அஷ்டமூர்த்தம் - ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை
Antarichchanti Tamsena Rudram Promanishaya Krinanti Chikbahya Chacham. (Rig-Veda)
அந்தரிச்சந்தி தமஸேந ருத்ரம் ப்ரமநிஷாய க்ரிணந்தி சிக்பாஹ்ய சாசம்"
இங்கனைத்திலும் உள்ள பரம ருத்ரனை அன்புடன் தியானிப்பவர்கள் அன்னத்தை அடைவார்கள்.
நமது ரிஷிகள் ஒட்டுமொத்த சித்தாந்தத்தை ஒற்றை சொல்லிலோ வாசகத்திலோ சாராம்சப்படுத்தியிருக்கின்றனர். கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்குமான சரீரீ, சரீர உறவின் கேள்விக்கு உயிர், மெய் என பெயரிட்டது எத்தனை உத்தமமானது என்று முன்பே விளக்கி இருக்கிறோம். அதனைப் போலவே அஷ்டமூர்த்தி என்ற மற்றொரு சொல்லை விளக்குகிறோம். எட்டு வடிவங்களை கொண்டவனும், அவ்வடிவங்களாக திகழ்பவனும் என்னும் இந்த சொல் சிவன் அல்லது ருத்ரனை குறிக்கிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா அல்லது ஜீவன் அல்லது பசு என்பவை அந்த எட்டு வடிவங்கள்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிருள்ளவை, உயிரற்றவை அனைத்தும் இந்த எட்டு பெயர்களுள் அடங்கும். இந்த எட்டிலும் இல்லாத ஒரு பொருள் இறைவன். எனவே இறைவன் இவற்றை தனது உடலாக கொண்டிருக்கிறான் என்றால் இறைவனுடனான உறவு ஆன்மாவிற்கும் உடலிற்குமான உறவை போன்றதென்பதை “உடலும் மனமும் (Mind and body)” என்ற கட்டுரையில் விளக்கியிருக்கிறோம். உடலில் ஆன்மா இருப்பதை போல விஸ்வந்தர்யாமியாக எல்லாவற்றிலும் அவன் உறைகிறான். இதையே மேலே குறிப்பிட்ட ரிக்வேத பாடலும் பல உபநிடத பாடல்களும் இறைவன் (ருத்ரன்) அந்தர்யாமியாக இருக்கிறான் என குறிப்பிடுகிறது. இந்த பிரபஞ்சத்தையே தனது வடிவமாக கொண்டிருப்பதால் இறைவன் விஸ்வஸ்வரூபியாக அழைக்கப்படுகிறான்.
“Visvarupaya vi Namo Namah”
“விஸ்வருபாய வி நமோ நமஹ”
தன்னுள் இருந்து இந்த பிரபஞ்சத்தை தோற்றுவிப்பதால் அவன் விஸ்வகாரணன் அல்லது விஸ்வயோணி என்று அழைக்கப்படுகிறான். நமது உடலையே நாம் என்று அறிவதைப்போல நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா என்ற இந்த பிரபஞ்சதையே இறைவன் என அழைக்கிறோம்.
இவற்றில் அவன் ஏதுமிலன் என்று கூறும் பாடல்களும் உள்ளன. பிரஹதாரண்யக உபநிடதத்தில் குறிப்பிடுவது போல நிலம், நெருப்பு அல்லது மற்ற ஜடப்பொருட்கள் தான் இறைவன் அவற்றை ஆள்பவன்/இயக்குபவன் அல்ல என்று இன்று யாரும் வாதிட முடியாது. குழப்பத்திற்கிடமின்றி ஜீவனே இறைவன் என்று அடையாளப்படுத்தும் பிரதிகள் தான் இந்திய தத்துவ வாதிகளால் அதிகமும் மேற்கோள் காட்டப்படுகிறது எனினும் ஜீவனும் கடவுளும் வேறு என்று கூறும் பல பிரதிகளும் உள்ளன. இந்த எட்டும் அல்லாதாவரும் இதை கடந்தவருமாக இருப்பதால் இறைவன் விஸ்வாதிகர் என்று அழைக்கப் படுகிறார்.
"Visvadiko Rudra" - ஸ்வேதாஸ்வேத உபநிடதம்
“விஸ்வாதிகோ ருத்ரா” - ஸ்வேதாஸ்வேத உபநிடதம்
“யாதொருவன் தெய்வங்களில் மூலமாகவும் வளர்ச்சியுமாகவும் இருக்கிறானோ, ருத்ரனாகவும், அனைவர்க்கும் தலைவனாகவும் இருக்கிறானோ, ஆற்றல்மிக்கவனாகவும், ஒளிமிக்க ஒரு உயிர் பிறப்பதற்கு சாட்சியுமாகவும் இருக்கின்றானோ, அவன் நம்முள் இருப்பதாக. “
“யாதொருவன் தெய்வங்களில் மேலாதிக்கம் கொண்டவனோ, எவனில் இந்த உலகங்கள் அனைத்தும் நிலைகொள்கின்றனவோ இருகால் நான்கு கால் உயிரினங்கள் அனைத்தும் ஆக்கி, ஆள்பவனுமாக இருக்கின்றானோ, அந்த ஒருவனை நாம் வணங்குவதாக ”
இது இயல்பாகவே “அதுவே தீ, அதுவே சூரியன், அதுவே காற்று, அதுவே சந்திரன், அதுவே ஒளி, அதுவே பிரம்மம், இந்நீரெல்லாம் அது, ஆக்குபவனும் அது” என்னும் பிரதியை ஒத்திருக்கிறது.
முந்தைய அத்யாயத்தில் “இங்கெல்லாமாகவும் இதை கடந்ததும் வடிவும் துயரும் அற்றதாகவும்” என்ற பாடல் வருகிறது. “தீயிலும், நீரிலும், இந்த பிரபஞ்சம் முழுதும் வியாபித்திருப்பதும், தாவாரங்களிலும் கானகத்தை ஆள்பவனிலும் உறையும் தெய்வம் வாழிய வாழியவே”.
“இந்த இறைவன் எல்லாத் திசைகளாகவும் இருக்கிறான், வெகு காலத்திற்கு முன்பு பிறந்தவன். உண்மையில், இப்போது கருவிற்குள்ளும் உறைபவன். எல்லா திக்கிலும் முகம் கொண்ட அவன், ஏற்கெனவே பிறந்திருக்கிறான், இனியும் பிறப்பான், அனைத்து பிறப்புகளுக்குள்ளும் உறைவான்”.
பிரஹதாரண்யக உபநிடத்தத்தின் ஏழாவது பிராமணத்தின் மூன்றாம் அத்தியாயத்தில் உள்ள புகழ்பெற்ற பாடல் இறைவனின் எட்டு வடிவங்கள் என்பதன் விளக்கத்தை கொடுக்கிறது. மூன்றாம் மந்திரத்தில் பூமி அவனது உடலாக கூறப்படுகிறது
”யஸ்யப்ரித்வி சரீரம் ”
“யாதொருவன் இந்த புவியிலும், புவியின் உள்ளுறைபவனாகவும் இருக்கிறானோ, இந்த புவி எவனுடைய உடலென்று புவி அறியாதிருக்கிறதோ, அவனே இதன் உள்ளுறைந்து ஆள்பவனுமானவன், அழிவற்றவன்”
4,5,7,9,11,12,22ம் மந்திரங்களில் நீர், நெருப்பு, வெளி, சூரியன், சந்திரன், ஆகாயம், விக்ஞானம் அனைத்தும் அவன் உடலாக சொல்லப்படுகிறது.
புவியை குறிப்பிடுவது போலவே மற்றவையும் குறிப்பிடபடுகிறது. அதன் இறுதிபகுதி
“யாதொருவன் இந்த விக்ஞானத்திலும், விக்ஞானத்தின் உள்ளுறைபவனாகவும் இருக்கிறானோ, இந்த விக்ஞானம் எவனுடைய உடலென்று விக்ஞானம் அறியாதிருக்கிறதோ, அவனே இதன் உள்ளுறைபவனும் உள்ளுறைந்து ஆள்பவனுமானவன், அழிவற்றவன்”.
பேராசிரியர் மேக்ஸ் முல்லர் விக்ஞானத்தை அறிவு என்று மொழிபெயர்க்கிறார். அதே நேரம் மத்யாந்தீன தத்துவ பள்ளி விக்ஞானத்தை ஆத்மா என்ற அர்த்தம் கொடுக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார். சமான பிரகரானம் - “யஸ்யாத்மா சரீரம்” என்று குறிப்பிடுகிறது. உப பிராமணங்களின் மூலம் அறிவு என்பது சரியான விளக்கம் என்றறிய முடியும்.
பிரகதாரண்யக உபநிடத்தத்தின் மற்றொரு பிரதி இதை இன்னும் தெளிவாக்குகிறது.
“இறைவனை ஆன்மாவின் மூலம் கண்டு, கேட்டு, தெளிந்து களிக்கவேண்டும். அவன் ஆன்மாவை கடந்தவன். ஆன்மாவே அவனது உடல். ஆன்மாவின் வெளியில் அவன் சஞ்சரிக்கிறான்”.
இந்த ஆன்மா (Atma) மற்றும் ஆன்மா (atma) இந்த சுயம் (Self) மற்றும் சுயம் (self) (மனித சக்திக்கும் பிரபஞ்ச சக்திக்கும் ஒரே பெயரை பயன்படுத்துவதால் சிந்தனையில் இந்த குழப்பம் வருகிறது) இரண்டும் ஒரு மரத்தில் அமரும் இரு பறவைகள். இதயம் என்னும் ஆன்மீகமான அகத்திற்குள் இவை இரண்டும் நுழைகின்றன, இவை இரண்டும் மனித விழியின் அகத்திற்குள் இருக்கின்றன. இரண்டு வெவ்வேறு கருதுகோள்களுக்கு ஒரே பெயரை பயன்படுத்துவதில் பல முக்கிய இடர்கள் உள்ளன. பிற்கால பிரதிகளும் சமகால எழுதுக்களும் இத்தகைய பெயர் முறைகளை பின் பற்றுவதில்லை. இந்த சொற்களின் துல்லிய தன்மையை கீதையில் காண முடியும், பரமாத்மாவில் இருந்து ஆத்மா, புருஷோத்தம அல்லது பரம புருஷனில் இருந்து புருஷனும் வேறுபடுத்திக காட்டப்பட்டுள்ளன.
கீதையின் 13ம் அத்யாயம் 22ம் ஸ்லோகம் சத் இல் இருந்து சத் அசத் வேறுபடும் விதத்தை கூறுகிறது.
“சாட்சியும், அனுமதிப்பவனுமாக, உடனிருப்பவனாக, களிப்பவனான
மகேஸ்வரன் எனும் பரமாத்மன் ;
இவ்வுடலில் பரம புருஷன்”.
வேதம் அல்லது உபநிடதத்தின் குறிப்பிட்ட பிரதியை விளக்குவதே இதிகாசம் அல்லது புராணத்தின் முதல் கடமை என்று வேறொரு இடத்தில் பார்த்திருக்கிறோம்.
பராசர புராணம் மேல் குறிப்பிட்ட பிரதியின் சொற்களையும் அதன் அர்த்தத்தையும் இப்படி விளக்குகிறது.
" Antarichchandiya Rudram Sadha Vantayam Manishya
Krubnanti Sihvaya tahirasa purno Amritodakam
Antar Nachchantiya, Rudram Bahvanu Sahitam Sivam
Purusha Mavagrihnanti Sikvayatanasamsayah."
அந்தரிச்ச ஸந்த்யா ருத்ரம் ஸதா வந்த்நம் மனிஷ்யா|
குர்வந்தி ஶிவ்யா தஹிரஸ பூர்ணோ அம்ருதோதகம்||
அந்தர் நச சந்த்யா ருத்ரம் பவானு ஸஹிதம் ஶிவம்|
புருஷ மவ க்ருஹ்ணந்தி ஷிக்வ்ய தனசம்ஷய: ||
ஸ்கந்த புராணத்தின் இந்த பகுதியும் ஜீவன் தான் இறைவனின் உடல் என்கிறது.
" Antaryami Sa Avisha Jivanam Paramesvarah "
“அந்த பரமேஸ்வரனே எல்லா ஜீவனிலும் அந்தர்யாமியாக இருக்கிறான்”
மகாபாரதத்தைப் பொறுத்தவரை, இறைவன் இந்த எட்டு பொருள்களையும் தனது உடலாகக் கொண்டிருக்கிறான் என்றும், பிரபஞ்சமே அவனது உருவமாக இருக்கிறது என்றும் கூறும் கருத்து பல இடங்களில் இடம்பெறுகிறது.
இதற்கு ஆதாரமாக, பி.சி. ராய் (P. C. Roy) பதிப்பித்த மகாபாரதத்தின் அனுசாசன பர்வத்திலிருந்து (Anusasana Parva) பின்வரும் பகுதிகளை மேற்கோள் காட்டுகிறோம்.
“இந்த பிரபஞ்சத்தை தனது வடிவமாக கொண்டவன்” - பக்கம் 49
“நீ இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவனின் வடிவிலும் இருக்கிறாய்”- பக்கம் 125
“நீ ஜீவன்களின் தலைவன்”- பக்கம் 133
“இந்த பிரபஞ்சமே உனது வடிவம்” -பக்கம் 105
“இந்த பிரபஞ்சத்தை உறுப்புகளாக கொண்டவன் நீ”- பக்கம் 104
“இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துள்ளும் இருந்தாலும் எங்கும் காண முடியாதவன் நீ” -பக்கம் 50
“தனது சக்தியின் மூலம் பிரகிருதியையும் புருஷனையும் கிளர்ந்து இந்த பிரபஞ்சத்து உயிர்களின் தலைவனான பிரம்மனை படைத்தான் ”
“அவனே சத்தும் அசத்தும்”
“பிரகிருதியாகவும் புருஷனாகவும் இருப்பவன் அவனே” - பக்கம் 50
“சத்தின் சத்தாக இருப்பவன் அவனே” - பக்கம் 127
“பூமி தொடக்கமாக எல்லா சுவர்கங்களையும் படைத்து, அவையனைத்திலும் நிலைக்கசெய்து, அதில் மகிழ்ந்திருந்து அறியப்பட்ட எட்டு வடிவங்களில் தன்னை பரப்பி இருக்கிறான்“ - பக்கம் 96
காளிதாசன் சாகுந்தலையின் வாழ்த்துப்பாவில் இந்த எட்டு வடிவங்கள் என்னவென்று விவரிக்கிறார்.
மனிதர்களால் உணரக்கூடிய இந்த எட்டு வடிவங்களால் ஆனவன்
உங்களை காக்கட்டும்;
அனைத்து படைப்பு செயலிலும் முதலாவதான நீர்;
புனித சடங்குகளில் விண்ணேகும்
வேள்வியில் எழும் தீ;
புனித அவி அளிக்கும் பூசகன்;
இரவையும் பகலையும் நித்யமாக காக்கும்
சூரியனும் சந்திரனும், அதன் இரு பிரம்மாண்ட பாதைகளும்;
எல்லையற்ற பிரபஞ்சமெங்கும்
ஒலியை ஏந்திசெல்லும் வெளியும்;
அனைத்து பருபொருட்களும் அதன் கூறுகளும் பிறக்கும் இடம் என
முனிவர்களால் அழைக்கப்படுவதுமான பூமி
அத்தனை சுவாசத்திற்கும் உயிர் அளிக்கும் காற்று.
எந்த நூலென்று அறியமுடியாத இந்த பகுதியும் எட்டு வடிவங்களால் ஆன இறைவனின் எட்டு பெயர்களை குறிப்பிடுகிறது.
“Prithivyo Bava, Apach Sarvah, Agne Rudrah, Vayur Bhimah, Akasasya Mahadevah, Suryas Yograh, Chandrasya Somah, Atmanah Pasupatih”
ப்ருதிவ்யோ பவ, அபஷ்ச ஸர்வ, அக்னே ருத்ர, வாயுர் பீம, ஆகாஷஸ்ய மஹாதேவ, ஸூர்யஸ்ய உக்ர, சந்த்ரஸ்ய ஸோம, ஆத்மனா பசுபதி.
வேள்வி தலைவன் அல்லது எஜமானனை குறிப்பிடும் ஹோத்ரி என்ற சொல்லுக்கு ஆத்மா, ஜீவன் அல்லது பசு என்று பொருள். அதனால் பசுக்களின் தலைவன் பசுபதி என்று அழைக்கப்படுகிறான்.
மகாபாரதத்தின் இன்னும் சில பகுதிகளை இங்கு குறிப்பிடுகிறோம்,
“நீயே எட்டு பிரகிருதிகளாக இருக்கிறாய். நீயே அந்த எட்டு பிரகிருதிகளையும் கடந்தும் விளங்குகிறாய். இருக்கின்ற அனைத்தும் உன்னுடைய தெய்வத் தன்மையின் ஒரு பகுதியாகவே திகழ்கின்றன.” - பக்கம் 99
இறைவன் ஏன் தன்னை பெருக்கிக்கொள்ள வேண்டும், எட்டு வடிவங்களாக தன்னை ஏன் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த பகுதி விளக்குகிறது. “இறைவன் ஏன் இந்த உலகத்தை சிருஷ்டிக்கவேண்டும் ? நிச்சயமாக சம்சார சம்மந்தமுள்ள எந்தவொரு தேவைக்காகவும் அல்ல, நிச்சயமாக இங்கு நிலைத்திருக்கவும் மகிழ்ந்திருக்கவும் வேண்டுமென்ற தனது விழைவால் அல்ல, தனது சுய வெளிப்பாடுகளுக்காக அல்ல, சர்வ நிச்சயமாக தன்னுடைய தனிப்பட்ட முக்திக்காக அல்ல, பாவத்தில் உழன்றிருக்கும் ஆத்மாக்களின் விடுதலையின் பொருட்டே.”
“கேசவா, உயிருள்ளவையும் உயிரற்றவையுமான இவையாவும் இந்த உலகங்களில் நிகழும் சுவர்க்கமும் அறியமுடியாத இன்னும் பலவும் எங்கும் வியாபித்திருக்கும் தலைவனை தனது ஆன்மாவாக கொண்டிருப்பவையனைத்தும் மகேஸ்வரனில் இருந்து, ஜீவனின் இன்பதிற்காக அவனால் ஆக்கப்பட்டவை என்றறிவாயாக”. - பக்கம் 70
கேவல நிலையில் இருக்கும் ஆன்மா, முற்றிலும் அறியாமையிலும் நம்பிக்கையற்ற இருளிலும், எதையும் செய்ய இயலாத கையறுநிலையிலும் இருக்கிறது.அந்த ஆன்மாக்கள் தனது தூய அருளின் (அருள் சக்தி) மூலம் முக்தி அடைய வேண்டும் என்று இறைவன் திருவுளம் கொள்கிறான் (இச்சா சக்தி). மேலும், தனது ஆற்றலின் (கிரியா சக்தி) மூலம், இறைவன் பிரகிருதியை அசைவுறச் செய்து, அதற்கு இயக்கத்தையும் உயிர்ப்பையும் அளிக்கிறான். அவன் உருவாக்கிய இந்த பிரபஞ்சம் அவனது கருவில் இருந்து உருவாகிறது. இந்த ஜடப்பொருளான உடலில் உள்ள ஆத்மா செயலாற்றி ஞானத்தை பெற்று பிறப்பு இறப்பென்ற இந்த பந்தத்தில் இருந்து முக்தியடைகிறது. இவ்வாறு சகலம் மற்றும் அதீத நிலைகளுக்கு ஆத்மா கடந்து செல்கிறது. இதையே இந்து தத்துவத்தில் அனைத்து பள்ளிகளும் ஒர் ஆத்மா, பிறப்பு இறப்பென்ற இந்த சம்சாரத்தி சுழலில் நுழையாமல் முக்தியடைய முடியாதென்னும் அடிப்படையாக முன்வைக்கிறது.
திராவிட ஸ்ருதியின் (திருமுறைகள்) சில மேற்கோள்களை கொண்டு இந்த கட்டுரையை முடிக்கலாம்,
திருமூலரின் வாக்கில்
ஊனா யுயிரா யுணர்வங்கி யாய்முன்னஞ்
சேணு வானோங்குந் திருவுரு வேயண்டத்
தாணுவு ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தான்முழு தண்டமு மாகிநின் றானே
உடலும் ஆன்மாவும் தீயும் பரந்தவிரிந்த காற்றும் வெளியும்,
பூமியும் நிலமும் அவன் வடிவம்,
நிலையான சூரியனும் குளிர்ந்த சந்திரனும், அவற்றின் உள்ளுறையாகவும்,
அவற்றை கடந்ததுமாக அவன் இருக்கிறான்.
எட்டுத் திசையு மடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரையனல் மாநில மாகாச
மொட்டி யுயிர்நிலை யென்னுமிக் காயப்பை
கட்டியவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமே
எட்டு திக்கும் அடிக்கின்ற காற்றும் அவன்.
பெருவெள்ளமும் தீயும் பெருநிலமும் வெளியும் ,
நெற்றிக்கண் கொண்ட அவன் உணர்வுள்ள ஆன்மாவாக
இந்த உருவங்களுக்குள் இணைந்தும் பிரிந்தும் இருக்கிறான்
நம் காரைக்கால் அம்மையாரின் வரிகள்
அவனே யிருசுடர் தீயாக சமாவான்
அவனே புவியனல் காற்றாவான் - அவனே
இயமான னாயட்ட மூர்த்தியு மாய்ஞான
மயனாகி நின்றானும் வந்து.
இரு ஒளி, நெருப்பும் வெளியும் அவன்
நிலமும் நீரும் காற்றும் அவன்
ஆன்மா என்ற இந்த எட்டு வடிவங்களுடன்
தூய ஞானத்தின் வடிவமாக நிற்கின்றான்.
மெய்கண்டாரின் வாக்கில்
“எங்கும் வியாபித்திருப்பதால் இறைவனே சித்” . தூய ஞானமென்றில்லாமல் அவன் எங்கும் வியாபித்திருக்கமுடியாது. (மேலும் விளக்கங்களுக்கு - சிவ்ஞானபோதம் 2ம் சூத்திரம்)
நம் பட்டினத்தடிகள் இந்த அகவலில் விரிவான விளக்கத்தை அளிக்கிறார்
இருநிலமடந்தை இயல்பினினுடுத்த
பொருகடன்மேகலை முகமெனப்பொலிந்த
ஒற்றிமாநக ருடையோயுருவின்
பெற்றியொன்றப் பெற்றோரியாரே
மின்னிப்பிறக்கந் தன்னுநின் சடையே
மன்னியவண்டநின் சென்னியின்வடிவே
பாவகன்பரிதி பனிமதி தன்னொடு
மூவகைச்சுடருநின் நுதனேர் நாட்டந்
தண்ணொளியாரந் தாராகணமே
விண்ணவர்முதலா வேறோரிடமாக்
கொண்டிறைவிசும்பே கோலிநின்னாகம்
எண்டிசைதிண்டோன் இருங்கடலுடையே
அணியுடையல்கு லவனிமண்டலமே
மணிமுடிப்பாந்தள்நின் தாளிணைவழக்கே
யொழியாதோடிய மாருதமுயிர்ப்பே
வழுவாவோசை முழுதுநின்வாய்மொழி
வானவர்முதலா மன்னுயிர்பரந்த
ஊனமில்ஞானத் தொகுதிநின்ணுணர்வே
நெருங்கியவுலகினின் நீர்மையுநிற்றலும்
சுருங்கலும்விரிதலும் தோற்றம்நின்றொழிலே
அமைத்தலுமழித்தலும் ஆங்கதன் பெயர்ச்சியும்
இமைத்தலும்விழித்தலும் ஆகும் நின்னியல்பே
என்றிவைமுதலா இயல்புடைவடு வினொடு
ஒன்றியதப்புரு இருவகையாகி
முத்திறக்குணத்து நாவ்வகைப்பிறவி
அத்திறத்தைம்பொறி அறுவகை சமயமோடு
எழுலகாகி எண்வகை மூர்த்தியோடு
ஊழியோடூழி யெண்ணிறந்தோங்கி
எவ்வகையளவிநிற் கூடிநின்
றவ்வகைப்பொருளுநீ யாகியவிடத்தே.
கடல் சூழ்ந்த வொற்றியின்
முகமாக திகழ்பவன் எவனோ !
ஒப்பீட்டிற்கப்பற்பட்ட வடிவம் கொண்டவன் எவனோ ?
சடைக்கற்றைகள் மின்னலை போல் உள்ளன
உயிர்கள் நிறைந்த நிலம் உன் சிரம்.
சூரியன் சந்திரன் அக்னி இம்மூன்றும்
திருமுகத்தை ஒளிகூட்டும் கண்கள்.
குளிர்ந்த மாலைகள் நட்சத்திரங்களால் ஆனவை.
தெய்வங்கள் வாழும் விண்
விரிந்த நின் மார்பு எந்திசைகளாகின்றன.
வலிய தோள்கள் விரிந்த கடலாகின்றது.
நிலம் உன் உறுப்பாகின்றது.
உனது சுவாசம் காற்றாகின்றது.
பிழையற்ற ஒலி உன் சொற்கள் ஆகின்றன.
தெய்வங்களிலும் மனிதர்களிலும் காணும்
குற்றமற்ற ஞானம் உன்னுடையது.
உயிர்களாலான இந்த உலகு வாழ்வதும் வளர்வதும்
அழிவதும் மீண்டெழுவதும் உன் செயல்கள்.
இந்த உலகு வாழ்விலும் சாவிலும் விழிப்பிலும் துயிலிலும்
உனது இயல்பு உண்மையென காட்டுகிறது.
உன்னுடைய இந்த வடிவங்கள் ஒற்றை தூய ஆற்றலாகின்றன.
இரண்டாகி, முக்குணங்களாகி
நான்கு பிறப்பாகி, ஐம்புலன்களாகி
ஆறு மதங்களாகி, ஏழு உலகங்களாகி
எட்டு தெய்வங்களாகியது.
காலாகாலத்திற்கும் எவற்றுள்
நீ இணைகிறாயோ அதுவாக ஆகிறாய்.
திருவாசகத்தில் வரும் புகழ்பெற்ற வரிகள்,
நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனா யமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றா
னுலகே ழெனத்திசைபத் தெனத்தா னொருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன் , மனிதன், என்ற இந்த எட்டு வடிவங்களில் அவன் உறைகிறான்.
ஏழு உலகங்கள், பத்து திசைகள் அனைத்திலும் அவனே ஒன்றாகவும் பலவாகவும் நிற்கிறான் என பாடுவோமாக!
தாயுமானவர் தனது அறிஞருரையில் அப்பரின் இந்த தேவார பதிகத்தை குறிப்பிடுகிறார்
இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமான னாயெறியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் நாயிறாகி
ஆகாச மாயட்ட மூர்த்தியாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணுமாணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி
நெருநலையா யின்றாகி நாளையாகி
நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே
நிலமாக, தீயாக, நீராக, காற்றாக, அதன் எஜமானனாக,
நிலவாக, சூரியனாக, வெளியாக அட்ட மூர்த்தியாக,
நன்மையும் தீமையுமாக, ஆணும் பெண்ணுமாக,
எல்லா வடிவும் அவன் வடிவாகவும்,
நேற்றும் இன்றும் நாளையுமாகவும்
சடைகொண்ட என் தலைவன் நிற்கின்றான்.
அப்பரின் இந்த பதிகம் எப்படி பெரிதினும் பெரிதானவன் நம்முள் நுண்ணிதின் நுண்ணியதாகவும் இருக்கின்றான் என்று குறிப்பிடுகிறது.
எட்டுமூர்த்தியாய் நின்றியலுந்தொழில்
எட்டுவான்குணத் தீசனெம்மான்றன்னை
எட்டுமூர்த்தியு மெம்மிறையெம்முளே
எட்டுமூர்த்தியு மெம்முளொடுங்குமே.
அவன் அட்டமூர்த்தியாக தொழில் செய்பவன்
அவன் எட்டு குணங்களை கொண்ட என் தந்தையும் தெய்வமுமானவன்
அந்த அட்டமூர்த்தி என் தலைவனும் என்னை ஆள்பவனுமானவன்
அந்த அட்டமூர்த்தி என்னுள் இருக்கிறான்.
சம்பந்தரின் பதிகம்,
பாரு நீரொடு பல்கதிரிரவியும் பனிமதி யாகாச
மோரும் வாயுவு மொண்கனல் வேள்வியிற் றலைவனுமாய் நின்றார்
சேருஞ்சந்தன மகிலோடு வந்திழிசெழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிரபுரந் தொழுமடியவர் வருந்தாரே
நிலமாக நீராக சூரியனாக சந்திரனாக ஆகாயமாக
வீசும் காற்றாக ஒளிரும் தீயாக ஹோத்ரியாக அவன் நிற்கிறான்.
கோட்டாற்றின் மனம் கமழும் நீர் ஓடும் சிரபுரத்தில்
இருப்பவனை தொழுபவர் வருந்தமாட்டார்.
வேதங்களே நிலம், காற்று ஆகிய பொருட்களை தெய்வமாக போற்றும்போது தான் ஏன் அவற்றை பாடக்கூடாது என்று தாயுமானவர் கேட்கிறார்,
பாராதி நீயாப் பகர்ந்தா லகமெனவும்
ஆராயுஞ் சீவனும் நீயாம்காண் பராபரமே
வானாதி நீயெனவே வைத்தமறை யென்னையுநீ
தானாகச் சொல்லாதோ சாற்றாய் பராபரமே
சிவன் திக்வாசன், திகம்பரன், நிர்வாணி சிதம்பரத்தில் ஆடுபவன் என்று அழைக்கப்படுகிறான். நாம் மேலே கண்டது போல இந்த பிரபஞ்சத்தின் பொருட்கள் அல்லது இந்த பிரபஞ்சமே கூட அவன் உறுப்புகளாய் உள்ளன. அவனது இந்த வடிவம் குறித்த விளக்கம் ரிக் வேத காலத்தில் இருந்து தொடர்ந்து வந்திருக்கிறது என்று அறிய முடிகிறது. மகாபாரதத்தின் பல பகுதிகள் சிவனை பரப்பிரம்மனாக அடையாளப்படுத்தினாலும் ஆதியில் இருந்தே இந்த அடையாளம் தொடர்ந்து வந்திருக்கிறது. அடையாளம் காணுதலில் வேறுபாடுகள் இருந்தால் மட்டுமே நாம் விவாதிக்க வேண்டியது வரும். எனவே சிவன், ருத்ரன் இரண்டும் அவனது பெயர்களே, அவனது வடிவம் பர பிரம்மத்தின் வடிவம் என்பது பொருத்தமாக இருக்கும்.
இந்திய கோயில்களில் சிவனை இந்த எட்டில் ஒரு வடிவமாக வழிபடுவதையும் இங்கு குறிப்பிடவேண்டும். நிலமாக காஞ்சியிலும், நீராக ஜம்புகேஸ்வரத்திலும், காற்றாக காளஹஸ்தியிலும், தீயாக திருவண்ணாமலையிலும், ஆகாயமாக சிதம்பரத்திலும், சூரியனாக ஒவ்வொரு முறை சூரிய நமஸ்காரம்* செய்யும்போதும், சந்திரனாக சோம்நாத்திலும், பசு அல்லது ஆத்மாவாக நேபாளத்தின் பசுபதிநாத்திலும் சிவன் வழிபடப்படுகிறார்.
அடிக்குறிப்பு * - முதிர்ந்த இந்த வயதிலும் எனது பாட்டி தவறாமல் சூரிய நமஸ்காரம் செய்கிறாள், ஆனால் சூரியனை அவள் சிவ சூரியன் கண்ணே என்று சொல்வதுண்டு.
(Studies in saiva siddhantha நூலில் உள்ள Ashtamuhurtam என்ற கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.)
Studies in Saiva siddhanta book link - https://archive.org/details/studiesinsaiva00pilluoft/page/n123/mode/2up
மொழிபெயர்ப்பாளர்: மனோஜ்
