ந.இரா.சென்னியப்பனார் அவர்கள் சைவசித்தாந்த அறிஞர் மற்றும் ஆசிரியர். தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று சைவசித்தாந்த சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகள் எடுப்பவர். கோவை மாவட்டம் பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். மணிவாசகர் அருள்பணி மன்றத்தின் அறக்கட்டளைத் தலைவர். இம்மன்றத்தினால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சைவசித்தாந்த வகுப்புகளும், சமயப் பணிகளும் ஆற்றப்படுகின்றன. சைவம் சார்ந்து 10 செய்யுள் நூல்கள், ஆறு உரைநடை நூல்களும் இயற்றியுள்ளார். சைவ சித்தாந்த நூல்கள் 14-ல் ஆறு நூல்களுக்கும், பேரூர் புராணம் என்ற நூலுக்கும் உரை எழுதியுள்ளார். சமயதமிழ் என்ற மாத இதழின் ஆசிரியராவார். ஆதினங்களிடமிருந்து பல்வேறு பட்டங்களை பெற்றவர். இவரது சொந்த ஊர் எளச்சிப்பாளையம், உடுமலை. தற்போது கோவையில் வசித்து வருகிறார்.
1. இன்றைக்கு தமிழ்நாட்டில் தொண்ணூறு வயது நிரம்பிய மூத்த சைவ அறிஞர் நீங்கள் சைவத்திற்குள் எப்படி வந்தீர்கள்?
கல்லூரியில் படிக்கும் பொழுது சைவம் ஒரு விருப்ப பாடமாக இருந்தது. இருந்தாலும் அப்போது அதன் மேல் பெரிய நாட்டமில்லாமல் தான் இருந்தது. இங்கே பேரூரில் மடத்தில் தங்கி தொண்டை மண்டல ஆதீன குருமஹா சன்னிதானம் ஞானப்பிரகாச சுவாமிகள் வந்து இருந்து சைவ சித்தாந்தத்தை 5 மாதம் சொற்பொழிவாக, மாலை வேளையில் சிவஞான சித்தியார் முழுவதும் நடத்தினார். அங்கே நான், வையாபுரி, சோமசந்தரம், முத்துக்குமாரசுவாமி, இன்னும் கொஞ்சம் பேர் சேர்ந்து படித்தோம். படித்து முடித்தவுடன் அவர் தீட்சை செய்து வைத்தார். அதற்கு முன் நாங்கள் தீட்சை எல்லாம் பெறவில்லை.பின் மீண்டும் அவர் வந்து சிவஞானபோதம் நடத்தினார். அதன் பிறகு தான் எங்களுக்கு அதிகமாக சைவ சித்தாந்தத்தின் மேல் நாட்டம் வந்தது.
பிறகு அவிநாசியில் சிவா ஐயா என்று ஒருவர் இருந்தார். அங்கே உள்ள பிச்சாடமடத்தில் தங்கி இருந்தார். அவர் 14 சாத்திர நூல்களுக்கும் உரை எழுதியவர், மிகப் பெரிய அறிஞர். அவர் மாதம் ஒரு திங்கட்கிழமை சைவ சித்தாந்த பாடம் நடத்துவார். அப்போது, ஒரு ஆண்டு விழாவிற்கு சிவஞானபோதம் பற்றி பேச வேண்டும் என்று என்னை அழைத்தார். நான் அங்கே பேசிய பின், அங்கே இருந்த ராயமூர்த்தி, சிவா ஐயா, சண்முகம், நஞ்சையப்பன், இன்னும் பலர் சேர்ந்து நீங்கள் 12 மாதமும் 12 சூத்திரமும் பேச வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். ஓராண்டு காலம் அங்கே விரிவாக சிவஞான போதத்தை நான் பேசினேன்.
அங்கே பேசும்போதே புளியம்பட்டியில் இருந்தும் உடுமலைப்பேட்டையில் இருந்தும் பலர் வந்து கேட்டனர். பின் புளியம்பட்டியில் இருந்து ஒருவர் வந்து எங்கள் ஊரிலும் இதே போல் பேச வேண்டும் என்று என்னை அழைத்தார். அங்கே திருவுந்தியாரில் இருந்து ஆரம்பித்து 14 சாத்திர நூல்களையும் சொற்பொழிவாக நிகழ்த்தினேன்.
அதன் பின்னர் ஈரோடு, கோவை புதூர், போன்ற இடங்களில் செவக்கோடி சுவாமிகள் நடத்திய நிகழ்வில் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளையும் சைவ சித்தாந்தத்தை பற்றி பேசத் தொடங்கினேன்.
மேலும் கல்லூரியில் முதுகலை பட்டம் அப்போதுதான் வந்தது. அங்கே சைவ சித்தாந்தம் ஒரு பாடமாக அமைந்தது. அதில் சிவஞான மாபாடியம் ஒரு பாடமாக இருந்தது. நானும், வையாபுரியாரும் அதை படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதை நாங்கள் ஆழமாக படித்து தெரிந்து கொண்டோம். இப்படித்தான் சைவ சித்தாந்தத்தின் மேல் ஈடுபாடு வந்தது.
2. உங்கள் குடும்பம் மரபான சைவ குடும்பம் தானா?
எங்கள் ஊர் அவிநாசி பக்கத்திலே இருக்கும் எளச்சிபாளையம் என்கிற சிறிய கிராமம். உழவுத் தொழில் தான் எங்களுடைய பிரதான தொழில். உணவிலே மட்டும் தான் எங்கள் குடும்பம் சைவம், மற்றபடி சைவம் பற்றின எந்த அறிவும் எங்களுடைய குடும்பத்திற்கு கிடையாது. பள்ளியில் கணித பாடம் படித்தேன். அப்போது சைவ சித்தாந்தம் என்பது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. என்னுடைய தாத்தாவிற்கு நான்கு பிள்ளைகள். அவர் இறந்த போது அவருடைய பொருட்களை எல்லாம் நான்கு பேரும் பங்கிட்டார்கள். அப்போது பீரோ எல்லாம் கிடையாது. அவருக்கு என்று மூங்கிலில் செய்த ஒரு பெரிய பேழை இருந்தது. அதில் பணம் முதலிய பொருட்களை எல்லாம் போட்டு வைத்திருந்தார். அதை நான்கு பேரும் பிரித்து எடுத்த போது, கடைசியாக ஒரு சின்ன புத்தகம் இருந்தது. நான்கு பேருக்கும் படிப்பறிவு கிடையாது. எங்கள் ஊரிலும் யாருக்கும் படிப்பறிவு கிடையாது. நீ பள்ளிக்கூடத்துக்கு போறியே தம்பி இந்த புத்தகத்தை நீ வச்சுக்கோ அப்படின்னு என்கிட்ட அந்த புத்தகத்தை கொடுத்தார்கள். அதை நான் வாங்கிக்கொண்டேன். ஆனால் அப்போது நான் அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. படிக்கவும் இல்லை. பேரூர் கல்லூரிக்கு வந்த போது தான் அதை எடுத்து பார்த்தேன், அது திருவாசகம்.
என்னுடைய தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் படிப்பறிவே கிடையாது, இருந்தாலும் இந்த புத்தகம் எப்படி எங்கள் வீட்டிற்கு வந்தது என்று இன்றுவரை தெரியவில்லை, ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்றும் அதை கையில் வைத்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
3. நீங்கள் சாத்திர நூல்களுக்கு உரை எழுதியவர், 14 சாத்திர நூல்களில் உங்களுக்கு மிகப் பிடித்த நூல் எது?
சிவஞான போதம் தான்....
என்ன காரணம்?
சுருக்கமாக 12 சூத்திரம், 41 வரி 81 வெண்பாக்கள் இப்படி சுருக்க வடிவில் இருந்தாலும், மிக விரிவாகவும், ஆழமாகவும் சொல்லக்கூடிய ஒரே நூல் சிவஞான போதம் தான்...
12 சூத்திரத்தில் அவர் சொல்லாத விஷயங்களே இல்லை. அவன் அவள் அது என்று ஆரம்பித்து 12 சூத்திரமாக விளக்கி விளக்கி செல்கிறார். சிவஞான போததற்கு முன்னே ஞானாமிர்தம் போன்ற நூல்கள் இருந்திருக்கிறது. ஆனால் சிவஞான போதம் தான் சைவ சிந்தாத்தத்திற்கு தலைமையான நூல். அதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் பிற எல்லா நூல்களும் வந்தன.
4. சிவஞான போதத்தில் ஆரம்பிக்கும் போது அவன் அவள் அது என்று தத்துவமாக ஆரம்பிக்கிறார், மெய்கண்டார். ஆனால் முடியும் போது 12 வது சூத்திரத்தில் பக்தியாக முடிக்கிறார். இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பன்னிரண்டாவது சூத்திரம் பக்தியாக முடியவில்லை. அது அடைந்தோர் தன்மை ஆகும். இந்த அடைந்தோர் தன்மை என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியது திருமூலர் தான். வடமொழியில் இதை ஜீவன் முக்தி என்று சொல்வார்கள். அடைந்தோர் தன்மை என்பது எதை அடைந்தோர் தன்மை?! இறைவனுடைய திருவடியை அடைந்தோர் தன்மை தானே... அதைத்தான் 12 வது சூத்திரத்தில் விளக்குகிறார். அந்த சூத்திரத்தில் அடியாரோடு கூடியிருக்க வேண்டும், மும்மலம் போக வேண்டும், இறைவனுடைய திருவடியை அடைய வேண்டும். அப்போ எல்லாமே அந்த வரிகளில் வந்து விட்டதல்லவா! தச காரியமும் இதைத்தானே சொல்கிறது. அதிலும் சிவதரிசனம் தான் வருகிறது.
தச காரியத்தில் முதலில் தத்துவரூபம். மெய்கண்டார் முதல் சூத்திரம் ஆரம்பிக்கும் போது தத்துவமாக அவன் அவள் அது என்று ஆரம்பிக்கிறார். இதில் இன்னும் நுட்பமாக ஒன்று உள்ளது. இந்த சூத்திரத்தில் இலக்கணப்படி பார்த்தீர்கள் என்றால் உயர்திணையில் ஆண்பால் பெண்பால் பலர்பால் என்று இருக்கிறது. அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் என்று மொத்தம் ஐந்து பால்கள் உள்ளன. ஆனால் இங்கே எத்தனை சொல்லி இருக்கிறார். அவன் அவள் அது என்று மூன்றை மட்டுமே சொல்லியிருக்கிறார். ஐந்தை மூன்றுக்குள்ளே அடக்கி விட்டார். ஆண்பால் மற்றும் பெண்பாலை காட்டி விட்டு பலர்பாலை காட்ட வில்லை. ஏனென்றால் பலர்பாலை காட்ட முடியாது. ஏன் காட்ட முடியாது? ஒன்று அவனாக இருக்கலாம், இல்லை அவளாக இருக்கலாம், இல்லை என்றால் இருவரும் சேர்ந்ததாக இருக்கலாம். இதில் பலர் என்று ஒன்று காட்ட முடியாது. உயர்திணையில் இங்கு ஒன்றுதான் எல்லாமே. பல என்றால், "ஒன்று" சேர்ந்தது தானே பல.
உதாரணமாக யானை என்று ஒன்று உள்ளது. அதில் களிறு என்றும் பிடி என்றும் உள்ளன. இதில் களிறு காட்டலாம், பிடி காட்டலாம். ஆனால் யானையை காட்ட முடியுமா?! முடியாது. யானையை தனியாக காட்ட முடியாது. ஆனால் யானை என்ற வழக்கு சொல் உள்ளது. யானை என்பது ஒன்று பிடியாக இருக்கும். இல்லை என்றால் களிராக இருக்கும். அதேபோல ஒன்று பலவாக இருக்கும். ஆண் பலவாக இருக்கும் பெண்ணும் பலவாக இருக்கும் இல்லையென்றால் இருவரும் சேர்ந்து பலவாக இருப்பார்கள்.
மேலும் இதை சிவஞான சித்தியாரில்
ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகம் எல்லாம்
வருமுறை வந்து நின்று போவதும் ஆதலாலே,
தருபவன் ஒருவன் வேண்டும்; தான் முதல் ஈறும் ஆகி,
மருவிடும் - அநாதி முத்த சித்து உரு மன்னி நின்றே.
இந்த பாடலில் எல்லாம் வரவேண்டிய காலத்தில் வருகிறது.
இருக்கவேண்டிய காலத்தில் இருக்கிறது. போக வேண்டிய காலத்தில் போகிறது. அது உயர்திணையோ, அஃறிணையோ எதுவாக இருந்தாலும் சரி. உதாரணமாக ஒரு மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய தாத்தா வைக்கிறார் நம்முடைய அப்பா பாதுகாக்கிறார். நம் காலத்தில் அது பட்டு மாண்டு போகிறது. மனிதனும் அதே போல தான், இதைத்தான் உரிய காலத்தில் "வருமுறை வந்து நின்று போவதும் " என்று பாடலில் குறிப்பிடுகிறார்.
எனவே தசகாரியமாக இருந்தாலும் சரி, 12-வது சூத்திரமாக இருந்தாலும் சரி, இந்த ஆன்மா இறுதியாக இறைவனுடைய திருவடி நிழலை பற்ற வேண்டும் என்பதுதான் முடிந்த முடிவாக சொல்கிறது. அதைத்தான் மெய்கண்டார் தன்னுடைய 12ஆவது சூத்திரத்தில் விளக்குகிறார்.
5. சித்தாந்தத்தில் இருக்கும் வினைக் கொள்கையில் தீவினை செய்தால் மறுபிறவி வரும் என்று சொல்வது புரிகிறது. நல்வினை செய்தாலும் மறுபிறவி வரும் என்பது எப்படி? மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இதை "அறம் பாவம் என்னும் அருங்கையிற்றால் கட்டி" என்று சொல்கிறார், விளக்கவும்?
நல்வினையை நீங்க அனுபவிக்கிறீங்க, ஆனால் இன்னும் Stock இருக்கிறதே. முற்பிறவியில் செய்த வினை, அதற்கு முற்பிறவியில் செய்த வினை, இப்படி பல வினைகள் இருக்கிறதே, அது நமக்கு தெரியாது அல்லவா! இதை எல்லாம் தாண்டி மூல கன்மத்தில் செய்தவனையே நமக்கு தெரியாது. அதையெல்லாம் கழிக்க வேண்டும் இல்லையா இதையெல்லாம் அனுபவித்து தீர்த்து விட்டால் வினை கிடையாது, ஆனால் என்ன வினை இருக்கிறது என்று யாருக்கு தெரியும்?
செய்வினையும் செய்வானும் அதன்பயனுங் கொடுப்பானும்
மெய் வகையால் நான்காகும் விதித்தபொரு ளெனக்கொண்டே
இவ்வியல்பு சைவ நெறி அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்சிவ மென்றருளாலே யுணர்ந்தறிந்தார்”
என்று சாக்கிய நாயனார் புராணத்தில் தெளிவாக விளக்குகிறார் சேக்கிழார். எனவே வினைகள் மூன்று. ஆகாமியம், பிராரத்துவம், சஞ்சிதம். சஞ்சிதம் தான் நமக்கு தெரியாத வினை அல்லவா. சஞ்சிதம் தீர்ந்தால் மட்டும் தான் வினையை முடிக்க முடியும். எனவேதான் அறமும் வினை பாவமும் வினை.
6. நாம் இப்பிறவியில் செய்த வினை சஞ்சித வினையாக மாறுகிறது, இந்த பிறவியில் நாம் செயலை செய்யாமல் விட்டோம் என்றால் சஞ்சிதம் கூடாது. எனில் சைவ சித்தாந்தம் செயலின்மைக்கு இட்டுச் செல்கிறதா?
செயல் செய்யாமல் வாழ்வே கிடையாது. கண்டிப்பாக செயல் செய்தே ஆக வேண்டும். சைவ சித்தாந்தம் செயல் இன்மையை எங்குமே சொல்லவில்லை...
7. நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் செய்யாமல் இருந்தால் செயலின்மைக்கு நம்முடைய வாழ்வு போகிறது, செய்தால் வினை கூடுகிறது இது எப்படி?
அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் "சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே" என்கிறார், இந்த சும்மா இரு என்ற கூற்று அவருக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம், ஆனால் உலகியல் வாழ்க்கையில் அப்படி இருக்க முடியாது. மேலும் 14 சாத்திர நூல்களாகட்டும் தேவார திருவாசகம் ஆகட்டும் இவர்கள் செய்ததனால் தான் நமக்கு கிடைத்தது. இவர்கள் செய்யாமல் விட்டார்கள் என்றால் நமக்கு கிடைத்திருக்குமா. எனவே சைவ சித்தாந்தம் ஒருபோதும் செயல் இன்மையை சொல்லவே இல்லை. செயலை தான் செய்யச் சொல்கிறது.
8. பதி பசு பாசம், இதில் பதி முற்றறிவுப் பொருள். பசு சிற்றறிவு பொருள். பாசம் அறிவே இல்லாத பொருள். இந்தப் பசு, பதியோட தானே சேர வேண்டும். காரணம், அது அறிவுப்பொருள், பதி முற்றறிவு பொருளாக விளங்குகிறது. ஆனால் அது பாசமாகிய அறிவே இல்லாத பொருளோடு சேர்கிறது. குழந்தை, தாய், பொம்மை, இவர்களில் குழந்தைக்கு பொம்மைதான் முதலில் பெரிதாக இருக்குதே தவிர தாய் பெரிதாக இல்லை ஏன் என்ன காரணம்?
அதை மூலக்கன்மம் என்று சொல்வார்கள். பசு மலத்தோடு சேர்வது மூலகன்மம் தான். அதை தாயுமானவர்
”பெற்றதனை கீழாக்கி பெறாததனை மேலாக்கி பெற்றி உயிரின் குணம் ’’
என்று பேசுவார். இந்த பசுவிற்கு பெறுவது எல்லாம் கீழாக தான் தெரியும். பெறாததை எல்லாம் மேலாக கருதும். அது உயிரின் குணம் என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது. மேலும் நீங்க சொன்ன உதாரணமே திருவாசகத்தில் குழந்தை கையில் பொற்கின்னம் கொடுத்தது போல் என்று மாணிக்கவாசகர் பேசுவார்,
"கையி லங்குபொற் கிண்ண மென்றலால் அரியை என்றுனைக் கருது கின்றிலேன்" என்று
9. அப்படிப் பார்த்தால் உயிரின் இயல்பு பாசத்தோடு தான் இருக்க வேண்டுமா?
இல்லை. அப்படி கிடையவே கிடையாது. மூல கன்மத்தால் பாசத்தோடு சேர்ந்து விட்டது. ஆனால் பாசத்தில் இருந்து விலகி பதியின் அடி சேர வேண்டும் என்பதுதான் சைவ சித்தாந்தத்தின் கொள்கை. அதுதான் குருவடிவாக விளங்கக்கூடிய தக்ஷிணாமூர்த்தியின் வடிவம். அவர் கையில் சின்முத்திரை வைத்திருக்கிறார். அதை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் மூன்று விரல்கள் தனியாக இருக்கும். அது ஆணவம் கன்மம் மாயை. இந்த மூன்று மலங்களை விட்டோம் என்றால், பசு பதியோடு சேர வேண்டும் அதுதான் அடுத்த இரண்டு விரலோடு அவர் சேர்த்து வைத்து காட்டக்கூடிய தத்துவமாக இருக்கிறது. அதில் ஆள்காட்டி விரல் அந்தக் கட்டை விரலின் கீழே தான் இருக்கும் காரணம் இறைவனுடைய அடியை சேர வேண்டும். ஆள்காட்டி விரல், கட்டை விரலின் மேலே இருக்காது. நீங்கள் தக்ஷிணாமூர்த்தி வடிவம் பார்த்தீர்கள் என்றால் கீழே தான் இருக்கும். எனவே அதுதான் சைவ சித்தாந்தத்தின் கொள்கை பசு பதியோடு அடி சேர்ந்து உய்ய வேண்டும்.
10. இந்த மூல கன்மத்தை பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா அது பசுவிற்கு எப்படி வந்தது?
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்காக ஒருவன் தயாராக நிற்கிறான். அவனிற்கு ஓட வேண்டும் என்ற ஆற்றல் எப்போது உருவானது. தாய் வயிற்றில் இருக்கும்போதா? வளர்ந்த பின்பா? அந்தப் பொழுதை நாம் கணிக்க முடியாது. ஆனால் அவனுள் அந்த ஆற்றல் இருக்கிறது. அது எப்போது உருவானது என்று யாருக்கும் தெரியாது. அவனுக்குமே தெரியாது. ஆனால் அது உருவாகிவிட்டது. அப்படித்தான் மூலகன்மத்தை நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இதைப் பற்றி வையாபுரி "மூலகன்மம்" என்ற நூலே எழுதியிருக்கிறார். மிக ஆழமான நூல். மிக விரிவாக எழுதி இருக்கிறார்.
11. சைவத்தினுடைய குறியீட்டுத் தன்மைகளை பற்றி கொஞ்சம் விளக்கம் முடியுமா?
சைவத்தில் மூன்று மூர்த்திகள் முக்கியமானவை. வேக மூர்த்தி, யோகமூர்த்தி, போக மூர்த்தி. வேக மூர்த்திக்கு அகோர வீரபத்திரர், பைரவர் என்கிற தெய்வகுறியீடுகளும், யோகமூர்த்திக்கு தக்ஷனாமூர்த்தி என்ற குறியீடும், போக மூர்த்திக்கு கல்யாணசுந்தரர், சோமாஸ்கந்தர் என்கிற குறியீடுகளும் உள்ளன. மேலும் நம்முடைய வாழ்க்கைக்கு வேகம் போகம் யோகம் மூன்றும் மிக நிச்சயம் தேவை. எனவே தான் இந்த மூன்று குறியீடுகளும் வைத்திருக்கின்றார்கள்.
12. சித்தாந்த ஆசிரியரான நீங்கள் கச்சியப்பர் எழுதிய பேரூர் புராணம் என்ற நூலுக்கு உரை எழுதி இருக்கிறீர்கள், சித்தாந்தத்திற்கும் புராணத்திற்கும் என்ன தொடர்பு?
புராணம், சித்தாந்தத்தின் கருத்தை கதை வடிவாக சொல்கிறது. ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கையாக பரணியில் 18 புராணங்களும் உன்னை போற்றுகிறது என்று காளியை பார்த்து சொல்கிறார். இதன் படி பார்த்தோமேயானால் சாத்திரமாகட்டும் தோத்திரமாகட்டும் அனைத்தையும் கதை வடிவாக சொல்வது தான் புராணத்தினுடைய தன்மை. உதாரணமாக ஆணவம் கன்மம் மாயை என்று மும்மலங்களை பற்றி சித்தாந்தம் சொல்கிறது. இதை புராணமாக கந்த புராணத்தில் தாரகாசுரன், சிங்கமுகாசுரன், சூரபத்மன், என்று கதாபாத்திரங்களாக மாற்றி அதை நமக்கு தருகிறது. இதுதான் புராணத்திற்கும் சித்தாந்தத்திற்கும் உள்ள வேறுபாடு. எனவே சித்தாந்தத்தை கதை வடிவமாக சொல்லி விளக்கி சொல்வதனால் புராணம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
13. அத்வைதம் துவைதம் வசிஷ்டாத்வைதம் சைவ சித்தாந்தம் இந்த நான்கு தத்துவத்தில் சைவ சித்தாந்தம் எப்படி முதன்மையாகப்படுகிறது உங்களுடைய பார்வை என்ன?
இதையெல்லாம் சிவஞான சித்தியாரில் காரண காரியத்தோடு பரபக்கத்தில் மறுக்கிறது சைவ சித்தாந்தம். இப்ப ஏகான்மவாதத்தில் தானே பிரம்மம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆன்மா தானே தன்னை அறிய முடியாத நிலையில் உள்ளதால், அது எப்படி ஆன்மா என்று அறிய முடியும். அதை உணர்த்தி சொல்வதற்கு ஒரு ஆள் வேண்டும் இல்லையா!...
இன்னும் நுட்பமாக பார்த்தோமே என்றால் சைவ சித்தாந்தத்தில் தான் அகப்புறம், புறம், புறப்புறம், அகம், என்று நான்காக பிரிக்கிறார்கள். மேலும் இங்கு எந்த சமயத்தையும், தத்துவக் கொள்கைகளையும் வேண்டாம் என்று சொல்லவே இல்லை. எல்லாமே சோபான முறை. சோபானம் என்றால் படி. மற்ற தத்துவங்கள் சற்று கீழே உள்ள படிகளில் நிற்கின்றன என்று தான் சைவம் சொல்கிறது. எல்லா தத்துவங்களையும் சைவ சித்தாந்தத்துக்குள் அடக்கி விடலாம். அதற்கு தனியான வழிமுறைகள் சைவ சித்தாந்தத்தில் முறையான கொள்கைகளாக வகுக்கப்பட்டிருக்கின்றன. எனவே சைவ சித்தாந்தம் உயரிய தத்துவமாக கருதப்படுகிறது.
14. இந்திய தரிசனங்களில் ஒன்றான சாங்கியத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் என்ன தொடர்பு?
சாங்கியத்தில், 24 தரிசனங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஆனால் சைவ சித்தாந்தம் அதையும் தாண்டி 36 ஆக வகுக்குகிறது. சாங்கியத்தில் வினை கோட்பாடும் சைவ சித்தாந்தத்தினுடைய வினைக் கோட்பாடும் கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது தான். அதை தொடர்புபடுத்தி சைவ சித்தாந்தம் அதை ஏற்றுக் கொள்கிறது. தத்துவ கோட்பாட்டில் சைவ சித்தாந்தத்திற்கு மிக அருகில் இருக்கிற ஒரே தரிசனம் சாங்கியம் மட்டுமே. அந்த அளவில் சாங்கியம் ஒரு மிக முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று. சிவஞானம் மாபாடியத்தில் சாங்கியத்தை பற்றி விரிவாக சொல்லி அதை ஏற்ப்பும் மறுப்பும் விளக்க உரையோடு தரப்பட்டுள்ளது.
15. யோக மரபுக்கும் சைவ சித்தாந்த்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
இன்றைய நிலையில இருக்கக்கூடிய யோகா என்று சொல்லப்படுகிற மூச்சுப் பயிற்சிக்கும், சைவ சித்தாந்தம் சொல்லக்கூடிய யோகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. சைவ சித்தாந்தம் ஆறு ஆதாரங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. மூலாதாரம், சுவாதிஷ்டானம் என்று ஆறு ஆதாரங்களையும் சொல்லி அதற்கு மேல் இருக்கக்கூடிய துவாதச பெருவழியை பற்றி பேசி விரிவாக அதை எடுத்துச் சொல்கிறது. திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் மூன்றாவது தந்தரத்தில் யோகத்தைப் பற்றி மிக விரிவாக பேசியிருக்கிறார். "மூலாதாரத்தின் மூன்றெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து" என்று விநாயகர் அகவல் பேசுகிறது. மேலும் ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் ஒவ்வொரு கடவுள் நிலை உண்டு. மூலாதாரத்திற்கு ஒரு கடவுள், சுவாதிஸ்டானத்திற்கு ஒரு கடவுள் மணிபூரகத்திற்கு ஒரு கடவுள், என்று ஆறு நிலைகளுக்கும் ஆறு கடவுள்களை நியமனம் பண்ணி அந்த ஆதாரங்களை நாம் ஒவ்வொன்றாக கடக்கும்போது அந்த கடவுளையும் நாம் நினைத்துக் கொண்டு அதில் உருவேற்றி அதை உள்வாங்கி அந்த சக்தியைப் பெற்றுக் கொண்டு அதை கடக்க வேண்டும். "யான் ஏதும் அறியாமல் என்னுள்ளே வந்து நின்று நல்லதும் தீயதும் காட்டாய் நின்றாய்" என்கிறார் நாவுக்கரசர். எனவே நம்முடைய யோகம் என்பது அந்தந்த நிலைகளில் நின்று கடவுளை நிறுத்தி பின் அதை தியானித்து அதை உருவேற்றி அதை ஆறு ஆதாரங்களோடு மேல் எழுப்பி கொண்டு வருவது.அதுதான் நமக்கு உண்டான யோகம்.
16. வேதம் குறித்து தங்கள் கருத்து யாது?
வேதத்தை பொதுவாக வைத்துக் கொள்ள வேண்டும். வேதத்தில் கடவுள் கிடையாது. ஆன்மா கிடையாது. பேராசிரியர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய Indian philosophy நூலில் There was no god in veda, Only fire has workshiped என்று தெளிவாக விளக்குகிறார், ஆனால் அவர் தன்னுடைய நூலில் சைவ சித்தாந்தத்தை பற்றி சொல்லவே இல்லை. தத்துவத்தைப் பற்றி எழுத வந்த அவர், சைவ சித்தாந்த தத்துவத்தை அவர் எழுதவே இல்லை. தமிழ்நாட்டில் தோன்றியவர். ஆனால் அவருக்கு சைவ சித்தாந்தம் பற்றி தெரியவே இல்லை. கல்கத்தாவைச் சேர்ந்த குப்தா என்ற தத்துவ அறிஞர் சைவ சித்தாந்தத்தை பற்றி எழுதியிருக்கிறார். எனவே வேதத்தில் கோவிலோ வழிபாடோ எதுவுமே கிடையாது. வேள்வியும் அதை சார்ந்த நிகழ்வுகளும் மட்டுமே கூறப்பட்டுள்ளது.வேதம் பொது, ஆகமம் சிறப்பு, என்று வழக்கு இருந்தாலும் என்னை பொருத்தவரை வேதம் சைவத்திற்கு அவ்வளவு பெரிய நூல் கிடையாது.
17. ஆனால் ஞானசம்பந்தர் நாவுக்கரசர் இவர்களெல்லாம் சிவபெருமானை துதிக்கும்போது மறை நான்கு ஆனாய் ஆறு அங்கங்கள் ஆனாய் என்று சொல்கிறார்களே?
பேராசிரியர் கா சு பிள்ளை இதை தன்னுடைய நூலில் மறுக்கிறார். அவர் வேற ஒரு கோணத்தில் ஆய்வாக இதை சொல்கிறார். வேதம் பலரால் தொகுக்கப்பட்டதே தவிர அது இறைவனால் படைக்கப்படவில்லை, எனவே அதை சைவத்திற்கு முதன் நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் சொல்லுகிறார். நமக்கு நான்மறை என்பது அறம் பொருள் இன்பம் வீடு என்று அவர் தெளிவாக விளக்குகிறார். மேலும் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற படிநிலைகள் நமக்கு தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படிகள் தான் நமக்கு முக்கியம் . எனவே இவைகள் தான் நமக்கு வேதமாக போற்றப்பட வேண்டும்.
18. சைவ நூல் வரிசை என்று ஏதாவது இருக்கிறதா?
உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தஅருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று.
என்ற வெண்பாவே உள்ளதே இதுதான் சைவ நூல் வரிசை. இதை யார் தொகுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு வெண்பாவாக இதை விளக்குகிறார்கள்.
19. சித்தாந்த நூல் உரையாசிரியர்களில் முக்கியமானவர்களாக நீங்கள் கருதுபவர்கள் யார்?
சைவ சித்தாந்தத்திற்கு பல வேறு உரைகள் பலர் எழுதியிருந்தாலும் "சிவஞான முனிவர்" எழுதிய உரை தான் மிக முக்கிய உரை. அது இல்லை என்றால் மிகத் தெளிவான ஒரு புரிதலும் பார்வையும் நாம் அடைந்திருக்க முடியாது. எனவே அவர்தான் மிக முக்கியமான உரையாசிரியர்.
அதற்கு அடுத்த காலகட்டத்தில் அவ்வை சு துரைசாமி பிள்ளை சைவ சித்தாந்ததிற்க்கு மிக முக்கிய உரை எழுதி இருக்கிறார். அதுவும் போற்றப்பட வேண்டியதுதான். அதற்கு பிறகு இருபதாவது நூற்றாண்டில் தொண்டை மண்டல சுவாமிகள், அருணை வடிவேல் முதலியார், வஜ்ரவேல் முதலியார், இவர்களும் மிக நல்ல முறையில் உரை எழுதியிருக்கிறார்கள்.
20. சைவ சமயத்தில் சாத்திரம் தோத்திரம், பக்தி, தத்துவம் இரண்டு பாதைகள் இருக்கிறதே எதற்காக?
கண்டிப்பாக ஒரு சமயத்திற்கு அப்படி இரண்டு பாதைகள் இருக்க வேண்டும். எளிய மக்கள் பக்தியோடு தான் சேருவார்கள். அறிவார்ந்த மக்கள் மட்டுமே தத்துவார்த்த ரீதியாக அதை அனுகுவார்கள் நாவுக்கரசர் தன்னுடைய தேவாரத்தில்
அந்தியும் பகலும் ஆனாய் நீயே
சொல்லும் பொருளும் ஆனாய் நீயே
சாத்திரம் தோத்திரம் ஆனாய் நீயே
என்று சிவனைச் துதிக்கிறார். எனவே ஒரு சமயத்திற்கு இரண்டு பாதை அவசியம் தேவை. ரயிலுக்கு இரண்டு தண்டவாளங்கள் இருப்பது போல் ஒரு சமயத்திற்கு சாத்திரம் தோத்திரம் இரண்டுமே அவசியம். இதில் அவரவர் ஆன்ம பக்குவத்திற்கு ஏற்ப எந்தப் பாதையை தேர்ந்தெடுத்தாலும் முக்தி நிச்சயம் என்று சைவம் சொல்கிறது. அதில் குழம்ப வேண்டிய அவசியம் இல்லை.
21.நீங்கள் சாத்திரம் தோத்திரம் என்ற இரண்டிலும் அறிஞர். அதிலிருந்து தொல்காப்பியத்திற்கு நீங்கள் பயணம் செய்தது எப்படி?
தொல்காப்பியம் தான் முதலில் சாத்திர உண்மைகளை சொல்லி இருக்கிறது. அங்கு தான் "வினையின் நீங்கி விளங்கி அறியேன் முதல்வன் கண்ட முதல் நூல்" என்று சொல்கிறது.
கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்று வாழ்த்து நிலைகள் சொல்லப்படுகின்றன. இம்மூன்றுக்கும் நச்சினார்க்கினியர் தத்துவார்த்தப் பொருள் கண்டுள்ளார். மேலும் கடவுள் வாழ்த்து என்ற சொல்லே தொல்காப்பியத்தில் தான் முதலில் வருகிறது. அதற்கு அப்புறம் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். ஆனால் திருக்குறளில் கடவுள் என்ற சொல்லே கிடையாது. தொல்காப்பியத்தில் இருந்து அவர் எடுக்கிறார். தொல்காப்பியத்தில் தான் அதிக சைவ சித்தாந்த உண்மைகள் கூறப்பட்டுள்ளன. எண்ணி திட்டமிட்டு தொல்காப்பியர் அதை செய்திருக்கிறார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் "தொல்காப்பியத்தில் சாத்திர உண்மைகள்" என்ற தலைப்பில் பேசினேன். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
24.திருக்குறளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
திருக்குறளை போன்ற மிகச் செரிவான, நுட்பமான ஒரு நூல் வேறு எதுவும் தமிழர்களுக்கு இருக்கவே முடியாது. மிக ஆழமான ஒரு நூல். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்று அறிவுடைமை என்கிற அதிகாரத்தில் சொல்கிறார். இந்த குறளை வைத்துக் கொண்டோம் என்றால், எப்பொருள் யார்யார்வாய் "கேட்பினும் " என்கிறார். கேட்டல் என்றால் அறிவு மூலம் வருவது அது அறிவுடைமையில் வைத்திருக்கிறார். இதே போன்று மற்றொரு குறள்,
எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இந்தக் குறள் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வைத்திருக்கிறார். இது முழுவதும் உணர்தல். இந்த குறளை உணர்வு நிலைக்கு எடுத்துச் செல்கிறார். ஒரே அர்த்தத்தோடு கூடிய இரண்டு குறள்.ஆனால் இரண்டு வெவ்வேறு பாதையில் அவர் வைத்திருக்கிறார். ஒன்று அறிவு சார்ந்து அறிவுடைமையில் வைத்திருக்கிறார். இன்னொரு உணர்வு சார்ந்து உணர்வினுடைய உச்சத்தில் மெய் உணர்வதாகிய ஒரு பொருளில் அவர் வைத்திருக்கிறார். எனவே திருக்குறள் போன்ற ஒரு ஆழமான நூல் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து.
23.காமமும் கோபமும் உயிர் குணம் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார், அது ஆன்ம ஈடேற்றத்திற்கு தடையாகுமே?
காமம் இல்லை என்றால் இந்த உலகம் இயங்கவே இயங்காது. அது ஓரறிவு பொருளிலிருந்து ஆறறிவு பொருள் வரை இருக்கக்கூடிய உயிர் குணம் தான். அது இல்லையென்றால் உலக உற்பத்தி நடக்கவே நடக்காது. மேலும் சைவம் அதை ஒருபோதும் விலக்கவே இல்லை. அதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் நீங்கள் இன்றைய நிலையில் வைத்திருக்கக் கூடிய காமத்தையும் திருவள்ளுவர் சொல்லக்கூடிய அந்த நிலையையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அவர் நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்கு படுத்தப்பட்ட காமத்தை மட்டுமே சொல்லுகிறார்.
தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான், பெரும்பித்தன் காணேடீ!
பெண்பால் உகந்திலனேல், பேதாய், இருநிலத்தோர்
விண்பால் யோகு எய்தி வீடுவர்காண் சாழலோ.
இறைவன் பெண்பாலாக இருந்து வந்து, பெரும் பித்தனாகி, கூடியிருந்து, தோற்றுவித்து, அம்மையப்பராக காட்சி தருகிறார்,
என்கிறார் மாணிக்கவாசகர். அர்த்தனாரி வடிவமும் அதையே தான் சொல்கிறது. இருவரும் சேர்ந்த நிலையாக தான் இந்த உலகம் இயங்க முடியும் என்பதுதான் அர்த்தநாரியினுடைய உண்மை கோட்பாடு.
மேலும் ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பல இடங்களில் இதைப் பற்றி தேவாரத்தில் சொல்கிறார்கள். எனவே காமம் உயிரின் குணம். உலக வளர்ச்சியின் தோற்றத்திற்கு ஆதார சக்தியாக இருக்கிறது. அது எந்த வகையிலும் குற்றம் கிடையாது...
24. பிறப்பால் ஒருவர் வேறு மதம். அவர் சைவ சித்தாந்தத்துக்கு வர முடியுமா?
நிச்சயம் வரலாம். சைவ சித்தாந்தம் அதற்கு எந்தவித தடையும் ஏற்படுத்தவில்லை . "அப்பாலும் அடி சார்ந்த அடியாருக்கும் அடியேன்" என்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள், காலத்தாலோ இடத்தாலோ எந்தவித வேறுபாடும் இல்லாமல், எங்கே எந்த உலகத்தில் எந்த இடத்தில் யாராக இருந்தாலும் அவர்களும் சைவத்திற்குள்ளே வரலாம் என்பதுதான் அந்த வரியின் உடைய ஆழமான பொருள்.
மேலும் 63 நாயன்மார்களில் சாக்கிய நாயனார் என்ற ஒரு நாயனாரே இருக்கிறார். அவர் சைவ சமயத்தை சேர்ந்தவர் இல்லை. சாக்கிய மதத்தை சேர்ந்தவர். அவரையும் சேக்கிழார் இங்கே நாயனாராக வைத்திருக்கிறார். எனவே சைவத்திற்கு மதமும் இனமும் மொழியும் சாதியும் என்று எதுவுமே தடை கிடையாது. இதை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒருவன் திருநீரு அணிய வேண்டும், கண்டிகை வைத்துக் கொள்ள வேண்டும், புலால் உண்ணாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது என்று ஒரு பக்கம் இருந்தாலும், இது இல்லாமலும் சைவத்திற்குள்ளே வந்து சைவ சித்தாந்தத்தையும் சைவ தத்துவங்களையும் பக்திகளையும் தெரிந்து கொண்டு அதை உணர்ந்தான் என்றால் எந்தவித தவறும் கிடையாது. அது அவர்களுக்கு ஆன்ம ஈடேற்றமே.. எல்லோரையும் விலக்குவது சைவத்தினுடைய அடிப்படைக் கொள்கை கிடையாது. எல்லோரையும் ஏற்றுக் கொள்வதே சைவத்தினுடைய அடையாளம்.
25. நீங்கள் மணிவாசகர் அருட்பணிமன்றம் தோற்றுவித்துள்ளீர்கள். அதன் மூலம் பல்வேறு சைவப்பணிகள் செய்துள்ளீர்கள், அவ்வெண்ணம் எப்படி உருவாகி வந்தது?
நான் தினமும் பேரூர் கோவிலுக்கு செல்வேன். அங்கே சிவபுராணம் சொல்லி பஞ்சபுராணம் சொல்லி வழிபாடு செய்வேன். தொடர்ந்து இதை செய்து கொண்டு வந்ததனால் அங்கு இருக்கக்கூடிய ரத்தின குருக்கள், குமார குருக்கள் இதை கவனித்து இதை முறையாக மற்றவர்களுக்கு சொல்ல வேண்டுமே என்று என்னிடம் கேட்டார்கள். நான் முதலில் தயங்கினேன். பின்னர் சரி செய்வோம் என்று ஆரம்பித்தேன். அப்படி சிறியதாக ஆரம்பித்தது தான். அதற்கு ஒரு பெயர் வையுங்கள் என்று என்னிடம் கேட்டார்கள். தற்செயலாக அன்றைக்கு ஆரம்பிக்கும் பொழுது மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மகம். நான் மணிவாசகர் மன்றம் என்ற பெயர் வைத்து முறையாக திருவாசகம் சொல்ல ஆரம்பித்து விட்டேன். அப்படி ஆரம்பித்தது தான் இந்த மன்றம்.
26. நீங்கள் 90 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறீர்கள் இன்றைய சைவ சித்தாந்தத்தின் நிலை என்னவாக இருக்கிறது?
சைவ சித்தாந்தத்தினுடைய நிலை இன்றைக்கு ஓரளவு பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. திருவாடுதுறை ஆதீனம் அஞ்சல் வழி சைவ சித்தாந்த வகுப்புகள் ஏற்படுத்தி அதை முன்னெடுப்பாக செய்ய ஆரம்பித்தது. அதனுடைய பயனாக தமிழகம் முழுவதும் பல வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று செயல்பட்டு வருகின்றன. ஆனால் என்ன பெரிய குறைபாடு என்றால் அதில் வருகிறவர்கள் அனைவரும் வயதானவர்கள் தான் வருகிறார்கள். எந்த ஒரு இளைஞர்களும் வராமல் இருக்கிறார்கள். இளைஞர்கள் வந்தால் மட்டும் தான், அதிலும் நல்ல படித்த இளைஞர்கள் வந்தால் தான் அவர்களிடம் சைவ சித்தாந்தம் போய் சென்று அவர்கள் அதில் புதுமை நோக்கோடு கண்டு இன்னும் அதை மேலெழுப்பி செய்ய முடியும். அப்படி செய்தால் மட்டும்தான் இது மேலே மேலே வளரும்.
27. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் சித்தாந்தத்திற்குள் வருவதில்லை என்ன காராணம் என்று நினைக்கிறீர்கள்?
அதற்கு காரணம், சொல்பவர்கள் யாரும் தகுதி இல்லாதவர்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆழமான பொருளோடு சொல்லத் தெரியவில்லை. அதனால் இளைஞர்கள் பெரியதாக ஈர்க்கப்படவில்லை. அதுதான் மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. அவர்களே, தான் சொல்லக்கூடிய கருத்தை பின்பற்றாமல், சொல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருக்கிறதே தவிர பின்பற்றி வாழ்ந்து உணர்ந்து சொல்லாதவர்களாக தான் இன்றைய சைவ சித்தாந்த சொற்பொழிவாளர்களும் வகுப்பு எடுக்கிறவர்களும் இருக்கிறார்கள். எனவே தான் இளைஞர்களிடம் அது சென்று சேராமல் இருக்கின்றன.
28. சைவ சித்தாந்தத்தின் இன்றைய குறைபாடாக நீங்கள் கருதுவது எது?
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் சைவ சித்தாந்தத்தை பற்றி மேடைகள் தோறும் சொற்பொழிவாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதை ஆழமாக புரிந்து கொண்டு உணர்ந்து அதை கடைப்பிடிப்பவர்கள் மிக குறைவு. சும்மா சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டு மேடைகள் தோறும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவதாக சைவ மடங்களும் அவர்களுக்கென்று ஒரு வேலி போட்டுக்கொண்டு, அதை உள்ளேயே பூட்டி வைத்திருக்கின்றார்கள். அவர்கள் இன்னும் பரந்துபட்ட பார்வையில் சைவ சித்தாந்தத்தை முழுமை நோக்கோடு நவீன பார்வையோடு வெளியே அவர்கள் எடுத்துச் சென்று பரப்ப வேண்டும். இல்லையென்றால் இன்னும் அருகிக் கொண்டே தான் வரும். இளைஞர்களிடம் அது சென்று சேரவே சேராது.
சென்ற நூற்றாண்டுகளில் சைவ மடங்கள் தனக்கென்று பெரும் புலவர்களை கையில் வைத்துக் கொண்டு அதை தமிழகம் முழுவதும் பரப்பினார்கள். இன்று மடங்களுக்கும் அந்த கடப்பாடு இல்லை. அவர்களுக்கு புலவர்களும் இல்லை. புலவர்கள் இருந்தால், அவர்களுக்கு ஆழமான பொருளும் தெரியாமல் வெறுமனே கூச்சலிட்டு மட்டும் இருக்கிறார்கள். மனதிற்கு சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுதான் எதார்த்த உண்மையும் கூட...
நேர்காணல் - சித்தாந்த இதழ் ஆசிரியர் குழு
0 comments:
Post a Comment