ஐந்தொழில் இரகசியம் - தாமல் கோ சரவணன்
படைத்தலும் படைத்த அப்பொருளை காத்தலும் காத்த அப்பொருளை அழித்தலும் இம்மூன்றையும் இடைவிடாது செய்து அதன் பயனாய் ஆன்மாவை இருட்டடிப்புச் செய்யும் மலங்களை வலுவிழக்கச் செய்தலான மறைத்தலும் , அவ்வாறு மலம் நீங்கப்பெற்ற உயிர்களை உய்யும் பொருட்டு அருளலும் ஆகிய ஐந்தொழிலை ஒவ்வொரு ஆன்மாவும் தத்தமக்குரிய அறிவினை கொண்டு ஒருவாறு தெளிதல் மனித தேகத்தை பெற்ற பயன்களில் ஒன்றாகும் . காரணம் மனித தேகமல்லாது பிறவற்றால் இந்தத் தத்துவ விளக்கங்களை அறியும் அறிவை பெற இயலாது .
புதிதாக ஒன்றை படைப்பதோ , புதிதாக ஒன்றை காப்பதோ , புதிதாக ஒன்றை அழிப்பதோ வழக்கில் இல்லை . "இல்லது தோன்றாது உள்ளது அழியாது" என்னும் சற்காரியவாதமே இதற்கு சாட்சி . இங்கே பழங்காலமாய் சூட்சுமமாய் இருக்கின்றவை தான் புதுப்புது தூலமாய் படைப்பிக்கப் படுகின்றன . புதுப்புது தூலமாகிய எல்லாம் அவ்வவற்றுக்குரிய கால எல்லை முடியும் போதும் ஊழியிலும் மீண்டும் பழைய சூட்சுமமாகவே ஆகிவிடுகின்றன . பிள்ளையார் சதுர்த்திக்கு செய்யப்படும் புதுப்புது விக்கிரகங்கள் எல்லாம் பழைய களிமண்ணில் இருந்தே செய்யுமாபோல் . ஒப்பிட்டு உணர்க .
இந்த ஐந்தொழிலின் ஆதிமூலம் எங்கிருந்து தொடங்குகிறது , எதனால் தொடங்குகிறது , எவ்வாறு தொடங்குகிறது என்பதனை ஆராயும்போதுதான் பல உண்மைகள் தெரிய வருகின்றன .
பாசாந்தகாரம் என்று சொல்லப்படும் அஞ்ஞான இருளில் ஆன்மாக்கள் பக்குவத்தன்மை இல்லாமலும் , சில பிறவிகள் எடுத்து பக்குவஅபக்குவ நிலையினாலும் அழுந்திக்கிடக்கும் . இறைவனின் பூரண அருள்வெளியிலிருந்து ஆன்மாக்கள் எவ்வண்ணம் பிரிந்து ஆணவத்தோடு சேர்ந்து எப்போது அஞ்ஞான இருளுக்கு போனது என்பது அறியமுடிதற்கில்லை . இது ஆதியிலே செயற்கையாய் நடந்த தென்பர் , அருளாளர்கள் . ஏன் அந்தப் பிரிவு குறித்து ஆராயவில்லை என்றால் சித்தாந்தங்கள் எதனால் எப்போது பிரிந்தோம் என்பதை விட எதனால் எப்போது சேர்வோம் என்ற உய்வு பாட்டினை நோக்கி நம்மை நகர்த்த வந்தமை ஆதலால் அவை முழுதும் அஞ்ஞான வெளியில் இருந்து - உலகம் - உலகத்தில் இருந்து அருள் வெளி என்ற ஏறுமுக பயணத்தை அழுந்திச் சொன்னதேயல்லாமல் அருள் வெளியில் இருந்து துறந்து வந்த இறங்கு முக பயணத்தை சொல்லவில்லை .
அஞ்ஞான இருளின் அழுத்தத்தில் ஆன்மாக்களுக்கு அறிவு கிடையாது . அறியும் அறிவுக்கு உடம்பு வேண்டும் , அறியும் பொருட்டு உலகம் வேண்டும் . பன்னெடுங்காலமாக இவ்வளவு என்று சொல்லுதற்கரிய லட்சோப லட்சக் காலப் பரியந்தம் இருளில் உணர்ச்சியற்று உயிர்ப்பற்று ஜடத்தோடு ஜடமாய் அசித்தோடு அசித்தாய் இவ்வாறு என்று சொல்லுதற்கரிய கீழான நிலையில் அழுந்திக் கிடந்த ஆன்மாக்களை கருணையே வடிவான கருணையே குணமான கருணையே செயலான மெய்ப்பொருள் பார்த்தது . தன் அருட் கிரகணங்களை பாசந்தகாரத்தில் விசிரிம்பித்தது அந்த அருள் கிரகணங்களில் பட்ட ஆன்மாக்கள் தத்தம் தன்மைக்கும் , பக்குவத்திற்கும் ஏற்ப உடம்பினை பெற்று அந்த அருள் கிரகணங்கள் மாயைமீது விழுந்து உண்டாக்கிய உலகத்தின் கண்ணே அறியும் அறிவினை பெரும் பொருட்டு வந்து விழுந்தன . இவ்வாறு பாசாந்தகாரத்தில் இருந்த ஆன்மாவை உலகின் கண்ணே உடம்பினை ஊட்டுவித்து அருளிய தன்மையே "படைத்தல்". இந்தப் படைப்பை விரிக்கின் தணு, கரண , புவன , போகம் என விரியும் . எளிய நடையில் சொல்லப்புகின் உடம்பு , மனம் முதலிய கருவிகள் , உலகம் , நுகர்ச்சிப் பொருள் என்பவற்றை மாயையில் சூட்சுமமாக இருந்த தன்மையில் இருந்து தூலமாக்கி அமைத்தது இறைவனின் அருள் கிரகணங்கள் . இந்த கிரகணம் மாயையின் மீது விழுந்ததும் தத்துவங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்தும் நின்றும் புணர்ந்தும் உலகங்களையும் உடம்பையும் மனம் முதலான கருவிகளையும் உயிர் அறியும் அறிவினை பெரும் பொருட்டு உண்டாக்கி தருகின்றன .
படைப்பாக்கத்தின் அடிப்படை தத்துவங்கள் எல்லாம் மாயையில் இருந்தே உண்டுபண்ண பட்டாலும் அத்தகைய செயலை சடப்பொருளாகிய மாயை உயிர்களுக்காக செய்வதில்லை அதை செய்ய இறைவன் அருள் தேவையாய் இருக்கின்றது . இது ஒருவாறு அவன் பொருளை எடுத்து அவனையே போடுவது போலத்தான் . மலங்களின் ஒன்றான மாயையைக் கொண்டே மலங்களின் வேரான ஆணவத்தை அழித்தல் . மாயையில் இருந்து என்னென்ன தத்துவங்கள் எவ்வெவ் வகையினில் விரிந்தது என்பதை அறிதற்கு முன்னால் , ஐந்தொழிலின் ஆதிமூலமாக இறைவனின் அருள் எப்படி வந்தது என்பதை அறிய வேண்டும் . அருட்ஜோதியில் இருந்து அருட் கிரகணங்கள் எவ்வாறு உண்டாகி வந்தது என்பதை ஆன்மாக்கள் அறியவேண்டும் .
இறைவன் ஆதிகாலம் தொட்டே தன்னையே நோக்கி தானே தானாக இருந்த தன்மையன் . அருளாகிய ஆற்றல் வெளிப்படாமல் இருந்த சிவ நிலை . இதனை சொரூப லட்சணம் என்பர் . என்றும் உள்ளதாய மெய்ப்பொருளாய் , எந்தப் பொருளின் சார்பினாலும் மாறுபாடு அடையாத செம்பொருளாய் தன்னை தான் நோக்கி நிற்கும் மறை பொருளாய் காட்சிக்கும் கருத்துக்கும் அப்பாற்பட்டதாய் , மலமற்றதாய் , போக்கும் வரவுமாகிய அசைவற்றதாய் நின்றிருந்தது சொருக லட்சணத்துப் பதி .
அத்தகு அருட்ஜோதி தன்னையே தான் நோக்கும் தரத்தில் இருந்து அஞ்ஞான இருளில் அழுந்திக்கிடக்கும் ஆன்மாக்களுக்காக இரங்கி உயிர்களை கருணையோடு நோக்கும் தரத்தில் கடவுள் சொரூப லட்சணத்தில் இருந்து தடத்த லட்சணத்திற்கு வருகிறார் . இந்த தரத்தில் இறைவனுக்கு குணங்களும் குறிகளும் தோன்றும் . தன்னையே தான் நோக்கும் தரத்தில் இருந்து உலகத்தை ( உயிர்களை ) பார்க்கும் போது இன்னது என்று சொல்லும் வடிவங்களும் நிறங்களும் வகைகளும் வெளிப்படும் . இன்றைக்கு சமயங்களும் மதங்களும் தத்துவங்களும் சொல்லித்திரியும் தெய்வங்கள் பலப்பல எல்லாம் இறைவனின் தடத்த லட்சணத்தில் காட்டும் ஆற்றல் வகைப்பாடுகளே யொழிய ஆதிமூல வடிவம் இல்லை . காரணம் சொரூப லட்சணத்தில் ஆதிமூலம் வடிவமற்று நாமமற்று , இன்னது என்று சொல்லும் தன்மை அற்று விளங்கும் தன்மையர் .
உயிர்களுக்காக தடத்த லட்சணத்தில் சிவம் சக்தியாக வெளிப்படுகிறது . சக்தி ஒடுங்கிய தனித்த சிவம் சொரூப லட்சணமாகும் , சக்தி வெளிப்பட்டு நிற்கும் சிவ சக்தி ( அம்மை அப்பர் , அர்த்தநாரீஸ்வரர் ) நிலை தடத்த லட்சணமாகும் . சிவ நிலையில் இருந்து சக்தி வெளிப்படும் போது அந்த சக்திக்கு பராசக்தி என்றும் அதன் சிறு கூறு உலகத்தை (தணு காரண புவன போகம் ) உண்டு பண்ணும் பொருட்டு வெளிப்படுவது ஆதி சக்தி என்றும் , அந்த உலகத்தின் கண்ணே உயிர்களை பாசாந்தகரத்தில் இருந்து எடுத்து உடம்பை கொடுத்து பிறப்பு காத்தல் இறப்பு முதலியவற்றில் செலுத்தும் ஆதிசக்தியின் வெளிப்பாட்டு தன்மைக்கு திரோதான சக்தி என்றும் ஒருவாறு அறிந்து கொள்ளவேண்டும் .
இப்போது திரோதான சக்தி மூன்று சக்திகளாக பிரிந்து செயலாற்றும் தன்மைதான் ஐந்தொழிலின் அடிப்படை . திரோதான சக்தி உலகத்தையும் உடம்பு முதலிய கரண போகங்களையும் உயிர்களுக்கு உண்டுபண்ண வேண்டும் என்று விரும்பும் அதாவது இச்சிக்கும் இத்தகு நிலையில் திரோதானம் இச்சா சக்தியாக வெளிப்படும் . அவ்வாறு இச்சித்த வண்ணம் தொழில் செய்ய அதற்குரிய வழிகளை அறியும் நிலையில் திரோதானம் ஞானசக்தியாக மலர்கிறது . இச்சித்து அதன் படி யோசித்து இப்போது குறித்தவண்ணம் செய்ய தொழிற்படும் நிலையில் திரோதனம் கிரியா சக்திக்காக பரிணமிக்கிறது . இவ்வாறாக பராசக்தி , ஆதிசக்தி , இச்சை சக்தி , கிரியா சக்தி , ஞான சக்தி என்று விரிந்த சக்தி நிலையை பஞ்ச சக்தி என்பர் .
திரோதானம்தான் இத்தொழிலில் நேரடியாக இறங்கும் சக்தி நிலை. இது மூன்றாக விரியும் என்பதை முன்னம் பார்த்தோம் . அந்த மூன்றுக்கும் தனி தனி தன்மைகள் உள்ளன . இச்சை சக்தி செயற்பாட்டு துணையாக நிற்கும் அல்லாது தனியாக நின்று இயங்காது . ஆனால் ஏனைய கிரியா சக்தியும் , ஞான சக்தியும் தனித் தனியாகவும் , இணைந்தும் , ஏறியும் , குறைந்தும் செயற்படும் .
விளக்கமாக சொல்லப்புகின் , ஞான சக்தி மாத்திரம் தனித்து தொழிற்படும் நிலை சிவம் . கிரியா சக்தி மாத்திரம் தனித்து தொழிற்படும் நிலை சக்தி . ஞானமும் கிரியையும் சமமாக செயல்படும் நிலை சதாசிவம் . ஞான சக்தி குறைவாகவும் கிரியா சக்தி கூடுதலாகவும் இருக்கும் தன்மை மகேஷ்வரன் . கிரியா சக்தி குறைய ஞான சக்தி மிகுந்து தொழிற்படும் நிலை வித்தை எனவாக இறை சக்தி பேதமுறும் . சொரூப நிலையில் ஓருருவும் ஓர் நாமமும் இல்லாத மெய்ப்பொருள் தடத்த நிலையில் பலப்பல வடிவும் நாமமும் பெறுகின்றது . மேற்சொன்ன சதாசிவ நிலை அருளல் தொழில் செய்பவனாகவும் . மகேஸ்வரன் மறைத்தல் தொழில் செய்பவனாகவும் காரியப்படும் வேளையில் .மறைத்தல் எனப்படுவது ஆன்மாவை பிறவி சுழற்சியின் கண்ணே செலுத்துவது என்பதால் . ஆன்மா பிறவி எடுக்கவும் எடுத்த பிறவியில் நிலை நிற்கவும் , காலம் நியதிக்கு ஏற்ப உடலை விட்டு மரணம் அடையவும் முறையே படைத்தல் , காத்தல் , அழித்தல் ஆகிய தொழில்கள் உருவாயின . இம்மூன்று அடிப்படை தொழில்களை இறைவன் சக்தியாகிய திரோதானம் நேராக செய்யாமல் தன சக்திகளின் கொண்டு கர்த்தா மூர்த்திகளை அதாவது தொழிப்படுவோரை உண்டாக்குகின்றன . அவ்வகையே படைத்தலை பிரம்மாவும் , காத்தலை விஷ்ணுவும் , அழித்தலை உருத்திரனும் செய்கின்றனர் . ஒரு அரிய உண்மையை இந்த இடத்திலே நாம் தெரிந்து கொள்ளவேண்டும் . அபக்குவ ஆன்மாக்களும் பக்குவ அபக்குவ ஆன்மாக்களும் பிறந்து , இறந்து பிறந்து இறந்து மறைத்தல் தொழிலின் பயனாய் வினை கழிந்து ஆணவ மலம் ஒடுங்கி அருளை பெற்றதும் சத்தர்களாக உயர்வு பெறுகின்றன . பக்குவ ஆன்மாக்கள் இத்தகைய சத்தர் நிலையை அடைந்ததும் இறைவன் படைத்தல் முதலான தொழில்களை செய்யும் கர்த்தா மூர்த்திகளாக உயர்வு கொடுக்கிறார் . இது குறித்து சிந்திக்க இன்னும் நிறைய இருக்கின்றது . ஐந்தொழிலின் காரணமாய் விளங்கும் இறைவனின் ஆற்றல் மூலத்தின் வகை தொகையை இங்கு கண்டோம் , இனி ஐந்தொழிலில் காரியப்படும் தத்துவங்களை குறித்து தொடர்ந்து சத்விசாரம் செய்வோம் .

