சைவ சமயத்தில் தோத்திர நூலுக்கு அப்படி அமைய வில்லை என்றாலும் சாத்திர நூல்களுக்கு விரிவான சிந்தனையும், பார்வையும், நூல்களும் அமைந்திருக்கின்றன. சாத்திர நூல்கள் மொத்தம் பதினான்காகும்.
1. திருவுந்தியார்
2. திருக்களிற்றுப்படியார்
3. சிவஞான போதம்
4. சிவஞான சித்தியார்
5. இருபா இருபஃது
6. உண்மை விளக்கம்
7. சிவப்பிரகாசம்
8. திருவருட்பயன்
9. வினா வெண்பா
10. போற்றிப் பஃறொடை
11. கொடிக்கவி
12. நெஞ்சு விடுதூது
13. உண்மை நெறி விளக்கம்
14. சங்கற்ப நிராகரணம்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தவருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் முற்று.
என்ற வெண்பா 14 நூல்களை பட்டியலிட்டுக் காட்டும்.
(1) திருவுந்தியார்: இந்த நூலை எழுதியவர் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார். இது நாற்பத்தைந்து கலித்தாழிசையால் (இரண்டு அடிகளோ, இரண்டிற்கு மேற்பட்ட பல அடிகளால் வரும், தாழிசையின் வகைகளுள் ஒன்று) ஆனது. சில தாழிசைகள் திருமந்திரம் போலவும், பாடலின் பொருள்கள் "பிசி" எனும் வடிவிலும் அமைந்துள்ளது. (பிசி என்றால் ஓரிரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக நேரடியாக விவரிக்காமல், விடுகதை போல கூறுவது)
(2) திருக்களிற்றுப்படியார்: இதனை இயற்றியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். இவர் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனாரின் மாணவராகிய திருவியலூர் ஆளுடைய தேவநாயனாரின் மாணவர் . இது திருவுந்தியாரின் பொருளை விளக்கும் வழி நூலாக அமைந்துள்ளது. இந்தநூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. முதல் நூலின் ஒவ்வொரு தாழிசையின் பொருளையும் சில வெண்பாக்களாலேயே விளக்குவனவாக இனிய தெளிவான நடையில் அமைந்துள்ளன.
மேலும் உந்தியும் களிறும் 'திருவியலூர் உய்ய வந்த சந்தானத்தில்' தோன்றியவை. இந்த இரு நூல்களும் சொல்ல வரும் பொருளால் ஒன்றுபட்டவை. ஆயினும் அவற்றைத் தெரிவிக்கும் முறையில் சிறிது வேறுபாடு உடையவை. இவ்விரண்டு நூல்களும் சித்தாந்தப் பொருள்களை உபதேச முறையால் கூறுகின்றன. இங்குப் பரபக்கப் பார்வைக்கே இடம் இல்லை. இவை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. அதனால் இவை அறுபான் மும்மை நாயன்மார் முதலிய திருத்தொண்டர்களின் உண்மை வரலாறுகள், திருக்குறள், தேவாரம் முதலிய திருமுறைகள் போன்ற தமிழ் நூல்கள் ஆகியவற்றை முதன்மை மேற்கோள்களாகக் காட்டுகின்றன. 'பிரமாணம், இலக்கணம், சாதனம், பயன்' என்னும் நான்கனுள் சாதனம், பயன் ஆகிய இரண்டு மட்டுமே இந்நூல்களில் கூறப்பெற்றுள்ளன.
இங்கே வேறு ஒன்றும் சிந்திக்க வேண்டியுள்ளது, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மணிவாசகப்பெருமான் என்ற சமயகுரவர் நால்வருக்குப் பின் சைவ சமயத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்குத் தமிழ் நாட்டில் பல 'ஞானசந்தானங்கள்' தோன்றின. அதில் 'திருவியலூர் உய்ய வந்த சந்தானம்' என்றொரு சந்தானம் இருந்ததை 'உந்தியும் களிறும்' என்பவற்றால் அறிய முடிகின்றது.
(3) சிவஞான போதம்: இந்த நூலை அருளிச் செய்தவர் திருப்பெண்ணாகடத்தில் தோன்றித் திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்த மெய்கண்ட தேவநாயனார் என்பவர். மெய்கண்டார் என்பது தீட்சையால் பெற்ற பெயர். இவரது பிள்ளைப் பெயர் 'சுவேதவனப் பெருமாள்'. இவரது சந்தானமே 'திருக்கயிலாய பரம்பரை' என்று வழங்கப் பெறுகின்றது. இஃது இருகிளைகளாய் திருவாவடுதுறையில் ஒன்றும், தருமபுரத்தில் ஒன்றுமாக இரண்டு ஞான பீடங்களைக் கொண்டு விளங்குகின்றது.
இந்நூல் சித்தாந்தத்தின் தலைமணி நூல். பன்னிரண்டே நூற்பாக்களில் (சூத்திரங்களில்) எல்லா மெய்நூல்களின் கருத்துகளையும் அடக்கி அளவை நெறி கொண்டு (தருக்க முறையைப் பின்பற்றி) மிகத்திட்பமும், நுட்பமும் அமையச் சித்தாந்தக் கருத்துகளைத்தெளிவாக முழுமையாக விளக்கும் முதல் நூல் இது. முதற்கண் தற்சிறப்புப் பாயிரமாக அமைந்த 'மங்கல வாழ்த்து, அவையடக்கம்' ஆகிய இரு செய்யுட்களும் பல அறிவார்ந்த நுட்பங்களை கொண்டது.
இதன் நூற்பாக்களைப் பல கூறுகளாகப் (அதிகரணங்களாகப்) பிரித்து நூலாசிரியரே சுருக்கமான பொழிப்புரை (வார்த்திகம்) கூறியுள்ளார். இந்த உரை 'மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு' என்னும் உறுப்புகளைக் கொண்டது. எடுத்துக் காட்டுகள் வெண்பாக்களால் ஆகியவை. 'சூசிப்பது சூத்திரம்' என்பதற்கு இந்நூல் சிறந்ததோர் எடுத்துக்காட்டு இலக்கியமாகும்.
இந்நூலாலும், பிறவற்றாலும் அருணந்தி தேவர் முதலிய மாணாக்கர்கட்குச் சித்தாந்தத்தினைத் தெளிவாக உணர்த்தினார். இந்த மாணாக்கர்களும் தங்கள் நூல்களாலும், உபதேசங்களாலும் எங்கும் சித்தாந்தத்தினை விளங்கச் செய்தனர். இவ்வாறு 'மெய்கண்டார் சந்தானம்' அன்று தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டில் சிறந்தோங்கி நிற்கின்றது. இக்காரணங்களால் மெய்கண்ட தேவரைச் சித்தாந்தத்தின் முதல் ஆசிரியராகக் கருதுவர் சிலர். இப்படி கருதுவதற்குரிய பெருமையுடையவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை, ஆயினும் சித்தாந்தத்தினை இவரே படைத்தார் என்று கருதுவது சரியன்று. மெய்கண்டாருக்கு முன்னரே திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்ற இரண்டு சித்தாந்த நூல்கள் உள்ளன; மற்றும் ஞானாமிர்தம் முதலியனவும், சித்தாந்த சாராவளி, அட்டப் பிரகரணம் முதலிய வடநூல்களும் இருந்தமை அறியக் கிடக்கின்றது. ஆகவே பரந்து கிடந்த சித்தாந்தப் பொருள்களை ஒரு கோவைப்பட அளவை முறையால் நூல் முறைப்படிச் செய்தருளினவர் மெய்கண்டார் என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.
(இராமாநுசர் வைணவ நெறியை முறைப்படுத்தினமை இங்கு நினைத்தல் பொருத்தமாக இருக்கும்) .
இதனால் இது 'சித்தாந்த முதல் நூல்' என்று போற்றப் பெறுகின்றது. இதன் பெருமையைத் 'திருக்குறள் ஆகிய வேதம் பசு; திருமூலர் திருமந்திரமாகிய ஆகமம் அந்தப் பசுவின்பால்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் பாடல்களாகிய திருமுறைகள் அப்பாலின் நறுநெய்; மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய சுவையாகும் என்று பெரியோர்கள் பாராட்டியுள்ளனர். இந்த அரிய நூலுக்கு மாதவச் சிவஞான யோகிகள் ''சிற்றுரை, பேருரை' என இரண்டு உரைகள் செய்துள்ளார். பேருரை எனப்படும் மாபாடியத்துள் சித்தாந்தப் பொருள் பலவற்றையும் நுணுக்கமாக விளக்கியுள்ளார்.
(4) சிவஞான சித்தியார்: இதனை இயற்றியவர் மெய்கண்டாரின் மாணவர் அருணந்திதேவநாயனார் என்பவர். மெய்கண்டாரின் 49 மாணாக்கர்களுள் இவரே முதல்வராகத் திகழ்ந்தவர். 'அருள்நந்தி' என்பது தீட்சா நாமம். இதற்கு முன் இவர் 'சகலாகம பண்டிதர்' எனப் பெயர் பெற்றிருந்தவர். மெய்கண்ட தேவரைச் சிவபெருமானுடனும், இவரை நந்தி தேவருடனும் ஒப்பிட்டுப் போற்றுவர் சைவப் பெருமக்கள். இந்நூல் சிவஞான போதத்தை மிக விரித்துச் செய்யப் பெற்ற மிகப் பெரிய வழி நூலாகும். இது 'பரபக்கம், சுபக்கம்' என்னும் இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. இரண்டையும் 'இருவேறு நூல்கள்' என்று கருதும் அளவுக்கு மிகப் பெரிய நூல்.
'பரபக்கம்' 301 திருவிருத்தங்களை கொண்டது. இதில், அக்காலத்தில் முக்கிய மதங்களாக (தத்துவங்களாக) விளங்கிய லோகாயதம், பௌத்தத்தின் பெரும் பிரிவுகளாகிய சௌத்ராந்திகம், யோகாசாரம், மாத்யமிகம், வைபாஷிகம், நிகண்டவாதம் எனப்படும் சமணம், ஆசீவகம், வேள்வியை வலியுறுத்தி ஆண்டவனைப் புறக்கணிக்கும் பட்டாசாரியன் (ஜைமினி) மதம் எனப்படும் பூர்வ மீமாம்சை, பிரகிருதி – புருஷ தத்துவத்தை போதிக்கும் சாங்கியம், மாயாவாதம், சுத்தபிரம்மவாதம் ஆகிய பிரிவுகளைக் கொண்ட அத்வைதம், பாஞ்சராத்ரம் எனப்படும் வைணவம் ஆகிய, சைவத்துக்கு மாறான பிற சமயங்களைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதி ஆகும். இதில் மற்ற மதங்களின் கருத்துகளைக் கூறி, அதற்கு மறுப்பும் கூறுகிறார்.
'சுபக்கம்' 323 திருவிருத்தங்களை கொண்டவை. இதில் பிரமாண இயல், இலக்கண இயல், சாதன இயல், பயன் இயல் ஆகிய நான்கு இயல்களின் மூலம், இறை இயல்பு, பதி உண்மை, உயிர் உண்மை, தீக்கையின் வகை, பாச நீக்கம், சிவப்பேறு பெறுதல், சீவன் முத்தராதல் ஆகியவற்றை விரித்துரைக்கிறது. எனவே இதனைச் சிவஞான போதத்திற்குச் செய்யுளால் அமைந்த மாபாடியம் எனலாம்.
மேலும், இந்நூல் அனைவரும் சித்தாந்தப் பொருளை உணருமாறு எளிமையாகவும், விரிவாகவும், சைவாகமப் பொருள்களை ஆங்காங்குத் தந்துரைத்து அவற்றிற்கு விளக்கமாகவும் அமைந்துள்ளது. இக்காரணங்களால் இதுவே சித்தாந்தப் பெருநூலாகத் திகழ்கின்றது. இதுபற்றியே "சிவத்திற்கு மேல் தெய்வம் இல்லை சித்திக்கு மேல் நூலும் இல்லை" என்ற ஒரு பழமொழியும் வழக்கில் உள்ளது.
வள்ளுவர்நூல் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகன் செய்தஉரை - ஒள்ளிய சீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாந் தரம்.
என்ற வெண்பா சிவஞான சித்தியாரையே சாத்திரத்திற்குச் சிறந்ததாகக் காட்டுவதைக் காணலாம். "ஆகமங்கெல்லாம் உரையாணி" என்ற புகழ் மாலை சூட்டியிருப்பதைக் கொண்டு, சித்தாந்தத்தைத் தெளிவாக அறிய விழைவோர், இந்த நூலை குறிப்பாகச் சுபக்கத்தினை, விரிவாக படிக்க வேண்டியது இன்றியமையாதது.
(5) இருபா இருபஃது: இதனை இயற்றியவரும் அருள் நந்தி தேவரேயாவார். இந்த நூலில், தாம் சிவஞான போதத்தால் உணர்ந்த சித்தாந்தப் பொருளினும் மிக நுண்ணிய பொருள்களைத் தம் குருநாதராகிய மெய்கண்ட தேவரை வினவி அதில் அறிந்தவற்றை விளக்கி உரைக்கின்றார். இந்த வினாக்களை 20 பாடல்களில் வெளிப்படையாகக் கூறி விடைகளைக் குறிப்பால், பெற வைத்துள்ளார். இவற்றைச் சிந்தித்து அறிதல் வாசகர்களின் பொறுப்பு.
(6) உண்மைவிளக்கம்: இப்பனுவலை எழுதியவர் திருவதிகை மனவாசகம் கடந்தார் என்பவர். இவரும் மெய்கண்டதேவரின் மாணவர்களுள் ஒருவராவார். இந் நூலைத் தவிர இவரைப்பற்றிய வேறு குறிப்பு ஒன்றும் தெரியவில்லை. இவர் தம் நூலில் தத்துவங்களைச் சுருக்கமாகவே உரைக்கின்றார். இதில் தம் குருநாதரை நூலாசிரியர் கேள்வி கேட்டு, குருநாதர் சீடருக்கு விளக்கம் தருவதாக, வினா-விடையாக அமைந்தது. இந்நூல் சித்தாந்தம் பயில விரும்புவார்க்கு முதலில் பயில வேண்டிய ஆரம்பப் பாட நூலாக அமைகின்றது. இதில் ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சுத்த தத்துவம், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள், உயிரியல்பு, பதியியல்பு, ஐந்தெழுத்து, நடராச தத்துவம், அத்துவித முத்தி, குருலிங்க சங்கம வழிபாடு என்பவை விளக்கப்பெறுகின்றன. பக்தியுடன் பயின்றால் மெய்கண்டாரே நேரில் உபதேசம் செய்யும் உணர்வு பெறலாம் என்று மனவாசகம் கடந்த தேவர் தன் நூலில் குறிப்பிடுகிறார். காப்புப் பாயிரம், சிறப்புப் பாயிரம் உட்பட 55 வெண்பாக்களால் அமைந்துள்ளது இந்த அழகிய நூல்.
(7) சிவப்பிரகாசம்: இந்நூலும் பின்னே வரப்போகும் ஏனைய ஏழு நூல்களையும் இயற்றியவர் கொற்றவன்குடி உமாபதி தேவநாயனார். இவரைச் சுருக்கமாக உமாபதி சிவம் என்பர். இவர் இயற்றிய எட்டு நூல்கள் 'சித்தாந்த அட்டகம்' என்ற பெயராலும் வழங்கப் பெறும். இவற்றுள் 'உண்மை நெறி விளக்கம்' என்பதைச் சீகாழித் தத்துவராயர் என்பார் செய்ததாகச் சொல்லுவதும் உண்டு. உமாபதி சிவம், அருள்நந்திதேவரின் மாணாக்கராகிய "மறைஞான சம்பந்தரின்" மாணவராவர். இவர் தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவர். மெய்கண்ட சந்தானத்தில் உள்ள மெய்கண்டார், அருள் நந்திதேவர், மறைஞானசம்பந்தர், உமாபதிதேவர் என நால்வரும் 'சந்தான குரவர்' எனப் போற்றப் பெறுவர். இவர்களுடைய வரலாறுகள் விரிவானவை. இவற்றைச் 'சந்தானாச்சாரியார் புராண சங்கிரகம்' என்ற நூலில் காணலாம்.
சிவப்பிரகாசம் சிவஞான போதத்தின் சார்பு நூலாகும். இது சிவஞான சித்தியார் போலச் சிவஞான போதத்தை அடியொற்றிச் சொல்லுவதாக அமையவில்லை. போதத்தின் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, 'பொது, உண்மை' என்னும் இரு பிரிவாய் சொல்லப்படுகிறது. முந்தைய முதல் வழிநூல்களில் விளக்கப்பெறாத பல நுண்ணிய கருத்துக்கள் இங்கு விளக்கம் அடைகின்றன. மேலும், அவ்விரு நூல்களிலும் கிடைக்கப் பெறாத சில மூல ஆகம, உப ஆகமக் கருத்துகளும் இதில் சொல்லப் பெற்றுள்ளதாக நூலாசிரியரே தெளிவாக்குகின்றார். இவற்றால் முன்னைய நூற்பொருள்களைச் சுருங்க உணர்வதற்கு இந்நூல் ஒருவாறு துணையாக இருக்கும். இந்நூல் நூறு விருத்தப்பாக்களால் அமைந்தது.
(8) திருவருட்பயன்: இந்த நூல் சித்தாந்தப் பொருள்களை தொகுத்துக் குறள் வெண்பாக்களால் கூறுகின்றது. 10 குறள்கள் வீதம் 10 இயல்களில் 100 குறள் வெண்பாக்கள் அடங்கியுள்ளன. தொடக்கத்தில் காப்பாக முதற்கண் தனிக்குறள் வெண்பா உள்ளது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், வீட்டினை அறத்துப் பாலில் அடக்கிக் கூறுகின்றார். இந்நூலில் வீடு பற்றிய கருத்து தனியாக எடுத்துக் கூறப்பெறுகின்றது. இதனால் இதனை மெய்ந்நெறித் திருக்குறளாகக் கொண்டு ஓதி உணர்ந்து வீடாகிய முடிந்த பயனைப் பெற வேண்டும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. சைவப் பெருமக்கள் இதனை உண்மை விளக்கத்திற்கு அடுத்ததாகக் கற்று அதன் பிறகு சிவப்பிரகாசத்தைக் கற்றலை ஒரு மரபாகக் கொண்டுள்ளனர்.
(9) வினாவெண்பா: இந்நூல் இருபா இருபஃது போன்றது. 13 வெண்பாக்களால் ஆனது. நூலாசிரியர் தம் ஆசிரியராகிய மறைஞானசம்பந்தரிடம் கேள்வி கேட்டு அறிந்த நுண் பொருள்களை வினா வடிவிலேயே உணர்த்துகின்றார்.
(10) போற்றிப் பஃறொடை வெண்பா: இறைவன் உயிர்களுக்கு தன் பெருங்கருணையால் கைம்மாறு கருதாத பேருதவியைச் செய்து வருகின்றான், என்கிறது சைவம். இதனைத் தத்துவ நெறியால் உணர்ந்து அவனைப் போற்றி உரைப்பதாகச் செய்யப் பெற்றது இந்நூல். ஆகவே இதில் பல தத்துவக் கருத்துகள் தாமாகவே அமைந்து விளங்குகின்றன. இது 95 கண்ணிகளையுடைய கலிவெண்பாவால் ஆனது.
(11) கொடிக்கவி: இந்நூல் ஐந்து திருப்பாடல்களால் ஆனது. இதன் ஆசிரியர் உமாபதி சிவம் தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவர் என்பதை நாம் அறிவோம். ஒருமுறை தில்லையில் கொடியேற்ற நிகழ்வின் போது இவர் கொடி ஏற்ற முறை வந்தது. ஆனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவருடன் கருத்து மாறுபட்டு இவரை வெறுத்தொதுக்கியிருந்தனர். இதன் காரணமாக ஒரு சமயம் கொடி ஏறாமலிருந்தது. பின்னர் அசரீரி சொல்லியபடி உமாபதி சிவத்தை அழைத்து வந்து கொடி ஏற்றுமாறு வேண்டினர். ஆசிரியர் அக்கொடி தானே ஏறும்படி ஐந்து திருப்பாடல்களைப் பாடியருளினார். முதற் பாடல் கட்டளைக் கலித்துறை; ஏனைய நான்கும் வெண்பாக்கள். இந்நூலில் சித்தாந்தத்தின் நுண்ணிய பொருளும், திருவைந்தெழுத்தின் மறை பொருளும் விளக்கப் பெற்றுள்ளன.
(12) நெஞ்சு விடுதூது: இந்நூலில் ஆசிரியர் தம்மைத் தலைவியாகவும், தம் குருநாதர் மறைஞானசம்பந்தரைத் தலைவனாகவும் வைத்துப் பாடியுள்ளார். ஆசிரியர் தம் குருநாதரைக் காமுற்று வருந்தி அவர்பால் சென்று அவரது கொன்றை மாலையை வாங்கி வருமாறு தம் நெஞ்சைத் தூதாக விட்டது போல் செய்யப்பெற்ற தூதுப் பாடல்கள் ஆகும். இதில் தத்துவங்கள், உபதேசங்கள், புறச்சமய மறுப்புகள் முதலியன அமைந்துள்ளன. சிறப்பாகத் தசாங்கங்கள் ( தசம் + அங்கம், தசம் என்பது பத்து என்னும் பொருள் கொண்டது, அங்கம் என்பது உறுப்பு. எனவே தசாங்கம் என்பது பத்து உறுப்புக்கள் எனப் பொருள்படும். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசுக்கு உரிய உறுப்புக்களாகும்) பேசப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 129 பாடல்களைக் கொண்ட கலி வெண்பாவால் ஆனது இந்நூல்.
(13) உண்மை நெறி விளக்கம்: இதன் ஆசிரியர் உமாபதி சிவம் தம் ஞானாசிரியரிடம் உபதேசம் பெற்ற பின்னர் அதைச் சிந்தித்துத் தெளிந்து நிஷ்டை கூடும் செயலில் உள்ள பத்து நிலைகளாகிய தசகாரியங்களை மிகச் சுருக்கமாகக் கூறுவது இந்நூல். இது ஆறு திருவிருத்தங்களால் ஆனது. இதனைத் தத்துவநாதர் என்ற வேறோர் ஆசிரியர் இயற்றியதாக வெண்பா ஒன்று உண்டு. எனினும், உமாபதி சிவம் செய்ததாகவே பெரும்பாலோர் கொள்வர். இதனைத் துகளறு போதத்தின் சுருக்கமாகக் கொள்வதும் உண்டு (முத்தி பெறுவதற்கு உரிய நெறி என சைவம் காட்டும் நெறி தசகாரியம். சில நூல்கள் தசகாரியங்களை 30 நிலைகளாகக் காட்டுகின்றன. இவ்வாறு சிவபெருமானின் 30 நிலைகளைக் காட்டும் முதல் நூல் துகளறுபோதம் ஆகும்)
14. சங்கற்ப நிராகரணம்: இது பதினான்கு நூல்களுள் இறுதி நூலாகும். இது சிவஞான சித்தியாரின் பரபக்கம் போன்றது. சங்கற்பம் என்றால் கொள்கை என்றும், நிராகரணம் என்றால் மறுத்துரைத்தல் என்றும் பொருள்படும். சைவ சித்தாந்தக் கருத்துக்களோடு பிற சமயக் கருத்துரைக்களை ஒப்பிட்டு மறுத்துரைக்கும் நூல்.
0 comments:
Post a Comment