ஆன்ம அவத்தைகள் - பாகம் 1
இந்த ஆன்மா உலக சம்பத்துகளோடு தொடர்புகொள்ளாமல் தனித்திருக்கும் கேவல நிலையில் (prelife State) தன்னை அறியும் அறிவற்றதாயும், இறைவனை அறியும் அறிவற்றதாயும் இருக்கும் என்பதை அறிந்தோம். அவ்வாறு கருவிகளற்று சூன்யமாய் இருக்கின்ற ஆன்மா அறிதல் என்கிற பக்குவநிலைக்கு வரவேண்டி உலகம் என்கிற தத்துவங்களை கருவியாகக் கொடுக்கிறார் இறைவன். ஆன்மா, கடவுள், உலகம் என்கிற மூன்று முக்கிய விஷயங்களில் ஆன்மாவும் உலகமும் ஒன்றுடன் ஒன்று சம்பவிக்கின்ற நிலையை அடைகிறது. இந்த நிலையில் ஆன்மாவிற்கு தான் யார் என்று விசாரிக்கின்ற தன்னுணர்வும் இறைவனைப் பற்றிய விழிப்புணர்வும் வருகின்ற இரண்டாம் நிலையாக சகலநிலை கிடைக்கின்றது.
சைவசித்தாந்தம் விவரிக்கின்ற சகலநிலை (living state) இன்றைய அறிவியலுக்கு மிகப்பெரிய ஆச்சரியங்களைக் கொடுக்கின்றது, அதாவது இறைவன் ஆன்மா என்கிற உயிர்ப்பொருளுக்கான உயிரியல் உடம்பை உயிரற்ற உலகத்தில் இருந்து வழங்குகிறார். ஒரு உயிருக்கான உடலானது உயிரற்றப் பொருளில் இருந்து உருவாக்கப்பட்டு ஆன்மாவிற்குத் தரப்பட்டது எனும் சித்தாந்த சூத்திரம் உண்மையா? இது விஞ்ஞானத்திற்குப் பொருந்துமா? இது அறிவியல் நடைமுறையில் சாத்தியமா என்று பலர் நினைக்கின்றனர். உயிரியல் துறை இதை மிக தீர்க்கமாகச் சொல்கிறது இன்றைய உயிர்ப் பொருள்கள் யாவும் உயிரற்றப் பொருள்களில் இருந்தே உண்டாயிருக்க வேண்டும் என்று, அதற்கு ஆதாரமாக அமைந்ததுதான் மில்லர் ஆய்வு.
ஸ்டான்லி.எல்.மில்லர் மற்றும் ஹேரோல்டு.சி எனும் இரண்டு ஆய்வியல் அறிஞர்கள் ஒரு புதிய ஆராய்ச்சியின் முடிவில் உயிரி பொருள்கள் எனப்படுபவவை எல்லாம் உயிரற்றப் பொருள்களில் இருந்தே உண்டானது என்றனர். அவர்களின் இந்த ஆய்வு உயிரியியல் துறையில் ஒரு பெரிய வெளிச்சம். இவர்களின் ஆரம்ப கால நோக்கம் என்பது இந்த உலகில் உயிர்கள் எப்படித் தோன்றியது என்பதை அறிந்து கொள்ளும் எண்ணமாக இருந்தது. அதற்காக பிரத்தியேகக் கண்ணாடிக் குடுவை ஒன்றை வடிவமைத்து அதற்குள் பூமி உருவான காலத்தின் சூழலைக் கொண்டு வந்தார்கள். மீத்தேன், நீர், ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா மட்டுமே பூமி உண்டான சில மில்லியன் ஆண்டுகளுக்குப்பின் இங்கு இருந்தது. இந்தப் பூமிச் சூழலில் பெரிய மின்னலும் இடியும் தொடர்ந்து இருந்ததாக நம்பப்பட்டது. எனவே அந்தக் கண்ணாடிக் குடுவையில் செயற்கையாக மின்னலுக் கேற்ற எலெக்ட்ரோட் கொடுக்கப்பட்டது. இந்தச் செயல்முறையில் சில நேரங்களின் முடிவில் கண்ணாடிக் குடுவையில் வைத்திருந்த நீரில் உயிரிப் பொருள்களின் அடிப்படை உயிரி மூலங்களான அமினோ அமிலங்கள் உருவாகியிருந்ததைக் கண்டறிந்தனர்.
அமினோ அமிலங்கள் என்பது எல்லா உயிரினங்களின் அடிப்படை மூலாதாரம் ஆகும். மீத்தேன், ஹைட்ரஜன் எல்லாம் non Organic Matters ஆனால் அமினோ அமிலங்கள் Organic Matters உங்கள் உடம்பு முழுதும் செல்களால் ஆனது ஒவ்வொரு செல்லும் தனக்குள் டி.என்.ஏ எனும் மரபுப்பொருளைக் கொண்டுள்ளது. டி.என்.ஏ என்பது வேறொன்றும் இல்லை இந்த அமினோ அமிலங்கள்தான்.
இன்றைக்கு உங்கள் உடம்பின் பிறப்பை, அதன் வளர்ச்சியை, தனித்துவத்தை நோயை, நிறத்தை, மூதாதையாரின் இயல்புகளை என எல்லாவற்றையும் கடத்தும் மூலக்காரணியே டி.என்.ஏ தான் இந்த டி.என்.ஏ எனும் உயிரிமூலப் பொருளின் அடிப்படையான அமினோ அமிலங்கள் உயிரி பொருள்களற்ற மீத்தேன், நீர், ஹைட்ரஜன் என்பவையால் உருவானது என்பதை இன்றைக்கு அறிகிற போது மாயை எனும் உலகம் கொண்டு அதன் தத்துவங்களைக் கொண்டு ஆன்மாவிற்கான உயிரின்-உடம்பை இயற்கைப் படைத்தது எனும் சித்தாந்த சூத்திரம் மில்லர் ஆய்வுக்கும் முற்பட்டு ஒரு அறிவியல் பேருண்மையைச் சொல்லியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அறிவியிலின் பெருமழையில் அவ்வப்போது நனையலாம் இப்போது மீண்டும் ஆன்மிகப் பேராறுக்குள் வாருங்கள். கேவல நிலையின் ஆன்மா இப்போது சகல நிலைக்கு வந்துவிட்டது கண் கொண்டு, காணவும், நா கொண்டு சுவைக்கவும், செவி கொண்டு கேட்கவும் உடல் கொண்டு உணரவும், நாசி கொண்டு நுகரவும் மனம் கொண்டு அலையவும், அறிவு கொண்டு விழிப்புணர்வு பெறவும் எல்லா சகல கருவிகளையும் இப்போது ஆன்மா பெற்றுவிட்டது.
இதுவரை நாம் தன்னுணர்வு அற்ற அறிவற்ற ஆன்மநிலை (கேவல நிலை), அறிய அறியும் ஆன்ம நிலை (சகல நிலை), சுத்த அறிவு ஆன்ம நிலை (சுத்தநிலை) என்கிற ஆன்மாவினுடைய மூன்று காரண நிலைகளை முடிந்தவரை உள்வாங்கிக் கொண்டோம். இப்போது காரிய நிலையிலான ஆன்மாவின் அனுபவ நிலைகளை (அவத்தைகள்) தொடர்வோம் சித்தாந்தம் காரிய அனுபவநிலையை ஐந்து வகையாக நமக்குச் சொல்லியிருக்கிறது. அவை ஜாக்கிரதம் (நனவு) சொப்பனம் (கனவு) சுழுத்தி (உறக்கம்), துரியம் (பேருறக்கம்), துரியாதீதம் (உயிர்ப்படங்கல்).
இந்த ஐந்தும் மூன்று காரணநிலைகளோடு சேர்ந்து 3×5=15 என பதினைந்தாக விரிகிறது என்று முன்னமே பார்த்தோம். ஆயினும் இந்த ஐந்து காரிய நிலைகளை முதலில் சகல காரணநிலையில் இருந்து அணுகினால் எளிமையாகப் உள்வாங்கலாம்.
இந்த பூமியில் மனிததேகத்தை எடுத்த ஆன்மா இந்த தேகத்தில் எவ்வாறெல்லாம் செயல்படுகிறது அல்லது எந்தெந்தத் தன்மையில் இலங்குகிறது என்பதை நாம் விசாரனை செய்யும்போது நமக்கு ஐந்து நிலைகள் கிடைக்கின்றது. ஒன்று இதோ விழிப்போடு நீங்கள் படித்துக்கொண்டிருக்கிற இந்த நிலை மிக விழிப்போடு சுற்றி இருக்கிற உலகத்தின் கால சூழலோடு பொருந்தி உட்கிரகித்து உங்கள் கண், காது, மூக்கு, வாய், அவைகள் மூலமாக சத்தத்தைக் கேட்கும், தொடுவதை உணர்ந்தும், காட்சியை கண்டும், சுவையை ருசித்தும், மணத்தை நுகர்ந்தும் கைகளைக் கொண்டு அசைந்தும், கால்களைக் கொண்டு நடந்தும், தச வாயுக்கள் என்று சொல்லப்படுகிற பத்து வாயுக்களை இந்த உடம்பில் செயல் நிலையில் வைத்தும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்கிற அந்தகரணங்களை செயல்நிலையில் வைத்தும், இந்த ஆன்மா என்கிற உயிர் மிக வினையோடு இருக்கிற நிலையே ஜாக்கிரதம் என்கிற முதல் காரிய நிலை. இதை தமிழில் நனவு நிலை (Active State) என்கிறோம்.
ஒருவன் பாடுவதும், சைக்கிள் ஓட்டுவதும், திரைப்படம் பார்ப்பதும், படிப்பதும், கிரிக்கெட் விளையாடுவதும், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கால்களை ஆட்டிக் கொண்டு எதிரே வருகின்ற போகின்றவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நிலை அனுபவங்களையே நனவு நிலை என்கிறோம்.
நீங்கள் இவ்வாறு விழிப்புணர்வோடு இருக்கின்றபோது உங்கள் ஆன்மாவானது புருவ மத்தியில் நின்று தொழிற்படும். ஆன்மாவானது உடம்பில் எங்கே இருக்கிறது என்றால் காலம் காலமாக பல அருளாளர்கள் புருவ மத்தி என்கிற நெற்றிப் பொட்டையே குறிப்பார்கள். ஆனால் அது நின்று தொழிற்படும் இடம் புருவ மத்தியாகவே இருக்கும் என்பதான புரிதலை மாற்றிக் கொள்ளுங்கள். புருவ மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆன்மா தொழிற்படும் இடம் புருவமத்தியாகவே இருப்பதில்லை. முதல் நிலையாகிய நனவு நிலையில் மட்டுமே ஆன்மா நெற்றிப் பொட்டில் நின்று தொழில்படுகிறது.
இரண்டாவது காரியநிலை சொப்பனம் – கனவு எனம் நிலை (Dreaming State). நான் மேற்கொண்டு விவரிக்கும் முன்னரே நீங்கள் பிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம், விழிப்பு நிலையில் இருந்து நாம் தளர்ந்து பகலோ, இரவோ தூங்கும் போது கனவுக்குள் போகின்றோம். இந்த நிலையில் ஆன்மாவானது இரண்டாம் காரியநிலையாகிய கனவில் செயல்படுகிறது.
இங்கே கன்மேந்திரியங்களும் (Organs of actions) ஞானேந்திரியங்களும் (Perceptive organs) செயல்படாது ஆனால் அவைகள் செயல்பட்டால் என்ன பயன் அடையுமோ அதனை (தன்மாத்திரைகளை) ஆன்மா உணரும். உதாரணம் கனவில் தேன் குடிக்கும் போது உண்மையில் நம் நாக்கு அங்கு காரியப்படவில்லை உண்மையான தேனை அது சுவைப்பார்க்கவும் இல்லை ஆனால் தேனின் அப்பட்டமான அந்த சுவையை நாம் கனவில் சுவைக்கிறோம் உண்மை தானே? மலைகளையும், அலைகளையும், காடுகளையும் வீடுகளையும் பலப்பலவாய் நாம் கனவில் காண்கிறோம் ஆனால் காணுதலுக்குரிய கண்கள் கனவுநிலையில் திறக்காமல் மூடித்தானே கிடக்கிறது ஆக கன்மேந்திரியங்களும், ஞானேந்திரியங்களும் அடங்கி விட்டபோதிலும் அல்லது ஆன்மா விட்டுவிட்ட போதிலும் அவைகளின் பயனான உணர்வை கனவில் ஆன்மா அடைகிறது. இந்நிலையில் தன்மாத்திரைகளும், தசவாயுக்களும், அந்தக்கரணங்களும், ஆன்மாவும் மட்டுமே செயல் பாட்டில் இருக்கும் இந்த கனவு நிலையில் ஆன்மா புருவமத்தியை விட்டு கீழே இறங்கி கழுத்துப்பகுதியான கண்டத்தில் நின்று செயல்படும். ஆன்மாவானது கனவு நிலையில் கண்டப் பகுதியில் வந்து நின்று உணர்வினை அனுபவிக்கின்றது.
மூன்றாவது காரிய நிலை- சுழுத்தி – உறக்கம் எனும் நிலை (Sleeping State). உறக்கத்தில்தான் கனவுவரும் என்பது உண்மைதான் ஆனால் கனவு நிலையும் உறக்க நிலையும் ஒன்றல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கனவுகளோடு இருப்பது முழுமையான உறக்கம் இல்லை. ஒரு நாள் இரவின் உறக்கத்தில் 25% நேரம் கனவிலேயே கழிகிறது மீதமிருக்கும் நேரம் மட்டுமே எந்தக் கனவுகளும் இன்றி அமைதியான உறக்க நிலைக்குச் செல்கின்றோம். கனவுகளோடான உறக்கத்தை Rapid eye movement (REM) என்கிறோம் இப்பெயருக்குக் காரணம் நாம் கனவு காண்கிறபோது நம் கண்ணுருண்டை இமைகளுக்குள்ளே அசைந்து கொண்டே இருக்கும். கனவுகளற்ற உறக்கத்திற்குப் போகும் போது கண்ணசைவு நின்றுபோகும்.
இவ்வாறு கனவு நிலையில்லாத அமைதியான உறக்க நிலையே மூன்றாவது காரிய அனுபவ நிலையாகிய உறக்க நிலை. ஆனால் இது ஆழ்ந்த உறக்கமன்று சின்ன சத்தம் கேட்டாலும், யாராவது மெல்லமாக தொட்டாலும் கூட சடாரென்று விழிப்புக்கு வந்து விடுமளவான மெல்லிய உறக்க நிலை இந்த நிலையில் ஞானேந்திரியங்களும், கன் மேந்திரியங்களும செயல்படாது, அந்தக் கரணங்களில் சித்தம் தவிற வேறெதும் செயல்படாது (சித்தம் மட்டும் செய்லபடுவதால்தான் சின்ன அசைவிற்கே விழிப்பு கொள்கிறோம்) தச வாயுக்களில் மூச்சுக்காற்றான பிராணன் மட்டுமே செயல்படும் இந்த இரண்டோடு புருடன் எனும் ஆன்மா இணைந்து இயங்கும். நன்றாக கவனியுங்கள் அந்தக்கரணத்தின் ஒன்றான மனம் கூட இந்நிலையில் இல்லாமல் போவதால்தான் கனவுகளற்ற உறக்கநிலை வருகிறது. எதுவுமற்ற அமைதியான இந்த உறக்கநிலையில் ஆன்மாவானது கழுத்திலிருந்து இறங்கி இருதய ஸ்தானத்தில் நின்று தொழிற்படுகிறது. கனவுகளற்ற உறக்கத்தில் நெஞ்சத்தில் ஆன்மா அனுபவத்தைப் பெறுகிறது.
நான்காவது காரிய நிலை – துரியம் -பேருறக்கம் (Deep Sleep state). முன்னர் சொல்லப்பட்ட உறக்க நிலையில் ஒன்றை அழுத்திக் குறிப்பிட்டது நினைவிருக்கும் என நம்புகிறேன். ஆம், அந்த மெல்லிய உறக்கம் சின்ன இடையூறுகளால் சடாரென்று கலைந்து விழிப்பு கொள்ளும் ஆனால் சத்தங்களும், தொடுதலும்கூட எழுப்பமுடியாத சூழ்நிலை உறக்கமே துரியம் எனப்படுகிறது. நீங்கள் உங்கள் வீடுகளில் உங்கள் சுற்றத்தாரிடம் இந்த அனுபவத்தைக் கண்டிருக்க நிச்சயம் வாய்ப்புண்டு. பூனையோ எலியோ ஒரு பாத்திரத்தை தட்டிவிட்டால் அதன் சத்தத்தில் டக்கென்று எழுந்து கொள்ளும் அப்பாவோ, அம்மாவோ, மனைவியோ, கணவனோ, சகோதரர்களோ சில சமயம் அந்தப் பாத்திர உருட்டலுக்கு நீங்கள் எழுந்து பார்க்கும்போது அவர்கள் சின்ன சலனம்கூட இல்லாமல் உறங்குவதைக் கண்டிருப்பீர்கள். இதற்குக் காரணம் உங்கள் ஆன்மா கனவு அல்லது உறக்க நிலையில் இருந்ததால் உடனே விழித்துக் கொண்டீர்கள் ஆனால் அவர்கள் பேருறக்க நிலைக்கு சென்று விட்டதால் அந்த சத்தம் அவர்கள் ஆன்மாவைச் சென்றடையவில்லை. ஆன்மா கன்மேந்திரிய, ஞானேந்திரியர்களை விட்டு ரொம்ப தூரம் போய்விட்டது. அறிந்து எழுந்து கொள்ளும் சித்தம் கூட இந்நிலையில் இருக்காது வெறும் மூச்சுக்காற்றான பிராணனும் புருடன் எனும் உயிரும் ஆக இரண்டு மட்டுமே செயல்படும்.
அதனால்தான் ஆழ்ந்த உறக்கத்திற்கு போனவர்கள் ஒரு குரலுக்கோ, ஒரு தட்டலுக்கோ எழுந்து கொள்வதில்லை தொடர்ச்சியாக அவர்களை சொல்லி அழைத்தாலும் எழுந்துகொள்வதில்லை. அவர்களை உலுக்கி எடுக்தால்தான் விழித்துக் கொள்வார்கள். இத்தகைய பேருறக்கம் எனும் நிலையில் ஆன்மா இருதய ஸ்தானத்தில் இருந்து இறங்கி தொப்புள் எனும் வயிற்றுப் பகுதிக்கு வந்து தொழிற்படுகிறது.
ஐந்தாவது காரிய நிலை – துரியாதீதம் – உயிர்ப்படங்கல் – இந்த நிலையிலான ஆன்மாவின் அனுபவம் கிட்டத்தட்ட மரணத்திற்கு நிகராகப் பேசப்படுகிறது ஆனால் மரணமில்லை. காரணம் மரணம் என்பது உடலைவிட்டு ஆன்மா வெளியேறியறும் தன்மை. இங்கே ஆன்மா வெயியேறுவதில்லை ஆனால் நான்காம் நிலையில் ஆன்மாவுடன் இணைந்து இருந்த பிராணன் எனும் மூச்சும் செயல்படாது போகும் நிலையாக இந்த துரியாதீதம் இருக்கின்றது.
உதாரணமாக ஒருவர் மின்சாரத்தால் தாக்குண்டு விழும்போது மூச்சும் இழந்து விடுகிறார் ஆனால் முதலுதவி மூலம் மீண்டும் மூச்சைப் பெற்று இயல்பு நிலைக்கு வருகிறார். இவ்வாறு மூர்ச்சையற்று இருக்கின்ற நிலையே துரியாதீதம்.
ஜீவ சமாதி என்று சித்தர் மரபில் இம்முறையிலான துரியாதீத நிலையே சாத்தியப்படுத்தப் படுகிறது. மூச்சு நின்று போனாலும் உயிர் உள்ளேயே அடங்கி இருக்கும் இந்த நிலையை நாம் யாரும் பெரும்பாலும் அடைவதில்லை ஆயினும் உறக்கத்தின் போது சில விநாடி இந்த நிலையை நாமும் அனுபவித்து மீள்கிறோம் என்று நம்பப்படுகிறது. இவ்வாறான மூர்ச்சையற்ற துரியாதீத நிலையில் ஆன்மா தொப்புளில் இருந்து இறங்கி மூலாதாரத்திற்கு வந்து நிற்கிறது.
ஒவ்வொரு முறை நாம் தூங்கும்போது விழிப்பிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக கனவு நிலைக்குப் போய், பின் கனவுகளற்ற உறக்க நிலைக்குப் போய், பின் எழுப்பினாலும் விரைவில் எழுந்துகொள்ள முடியாத ஆழ்ந்த பேறுறக்க நிலைக்குபோய் பின் ஒரு சிலநொடி உயிர்ப்படங்கல் நிலையைத் தொட்டு மீண்டும் படிப்படியாய் மேலேறி நம் ஆன்மா வருவதால்தான்
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” என்று
திருவள்ளுவர் எழுதினார். ஒவ்வொரு முறையும் இந்த நிலைகளின் பயணத்தின் போது நமது ஆன்மா நெற்றிப்பொட்டில் இருந்து இறங்கி கண்டம், இருதயம், தொப்புள், மூலாதாரம் என்று கீழ் முகமாக பயணப்பட்டு செல்கிறது.
இதனை சித்தாந்தம் கீழாலவத்தை என்று சொல்கிறது. மேற்சொன்ன காரிய அவத்தைகள் ஐந்தும் நிகழும் தானங்கள் உடலில் மேலிருந்து கிழ்நோக்கி அமைவதாலும் ஆன்மாவுடன் செயற்படும் கருவிகளின் நிலை படிப்படியாக குறைந்து வருவதாலும் இதனை கீழாலவத்தை என்கிறோம்.
மூலாதாரத்தைத் தொட்டு மீண்டும் மேல் நோக்கி மீளும் ஆன்மா அங்கங்கு விட்ட கருவிகளை கூட்டிக் கொண்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வரும். செயற்கையான முறையில் ஏதேனும் காரணங்களால் ஆன்மா பேருறக்கத்தில் இருந்து மேலேற முடியாமல் தடுமாறி அங்கேயே நின்று விடுகிற நிலையைத்தான் இன்றைக்கு அறிவியலில் கோமா நிலை என்கிறோம்.
நாம் இந்த ஐந்து காரிய அனுபவ நிலைகளில் ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும் உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் ஆகிய மூன்று நிலைகளில் ஆன்மா எந்த சிந்தனையும், அறிவும், செயலும் அற்று சூன்யமாக இருக்கின்றது அதாவது சகலநிலைக்கு வருவதற்கு முன்னால் கேவல நிலையில் ஆன்மா எப்படி இருந்ததோ அப்படி உடம்பைப் பெற்றுக் கொண்டு ஆன்மா வருவதற்கு முன் எப்படி இருக்கும் / எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புவோர் உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பங்கல் நிலையில் ஆன்மா எப்படி இருக்கிறது என்பதை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
கனவுநிலைக்கும், நனவு நிலைக்கும் திரும்பும்போதுதான் ஆன்மா தன்னையே உணர்கிறது, தன்னைச் சுற்றியும் உணர்கிறது காரணம் இந்த நிலையில்தான் ஆன்மா அறிய அறியும் தத்துவத்திற்கேற்ப அறிந்து கொள்ளத் தேவையான கன்மேந்திரிய ஞானேந்திரிய தன்மாத்திரை கருவிகளைப் பெறுகின்றது.
நாம் இப்போது ஒரு பெரிய ஆச்சரியத்தை அறிந்திருக்கிறோம். இன்று ஒரு உடல் எப்படியெல்லாம் தொழிற்படும் என்று கேட்டால் சொல்லிவிடலாம் ஆனால் உயிர் எப்படி செயல்படுகிறது என்றால் சித்தாந்தம் சொன்னதைப் போல இந்த ஐந்து நிலைகளான ஆன்மாவின் அனுபவ பகுதிகளை வேறெங்கேயும் படித்தறிய முடியாது. அதனாலேயே வள்ளலார் தமிழே சுத்த சிவானுபூதியை தரவல்லது என்றார் ஆன்மாவைப் பற்றி இந்தப் படிப்பினை நம்மிடம் மட்டுமே இருக்கின்ற பொக்கிஷம்.
இதுவரை ஆன்மா காரணநிலைகளில் ஒன்றான சகல நிலையில் அனுபவிக்கின்ற 5 காரிய நிலைகளை மேலோட்டமாகப் பார்த்தோம் இனி ஒவ்வொன்றையும் இன்னும் ஆழப்படுத்துவோம். இன்னும் ஆழமா? இதுவே மேலோட்டமா? என்று நீங்கள் கண்ணை விரிப்பது எனக்குத் தெரிகிறது என்ன செய்ய ஆன்மா ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே!கட்டுரையாளர்: தாமல் கோ.சரவணன் M.Sc., M.Ed., எழுத்தாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்
உயிரிதொழில் நுட்பவியல் ( master in Biotechnology) ல் முதுநிலையும் பெற்றவர்.
தற்போது ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் ( Director of Syllabus committee board ) அமெரிக்காவின் Florida International University –யின் வள்ளலார் ஆய்விருக்கைக் குழு உறுப்பினராகவும் ( board member of vallalar chair) காஞ்சிபுரம் ஊர்க்காவல் படையின் மண்டலத் துணைத் தளபதியாகவும் (Deputy Area Commander of TamilNadu home guards) பிஏவி பன்னாட்டுப்பள்ளியில் துணை முதல்வராகவும் (vice principal) பொறுப்பு வகிக்கின்றார்.எழுதிய நூல்கள்
1.வள்ளலார் வளர்த்த தமிழ்
2.தமிழ் வளர்த்த சான்றோர்கள்
3.காப்பியங்கள் அணிந்த காலணிகள்
4.கம்பன் கவியில் காத்திருப்பு

ஐந்து காரிய நிலைகளையும், அவைகளை அழகாக புரிய வைத்த விதமும் நன்று. அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். நன்றி.
ReplyDeleteஆன்மா status மட்டுமல்லாமல் அறிவியல் விளக்கங்கள் ஐந்து காரிய நிலைகள் ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க (அட ஆமாம்) எனும் ஆச்சரியங்கள் உண்மைகளாக இறுதியில் எதிர்பார்ப்பே மிஞ்சுகிறது அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்... அருமை
ReplyDelete