Tuesday, September 16, 2025

"36" (இருள்-வெளி-ஒளி) - தில்லை செந்தில்பிரபு

ஒரு ஞானப் பயணம்

குரு பௌர்ணமி நாளன்று, நண்பர் முத்துமாணிக்கம் சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்கள் குறித்து ஒரு தொடர் எழுதுமாறு வேண்டினார். இது வெறும் வேண்டுகோளாக இல்லை; எனக்கு அது இறையாணையாகவே தோன்றியது. உடனே மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.


சைவ சித்தாந்தத்தின் மையக் கரு இந்த 36 தத்துவங்கள். இவை பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் ஒரு முழுமையான வரைபடம்—Blueprint of Cosmos எனலாம். இந்திய ஞான மரபுகளில் சைவ சித்தாந்தம் தனித்துவம் வாய்ந்தது; கூர்மையான தர்க்கத்துடன் பக்தியின் பரவசத்தையும் இணைத்து, அறிவுக்கும் அனுபவத்திற்கும் இடையே சமநிலை வழங்குகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக யோகமும் தியானமும் எனக்குள் நிகழ்த்திய அற்புத அனுபவங்களின் மூலத்தையும் அடிப்படையையும் புரிந்துகொள்ளவும், மெய்ஞானத்தை நோக்கி வளரவும் சைவ சித்தாந்தம் பேருதவியாக இருந்தது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் முகமாகவும், நூல் முகமாகவும் இதைப் பயின்ற போதிலும், அதன் தித்திப்பு குறையவில்லை; ஒவ்வொரு பயிலுதலும் விடுதலையை ஆழப்படுத்துகிறது.

சைவ சித்தாந்தம் அள்ள அள்ளக் குறையாத ஞானக் கருவூலம். பொருள் வாழ்வையும் அருள் வாழ்வையும் செழிப்பாக்க விரும்பினால் நாமும் நம் இளைய தலைமுறையும் கட்டாயம் கற்க வேண்டிய கல்வி இதுவே.

பிரமிப்பூட்டும் காட்சியைக் கண்ட சிறுவன், அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத் துடிப்பது  போலவே எனது இந்த முயற்சியும் கூட.தென்திசை அமர்ந்த ஆலமர் செல்வன்  முதலாக, நந்தி எம்பெருமான் வழிவந்த அகச்சந்தான குரவர்கள், மெய்கண்டார் வழிவந்த புறச்சந்தான குரவர்கள் உள்ளிட்ட என் அகத்திலும் புறத்திலும் அமைந்த அரும்பெரும் ஞான ஆசிரியர்களின் பாதங்களை வணங்கி இந்தத் தொடரைத் தொடங்குகிறேன்.


சிவம் தோன்றும்

நினைப்பதால் இருக்கிறேனா? இருப்பதால் நினைக்கிறேனா?

நம் வாழ்க்கையில் சில தீவிரமான தருணங்களில், உயிரையே உலுக்கும் கேள்விகள் தோன்றுவது இயல்பு:

- நான் யார் உண்மையில்? உடல், பெயர், உறவு, வேலை- இவையெல்லாம் என்னுள் நடக்கும் வேடங்கள் போல; அவற்றைப் பார்க்கும், அனுபவிக்கும் நான் யார்?

- நான் ஏன் பிறந்தேன்? என் வாழ்க்கைக்கு ஏதேனும் பொருள் உண்டா? அல்லது பிறந்து, வளர்ந்து, படித்து, சம்பாதித்து, உண்டு உறங்கி, இறந்து விடுவது மட்டுமே வாழ்க்கையா?

- இறைவன் உண்மையில் உண்டா? எங்கே உள்ளார்? ஆலயத்திலா? வானத்திலா? அல்லது மனத்தில் என்று சொல்கிறார்களே, அப்படி எதுவும் தெரியவில்லையே?

- மரணம் என்றால் என்ன? “நான்” என்ற உணர்வு முற்றிலும் அழிந்து விடுமா? அல்லது வேறு வடிவில் தொடருமா?

இந்தக் கேள்விகள் மனதைத் தடுமாறச் செய்யலாம். “இவை ஆழமான விவாதங்கள்; வாழ்க்கையை இயல்பாக வாழ விடு!” என்று தோன்றலாம். ஆனால், இந்தக் கேள்விகள் வாழ்க்கையை மங்கலாக்குவதற்கு அல்ல; தெளிவாக்குவதற்கு உதவுபவை. சிலர் இவற்றை அறுபது வயதுக்குப் பிறகு ஆராயலாம் என்று நினைக்கலாம், இப்போது இன்பமாக உள்ளவற்றை இழக்க நேரிடுமோ என்ற பயத்தில். ஆனால், இந்தக் கேள்விகளின் வழியாக தத்துவஞானத்தின் கதவைத் திறப்பவனால் மட்டுமே பொருள் வாழ்வில் தெளிவுடனும், ஈடுபாட்டுடனும் வாழ்ந்து, அகத்தில் நிறைவடைய முடியும்.

நான் சிந்திக்கிறேன்; ஆகையால் நான் இருக்கிறேன்

17ஆம் நூற்றாண்டு பிரான்சின் தத்துவஞானி ரெனே டெஸ்கார்ட்ஸ் ஒரு ஆழமான கேள்வி எழுப்பினார்:

“உணர்வுகள் சில நேரங்களில் ஏமாற்றக்கூடும்… கனவு நனவாகத் தோன்றலாம்… அப்படியானால் எது மறுக்க முடியாத உண்மை?”

அவர் யோசித்தார்,எல்லாவற்றையும் சந்தேகிக்கலாம்.ஆனால், சந்தேகிப்பது என்ற செயல் தானே சிந்தனைக்குச் சான்று.சிந்திக்கிறேன் என்பதால், நான் இருப்பது மறுக்க முடியாத உண்மை.இதையே அவர் புகழ்பெற்ற ஒரு வாக்கியமாகச் சொன்னார்:

“Cogito, ergo sum” - “நான் சிந்திக்கிறேன்; ஆகையால் நான் இருக்கிறேன்.”

இந்த வாக்கியம் மேலைத்தத்துவத்தில் பிரசித்தி பெற்றது. ஏனெனில், “சிந்தனை நிகழ்கிறது; ஆகையால் சிந்திப்பவன் இருக்கிறான்” என்று உள்ளிருந்து உறுதியளிக்கும் உண்மையை இது வெளிப்படுத்துகிறது.ஆனால், இது முழு உண்மையா? சிந்தனையே நம் இருப்பின் காரணமா? அல்லது, நான் இருப்பதால் சிந்திக்கிறேனா?

இந்திய ஞான மரபுகளை டெஸ்கார்ட்ஸ் அறிந்திருந்தால், சாங்கியம், யோகம், சைவ சித்தாந்தம் ஆகியவை இந்தக் கேள்வியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து, அதற்கு அப்பாலும் சென்றிருப்பதை உணர்ந்திருப்பார்.

ஆழ்ந்த உறக்கத்தில் சிந்தனை இல்லை, ஆனால் நாம் இருக்கிறோம். ஆழ்நிலை தியானப் பயிற்சியில், எண்ணங்கள் வாகனங்கள் போல் அணிவகுத்து செல்வதை உணரலாம். சில கணங்களில் எண்ணமற்ற இருப்பை மட்டும் அனுபவிக்க முடியும். அப்படியானால், எண்ணங்கள் என்பவை என்ன? இன்ப துன்ப உணர்வுகள் என்ன? இந்த உடல் என்ன? இவற்றுக்கு அப்பால் உள்ள மூலப் பொருள் என்ன?இவை அனைத்திற்கும் தெளிவான, விஞ்ஞானபூர்வமான, தர்க்கரீதியான, முழுமையான பதில்களை சைவ சித்தாந்தம் வழங்குகிறது.

இந்திய ஞான மரபின் தரிசனங்கள்

சைவ சித்தாந்தத்தை ஆராய்வதற்கு முன், இந்திய மெய்ஞான மரபுகளை சுருக்கமாகப் புரிந்து கொள்வோம். இவை உயிர், பிரபஞ்சம், இறை ஆகியவற்றைப் பற்றிய ஆழ்ந்த தேடலால் உருவானவை. இவற்றை “தரிசனங்கள்” என அழைப்பதற்கு காரணம், இவை வெறும் சிந்தனையால் உருவானவை அல்ல; ஞானியரின் அனுபவத்தால் உணரப்பட்டவை. இவற்றைப் பகிர்ந்து கொள்ள சூத்திர வடிவில் மூல நூல்கள் இயற்றப்பட்டன. முக்கியமான  சில தரிசனங்கள்:

1. சாங்கியம்: பிரகிருதி (பருப்பொருள்) மற்றும் புருஷன் (பிரக்ஞை) மட்டுமே உண்மைப் பொருள்கள். புருஷன் பிரகிருதியுடன் தன்னை அடையாளப்படுத்துவதால் துன்புறுகிறான்; அதிலிருந்து விடுபட்டு உண்மை நிலையை உணர்ந்தால் விடுதலை பெறுவான்.

2. யோகம்: சாங்கியத்தின் ஞானத்தை அடைய உதவும் பயிற்சி முறை. இது யோகாசனங்கள் அல்லது மூச்சுப் பயிற்சிகள் மட்டுமல்ல; கைவல்யம் எனும் வீடுபேறு அடையும் பாதை. பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் 3000 ஆண்டுகளாக பயிலப்படுகிறது. (குறிப்பு: யோக சூத்திரத்தை இயற்றிய பதஞ்சலி, தில்லையில் வியாக்ரபாதருடன் உள்ள பதஞ்சலியல்ல.)

3. வைசேஷிகம்: அணுக்கொள்கை. கருந்துளை (Black holes) கண்டுபிடித்த விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வுக்கு இந்த தரிசனமே தூண்டுதல் எனக் குறிப்பிடுகிறார்.

4. நியாயம்: தர்க்கத்தை வரையறுக்கும் வைசேஷிக  துணை தரிசனம். இது மெய்யியல் விவாதங்களுக்கானது என்றாலும் கூட இதன் அடிப்படைகள் இன்றைய நவீன கால கட்டத்தில் கார்ப்பரேட் அலுவலக சந்திப்புகளுக்கும் விவாதங்களுக்கும் மிகவும் உதவக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. 

5. பூர்வ மீமாம்சை:  இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. எரியோம்பி வேள்வி செய்வது,மந்திர உச்சாடனை, குறிப்பிட்ட பலனுக்காக குறிப்பிட்ட தேவர்களை எழுந்தருளச் செய்து கரு முதல் இறப்பு வரையான பல சடங்குகளை செய்வது, ஜோதிடம், வான சாஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்பது, கற்பிப்பது இவையனைத்தும் இதிலடங்கும். பிழையின்றி வேள்வியென ஒரு செயலை ஆற்றுதலே இந்த மரபு காட்டும் விடுதலை, நான்கு வேதங்களின் கர்ம காண்ட நெறிகளே இந்த மரபின் மூல நூல்கள்.

6. உத்திர மீமாம்சை (வேதாந்தம்): வேதங்களின் ஞான காண்டத்தின் நீட்சி. பிரம்மத்தை உணர்வதே விடுதலை; உலகம் மாயை, பிரம்மமே உண்மை. 108 உபநிடதங்களும், பிரம்ம சூத்ரமும், பகவத் கீதையும் வேதாந்தத்தின் "பிரஸ்தான திரயம்" என்று அழைக்கப்படும் மூல நூல்களாக கொள்ளப்படுகிறது. 

இதில் அத்வைதம் (ஆதி சங்கரர்), விசிஷ்டாத்வைதம் (இராமனுஜர்), த்வைதம் (மத்வர்) என மூன்று உட்பிரிவுகள் உள்ளன.இவை அனைத்தும் உயிரின் துன்பம், அதன் காரணம், விடுதலை ஆகியவற்றை விளக்குகின்றன. இவற்றின் காலம் பொ.மு. 4000 முதல் பொ.மு. 2000 வரை எனக் கருதப்படுகிறது. சாங்கியம் யோகம் இவ்விரண்டின் சில முக்கிய அம்சங்கள் சைவ சித்தாந்தத்தில் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமயங்களின் தோற்றம்

இந்த தரிசனங்களின் செல்வாக்கோடு சில  மதங்களும் தோன்றின.பௌத்தம், சமணம் போன்ற அவைதீக மதங்களும் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கெளமாரம், சௌரம் என்ற ஆறு வைதீக மதங்களும் தோன்றின. காலப்போக்கில் காணாபத்யம், கெளமாரம், சாக்தம் இவை சைவத்தோடும் சௌரம் வைணவத்தோடும்  ஏறக்குறைய இணைந்து சைவமும் வைணவமும் என  இரு பெரும் வைதீக மதங்களாக விளங்கின.  (வைதீகம் - வேத ஏற்பு , அவைதீகம் - வேத மறுப்பு)

சைவ சித்தாந்தத்தின் காலமும் மரபும்

தமிழில் மெய்கண்ட சாத்திரங்கள் பொ.யு 13ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும், சைவ சித்தாந்தம் அதற்கு வெகு முன்பே பின்பற்றப்பட்டு வந்தது. திருமூலர் திருமந்திரத்தில் (பொ.யு. 6ஆம் நூற்றாண்டு) இதன் அடிப்படைக் கொள்கைகளைக் கூறுகிறார். மேலும், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிவனின் பசுபதி வடிவம் (பொ.மு  3000–1900) சைவத்தின் பழமையை உறுதிப்படுத்துகிறது.

சைவ சித்தாந்தத்தின் பிரமாண நூல்கள் வேதங்களும் ஆகமங்களும். வேதங்கள் பொது (generic) என்றும் ஆகமங்கள் சிறப்பு (Specific) என்றும் கொள்ளப் படுகின்றன. ஆகமங்களின் ஞான பாதத்தின் பிழிவே  சைவ சித்தாந்த சாத்திரங்களாக உருவெடுத்தன. ஆகமங்களின் காலம் பொ.மு. 100 முதல் பொ.யு 300 வரை எனக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் பொ.யு. 7 முதல் 14ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் நாயன்மார்களின் பக்தி இயக்கமும், மெய்கண்டார் மரபின்  சைவ சித்தாந்தமும் பெரும் செல்வாக்கோடு  விளங்கின. இன்றுவரை இது அறுபடாத தொடர்ச்சியுடன், அறிவுபூர்வமான தத்துவ ஞானமாகவும், பக்தி மரபாகவும் விளங்குகிறது.

சிவாகமங்கள்

“சித்தாந்தம்” என்றால் எய்தப்பட்ட முடிவு அல்லது முடிந்த முடிபு (சித்த: எய்திய, அந்தம்: முடிவு). ஆகமங்கள் 28 இதில் 18 ருத்ர ஆகமங்கள், 10 சிவ ஆகமங்கள். இவை நான்கு பாதங்களைக் கொண்டவை:

1.சரியை : இறையை வெளியே காணுதல்.

2.கிரியை:வெளியே கண்ட இறையை அகத்துடன் தொடர்பு செய்யும் செயல்கள்.

3. யோகம் : இறையை அகத்திலேயே காணுதல்.

4. ஞானம் : இறையை ஞானமாக உணர்தல்.

மனிதர்கள் தத்தம் அறிவிலும் உணர்விலும் வெவ்வேறு படிநிலைகளில்  இருப்பதைக் காண்கிறோம். இவை வெவ்வேறு உணர்வு நிலைகளில் உள்ளவர்களுக்கு உகந்த பாதைகளைக் காட்டுகின்றன. ஆகமங்கள் தந்திரங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. திருமூலரின் திருமந்திரம் இதற்கு எடுத்துக்காட்டு.

அறுவகை சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்

சிவத்தை பரம்பொருளாகக் கொண்டாலும், சைவத்தில் நுட்பமான வேறுபாடுகளுடன் பல பிரிவுகள் உள்ளன. சித்தாந்த சைவத்தை மையமாகக் கொண்டு, சிவாத்துவித சைவம், ஈஸ்வர அவிகாரவாத சைவம், சிவ சங்கிராந்தவாத சைவம், சிவசமவாத சைவம், பேதவாத சைவம், பாடாணவாத  சைவம் ஆகிய ஆறு அகச் சமயங்களும், அதிலிருந்து சற்றே தொலைவில் ஐக்கிய வாதம், வைரவம், வாமம், கபாலிகம், மாவிரதம், பாசுபதம் ஆகிய ஆறு அகப்புற சமயங்களும் உள்ளன. இவை அனைத்துமே சைவத்தின் வழிகளாயினும் அதனதன் தத்துவ அடிப்படைகளில் சில நுட்பமான வேறுபாடுகள் உண்டு.

சைவத்தின் அடிப்படை கொள்கைகளிலிருந்து முற்றிலும் விலகியுள்ள  மேலே குறிப்பிட்ட ஆறு தரிசனங்களும், பாஞ்சராத்ர வைணவமும் புறச்சமயங்களாகவும், மேலும் விலகி பௌத்தத்தின் நான்கு பிரிவுகள், சமணம், பொருள் வாழ்வே அனைத்தும் என்னும் லோகாயதம் ஆகியவை புறப்புற சமயங்களாகவும் கருதப்படுகின்றன.

 சைவ சித்தாந்தம் இவை அனைத்தையும் சமயங்களாகவே அங்கீகரிப்பதோடு மட்டுமின்றி அவர் காணும் முழு முதற் பொருளும் சிவத்தின் ஒரு வடிவமே என்று காண்கிறது. அவரவர் சிவத்தை நோக்கி வரும் பாதையின் தூரம் அவரவர் தற்சமயம் இருக்குமிடத்தை பொறுத்து அமையும் என்கிறது சைவம்.

சைவ சித்தாந்தத்தின் அடிப்படை உண்மைகள்

“மாற்றம் ஒன்றே மாறாதது” என்பார்கள். ஆனால், மாறாதது எதுவும் இல்லையா?நாம் காணும் எல்லாம்  உடல், உலகம், சூரிய சந்திரர்கள், நட்சத்திரங்கள் அழிவுக்குட்பட்டவை. பருப்பொருளாக (matter) உள்ளவை தோன்றுகின்றன, மாறுகின்றன, அழிகின்றன. தோற்றம் உள்ளவை ஒரு நாள் அழியும். ஆனால், தோன்றாத, மாறாத, அழியாத பொருள் உண்டா? ஞானிகளின் தேடல் இந்த நிலையான உண்மையை நோக்கியே இருந்தது. சைவ சித்தாந்தம் மூன்று நிலையான பொருள்களை, முப்பொருள் உண்மையை கண்டறிந்தது:

1. உயிர் (பசு): பருப்பொருளாக இல்லாத, தூய பிரக்ஞையாக உள்ளே இருக்கும் ஆன்மா. உலகம் பஞ்சபூதங்களால் ஆனது; உடல், மனம், உறுப்புகள் ஜடப் பொருள்கள். ஆனால், உயிர் அழிவற்ற, சிற்றறிவு கொண்ட நிலையான பொருள். உயிர்கள் எண்ணற்றவை; தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் என ஏழு வகை பிறப்புகளாகவும், கரு, முட்டை, வியர்வை, விதை என நான்கு வகைகளில் தோன்றுகின்றன. இங்கே நாம் உயிர் என்று குறிப்பிடுவது உடலுடன் கூடி காணப்படுவற்றை அல்ல. ஒவ்வொரு உடலுக்குள்ளும் சூக்குமப் பொருளாக (non matter) உறைந்திருக்கும் ஆன்மாவையே . 

2. தளை (பாசம்/மலம்): உயிர் ஜடப் பொருளான உடலில் சிக்கியிருப்பதற்கு காரணம் மலம். இது அழிவற்ற, சூக்குமமான, அறிவற்ற பொருள். தானாக எதுவும் செய்யாது.

3. இறை (பதி): உயிரை உடலில் பூட்டி வைக்க பாசமலத்தால் இயலாது. உயிரே தானாக சென்றும் அகப்படாது. இவ்விரண்டையும் இணைக்க  பேரறிவும் பேராற்றலும் கொண்ட இன்னொன்று தேவை. அதுவே பதி என்று அழைக்கப்படும் இறை. இறையாகிய சிவம் வியாபித்து விளங்கி  பேரறிவு, பேராற்றல், பேரானந்தம் (சத்-சித்-ஆனந்தம்) இவை அனைத்தும்   கொண்ட நிலையான பொருள்.

பதி, பசு, பாசம் - அனாதியானவை; துவக்கமும் முடிவும் அற்றவை. உயிர்கள் எண்ணற்றவை; இறை ஒன்று; பாசம் மூன்று வகை: ஆணவம், கன்மம், மாயை.

ஆணவம், மாயை, கன்மம்

1. ஆணவம் :  மூல மலம், இருள் மலம். ஆணவமும் இறையும் இருளும் ஒளியும் போல; ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருக்காது. சிற்றறிவு கொண்ட உயிர் தன் இயல்பாலும் அறியாமையாலும் ஆணவத்தை நோக்கி சென்று ஆணவ இருளில் அகப்பட்டு, இயங்க முடியாத கல்லைப் போன்ற “பாடாண நிலை”யை (கேவல நிலை) அடைகிறது. 

2. மாயை : ஆணவ இருளில் சிக்கிய உயிருக்கு கைவிளக்கு போன்றது மாயை. இது உடல், மனம், கருவிகளாக அமைந்து ஆணவ இருளைச் சற்றே அகற்றி, அறிவைத் தூண்டுகிறது.  36 தத்துவங்களும் மாயையில் அமைந்தவை.

3. கன்மம்: மாயையால் உருவான உடல், மனம், கருவிகளால் புற அறிவு பெற்ற உயிர், தானே எல்லாம் செய்வதாகக் கருதி செயல்படுகிறது. இதுவே கன்மம். இதன் விளைவால் வினைப்பயனும் பிறப்பு-இறப்பு சுழற்சியும் உருவாகிறது.

மாயை உடலாகவும், உலகப் பொருள்களாகவும் உயிரை மயக்குகிறது.கன்மம் உலகப் பொருள்களையும் உயிர்களையும் இணைத்து இன்ப-துன்பங்களைத் தருகிறது.ஆணவம் “நான்”, “எனது” என்ற பற்றை உருவாக்கி உலக நுகர்ச்சியில் ஆழ்த்துகிறது. இவை மூன்றும் உயிரை உலகத்துடன் கட்டுவதால் “பாசம்” எனப்படுகின்றன.

ஆணவம் இருளாக இருந்தாலும், மாயையும் கன்மமும் உயிர் விடுதலை பெற உதவுவன. உடையிலுள்ள அழுக்கை நீக்க இன்னொரு அழுக்கான  சோப்பு (ரசாயன அழுக்கு)  உதவுவது போல, மாயையும் கன்மமும் ஆணவத்திலிருந்து விடுவிக்க உதவுகின்றன.

36 தத்துவங்களின் தோற்றம்

ஆணவ இருளில் சிக்கிய உயிர், தானாக விடுதலை நோக்கிச் செல்ல முடியாது. இறை, தன் அளப்பரிய கருணையால், உயிரின் விடுதலைக்காக மாயையின் வழியாக உடல், கருவி கரணங்கள், உலகம், இன்ப-துன்ப நுகர்ச்சிகளை உருவாக்கித் தருகிறார். இதுவே 36 தத்துவங்களின் தோற்றம். 

உடலற்ற சூக்குமப் பொருளாக இருந்த உயிர், இப்போது  தான் பருப்பொருளான உடலைப் பெறுகிறது.

இந்தப் படிநிலைகள் என்ன? உடலும், மனமும், உலகமும் உயிருடன் எவ்வாறு பிணைக்கப்படுகின்றன? அதனால் என்ன நிகழ்கிறது?

சிவம் தோன்றும்

சைவ சித்தாந்த முப்பொருள் உண்மையும்  36 தத்துவங்களின் தோற்றமும்




கட்டுரையாளர்: தில்லை செந்தில்பிரபு



தில்லை செந்தில்பிரபு கோவையில் பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பவர். பல்லாண்டுகளாக முறையாக யோகம் பயின்று அதை எளிய முறையில் பலருக்கும் பயிற்ச்சி அளித்து வருகிறார். மேலும் சைவ சித்தாந்தத்தை முறையாக பயின்று அதன்படி ஆனந்த சைதன்ய நிலையம் அமைத்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அதன் வழி முறைகளையும் பின்பற்றி வருகிறார். அதை அறக்கட்டளையாக நிறுவி பல தொண்டுகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

1 comment:

  1. மிக அருமை. தெளிவான சுருக்கமான முன்னுரை. ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்🙏

    யோக சூத்திரம் இயற்றிய பதஞ்சலி முனிவர் தில்லையில் தரிசனம் கண்ட பதஞ்சலியார் அல்ல என்று கூறுவதின் காரணத்தை தெரியப்படுத்த முடியுமா? நன்றி!

    ReplyDelete