Friday, December 20, 2024

ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை - “மெய்மையின் ஒளி” - செ.பவித்ரா

இந்தியாவின் ஆன்மிக வரலாற்றின் ஏடுகளில் தங்கத்தால் பதிக்கப்பட வேண்டியது இவரின் பெயர் என்றார் கவியோகி சுத்தானந்த பாரதியார். வேதாந்தத்தின் சிங்கமான விவேகானந்தருக்கு சைவ சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தியவர். இந்தியா மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளுக்கும் சைவ சித்தாந்தத்தை கொண்டு சென்றவர். இவர் இல்லையெனில் சைவசித்தாந்தம் ஒரு இறந்துபட்ட தத்துவமாக இந்திய அளவிலேயே நின்று போயிருக்கும் என்றார் மற்றொரு சைவ சித்தாந்த அறிஞரான கோபால் செட்டி. நமது நாடே “Here is our man” என்று கொண்டாடப்பட வேண்டியவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் சைவ எழுச்சியை உருவாக்கிய முன்னொடி அறிஞர்களில் ஒருவர். அவரே ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை.




பிறப்பு , குடும்பம் மற்றும் கல்வி


ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை திருச்சியில் நவம்பர் 24, 1864 அன்று மாணிக்கம்பிள்ளைக்கும் செல்லத்தம்மைக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். வேளாளர் குடும்பம். அவருடைய தந்தை மாவட்ட காவல்துறையில் எழுத்தராகப் பணிபுரிந்தார். நல்லுசாமிப் பிள்ளையின் முன்னோர்கள் காஞ்சி காமாட்சியம்மன் குடிவகையினர் (ஜனவி குலத்தினர்) என்று அழைக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள காஞ்சி காமாட்சி கோவிலின் மரபுவழி உரிமை அவர்களுக்கு உரியது.

தனது இளம் பருவத்தில் தமிழ் கணக்காயரிடம் பொது கல்வியும், ஓதுவார் ஒருவரிடம் திருமுறையும் பயின்றார். திருச்சி எஸ்.பி.ஜி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின்னர் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியில் புதுமுக வகுப்பை முடித்தார். இதற்கு மேல் படிப்பை தொடர்வதற்கு போதிய பணவசதி இல்லாததால் படிப்பை நிறுத்தி விட அவருடைய அப்பா கூறினார். ஆனால், நல்லுசாமியின் தமையன்களான சுப்புராயன் பிள்ளையும், மதுரநாயகம் பிள்ளையும் தம் தம்பியின் கல்வித்திறன் அறிந்து சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்த்தி 1884-ல் பி.ஏ பட்டம் பெற உதவி செய்தனர். 1886-ல் பி.எல் பட்டமும் பெற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவராக இருந்த நல்லுச்சாமிப்பிள்ளை முதலிடத்திலேயே வெற்றிபெற்று வந்தார். அவருடைய இரு ஆசிரியர்கள் டாக்டர் டி.டங்கன், திரு பில்டர்பெக் ஆகியோர் அவரைப்பற்றி மிக உயர்ந்த மேதமையை வெளிப்படுத்தும் மாணவன் என பதிவுசெய்திருக்கிறார்கள். கல்லூரியில் தத்துவம், தர்க்கவியல், வரலாறு ஆகியவற்றை முதன்மைப்பாடங்களாகக் கற்றார்.


வழக்குரைஞர் தொழில் மற்றும் அரசியல் வாழ்க்கை


ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை சட்டகல்வி முடித்ததும் 1887ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். மதுரையில் பிரபலமான வக்கில் சுப்ரமணிய ஐயர் என்பவரிடம் ஜுனியராக இணைந்து கொண்டார். ஒருமுறை சீனியர் வாராத பொழுது ராஸ் என்ற நீதிபதியின் கீழ் ஒரு வழக்கை குறுக்கு கேள்விகள், விவாதங்கள் மூலம் அருமையாக நடத்தி வெற்றி பெற்றார். மேலும் இவருடைய சட்ட ஞானத்தையும், வழக்கு எடுத்தியம்பும் விதத்தையும் பாராட்டாத நீதிபதிகளே இல்லை. இத்தகு காரணங்களால் ஐந்தரை ஆண்டுக்குள் திருப்பத்தூர் ஜில்லா முன்சீப்பாக நியமிக்கப்பட்டார். அவருடைய நேர்மையாலும் யாருக்கும் வளைந்து போகாத தன்மையாலும் சித்தூர், நந்தியால், எல்லமான்சலி, சேலம், திருப்பாதிரிபுலியூர், ராஜமகேந்திரவரம், குண்டூர் ஆகிய இடங்களுக்கு தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டார். சர்க்கார் வழக்குளாயினும் முறைமாற்றின்றி தீர்ப்புகள் வழங்கினார். வழக்குகளை உடனுக்குடன் தீர்ப்பதில் கவனம் கொண்டிருந்தார். சரியாக வழக்குக்கட்டை படித்துவராத வக்கீல்களையும், வீணாக காலத்தை ஒத்தி போடுவதையும், வழவழப்பாக வீணான காரியங்களை பேசுபவர்களையும் கண்டித்தார். இதனால் இவருக்கெதிராக சூழ்ச்சிகள் பெருகின. 1912-ல் அரசாங்க வேலையினை விட்டுவிட்டு மதுரையில் வக்கிலாக பணியாற்ற தொடங்கினார்.

1913-1920 களில் நல்லுசாமி மதுரையில் வக்கீல் தொழில் செய்த காலங்களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டிருக்கிறார். அப்போது மதுரை நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இச்சமயங்களில் சென்னை, பம்பாய், அலகாபாத் நகரங்களில் நடந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறார்.


இல்லற வாழ்க்கை




 

நல்லுச்சாமி பிள்ளை தம் இருபதாம் வயதில் இலட்சுமியம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமியம்மாள் படிக்கவில்லையென்றாலும் அவரது பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். இவர்களுக்கு இல்லற வாழ்வு பணத்தை மையமாக கொண்டு இருந்ததில்லை. எப்பொழுதும் அவர்களது இல்லத்தில் உடன்பிறந்தார், உறவினர்கள், நண்பர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு பொருள் உதவி செய்தும் படிப்புக்கு வேண்டுவன செய்தும் வந்தார். இவருக்கு ஒரு புதல்வர் ஜெ.எம்.ராமநாதன் பிற்காலத்தில் தகப்பானாருடன் இணைந்து சைவப்பணிகளில் ஈடுபட்டார். மூன்று மகள்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் தன் குழந்தைகள் தேவார திருவாசக பாடல்களை ஓதும் படி செய்வார். தான் கற்ற மெய்ஞான நூல்களின் நுண்ணிய பொருளை திறம்பட கூறுவதில் வல்லவர். ஓய்வற்ற உழைப்பாளி, வேலை முடித்து வீட்டிற்கு வருவதன் முன்னே நண்பர்கள் அவர் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள், அவர்களுடன் ஞானநூற் கேள்விகளில் ஈடுபடுவார். அவருக்குச் சொந்தமான நூலகம் இருந்தது. Encyclopaedia Brittanica வின் 25 தொகுதிகளும் இவரிடம் இருந்தன. The Person, The Windsor, Temple Bar, The Chamber's Journal போன்ற பத்திரிகைகளை தம் சொந்த நூலகத்துக்கு வாங்கியிருக்கிறார்.


சைவ சமயப் பணிகள்

நல்லுச்சாமிப்பிள்ளை சைவகுடும்பத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே சமய சொற்பொழிவுகள், ஆன்மிக உரைகளை விரும்பி கேட்பவராக இருந்தார். அப்பொழுதே சமயம் சார்ந்த துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். பின்பு சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது சைவசமய சண்டமாருதமென்று அழைக்கப்பட்ட சோமசுந்தர நாயக்கரிடம் ஈர்க்கப்பட்டு சீடராகி அவர் வகுப்புகளுக்கு சென்றார். மேலும் திருவனந்தபுரம் ஸ்ரீகண்ட சாஸ்திரிகளின் மூலம் தனது சாத்திர ஞானத்தை வளர்த்துக் கொண்டார். திரிசபுரத்து நாகநாத சுவாமி கோயிலில் சைவ சித்தாந்த சபை ஒன்றை நிறுவி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்தார். இத்தகு அடித்தளங்கள் பின்னாளில் பிள்ளைக்கு பலவாறு உதவி புரிந்தன.
    
  • 1895 -  முன்சீப்பாக பணியாற்றிய காலத்தில், தனது முப்பதாவது வயதில் மெய்கண்டார் அருளிய ”சிவஞான போதம்” என்ற சைவ சித்தாந்த நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இதற்கு மூலம் சிவஞான சுவாமிகளின் சிவஞான மாபாடியமாகும். அந்நூலைப் பற்றி  “ சிவஞான போதம் ஒரு தனித்துவமான நூல், இதில் நிகரற்ற தத்துவங்கள் சுருக்கமான வார்த்தைகளால் கையாளப்பட்டுள்ளது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் முறையிலே மொழிப்பெயர்ப்புக்கு சவால் விடும் தன்மை கொண்டது” என்று குறிப்பிடுகிறார். இதற்கு முன்னரே ஹொய்சிங்கடன் 1850ல் அமெரிக்கன் ரிவ்யூ என்ற பத்திரிகையில் சிவஞான போதத்தை சுருக்கமாக 18 பக்கங்களில் பிரசுரித்தார். பிள்ளையின் மொழிப்பெய்ர்ப்பே சிறப்பானது என்றும் தகுந்த வர்ணனைகள்/விவரணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று    “Revue de linguistic” என்ற இதழின் பேராசிரியர் பாரிசைச் சேர்ந்த ஜூலியன் வெனிசன் சிவஞான போதத்தின் 11-ம் சூத்திரத்தை இரண்டு மொழிப்பெயர்ப்புகளிலும் ஒப்பிட்டு பிள்ளையின் மொழிப்பெய்ர்ப்பே மூலத்திற்கு நெருக்கமாக உள்ளதை கூறியுள்ளார்.

  • 1897- உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயன் நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.

  • 1897-ல் அருண்நந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞான சித்தியார் எனும் நூலின் மொழிபெயர்ப்பு தொடங்கி 1902 ல் முடிக்கப்பட்டது. 1913-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

  • 1911ல் அவருடைய சைவ சித்தாந்த கட்டுரைகள் அனைத்தும் “Studies in saiva siddhanta” என்ற தலைப்பின் கீழ் அவருடைய மகனால் நூலாக தொகுக்கப்பட்டது.

  • நல்லுசாமி பிள்ளை அவரது சமகாலத்தில் பரவலாக அறியப்பட்டிருந்த Tamilian Antiquary, Madras Review, The New Reformer போன்ற பத்திரிகைகளில் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

  • பெரியபுராணத்தில் உள்ள நாயன்மார்களது சரித்திரத்தை Indian patriot என்ற தினசரியில் ”சிவபக்த விலாசம்” என்ற தலைப்பில் எழுதினார்.

  • பிள்ளையின் முயற்சிக்கு கிடைத்த சைவக்கனியாக சித்தாந்த தீபிகா என்ற இதழை குறிப்பிடலாம்.




சித்தாந்தா தீபிகா




1897ம் வருடம் ராணி விக்டோரியாவின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சித்தாந்த தீபிகை அல்லது உண்மை விளக்கம், “Siddhanta Deepika or light of the truth” என்ற பெயரில் தமிழ் மற்றும் ஆங்கில மாதாந்திர இதழ் தொடங்கப்பட்டது. இவ்விதழின் நோக்கமாக           “ரைன் நதிக்கரையில் அமர்ந்து கொண்டு ஜெர்மானிய பேராசிரியர்கள் நமது வேத, வேதாந்தத்தை மொழிப்பெயர்ப்பது நாணத்தை தருகிறது. எங்கோ தொலைவில் வாழும் பேராசிரியர் தமிழ் தத்துவத்தின் தலைசிறந்த நூலின் முதலில் மொழிப்பெயர்ப்பாளராகிறார். ஆக்ஸ்போர்டு பேராசிரியர் தமிழ் நூல்களை மொழிப்பெயர்க்கிறார். அவர்களின் பணிகளுக்கு தலை வணங்குகிறேன். அவர்கள் உன்னத உதாரணங்கள். நாம் அவர்களை பின்பற்றுவோம்.  தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் இலக்கியம், தத்துவம், சமயம் சார்ந்த அரிதான படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடடுவதே இவ்விதழின் நோக்கம்; அதிலும் தென்னிந்திய மொழிக்கும், திராவிட தத்துவங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும்” என குறிப்பிட்டுள்ளார். தனது நோக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறே அரிதான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு  இவ்விதழில் வெளியாகின. அவை,

  • ஜெ.எம் நல்லுச்சாமிபிள்ளையின் பெரும்பாலான சைவ நூல்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு இவ்விதழில் வெளியிடப்பட்டன. சிவஞானசித்தியார்,வினா வெண்பா,கொடிகவி, உண்மை நெறி விளக்கம், இருபா இருபது, சிவப்பிரகாசம் போன்ற சைவசாத்திர நூல்கள். திருமந்திரம் மற்றும் சைவநெறி விளக்கம் போன்றவை.

  • பிள்ளைக்கு வடமொழி, தமிழ் மொழி என்ற பேதமில்லை. சமஸ்கிருதத்திலும் புலமைப் பெற்றிருந்தார். சமஸ்கிருதத்தில் இருந்து சுவேதாஸ்வர உபநிடதத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.

  • கிறிஸ்துவ வேதத்தில் உள்ள “நன்மை தீமை பற்றி அறியும் மரம்”( Tree of knowledge of good and Evil) என்பது பற்றி ஒர் அரிய ஆராய்ச்சிக்கட்டுரையை வெளியிட்டார். இதனை படித்த பல பாதிரியார்கள் இதுவரை நாங்கள் சொற்பொருளை மட்டுமே அறிந்தோம் இப்பொழுது தான் நல்வினை, தீவினை பற்றி உள்ளுறை விளக்கத்தை அறிந்தோம் என்று பாராட்டினர்.

  • ஜி.யு.போபின் மணிமேகலை மற்றும் புறநானூறு மொழிபெயர்ப்பு

  • ஆர்.ஏ. சாஸ்திரியின் உபநிடதங்கள் மொழிபெயர்ப்பு

  • ரங்கசாமி ஐயரின் வாயுசம்ஹிதா மொழிபெயர்ப்பு

  • வி.வி‌. ரமணசாஸ்திரியின் வீர சைவம் பற்றிய ஆங்கில கட்டுரைகள்

  • மாகதேவ சாஸ்திரியின்  பிரம்மசூத்திரத்திற்கு நீலகண்ட சிவாச்சாரியார் எழுதிய உரையின் மொழிபெயர்ப்பு.

  • ஆதிசேஷநாயுடுவின் சமஸ்கிருத படைப்புகள்  போன்றவை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு இவ்விதழில் வெளியாகின.


இவ்விதழை தன் சொந்த செலவில் தொடங்கினார். பணப்பற்றாக்குறை ஏற்பட்ட பொழுதிலும் யாரிடமும் நொந்து கொள்ளவில்லை. தொடர்ந்து தீவிரமாக இப்பணியை செய்து வந்தார். அப்பொழுதெல்லாம் வி.வி.ரமணசாஸ்திரி இவருக்கு உதவி புரிந்து வந்தார். தமிழ்ப் பத்திரிகை ஒரு வருடம் வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிகை 14 வருடங்கள் தொடர்ந்து வந்தது. 1897-1911களில் ஆங்கிலப் பத்திரிகை 300 பிரதிகள் அச்சிடப்பட்டது. பெரும்பாலும் மேலை, கீழை நாடுகளும் இலவசமாக அனுப்பப்பட்டது. மேனாட்டு அறிஞர்களான மோனியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் கூட சைவ சித்தாந்தத்தை அறிந்திருக்கவில்லை. இந்திய தத்துவ நூல்கள் மொழிப்பெயர்க்ப்பட்ட பொழுது வேதாந்தம், விசிஷ்டாத்வைதம் போன்றவற்றிக்கு இருந்த இடம் சைவசித்தாந்திற்கு இல்லை. இவ்விதழ் தமிழகத்தில் உருவான சைவ சித்தாந்தத்தை உலகளவில் கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது. இவ்விதழின் மூலம் பல முக்கிய மேனாட்டு அறிஞர்களுடன் நல்லுச்சாமி பிள்ளை கடிதப் போக்குவரத்தில் இருந்தார்.




கடிதங்களில் சைவம்

சைவசமயம் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளை ஜெர்மனியில் மேக்ஸ் முல்லர், பாரிசில் ஜூலியன் வில்சன், லண்டனில் பிரூரசர் மற்றும் பார்னட், ஆக்ஸ்போர்டில் ஜி.யூ. போப் ஆகியோர் படித்துவிட்டு எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.

மேக்ஸ் முல்லர் ”சித்தாந்த தீபிகா மிக பயனுள்ள சேவையை செய்து வருகிறது என்று கூறியுள்ளார்”

ஆனந்த குமாரசாமி 'சிவானந்த நடனம்' (Dance of Siva) என்ற நூல் எழுதியபோது ஏற்பட்ட சந்தேகங்களுக்காக நல்லுசாமிப் பிள்ளைக்கு எழுதிய கடிதங்களைத் தொகுக்கும் முயற்சி, நல்லுசாமியின் கடைசிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுப் பாதியில் நின்றிருக்கிறது. அந்தக் கடிதங்களில், நடராஜ தத்துவம் சிவவழிபாடு, சிற்பங்கள் பற்றி நல்லுசாமியும் ஆனந்த குமாரசாமியும் விவாதித்த செய்திகள் உள்ளன என்று அ.கா. பெருமாள் தன் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். மேலும் சிவானந்த நடனம்' என்ற கட்டுரை முதலில் சித்தாந்த தீபிகாவில் 1912-ல் வெளியாகியது, பிறகு சிறிய மாற்றங்களுடன் 1917-ல் பதினான்கு கட்டுரைகள் அடங்கிய “ The Dance of Siva” என்ற நூல் தொகுப்பில் வெளியாகியது.

லண்டன் மாநகரத்தில் The Rajput என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ஜெஸ்ஸராஜ சிங்ஜீ சித்தாந்த தீபிகாவைப் பாராட்டி “ஒவ்வொரு ராஜபுதனியர் கையிலும் இவ்விதழ் இருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார். மேலும் லண்டனில் சிவன் கோவில் கட்ட வேண்டும் என்று கடிதம் எழுதினார், பிள்ளையும் அதில் ஆர்வம் செலுத்தி வந்தார். ஆனால் சிங்ஜீயின் மரணத்தால் நிறைவேறாமல் போனது.
அன்னி பெசன்ட் அம்மையாரின் சொற்பொழிவை கேட்டு அதை சிலாகித்து எழுதியுள்ளார். இந்திய பொதுகாரியதரிசி ஜெ.என் பராக்குவார் மற்றும் கவர்னர் ஆம்தில் பிரபு ஆகியோருடன் தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்.

ஜி.எம் கூபன் கிழக்காசிய தத்துவ அறிஞர் ‘சைவசித்தாந்தத்திற்கு பெரும் அநியாயம் செய்யப்பட்டுள்ளது. பிள்ளை அவர்களால் தற்போது நியாயம் செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார். பிள்ளையின் மீது கொண்ட அன்பு மற்றும் மரியாதையால் தான் மொழிப்பெயர்த்த திருவருட்பயன் நூலை பதிப்பில் கொண்டுவரவில்லை.
ஒருமுறை இலங்கையை சேர்ந்த புகழ் பெற்ற சைவசித்தாந்த அறிஞரான சிவபாத சுந்தரத்திற்கும் பிள்ளைக்கும் சுவாரசியமான கடிதப் போக்குவரத்து நிகழ்ந்தது. அது சித்தாந்த தீபிகாவில் இயேசு கிறிஸ்துவை ஜீவன் முக்தர் என்ற குறிப்போடு வந்த கட்டுரையைப்பற்றி. தன் கடிதத்தில் சிவபாத சுந்தரம் ஜீவன் முக்தர் என்பது என்ன? அதன் பண்புகள் யாது? எப்படி அப்பண்புகள் இயேசுவிற்கு பொருந்துகின்றன என்பதை சைவ சித்தாந்த மேற்கோள்களோடு விளக்கவும் என கேட்டிருந்தார். பிள்ளை அக்கேள்விக்கு சிவஞானபோதம் 8 மற்றும் 12 சூத்திரங்களையும், சிவஞான சித்தியார் பாடல்களையும் மேற்கோளாக காட்டி, “இயேசு பிரான் ஜீவன் முக்தரே! அவர் பின்பற்றியது யோகமார்க்கமே; கல்லறையிலிருந்து வெளிவந்ததே அதை நிரூபிக்கும்z” என விளக்கம் அளித்தார்.
இதைப்போலவே ஜி.யு போப்பிற்கும் பிள்ளைக்கும் இடையே பரிமாற்றங்கள் நடந்துள்ளன.

போப்பும் பிள்ளையும்

சித்தாந்த தீபிகாவின் மூலமே ஜி.யு போப்பிற்கும் பிள்ளைக்கும் நட்பு உருவானது. இருவரும் பார்த்துக் கொண்டதில்லை. இவர்களின் நட்பை பிசிராந்தையார் மற்றும் கோப்பெருச்சோழனின் நட்புக்கு இணையாக ஒப்பிடலாம் என்று பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கெ.எம்.பாலசுப்ரமணியம் குறிப்பிடுகிறார். போப்பின் திருவாசக ஆங்கில மொழிப்பெயர்ப்பை 100 பதிப்புகளை தன் சொந்த செலவில் வாங்கி தமிழறியாத தன் நண்பர்களுக்கு பரிசளித்தார். இவ்வளவு நெருக்கமாக இருந்த பொழுதிலும் சைவம் என வரும் பொழுது கடுமையான விவாதங்களும் நிகழ்ந்துள்ளன‌‌.போப் ஒரு கட்டுரையில் சமய குரவர்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை வரலாற்றை யோகம் என்ற அடிப்படையில் புரிந்து கொள்ளாமல் எழுதியதை அவருக்கு விளங்க வைத்தார். இது போல் நிறைய சைவசித்தாந்தம் தொடர்பான விவாதங்கள் கடிதங்களில் நிகழ்ந்துள்ளன. ஒருமுறை போப் தனது திருவாசக மொழிப்பெயர்ப்பு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், மேக்ஸ் முல்லர் போன்றவர்கள் சமஸ்கிருதத்திலிருந்து தன் மொழிப்பெயர்ப்பை செய்தமையால் தகுந்த அங்கீகாரத்தை பெற்றார் என்றும், தமிழ் எப்பொழுதும் இலக்கியத்தின் பீடையாக இருக்கவே கூடாது என்று மனம் வருந்தி எழுதியுள்ளார். 1907-ல் டிசம்பர் 25 பல்கலைக்கழகத்தில் தன்னுடைய இறுதி உரைக்கு பின் அந்த உரையையும் சிறு தனி கடிதத்தையும் பிள்ளைக்கு அனுப்பினார். அதில் “மெய்மையின் அனைத்து ஒத்திசைவுகளும் மிகச்சிறப்பாக திருவாசகத்திலும் சிவஞான போதத்திலும் உள்ளது. எனக்கு வயதாகிவிட்டது‌. இறைவன் உங்களையும் உங்கள் பணியையும் ஆசீர்வதிக்கட்டும்”. இதுவே போப்பின் இறுதி கடிதம்.

இன்னும் இரண்டு முக்கிய நிகழ்வுகளையும் நாம் நினைவுகூர வேண்டும். முதலாவது இயேசுசபையைச் சேர்ந்த பிள்ளையின் காலத்தை சேர்ந்த மதபோதகரை (Jesuit father) நல்லுச்சாமி பிள்ளை சந்திக்க நேர்ந்தது. மதபோதகரோ கிழக்குக்கு கிறிஸ்துவம் பரப்ப வந்தவர், பிள்ளையோ மேற்கிக்கு சைவசித்தாந்தை பரப்ப வந்தவர். பிள்ளை அவரிடம் “Sivam as love” என்ற தலைப்பில் பேசினார்‌. அவ்வுரையை கேட்ட மதபோதகர் மனமுருகி உங்கள் பணியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் என்று ஆசிர்வதித்துச் சென்றார். இரண்டாவது நிகழ்வு சுவாமி விவேகானந்தருடன் நிகழ்ந்தது.

சுவாமி விவேகானந்தரும் பிள்ளையும்

சிகாகோ சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தரை சென்னை மயிலாப்பூரில் சென்று நல்லுச்சாமி பிள்ளை சந்தித்தார். சைவசித்தாந்தம், முப்பொருள் உண்மை, திருஞானசம்பந்தரின் சைவப்பணிகள் மற்றும் சிவஞான போதம் இவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சிவஞான போதம் என்ற நூலை பற்றி அறிந்து கொண்ட விவேகானந்தர் ”முன்னரே இந்நூலை பற்றி தெரிந்திருந்தால் சிகாகோ மாநாட்டில் இதைப்பற்றி பேசியிருப்பேன்” என்று சிலாகித்தார்.

வேதாந்தத்தின் மாயைக்கும் சைவசித்தாந்தின் மாயைக்கும் பிள்ளையிடம் வேறுபாட்டை கேட்க, வேதாந்தத்தின் மாயை என்பது சடம், பொய்தோற்றம் , எதிர்மறை தன்மையில் பார்க்கப்படுவது. சித்தாந்தித்தின் மாயை என்பது நேர்மறை பொருள், வெறுமனே இல்லாதது ஆனாலும் அழிவில்லாதது. மாயைக்கோட்பாடு காரணமாக அத்வைத வேதாந்தத்தில் ஒரு உலகநிராகரிப்பும், சோர்வும் உள்ளது என்று சொல்லும் நல்லுசாமிப்பிள்ளை சைவசித்தாந்தத்தின் சிவசக்தி நடனக் கோட்பாடு அல்லது அலகிலா ஆடல் என்ற தரிசனம் பிரபஞ்ச இயக்கத்துக்கு மேலும் கவித்துவமும் பொருத்தமும் கூடிய விளக்கத்தை அளிக்கிறது என்கிறார். நம்மைச்சுற்றி நிகழ்பவை நம்முடைய மாயத்தோற்றங்களே என்பதை காட்டிலும் பிரபஞ்சசாரமான ஒன்றின் களியாடலே என்பது வாழ்க்கையை மேலும் முழுமையானதாக ஆக்குகிறது என்கிறார்.

பிரபஞ்ச தோற்றம், படைப்புகாரணம் போன்றவற்றை விவேகானந்தருடன் விவாதித்தார். முப்பொருள் உண்மையான பதி பசு பாசம் என்பது சைவ சித்தாந்தின் அடிப்படை, இவையன்றி வேறு உண்மைப் பொருள்களை பிரபஞ்ச தொகுதிகளாக கண்டுபிடிக்கவோ சேர்க்கவோ முடியுமா? என விவேகானந்தர் கேட்டார். அதற்கு இம்மூன்றிலே அனைத்தும் அடங்கிவிடுகிறது உங்களை போன்ற ஞானிகள் நான்காவது பொருளை கண்டறிந்து சேர்க்க வழி காட்டினால் பெரிதும் மகிழ்வோம் என்று பதில் அளித்தார்.

பேச்சில் சைவம்

ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை பல முக்கியமான இந்திய சமயமாநாடுகளில் பங்கெடுத்து சைவத்தின் தனித்தன்மையைப்பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். சங்கிலித் தொடர் போல நீதிமன்ற பாணியில் கருத்துகளை எடுத்துரைக்கும் விதத்தால் ஒரு தலைமுறையே இவர் பால் ஈர்க்கப்பட்டது. இவர் மேலைநாட்டுப்பேச்சு முறை மற்றும் மேலைத்தத்துவத்தை அறிந்தவர். 1908 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும் 1911ல் அலஹாபாத் பலசமயப்பேரவையில் ஆற்றிய உரையும் முக்கியமான சமய ஆவணங்கள் என்று சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் நடைபெற்ற சைவசமாஜ கருத்தரங்குகளில் தனது பேச்சு திறமையால் சைவமும் பிள்ளையும் வேறு வேறில்லை என்பதை நிரூபித்தார். பெரும் அறிஞர்கள் பங்கு கொண்டு மரியாதை செலுத்தப்படும் அரங்கில் பிள்ளைக்கு எப்பொழுதும் தனிமரியாதை செலுத்தப்பட்டது. சைவசமாஜத்தின் வளர்ச்சியில் பிள்ளைக்கு பெரும் பங்கு உண்டு.

1908- அலகாபாத் மாநாட்டில் “The saiva religion and saiva Advaita Siddhanta philosophy” என்ற தலைப்பில் உரை. 1909- சேலத்தில் நடைபெற்ற சைவசமாஜ மாநாட்டில் உரை. 1909- திருச்சியில் சைவ சித்தாந்த சபாவில் இரண்டு உரைகள் ஆற்றினார். ”Nature of the soul or Jiva” என்ற தலைப்பிலும், சிவஞான போதம் பற்றியும் உரையாற்றினார். 1911- திருசெங்கோட்டில் சைவசமாஜ நான்காம் ஆண்டு விழாவில் “கண்டொன்று சொல்லேல்” என்ற எளிய ஆத்திசூடி வரிகளை கொண்டு ஆழமான சித்தாந்த உரையை ஆற்றினார். 1911-அலகாபாத் மாநாட்டில் “Saivism in its relation to others systems” என்ற தலைப்பில் உரை.

சிவசாயுஜ்ஜியம்

நல்லுச்சாமிப்பிள்ளை 1920 வருடம் சைவ சித்தாந்த தொடர் சொற்பொழிவுகள் ஆற்றுவதற்காக இலங்கை சென்றார்‌. இலங்கை மக்கள் இவர் உரையினால் ஈர்க்கப்பட்டனர். மேலும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று சைவசித்தாந்தை பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கான நிதியுதவியும் திரட்டி தருவதாக கூறினார். பிள்ளையும் அதற்கு ஒப்புக்கொண்டு தமிழ்நாடு திரும்பினார். சில நாட்களில் முதுகில் பிளவை நோய் தாக்குண்டு ஆகஸ்ட் 11, 1920 ல் மதுரையில் திருநீற்றை பூசி, திருவாசகத்தை கேட்டுக் கொண்டு சிவ சிவ சிவ என்று மூன்று முறை கூறி சிவ சாயுஜ்ஜியத்தை அடைந்தார். பிள்ளையின் வாழ்க்கை குறிப்பை கெ.எம்.பாலசுப்ரமணியம் 'The Life of J.M.Nalluswami Pillai’ என்றபேரில் நூலாக்கியிருக்கிறார். சைவசித்தாந்த ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், இதழாளர், சைவசித்தாந்தம் என்ற மெய்ஞானத்தின் ஒளியை உலகெங்கும் பரப்பியவர். அமிழ்ந்து கிடந்த சைவத்தின் மறுமலர்ச்சியை உண்டாக்கிய முன்னோடிகளில் ஒருவர். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கவியோகி கூறியது போல் ‘’ Here is our man” என்று தமிழ் நல்லுலகம் பணிந்து கொண்டபடவேண்டியவர்...




உசாத்துணை

கட்டுரையாளர்: செ.பவித்ரா

1 comment:

  1. மிக அருமை. பயனுள்ள தகவல்கள். நன்று

    ReplyDelete