காட்டுகிறது. அதனால் பூமியின் உறுதி, தாங்கும் தன்மை, வடிவமளிக்கும் சக்தி ஆகியவற்றை உணர்த்த நாற்கோணம் பயன்படுத்தப்படுகிறது.
எனவே இந்த வடிவங்கள் அறிவியல் வரைபடங்கள் அல்ல. அவை பூதங்களின் உடல் வடிவங்களும் அல்ல. அவை தியானத்திற்கும் நினைவிற்கும் உதவும் ஆன்மிகச் சின்னங்கள். குணத்தை மனதில் பதியச் செய்யும் மொழி போலவே, இவ்வடிவங்கள் கண்ணுக்கான மொழி. ஆகாயம் விரிவை நினைவூட்டுகிறது; வாயு இயக்கத்தை நினைவூட்டுகிறது; அக்னி மேலெழும் மாற்ற சக்தியை நினைவூட்டுகிறது; ஜலம் ஓட்டத்தையும் மென்மையையும் நினைவூட்டுகிறது; பூமி உறுதியையும் தாங்கும் தன்மையையும் நினைவூட்டுகிறது. இவ்வாறு வடிவங்கள், பஞ்சபூதங்களின் குணங்களை எளிதாகப் புரியச் செய்யும் குறியீடுகளாக பார்க்கப்பட வேண்டும்.
பஞ்சபூதங்களின் குணங்கள்
ஆகாயம்
— ஓசை / சப்தம்
ஆகாயத்தின்
சிறப்புக் குணம் ஓசை. சப்த தன்மாத்திரையிலிருந்து ஆகாயம் தோன்றுவதால், அதன் காரணத்தின்
தன்மை ஆகாயத்திலும் குணமாக நிற்கிறது. ஆகாயம் என்பது வெறும் வெற்றிடம் அல்ல; எல்லாவற்றுக்கும்
இடம் தரும் அடிப்படைத் தளம். ஒலி பரவுவதற்கும் இடம் தேவை. அதனால் ஆகாயம் ஒலியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
இங்கு “ஓசை” என்று சொல்வது நாம் கேட்கும் குறிப்பிட்ட சத்தம் மட்டும் அல்ல; ஒலி வெளிப்படுவதற்கான
அடிப்படை வாய்ப்பு. ஒரு அறையில் இடம் இல்லாமல் எந்தப் பொருளும் இருக்க முடியாதது போல,
ஆகாயத் தன்மை இல்லாமல் ஒலி அனுபவமும் நிகழாது. ஆகாயம் மற்ற பூதங்களைப் போல கையில் பிடிக்க
முடியாத அளவு நுட்பமாக இருந்தாலும், அது எல்லாவற்றுக்கும் ஆதாரமாக நிற்கிறது. அதனால்
ஆகாயம் ஒரு குணம் உடையதாகச் சொல்லப்படுகிறது — ஓசை.
காற்று
/ வாயு — ஓசை + ஊறு / ஸ்பர்சம்
காற்றின்
சிறப்புக் குணம் ஊறு, அதாவது தொடு உணர்வு. பரிச தன்மாத்திரையிலிருந்து காற்று தோன்றுவதால்,
ஸ்பர்சம் அதன் முக்கிய குணமாகிறது. ஆனால் காற்று ஆகாயத்திற்குப் பிறகு தோன்றுவதால்,
ஆகாயத்தின் குணமான ஓசையையும் தன்னுள் கொண்டுள்ளது. எனவே காற்றுக்கு இரண்டு குணங்கள்:
ஓசை மற்றும் ஊறு. காற்றை நாம் கண்களால் நேரடியாகப் பார்க்க முடியாது; ஆனால் அது உடலைத்
தொடும்போது உணர்கிறோம். காற்று வீசும்போது முகத்தில் ஏற்படும் மென்மையான தொடுதல், மூச்சு
உள்ளே வெளியே செல்வது, உடலில் இயக்கம் தோன்றுவது — இவை அனைத்தும் வாயு தத்துவத்தின்
செயல்பாடுகள். ஆகாயம் இடம் தருகிறது; அந்த இடத்தில் அசைவு தோன்றும்போது காற்றின் தன்மை
வெளிப்படுகிறது. அதனால் காற்று இயக்கத்தையும் தொடு உணர்வையும் தரும் பூதமாகப் பார்க்கப்படுகிறது.
அக்னி
/ நெருப்பு — ஓசை + ஊறு + ஒளி / ரூபம்
நெருப்பின்
சிறப்புக் குணம் ஒளி அல்லது ரூபம். ரூப தன்மாத்திரையிலிருந்து அக்னி தோன்றுவதால், ஒளி,
நிறம், வடிவம் ஆகியவை அதன் முக்கிய குணமாகின்றன. ஆனால் அக்னி காற்றிற்குப் பிறகு தோன்றுவதால்,
முன் தோன்றிய ஆகாயத்தின் ஓசையையும், காற்றின் ஊற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. எனவே
அக்னிக்கு மூன்று குணங்கள்: ஓசை, ஊறு, ஒளி. நம்மால் ஒரு பொருளைக் காண முடிவதற்கு ஒளி
தேவை. இருட்டில் பொருள் இருந்தாலும் அது நமக்குப் புலப்படாது; ஒளி வந்த பிறகே அதன்
வடிவம் தெரியும். இதனால் அக்னி என்பது வெறும் தீப்பொறி அல்ல; வெளிச்சம் தரும், வடிவத்தைப்
புலப்படுத்தும், மாற்றத்தை உருவாக்கும் சக்தி. உடலில் ஜீரண சக்தியாகவும், வெப்பமாகவும்,
கண்களில் பார்வைக்கு உதவும் ஒளித் தன்மையாகவும் அக்னி செயல்படுகிறது. ஆகவே அக்னி உலகத்தை
“காணக்கூடியது” ஆக்கும் பூதம்.
நீர்
/ ஜலம் — ஓசை + ஊறு + ஒளி + சுவை / ரசம்
நீரின்
சிறப்புக் குணம் சுவை. ரச தன்மாத்திரையிலிருந்து ஜலம் தோன்றுவதால், ரசம் அல்லது சுவை
அதன் முக்கிய குணமாகிறது. ஆனால் ஜலம் அக்னிக்கு அடுத்ததாக தோன்றுவதால், அதற்கு முன்
உள்ள ஓசை, ஊறு, ஒளி ஆகிய குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. எனவே நீருக்கு நான்கு குணங்கள்:
ஓசை, ஊறு, ஒளி, சுவை. சுவை நமக்கு நாக்கின் மூலம் தெரிந்தாலும், சுவை வெளிப்பட நீர்த்தன்மை
அவசியம். வறண்ட பொருள் நாக்கில் பட்டாலும் சுவை தெளிவாகப் புலப்படாது; ஈரத்தன்மை சேர்ந்தால்
சுவை வெளிப்படும். உடலில் இரத்தம், நீர்மங்கள், சுரப்பிகள், ஈரப்பதம் ஆகியவை ஜலத் தன்மையின்
வெளிப்பாடுகள். நீர் ஓடுகிறது, சேர்க்கிறது, மென்மையாக்குகிறது, உயிரைத் தாங்குகிறது.
அதனால் ஜலம் உலகத்தில் அனுபவத்தை மென்மையாக்கும், இணைக்கும், சுவையாக்கும் பூதமாக விளங்குகிறது.
நிலம் / பூமி — ஓசை + ஊறு + ஒளி + சுவை + நாற்றம் / கந்தம்
நிலத்தின்
சிறப்புக் குணம் நாற்றம் அல்லது மணம். கந்த தன்மாத்திரையிலிருந்து பூமி தோன்றுவதால்,
கந்தம் அதன் முக்கிய குணமாகிறது. பூமி பஞ்சபூதங்களில் கடைசியாகத் தோன்றுவதால், அதற்கு
முன் தோன்றிய எல்லா குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. எனவே பூமிக்கு ஐந்து குணங்கள்:
ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம். இதனால் பூமி முழுமையான தூல வெளிப்பாடு என்று சொல்லப்படுகிறது.
நாம் தொடும் திடம், நிற்கும் நிலம், உடலில் எலும்பு, தசை, தோல் போன்ற உறுதியான அமைப்புகள்
— இவை எல்லாம் பூமித் தன்மையின் வெளிப்பாடுகள். ஒரு மலரின் மணம், மழைக்குப் பிறகு வரும்
மண்வாசனை, உணவுப் பொருள்களின் தனித்த வாசனை — இவை கந்த குணத்தின் வெளிப்பாடுகள். பூமி
வடிவம் தருகிறது, எடை தருகிறது, உறுதி தருகிறது, தாங்கும் தன்மை தருகிறது. ஆகவே பூமி
ஆன்மா அனுபவிக்கும் உலகை மிகவும் தெளிவான, தொட்டறியக்கூடிய, நிலைத்த தோற்றத்தில் நிறுத்தும்
பூதமாகும்.
உடலில் பஞ்சபூதங்களின் இடம்
பஞ்சபூதங்கள்
வெளி உலகத்தில் மட்டும் இல்லை; நம் உடலுக்குள்ளும் அவை தங்களது தன்மைக்கு ஏற்ப செயல்படுகின்றன.
உடல் என்பது ஆன்மா தங்கி அனுபவிக்க கொடுக்கப்பட்ட கருவி என்பதால், அந்த உடலும் பஞ்சபூதங்களின்
கூட்டாகவே அமைந்துள்ளது. ஆகாயம் உடலின் வெற்றிடங்களிலும் நரம்பு வழித்தடங்களிலும் வெளிப்படுகிறது.
உடலில் உள்ள நாடிகள், உள்ளக இடைவெளிகள், ஒலி செல்வதற்கான வாயில்கள், தொண்டை மற்றும்
காது போன்ற இடங்கள் ஆகாயத் தன்மையை நினைவூட்டுகின்றன. ஆகாயம் இடம் தருவது போல, உடலுக்குள்
செயல்கள் நிகழ இடம் தரும் தன்மையாக அது விளங்குகிறது.
வாயு உடலில்
மூச்சாகவும் இயக்கமாகவும் செயல்படுகிறது. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன்
போன்ற உயிர் வாயுக்கள் உடலின் பல செயல்களை நடத்துகின்றன என்று மரபு விளக்குகிறது. மூச்சு
உள்ளே வருவது, வெளியே போவது, இரத்த ஓட்டம் நகர்வது, நரம்புகளில் உணர்வு பரவுவது, கை
கால் அசைவது — இவை அனைத்தும் வாயுத் தன்மையின் வெளிப்பாடுகள். வாயு இல்லையெனில் உடல்
உயிரோட்டத்துடன் இயங்காது. அதனால் உடலின் இயக்க சக்தி வாயுவோடு தொடர்புபடுத்தப்படுகிறது.
அக்னி
உடலில் வெப்பமாகவும் ஜீரண சக்தியாகவும் மாற்ற ஆற்றலாகவும் உள்ளது. உணவு உடலுக்குள்
சென்றபின் அது செரிமானமாகி சக்தியாக மாறுவது அக்னித் தன்மையால். உடல் வெப்பம், பசி,
ஜீரணம், கண்களின் ஒளி, செல்களில் நடக்கும் மாற்றச் செயல்கள் — இவை எல்லாம் அக்னியின்
உடல் வெளிப்பாடுகள். அக்னி வெளியில் பொருளை மாற்றுவது போல, உடலுக்குள் உணவை இரத்தமாகவும்
சக்தியாகவும் மாற்றுகிறது. அதனால் அக்னி உடலில் மாற்றத்தையும் உயிர்ச்சக்தியையும் தரும்
பூதமாக விளங்குகிறது.
ஜலம் உடலில்
திரவங்களாக வெளிப்படுகிறது. இரத்தம், சிறுநீர், வியர்வை, சளி, சுரப்பிகள், சுக்கிலம்
அல்லது சோணிதம் போன்ற உடல் நீர்மங்கள் ஜலத் தன்மையின் கூறுகளாகக் கொள்ளப்படுகின்றன.
உடலில் ஈரப்பதம் இருக்க வேண்டும்; இல்லையெனில் உயிர் செயல்கள் காய்ந்து நின்றுவிடும்.
இரத்தம் ஊட்டச்சத்தைக் கொண்டு செல்கிறது; வியர்வை உடல் வெப்பத்தை சமப்படுத்துகிறது;
சுரப்பிகள் உடல் செயல்களை மென்மையாக்குகின்றன. நீர் வெளியில் ஓடுவது போல, உடலுக்குள்
ஜலம் ஓட்டம், இணைப்பு, ஈர்ப்பு, சுவை, உயிர்ப்பை தருகிறது.
பூமி உடலில்
திடமான அமைப்புகளாக வெளிப்படுகிறது. எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு போன்றவை பூமித்
தன்மையை காட்டுகின்றன. உடலுக்கு வடிவம், எடை, உறுதி, தாங்கும் தன்மை ஆகியவற்றை தருவது
பூமி. எலும்பு உடலைத் தாங்குகிறது; தசை உடலுக்கு வலிமை தருகிறது; தோல் எல்லை அமைக்கிறது;
நரம்புகள் உடல் அமைப்பை இணைக்கின்றன. பூமி வெளியில் நிலமாக நம்மைத் தாங்குவது போல,
உடலுக்குள் திட அமைப்புகளாக நம்மைத் தாங்குகிறது.
இவ்வாறு
பார்த்தால், உடல் வெறும் மாம்சக் கட்டு அல்ல. அது பஞ்சபூதங்கள் இணைந்து ஆன்மாவுக்காக
அமைத்த ஒரு சிறிய பிரபஞ்சம். ஆகாயம் இடம் தருகிறது; வாயு இயக்கம் தருகிறது; அக்னி மாற்ற
சக்தி தருகிறது; ஜலம் ஓட்டமும் ஈரப்பதமும் தருகிறது; பூமி உறுதியும் வடிவமும் தருகிறது.
இந்த ஐந்தும் சமநிலையில் இருந்தால்தான் உடல் அனுபவத்திற்கு ஏற்ற கருவியாக இயங்குகிறது.
தத்துவ சுத்தி / பூத சுத்தி — உடலுக்குள் பஞ்சபூதங்களைத் தூய்மைப்படுத்தும்
தியானம்
இதுவரை நாம் பஞ்சபூதங்களை உலகின் அடிப்படைத் தூல உருவங்களாகவும், உடலின் உள்ளக அமைப்புகளாகவும் பார்த்தோம். ஆனால் யோக, ஆகம, தாந்திரீக மரபுகளில் பஞ்சபூதங்கள் வெறும் உலகப் பொருள் அமைப்பாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அவை உடலுக்குள் இயங்கும் நுட்ப சக்திகளாகவும் பார்க்கப்படுகின்றன. உடல், மூச்சு, மனம், உணர்வு, ஆன்மிக விழிப்பு — இவை அனைத்திலும் பஞ்சபூதங்களின் சமநிலை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த அடிப்படையில்
வரும் ஒரு ஆழமான தியான முறையே பூத சுத்தி அல்லது தத்துவ சுத்தி.
“சுத்தி” என்றால் தூய்மைப்படுத்துதல். பூத சுத்தி என்பது உடலுக்குள் உள்ள பஞ்சபூதத்
தன்மைகளை மந்திரம், தியானம், மூச்சு, உள்ளார்ந்த கவனம் ஆகியவற்றின் மூலம் சுத்தப்படுத்தும்
ஒரு ஆன்மிகப் பயிற்சி. இது சாதாரண கற்பனைப் பயிற்சி அல்ல; குரு உபதேசத்தின் கீழ் முறையாக
அறிந்து செய்ய வேண்டிய தியான முறை.
இது தாந்திரீக
மரபுகளில் விரிவாக விளக்கப்படும் பயிற்சி என்றாலும், இதன் அடிப்படை நோக்கம் சைவ சித்தாந்தத்துக்கும்
அந்நியமானது அல்ல. சைவ சித்தாந்தமும் உடல், கருவி, உலகம், அனுபவம் ஆகியவை மாயையின்
காரியங்களாக ஆன்மாவுக்குக் கொடுக்கப்பட்டவை என்று பார்க்கிறது. அவற்றில் அழுந்தி பந்தத்தில்
இருக்காமல், அவற்றை உணர்ந்து, அவற்றின் வழியாகப் பக்குவம் பெற்று, இறுதியில் சிவத்தை
நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே சித்தாந்தத்தின் நோக்கம். அந்தப் பார்வையில், பூத சுத்தி
என்பது பஞ்சபூத உடலை வெறுப்பதல்ல; அந்த உடலைச் சிவத்தை நோக்கிச் செல்லும் உள் யாகசாலையாகப்
பார்க்கும் ஒரு ஆழமான வழி.
சைவ சித்தாந்தத்தில்
ஆன்மா பாசத்தால் கட்டுண்டு, மாயையின் கருவிகளால் உலகை அறிகிறது. அந்த மாயைக் கருவிகள்
சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால், அவை பந்தத்திற்கு மட்டும் காரணமாக இல்லாமல், பக்குவத்திற்கும்
வழியாகின்றன. இதே உண்மையை பூத சுத்தி உள் அனுபவமாக எடுத்துக்காட்டுகிறது. பஞ்சபூதங்கள்
ஆன்மாவை உலக அனுபவத்தில் ஈடுபடுத்தும் அடிப்படைகள்; அதே பஞ்சபூதங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு
உள்ளார்ந்த விழிப்புணர்வோடு பார்க்கப்படும் போது, அவை ஆன்மாவை மேலே உயர்த்தும் படிகளாக
மாறுகின்றன.
இந்தப்
பயிற்சியில் பஞ்சபூதங்களுடன் தொடர்புடைய பீஜ மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக
மரபுகளில்:
லம் —
பூமி
வம் — ஜலம்
ரம் — அக்னி
யம் — வாயு
ஹம் — ஆகாயம்
என்று
பஞ்சபூதங்களுடன் பீஜங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன.
இவை வெறும்
ஒலிகள் அல்ல. ஒவ்வொரு பீஜ மந்திரமும் ஒரு பூதத் தன்மையை உள்ளத்தில் எழுப்பி, அதை சுத்தப்படுத்தி,
சமநிலைப்படுத்தும் சக்தி கொண்டதாக மரபில் கருதப்படுகிறது. “லம்” பூமித் தன்மையை நினைவூட்டுகிறது
— உறுதி, நிலை, தாங்கும் சக்தி. “வம்” ஜலத் தன்மையை நினைவூட்டுகிறது — ஓட்டம், மென்மை,
சுவை, உயிர்ப்புத் தன்மை. “ரம்” அக்னித் தன்மையை நினைவூட்டுகிறது — வெப்பம், ஒளி, ஜீரணம்,
மாற்றம். “யம்” வாயுத் தன்மையை நினைவூட்டுகிறது — மூச்சு, இயக்கம், உயிரோட்டம். “ஹம்”
ஆகாயத் தன்மையை நினைவூட்டுகிறது — இடம், விரிவு, ஒலி, உள்ளார்ந்த அமைதி.
பூத சுத்தியில்
சாதகர் தன் உடலை வெறும் மாம்ச உடலாக அல்ல, பஞ்சபூதங்களால் ஆன ஒரு யாகசாலையாகப் பார்க்கிறார்.
உடலுக்குள் இருக்கும் பூமித் தன்மை கனத்த பற்றுகளாக இருந்தால், அது உறுதியாகவும் நிலையாகவும்
சுத்தப்பட வேண்டும். ஜலத் தன்மை குழப்பமான உணர்ச்சி ஓட்டமாக இருந்தால், அது மென்மையான
அருள் ஓட்டமாக சுத்தப்பட வேண்டும். அக்னி கோபமாகவோ எரிச்சலாகவோ இருந்தால், அது ஞான
ஒளியாக மாற வேண்டும். வாயு அமைதியற்ற அசைவாக இருந்தால், அது சமமான மூச்சு மற்றும் உயிரோட்டமாக
மாற வேண்டும். ஆகாயம் வெறுமையாகவோ சிதறலாகவோ உணரப்பட்டால், அது உள்ளார்ந்த பரந்த அமைதியாகத்
திறக்க வேண்டும்.
இதுவே
பூத சுத்தியின் ஆழமான நோக்கம். அது உடலை மறுப்பதில்லை; உடலைப் புனிதமாக்குகிறது. அது
பஞ்சபூதங்களை வெறுப்பதில்லை; அவற்றைத் தூய்மைப்படுத்துகிறது. அது உலகத்திலிருந்து ஓடச்
சொல்லுவதில்லை; உலகத்தை உருவாக்கும் தத்துவங்களை உள்ளார்ந்த விழிப்புணர்வாக மாற்றச்
செய்கிறது.
ஆனால்
இங்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை அவசியம். பூத சுத்தி அல்லது தத்துவ சுத்தி போன்ற தாந்திரீக
தியானங்களை புத்தகத்தில் படித்தவுடன் தனியாக முயற்சி செய்ய வேண்டிய பயிற்சியாகக் கருதக்கூடாது.
இவை மந்திரம், மூச்சு, சக்தி, உடல்நிலை, மனநிலை ஆகியவற்றோடு தொடர்புடைய ஆழமான முறைகள்.
எனவே இவை சரியான குருவின் வழிகாட்டுதலுடன், முறையான உபதேசம் மற்றும் பாதுகாப்பான பயிற்சி
சூழலில் மட்டுமே செய்யப்பட வேண்டியவை.
இந்த அத்தியாயத்தில்
நாம் இதை ஒரு தியான முறையாக கற்றுக்கொள்வதற்காக அல்ல, பஞ்சபூதங்கள் நம் உடலிலும் ஆன்மிகப்
பயணத்திலும் எவ்வளவு ஆழமாகப் பார்க்கப்படுகின்றன என்பதை உணர்வதற்காக மட்டும் பார்க்கிறோம்.
வெளியில் உலகமாகத் தோன்றும் பஞ்சபூதங்கள், உடலுக்குள் கருவிகளாக இருக்கின்றன; தியானத்தில்
அவை சுத்தமடைந்து ஆன்மாவை உயர்த்தும் வழிகளாக மாறுகின்றன.
அதனால் பஞ்சபூதங்களைப் புரிந்துகொள்வது
வெறும் தத்துவ அறிவு அல்ல. அவை உடலின் அமைப்பு, அனுபவத்தின் கதவு, தியானத்தின் பாதை,
இறுதியில் ஆன்மா சிவத்தை நோக்கிச் செல்லும் உள் யாகத்தின் அடிப்படை.
அதிபதிகள்
பஞ்சபூதங்களுக்கு
அதிபதிகள் என்று சதாசிவன், மகேசுவரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய பெயர்கள் சொல்லப்படும்போது,
அதை ஐந்து தனித்தனி கடவுள்கள் ஐந்து பொருட்களை வெளியிலிருந்து ஆளுகிறார்கள் என்று மட்டும்
புரிந்துகொள்ள வேண்டாம். இங்கு “அதிபதி” என்பது அந்தந்த பூதத்தின் பின்னால் இயங்கும்
தெய்வீக ஆட்சிச் சக்தியை குறிக்கிறது. ஆகாயம் எல்லாவற்றிற்கும் இடம் தரும் விரிவாக
இருப்பதால், அதற்கு சதாசிவன் அதிபதியாகச் சொல்லப்படுகிறார்; இது பரந்த அருள் நிலையை
நினைவூட்டுகிறது. வாயு இயக்கத்தையும் உயிரோட்டத்தையும் தருவதால், அதற்கு மகேசுவரன்
அதிபதியாகச் சொல்லப்படுகிறார்; இது செயல்படுத்தும் ஆற்றலைக் குறிக்கிறது. அக்னி ஒளி,
வெப்பம், மாற்றம் ஆகியவற்றை தருவதால், அதற்கு ருத்திரன் அதிபதியாகக் கொள்ளப்படுகிறார்;
இது அறியாமையை எரித்து மாற்றும் சக்தியை நினைவூட்டுகிறது. ஜலம் ஓட்டம், சுவை, பேணுதல்,
இணைப்பு ஆகியவற்றை தருவதால், அதற்கு விஷ்ணு அதிபதியாகச் சொல்லப்படுகிறார்; இது காப்பும்
பேணுதலும் கொண்ட சக்தியை குறிக்கிறது. பூமி திடம், வடிவம், உறுதி, தாங்கும் தன்மை ஆகியவற்றை
தருவதால், அதற்கு பிரம்மா அதிபதியாகச் சொல்லப்படுகிறார்; இது உருவாக்கும் ஆற்றலை நினைவூட்டுகிறது.
இதனால்
அதிபதி என்ற கருத்து, பஞ்சபூதங்களை வெறும் பொருள் அமைப்பாக அல்லாமல், இறை ஆட்சியின்
கீழ் இயங்கும் தத்துவ அமைப்பாகப் பார்க்கச் செய்கிறது. ஆகாயம், வாயு, அக்னி, ஜலம்,
பூமி ஆகியவை தானாகச் சிதறி நிற்கும் சக்திகள் அல்ல; அவை ஒழுங்கோடு, நோக்கத்தோடு, ஆன்மாவின்
அனுபவத்திற்கும் பக்குவத்திற்கும் உதவும் வகையில் அமைக்கப்பட்டவை. அந்த ஒழுங்கின் பின்னால்
இருக்கும் தெய்வீக நிர்வாகத்தை நினைவூட்டுவதற்காகவே ஒவ்வொரு பூதத்திற்கும் ஒரு அதிபதி
சொல்லப்படுகிறார். எனவே அதிபதிகளைப் பற்றி படிக்கும் போது, “யார் எந்த பூதத்தை ஆளுகிறார்?”
என்ற பட்டியலாக மட்டும் பார்க்காமல், “இந்தப் பூதத்தின் பின்னால் எந்த தெய்வீக செயல்
வெளிப்படுகிறது?” என்று பார்க்க வேண்டும்.
சிவதத்துவங்களைப் படிக்கும் போது இது பற்றி ஆழமாகப் பார்க்கலாம்
உங்கள் உடல் – ஒரு சிறிய பிரபஞ்சம்
சைவ சித்தாந்தம் ஒரு அழகான உண்மையை நமக்கு நினைவூட்டுகிறது:
உங்கள் உடல் ஒரு சிறிய பிரபஞ்சம்.பெரிய அண்டத்தில் உள்ள பஞ்சபூதங்கள்,
இந்தச் சிறிய உடலிலும் இருக்கின்றன.
உடலுக்குள் இடம் இருக்கிறது — ஆகாயம்.
மூச்சு ஓடுகிறது — வாயு.
உடல் வெப்பம் உள்ளது — அக்னி.
இரத்தமும் திரவங்களும் ஓடுகின்றன — ஜலம்.
எலும்பு, தசை, தோல் தாங்குகின்றன — பூமி.
அதனால் இந்த உடல் வெறும் “நான்” அல்ல.
இது பஞ்சபூதங்கள் சேர்ந்த ஒரு கருவி.ஆன்மா அனுபவிக்க, கற்றுக்கொள்ள,
பக்குவம் அடைய கொடுக்கப்பட்ட கருவி.
ஒரு முறை அமைதியாக உடலை கவனியுங்கள்.
மூச்சு தானாக நடக்கிறது.
இதயம் தானாக துடிக்கிறது.
உணவு தானாக ஜீரணமாகிறது.
காயம் தானாக ஆறுகிறது.
நாம் “என் உடல்” என்று சொல்கிறோம்.
ஆனால் இந்த உடலை முழுவதும் நாமே நடத்துகிறோமா?
இல்லை.
உடல் இயற்கையின் சட்டத்தில் இயங்குகிறது.
அந்த இயற்கை மாயையின் தூல வெளிப்பாடு.
ஆன்மா அதில் தங்கி அனுபவிக்கிறது.
இதில் மிக முக்கியமான விழிப்பு என்ன?
உடல் மாறுகிறது.
உணர்வுகள் மாறுகின்றன.
சிந்தனைகள் மாறுகின்றன.
சுற்றிய உலகம் மாறுகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் “நான் அனுபவிக்கிறேன்” என்று அறியும் சாட்சி
ஒன்று உள்ளது.அந்த சாட்சியான ஆன்மாவே பஞ்சபூத உடலை உபயோகித்து பக்குவம் அடைகிறது.அது மாறாத ஒன்று.
நீங்கள் உடல் அல்ல.
ஆனால் உடலைப் புறக்கணிக்க வேண்டியவரும் அல்ல.
உடல் ஒரு சிறை அல்ல.
சரியாகப் பார்த்தால், அது ஒரு பள்ளி.
தினசரி வாழ்வில் விழிப்புணர்வு பயிற்சிகள்
இந்த தத்துவம் படித்து முடிக்கும் விஷயம் அல்ல.இதை வாழ்வில் பார்க்க
வேண்டும்.
நாளை காலை முதல் இந்த மூன்று சிறிய பயிற்சிகளை முயற்சி செய்து பாருங்கள்.
1. உணவு விழிப்பு
ஒவ்வொரு வாய் உணவையும் எடுக்கும்போது மெதுவாக கவனியுங்கள்.
இந்த உணவில் பூமியின் திடம் இருக்கிறது.
ஜலத்தின் சுவை இருக்கிறது.
அக்னியின் வெப்பம் இருக்கிறது.
வாயுவின் இயக்கம் இருக்கிறது.
ஆகாயத்தின் இடம் இருக்கிறது.
அப்போது உணவு வெறும் சாப்பாடு அல்ல.
அது பஞ்சபூதங்கள் சேர்ந்து உங்கள் உடலைத் தாங்கும் அருளாகத் தெரியும்.அந்த
நிமிடம் உணவு ஒரு ஆன்மிகப் பயிற்சியாக மாறும்.
சில ஆன்மீக மரபுகளில் உணவு அருந்துவதை ஒரு தியானமாகவே பயிற்சி செய்வார்கள்.
2. உடல் தியானம்
தினமும் 5 முதல் 7 நிமிடம் அமைதியாக உட்காருங்கள்.
கண்களை மூடுங்கள்.
உடலை உணருங்கள்.
உள்ளே இடம் இருக்கிறது.
மூச்சு அசைகிறது.
வெப்பம் இருக்கிறது.
திரவ ஓட்டம் இருக்கிறது.
எலும்பும் தசையும் உடலைத் தாங்குகின்றன.
பிறகு இந்த உணர்வை உங்களுக்குள் கொண்டு வாருங்கள்:
“இந்த உடல் மாயையால் அளிக்கப்பட்ட கருவி.
இதன் மூலம் நான் அனுபவிக்கிறேன்.
அனுபவத்தின் மூலம் நான் பக்குவம் அடைகிறேன்.
பக்குவத்தின் மூலம் நான் சிவத்தை நோக்கிச் செல்கிறேன்.”
இந்த நினைவு உடலைப் பற்றிய பற்றை குறைக்கும்.
உடலைப் பற்றிய நன்றியை அதிகரிக்கும்.
3. கவனிப்பு பயிற்சி
ஒரு நாள் முழுவதும் சின்ன சின்ன தருணங்களில் கவனியுங்கள்.
நான் கேட்கிறேன் — சப்தம் திறக்கிறது.
நான் தொடுகிறேன் — ஸ்பர்சம் திறக்கிறது.
நான் பார்க்கிறேன் — ரூபம் திறக்கிறது.
நான் சுவைக்கிறேன் — ரசம் திறக்கிறது.
நான் முகர்கிறேன் — கந்தம் திறக்கிறது.
“நான் அனுபவிக்கிறேன்.”
இந்த ஒரு கவனம் பெரிய மாற்றத்தை தரும்.
ஏனெனில் பொதுவாக நாம் அனுபவத்தில் மூழ்கி தொலைந்து விடுகிறோம்.ஆனால்
இங்கு நாம் அனுபவத்தை கவனிக்கத் தொடங்குகிறோம். இப்போது அந்த அனுபவம் நான் அல்ல என்பது
மெதுவாக உறுதிப்பட ஆரம்பிக்கும்.
அதுதான் விழிப்புணர்வின் முதல் படி.
இது பழைய காலத் தத்துவம் மட்டும் அல்ல.
இன்று உங்கள் மொபைல் போனிலும் இதே உண்மை நடக்கிறது.
திரை ஒளிர்கிறது — ரூபம்.
நொட்டிபிகேஷன் ஒலி வருகிறது — சப்தம்.
போன் கையில் வெப்பமாகத் தெரிகிறது — ஸ்பர்சம்.
காபி குடிக்கும்போது சுவை தெரிகிறது — ரசம்.
மழைக்குப் பிறகு மண்ணின் வாசனை வருகிறது — கந்தம்.
இவ்வளவு நவீன வாழ்க்கையிலும், நம் அனுபவத்தின் அடிப்படை மாறவில்லை.என்றும் மாறாது.
மனிதன் சந்திரனுக்குப் போனாலும், இணையத்தில் உலகம் முழுவதும் பேசினாலும்,
செயற்கை நுண்ணறிவு உருவாக்கினாலும் — அவன் உலகத்தை அனுபவிப்பது இன்னும் இந்த ஐந்து
கதவுகள் வழியாகத்தான்.
ஒலி.
தொடு உணர்வு
ஒளி.
சுவை.
வாசனை.
இதனால் தன்மாத்திரைகள் என்பது பழைய புரியாத சொற்கள் அல்ல.
இன்றும் நம் வாழ்க்கையை அமைக்கும் அடிப்படை உண்மைகள்.
நாம் அவற்றை மறந்து வாழ்கிறோம்.ஆனால் அவை ஒவ்வொரு நொடியும் நம்மை
உலகத்துடன் இணைத்துக் கொண்டிருக்கின்றன.
உலகம் எதிரி
அல்ல
பல நேரங்களில் நாம் உலகத்தை குற்றம் சொல்கிறோம் — “இந்த உலகம் என்னை இழுக்கிறது”, “இந்த உணர்வுகள் என்னை சிதறடிக்கின்றன”.
ஆனால் உண்மையில் உலகம் எதிரி அல்ல.
அது ஒரு பள்ளி.
உடல் ஒரு கருவி.
உணர்வுகள் கதவுகள்.
அனுபவங்கள் பாடங்கள்.
மாயை நம்மை நிரந்தரமாகக் கட்டுவதற்காக இல்லை.
நம்முடைய அறியாமை குறையும் வரை அனுபவம் கொடுப்பதற்காகவே இருக்கிறது.
ஒரு குழந்தை எழுதக் கற்க பலகை தேவைப்படுவது போல, ஆன்மா விழிப்படைய இந்த உலகம்
தேவைப்படுகிறது.
உலகத்தை வெறுக்க வேண்டாம்.
ஆனால் உலகமே இறுதி என்று பற்றிக் கொள்ளவும் வேண்டாம்.
அதைப் பயன்படுத்தி விழிக்க வேண்டும்
அடுத்த படி
இந்த ஐந்து தன்மாத்திரைகளும் பஞ்சபூதங்களும் பிரகிருதி மாயையின்
தூல வெளிப்பாடுகள்.
அருவம் நுட்பமாகிறது.
நுட்பம் தூலமாகிறது.
தூலம் அனுபவமாகிறது.
அனுபவம் பக்குவமாகிறது.
பக்குவம் சிவத்தை நோக்கிச் செல்கிறது.
இதுவரை நாம் தன்மாத்திரைகளையும் பஞ்சபூதங்களையும் பார்த்தோம். இவை
உலகம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை விளக்குகின்றன. ஆனால் இன்னும் ஒரு முக்கியமான
கேள்வி நமக்குக் காத்திருக்கிறது.
உலகம் வெளியில் இருக்கலாம். ஆனால் அதை ஆன்மா எவ்வாறு அறிகிறது?
ஒலியை யார் கேட்கிறார்கள்? ஒளியை யார் பார்க்கிறார்கள்? சுவை, மணம், தொடுதல் ஆகிய அனுபவங்கள்
எவ்வாறு நமக்குள் தோன்றுகின்றன? மேலும், அறிந்த பிறகு ஆன்மா இந்த உலகில் எவ்வாறு செயல்படுகிறது?
இந்த ஆழமான கேள்விகளுக்கான விடையைத் தருபவையே ஞானேந்திரியங்களும்
கன்மேந்திரியங்களும். அடுத்த அத்தியாயத்தில், உலகின் அமைப்பிலிருந்து ஆன்மாவின் அறிதல்
மற்றும் செயல்பாட்டின் கருவிகளை நோக்கி நம் பயணத்தைத் தொடர்வோம்.
பூதங்களில் அழுந்தி பார்க்கும்போது
— உலகம் அனுபவத்தில் தெரியும்.
பூதங்களின் பின்னால் இருக்கும் அருளைப் பார்க்கும்போது — மாயையின் நோக்கம் அறிவில்
புரியும் .
அந்த நோக்கத்தை ஆழமாய் உணரும்போது — நமக்குள்
சிவம் தோன்றும்.

0 comments:
Post a Comment