இந்த மனித வாழ்க்கை மிக ஆச்சர்யமாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதை நாம் பலமுறை உணரலாம். ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்று அதன் நான்கு தலைமுறைக்கு வேலையே செய்யாமல் சுகபோகமாக வாழும் எல்லா வசதியும் கொண்ட பணக்கார வீட்டில் பிறக்கிறது. இன்னொரு குழந்தை அடுத்த நாள் சாப்பாட்டிற்காக கடுமையாக உழைக்கும் ஏழையின் வீட்டில் பிறக்கிறது. ஒரு பிறப்புதான் ஆனால் அது எங்கே பிறக்கிறது, யார் வீட்டில் பிறக்கிறது, எப்படி பிறக்கிறது என்பதில் தான் அதன் மொத்த வாழ்க்கையும் இருக்கிறது. பணம் என்பது மட்டுமல்ல ஒரு குழந்தை எப்போதும் சண்டை போட்டு ஆளுக்கொரு திசையில் போகும் பெற்றோருக்குப் பிறந்து அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்குகிறது . இன்னொரு குழந்தை தங்கமாய் தாங்கி பாலூட்டி சீராட்டி அப்பாவும் அம்மாவும் மாறி மாறி அன்பு செய்யும் குடும்பத்தில் பிறக்கிறது. அந்தக் குழந்தை ஏன் பணக்கார வீட்டில் பிறந்ததது இந்தக் குழந்தை ஏன் ஏழை வீட்டில் பிறந்தது. அந்தக் குழந்தை ஏன் அன்பில்லா வீட்டில் பிறந்தது இந்தக் குழந்தை ஏன் அன்புடைய வீட்டில் பிறக்கிறது என்பதான கேள்விகள் நம் எல்லாருக்கும் இருக்கும் .
ஒரு ஆன்மா குழந்தையாக குடிசைக்குள் விழ வேண்டியதும் கோட்டைக்குள் விழ வேண்டியதும் எது தீர்மானிக்கிறது என்றால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக நம் சித்தாந்தம் சொல்வது "வினைப் பயன்". இன்னும் சொல்லப்போனால் பிறவி எடுக்கப்போகும் ஆன்மா மனித தேகத்தை பெறுவதும், புழு, பூனை, மான், மாடு முதலான விலங்குகளின் தேகத்தை எடுப்பதும் கூட வினைப் பயனின் கையில் தான் இருக்கிறது . இப்போது நாம் மனித தேகத்தை பெற்று வந்திருக்கிறோம் என்றால் இதுவே நாம் நல்ல வினைப்பயனை செய்திருக்கிறோம் என்று தான் அர்த்தம். அதனால்தான் "அரிது அரிது மானிடராதல்" அரிது என்று ஔவையாரும், "பெறுதற்கு அரிதான மானிட தேகத்தை அடைந்த நாமெல்லாம்" என்று வள்ளலாரும் நின்று நிறுத்திச் சொன்னார்கள்.
வினைப்பயன் என்று சொல்லபடுவது இரு வினை என்னும் வினைகொள்கையாகும். வினைக் கொள்கை என்பது கன்மம் என்று பொதுவில் சொல்லப்படுகிறது. கன்மம் என்பது மும்மலம் என்று பரவலாக அறியப்படும் மூன்று மலங்களில் ஒன்று. இந்த மூன்று மலங்களும் எங்கே இருக்கின்றன என்றால் ஆன்மாவாகிய நம்முள் தான் இருக்கின்றன.
அஞ்ஞான இருளில் அறிவற்று செயலற்று மலத்தோடு இருக்கிற ஆன்மாவின் மீது மிக கருணை கொண்டு இறைவன் அந்த ஆன்மா மலத்தை அறிந்து விடுபட அறிவும் செயலும் வேண்டும் என்பதால் அந்த ஆன்மா அறியவும் செயலாற்றவும் வழி வகையாக உடம்பையும் உலகத்தையும் தன் அருள் கருணையினால் மாயையில் இருந்தே உண்டுபண்ணி கொடுக்கிறார் . இவ்வாறாக தனு கரண புவன போகம் என்றவற்றையெல்லாம் இந்த ஆன்மாவுக்கு இறைவன் மிக கருணையோடு வழங்குகிறான், ஏன் இதை வழங்க வேண்டுமென்றால், ஆணவத்தோடு கட்டுண்டு வீணே திரிகிற ஆன்மாவை பக்குவப்படுத்தி தன்னோடு சேர்த்துக்கொள்ள இதைச் செய்கிறான் . "தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் " என்கிறது சிவஞான போதம் என்னும் வரி. அதாவது ஆன்மா உடம்பெடுத்து பிறப்பதும் ( தோற்றிய ), பிறப்பித்து இங்கே வாழ வைப்பதும் (திதியே), மரணத்தை உண்டுபண்ணி உடம்பிடத்து இருந்து ஆன்மாவை பிரிப்பதும் (ஒடுங்கி) எதனால் செய்கிறார் என்றால் ஆன்மாவை ஒட்டியிருக்கிற மலத்திலிருந்து ஆன்மாவை பிரித்து பரிபூரண நிலையை அடைய செய்வதற்கே ஆகும் என்கிறது சித்தாந்தம் .
இறைவன் உயிரை உய்விக்க இவ்வளவு முயற்சிகளை செய்கிறான் ஆனால் நாம் எவ்வளவு பயன்படுத்தி கொள்கிறோம்? ஆன்மாவை மீட்டெடுக்கும் இறைவனின் இந்த பிரத்தியேக முயற்சிக்கு இந்த ஆன்மாவாகிய நம்முடைய ஒத்துழைப்புதான் என்ன? அஞ்ஞான இருளிலே மலத்துடன் மண்டிக்கிடந்த அறிவும் தெளிவும் அற்ற ஆன்மாவை பிடித்து அதற்கென்று ஒரு உடம்பை கொடுத்து அது வாழ தனு கரண புவன போகங்களை கொடுத்து அதை அனுபவித்து ஆன்மா சேர்க்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறப்பளித்து அந்த பிறப்புகளால் அடையப்பெற்ற கருவிகளை கொண்டு அறிவு பெற்று மலங்களை துறக்க செய்ய வேண்டிய தீவிர முயற்சியை செய்து அது இறைவனை நோக்கி வரும் வரை விடாது நமக்கு அதாவது இந்த ஆன்மாவிற்கு உடம்பையும், தனு கரண புவன போகங்களையும் சலிப்பே இல்லாமல் தொடர்ந்து தந்து அருள் செய்துகொண்டே இருக்கிற இறைவனின் தீவிர முயற்சிக்கு அந்த ஆன்மாவாகிய நாம் என்ன ஒத்துழைப்பை இதுவரை தந்தோம் என்பதை சிந்தித்து பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது .
இப்போது நமக்கு ஒரு கேள்வி வரும் ஞானம் எழும் அந்த எழுச்சியோடு நமக்குள் இருந்து வெளிப்படும் ஒன்று "நான் இப்போது ஒரு ஆன்மாவாக என்னை மீட்கப் போராடும் கடவுளுக்கு என்ன ஒத்துழைக்க வேண்டும் அல்லது எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும்" என்பது தான். இறைவனை மறைத்து உங்களை மறைத்து உங்களுக்குள்ளே தன்னையும் மறைத்து ஒரு ஒட்டுண்ணி போல வாழ்கின்ற உங்கள் மலத்தை எதிர்க்க எதிர்த்து போராட ஆயத்தமாக வேண்டும் அதுவே நாம் செய்யும் ஒத்துழைப்பு. ஒரு பெருங்கடலில் வீழ்ந்து விட்ட ஒருவனை காப்பாற்ற ஒருவன் எவ்வளவுதான் கைகளை தாழ்த்தினாலும், எவ்வளவு தான் என் கையை பிடித்துக்கொள் என்று கத்தினாலும் விழுந்தவன் ஒருகணம் சுதாரித்துக் கொண்டு தன் கையை உயர்த்தவில்லை என்றால் ஒன்றும் செய்ய இயலாது. பிறவிப்பெருங்கடலில் இருக்கின்ற நம்மை காப்பாற்ற இறைவன் ஆயிரம் கைகளை நீட்டியபடி அழைத்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் நாம் நம்மை மேல செல்லவிடாமல் கால்களை கட்டியிருக்கிற மலம் எனும் கல்லை பிடித்து கொண்டு இன்னும் இன்னும் கீழே போய்க்கொண்டிருக்கிறோம்.காலை கட்டியிருந்த கல்லை அவிழ்த்துக்கொண்டு மேலே வந்தால்தான் இறைவனின் கைகளை பிடிக்க முடியும். நம் கால்களில் கட்டிக்கொண்டிருக்கும் ஆணவ கல்லில் இருந்து விடு பட அந்த ஆணவக் கல்லை நம்மோடு பிணித்திருக்கிற கயிறின் முடிச்சை அறிந்து கழற்றினாலே போதும். அந்த கயிறின் முடிச்சுதான் கன்மம். இப்போது ஒன்றை நன்றாக சிந்தித்து பாருங்கள் நம்மை ஆணவம் (கல்) பிடித்திருப்பதும் அது தன் வலிமையால் (எடையால்) நம்மை அஞ்ஞானத்தில் (தண்ணீருக்குள்) இழுக்கவும் காரணமாக இருப்பது கன்மம் (கயிறு) . ஆக அது ஆணவ மலத்தின் செயலுக்கு உதவியாகவும் இருக்கிறது. அதே சமயம் அந்த கயிற்றை கழட்டுவதன் மூலம்தான் ஆணவம் என்கிற கல்லும் நம்மை விட்டு பிடி கழன்று போக காரணமாகவும் இருக்கிறது. இங்கே நாம் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும், ஆணவ மலத்தின் செயலுக்கு துணையாக இருப்பதும் கன்மம்தான், அந்த ஆணவத்தை நம்மிடம் இருந்து விலக்க துணையாக இருக்க போவதும் கன்மம் தான், அதாவது கல் தனது எடையால் நம்மை உள்ளிழுக்க துணையாக இருப்பதும் கயிறுதான், அதேபோல் நம்மை இழுக்கின்ற கல்லை நம்மிடம் இருந்து விளக்கப்போவதும் அதே கயிறுதான். இந்த நுட்பத்தை தான் சித்தாந்த நூல்கள் பலவகைகளில் நமக்கு புரிய வைக்க முயற்சி செய்கின்றன. கை நீட்டி நம்மை காக்க காத்திருக்கும் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய ஒத்துழைப்பு நம் காலில் கல் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை கழற்றி மேலே வந்து நீட்டப்பட்டிருக்கும் இறைவனின் கையை பிடிக்க வேண்டும் என்பதுதான்.
மேற்சொல்லப் பட்ட கதை அல்லது உதாரணங்களின் வழி நாம் உணரவேண்டிய ஒரே விஷயம். கயிறை கழற்றுவது அதாவது கன்மத்தை கழற்றுவது. மலங்கள் என்று சொல்லப்படுகிற மூன்றில் கன்மத்தில் கை வைத்தால் மற்ற இரண்டும் தன்னாலே பிடி தளர்ந்து போகும். அதாவது நீருக்குள் இழுக்கப்படுகிற நாம் கால்களில் கட்டப்பட்ட கயிற்றை முடிச்சவிழ்த்தால் போதும் அது கட்டப்பட்டதன் மூல காரணமான கல்லும் நம்மை விட்டுப்போகும் , நீருக்குள் மூழ்கப்படும் சூழலும் போகும். கன்மம் கயிறு , கல் ஆணவம், நீருக்குள்ளான சூழல் மாயை. இப்பேருண்மையை உணர்ந்து கொண்ட நாம் எல்லோரும் கன்மத்தை நோக்கி சிந்திக்கவும் செயல்படவும் தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஆன்மாவும் கன்மத்தை போக்க முயற்சி செய்வதே இறைவனின் அருள்தன்மைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய ஒத்துழைப்பு .
கன்மம் என்றால் என்ன ? சித்தாந்தம் சொல்லும் பதில் "இருத்தலும், கிடத்தலும், இருவினை இயற்றலும், விடுத்தலும், பரநிந்தை மேவலும் என்றெடுத்த அறுவகை குணமும் கன்மத்துக்கு அருளினை". கன்மம் என்ற மலம் ஆறு குணங்களை கொண்டதாக சொல்லப்படுகிறது. எந்த ஆக்கபூர்வமான செயலும் செய்யாமல் நம்மை சோம்பலில் ஒரே இடத்தில தேக்கி வைப்பதும் (இருத்தல்), சோம்பலுற்று வேறு செயலன்றி அப்படியே கிடத்தலும் (கிடத்தல்), நல்வினை தீவினை என்பதனை பாவ புண்ணிய செயல்களை செய்வதும் செய்விப்பதும் (இருவினை இயற்றலும்), உலகியல் பற்றை விட்டு பிடிப்பற்று இருப்பதும் (விடுத்தல்), பிறரை இகழ்ந்து பேசுதலும் (பரநிந்தை), விலக்கவேண்டிய இழிவான விஷயங்களை விரும்பி செய்வதும் (மேவல்) ஆகிய இந்த ஆறும் கன்மத்தின் குணங்கள் ஆயினும் இதில் இருவினை இயற்றல் என்கிற ஒன்றே முக்கியமானதாகவும் கன்மத்தின் அடையாளமாகவும் இருக்கிறது .
மலம் என்னும் அடுக்கி கட்டப்பட்டுள்ள சீட்டுக்கட்டு கோபுரத்தை கன்மம் என்னும் ஒரு சீட்டு உருவப்படுவதால் மொத்தமாக வீழும் என்றால், அதை எப்படி செய்வது என்று சிந்திக்க வேண்டும். மேலே சொல்லப்பட்டுள்ளதை போல கன்மம் என்பது இரு வினை சேர்ப்பு தான். இந்த உலகத்தில் பிறவியை உடலை பெற்ற ஆன்மா வாழுகின்ற வாழ்க்கையில் ஆணவமலத்தாலும் மாயைக்கு மயங்கியும் பல விஷயங்களை செய்கிறது. காரணம் அவ்வாறு செய்வதற்கான கருவியும் அறிவும் செயலும் ஆன்மா பெற்றிருக்கிறது. அவ்வாறு ஆன்மா செய்யும் விஷயங்கள் நல்ல விஷயங்களாக இருந்தால் நல்வினையாகவும் தீய செயல்களாக இருந்தால் தீவினையாகவும் மாறுகிறது. நல்வினையால் இன்பத்தையும் தீவினையால் துன்பத்தையும் அந்த ஆன்மா அனுபவிக்க மீண்டும் பிறப்பெடுக்கிறது, அவ்வாறு பிறந்து போன பிறவியின் வினையை அனுபவிக்கும்போதே இந்த பிறவியிலும் புதுப் புது வினையை தாராளமாய் ஏராளமாய் வாறிபோட்டுக்கொள்கிறது .
இங்கு நமக்கு ஒரு கேள்வி வரும் தீ வினை செய்தால் துன்பம் வருகிறதென்றால், ஆன்மா வேண்டுமென்றே தனக்கு துன்பமான ஒன்றை செய்யுமா? செய்யும், செய்து கொண்டேதான் இருக்கிறது. காரணம் வினையின் பயனை அனுபவிக்கிறோம் என்பதையே நமக்கு காட்டாமல் நம் அறிவுக்கு உணர்த்தாமல் ஆணவமும் மாயயையும் சிறப்பாக வேலை செய்கின்றன. தொடர்ந்து பிறவி எடுத்து தன் துன்பத்தையும் அதற்கான காரணத்தையும் ஆன்மா உணர முற்பட்டு இறைவனை வேண்டி விரும்பி நின்று தன் வினையை தடுக்க ஆன்மா அறிவினைப் பெறும் போதும், உடம்பாலும், வாக்காலும், மனத்தாலும் எந்தப் பாவமும் செய்யாமல் அதை செய்ய அஞ்சி, தன் வினையைத் தடுக்கும் போதும் இதுவரை ஆன்மாவை மறைத்திருந்த இருள் மாயை இப்போது பிரகாசமாகி சிவஞானத்தை உண்டுபண்ணும். தனு கரண புவன போகமெல்லாம் இறைவன் உண்டுபண்ணியது என்ற தெளிவு வரும் இதனையே இருவினை ஒப்பு என்கிறது சித்தாந்தம் . மலத்தை உணர்ந்து தள்ளி வந்து, இறைவனை உணரப் போராடும் ஆன்மாவைப் பற்றி சுத்த மாயை இறைவனுக்கு ஆன்மாவின் இயல்பை உணர்த்தும். இதனை திருகுறிப்பினால் உணர்ந்த இறைவன் ஆன்மாவிற்கு உதவ இங்கு (இறங்கி) வருவான். உயிருக்கு தான் யார் என்பதை காட்டாதவாறு மறைப்பித்து வெளிப்பட்டு அந்த ஆன்மாவின் மலங்களை தீக்ஷையால் நீக்குவார் . தீக்ஷை என்றால் சுட்டெரித்தல் என்றே அர்த்தம் .
இவ்வாறாக ஆண்டவன் குருவாக வந்து தீட்ஷை கொடுக்கப்பெற்ற உடன் இரண்டு விடயங்கள் நடக்கும். ஒன்று , இதுவரை ஆன்மா இப்பிறப்பில் சேர்த்து வைத்த வினைகள் (சஞ்சித வினைகள் ) நீங்கும். இரண்டாவது அவ்வாறு சேர்த்து வைக்கப்பட்டு அடுத்த பிறவி அமைய காரணமாகவும் அடுத்த பிறவியில் இன்ப துன்பங்களையும் தருவதாக அமையும் வினைகள் (பிராரத்த வினைகள்) நீங்கும். இரண்டு முக்கிய வினைகளும் ஒழிந்ததால் ஆன்மா பிறவியற்ற நிலையை அடைகிறது, ஆதலால் இனிமேல் செய்யும் வினைகள் எல்லாம் சிவச் செயல்களாக மாறும் அவை ஆன்மாவின் கணக்குக்கு செல்வதில்லை எல்லாம் சிவ கணக்காகிறது. இந்நிலையில் இனிமேல் செய்துகொள்ளும் ஆன்மாவின் வினையும் (ஆகாமிய வினை) இல்லாது போகும். எல்லா வினையும் அற்ற நிலையில் இந்த உயிர் சீவன் முத்தராக மாறும். இந்த நிலையில் மறைத்து வெளிப்பட்ட இறைவனின் திருவடி மறைப்பின்றி வெளிப்படும். அதனை ஆன்மா பணிந்து சரணாகதி அடையும் திருவடிப்பேறு கைகூடும் .
கட்டுரையாளர்: தாமல் கோ.சரவணன் M.Sc., M.Ed., எழுத்தாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்
உயிரிதொழில் நுட்பவியல் ( master in Biotechnology) ல் முதுநிலையும் பெற்றவர்.
தற்போது ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் ( Director of Syllabus committee board ) அமெரிக்காவின் Florida International University –யின் வள்ளலார் ஆய்விருக்கைக் குழு உறுப்பினராகவும் ( board member of vallalar chair) காஞ்சிபுரம் ஊர்க்காவல் படையின் மண்டலத் துணைத் தளபதியாகவும் (Deputy Area Commander of TamilNadu home guards) பிஏவி பன்னாட்டுப்பள்ளியில் துணை முதல்வராகவும் (vice principal) பொறுப்பு வகிக்கின்றார்.எழுதிய நூல்கள்.
1.வள்ளலார் வளர்த்த தமிழ்
2.தமிழ் வளர்த்த சான்றோர்கள்
3.காப்பியங்கள் அணிந்த காலணிகள்
4.கம்பன் கவியில் காத்திருப்பு
வணக்கம் உலகம் உய்வதற்கு உதவும் சித்தாந்தம் எளிய முறையில் எவருக்கும் புரியும் வகையில் உள்ளது மிக்க நன்றி🙏💕 ஆன்மம் (ஆணவம்_அணுவம்) அருமை ஆன்மத்திற்கும் இறைக்குமான தொடர்பு உண்மையாகவே ஆன்மத்தின் அவத்தை இறைவனின் கருணை அருமை பிறவியின் ஒத்துழையாமைப் பிழை ஆணவத்தின் ஒட்டுண்ணியான கன்மமே கடைத்தேற உதவும் பூனை உவமை அருமை ஆவலுடன் அடுத்த பதிவினை எதிர்நோக்கி...... நன்றி🙏💕
ReplyDelete