அருளினால்
உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின்
இருளுலா
நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்
பொருளுலாஞ்
சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன்
மருளுலா
மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன்
சிவஞானசித்தியார்
சைவ சித்தாந்த பெருநெறி நிச்சயிக்கும் பொருள்கள் மூன்றினுள் பதியாகிய இறைவன் நிறைவு பொருள், பரிபூரணத்துவத்துடன் பிரபஞ்சம் கடந்தும் கலந்தும் ஒளிவிடும் தேசன். பாசமாகிய ஆணவம் குறைவு பொருள், கீழாம் தன்மைபடுத்தும் குணமுடையது. பசுவாகிய உயிர் இவை இரண்டையும் சாரும் பொருள், அது ஒருபொருளின் சார்பு இன்றி தனித்து நில்லாது. இவ்வாறு இருக்க உயிர் குறைவாம் பாசத்தை சார்ந்து இருக்கும் நிலை கேவல அவத்தை எனவும், நிறைவாம் பதியை சார்ந்து இருக்கும் நிலை சுத்த அவத்தை எனவும், இரண்டிற்கும் இடைபட்ட நிலையை சகல அவத்தை எனவும் சைவ சித்தாந்தம் எடுத்துக்கூறும். உயிரின் இயல்பாவது சார்ந்ததன் வண்ணம் பெறுதல் தண்ணீர், ஸ்படிகம் போல உயிர் ஆணவ மலத்தை சார்ந்து இருப்பதால் அதன் வியாபக அறிவானது கீழ்படுத்தப்பட்டும், மறைக்கப்பட்டும் தன்நிலை அறியாது பொலிவிழந்து குன்றிகிடக்கிறது. இந்த இயலாமை என்பதே உயிர் உற்ற நோய். சிற்றின்பத்தை பேரின்பமாக எண்ணி பேதித்து இருப்பதுவும் துன்பத்தால் வருத்தப்படுவதுவும் இன்நோயின் தாக்கமே
நோய் முதல்
ஆணவமாம் மூலமலமே உயிர்படும் அவத்தைகளுக்கும், நுகரும் சுக துக்கங்ளுக்கும் முதல் காரணமாக இருப்பினும், துன்பம் நேர்கையில் வருந்தும் உணர்வும், இன்பம் நேர்கையில் சுகிக்கும் உணர்வும் ஏற்படுவது சகல நிலையில்தான் கேவல நிலையில் உயிர் அறியாமையில் ஆழ்ந்து இருப்பினும் "நாம் அறியாமையில் உள்ளோம், இது நமக்கு தீங்கு" என்னும் உணர்வு இலாது கருடனை இருட்டறையில் இட்டதற்கு ஒப்பாய் நிற்கும், "இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞானம் என்னும் பொருள் தரு கண் இழந்து உண்பொருள் நாடி புகலிழந்த குருடர்" என்பார் அப்பர். இவ்வாறு ஊனத்துடன் திகழும் உயிருக்கு நோய் நீக்கம் செய்யும் பொருட்டு இறைவன் மாயை எனனும் பொருளை காரியபடுத்தி உடல், கருவி, உலகம், அனுபவங்கள் ஆகிய நான்கையும் உண்டாக்கி உயிர்களை கேவல நிலையில் இருந்து சகல நிலைக்கு கொண்டு வருகின்றார், உலகங்களில் உயிரைப் போக்கு வரவு புரிந்து பிறப்பு இறப்பு என்னும் சுழியில் உயிரை ஏவ செய்கின்றார். இது நிற்க. கேவல நிலையின்று சகல நிலைக்கு வந்த உயிர்கள் உடம்பு பெற்று கருவிகளோடு கூடியதனால் ஆணவமலத்தின் படலம் சிறிதளவு விளகி உயிருக்கு அறிவு தேற்றம் மிகச்சிறிய அளவில் ஏற்படுகிறது, அறிவு விளங்கவே ஆன்மா பகுத்து அறியும் தன்மை உடையதாய், தனக்கு இன்பம் தரும் வஸ்துக்களையும், துன்பம் தரும் வஸ்துக்களையும் பாகுபாடுடன் காணத்தொடங்குகிறது, அதன் விளைவாக தனக்கு இன்பம் தரும் பொருளை விரும்பவும் துன்பம் தரும் பொருளை வெறுக்கவும் செய்கிறது இவ்விளைவின் விழைவாக இன்ப பொருளை சென்று அடைய முனைகிறது. துன்ப பொருளை விட்டு அகல முனைகிறது. இதுவே முறைமையில் உயிரின் ஞானம், இச்சை, கிரியை, விளக்கம் என சாத்திரம் பேசும். இதன் காரணமாகவே உயிர் வினை ஈட்ட தொடங்குகிறது, வினை பிறப்பு ஈட்ட வித்து இடுகிறது. எப்போது உயிர் தன்போதத்தோடும், தன்இச்சையோடும், தன்முனைப்போடும் ஒரு செயலை செய்ய துணிந்தால் அதுவே வினையாக பரிணமிக்கிறது.
"அவா
என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்- தவாப்பிறப்பீனுப் வித்து" என்று
வள்ளுவர் காட்டியது இச்சைவ சித்தாந்த உண்மையேயாம் உயிர் எப்போது பொருள்களின்
தன்மையை அறிந்து அவைகளின் மேல் இச்சித்து ஆசை படத்தொடங்குகிறதோ அதுவே வினைக்கும்
வினையின் பயனாம் பிறவிக்கும் அடித்தளம் இட்டு தருகிறது.
அற்றேல் தெளிந்து நோக்கின் பிறவி
என்னும் நோய்க்கு ஆணவ மலமே நோய் முதலாக திகழ்கிறது என்பதை அறியமுடிகிறது.
நோய் நிலை
உற்ற
நோயின் தாக்கம் எந்தளவோ அவ்வளவின் அடிப்படையில் தான் நோய் நீக்கும் மருந்தின்
அளவும் அமையும். நோய் உற்றவரின் உடல் பக்குவமும் கருத்தில் கொள்வர்
மருத்துவர், நோய் ஒன்றாக இருப்பினும் குழந்தைகளுக்கு வழங்கும் மருந்தை
முதியோருக்கு வழுங்குவது இல்லை, மருந்தை ஏற்றுக்கொள்ளும் உடல் திடம் உளவாதல் போல.
உயிர்களும் தொகையாகும் ஒருவொரு உயிருக்கும் ஆணவ மலத்தின் தாக்கத்தால் ஏற்ப்பட்ட
அறிவு மறைப்பு அதன் பக்குவத்திற்கு ஏற்றார் போல மாறும். சில
உயிர்கள் அதீத பக்குவத்தில் இருக்கும் அவைகள் பல பிறவிகள் பிறந்திறந்து துயர்
அறுந்தி அறிவு தேற்றம் பெற வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. முதல் உற்பவத்திலேயே
ஞானம் எய்தி வீடு அடைவர் அவர். எழுகடல் மணல் அளவை விட எண்ணில் பெருகிய பிறவிகள் எடுத்தும்
உய்யும் நெறி அறியா உயிர்கள் பல இருக்க காண்கிறோம்.
உயிர்கள்
யாவும் இவ்வாறு பக்குவர் என்றம் அபக்குவர் என்றும் பிரித்து காண இயல்கிறது. இதை சைவசித்தாந்தம்
மேலும் விரித்து "பசுவர்கம் உணரின் முன்றாம்" என்று வகுத்து
காட்டுகிறது.
அவை முறையே சகலர், பிரளயாஅகலர், விஞ்ஞானஅகலர்.
சகலர் என்று தொகுக்கப்பட்ட உயிர்கள் யாவும் பக்குவத்தில் குறைவுடையவராய், ஆணவ மலத்தின் வலு அதிகமாக பதிய பாத்திரமாக இருப்பவராய், ஆணவம், கன்மம், மாயை என மூன்று மலங்களும் பொருந்தியிருப்பவராய், 36 தத்துவம் கூடிய பிரகிருதி புவனத்தில் இருப்பன. இவ்வுயிர் தொகைகளின் மலத்தை மோசம் செய்யும் பொருட்டு இறைவன் தன்னுடைய அடையாளங்களை எல்லாம் விடுத்து நம்போன்ற மானுட சட்டைத் தாங்கி குருநாதரை ஆதாரமாக கொண்டு எழுந்தருளி தீட்சை செய்து மேல்நிலை அடைய சேய்வார்.
பிரளயாகலர் ஆவது ஆணவ மலமும், கன்ம மலமும் உடையவராய், 12தத்துவங்கள் கூடிய அசுத்த மாயா புவனத்தில் இருப்பவராய், சகலரோடு ஒப்பிடின் பக்குவத்தில் மேன்மை உடையவராய் திகழ்வர். இவ்வுயிர்கட்கு இறைவன் தன்நிலை மாற்றாது உருவ திருமேனி தாங்கி எழுந்தருளி முன்நின்று மலம் மோசிப்பார்.
இனி, விஞ்ஞானகலர் ஆவது அதீத பக்குவத்தில் உள்ள ஆன்மாக்கள், 5தத்துவம் கூடிய சுத்த மாயா புவனத்தில் வசிப்பவர்,
இவர்களுக்கு ஆணவ மலம் மாத்திரம் வெகு மெலிந்த படலமாக இருக்க இறைவன் இவ்வுயிர்களது
உயிர்க்கு உயிராய் இருந்து உள்நின்று உணர்த்தி மலம் காய்ந்து தானாக்கி மலரடிக்கீழ்
வைப்பர்.
இவ்வாறு பிணியாகிய
ஆணவமலத்தின் வலுவிற்கு ஏற்றார் போல் இறைவன் உள்நின்றும், முன்நின்றுமாக
மருந்தளித்தி நோய் நீக்குகின்றார். இதை சிவஞானசித்தியார் கூறும் "நிற்கும்முத லிருவர்க்கு நிராதார மாகிக் கரையில்அருட்
பரன்துவிதா சத்திநிபா தத்தால் கழிப்பன்மலம் சகலர்க்குக் கன்ம வொப்பில்
தரையில்ஆ சான்மூர்த்தி ஆதார மாகித் தரித்தொழிப்பன் மலம்".
மருந்து
"மருந்து வேண்டில் இவை" என்பார் திருஞானசம்பந்தர், ஆணவமலத்தின்
சார்பால் ஏற்பட்ட ஊனத்தை நீக்கும் மருந்தாக இறைவன் வகுத்து கொடுத்த நன்நெறியாம் சைவ
நற்சமயம் விளங்குகிறது, "சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆதல்" முன்னமே குறிப்பிட்டார் போல உயிரானது எதை சார்ந்து
இருக்கிறதோ அதன் வண்ணம் ஆகும். சம்பந்தம் எனில் நல்உறவு, சமய நெறியில்
வழுவாது நிற்கும் சைவன் சிவத்துடன் உறவு கொண்டமையால் ஊனசம்பந்தம் நீக்கி
ஞானசம்பந்தமாய் இருக்கும் இயல்பை உடையவனாய் மலமாசு அகன்று உள்ளதை உள்ளவாறு உணரும் பக்குவம்
உடையவனாய், பதி பசு பாச உண்மைகளை உணர்ந்து அதன் பயனாக ‘யான், எனது’ எனும் தளை நீங்கி சிவபோகம் புசிக்க உரியவனாய் அறியாமை
எனும் நோய் முதல் நீக்க பெற்றவனாயும் அதனால் பிறவி என்னும் நோய் நீங்கியும்
தூயவனாய் விளங்குவான்.
இவ்வியல்பு
சைவ நெறி அல்லால் மற்றைக்கு இல்லை. "ஏணி படி நெறி இட்டு கொடுத்து" என்பது அப்பர் தேவாரம். சைவ
சமயத்தில் ஒழுகும் உயிர் படிபடியாக ஏற்றமடையும் முறையே நான்கு படி சரியை, கிரியை,
யோகம், ஞானம்.
அரும்பானது
மலர்ந்து காய்த்து கனி ஆவது போல சரியை முதல் நான்கும். ஞானம்
என்னும் பழத்தைப் பருக சரியை அரும்பாக மொய்த்திருக்க வேண்டும் அது முதிர்ந்து
கிரியை மலர்ந்திருக்க வேண்டும் அது வளர்ந்து யோகம் காய்த்திருக்க வேண்டும் அது
கனிய ஞானம் பழுக்கும். இவ்வாறு முதிர ஒருவொரு படியிலும் பலகாலம் பயில்தல் அவசியம் "பைம்பொற்கழலே
தாழாது இறைஞ்சி பணிந்து பன்நாளும் தலை நின்மினே" என்று காரைக்கால் பேய். நீன்நாள் பிறந்து இறந்து நின்ற துயர் நீங்க இறைவன் நமக்கு
வினையை ஊட்டியும் பல்பிறவிகளில் உழலச்செய்தும் பக்குவப்படுத்தி, பண்பட்ட
பின் நன்நெறியாகிய சைவ சமயத்தின் ஏணிப்படியை தந்து உயிர்கட்கு எல்லாம் குறை
தீர்க்கும் நிறைவாக, தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருபவனாக, முக்கண்
உடை மா மருந்தாக திகழ்கிறான்
மருத்துவன்
வேதாகமங்களில்
விதித்த வழி அல்லாது நிற்றல் பாவம் என்றும் அதன் அறம்வழி நின்று அருள்வழி நில்லாமை
புண்ணியம் என்றும் முறையே புண்ணியம் மேல் நோக்குவிக்கும், பாவம் கீழ்
நோக்குவிக்கும் இறைவன் அவற்றிற்கு ஏற்ப இன்ப துன்பங்களைப் புசிப்பித்து வினை
கழித்து நரகொடு சுவர்க்கம் நிலம் புகாமல் பரகதி அருளுவர். இவ்வாறு துன்ப இன்பங்களை
கொடுப்பது என்பது சில வியாதிக்கு கூர்மையான கத்தியால் அறுவை சிகிச்சை செய்து
குணப்படுத்துவதும், சில வியாதிக்கு பாலில் தேனில் மருந்தை கலந்தும் பத்தியத்திலே
குணப்படுத்துவதும் போல ஆம். பயன் ஒன்றேயாம் அது ஊனமாம் நோய் நீங்கி சுகமடைதல்.
ஆன்மாக்களாகிய
உயிர்களுக்கு ஆணவத்தால் ஏற்பட்ட அறியாமை நீங்கவே சகல அவத்தை ஏற்படுத்தி கொடுத்து
அதன் கண்ணே மாயை கன்மங்களைக் கூட்டி ஆணவத்தின் வலு குறையும் வகையில்
வையித்யநாதனாகிய பெருமான் மருந்தாய் பிணி தீர்த்து அருளுகின்றார்.
"ஆவலுற்றிடும் சகலத்து ஆவதுவும் ஆங்கவரே
கேவலத்தின் மூழ்கிக் கிடப்பதுவும் - நாஅரற்றல்
இல்லாத சுத்தத்து இருப்பதுவும் இம்மூன்றும்
இல்லான் செயல் என்று
இரு" என்பது சிவபோகசாரம்.
பிறவிக்கு
வாராத உயிர்களை பிறவிக்கு உட்படுத்தி பிறவாமைக்கு
வழிவகுத்து கொடுப்பது தான் பிறவாயாக்கை பெரியோனாகிய பரம்பொருளின் தொழில் அதை அவன்
விளையாட்டாக நிகழ்த்துவான்.
இவ்வகையில், பவ ரோகத்திற்கு வையித்யநாதனாக திகழும் பெருமான் அவனே
மருந்தாகவும் இருந்து நமக்கு எல்லாம் இன்பம் தரும் பூரணமாக, துன்பம்
துடைத்து ஆள வல்லானுமாக திகழும் திறத்தையே "பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்" என்றார் மாணிக்கவாசகர் பிஞ்ஞகன் என்ற சொல் மயிற்பீலியை
உடையவன் என்ற பொருளில் நிற்பது, வையித்திய தொழில் செய்யும் மருத்தவர்கள் தன்னை
நாடி வரும் பிணியாளரின் காயப்பட்ட பகுதிக்கு மயிற்பீலியால் மருந்து தடவி
குணப்படுத்துவார். அது போன்று இறைவன் பிறவி என்னும் பிணி
தீர பிஞ்ஞகனாக இருந்து காத்து கொடுக்கின்றார்.
மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க!
கட்டுரையாளர்: அனய்.கிரீசன்,
தருமையாதீன திருமுறை பயிற்சி மைய ஆசிரியர்,
சென்னை.
0 comments:
Post a Comment